அத்தியாயம்: 103
காலமெனும் சக்கரம் சுழன்று கொண்டே தான் இருக்கும். யாராலும் அதை நினைத்தி வைக்க இயலாது. யாருக்காகவும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்ளாது.
கார்த்திகேயனின் வாழ்விலும் அப்படி தான். ஒரு மாதங்கள் முடிந்து விட்டு. ஜோஹிதாவிற்கும் அவனுக்கும் ஊரறிய திருமணம் முடிந்து. ஆனாலும் அவனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
எப்படி கிடைக்கும் அது. பிடித்த பெண் தான். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காத வேலை. தாமரை இலை போல் ஒட்டாத ஜோஹிதாவின் குடும்பம். அத்தோடு வீட்டோட மாப்பிள்ளை. வேலை என்று இப்போது எதுவும் கையில் இல்லாத போது ஓர் ஆணுக்கு மரியாதை எங்கிருந்து கிடைக்கும்.
கிட்டதட்ட சிறை கைதி போல் தான் அவனின் வாழ்க்கை. கைதிக்கு கூட தண்டனை காலம் என்ற ஒன்றும், விடுதலை காலம் என்ற ஒன்றும் இருக்கும். ஆனால் இதில் இரண்டுமே கார்த்திகேயனுக்கு கிடையாது.
ஜோஹிதாவின் குடும்பத்தின் மூத்த தலைமுறை மறைந்து விட்டது. அதன் பொறுப்பு இப்போது விகாஸின் தந்தையிடம் உள்ளது. குடும்பத்தைக் கட்டு கோப்புடன் வைத்து பாரம்பரியத்தைக் காப்பாற்றி இந்தக் குடும்பத்திற்கே இருக்கும் நற்பெயரைக் காத்து, அனைவரையும் உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருக்க அவர் போடும் கண்டிஷன்கள் பல.
தங்களின் உறவு இல்லாது வேற்றாளை ஜோஹிதா மணமுடித்து பிடிக்கவில்லை. தங்கள் மகளின் மனதைக் கெடுத்து காதலை வலையில் விழ வைத்து தங்களின் குடும்பத்திற்கும் நுழைந்த ஒட்டுண்ணியாகவே கார்த்திக்கைப் பார்த்தார் அவர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது போட்டு தள்ளிவிடுவேன் என்ற ரீதியில் தான் இருக்கும் அவரின் பார்வை.
மகனை போலவே தந்தைக்கும் கார்த்திக்கை கண்டால் பிடிக்காது போனது. ஏன் ஒட்டு மொத்த குடும்பத்திற்கே பிடிக்காது. அவன் என்ன செய்தாலும் குற்றம் குற்றம் குற்றம் மட்டுமே. அவனுக்கு என அந்த வீட்டில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் பேச யாரும் இல்லை. ஜோஹிதா உட்பட. வெளியே நண்பர்களைப் பார்க்க சென்றால் கூட கட்டுப்பாடுகள் உண்டு.
" நான் என்ன சடங்கான புது பொண்ணா? எப்ப பாத்தாலும் கூடவே நாளு பேர் வாட்ச் பண்ணிட்டு இருக்கீங்க. " எனச் சடைத்துக் கொள்ளும் அளவுக்கு அவன் வெளியே எங்கு சென்றாலும் உடன் ஜோஹிதாவின் அண்ணன்களும் வந்து அவனின் நண்பர்களுக்கு மத்தியில் நின்று கொள்வர், என்ன பேசுகிறார் என்பதை கேட்க.
"நீ எங்க வீட்டு பொண்ண விட்டுடுட்டு எவ கூடவோ ஓடிப்போக இருந்தீயாமே. உண்மையா? பரவாயில்லை. இனி எவளையும் காதலிக்கிறேன்னு சொல்லி எங்க வீட்டு பொண்ண விட்டுடுட்டு போய் எங்க குடும்ப மானத்த வாங்கிட கூடாது. எங்க பொண்ண கல்யாணம் பண்ணதுக்குப் பின்னாடி நீயும் எங்க குடும்பத்து ஆள் தான். ஒழுக்காமா நடந்துக்க. இல்லன்னா எம்மக தாலி அறுத்தாலும் பரவாயில்லைன்னு உன்னைக் கொன்னு பொதச்சிடுவேன்." என மிரட்டுவார், விகாஸின் தந்தை.
வீட்டார் அனைவரும் ஜாடையாக பேசுவது, வந்தால் ஏளனம் செய்து, ஓடிப்போய் விடுவானோ எனக் காவல் காப்பது, எதுவுமே கார்த்திக்கிற்கு பிடிக்கவில்லை.
தனி குடித்தனத்திற்கு அழைத்தால், " அப்படி என்ன சொல்லிட்டாங்கன்னு தனியா போவோம்னு சொல்ற. உண்மையத்தான சொன்னாங்க. அன்னைக்கி நீ அவ கூட ஒடிப்போகத்தான இருந்த. அப்றம் என்ன. உண்ம கசக்கத்தான் செய்யும்.
உன்னைப் பத்தி தெரிஞ்சதுனால கேலி பண்றாங்க. சும்மா எகிராத. எல்லாம் தெரிஞ்சிருந்தும் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சி வீட்டோட சேத்ததே அவங்க பெருந்தன்மையா இருக்குறதுனால தான். ஏதாவது ஒரு நேரம் கோபத்துல பேசுனா கோயிச்சிட்டு வீட்ட விட்டு போறதா. பொறுமையா இருந்துதா ஆகணும்.
எங்க குடும்பத்துக்குன்னு இருக்குற சில பழக்கங்கள விட்டுக்குடுக்க வேண்டியதா ஆகிடுட்சின்னு பெரியப்பாக்கெல்லாம் வருத்தும் தாஅன.. ஆனாலும் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவங்களுக்கா இந்த வீட்டிலயே இருந்து அவங்க சொல்ற வேலைய நீ பாத்தா என்ன தப்பு கார்த்திக்." என்க,
"ம்ச்… வீட்டுல இருக்குறவங்கள கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா என்னோட கேரியர். அத எப்படி அவங்க முடிவு பண்ணலாம். என்னோட கனவு என்னன்னு தெரியும் தான ஜோஹிதா உனக்கு. "
"ம் நல்லாவே தெரியும் தான். சமயக்காரனாகுறது தான. எனக்கு நீ என்ன வேலை செஞ்சாலும் ஓகே தான். பட் இந்த ஃபேமிலிக்குன்னு ஒரு மரியாத இருக்கு. அதுக்காகவாது நீ அந்தச் சமக்காரனா இருக்காம எங்க அண்ணனுங்க கூட சேர்ந்து பைனான்ஸ் கம்பேனிக்கி போ." என்பாள் ஜோஹிதா.
முடியாது என்று மறுப்பை அழுத்திச் சொல்ல, உடனே கத்தியைக் காட்டி அறுத்துக் கொள்வதாக மீண்டும் மிரட்ட, குடும்பத்தார் வந்து இவனைத் தான் திட்டி தீர்த்தனர்.
" உனக்காக உயிரையே விடத் துணிஞ்சவ. அவளுக்காக இதச் செய்யமாட்டியா!” எனப் பேசி பேசி, கார்த்திக்கின் பேச்சு அங்கு எடுபடாது போனது. செல்லாகாசாய். அவர்களின் சாட்டைக்கு சுற்றும் பம்பரமாய்ச் சுழற்றிவிட பட்டான் கார்த்தி. சுழன்றது அவன் மட்டுமல்ல. ஜோஹிதாவும் தான். அவளைத் தங்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும் பொம்மை போல் மாற்றினர் அவளின் குடும்பத்தினர்.
திருமண ஏற்பாடுகள் நடந்த போதே ஜோஹிதாவிடம் சென்று, "உம்புருஷெ எதுக்கு டில்லிக்கு போயிருக்கான்னு தெரியுமா? "
" பத்திரிக்க வைக்க ண்ணா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பேசினேன். ஹோட்டல்ல இருக்குறதா சொன்னான். " என்றவளின் மூளையைச் சலவைச் செய்ய தொடங்கியது அவளின் குடும்பம்.
" இப்படி அவன நம்பி நம்பித்தா ஏமாளியா நிக்கிற. ஹிம். " என நெட்டி முறித்தாள் அவளின் அன்னை.
" என்னம்மா சொல்ற?"
"மாப்பிள்ள அவனோட இன்னோரு காதலியத் தேடி போயிருக்கான். " என்றான் விகாஸ்.
" அவளுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சின்னு சொன்னீங்களே." என்றாள் அலட்சியமாக.
" இல்ல… ஆகல... நம்ம கிட்ட கார்த்திக்க விட்டுடுட்டு போறதுக்கு ஐம்பது லட்சத்த கேட்டு வாங்குனவ, வீட்டுல ஏற்பாடு பண்ண கல்யாணத்த பண்ணிக்காம, நகை பணத்த எடுத்திட்டு ஓடிட்டா. எங்கன்னு தெரியல. எவெங்கூடன்னு தெரியல.
ஆனா நம்ம மாப்பிள்ளை. காதலி நினப்புல ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கான். பாக்குற எல்லாத்துக்கும் அடி உதன்னு வம்பிழுத்து இருக்காரு. இப்ப நம்ம மாப்பிள்ள இருக்குற இடம் போலிஸ் ஸ்டேஷன். அது தெரியுமா உனக்கு?
அந்தப் பொண்ணோட அண்ணன அடிச்சி மண்டைய உடச்சிருக்கான் அதோட அம்மா கேஸ் குடுத்திருக்கு. " என விகாஸ் சொல்ல, உடனே கார்த்திக்கைக் காண துடித்த ஜோஹிதாவிடம்.
" கல்யாணம் பண்றது பெருசில்ல. கட்டுன புருஷன கைக்குள்ள வச்சிக்கணும். அது தான் முக்கியம். அவன உங்கிட்டவே தக்க வச்சிக்க. உன்னைக் கல்யாணம் பண்ணதுக்கு இதுக்கப்றமும் அவெ காதலி கூடத் தொடர்புல இருந்தா…. அது அவனோட பொண்டாட்டியா உனக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் உன்னைப் பெத்து வளத்த பாவத்துக்கு நம்ம குடும்பத்தையும் வந்து சேரும்.
அவன உன்னோட கன்ரோல்ல வச்சிக்கணும்னா அவன உம்பிடில வச்சிரு. இப்ப அவனா வரட்டும். அடுத்து அவனச் சுதந்திரமா எங்கயும் போகவிடாத. ஒரேயடியா பிடிச்சிடு." என ஜோஹிதாவின் மனதில் விஷம் ஏற்ற, அந்த விஷம் அவளின் நாக்கில் நின்று கொண்டது.
டெல்லியில் என்ன நடந்து போலிஸ் ஸ்டேஷன் செல்லும் அளவுக்கு.?
"மச்சான், இன்ஸ்பெக்டர் கால் பண்ணிருந்தாரு டா. " என்றான் அப்சத். அவனின் குரலில் நடுக்கம் இருந்ததை உணர்ந்த முருகு.
"என்னாச்சி டா? என்ன சொன்னாரு? ஜோதி கிடைச்சாளா?." என வேகமாக கேட்க,
"இல்ல டா... அது... "
"சொல்லித்தொலடா!!. " எனக் கத்தினான்.
"ஜீஹச்க்கு வரச் சொன்னாரு. ஒரு பொண்ண நேத்து... நேத்து... பாலத்துக் கீழ கண்டு பிடிச்சாங்களாம். அது நம்ம ஜோதியா இருக்கலாம்னு சந்தேகப்படுறாங்க. " எனச் சொல்ல, அவன் கூறாமல் விட்ட செய்தியைச் செய்தி வாசிப்பாளர் கூறினார்.
"நேற்று நள்ளிரவு *** பாலத்திற்குக் கீழ் ஒரு பொண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண் யார்? என போலிஸ்ஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்." என்ற செய்தி மூவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தன் கண்ணில் வடியும் நீர் வாணிக்கானது என்பது அப்சத்திற்கே வியப்பாக இருந்தது. 'பசங்க கிட்ட வரமொற இல்லாம பழகுனா அப்படித் தான். ' எனச் சொல்லி வாணியைத் துரத்தி விட்டு போது கூட வருத்தம் வரவில்லை. தன் நண்பனின் காதலை சேர்த்து வைத்து விட்டோம் என்ற நிம்மதி தான் இருந்தது.
ஆனால், தனியாகச் சென்ற அவளை கல்லூரி முழுவதும் ஏசும் போது வந்தது வருத்தம். அத்தோடு விகாஸ் வேறு அவளை வைத்து கார்த்திக்கை பழிவாங்க நினைப்பது தெரிந்ததில் இருந்து,
‘அன்று வாணியைக் கார்த்திக்குடன் அனுப்பியிருக்கலாமோ... அல்லது பாதுகாப்பான எதாவது ஓரிடத்தில் தானே கொண்டு சென்று விட்டிருக்கலாமோ… தனியாக செல்ல அனுமதித்து தவறு செய்து விட்டோமோ…’ என்ற எண்ணம் வர அவனுள் வேதனையாக மாறி அவளைத் தேட தொடங்கினான்.
அவளை உண்மையாகவே தேடினான். கார்த்திக்கிற்குக் கிடைக்கிறாளோ இல்லையோ வெறித்தனமாக தேடும் விகாஸிஸ்கு கிடைத்துவிட கூடாது என்று. அப்சத் கார்த்திக்கை ஜோஹிதாவுடன் சேர்த்து வைக்க நினைத்தானே தவிர வாணியை பிடிக்காது என்று இல்லை அவனுக்கு. அவளின் பேச்சும் சிரிப்பும் அவளைத் தங்கையாக உருவகப்படுத்தி பார்க்க, மனம் நொந்தது அவனுக்கு.
மூவரும் வேகமாக மருத்துவமனை செல்ல, அங்கு முரளி நின்று கொண்டிருந்தான்.
"நான் தான் அன்னைக்கே சொன்னேனே. கேட்டியா!. அவளுக்கு உன்னோட சேத்து எக்கச்சக்க பசங்க பழக்கம்னு. ஏதோ உத்தமி மாதிரி உங்கிட்ட நடிச்சி உன்னை ஏமாத்த பாத்திருக்கா. அது எவெங்கூட போய் இப்படிச் சீரழிஞ்சி எங்க மானத்த வாங்கி... ச்ச… நல்ல வேள அவ்ளோட வலைல நீ மாட்டாம தப்பிச்சிட்ட. ஜோஹிதா காப்பாத்திட்டா. அவளுக்கு அப்படி ஒரு சாவு தேவ தான். *** அவளெல்லாம் பாம்பே கல்கத்தா மாதிரியான எரியால இருப்பான்னு நினைச்சேன். ரொம்ப சீக்கிரம் செத்துட்டா. " என்ற போது கார்த்திக் அவனின் மீது பாய்ந்தான்.
மற்ற இருவருக்கும் இவர்களைப் பிரித்து விடும் எண்ணம் இல்லை. வாங்கட்டும் என்று விட்டுவிட, சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்க்க, கார்த்திக் நிறுத்தவே இல்லை.
"கூடப்பிறக்கலன்னாலும் ஜோதி உந்தங்கச்சி தானடா!. எப்படி டா அவளபத்தி தப்பா பேசுற? பேசுவியா? பேசுவியா?" எனச் சொல்லி சொல்லி அடிக்க, அப்சத்திற்கும் முருகுவிற்கும் இது புதிய செய்தியாக இருந்தது.
இரண்டு வருடங்களாக பழகுகின்றனர் முரளியுடன். ஒரு வருடமாக வாணியுடன். ஆனால் வாணியைக் கொடுமை படுத்தும் பெரியன்னையின் குடும்பம் முரளி தான் என்று தெரியாமல் போனது.
வாணிக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைப் பற்றி அப்சத் அறிவான். அந்த ஆள் பெரிய கஞ்சா போதை ஆசாமி. ஆறுபது வயதிலும் பெண் சுகம் தேடும் ஒரு கேடு கெட்ட மனிதனுக்கு வாணியைத் தர நினைத்தே அப்சத்திற்கு அதிர்ச்சி. அதனால தான் அவளைத் தேடி ஸ்டேஷனுக்கு வந்தவர்களிடம் அவளைக் காட்டிக் கொடுக்காது ட்ரெயினில் ஏற்றி விட்டான்.
அவனுக்கு முரளி அவளின் அண்ணன் என்பது அதிர்ச்சியாக இருக்க, கார்த்திக்குடன் சேர்ந்து அவனும் அடித்தான். இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முருகு தான் வெளியே எடுக்க உதவினான்.
"என்ன மச்சான் நீ? போட்டு குத்து குத்துன்னு குத்திட்டி. அந்த நாய ஒரே அடில சாவடிச்சிருக்கலாம்ல... ச்ச… நம்ம கூடவே இருந்திட்டு என்னென்ன பண்ணிருக்கான்னு தெரியுமா?" என வாணிக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைப் பற்றி அப்சத் கூற,
"அவளோட கஷ்டம் எதையுமே எங்கிட்ட சொன்னது இல்லடா. அவளோட உடம்புல இருந்த காயத்த பாத்து தான்டா தெரிஞ்சிக்கிட்டேன். எப்பயும் போல சிரிக்கிட்டே அவளோட கண்ணீர எங்கிட்ட காட்டாம மறச்சிட்டாடா. அவளோட வீட்டு சூழ்நிலைய சொல்லிருந்தான்னா நான் கண்டிப்பா ஜோஹிதாவ பாக்க போயிருக்க மாட்டேன். எனக்காக இருந்த ஒருத்திய நான் இழந்திட்டேன் மச்சான். முதல்ல அப்பா… அடுத்து பாட்டி... இப்ப ஜோ... ஆ. " எனக் கத்தி வேதனையில் அழுதவனின் கண்ணீர் இருவரையும் கரைத்தது.
அப்சத் , 'தான் தான் அதற்கு காரணம்' என்று உள்ளுக்குள் மருகிப் போனான். கூடவே கார்த்தி பற்றி வாணி கூறியதும் நினைவு வந்து. எத்தனை பெரிய தவறு செய்துள்ளோம் என்று விளங்கியது. திருத்த முடியாத. திருத்த வாய்பில்லாத தவறு அது.
"அந்தம்மா, அது தான் அவங்க பொண்ணுனு சொல்லி பாடிய வாங்கிட்டு போயிடுச்சி. கேஸ் க்ளோஸ்னு போலிஸ் கதைய முடிச்சிட்டாங்க. இப்ப நாம ஜோதிய எங்க போய் தேடுறது. " என வருந்திய முருகு வேலைக்கு செல்லாது டெல்லியில் இருந்தே தேடினான். அப்சத்தும் தான். ஆனால் கார்த்திக்கை விடவில்லை ஜோஹிதா.
" எங்க இருக்க கார்த்திக்?. எப்ப வருவ?. நாளைக்கி நமக்கு கல்யாணம்! நியாபகம் இருக்கா?. இல்லையா?. " என விடாது ஃபோன் செய்து அவனைச் சென்னைக்கு வரச் செய்தவள் மீண்டும் விடவே இல்லை.
முரளியின் உளறல்கள் மூலம் ஜோஹிதாவின் குடும்பம் வாணியின் வீட்டிற்கு சென்று விலை பேசி வாங்கியதை அறிந்தவனுக்கு விகாஸின் மீது தான் சந்தேகம் வந்தது.
தன்னைச் சுற்றி யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தெரியாத சுழலில் மாட்டிக் கொண்டு தவித்த கார்த்திக்கை ஜோஹிதாவும் விட்டு வைக்க வில்லை.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..