நின்னை - 18
"இங்க வாம்மா, ஃப்ரிட்ஜ்ல ஒரேஞ்ச் பழம் இருக்கு. ஒரேஞ்ல ஜுஸ் போடுவா தானே நீ? ரெண்டு க்ளாஸ் போட்டு எடுத்து வா" என சொல்லி விட்டு வந்தவர்களுடன் அமர்ந்த ஜெயந்தி, பழச்சாறுடன் வந்தவளை அருகில் அமர்த்தி "இது தான் என்ர மருமகள்" என அறிமுகம் செய்தாரே தவிர்த்து, அவர்களை யார் என்று இவளுக்குக் கூறவில்லை.
இருங்க சாப்பிட்டு போகலாம்.. தம்பிய கூப்பிடுறன்.. போன்ற எந்த ஒரு சம்பிரதாய வார்த்தைகளையும் கூட அவள் மாமியார் வந்தவர்களைப் பாய்ந்து கூறவில்லை.
தங்க மோதிரம் போட்ட மிதப்புடன் "அப்ப நாங்க வாரம்.." என அவர்கள் எழுந்து கொள்ள, சரி போய் துலையுங்கள் என்பது போலவே விட்டு விட்டார்.
காலி க்ளாஸை எடுத்து டைனிங் டேபிளில் வைத்த சாத்வி கட கடவென படி ஏறினாள்.
மூடி இருந்த அறைக் கதவை திறந்து உட் பிரவேசிக்க, கொம்பியூட்டர் சிஸ்டத்தில் அமர்ந்து ஏதோ PDF file பார்த்துக் கொண்டிருந்தான் வாமன்.
அவன் வேலை பார்க்கிறானா இல்லை பார்ப்பது போல நடிக்கிறானா என்று எல்லாம் யோசிக்காமல் அவன் பக்கவாட்டில் நின்று, "கீழ வந்திருந்த அவங்க யாரு?" எனக் கேட்டாள்.
அவள் புறம் திரும்பியவன், "யார கேக்குறிங்க?" என ஏறிட்டான்.
"நீங்க வெளியில பொயிட்டு வரக்குள்ள உங்கட அம்மாவோட கதச்சிட்டு இருந்தாங்களே.. அவங்க.."
அவள் என்ன கேட்டிருந்தாலும் விளக்கமாகவும் விபரமாகவும் பேசத் தயார் அவன்.
கீழே உட்கார்ந்து இருந்த அந்த கூட்டத்தை பற்றி பேச மட்டும் துளியும் விரும்பவில்லை.
அவர்களை பற்றி நினைக்க கூட கூடாது என்று தான் அநாவசிய வேலையை அவசரமாக இழுத்து போட்டு பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
"சொல்லுங்களன்.. யாரு அவங்க?"
முடிந்தால் வாமனை பிரஷாந்தியுடன் பேச சொல்லுங்கள் என்ற அவர்களை பற்றி அறிந்தே தீர வேண்டும் சாத்விக்கு.
"சொல்ற அளவுக்கு முக்கியமான ஆக்கள் இல்ல ஹாசினி அவங்க.." என்றவன் டெஸ்க்டோபை பார்த்தபடி பணியைத் தொடர்ந்தான்.
இது என்ன மாதிரியான பதில்!!??
தனது இடது கையை அவன் முன் நீட்டி, "முக்கியம் இல்லாத ஆக்கள் தான் எனக்கு ரிங் போட்டாங்களா??" எனக் கேட்டாள்.
இலட்சம் பெறுமதியான பொருளை நீ கல்யாணம் கட்டி அழைத்து வந்தவளுக்கு பரிசளிப்பவர்கள் உனக்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி தானே இது!
அவள் விரலை பார்த்த வாமன் முகமோ இறுக்கம் அடைந்தது.
சாத்வியின் இடது கையில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடக்கின்றன. மோதிர விரலின் VS ஆங்கில எழுத்து பொறித்தது கல்யாணத்தில் அவன் அவளுக்கு அணிந்து விட்ட மாற்று மோதிரம்.
புதிதாக நடு விரலின் ஏறியிருந்த சிவப்பு கற் பதித்த நவீ டிசைன் மோதிரம் இப்போது வந்த கூட்டம் போட்டு விட்டதா?
சாத்வியின் கை விரல்கள் நீளமானதும் மெல்லியனவும். திருமண மோதிரமே அரை பவுனில் தான் செய்திருந்தனர். நடு விரலின் கிடந்த மோதிரம் ஒரு பவுன் வரும்.
யாருடைய வைஃபுக்கு யாரு மோதிரம் போடுறது??
அவள் கை பற்றி, "ஹாசினி! இந்த மோதிரம் உங்களுக்கு தேவை இல்ல..." என்றவன், நடு விரல் மோதிரத்தை உருவி எடுத்து விட்டான்.
ஹாசினி இந்த மோதிரம் உங்களுக்கு தேவை இல்ல என்றதுமே ஒரு வித இதம் பரவ, அதை அவன் கழட்டி எடுத்ததும் பெரிய பாரம் ஒன்று இறங்கியது போல உணர்ந்தவள் ஏதோ சொல்ல எடுக்க, மோதிரத்துடன் அறையை விட்டு வெளியேறி இருந்தான் வாமன்.
வேகமாக படி இறங்கியவன் ஹாலில் யாரையும் காணாது "அம்மா!!" என சத்தமாக கூப்பிட்டான்.
உள்ளிருந்து வந்த ஜெயந்தியிடம் "என்னம்மா இது?" என மோதிரத்தை காட்டினான்.
"இது..."
"அவங்கள இருத்தி வச்சி கதைச்சதே எனக்கு பிடிக்கல்லம்மா.. இதுல அவங்கட கையால மோதிரம் வேற போட விட்டிங்களா ஹாசினிக்கு? இதுக்கு மயங்கிற ஆக்கள் நாங்க இல்ல எண்டு அவங்கட முகத்துல அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பி இருக்கணுமா இல்லையா?"
"என்ன தம்பி.. வந்தவங்கள குடும்பத்தில வாழ வந்த பிள்ளைக்கு முன்னுக்கு வச்சி அப்டி செய்தா அது நம்மள பத்தி என்ன நினைக்கும்?"
அதுவும் சரிதான் என நினைத்தவன், அவரிடம் அந்த மோதிரத்தை கொடுத்து, "இத அவங்களுட்டயே ரிட்டர்ன் குடுத்து விடுங்க. வாங்குறதும் திருப்பி குடுறதும் ஃபெமிலிக்குள்ளயும் ஃப்ரெண்ட்ஸூக்குள்ளயும் மட்டும் தான் நடக்கணும். வந்து போனதுகள இதுல எந்த வகையிலயும் சேர்த்துக் கொள்ள விரும்ப இல்ல நான்.." என்றான் உறுதியாக.
வாமன் சென்றதும் கட்டிலில் அமர்ந்த சாத்வி தனது திருமண மோதிரத்தை இடம் வலம் திருப்பினாள்.
S உடன் இணைந்த V ஐ என்னவோ இன்று தான் கண்டவளை போலவே அவள் பார்க்க, வாமன் கைபேசி டேபிளில் இசைத்தது.
ஒருமுறைக்கு இரண்டு மூன்று முறை ஓயாமல் அது பாட, சாத்வி எடுத்துப் பார்க்கவில்லை.
சிறிது நேரத்தில் மேலே வந்த வாமன் "கோல் வந்ததா ஹாசினி?" எனக் கேட்டு எடுத்து பார்த்தான்.
"அக்கா எடுத்து இருக்கா..." என்றவன் அவளை பார்த்து கொண்டே நந்தினியை திருப்பி கூப்பிட்டான்.
"ம்ம் சொல்லுங்கக்கா.."
"என்ன மாப்பிள்ள, கோல் எடுத்தாலும் ஆன்சர் பண்றிங்க இல்ல.. பிசியோ?" நந்தினி அவனைப் பகிடி செய்து விட்டு, "லஞ்சுக்கு இங்க வந்திருங்க" என விருந்துக்கு அழைத்தாள்.
நேற்றே பேசி வைத்தது தான். வாமனுக்கு விடுமுறை முடிவதால் இன்று பகல் அக்காவும் இரவு தங்கையுமாக புது மணத் தம்பதிக்கு விருந்து கொடுக்க வேளைகளை தங்களுக்குள் பிரித்து இருந்தனர்.
"பிள்ள நிக்கிறாவா பக்கத்துல... குடு" என சாத்வியிடமும் பேசினாள் நந்தினி.
சாத்வி என்ன சொல்வது? சரி என்று விட்டு வாமனிடம் திருப்பி கொடுத்தாள்.
நந்தினியின் கணவனும் பேசினான்.
"மச்சான், பார்ட்டிகள் ரெடி பண்றன். உன்ர அக்காவ நான் சமாளிப்பன். அந்தப் பக்கம் என்ன மாதிரி?" என கேட்டான்.
சாத்வியை கள்ளப் பார்வை பார்த்த வாமன் காதில் வைத்த அலைபேசியுடன் பால்கனிக்கு நகர்ந்து விட்டான்.
சாத்விக்கோ நந்தினி வீட்டுக்கு என்ன உடுத்தி போவது என்ற யோசனை வந்து விட்டது.
கதைத்து முடித்து வந்தவன், "அக்காட்ட இருந்து மூண்டு மிஸ் கோல் வந்திருக்கு ஹாசினி..." என்றான்.
"நீங்க கீழ நிண்டிங்க.. எடுத்து வந்து தந்திருக்கணுமா?" எத்தனை தடவை படி ஏறி இறங்குவது என்ற அயர்ச்சியில் அவள் கேட்க,
வாமன் இலகுவாக சொன்னான். "அப்டி இல்ல ஹாசினி. உங்கள எடுத்து வந்து தர சொல்லல்ல. யாரு எடுத்த? அக்கா தானே.. நீங்களே என்ன எண்டு கேட்டு இருக்கலாம் என்றன்"
"உங்கட ஃபோனுக்கு வந்த கோல நான் எப்டி ஆன்சர் பண்ற?"
சிரித்தவன், "இதுல என்ன இருக்கு ஹாசினி?" என வியந்தான்.
"இது என்ர ஃபோன் தான். ஆனா இதுக்கு வார ஒஃபிஷியல் கோல்ஸ் தவிர்த்து பேர்சனல் கோல்ஸ நீங்களும் அட்டன் பண்ணலாம் தானே.. முக்கியமா, அம்மா அப்பா அக்கா நிவே இவங்க எடுத்தா நான் பக்கத்தில இல்லாட்டி யோசிக்காம அட்டன் பண்ணுங்க. இங்க இருக்கிற நேரம் பரவாயில்ல.. நாங்க தூரத்தில பதுளையில இருக்கம் எண்டு வையுங்க.. ஒரு தடவ ஆன்சர் இல்ல எண்டா யோசிப்பாங்க.. விளங்குதா?!"
சாத்விக்கு அவன் சொல்ல வருவது விளங்கியது.
"சும்மா எடுக்க மாட்டாங்களே.. அவங்கட நம்பர்ஸ அம்மா அப்பா அக்கா நிவே எண்டு தான் சேவ் பண்ணி இருக்கன்.. பார்த்தா யோசிக்காம எடுங்க.."
கட்டளை போல தான் சொன்னான். வெடுக்கென்று குறுக்கு கேள்விகள் கேட்டு அவனுடன் முரண் படாமல் இந்த கட்டளைக்கு அடி பணியத் தோன்றியது சாத்விக்கு.
பதினொரு மணிக்கே சாத்வியை அழைத்து கொண்டு நந்தினி வீட்டுக்கு கிளம்பி விட்டான் வாமன். நந்தினியின் கணவன் சங்கரின், தாய் தங்கை பிள்ளைகளும் வந்திருந்தனர் அங்கே.
ஒரு மணி போல ஜெயந்தி, நடராசாவும் வருகை புரிய, நிவே, அவள் கணவன் தினேஷ், மூன்று வயது மகன் என அனைவருமே ஆஜர் ஆயினர். அதுவே கல்யாண வீடு போல கலகலப்புக்கு பஞ்சம் இன்றி போனது.
சாத்வி அதிகம் பேசாத அமைதியான பிள்ளை என அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாள்.
அவளும் கலகலவென சிரிக்க வேண்டும் தங்களுடன் போட்டி போட்டு கதைக்க வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. அவள் இயல்பில் அவளை இருக்க விட்டனர்.
இதனால் வாமன் வீட்டினர் அவள் கடந்து வந்த அநாகரிக மனிதர்களில் இருந்து வேறு பட்ட நாகரிகமான படித்த சனங்கள் என்பது தெரியவந்தது சாத்விக்கு.
நந்தினி, சங்கர், தினேஷ் மூவருமே அரச உத்தியோகம் செய்பவர்கள். நிவேதா கூட தொழில் பெற முனைந்து வருகிறாள். மகனுக்கு ஐந்து ஆறு வயது ஆகட்டும் என காத்திருக்கிறாள்.
மதிய விருந்து முடித்து சாயங்காலம் போல வீட்டுக்கு வந்து குட்டித் தூக்கம் போட்டு எழுந்த வாமன் சாத்வியை தேடினான். பால்கனியில் புனிதாவுடன் ஃபோன் பேசிக் கொண்டிருந்தாள்.
"சி.எம் ஆ ஹாசினி.." எனக் கேட்டான்.
அவள் "ம்ம்" என,
சும்மா போகாமல், "நான் ஏஞ்சல்ஸுக்கு ஹாய் சொன்னன் எண்டு சொல்லுங்க" என்றான்.
அது அந்தப் பக்கம் அக்ஷி நம்சியிடம் சொல்லுப்பட , "நாங்க அத்தான் ஓட கதைகணும்" எனறு சின்னக் குரல்களின் கூச்சல் கேட்டது.
"தம்பிட்ட வீடியோ கோல் எடுத்து குடு சாத்வி.. இவளுகள் என்ன விடுறாளுகள் இல்ல.." என்றாள் புனிதா.
சாத்வி அலைபேசி வாமன் கைக்கு மாறியது.
"ஹாய் ஏஞ்சல்ஸ்!!"
"ஹெலோ அத்தா.. எப்ப இங்க வருவீங்க.. நாங்க இண்டைக்கு க்ளாஸ் போய் வந்தம்.. என்ர ஃப்ரெண்ட்ச கூட்டி வந்து நம்மட ஊஞ்சில காட்டினன்.."
"எல்லாருக்கும் ஊஞ்சில் போட்டு தரட்டாம் அவங்க வீட்டையும். நாங்க சொன்னம் இது எங்கட அத்தான் போட்டு தந்த எண்டு"
சின்ன மச்சாள்கள் அவனுடன் செல்லம் கொஞ்ச, சாத்வி வேறு வேலை இருந்தால் பார்க்கலாம் என ரூமுக்கு சென்று விட்டாள்.
அன்று இரவு நிவேதா வீட்டுக்கு கிளம்பும் போது தாமதம் ஆகி விட்டது. இவர்களுக்கு முதலே நந்தினியும் சங்கரும் பிள்ளைகளுடன் ஆஜர் ஆகி இருந்தார்.
"என்ன அண்ணா.. அக்காட்ட மட்டும் நேரத்துக்கே போய் கன நேரம் இருந்திங்க.." குறை பட்டாள் தங்கை.
"அதுக்கு தான் மச்சான் இண்டைக்கு இங்கயே தங்கிட்டு காலையில போவாராம்.." என புது திட்டம் போட்டான் அவள் கணவன் தினேஷ்.
நூடில்ஸ் ப்ரைட் ரைஸ் இரண்டும் ஹொட்டேல் ஓடர். ஜெயந்தி நடராசா இரவில் வர விரும்பவில்லை. அவர்களுக்கு உணவை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் நிவேதா.
இந்த ஒரு இரவு நிவேதா வீட்டிலேயே தங்குவோம் என ஒருமனதாக அனைவரும் முடிவெடுக்க, சாத்வி அமைதியாக இருந்தாள்.
நந்தினி நிவேதா இருவரும் படுத்தி எடுக்கும் அவரவர் குழப்படி மகன்களுடன் மெனெக்கெட, சாத்வி பார்ப்பார் அற்று ஓடிய பத்து மணி செய்தி அறிக்கையுடன் அமர்ந்து இருந்தாள் ஹாலில்.
சாப்பிட்டதுமே குசு குசு என தங்களுக்குள் கதைத்த ஆண்கள் இருவரும், விலாங்கு மீன் போல் பகல் இருந்து நழுவி நழுவி போகும் வாமனை மொட்டை மாடிக்கு தள்ளிப் போயிருந்தனர்.
"என்ன மச்சான் யூனிவரசிட்டில படிச்ச என்றிங்க.. அங்கயே வேல செய்றிங்க.. வெக்கம் இல்லயா பழக்கம் இல்ல எண்டு சொல்ல.."
"பழக்கம் இல்ல எண்டு பொய் சொல்ல மாட்டான் அத்தான். அது ஸ்டுடன்டா இருக்கேக்க. லோங் பேக்"
"பிறகு என்ன, நல்ல மச்சான நாங்க தான் கெடுக்க போறமோ எண்டு பயத்துட்டன்"
"இப்ப வைஃபுக்கு பயமோ.."
"நந்தினியயே சமாளிக்க போறன் நான்"
"நிவேதாவ வச்சிட்டே தைரியமா படி ஏறி வந்திருக்கன் நான்"
"பேர் சொல்லவே யோசிக்குது அந்தப் பிள்ள. அது ஒரு சாது மச்சான். அதுக்கு போய் பயப்பிடுறிங்க..."
அவர்கள் அவனை களத்தில் இறக்க ஏதேதோ பேசினாலும் சாத்வி சாது என்றதுமே சிரித்து விட்டான் வாமன்.
மச்சான் மாருடன் சேர்ந்து தங்கத் திரவத்தை ஏந்தி க்ளாஸ்களை உள்ளே இறக்கினான், குடி என்றால் கிட்டேயும் ஆகாத சாத்வியை பற்றி தெரியாமல்.
"குட் நைட் மச்சான்.."
"குட் நைட் அத்தான்"
எடுத்தது மேல் நாட்டு சரக்கு என்பதால் லிக்கர் நுகர்ந்த சாயல் தெரியாமல் ஸ்டெடியாகவே அவர்களுக்கு ஒதுக்கிய ரூம் வந்து சேர்ந்தான்.
கட்டிலில் அமர்ந்து ஃபோன் நோண்டியபடி இவனுக்காக காத்திருந்தாள் சாத்வி.
கதவை சாத்தி தாழ் போட்டவன் அவளை பார்த்து பல் வரிசை தெரியப் புன்னகைத்தான்.
என்ன... புதுசா பல் எல்லாம் காட்டி சிரிக்கிறார் என சாத்வி அவனை கண் சுருக்கி பார்க்க,
கட்டிலுக்கு வந்து, "எக்ஸ்கியூஸ் மீ ஹாசினி.." என விபரமாக தலையணை போர்வையை எடுத்து தரையில் போட்டான்.
"என்ன செய்றிங்க"
"படுக்க போறன் ஹாசினி.. ஃபீலிங் வெரி டயர்ட்"
"அதுக்கு ஏன் கீழ படுக்குறிங்க"
சிரித்து, "பிறகு.. உங்களோட படுக்க சொல்றிங்களா??" என்றான்.
சாத்வி முகம் மாறியது.
அவனில் ஏதோ வித்தியாசம் என தெரிந்தது. கட்டிலில் இருந்து இறங்கி அவன் அருகில் வந்து, "குடிச்சி இருக்கிங்களா??" எனக் கேட்டாள்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

vaathi sikitaan 🤣🤣🤣
பதிலளிநீக்கு🤣🤣🤣🥰🥰🥰
நீக்கு