நின்னை 19
டைனிங் டேபிளில் இருந்து கலைந்ததும் வாமனை மொட்டை மாடிக்கு கடத்தி போய் விட்டனர் மச்சான்மார் இருவரும்.
"கன நாளுக்கு பிறகு மூண்டு பேரும் சேர்ந்து இருக்காங்க தானே.. மேல மாடியில தான் இருக்கிறாங்க.. கதச்சிட்டு வரட்டும்.. நீங்க இருங்க நான் இவங்க ரெண்டும் பேரையும் நித்திரை ஆக்கிட்டு வாரன்" என்றாள் நந்தினி.
"இன்னம் அவங்கட கெட்டுகெதர் முடியல போல. நீங்க வாங்க.. அண்ணா வார நேரம் வரட்டும்" என அவளுக்காக அறையை ஒழுங்கு செய்து கொடுத்தாள் நிவேதா.
கதைத்து முடித்து வருவான் போல என கட்டிலில் அமர்ந்த சாத்வியும், நேரம் கரைக்க அலைபேசியை நோண்டினாள்.
அவளுக்கு வாமனுடன் பேச வேண்டும். அவனுடைய அக்கா தங்கை பற்றி, அவர்கள் என்ன படித்தார்கள்.. எங்கே படித்தார்கள்.. எங்கே வேலை செய்கிறார்கள் என்பதெல்லாம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். நகரில் பிறந்து வளர்ந்த அந்த இரு பெண்களும் இனிமையாகவே பழகுவது ஆச்சரியமாக இருந்தது.
பெட் கட்டி தோற்று விட்டதாக அக்கா தங்கை இருவரையும் நக்கல் அடித்து காசு கேட்டு கலாட்டா செய்தான் இன்றும்..
அதை பற்றி, அவனுக்கு கைச் சங்கிலியும் அவளுக்கு கழுத்து சங்கிலியும் போட்டு விட்ட நந்தினி நிவேதாவின் கல்யாணப் பரிசுகள் பற்றி, அவர்கள் அளித்த விருந்து, நாளைக்கு எங்கயாவது ட்ரிப் போவமா எனப் போட்ட திட்டம்..
இப்படி நிறையவே சேர்த்து வைத்து இருக்கிறாள் சாத்வி வாமனுடன் கதைப்பதற்கு!!
மனதில் தோன்றுவதை சரளமாக அவனிடம் கதைக்கிறாளோ இல்லையோ.. எல்லாம் கேட்கத் தோன்றியது. தாமதம் ஆனாலும் பரவாயில்லை என அவன் வருகைக்காகவே உறங்காமல் விழித்து இருந்தாள்.
நேற்றும் தரையில் உறங்கி விட்டான் அதுக்கு ஏதோ காரணம் சொன்னான் அது தொடர்பிலும் தெளிவில்லை.. தவிர, முற்பகல் பொழுதில் வந்து அவளுக்கு மோதிரம் அணிவித்த அந்த தம்பதி யார் என்பதும் தெரியவில்லை.
எல்லாம் அவனுடன் பேசினால் தானே முடியும்!!
நந்தினி நிவே அக்ஷி நம்சி இவர்களோடு கொட்டும் அருவி போல கதைக்கிறான்.
இங்கே வந்த பிறகு அவளிடம் மட்டும் கண்ணால் சிரிப்பதும் நேர் பார்வையை தவிர்ப்பதுமாக திரிகிறான்..
இதற்கு அவள் வீட்டில் இருந்த வாமனே பரவாயில்லை என்றும் தோன்றியது சாத்விக்கு.
அவளுடைய கை விரல்கள் ஃபோன் திரையைத் தடவினாலும் மனம் வாமனையே சிந்திக்க, இத்தனை நேரம் கழித்து ரூமுக்கு வந்தவன் குடித்து விட்டா வர வேண்டும்??
கொலை, களவு, மது, பிறன்மனை காமம், குரு நிந்தனை இவை ஐந்துமே பஞ்சமா பாதகங்கள்!!
சாத்வியை பொறுத்த வரை, மது போல பாதகம் இவ் உலகில் இல்லை. சகல பாவங்களுக்கும் அடிப்படையே குடி தான் என்பாள்.
சாத்வியின் மழலை பருவத்தை, அவள் சின்னஞ் சிறு உலகை ரணப் படுத்தியது அவளைப் பெற்றவனின் குடிப் பழக்கம்!!
அவளை துரத்தி துரத்தி அருவருக்க செய்யும் சியானில் அடிக்கும் நாற்றம், சொர்ணம் வீசும் அசிங்கமான வார்த்தைளில் வரும் மாசு எல்லாம் மதுவை அடிப்படையாகக் கொண்டவை.
சாராயம்.. கள்.. பட்டை.. வடி.. மேல்நாட்டு சரக்கு.. உள் நாட்டு சரக்கு என்ற எந்த வித பாகுபாடும் இன்றி மது என்பதே பாதகம் தான்.
முழு நேர குடிகாரன், பகுதி நேரமாக குடிப்பவன், சோசியல் ட்ரிங்கர் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது அவளுக்கு.
குடிப்பவன் அயோக்கியன்; அருவருக்கத்தக்கவன். அவ்வளவே!!
அவர் ஒரு பிள்ளைய விரும்பின எண்டு சொல்ரா.. சரி.. வேற என்ன குறை இருக்கு? நான் விசாரிச்ச வரை பெடியனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல சாத்வி.. நல்ல குடும்பமும். வேற என்ன வேணும் நமக்கு?
புனிதா சான்றிதழ் கொடுத்திருந்தாள்!
பிரஷாந்தி என்ற உறுத்தல் தவிர்த்து அவனுடம் அவளுக்கு வேறு ஒரு குறையும் இல்லையே. அவனை அவன் குடும்பத்தை இப்போது தான் பிடிக்க ஆரம்பித்தது..
அதற்குள் அரை போதையில் வந்து நிற்கிறான் இந்த அசிஸ்டன்ட் லெக்சரர்!!
ஓரேஞ்ச் வண்ண டீ ஷர்ட், காக்கி நீல ஷோட்சில் கவர்ச்சியாக தான் நின்றார் விரிவுரையாளர்.
அவருடைய பிரத்தியேக பர்ஃபுயும் வாசனையே தூக்கலாக வீச, காட்டிய பல்வரிசையும் தலையை ஒரு விதமாக சாய்த்து நின்ற விதமும்... முக்கியமாக அவர் கதைத்த தொனியும் மிதந்த கண்களுமே சாத்வியை கண் இடுக்கி பார்க்க வைத்தது அவரை..
"பிறகு உங்களோட படுக்க சொல்றிங்களா..." என பல்லைக் காட்டியவன் எதிரில் வந்தவள்,
"குடிச்சிருக்கிங்களா??" எனக் கேட்க,
திருட்டு முழி முழித்தவனின் ஆறாம் அறிவு எச்சரித்தது இவளுக்கு ட்ரிங் பண்றது பிடிக்காது என.
பல்லைக் காட்டி, "யெஸ் ஹாசினி.. குடிச்சனே.. நான் மட்டும் இல்ல நீங்க நந்தினி அக்கா நிவே சங்கர் அத்தான்.. தினேஷ் அத்தான்.. எல்லாரும் தானே குடிச்சம். சாப்பிட்டது டயஜிஸ்ட் ஆக பெப்சி குடிச்சமே.." என்றான் சமாளித்து விடும் கனவில்.
சுர் என ஏறியது சாத்விக்கு. அவன் நெஞ்சு டீ ஷர்டை பற்றினாள்.
அவள் கை வைத்ததும் ஏதோ மின்சாரம் தொட்டது போல வாமன் மிதக்கும் விழிகளால் நோக்க, இறுக்கிய டீ ஷர்ட்டை உதறி விட்டாள்.
பின்னால் தள்ளுப் பட்டு சுவரில் போய் மோதி டம் என தலை அடிபட, "அம்மா!!!" என்று அலறி விட்டான்.
உனக்கு வேண்டும் தான் இது என்பது போல எந்த பதட்டமும் இன்றி சாத்வி நிற்க,
"அம்மா.." என நெற்றி சுருக்கி தலையை தேய்த்தான்.
இவன் குரல் கேட்டு, "தேவா.. தேவா.." என அதிர்வின்றி கதவு தட்டினாள் நந்தினி.
சென்று திறந்தவன் எதுவும் நடவாதது போல, "என்னக்கா??" என,
"என்னடா கத்தினாய்.."
"கத்தினனா?"
"அம்மா எண்டியே.. தண்ணி எடுக்க வந்த எனக்கு கேட்டிச்சு.."
"ஆ.. அது.. தலையில அடிச்சிட்டன்.."
"என்ன?!"
"சுவர்ல தலைய மோதித்தன் அக்கா தெரியாம.." என பின் மண்டையை தடவினான்.
நந்தினி அவன் தோளை தாண்டி நின்றவளை பார்த்தாள். அவள் தம்பியை பார்த்தாள். என்ன நினைத்தாளோ...
"சரிடா.. " என கதவை சாத்திப் போனாள்.
டோரை லொக் செய்தவன், "சொரி ஹாசினி.. உங்களோட படுக்கவா எண்டு கேட்டத பேட் வேர்ட்ஸா எடுத்துட்டிங்களா... ஆனா அது... நான்.. நான் வேற மீனிங்ல சொல்லல்ல" என்றான் அப்பாவியாக.
சாத்வி கட்டிலில் அமர்ந்தாள்.
"அத்தான் சென்னார்.. நீங்க சாது.... ட்ரிங் பண்ணினா கண்டு கொள்ள மாட்டிங்க எண்டு... எனக்கு தெரியும் நீங்க சாது இல்ல எண்டு... டம் எண்டு மண்ட மோதின மோதுவைக்கு நான் சேது ஆகாம இருக்கிறது பெரிய விஷயம்...." என,
அவனை முறைத்தாள் சாத்வி.
"ஜஸ்ட் ரெண்டு க்ளாஸ் விஸ்கி.. ஜஸ்ட் த்ரீ க்ளாஸ்.. வொட்கா.. அவங்க ரெண்டு பேரும் போத்தல் போத்தலா குடிச்சாங்க.. பாருங்க சத்தமே இல்ல வெளியில.. நான் ரெண்டு க்ளாஸ் அடிச்சிட்டு...." என திரும்பி தான் மோதுப் பட்ட சுவரை பார்த்தவன், அவள் அருகில் வந்து தரையில் மண்டி போட்டு,
"உங்களுக்கு ட்ரிங் பண்றது பிடிக்காது எண்டு எனக்கு விளங்குது.. நீங்க அடிச்ச அடியில.. சொரி! சிவருல போய் மோதின ஸ்பீட்ல, ஐ ரியலைஸ்ட்"
"ஐ கேன் அன்டஸ்டான்ட், டீடோட்லரா எக்ஸ்பெக்ட் பண்ணினிங்க தானே என்ன..."
"நானும் குடிக்க மாட்டன் ஹாசினி.. இண்டைக்கு தான் கொஞ்சமா குடிச்சன்.. அவங்களுக்காக.. அவங்க என்ர வெல்விஷர்ஸ்... நான் கல்யாணம் செய்யணும் எண்டு ஆச பட்டவங்க.. அது நடந்ததுக்கு பார்ட்டி தாராங்க... நான் எப்டி அவொய்ட் பண்ண?"
"கல்யாணமே வேணாம் எண்டு இருந்தவன பேசி பேசி மனச மாத்தினவங்க அவங்க தான்... அவங்க நல்லவங்க ஹாசினி.. அதுலயும் இந்த சங்கர் அத்தான் இருக்காரே... வெரி குட் ஹியூமன் பீயிங்.. அவர் மை லவ்லி அத்தான்.. அவருக்காக கொஞ்சமா குடிச்சன்.. ஆனா நீங்க தூங்கி இருப்பிங்க எண்டு நினச்சு வந்தன்.. முழிச்சுட்டு இருந்திங்க... மாட்டிட்டன்..." என்றான் திருட்டு முழியோடு.
அவன் கண்ணையே சாத்வி பார்க்க, அவள் எதிர்பாராத தருணம் மடியில் கோர்த்திருந்த அவள் கரங்களை பற்றி, "சொரி ஹாசினி!! சோ சோரி!!" என கெஞ்சினான்.
வித்தியாசமாக இறங்கி விட்ட இவனை புரியாமல் பார்த்தாள் சாத்வி.
"ஏதாவது சொல்லுங்க ஹாசினி.. கூரான கத்தி மாதிரி ஷார்பா கதைப்பிங்களே.. ஏதாவது சொல்லுங்களன்"
"கைய விடுங்க.."
"நோ!! நீங்க மன்னிச்சிட்டன் எண்டு சொன்னா தான் விடுவன்.."
"விடுங்க முதல்.."
"ப்ளீஸ் அக்செப்ட் மை அபோலெஜிஸ்.. நீங்க அக்சப்ட் பண்ணல்ல எண்டா உங்க கால்ல.." என கையை விட்டு காலுக்கு குனிந்து பாதம் பற்ற பதறி எழுந்தவள்,
"என்ன செய்றிங்க!?" என விலகி நின்றாள்.
"நான் தான் உலகத்திலயே மோசமானவன் மாதிரி பாக்குறிங்க ஹாசினி நீங்க.. உங்கட ஐஸ்ல எனக்கு அது தெரியுது.. உங்கட பாடி லாங்குவேஜ்ல விளங்குது.. நான் அப்டி இல்ல எண்டு எப்டி ப்ரூஃப் பண்ண? அயம் ஜென்டில்மேன்"
"அதுக்கு கால்ல விழுவிங்களா.."
"யெஸ்.. வைஃப்ட கால்ல விழுறதுல என்ன பிழ?? ஐ ஹேவ் நோ ஈகோ"
"குடிச்சிட்டு உளறாம போய் படுங்க"
"நோ.. நோ.. நான் குடிக்காம வந்தாலும் தேவ பட்டா கால்ல விழுவன் ஹாசினி.."
என்னடா இது என சாத்வி பார்க்க, அவன் சொன்னதை நிரூபிக்க அவள் பாதம் பற்ற மறுபடியும் வந்தவனை விட்டு தள்ளி நகர்ந்த சாத்விக்கு ஏன்டா இவனை தள்ளி விட்டோம் என்று ஆனது!!
"சொரி சொல்ல வேணாம். இனி இப்டி குடிச்சிட்டு வராதிங்க.. எனக்கு பிடிக்காது.."
"ஓ!! அக்சப்ட் பண்ணிட்டிங்களா.. தாங்க்ஸ்.. தாங்க் யூ சோ மச்.. ஐ ப்ரோமிஸ் யூ, உங்கள கேக்காம இனி ட்ரிங் பண்ண மாட்டன்.."
கேக்காமலா... ஓ!! கேட்டு அனுமதி வாங்கி வேறு குடிக்கும் ஐடியா உண்டா??
முறைத்து முடித்து, "சரி படுங்க.." என்றாள்.
எழுந்து நின்றவன் அழகாக புன்னகைத்தான்.
இந்த சிரிப்புக்கு ஒன்றும் குறை இல்லை என சாத்வி எரிச்சல் அடைய,
"ஐ லைக் யூ..." என்றவன் குனிந்து போர்வை தலையணை எடுத்தான்.
அவன் தரையில் உறங்க தயார் ஆவதை கவனித்த சாத்விக்கு, ஏன் அவன் கீழே படுக்க வேண்டும் என்ற கேள்வி குடைந்தது.
எஞ்சிய தலையணை போர்வையை எடுத்து கட்டிலுக்கு மறு பக்கம் போட்டவள், "நீங்க வந்து பெட்ல படுங்க" என, அவன் தரையில் போட்டவைகளை எடுத்து மேலே வைத்தாள்.
"நோ நோ நோ வே..." என கையை குறுக்கே ஆட்டி கிட்டத்தட்ட அலறினான் வாமன்.
"ஏன்?"
"நான் உங்க பக்கத்துல படுக்க மாட்டன்.. ஈவின் உங்களுக்கு பக்கத்தில கூட வர மாட்டன்"
குடித்து விட்டு வந்திருக்கும் உங்களுடன் உறங்க நானும் தயார் இல்லை தான்...
இருந்தாலும், சரக்கடித்த வாயில் இருந்து ஒரே கட்டிலில் உறங்க மாட்டேன் என அவன் நேற்று சொன்னதன் காரணம் இன்று தெளிவாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், "ஏன்?" என்றாள்.
பதில் சொல்ல எடுத்தவன் பார்வை தானாகவே அவள் கழுத்துக்கு கீழே இறங்க, கண் இரண்டை கையால் பொத்தி, "டேர்ட்டி மைன்ட் ஹாசினி எனக்கு.. சொரி! நீங்க வைஃப் எண்டாலும் கள்ளத் தனமா உங்கள பாக்குறது....."
"எனக்கு... நான் கொஞ்சம் வீக்கா இருக்கன்.. உங்களுக்கு பக்கத்துல வந்தா நான் கண்டிப்பாக கைய கால் வச்சுட்டு சும்மா இருக்க மாட்டன்.. அதுவும் இப்ப... இந்த நிலைமையில என்ன நானே கன்ட்ரோல் பண்ண ஏலாம போனா..."
"அப்பா சொல்லி இருக்கிறார்.. அப்பா அம்மா இல்லாத பிள்ள அது.. தனிய வளர்ந்த பிள்ள.. அவட மனம் அறிஞ்சி நடந்து கொள் தம்பி எண்டு.. ஐ ரெஸ்பெக்ட் விமன்.. நீங்க கொஞ்சம் ரிசேர்வ்டா இருக்கிங்க.. சடனா வந்த ரிலேஷன்ஷிப்ப டக் எண்டு ஏற்றுக் கொள்ள யோசிக்கிறிங்க..."
"லைஃப்ல பெரிய ப்ரேக்கப்ப சந்திச்சி அடி வாங்கின எனக்கு உங்கள அக்சப்ட் பண்ண நிறைய ரீசன் இருக்கு.. எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு.."
"அதே மாதிரியே நீங்களும் இருக்கணும் உங்களுக்கும் என்ன உடனே பிடிக்கணும் எண்டு இல்ல தானே... உங்க ஃபீலிங்ஸ மதிச்சி ஒதுங்கி இருக்கன்.. நீங்களும் என்ன மாதிரி ட்ரஸ்டோட எப்ப க்ளோஸ் ஆகுறிங்களோ அப்ப நான் இதே மாதிரி தள்ளி நிக்க மாட்டன்.."
சாத்விக்கு தேகத்தின் ஒட்டு மொத்த மயிர் கால்களும் நட்டுக் கொண்டு நின்றன அவன் சொல்வதைக் கேட்டு.
அவன் பார்வை படர்ந்த இடங்கள், அதை உடனை விலக்கிய அவன் கண்ணியம், இந்த நிலையிலும் நிதானமாக நடந்து கொள்ளும் அவன் மனக் கட்டுப்பாடு..
அவளுக்கு சிலிர்ப்பூட்டின!!!
வாய்ப்பை பயன்படுத்தி, "பெரிய ப்ரேக் அப்ப சந்திச்சன் எண்டிங்க.... என்ன அது?" எனக் கேட்டாள்!
வளரும்..
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..