நின்னை - 21
சாமத்தில் இயற்கை அழைப்பு எழுப்பி விட்டது ஜெயந்தியை.
எழுந்தவர் சமையல் அறை விளக்கு வெளிச்சம் கண்டு படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்.
சின்ன சத்தம் கூட எழுப்பாது அவர் மருமகள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் அடுப்பில்.
"என்ன பிள்ள செய்றிங்க!!!!" அவர் ஆச்சரியமாக கேட்க,
இவள் அவரை எதிர்பாராது திரும்பி, "சமைக்கிறன்..." என்றாள்.
"இந்த நேரத்தில.."
"ஓம்.. அஞ்சி மணிக்கு பஸ் எண்டார்.."
"ஓம்!! அதுக்கு இந்த மூண்டு மணி சாமத்தில என்ன செய்றிங்க.." என வியப்பு குறையவில்லை அவள் மாமியாரிடம்.
பயணம் போகும் போது வீட்டில் உணவு சமைத்து கட்டிப் போகும், அனுப்பும் பழக்கம் இல்லை. வாமன் தன் தேவைகளை கடையிலேயே பார்த்துக் கொள்வான்.
நான்கு வருடங்கள் பல்கலைக்கழகம் சென்ற சாத்விக்கு, புனிதா முதல் வருடம் இரண்டு வேளைக்கும் சேர்த்து அவள் ரூமில் உள்ள பிள்ளைகளுக்குமாக உணவு கட்டி அனுப்புவாள். அடுத்தடுத்த வருடங்களில் அதை பின்பற்றி சாத்வியே தனக்குரியதை செய்து எடுத்துப் போவாள்.
இவர் கேட்கும் புதுமையான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை அவளுக்கு.
"சாப்பாடு சமச்சி கட்டிக் கொண்டு போ போறிங்களா!!" என்றவர், "நல்லம்!! என்ன செய்றிங்க?"
"பிட்டும் கறியும். லஞ்சுக்கு சேர்த்து செய்றன். கொண்டு போக மட்டும் இல்ல.. மதியம் நீங்க சமைக்க தேவை இல்ல. சேர்த்தே செய்றன்"
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த ஜெயந்திக்கு அடி வயிறு முட்ட, அதை இறக்க சென்றார்.
சாத்வி இரண்டு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விட்டாள். அவசர அவசரமாக காலைக் கடன் முடித்து இறங்கியவள், டீக்கு தண்ணி போட்டு விட்டு பிட்டு பிரட்டினாள்.
மரக்கறி பால் கறிகள் நண்பகல் வரை தாங்காது. பழுதாகி போகும் அபாயம் இருப்பதால் எண்ணெயில் பிரட்டிப் வெந்தயக் குழம்பு வைக்க தயார் செய்தாள். டீ வைத்து குடித்து ப்ளாஸ்கிலும் ஊற்றி, கத்தரிக்காய், உருளை கிழங்கு பொரியல் செய்தாள்.
இதறகுள் முகம் கழுவி வந்த ஜெயந்தி, "நான் ஏதாவது செய்து தரவாம்மா?" எனக் கேட்டார்.
இரண்டு கோப்பையில் டீ ஊற்றியவள் அவருக்கு ஒன்றை கொடுத்து, "இல்ல, எல்லாம் முடிஞ்சுது. ப்ளாஸ்ல மிச்சம் டீ இருக்கு. லஞ்சுக்கு ரைஸ் மட்டும் குக்கர்ல போட்டுக் கொள்ளுங்க" என சொல்லி விட்டு வாமனுக்குரிய கப்புடன் மாடி ஏறினாள்.
நான்கு மணிக்கு தான் வாமதேவனுக்கு துயில் கலைந்தது. ஃபோனில் வைத்த அலாரத்தின் தயவில் எழுந்து போர்வை மடித்தவன், பாத்ரூமில் இருந்து டவலுடன் வெளிப்பட்டவளால் ஒரு செக்கன் நின்று விட்டான்.
அவளும் இவன் எழுந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை. தனது ஆடையை எடுத்து கொண்டு கதவை அடைத்தாள்.
நான் அங்க வரமாட்டன் என்றவள், என்ன உங்களுக்கு சமைச்சி தரவா கூப்பிடுறிங்க எனக் கேட்டவள் தனக்கு முன்பே எழுந்து இவ்வளவு வேகமாக பதுளை வர தயாராகிறாளே என்ற அதிர்ச்சி தானே தவிர, நீங்கள் நினைப்பது போல் வாமனுக்கு அவளை அரை குறையாக கண்டு வந்தது அல்ல.
அரைகுறை தரிசனம் தரும் மின் அதிர்வுகளுக்கு வாய்ப்பு கொடாமல் அவள் தான் தோன்றிய வேகத்தில் மறைந்தும் போனாளே!!
நிமிடத்தில் முழு ஆடையில் சாத்வி வந்ததும் தனக்குரியவைகளுடன் பாத்ரூம் புகுந்தவன், ஃப்ரெஷ் அப் ஆகி வந்தான்.
"மேசைல டீ இருக்கு.. ஆறிட்டோ தெரியாது.. சூடா வேணும் எண்டா கிச்சன் போங்க.. ஃப்ளாஸ்ல இருக்கு ஊத்தி எடுங்க" என்ற சாத்வி தனது லக்கேஜை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாக்லெட் நிறத்தில் சுடிதார். அதற்கு கரு நீல நிறத்தில் பைஜாமா அணிந்திருந்தாள். கரு நீல துப்பட்டா இன்னும் அதன் வேலையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது கட்டிலில் கிடக்க, வகுட்டுக்கு வைக்காமல் நெற்றியில் மாத்திரம் சின்னதாக குங்குமம் இட்டு இருந்தவள், தலைமுடியை வழக்கம் போல் காதோர முடிகளாக சேர்த்து சின்ன க்ளச் மாட்டி இருந்தாள்.
இடது மணிக்கட்டில் கருப்பு பட்டி வார்ச். வலது கையில் எதுவும் இல்லை, அதை வெறுமையாக விட்டு விட்டாள்.
கழுத்தில் அவன் கட்டிய தாலிக் கொடியையும் காணோம். அவன் தங்கை போட்ட தடிப்பமான சங்கிலியையும் காணோம். நூலளவு மெல்லிய செயின் மாத்திரம் மின்ன, அதில் ஒரு பென்ரன் கூட இல்லையே.. குட்டியா ஒரு முத்து மாட்டி விட்டா வடிவா இருக்குமே என சிந்தனை வந்தது லெக்சரருக்கு.
வாமன் ரசனையுடன் யோசிக்கையில், அவன் பார்வை தன்னில் ஊர்வதை உணர்ந்து நிமிர்ந்தாள் சாத்வி.
"என்ன??" அவள் வெடுக்கென கேட்டு விட்டதும் அள்ளு விட்டது இவருக்கு.
என் மனம் உன் அருகில் சலனப் படுக்கிறது. இருந்தாலும் நீயும் என்னில் சாயும் வரை நான் பொறுமையாக காத்திருப்பேன் என முந்தைய தினம் குடி போதையில் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருந்தானே.
அது நினைவு இருக்கிறது அவனுக்கு!!
"ம்ஹூம்.. நத்திங்..."
"நத்திங் எண்டுட்டு என்னயே பாத்துட்டு நிண்டா.."
"ம்ம்.. நானும் ரெடி ஆகிட்டனே.."
சூடாவது மண் ஆவது என ஆறிப் போன டீயை எடுத்து ஒரு மூச்சில் பருகி முடிக்க, சாத்வி ஜன்னல் அடைத்து பால்கனி கதவைப் பூட்டினாள்.
அவரவர் லக்கேஜ்களுடன் படி இறங்கும் போது நடராசா ஜெயந்தி இருவருக்காகவும் காத்திருந்தனர்.
"ஏன் அப்பா நீங்க ரெண்டு பேரும் எழும்பின.. நாங்க போவம் தானே.."
"அனுப்பி வச்சிட்டு திரும்பியும் படுத்து எழும்புவம்.. என்ன குறஞ்சிர போகுது.."
கேட் திறந்து வீதியில் சகுனம் பார்த்து, "சரி! பொயிட்டு வாங்க.." என வழி அனுப்பினார்கள் தம்பதியர்.
இருவரும் நடையில் அருகில் உள்ள பஸ் ஸ்டான்ட் நடந்தனர்.
"தேத்தண்ணி ஊத்தி பிட்டு அவிச்சி மூண்டு கறி செய்து.. எத்தின மணிக்கு எழும்பினாவோ தெரியாது. மூண்டு மணி சொச்சம் இருக்கும் நான் எழும்பி வரக்குள்ள. அந்நேரம் வேலை செய்துட்டு நிக்கிறா. இதெல்லாம் அவைக்கு பழக்கம் போல. இந்த காலத்து பிள்ளையள் மாதிரி இல்லாம நல்ல பொறுப்பா இருக்கிறா" கேட்டை பூட்டி விட்டு வந்த கணவரிடம் சொன்னார் ஜெயந்தி.
"கல்யாணம் செய்யும் வரை நம்மட பொம்புளப் பிள்ளையள் அடுப்படி பக்கம் வந்ததில்ல. நான் இல்லாட்டி நீ பார்த்த பார்த்து கவனிப்பம். எல்லாம் அவங்க அவங்க வளருற சூழல பொறுத்து தான் ஜெயந்தி. அந்த பிள்ளைய அவங்கட அம்மம்மா நல்லா வளர்த்து இருக்கிறா.." நடராசா மொத்த பெருமையையும் செல்லம்மாக்கு கொடுத்தார்.
***
"என்னடா நடையிலயே கூட்டி போறானே எண்டு நினைக்கிறிங்களா ஹாசினி??"
"ம், இல்ல"
சிரித்தவன், "இல்லையா?"
"பக்கத்தில தான் இருக்கு பஸ் ஸ்டான்ட். எனக்கு தெரியும்..."
"ஓ! தெரியுமா!!"
வாமன் வீட்டு பால்கனியில் நின்றால் வாகன இரைச்சல் கேட்கும். செவி மடுத்ததில் ஊகித்து இருந்தாள், பேருந்து நிலையம் மாத்திரம் அல்ல ரயில்வே ஸ்டேஷன் கூட அருகில் உள்ளது என்று.
கூப்பிடு தூரத்து பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் நடந்தே வந்து சேர, பதுளை பஸ் விளக்கு வெளிச்சத்தில் நின்றது.
ஏறி இடம் தேடினர்.
"செம்மீனா விண்மீனா....
செம்மீனா விண்மீனா....
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா....
கண்ணிரன்டும் இமைக்கும் சிலை தானா...
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா....
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளை பூவா....
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா....
செம்மீனா விண்மீனா....
செம்மீனா விண்மீனா...."
பேருந்து சத்தமாக பாடிக் கொண்டிருக்க, லக்கேஜ்களை முகப்பில் வைத்து, இருவர் அமரும் ஆசனப் பக்கம் மூன்றாவது வரிசையில், சாத்விக்கு ஜன்னல் பக்கத்தை காட்டினான்.
அமர்ந்தவள் தனது தோள் பையை மடியில் வைத்து ஜன்னலை திறக்க, வாடைக் காற்று முகத்தில் மோதியது.
இரவு விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டான்ட் பரபரப்பாய் இயங்க, யாழ்ப்பாணம் திருகோணமலை என ஊர் பெயர் கூவலும், ஹாரன் சத்தமும், நடமாடும் கடைக்காரர்களின் விற்பனை குரலும் கலந்து கேட்டது.
அவளை இருத்தி விட்டு இறங்கிய வாமன் தண்ணீர் போத்தலுடன் வர,
"தண்ணி கொண்டு வந்திருக்கனே.. ஏன் வாங்கினிங்க??" என்றாள் சாத்வி.
பயணம் வெளிக்கிட்டால் கடைகளில் இறங்குவது குடிப்பது சாப்பிடுவது இந்த வாடிக்கை எல்லாம் அவளிடம் இல்லை. ஏறி அமர்ந்தால் இனி அவளுக்குரிய நிறுத்தம் வந்தால் தான் இறங்குவாள்.
நான்கு வருட பல்கலைக்கழக வாழ்க்கையில் இது தான் அவளுக்கு பழக்கம்! ஆண் துணையோ ஆண் வழி நடத்தலோ இல்லாத சாத்விக்கு அவள் தானே சகலதுக்கும் பொறுப்பு.
"கொண்டு வந்திங்களா.. நோ ப்ரொப்ளம்.. பழுதா போற திங்ஸ் இல்லயே.." என புன்னகையுடன் அவளிடமே கொடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தான்.
தோள் உரச உட்கார்ந்தவன் ஸ்பரிசமும் வாசனை திரவியமும் சாத்வியிடம் நெருக்கமாக நலம் விசாரித்தது.
ஏதோ இருவரும் சட்டென நெருங்கி விட்டது போல ஒரு தோற்றம். ஜன்னல் பக்கமாக அவள் ஒன்ற, அதை கவனித்தும் கண்டு கொள்ளாமல், "தண்ணி மட்டும் தானா ஹாசினி.. வேற என்ன எடுத்து வாரிங்க?" என விசாரித்தான்.
"ப்ரெக்ஃபாஸ்ட்.. லஞ்ச்.."
"ம்ம்.. டின்னர்?"
"அத அங்க போய் பாப்பம்.."
"சீரியஸாவா கதைக்கிறிங்க.."
சாத்விக்கு யாரிடமும் பகிடியாக, நக்கலாக, நகைச்சுவைக்காக பேசி பழக்கம் இல்லை. அவளுடைய குணத்துக்கு அப்பாற்பட்டவை அவை!
"ஓம்! ஏன்?"
"இதெல்லாம் எப்ப.. நைட்டே செய்திங்களா.. உங்களோட தானே நானும் இருந்தன்.. ஓ! இரவு செய்தத இப்ப சூடாக்கி எடுத்து வாரிங்களா??"
அவனை முறைத்தவள் ஃபோனில் ஹெட்செட் அடித்து பட்டனை காதில் மாட்டி பாடல் தேடினாள் ப்ளே லிஸ்டில்.
"இப்ப என்ன கேட்டன் நான்.. ஏன் முறைக்கிறா?" அவளையே பரிதாபமாக பார்த்தவன் சவுகரியமாக சீட்டில் சாய்ந்தான்.
வாமனுக்கு ஹெட்செட் தேவைப்படவில்லை. இந்த பேருந்தின் ப்ளே லிஸ்ட் அவனுக்கு பிடித்தவை. அத்தனையும் 90s கிட்ஸ் பாடல்கள்.
"பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்....
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்....
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்.....
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்....
இது எப்படி எப்படி நியாயம்...
எல்லாம் காதல் செய்த மாயம்...
இது எப்படி எப்படி நியாயம்...
எல்லாம் காதல் செய்த மாயம்...."
சரியாக ஐந்து மணிக்கு புறப்பட்டது பஸ். ஒரு மணி நேரம் எந்த பேச்சும் இல்லை இருவருக்கும் இடையே.
"முத்தே முத்தம்மா.. முத்தம் ஒன்னு தரலாமா..
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா...
முத்தே முத்தம்மா.. முத்தம் ஒன்னு தரலாமா...
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா...
கடலுக்கு காதல் வந்தால்
கரையேறி வந்தால் போதும்..
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா...
உல்லாசம் உல்லாசம்
உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்..."
அவள் அவளுடைய அலைபேசியுடனும் அவன் பேருந்து பாடல்களுடனும் ஒன்றி இருக்க, சாத்வி சற்றே அசௌகரியமாக அசைவதை உணர்ந்தான் வாமன்.
"என்ன ஹாசினி.. ஏதாவது தேவையா?"
'இல்லை' என மறுப்பாக தலை ஆட்டினாள்.
"ஓகே!!" என விட்டவன் நிமிடம் கழித்து, "என்ன ப்ரொப்ளம் வொமிட் வருதா.. வயித்த குழப்புதா?! எனிதிங் ரோங்..." அவன் சற்றே தீவிரமாக விசாரிக்க, "ஒண்டும் இல்ல நீங்க பேசாம இருங்க" என்றாள்.
"இல்ல.. என்னவோ கஷ்டப் படுறிங்க.. விளங்குது.. பஸ்ஸ நிப்பாட்டவா?"
"சீ.. வேணாம்"
"அப்ப என்ன செய்யுது? சொல்லுங்க"
"இனி ப்ரொப்ளம் இருக்காது. விடுங்க"
"இனி இருக்காது எண்டா.. இதுக்கு முதல் இருந்ததா.. டெல் மீ ஐ சே.."
சாத்வி சொல்வது போல தெரியவில்லை. எழுந்தவன், பெல் அழுத்த எடுக்க அவன் கை பற்றி இழுத்து உட்கார வைத்தவள் தனது கையில் பொத்தி வைத்திருந்த சேஃப்டி பின்னை காட்டினாள்.
"என்ன!?"
"பின் சீட்டுல இருக்கிறவன் கைய விட்டு சேட்ட விட்டான். இப்ப தான் குத்தி கிழிச்சு விட்டன். இனி இந்தப் பக்கம் கை வராது.." என்றவள் ஊசியை கைப்பை க்குள் பத்திரப் படுத்தி சிப்பை பூட்டி சாய்ந்து கொள்ள, அவளை வேற்று கிரக வாசியை பார்ப்பது போல அதிசயமாய் பார்த்தான் வாமன்!
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

awesome sathvi 👏👏
பதிலளிநீக்கு🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நீக்கு