அத்தியாயம்: 21
"பைரவி எந்திரி... "
"நேரமாச்சி டி, எந்திரி. "
"அடியே பைரவி… " என்றபோது பத்து வீடு தள்ளி நின்றாலும் கேட்கும் என்ற அளவுக்கு இருந்தது சாந்தியின் குரல். ஒவ்வொரு வாக்கியத்திலும் குரல் உயர்ந்து கொண்டே வந்து உச்ச ஸுவரத்தை அடைந்திருந்தது.
"அடியேய்.. இப்ப நீ எந்திரிக்கலன்னா மூஞ்சில சுடு தண்ணிய ஊத்திடுவேன். எந்திரிடி. "
இன்னமும் அவரின் குரல் பையூவின் காதில் விழவில்லையே!
"இவள…" எனச் சமையலறையில் இருந்தவர் மகளின் அறைக்குச் சென்று உறங்கி கொண்டிருந்தவளின் மீதிருந்து போர்வையை விலக்க, அதைக் கூட உணராது குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முதுகில் சுள் என ஒரு அடி கொடுக்க, ‘ஸ்... ஆ...' என முதுகை தடவியபடி வலியுடன் எழுந்து அமர்ந்தாள் பைரவி.
"லூசாம்மா நீ... பெத்த மகள இப்படி தான் எழுப்புவியா. ஸ்... ஆ.. விலக்கிதும்மா. " என்றாள் முதுகைத் தடவியபடி.
" பெத்த மகள முதல்ல கொஞ்சிக் கொஞ்சி தான் எழுப்புனேன். திமிரு பிடிச்சி போய் எந்திரிக்காம இருந்தா! அப்படி தான் அடி விழும். எங்கிட்ட வாயாடாம போய் குளி." என அவள் அணிய வேண்டிய உடையை எடுத்து வைத்தார்.
" குளிக்கவா! காலைலேயேவா! " என்றவள் மணி பார்க்க, நேரம் ஒன்பதைக் காட்டியது.
"ம்மா… ஏம்மா என்ன இவ்ளோ சீக்கிரம் எழுப்புனீங்க. பதினொரு மணிக்கி முன்னாடி சூரியன பாக்க மாட்டேன்னு நான் போட்ட சபதம் என்ன ஆகுறது! சபதத்துல வெல்லணும்னா… மறுபடியும் தூங்கணும்." எனப் போர்வை மூடி படுக்க, இம்முறை தண்ணீரை ஊற்றி விட்டார் சாந்தி..
"ம்மா… " என அலறினாள் பையூ.
"போய் குளிச்சிட்டு வா. பத்து மணிக்குள்ள நீ ரெடியா இருக்கணும். இதக் கட்டிக்க."
"Saree-அ.. எதுக்கு இதக் கட்டி ரெடியா இருக்கணும்.. "
" உன்னப் பொண்ணு பாக்க வர்றாங்க. வர்றவங்க முன்னாடி night pant-டோடையா நிக்க போற. புடவை கட்டி தயாரா இரு. "
" ம்மா! யாரக் கேட்டு பொண்ணு பாக்க வர சொன்னீங்க?"
"யாரக் கேக்கணும் டி நான். ம்... உங்கிட்ட பர்மிஷன் கேக்கணுமா? 'அம்மா பைரவி உன்னப் பொண்ணு பாக்கணும்னு சொன்னாங்க. நாளைக்கி நான் வரச் சொல்லவா?'ன்னு பெத்த மக கிட்ட முன்னனுமதி வாங்கணுமா என்ன? உன்னோட கல்யாணம் நாங்க பாக்குற பையந்தான்னு நீயே வாக்கு குடுத்திருக்க. மறந்திடாத. லவ்வு கிவ்வுன்னு எவனையாது கூட்டீட்டு வந்த பாத்துக்க. "
"அதா ஒருத்தனும் செட்டாக மாட்டேங்கிறானே. அப்றம் எப்படி லவ் பண்றதாம். காதலிச்சி தான் கல்யாணம் பண்ணணும்னு இருந்த என்னோட ஆசை மேல சாந்திமஹால் கட்டி விட்டுட்டீங்களே. அப்றம் என்ன? "
"செட்டாகலைல. நல்லது. போய் குளிச்சிட்டு புடவ கட்டி பொம்பளப்பிள்ள மாதிரி ரெடியாகி வா. "
" பொம்பளப்பிள்ளயா! அப்ப நான் என்ன ஆம்பாள மாதிரியா இருக்கேன்?"
"ஆமான்டி.. பையனாட்டம் தான் இருக்க. மூடிய வெட்டாத வெட்டாதன்னு சொல்லியும் கேக்காம வெட்டின. இப்ப பையன மாதிரி தான் இருக்க. "
"ம்ச்… இப்ப எதுக்கு வீட்டுக்குப் பொண்ணு பாக்க வரச் சொன்னீங்கன்னு கேட்டா எததையோ பேசிட்டு இருக்கீங்க. எங்கையாது கோயில் குளம்னு பாக்க வேண்டியது தான. அப்படியும் இல்லன்னா park, restaurant ன்னு பப்ளிக் ப்ளேஸ்க்கு வரச் சொல்லிருக்கலாம்ல. எதுக்கு வீட்டுக்கு வர சொன்னீங்க? வந்தவங்களுக்கு நல்லா திங்க போட்டு, எம்மகளுக்கு நாங்க அத்தன பவுனு போடுறோம், இத்தன லட்சம் குடுக்குறோம்ன்னு நீங்களும், பையனுக்கு காரு, மோதிரம் மைனர் செயினுன்னு வர்றவங்களும் ஒரு லிஸ்ட் போட்டு, என்னோட வீட்டுலயே என்னைப் பேரம் பேசுவீங்க. என்னால அதக் கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. நான் எதையாது சொல்லிட்டேன்னா உடனே என்னைத் திட்டி தீத்திடுவிங்க. எதுக்கு இதெல்லாம். வர்றவன நம்ம வீட்டுக்குக் கிட்ட இருக்குற park-க்கு வர சொல்லுங்க. அதுவும் சாயங்காலமா பாத்து வர சொல்லுங்க. இப்ப நான் கொஞ்சம் தூங்குறேன். " எனப் படுக்க,
"பொண்ணெல்லாம் பாக்க வரல. நிச்சயம் பேசி கல்யாணத்த உறுதி படுத்து வரப்போறாங்க." என்றார் சாந்தி. வேகமாக எழுந்து அமர்ந்தவள்,
" உறுதியா.. ஆனா நான் இன்னும் பையன பாக்கவே இல்லயே."
"நான் பாத்திட்டேன். பேசிட்டேன். எனக்கு முழு திருப்தி. நீயும் பாத்திருக்க. உனக்கு அவனக் கட்டி வைக்கிறதுல இஷ்டம் இல்ல தான். ஆனா அந்தப் பையனுக்கு இந்த பெட்டர்மாஸ் லைட்டு தான் வேணுமாம்." என்றவர் தயாராகச் சொல்லி விட்டு வெளியே சென்றார்.
"யாரு என்னன்னு தெரியாத எவனையும் எனக்குப் புருஷனா நான் ஏத்துக்க மாட்டேன். ம்மா.. ம்மா... " எனக் கத்தியவளுக்குப் பதில் சொல்ல யாருமில்லை.
"ச்ச... இந்த அம்மா எதையும் முழுசாவே சொல்லாம போய்ட்டாங்க. வரட்டும். அப்படி எந்த நாட்டு இளவரசன் வந்து என்னோட அனுமதி இல்லாம என்னைக் கவர்ந்திட்டு போறான்னு நானும் பாக்குறேன்." என்றவள் கையில் துண்டுடன் குளியலறைக்குள் சென்றாள்.
சரியா பத்து மணி என அவர்கள் வீட்டு கடிகாரம் பத்து முறை மணி அடுத்து ஓயும் போது வந்தது ஒரு கார்.
'இவ்வளோ கரெட்டாவாய்யா வருவீங்க.' பையூவின் மைண்ட் வாய்ஸ்.
மூன்று பெண்கள் இறங்கினர். கையில் பூ, பழங்கள் அடங்கிய தட்டுகளை டிரைவர் கொண்டு வந்து வைத்துவிட்டு செல்ல, சாந்தியும், சேர்மதுரையும் அவர்களை வரவேற்று குடிக்க நீர் கொடுத்து உபசரித்தனர். அடுத்து தான் செய்து வைத்த பஜ்ஜியையும் கேசரியையும் கின்னத்தில் வைத்து நீட்ட, யாரும் அதை தொட்டுக் கூட பார்க்கவில்லை.
பைரவிக்கு அது மட்டும் எரிச்சலாக இல்லை. அந்தம்மாவின் பேச்சு அதை விட எரிச்சலாக இருந்தது.
"மாப்பிள்ளை வரலயா?" என்றார் சாந்தி.
"அரை மணி நேரத்துல அண்ணா வந்திடுறதா சொன்னாங்க ஆன்டி." என மோகனா புன்னகையுடன் சொல்ல, பைரவிக்கு அவளைப் பிடித்திருந்தது.
"வருவான் வருவான்... வராம எங்க போய்டப் போறான்.. அவனால தான் நாங்க இங்க வந்து உக்காந்திருக்கோம். என்ன வீடு இது? சின்னதா இருக்கு. ஹிம்… எப்படி இந்தக் குருவி கூட்டுக்குள்ள எங்க பையன் வந்து இருப்பான். ஒரே suffocating கா இருக்கு. உஃப்… " என ஜெயா கைகளால் விசிறிய படி, ஏளன பார்வையால் வீட்டை அளந்தார். அவரின் பார்வை பைரவி வாங்கி வைத்திருந்த மெடல்களின் மீதும் கோப்பையின் மீதும் பட்டது.
"வாவ்.. இது எல்லாமே நீங்க வாங்குனதா அண்ணி." என மோகனா பைரவியின் கரம் பற்றி ஆர்வமுடன் கேட்டாள். அவளின் உரிமையான அழைப்பில், ' நாம தான் இவ அண்ணன கட்டிக்க போறதா முடிவே பண்ணிட்டானுங்களா!' என்பது போல் விழித்தாள்.
"இது டென்த்ல மூணு சப்ஜெட்ல நூறு மார்க் வாங்கினான்னு ஸ்கூல்ல குடுத்தாங்க. இது யோகா. அவளுக்கு உடம்பு நல்லா வளைஞ்சு குடுக்கும். நின்ன மேனிக்கே பின்னாடி சாஞ்சி அவளோட கனுக்கால பிடிக்கிற அளவுக்கு வளைவா. அப்றம் இது சாரதா ஹோம்ல இருந்து குடுத்தாங்க. மரம் நடுறதுல அவங்க கூட சேந்து சேவை செஞ்சதுக்காக." எனச் சாந்தி பெருமையாக அடுக்கிக் கொண்டே போக, மோகனா விழி விரிய கேட்டாள்.
வந்ததில் இருந்து பைரவியுடன் அன்பாய்ப் பேசிய ஒரே ஜீவன் மோகனா மட்டும் தான். சைந்தவியும், ஜெயாவும் ஆள் மட்டுமல்ல பேச்சும் குதர்க்கமாவே இருந்ததாகத் தோன்றியது பைரவிக்கு.
" என்ன பிரயோஜனம்! எல்லாம் வேஸ்ட். காய்லாங்கடைக்கி போட்டா பத்து ரூபா கிடைக்குமா! இல்ல அதுவும் கிடைக்காத?" என்றாள் சைந்தவி பொறாமையுடன். பைரவிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவளை முறைத்து பார்க்க,
"இதோ பாரு! எங்க வீட்டுக்குன்னு சில பழக்க வழக்கம் இருக்கு. அத அந்த வீட்டு மருமகளா நீ ஃபாலோ பண்ணித்தான் ஆகணும். எப்பயும் புடவை தான். அரை குறை உடுப்பெல்லாம் போடவே கூடாது. அது தான் பொண்ணுக்கு அழகு.
நாங்க குடும்பமே சைவம். எங்க வீட்டு அடுப்புல கறி சமைக்கவே கூடாது. நீயும் அந்த மாமிசத்த சாப்பிடுறத விட்டுட்டா நல்லது.
அப்றம் சைவம் சமைக்க தெரியும்ல. தெரியலன்னா கத்துக்க. எங்க வீட்டுல நாக்குக்கு ருசியா சமைப்போம். எங்க பையனுக்கும் என்னோட சமையல்னா ரொம்ப பிடிக்கும். நீ விதவிதமா சமச்சி போட்டாலும் எங்கப் பையன கவுக்க முடியாது. ஏன்னா அவனுக்கு என் சமயல்ன்னா தான் ரொம்ப பிடிக்கும்." எனக் கூறும் போது பெருமை தாங்க முடியவில்லை அவருக்கு.
"கேள்வி பட்டேன் நீ எதோ பரிச்ச எழுதி வேலைக்கு ட்ரெய் பண்ணதா? அந்த மாதிரி ஆசை இருந்தா இப்பவே அத விட்டுடு. வேலைக்கி எல்லாம் போக கூடாது. வீட்டுல தான் கிடக்கணும். படிச்ச படிப்பு வேஸ்ட்டா கிடக்குதுன்னு பைய்ய தூக்கிட்டு வேலைக்கி போய்ட கூடாது. ஏன்னா இந்தப் பொம்பளப்பிள்ளைங்க அதிகமா படிச்சாலும் சம்பாதிச்சாலும் வீடு தங்குறதும் இல்ல. பெரியவங்களுக்கு மரியாத குடுக்குறதும் இல்ல. திமிரும் செருக்கும் கூடிடுது. " என்க, சாந்தி அதை ஆமோதித்தார்.
"ரெண்டு நாளைக்கி முன்னாடி உன்ன ஒரு கும்பலோட பாத்தேன். கைல என்னென்னத்தையோ வச்சிட்டு நடு ரோட்டுல நின்னுட்டு இருந்தியே. என்னதது?" சைந்தவி.
"அவளுக்கு மரக்கன்று நடுறதுன்னா பிடிக்கும். அதா ஒரு NGO கூட சேந்திட்டு இந்த மாதிரி வேலை செய்வா." என்றார் சாந்தி
"அதெல்லாம் வேண்டாம். இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணக்கூடாது. எங்கக் குடும்பத்துக்குன்னு சில கட்டுபாடுகள் இருக்கு. இந்தக் குடும்பத்தோட மருமகளா வந்தா, அதுக்குக் கட்டுப்பட்டு எங்கக் குடும்ப கௌரவத்த காப்பத்தணும்." என மது சொன்ன விசயத்தையே அதிகாரமாகவும், ஏளனமாகவும், வெறுப்பு நிறைந்த குரலிலும் ஜெயா சொல்ல, பைரவிக்குக் கோபமாக வந்தது.
இவர்கள் தான் மதுசூதனனின் குடும்பம் என்று அவளுக்கு வந்த போது தெரியாது. ஆனால் அவர் பேசத் தொடங்கியதுமே, மதுசூதனனின் குடும்பம் தான் எனத் தெரிய ஆத்திரமாக வந்தது. மது மீது அல்ல, ஜெயாவின் மீது தான்.
' மரியாதையா அவங்கள எந்திரிக்குப் போகச் சொல்லிடு. நான் கல்யாணம் ஆகாம ஔவையாராகவே இருந்துக்கிறேன்.' என்பது போல் தன் அன்னை பார்த்தாள் பையூ.
கோபமாக மகள் எதையாது பேசிவிடுவாளோ எனச் சாந்தி பயந்து போய் மகளை கண்களால் அடக்க, ஜெயா நிறுத்திய பாடு இல்லை.
"2bhk வில்லா ஒன்னு இருக்குறதா கேள்விப்பட்டேனே… அது. "
"எம்பொண்ணுக்கு தான். ஐம்பது சவரன் போடுறோம். ரொக்கமா சில லட்சம். மாப்பிள்ளைக்கி மோதிரம் செயினுன்னு, மூணு வர்ஷத்துக்கு தீபாவளி பொங்கல்ன்னு சீர் செய்றோம்." என மகளுக்கு நான் செய்ய நினைப்பதை வரிசையாக சொல்ல,
"பையனுக்குப் பைக் தான் இருக்கு. கார் இருந்தா நல்லா இருக்கும். "
"வாங்கிடலாம் சம்மந்தி. "
" தனி தனி மண்டபம் எல்லாம் வேண்டாம். ஒன்னாவே பாத்துக்கலாம். எங்க சைடுல இருந்து நிறைய வீஐபிங்க வருவாங்க. அதுனால எல்லாமே க்ராண்டா இருக்கணும். கல்யாண செலவு…. " என அவர் இழுக்க,
"அதையும் நாங்களே பாத்துப்போம். வர்றவங்களுக்கு எந்த வித குறையும் இல்லாம, நிறைவா எல்லாத்தையும் செஞ்சிடலாம். எங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அவளுக்குச் செய்யாம வேற யாருக்கு செய்யப் போறோம்." என வரதட்சணை குறித்து பேசினர்.
பையூவின் பொறுமை கரையைக் கடக்கும் நேரம் வாசலில் மற்றொரு கார் வந்து நின்றது. அதில் சிதம்பரமும் மதுசூதனன்னும் வந்து இறங்கினர்.
சரியாக மணி பத்து முப்பது.
'கடிகாரத்துக்குப் பிறந்த குடும்பமா இருக்கும்னு நினைக்கிறேன். கரெட் டயமிங்.' பையூவின் மைண்ட் வாய்ஸ்.
அத்தனை நேரம் எளனமாகப் பேசிக் கொண்டிருந்த ஜெயாவின் உதடுகள் இப்போது புன்னகை அரசி போல் புன்னகைத்து பேசத் தொடங்கியது.
'இந்தம்மா லேடி கமல்ஹாசனா இருக்கும் போலயே!'
"எல்லாம் பேசியாச்சுங்க. எங்களுக்குப் பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. " என்றார் ஜெயா. அவர் பைரவியை முழுதாக பார்த்தாரா என்பது சந்தேகமே. எல்லா செலவுகளையும் பெண் வீட்டில் தள்ளிவிட்ட நிம்மதியை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது.
"அப்ப கல்யாணத்த எப்ப வச்சிக்கலாம்?" எனச் சிதம்பரம் கேட்க, பைரவியின் விருப்பத்தை யாரும் கேட்க வில்லை.
"இது என்னங்க கேள்வி? லேட் பண்ணாம சீக்கிரம் முடிஞ்சிடுவோம். சரண்யா அக்கா இருந்திருந்தா இன்னேரம் கல்யாணத்தையே முடிச்சிருப்பாங்க. நாம தான் லேட் பண்ணிட்டோம்." என்றார் ஜெயா தேன் சொட்டும் குரலில்.
'என்னை அவ்ளோ சீக்கிரமா பலி குடுக்க போறானுங்க போலயே.' என்ற குரல் அவளுள் கேட்டாலும், சாந்தியின் சாந்தமானப் பார்வையில் அடங்கிப் போனாள்.
" அப்ப வர்ற முகூர்த்தத்திலயே கல்யாணத்த வச்சிக்கலாம்." எனச் சிதம்பரமும், சேர்மதுரையும் ஒரு காலண்டரை எடுத்துக் கொண்டு கல்யாணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்க, மதுவுடன் மோகனா வம்பிழுத்து பேசிக் கொண்டிருந்தாள். ஆன போது மதுவின் விழிகள் அவளை மொய்த்தன.
'ரிலேஷன்ஷிப்பு கேட்டேல்ல. அத உருவாக்க வேண்டாமா…' என்பது போல் அவளைப் பார்த்து தன் புருவங்களை ஏற்றி இறக்க, பையூவிற்கு 'உன்ன பிடிக்கலடா...' ன்னு கத்த வேண்டும் போல் இருந்தது.
சாந்தி தட்டுகளை எடுத்துக் கொண்டு சமயலறை நுழைய, இது தான் சமயம் எனப் பின்னால் வந்த பைரவி தாயிடம் வாதிட தொடங்கினாள்..
"இங்க என்ன நடத்திட்டு இருக்கு? இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு என்னைக் கேக்காம எல்லாத்தையும் நீங்களாவே பண்ணிட்டு இருக்கிங்க." எனக் குரல் தாழ்த்தி தாயிடம் கேட்டாள்.
"நீ அந்தப் பையன பிடிச்சிருக்குன்னு சொன்னியே. மறந்துட்டியா! நேர்ல போய் பாத்து பேசி சம்மதம்னு உன்னோட விரும்பம் தெரிஞ்சதுக்கு அப்றம் தான் பொண்ணு பாக்கவே வந்திருக்காங்க."
"நான் சம்மதம் சொல்லல." என்றாள் இரு கரத்தையும் கட்டிக் கொண்டு.
"பரவாயில்லை. உன்னோட கல்யாணம் நாங்க பாக்குற பையன்னு சொல்லிருக்க. இதுதான் நாங்க பாத்த பையன். பண்ணிக்க கல்யாணத்த." என்றுவிட்டு செல்ல, சமயலறை ஜன்னலில் தெரிந்த அவளின் கோப முகத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான் மதுசூதனன்.
இதழ்கள் திறக்காது முணுமுணுக்க, பைரவி மதுவை பார்த்தாள். அவனின் பார்வை ‘உன்னை என் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்திவிட்டேன். பார்த்தாயா!!’ என்று சொல்வது போல் தோன்றியது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

hiyayo intha madhu egoist ah
பதிலளிநீக்கு☺️☺️☺️☺️☺️☺️
நீக்கு