அத்தியாயம்: 59
சிறிய மூளை தான். ஆனால் அது செய்யும் வேலைகள் பல. ஒற்றை மூளை ஒட்டு மொத்த உடலையே இயக்கும் வல்லமை படைத்தது. பார்ப்பது கேட்பது தொடங்கி, சின்ன சின்ன அசைவுகளைக் கூட அதன் உத்தரவு இல்லாது செய்ய முடியாது.
ஆனால் இங்கு மூளை எந்த வேலையையும் செய்யாது டம்மியாக இருந்தது. ஒரே ஒரு வேலையைத் தான் மும்மரமாக செய்ய முயன்றது அது. சிந்திப்பது, அதை தவிர்த்து வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை அது. யாரு அந்த வேலை செய்யாத மூளைக்கு சொந்தக்காரி என்றால், வேறு யார் நம் பைரவி தான். அவளின் சிந்தனை மொத்தமும் சுடர் பற்றியே இருந்தது.
"நமக்கு அரசனூர் கேஸ் தேவையில்ல. சுடரக்கா கேஸ் மட்டுமே போதும். ஏன்னா அது ரொம்ப பயங்கரமான கேஸ்ஸா இருக்கு. புரியாத மாதிரியும் புரியிற மாதிரியும் நிறைய விசயங்கள வக்கீல் சொன்னாலும். அந்த கேஸ் கொஞ்சம் டேஜ்சரானது தான். கொலை எல்லாம் நடந்திருக்கு.
சுடரக்கா கூட காணாம போன எவிடென்ஸ்ஸ தேடி நாம போறது புதை குழில குதிச்சி குதிச்சி விளையாடுறதுக்கு சமம். அதுனால நம்மோட கான்ஸ்டன்ட்டேட் மொத்தமும் சுடரக்காவ யாரு கடத்துனாங்கங்கிறதுல தான் இருக்கனுமே தவிர வேற எதுலயும் இருக்க கூடாது.
கண்ணுக்கு பாத தெரியுதுங்கிறதுக்கா நடந்துக்கிட்டே இருக்க கூடாது. எங்க போகனுங்கிறதுல தெளிவா இருந்து. ரோட்டுக்கு சைடுல நட்டு வச்சா சைன் போர்டெல்லாம் பாத்திட்டே போனாத்தா போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு போக முடியும். சோ, சுடரக்கா கேஸ் தான் நாம போக வேண்டிய பாத. அதுதா நம்மோட இலக்கு. " என வேலை செய்யாத மூளை அவளுக்கு யோசனை சொல்ல,
"அப்படி என்ன நடந்திடும்னு நம்மல ஆளாளுக்கு பயங்காட்டுறாங்க! ம்.. முதல்ல சாரதாம்மா, அப்றம் கண்ணாயிரம் அங்கில், அடுத்து வக்கீல் பவதாரணி. ஏன் பாண்டி அண்ணா கூட 'வேண்டாம்மா உனக்கு அது.. விசாரிக்காத அதப்பத்தி..' ன்னு சொல்லி நம்மக்கிட்டையே பூச்சாண்டி காட்டுறாங்கன்னு தான் தெரியல.. அந்த சிராஜ் அவ்ளோ பெரிய அப்பா டக்கரா!" என வேறு எதையும் சிந்திக்க மறந்து தன் சாப்பரை ஓட்டிக் கொண்டு சென்ற பைரவி சாலையில் கவனத்தை செலுத்தவில்லை.
நடு ரோட்டில் தன் சாப்பரை நடந்து செல்பவர்கள் முந்தி செல்லும் வேகத்தில் ஓட்டிச் செல்ல, அவளை முந்திச் சென்ற வாகன ஓட்டிகள் பலர் அவளுக்கு ‘சாவுகிராக்கி… பொறம்போக்கு… கண்ணு தெரியாத பேமானி…’ போன்ற செல்லப் பெயர்களை வைத்து விட்டு சென்றனர். அதுவும் நம் பைரவியின் காதிலும் கவனத்தில் செல்லவில்லை.
"நாம அந்த சிராஜ்ஜா பத்தி முதல்ல விசாரிக்கணும். அப்பத்தா நம்ம எதிரியோட பலம் தெரியும். பலவீனமும் தெரிய வரும். சமயம் பாத்து தட்டுனா. ஈசியா அவன வழுக்கி விழ வச்சிடலாம்." எனச் சிராஜ்ஜை கைது செய்து இழுத்து வந்து ஐஜியிடம் மெடல் வாங்குவது போல் கனவு காண, அவளைத் தட்டி விட்டு சென்றது ஒரு பைக்.
பதற்றத்தில் ப்ரேக்கைப் பிடிக்காது ஆக்ஷிலேட்டரைத் திருக, வேகமாக அது நின்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் மோதி, சாப்பருடன் சேர்ந்து விழுந்து விட்டாள். கை முழுவதையும் மறைத்திருந்த உடையின் கை, கிழிந்து ரத்தம் துளிர்க்கத் தொடங்கியது. காலிலும் அடிதான்.
கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்கு 'என்னை பற்றி எழு..' என்பது போல் ஒரு கரம் நீண்டது. நீட்டியது தீஷித். அவள் அதைப் பிடிக்காது எழ பார்க்க அது முடியாது போக, அவனே தூக்கி நிறுத்தினான். அவளை மட்டுமல்ல அவளின் சாப்பரையும் தான்.
"ரொம்ப தேங்க்ஸ்." என்றவள் சாப்பரில் ஏறி அமர்ந்து கொள்ள,
"என்ன போலிஸ் மேடம். ரோடு ரூல்ஸ பத்தி அன்னைக்கி நல்லா பாடம் நடத்துனீங்க. இன்னைக்கி என்ன!. மறந்திடுச்சா! இல்ல அந்த க்ளாஸ் எடுக்கும் போது தூங்கிட்டிங்களா!" எனக் கேட்டபடி அவளின் ஹேண்ட் பாரில் இரு கரத்தையும் ஊன்றி நிற்க,
"எனக்கும் ரோடு ரூல்ஸ் தெரியும். நா ஹெல்மெட்லாம் போட்டிருக்கேன். அவெந்தா கண்ணு தெரியாம என்ன இடிச்சி தள்ளிட்டு போய்டான். அவன ஒன்னும் சொல்லாம. என்ன வந்து என்ன கேலி பண்ணிட்டு இருக்கிங்க." என ரோசமாக சொல்ல,
" ம்.. கரெக்ட்டு தான் அந்த பைக்காரன் தான் இடிச்சான். பாவம் அவனும் எவ்ளோ நேரம் தான் ஹாரன் அடிப்பான். முன்னாடி போறவங்களுக்கு காது கேக்கலன்னா என்ன செய்றது போலிஸ் மேடம். இடிச்சிட்டு தான போ முடியும்." என்றவனை பைரவி முறைக்க, அவன் சிரித்தபடியே அவளின் சாவியை எடுத்துக் கொண்டு நடந்தான்.
"ஹேய்… என்னோட சாவி.. " என்றபடி பின் தொடர முயன்று நின்று விட்டாள். எனெனில் காலில் அடிப்பட்டதால் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை.
"என்னாச்சி டாம்! வலிக்கிதா?" எனக் கேட்டு அவளை நெருங்க, அது பைரவிக்கு பிடித்திருந்தது. அந்த படபடப்பும் அவனின் குரலில் இருந்த அக்கறையும் அனைத்தும் நன்றாக இருத்தது.
"வலி இல்ல." எனத் தலையசைத்து சாவிக்காக கரம் நீட்டினாள். அதை பற்றிக் கொண்டு காரை நோக்கி அவளுடன் நடந்தான் அவன். எங்கே? என்றவளிடம்,
"நாம இப்ப ஹாஸ்பிடல் போகப் போறோம். கம்… சர்வேஷ், ஸ்கூட்டிய இவங்க வீட்டுல கொண்டு போய் வச்சிடுங்க." என உத்தரவிட்டபடி காரை ஸ்டார்ட் செய்தான் தீஷித்.
"அதெல்லாம் தேவையில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். " என மறுத்தவளை விடவில்லை அவன். பைரவி அமைதியாகி விட,
" டிரைவ் பண்ணும் போது கவனமா இருக்க வேண்டாமா! ஏன் இவ்ளோ கேர்லஸ்?" எனச் சற்று கோபமாக கேட்க,
" அது சின்ன யோசன."
"அதத்தா ஏன்னு கேக்குறேன். ரோட்டுல போறோங்கிற நினப்பே இல்லாம ஏன் இப்படி இருக்க பைரவி. அடி பெருசா பட்டிருந்தா என்ன பண்ணிப்ப?" என்க, பைரவி முகம் திருப்பிக் கொண்டாள். அவளுக்கு அவளை யாரும் குறை சொன்னால் பிடிக்காது. அவள் யாரையேனும் குறை சொல்ல வேண்டும் என்றால் முதல் ஆளாக வாயைத் திறப்பாள். அப்படிப்பட்டவளிடம் போய் கவனம் கிவனம் என்றால் எப்படிக் காது குடுத்து கேட்பாள்.
வெகு நேரம் அட்வைஸ் செய்து கொண்டு வந்தவன் அவளின் மௌனம் கண்டு அவள் முகம் பார்க்க, உதடுகளில் அலட்சிய வளைவை வைத்துக் கொண்டு, சிறு குழந்தை போல் அவள் முகம் திருப்பிய அழகு புன்னகையை தந்தது.
"நல்லவேளை நிக்கிற லாரி மேல வண்டிய விட்ட. இல்லன்னா!!"
"டயருக்கு அடில சிக்கின எலுமிச்சைபழம் தான் ."
"இல்ல பூசணிகா." என்க கோபமாகிப் போனவள், அவனை அடிக்க கரம் உயர்த்த, அதில் தான் அடிப்பட்டிருக்கிறதே! வலியில் அவளின் முகம் சுருங்கியது. அது தீஷித்திற்கும் வலியை தந்திருக்க வேண்டும்.
"வலிக்கிதா! கொஞ்சம் பொருத்துக்க. இதோ ஹாஸ்பிட்டல் போய்டலாம்."
"வலிக்கல. ஆனா எரியுது. " என்றாள் வலி நிறைந்த குரலில், உடனடியாக காரை நிறுத்தியவன் இறங்கி அவள் பக்க கதவை திறந்து, கையில் வாட்டர் பாட்டிலை கொடுத்தான்.
"காயத்த முதல்ல வாஷ் பண்ணு. அது மேல ஐஸ் வச்சா எரிச்சல் கொஞ்சம் குறையும்." என்று காரின் டிங்கியைத் திறந்து சில் என இருந்த பியர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.
" வாவ்… பியர்… சில் பியர்…" என ஆசையாக அதை வாங்கிக் கொண்டு குளுக்கி விளையாட, தீஷித் வாட்டர் பாட்டிலை வாங்கி காயத்தில் நீரை ஊற்றி, சுத்தம் செய்யதான். பைரவி வலியில் கண் மூடிக் கொண்டாள். அவனின் தேவதை காட்டும் ஒவ்வொரு முகபாவனையையும் பிடித்து தன் இதயச் சுவற்றில் சட்டமிட்டு வைத்தான்.
"ம்… நல்லாத்தான் சேவ செய்றீங்க. குட் பாய்… அப்படியே இந்த பாட்டில ஓப்பன் பண்ணி தந்தா... கொஞ்சோன்டு குடிச்சிப்பேன்."
"நோ..."
"வெய்.. நான் குடிச்சா தப்பா?"
"தப்பு தான். பொது இடத்துல, பாத்துகாப்பு இல்லாத இடத்துல குடிக்கிறது தப்பு. இத உன் வீட்டுக்கு எடுத்திட்டு போய் உன்னோட ரூம்ல வச்சி குடிச்சா தப்பில்ல." எனக் கண்சிமிட்டி சொல்ல,
"இத… நான்… எடுத்திட்டு... போலாமா! யூ மீன் இது எனக்கா!" என விழி விரிய கேட்க, அதில் மயங்கியவன் பாட்டிலை வாங்கி காயத்தில் வைத்தான். அதன் குளுமையை விழி மூடி சிலகித்தாள் பெண்..
பின் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, வீட்டில் விட்டு, சாந்தி கையாள் விருந்துண்டு விட்டு, பைரவியை மாத்திரை சாப்பிட வைத்து, ‘ச்சசா…’ அனைத்தையும் முடித்துவிட்டு தான் சென்றான் தீஷித்.
அது அத்தனையையும் பார்த்த ஒரு ஜோடி விழிகள் தணலென தகித்துக் கொண்டிருந்ததை இருவரும் கவனிக்கவில்லை..
_______
ராக்கி பாய் தன் கையில் இருந்த ஃபோனில் தாமரையின் நம்பரை டயிப் செய்து, கால் செய்யும் பச்சை நிற பட்டனை தொட, அழைப்பு சென்றது. பின் சிவப்பு பட்டனை தொட்டு சென்ற அழைப்பை தடுத்து நிறுத்தி விட்டான். இன்றைய நாளின் இருபதாவது முறை இப்படி செய்து விளையாடுகிறான்.
இது இரு நாட்களாக தொடர்கிறது. கோயிலில் வைத்து தன் மனத்தை தாமரையிடம் சொன்ன பின் எவ்வித பதிலும் சொல்லாது சென்றவளிடம் பதிலை எப்படி கேட்பது? என்ற யோசனையிலேயே இருந்தான் அவன்.
"எங்கதைய கேட்டுட்டு 'விட்டுட்டு அடுத்து வேலய பாருங்க..'ன்னு சொல்லி அட்வைஸ் பண்ணிருக்கணும். இல்ல இவன் லவ் பண்ணா என்ன பண்ணலன்னா எனக்கென்னென்னு அலட்சியமா இருந்திருக்கணும். அப்படி இருந்தான்னா அவளுக்குள்ள எம்மேல எந்த ஒரு ஃபீலிங்கும் இல்லன்னு நினச்சி அடுத்த சாறு பைரவின்னு தங்கச்சிங்க வரிசைல நிக்க வச்சிருப்பேன்.
மேல சொன்னது இல்லாம கோபமா என்னைத் திட்டிட்டு போயிருந்தான்னா! என்னோட கத அவளுக்குள்ள எதோ ஒரு பாதிப்பு ஏற்படுத்திருக்குன்னு அர்த்தம். காதல்ன்னு ஒன்னு உள்ளுக்குள்ள உதயமாகிருக்குன்னு சந்தோஷப்பட்டிருப்பேன்.
இப்படி ரெண்டு இல்லாம நடுவுல என்னை நிக்கவச்சி, எந்த பக்கமும் யோசிக்க விடாம பண்ணிட்டு போய்ட்டா. ச்ச… இப்ப நான் பதில எப்படி தெரிஞ்சிக்கிறது. நேர்ல போய் பாக்கலாம்னா அவ அண்ணே ஐய்யனாரு அருவாலோட உக்காந்திருப்பான்.
நான் எங்காதலுக்கு பதில் சொல்லுன்னு சொன்னா… அவ அவளோட அண்ணெங்கிட்ட சொல்லி… என்னைப் பலி குடுத்திட மாட்டாளா! செஞ்சாலும் செய்வா. ஏற்கனவே அவள நான் ஹைவேஸ் டார்ச் லைட் கும்பல் கூட கம்பேர் பண்ணி பேசிட்டேன்னு கோபமா இருந்தா. இப்ப கோபமா இருக்க அடுத்த காரணம். உருப்புட்டாப்ல தான் எங்காதல். " எனப் புலம்பியவனுக்குத் தாமரையின் பாராமுகம் கசந்தது. அவளின் மௌனத்தை மொழிபெயர்க்க அகராதியைத் தேடிக் கொண்டிருந்தார்..ன
இரு நாட்களாக அவளைக் காணவில்லை. காண செல்லவும் இல்ல. அவளை எதிர்கொள்ளும் தைரியமும் இல்லை. அவள் குரல் கேட்கவில்லை. இவை எல்லாம் அது அவனை வாட்டி வதக்க, இன்று எப்படியேனும் தூர நின்றாவது பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தாமரையின் பள்ளிக்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்றான்.
"என்னாச்சி செல்விம்மா! நேத்துலருந்து ஏன் ஒரு மாதிரி இருக்க. ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா?" பாண்டி தங்கையின் முக வாட்டம் காண முடியாது கேட்க,
"பிரச்சனலாம் ஒன்னுமில்லண்ணா. இது பரிச்ச நேரம். அதா சிலபஸ் முடிக்கிறது, படிக்க வைக்கிறது, பரிச்சைக்கி கொஸ்டீன் எடுக்குறதுன்னு நிறைய வேலை இருக்கு."
"வேற எதுவுமில்லேல?"
"இல்லண்ணா."
"நம்ம ஊரு கருப்பு கோயில பொங்க வருது செல்வி. சுடருக்காக நடத்தப்போற போராட்டம் முடியவும் நம்மல ஊருக்கு வரச் சொல்லி அம்ம சொல்லுச்சி. மூணு நாள். நம்ம ஊருல இருக்கப் போறோம். நம்ம கூட பைரவியும் சாரதாம்மாவும் வர்றதா சொல்லிருக்காங்க."
"பைரவிக்கா வருவார்களா! அப்படியே சாருக்காவையும் கூட்டீட்டு வந்தா நல்லா இருக்கும்லண்ணா." என உதடுகள் சிரித்தாலும் விழிகள் உண்மை பேச, அதன் காரணம் கேட்டான் பாண்டி..
"ஏன்னு தெரியல. மனசே சரியில்லண்ணா. கோயில்ல விளக்கு போட்டுட்டு போலாமா?" எனக் கேட்க, தங்கையின் விருப்பத்திற்காக என இரு நாட்களும் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் ராக்கியைத் தான் காண முடிவதில்லை.
இருவரும் நின்று பேசிய படித் திட்டில் அமர்ந்து, ராக்கியை நினைத்து வருந்துவதுமாக தாமரைக்கு இரு நாட்கள் நகர்ந்தன.
தாமரையால், ராக்கி ஒரு பெண்ணைக் காதல் செய்தான் என்பதை ஏற்க முடியவில்லை.
'கல்யாணம் வரைக்கும் போயிருக்குன்னா அது தெய்வீக காதலால் தான் இருந்திருக்கும். எவ்ளோ வேதன பட்டிருப்பாரு! இப்ப மட்டும் அந்த சிறுக்கி கண்ணுல மாட்டுனா. அவ தலைமுடிய ஆஞ்சி எடுத்து மொட்ட அடிக்காம விட மாட்டேன். இவருக்கு தான் அறிவில்ல. அழகா இருந்திட்டு பாக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் ஈன்னு இளிச்சா! வளச்சி போடத்தான பாப்பாளுக!' எனத் தினமும் ராக்கிக்கும் அவனின் முன்னாள் காதலிக்கும் திட்ட கிடைக்கும்.
இன்று..
கோயில் வந்ததும் வேகமாக உள்ளே செல்ல போன தங்கையிடம், "செல்வி பூவும் விளக்கும் வாங்கல."
"நீங்க வாங்கிட்டு வர்றீங்களாண்ணா. " என்றவள் உள்ளே ஓடிச் சென்றாள். பாண்டி வாங்கி வருதற்குள், ராக்கி கோயிலுக்கு வந்திருக்கிறானா இல்லையா என நோட்டம் விட வேண்டும். இன்று வருவான் என்று அவள் மனம் உறுதியாய் சொல்ல, கண்டு விட்டாள். ராக்கியை மட்டுமல்ல அவனின் முன்னாள் காதலி நிவியையும்.
அன்றைய நிகழ்வுக்கு பின் ராக்கியிடம் தன் நிலை விளக்கம் கொடுக்க என அவன் செல்லும் இடமெல்லாம் பின்னாலேயே சுற்றுகிறாள் நிவேதா. ஆனால் ராக்கியோ,
"எதோ பைரவி சொன்னாங்கிறதுக்காகத்தான், உன்னப் பாத்தும் பாக்காத மாதிரி விலகிப் போறேன். உன்ன நியாயப்படுத்தி, நீ பண்ணது சரிதான்னு சொல்லபோற எதையும் கேக்க நான் தயார இல்ல. நீ என்னோட முடிஞ்சி போன அத்தியாயம். திரும்பி பாக்க விரும்பல. " என்றுரைத்து விட்டு நடக்க, நிவியும் அவனின் முன் வந்து வழி மறித்து நின்றாள். அப்போது தாமரை வேகமாகவும் கோபமாகவும் இருவரையும் நோக்கி சென்றாள்.
ராக்கியின் முன் வந்து நின்றவள், காளியாய் மாறி, "ரெண்டு நாளா ஏன் வந்து என்னைப் பாக்கல?" என அதிகாரமாக கேட்க,
'எது வரலயா! அப்ப நம்ம ஆளும் நம்மல தேடிருக்கு. ஆனா பேச்சு வித்தியாசமா இருக்கே. நம்ம ஒத்த ரோசா தானா இது? ' என அதிர்ந்து போய் நின்றான் ராக்கி.
"அன்னைக்கி என்னமோ காயம் மருந்துன்னு சொல்லிட்டு… ஒன்னுமே பண்ணாம இருந்தா என்ன அர்த்தம்? நான் கால் பண்ணலன்னா நீங்களா கூப்பிட மாட்டிங்களா! இனி தினமும் காலை கால் பண்ணணும். இங்க வந்து நிக்கணும். இதே நேரத்துக்கு. " எனக் கட்டளையிட்டு சென்றவள், திரும்பி வந்து ராக்கியின் கரம் பற்றி இழுத்தும் சென்றாள். செல்லும் அவளின் பார்வை நிவியை எரிக்க தவறவில்லை.
காதலை வார்த்தையால் சொல்லாது, செயலில் காட்டிவிட்டு சென்றாள் ராக்கியின் தாமரை.
All the best பாய்…
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..