அத்தியாயம்: 60
"ஹலோ… ஹலோ… லயன்ல இருக்கிங்களா இல்லயா… ஹலோ… " என மிரட்டலாக கடுப்புடன் கேட்டாள் சாரு.
"ம்… இருக்கேன்ங்க. " பாண்டியின் குரல் அது.
"என்ன இருக்கேங்களா!! நல்லது. கால் பண்ணா அட்டன் பண்ண கூட உங்களுக்கு வலிக்கிதோ. எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது. ஆஃபீஸ்க்கு லேட்டாகிடுச்சி. எப்ப வருவீங்க?"
"இல்லங்க. நான் வரல. நீங்க ஆட்டோல இல்லன்னா வேற டாக்ஸி பிடிச்சி ஆஃபீஸ்க்கு போய்ங்கங்க."
"என் ஆஃபிஸ்க்கு போறதுக்கு எனக்கே வழி சொல்றிங்களா! ரொம்ப அசால்ட்டா போச்சி உங்களுக்கு. இதுக்கு முன்னாடி நான் ஒரு நாள் வரலங்கயும் ஃபோன் மேல ஃபோன் போட்டு பைரவிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவிங்க. இப்ப நான் பண்றேன். அவா சொன்னா வந்து தான ஆகணும்.. "
"என்ன வேண்ணாலும் சொல்லிக்கங்க. யார் சொன்னாலும் என்னால வர முடியாது. "
"இன்னைக்கு மட்டுமா?"
"இல்லங்க. என்னைக்குமே. நீங்க உங்க வழில உங்களுக்கு பிடிச்ச வழில போய்கங்க." என கட் செய்ய,
"பேசிட்டு இருக்கும் போதே வா கட் பண்ற. இரு உன்ன என்ன பண்றேன்னு பாரு? உனக்கெல்லாம் பைரவி கொள்க தான் சரி வரும்." என நினைத்தவள் தோழியை போலவே யோசித்து சாரதாவிற்கு அழைப்பு விட்டு, தன்னை அழைத்துச் செல்ல பாண்டி வரவில்லை எனப் புகார் செய்தாள். அதன் விளைவு அடுத்த ஐந்து நிமிடத்தில் அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தவளின் முன் காரை நிறுத்தினான் பாண்டி.
இரு கரத்தையும் கட்டிக்கொண்டு அவள் வீம்பாய் நிற்க, பாண்டியும் அவளைப் பார்க்காது வேறு பக்கம் திரும்பிக் கொண்டு இருக்க நிமிடங்கள் நகர்ந்து கொண்டே சென்றது.
பாண்டி,, "இப்ப என்ன பண்றதா உத்தேசம்? ஏறப் போறிங்களா இல்ல நாம்பாட்டிக்கி போகவா. " எனக் கோபமாக கேட்க,
"தாராளமா போங்க. யாரு வேண்டாம்னு சொன்னது. நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசிக்கிறேன்." என ஃபோனை தூக்க,
"ஏய்… ஏறு டி கார்ல. வேல கெடக்கு எனக்கு." என எரிந்து விழ, காரில் ஏறி அமர்ந்தாள் அதுவும் முன் பக்கமாக. எவ்வித பேச்சும் இன்றி காரை அவன் இயக்க, சாரு ஃபோனை நோண்டிய படி பாண்டியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் இறக்கும் இடத்தில் காரை நிறுத்தவும், இறங்கி நடந்தவள், திரும்பி அவனிடம் வந்து,
"சரியா 5 மணிக்கு வந்திடணும். வரலன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல." என மிரட்டி விட்டு சென்றாள். அது பாண்டிக்கு மிகவும் பிடித்திருந்தது. செல்லும் அவளைச் சிறு புன்னகையுடன் பார்த்தவனுக்கு நேற்றைய நினைவு வர, வந்த புன்னகை துணி கொண்டு துடைத்து எடுக்கப்பட்டது.
மெரினா பீச்..
தாமரை, இளம் வெயில் அடிக்கும் அந்தக் காலை வேளையில் கடல் அலையைத் துரத்தி பிடிக்க ஓட, அது அவளைத் துரத்த என அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளை அங்கு அழைத்து வந்தது நம் ராக்கி பாய் தான். இன்று மட்டுமல்ல எப்போது கரம் பற்றி இழுத்து வந்தாளோ அப்போதிருந்தே பள்ளி முடியும் முன் வந்து அவளுக்காக காத்திருப்பதும், பார்வையால் பேசிய படி தாமரை அவனைக் கடந்து சென்று பாண்டியின் காரில் ஏறிச் செல்வதும் வாடிக்கையானது.
வாயை திறந்தால் ஆபத்தாக இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ வாட்ஸ் அப்பில் காதலை வளர்ந்தான்.
"எங்கங்க வளக்குறது. அதுவே பாலைவனத்துல மொளச்ச கள்ளிச் செடி கணக்கா… மொரத்துத்தனமா இருக்கு." ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.
"என்னாச்சி ராக்கி பாய்?"
"வெறும் குட் மார்னிங், குட் நைட் மெஸ்சேஜ் மட்டும் தான் வருது. அத தவிர வேற எதையும் டயிப் பண்ணி அனுப்ப மாட்டேங்கிறா."
"நீங்க பண்ணலாம்ல."
"நானு… லவ் மெஸ்சேஜ்… அட நீங்க வேற. அது பேசவே தயங்குது. அதுக்கிட்ட போய் நான் கண்டத பேச… அது மிரண்டு, காதல் பார்வ பாக்குறதுக்கு பதிலா காண்டு பார்வ பாத்தா வேற பொண்ணுக்கு நான் எங்க போறது! லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேனே. அத்தோட வாய் பேசலன்னாலும் கண் பேசுது. மௌனம் பேசியதே மொமெண்ட்டா இருக்கும். பின்னாடி யுவன் பீஜிம்லா கேக்குது. அதுவே போதும்." என்றவன் உரம் போடாது காதல் வளர்க்கிறான்.
காலையில் மாலையில் என இரு வேளை மட்டுமல்லாது கிடைக்கும் நேரம் எல்லாம் அவளை நேரில் பள்ளிக்கு வந்து பார்த்துவிட்டு தான் செல்வான். பைரவியின் எச்சரிக்கைக்குப் பின் அவளின் முழு நேர பாடிகார்ட் அவன் தான். அடிக்கடி ஹோமிற்கு சென்று அவளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வான்.
இன்று ஞாயிறு…
காலையிலேயே ஹோமிற்கு செல்ல, அங்கு பீச்சைச் சுத்தம் செய்ய ஒரு குழு புறப்பட்டு கொண்டிருந்தது. இது தான் சமயம் என பாண்டியிடம் சென்று எதேதோ கதை சொல்லி தாமரையுடன் புறப்பட்டு விட்டான்.
"ஹோம்க்குள்ளயே இருந்தா பேச முடியாது so much of disturbance. வெளிலன்னா எப்படியாது தனியா தள்ளிட்டு போய்டலாம். ஒரு கிஸ்ஸு… ஒரு ஹக்கு… அட்லீஸ்ட் டச்சிங் டச்சிங்காது நடக்கும்." என ஆசையுடன் பீச்சிற்கு வந்தான். அவன் திட்டம் பலித்தது. இதோ தாமரையை தனியாக தள்ளிக் கொண்டு வந்து விட்டான்.
கடல் அலையில் விளையாட ஆசப்பட்டவளுக்கு சேவை செய்ய ராக்கி முன்வந்து அழைத்து வந்துள்ளான்.
'ச்ச.. படத்துல ஹீரோ நடந்து வந்தா வில்லனுங்க தானா வந்து மாட்டுறானுங்க. பட் நிஜத்துல அப்படி எதுவும் சட்டுன்னு நடக்க மாட்டேங்கிது. இப்ப கூட பாருங்க, எங்க பின்னாடி ஒரு காரு வந்தது. அதுல சீட்டுக்கு ஒருத்தெங்கிற கணக்குல அஞ்சி பேர் இருந்தானுங்க. பீச் ரோட்டுக்கு வந்ததும் வேற பக்கம் அது திரும்பிடுச்சி.
அடுத்து, பக்கத்துல ஒரு சுண்டல் விக்கிறவெ குறுகுறுன்னு பாத்திட்டே நிக்கிறான். ஸ்கூல் வாசல்ல மிட்டாய் விக்கிறவன்ல இருந்து பலூன் விக்கிறவெ வரைக்கும் டெய்லி நோட் பண்றானுங்களே தவிர கடத்திட்டு போக யாரும் முன் வரல. ஏன்… நம்மல பாத்து பயந்திட்டானுங்களா..' என யோசித்தபடி இருந்தவன், விழி விரிய அதிர்ந்து போய் பார்த்தான் ஒரு திசையை. ஏதோ பார்க்க கூடாததை பார்த்து விட்டான் போலும். உடனே தாமரையின் கரத்தை பற்றிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
"என்னாச்சிங்க? ஏன் நாம ஓடுறோம். " என அவனுடன் சென்றபடி தாமரை கேட்க,
"ஆபத்து…" என ரத்தின சுருக்கமாக சொல்லி இழுத்து வந்தவன், அங்கிருந்த படகிற்கு பின்னால் தலைமறைவாகிக் கொண்டான். அவனில் தோளைத் தட்டி, என்னாச்சி என மீண்டும் மீண்டும் கேட்க,
"ஆபத்து வரும் போது அண்டர் க்ரவுண்டுல பதுங்கிக்கணும். இது எங்களுக்கு டிரெயினிங் சமயத்துல சொல்லி தந்தது."
"இப்ப நாம ஆபத்துல இருக்குமா?"
"ஆமா... ஆபத்து சின்ன சைஸ்ல உருண்டு வருது. " என்றவன் பொந்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி போல் மெல்ல எட்டிப்பார்க்க,
"நான் உடனே அண்ணாக்கு கூப்பிடுறேன்." என ஃபோனை எடுத்தாள் தாமரை. அதை பிடுங்கியவன்,
"ஆமா… உங்கண்ணே இன்டியன் ஆர்மி கமெண்டரு. வரும் போது ஏகப்பட்ட மிலிட்டரி டேக்குகளயும் ஹெலிகாப்டரையும் கூட்டீட்டு வந்து சுட்டு தள்ளிடுவாரு." என்க, அவளை முறைத்தாள் தாமரை.
'ராக்கி பாய் நீங்க வாய திறக்காம கண்ணால மட்டும் பாத்து காதல் செய்ங்க. வாய் மட்டுமே திறக்காதிங்க. திறந்தா உங்களோட கலட்டி விட்ட காதலிங்க வரிசைல தாமரைய கடைசியா சேர்க்க வேண்டி வரும். ஏற்கனவே உங்க மார்க் ரொம்ப கம்மியா இருக்கு. பெயில் ஆகாம பாத்துக்கங்க. ஆனிங்க அப்றம் உங்களுக்கு ஜோடி சேக்க நான் இன்னொரு பொண்ணு தேட வேண்டி இருக்கும்.' மை அட்வைஸ்.
'அந்த பொண்ணாது எனக்கு செட் ஆகுமா?' ராக்கி..
'அது உங்க வாய்ல இருக்குற வாஸ்துவ பொருத்து. '
"தலைய கீழ இறக்கும்மா. பாத்திட்டாளுகன்னா பேராபத்து." எனத் தலையில் கை வைத்து அழுத்த, அவனின் தலையை யாரோ தட்டினர்.
'யார்?' என நிமிர்ந்து பார்க்க, படகின் மேலிருந்து பைரவி எட்டிப் பார்த்து சிரித்தாள்.
"பாய்…" என்றபடி.
"நாங்க கண்டு பிடிச்சிட்டோம். நீங்க அவுட். " சாரு சந்தோஷமாக சொல்லியபடி சைடில் இருந்து வர, ‘இவளுக கண்ணுல ஏன் மாட்ட வச்ச கடவுளே!” எனக் கடவுளை மனத்திற்குள் திட்ட தொடங்கிவிட்டான் ராக்கி.
"ஹாய் பைரவி. சாருக்கா... ஏன் லேட்டா வந்திருக்கிங்க?" எனத் தாமரை குதுகலமாக கத்தும் போதே ராக்கிக்கு புரிந்து விட்டது, இருவரையும் வரச் சொல்லியது தாமரை தான் என்று.
சாரு, "கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது."
பைரவி, "அதான் லேட்.. என்ன பண்ணிட்டி இருக்கிங்க ராக்கி பாய்? "
"விளையாட்டு டி. ஐஸ் பாய். இன்னா பாய்… சரியா?" என்றாள் சாரு கேலியாக.
"ஐஸ் பாய் விளையாட உங்களுக்கு வேற இடமே கிடைக்கலயா! ஆமா போர்ட்டுக்கு பின்னாடி மறைஞ்சி கசமுசா பண்ண ஈவ்னிங் டயம் தான பெஸ்டான டயம். ஏன் சூரியன் சுட்டெரிக்கிற இந்த நேரத்துல வந்திங்க. " பைரவி ராக்கியின் காதில் முணுமுணுக்க,
"காதல் வந்திட்டா சூரியனும் பனி மழை பொழியும். என்ன ராக்கி பாய்!" எனச் சாரு மெல்லிய குரலில் சொல்லி கண்ணடிக்க,
"சும்மா இரு சாறு. கண்டதையும் பேசி கட் பண்ணி விட்டுடாத." எனத் திட்ட, சாரு அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு தாமரையுடன் நடக்கத் தொடங்கினாள்.
"எத்தன நாளா நடக்குது இது?"
"ஒரு வாரமாத்தா. ஆமா உனக்கு யாரு தகவல் சொன்னா! தாமரையா? "
"இல்ல. மதுரவீரென். இன்னைக்கி ஸார் பீச்சுக்கு போலாம்னு சொன்னதும் அவரு தான் எனக்கு கால் பண்ணி வரச் சொன்னாரு."
"நல்ல குடும்பம். நான் இருக்கும் போது உன்னையும் காவலுக்கு கூப்பிட்டிருக்கான் பாரேன்."
"ஒரு அண்ணனா தங்கச்சிய எப்படிலாம் பாத்துக்கிறாரு. எனக்கும் தான் இருக்கே."
"என்ன ஜாட பேசுறியா!"
"இல்ல நேராகவே கேக்குறேன். ஒரு அண்ணனா இருந்து என்னை பண்ணிருக்கிங்க எனக்கு? ஹாங்… சொல்லுங்க பாப்போம். எதுவுமே இல்ல... பட் தங்கச்சியா உங்களுக்கு தான் தாமர நம்பர வாங்கி குடுத்து கரெக்ட் பண்ண ஐடியாவும் குடுத்து எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்."
"இதோ பாரு நம்பரு நீ குடுக்துறதுக்கு முன்னாடியே என் ஒத்த தாமர எனக்கு கால் பண்ணிருக்கு. அதுனால அந்த உதவி செல்லாது. "
"அன்னைக்கி ஸ்கூல்ல இருந்து கூட்டீட்டு போக ஐடியா குடுத்தேனே… அது."
" நீ ஒரு நாள் குடுத்த. அடுத்து நடந்ததெல்லாம் என்னோட good time. அதுல நீ என்ன பண்ண?"
"ஆமாம்… நான் ஒன்னுமே பண்ணல. ஆனா இனி பண்றேன். பாப்பிங்க அத. என் லேப்டாப் என்னாச்சி? ஒரு வாரம் ஒப்படச்சி. எங்க அது? உங்க ஃப்ரெண்டு கையால ஓப்பன் பண்ணி வாங்கி தர்றேன்னு சொன்னிங்களே என்னாச்சி?"
"அது… அது… உம்புருஷெ ஊர்லயே இல்லயே. அப்றம் எப்படி?"
"நேத்து தான் பெங்களூர் போனாரு. இன்னைக்கி வந்திடுவாரு. முந்தாநேத்து இங்க தான் இருந்தாரு. அதுக்கு முன்னாடியும் இங்க தான் இருந்தாரு. யார்க்கிட்ட கத சொல்றிங்க. உங்க வேலை முடியவும் என்னை டீல்ல விட்டுடீங்க பாத்திங்களா!"
"ஐயையோ அப்படில்லாம் இல்லம்மா." எனக் கெஞ்சிக் கொண்டிருக்க, பாண்டி வந்தான்.
'அப்பாடா தப்பிச்சோம்டா சாமி.' என்றவன் வேகமாக பாண்டியுடன் செல்ல, அவனை முறைத்தாள் பைரவி.
அனைவரும் ரோட்டோரத்தில் இருந்த கடையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மண் குவளையில் கொடுக்கப்பட்ட தேநீரை ருசித்து பருக, பைரவி காதில் புகை வராத குறையாக அமர்ந்திருந்தாள்.
ராக்கியை சொல்லவே தேவையில்லை. அனைவரும் ஈசியாக மிங்கில் ஆகும் ரகம். ஒரு வாரமே ஆயிணும் அவன் பாண்டி, கண்ணாயிரம் எனத் தாமரையின் குடும்பத்தையே அவனின் ரசிகர்கள் என்று சொல்லும் அளவுக்கு மாற்றி இருந்தான்.
"நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா?" என்ற குரல் அனைவரையும் ஒரு சேர திரும்பி பார்க்க வைத்தது.
தீஷிதன் தான் அது. பைரவியின் சாப்பரை பார்த்ததும் வந்து விட்டான். அவளுடன் பேச கிடைக்கும் தருணத்தை வீணாக்க விரும்பாது. அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து நன்கு உபசரித்து அனுப்பி வைத்தனர் பைரவியும் சாருவும்..
ராக்கி, "பைரவி, யாரு அது? கவனிப்பு பலம்மா இருந்தது. என்ன காரணம்? "
"காரணம் இருக்கு ராக்கி பாய். ரெண்டு காரணம் இருக்கு."
"என்னதது?"
"முதல் காரணம் அவரு ஒரு டெலி கம்யூனிகேஷன்ஸ் வைச்சி நடத்துறாரு. எனக்கு சுடரோட ஃபோன் கால்ஸ்ஸ ட்ரேஸ் பண்ணி சுடரோட கேஸ்ஸ சால்ட் பண்ண உதவுறதா சொல்லிருக்காரு."
"ரெண்டாவது."
" நம்ம சாருக்கு நான் பாத்து வச்சிருக்குற மாப்ள இந்த அவக்கேடோ தான். பேரு தீஷிதன். நல்லா இருக்கானா பையன்." எனக் கேட்க, அதைக் கேட்ட பாண்டிக்குள் விவரிக்க இயலாத வலியை வந்தது.
"நிஜம்மாவா!"
"ம்… நம்ம சாருக்கும் பையன் மேலே ஒரு கண்ணு. பாத்திங்கள்ல கவனிப்பா. அவளுக்கு பிடிச்சிருக்குங்கிறப்போ பேசி முடிக்கிறது தான நல்லது. தீஷித் இஸ் குட் பர்ஷன். நல்ல வேல. நல்ல ஃப்ரெண்ட்ஸ். எல்லாமே குட் தான். நான் அவெ அம்மாக்கிட்ட பேசிருக்கேன். ரொம்ப நல்ல மாமியாரா இருப்பாங்க. இன்னும் கொஞ்சம் ஃபீல்டு ஒர்க் பண்ண வேண்டி இருக்கு. அது முடியவும் சாருக்கு கல்யாணம் தான். பீப்பீப்பீ தான். " எனத் துள்ளிக் குதிக்க,
'அவளுக்கு பிடிச்சிருக்குங்கிறப்போ.. பேசி முடிச்சிட வேண்டியது தான..' என்ற பைரவியின் குரலில் பாண்டியின் பார்வை சாருவிடம் நிலைத்து நின்றது.
அவள் தீஷித்துடன் மும்முரமாக எதையோ பற்றி பேசி சிரிக்க, பாண்டி ஒதுங்கிக் கொள்ளவதாக முடிவு செய்து விட்டான். அதான் காலையில் சாருவை பிக்கப் செய்ய செல்ல வில்லை.
ஆனால் அவள் விடாது அழைத்தது இதயத்திற்கு இதமாய் இருந்தது. விரும்புக்கும் வெறுப்புக்கும் இடையே நூல் அளவு இடைவெளி மட்டுமே என்று கேள்வியுற்றதுண்டா. அது உண்மை என்று சாரு விசயத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தனை நாட்களாக பாண்டியின் மீதிருந்த வெறுப்பு விருப்பமாக மாற தொடங்கி இருந்தது.
💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..