முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

உறவு 5


அத்தியாயம்: 5

 

 

இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.

 

தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.

 

பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.

 

வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.

 

கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.

 

“என்னாச்சி வெண்மா?”

 

“தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.

 

“ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள விட்டுப் போகாம… கருவாத் தங்கியிருக்கான்.” எனச் சொன்ன செய்திக்குச் சந்தோஷப்படவா அல்லது வருத்தப்படவா என்று புரியாத போதும் அழும் அன்னையைச் சமாதானம் செய்தான்.

 

"இந்தர்... போய்த்தான் ஆகணுமா?" எனக் கொஞ்சும் குரலில் பைக்குள் உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவனைக் கேட்டாள் தியா.

 

"ஆமா தியா, போய்த்தான் ஆகணும். இன்னும் மூணு மாசத்துல வெண்மா கர்ணன் கல்யாணம்னு பேசிருந்தோம். அண்ணா உயிரோட இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லாம கல்யாணம் நடந்திருக்கும். இப்ப அண்ணே வேற இல்ல. என்ன முடிவு எடுக்கப் போறாங்களோன்னு பயமா இருக்கு. அம்மா ஒரு பக்கம் அண்ணிய நினைச்சி வருத்தப்படுறாங்க. அவங்களோட மறுமணத்தைப் பத்தி பேசி எல்லாரையும் கன்வின்ஸ் வேற பண்ணனும்." என்றபோது இதழ் சுழித்தாள் தியா, ஆர்த்தியை பற்றிய பேச்சால்.

 

"அவளைப் பத்தின கவலை உன்னோடது கிடையாது இந்தர். உங்கண்ணன் இறந்ததுக்கு அப்புறம் அவ யாரோ தான் உனக்கு. அவளை அண்ணி அண்ணின்னு கூப்பிட்டுட்டு…” என்று முகம் திருப்பியவள்,

 

“நீ உன் தங்கச்சி கல்யாணத்தை மட்டும் பேசி முடி இந்தர். அப்ப தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க முடியும். இன்னைக்கே நாம பண்ணிக்கிட்டாலும் ஓகே தான். நீ தான் தங்கச்சி செண்டிமெண்ட் பேசி தள்ளி வச்சிருக்க. மூணு மாசத்துல அது முடிஞ்சா… அப்புறம் நம்ம கல்யாணம் தான்..." என்று குதுகலித்தவளை சிறு வெறுப்புடன் பார்த்தவன்,

 

"இசக்கி மாமா என்ன முடிவு பண்ணுவாரோன்னு கவலையா இருக்கு தியா.” என்றான். அது தியாவிற்குள் பயத்தைத் தர,

 

"குழலி கல்யாணம் நடக்கலன்னாலும் நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும் இந்தர்.” என்று அவனை நெருங்கி வந்து அணைக்க, அவன் அவளிடம் மயங்காது தீர்க்கமாக நின்றான்.

 

'நான் என்ன விசயமா ஊருக்குப் போறேன். இவள் என்ன விசயத்தைப் பற்றிப் பேசுறாள். ச்சே… ஆறுதல் இல்லையென்றாலும் பரவாயில்ல வெண்மா கல்யாணத்தைப் பற்றி இப்படி அபசகுனமா பேசியிருக்க வேண்டாமே.’ என்று தியாவிற்கு எதிராய் ஒரு மனம் சொல்லியது.

 

“அவளின் எதிர்பார்ப்பும் கனவும் நியாயம் தான். காதலுக்குப் பின் கல்யாணம் பற்றிய ஆசை சரிதானே.” என்று ஆதரவாகப் பேசியது மற்றொரு மனம்.

 

“அதற்காகக் காரியத்திற்குச் செல்லும் போது இப்படியா பேசுவது!” என்ற சடைப்பு தான் மேலோங்கியிருந்தது.

 

அதைக் காட்டிக் கொள்ளாது அவளுக்குச் சமாதானங்கள் சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

 

அவனின் கஷ்ட காலங்களில் உடன் இருந்தாள் என்ற பச்சாதாபத்தைக் காதல் என்று எண்ணியவனுக்கு, அதன் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்பது எப்பொழுது தான் புரியுமோ.

 

நெல்லையப்பனின் வீடு புதுச் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு சாமியானா பந்தலுடன், வாசல் நிறைய ப்ளாஸ்டிக் நாற்காலிகளுடன் காணப்பட்டது.

 

நாளை நடக்க இருக்கும் காரியத்திற்காக உறவினர்கள் பலரும் வந்திருக்கின்றனர்.

 

நடமாடிக் கொண்டிருந்த அத்தனை பேரின் முகத்திலும் சோகத்தின் சாயல்.

 

தர்மாவைக் கண்டதும், “வாப்பா…” என்று ஆறுதலாக தோளில் கரம் பதித்து அழைத்துச் சென்றார் அவனின் சித்தப்பா.

 

தனது வீட்டிற்குள் சென்றவனுக்கு, நாளை காரியத்திற்கு வாங்க வேண்டிய பொருள்களைப் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த அமுதா தென்பட, “ம்மா…” எனக் கூவியபடி அருகில் சென்றான்.

 

திரும்பிய அவரின் முகத்தில் ஆதங்கம் இருந்தது. ஏனெனில் தர்மாவும் பாதியாளாக மாறியிருந்தானே. அது தாயாய் அவருக்கு கண்ணீரைத் தர,

 

“சாப்பிடுறீயா இல்லையா தர்மா? ஆளே உருக்குலைஞ்சி போயிருக்க. ஏம்ப்பா…” என்றார் வருத்தத்துடன்.

 

“போய்க் குளிச்சிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று அனுப்பி வைத்தார்.

 

செல்லும் வழியில் மகேந்திரனின் புகைப்படத்திற்கு முன்னால் சோர்வுடன் நின்றுக் கொண்டிருந்த நெல்லையப்பன் தென்பட, அவரின் தோளைத் தொட்டான். அவர் திடுக்கிட்டு முழித்தார்.

 

“என்னாச்சசு ப்பா?” என்றான் படபடப்பாக.

 

நான் வந்திருப்பதைக் கூடக் கவனியாது நின்றவரைக் கண்டு பதற, அவரோ அமுதாவின் முகம் பார்த்தார். அவர் கண்களால் எதுவோ சொல்ல, “ஒன்னுமில்லப்பா. நான் உன்னைக் கவனிக்கல. சாப்பிட்டியாப்பா?” என அக்கறையுடன் பேச, அவரை வித்தியாசமாகப் பார்த்தபடி தன் அறைக்குள் சென்றான்.

 

குளித்து விட்டு வந்தவன் ஆர்த்தியின் அறையை கடக்கும் போது நினைவு வந்தவனாக அவளின் நலத்தைப் பற்றி விசாரித்தான்.

 

“மாத்திரை கொடுத்திருக்காங்க. மத்தபடி வேற எதுவும் எங்கிட்ட சொல்லல. அத்தைகிட்ட தான் விவரம் சொன்னாங்க.” என்றவளிடம் உடலைக் கவனித்துக் கொள்ளும் படி கூறிச் சென்றான்.

 

ஏனோ அவளைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்வது அவனின் கடமை என்பது போன்றும், பொறுப்பு கூடியது போன்றும் ஓர் உணர்வு. அண்ணன் இல்லாத இடத்தைத் தான் நிரப்பி குடும்பத்தின் மூத்த பிள்ளையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டதாக உணர்ந்தான். 

 

குழலி உணவு பரிமாற, உண்டு முடித்தவனிடம், “முத்து அண்ணே உன்னைப் பார்க்கணும் சொன்னாருப்பா.” என்றார் அமுதா.

 

“யாரு? இசக்கி மாமாவா? எதுக்கும்மா?”

 

“தெரியலப்பா. நம்ம வீட்டுத் தோட்டத்துல இருக்காங்க. போய்ப் பாரு.” என்று சொல்லிச் சென்றார்.

 

அவனின் பார்வை குழலியிடமே இருந்தது. அவளும் தன் அண்ணனைக் கலக்கத்துடன் பார்த்தபடி அறைக்குள் சென்றாள்.

 

அவளுக்குக் கர்ணனை மிகவும் பிடித்திருந்தது. அதிலும் இவன் தான் உன் மணாளன் என்று அறிமுகம் செய்த நாளில் இருந்து அவனின் மனைவியாகவே தன்னை எண்ணி வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.

 

அதை அவளின் குரலும் முகமும் தர்மாவிற்குக் காட்டிக் கொடுக்கும்.

 

அவளின் திருமண விடயமாகத்தான் பேச உள்ளனர் போலும் என்று எண்ணி, விரைந்து தங்கள் தோட்டம் சென்றான். அங்கு கவலையுடன் வாயில் துண்டைத் திணித்துக் கொண்டு நின்றிருந்த நெல்லையப்பனைக் கண்டு பதறிப் போனான்.

 

“என்னாச்சு ப்பா?” என்றபடி அவரின் அருகில் சென்றவன் தன் பார்வையைச் சுழல விட்டான்.

 

அங்கு இசக்கிமுத்து மட்டுமல்லாது அவரின் உடன் பிறப்புகள், அங்காளி பங்காளிகள் மற்றும் நெல்லையப்பனின் உறவு முறையிலும் சில பெரியவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர்.

 

ஏதோ விவகாரம் என்று புத்தி சொல்ல, தர்மா கர்ணனை ஏறிட்டான்.

 

தர்மாவின் வயது தான் கர்ணனுக்கும் இருக்கும். தந்தையின் உரக்கடையைக் கவனித்துக் கொண்டு, எலக்ட்ரிக் ஸ்டோரூமையும் நடத்தி வரும் பட்டதாரி இளைஞன் அவன்.

 

நட்பு இருந்ததில்லை என்றாலும் தங்கையின் வருங்கால கணவன் என்ற முறையில் மரியாதை இருந்தது.

 

அதே மரியாதையுடன் அவனை ஏறிட, அவன் புருவங்கள் இரண்டையும் மேலே உயர்த்தியபடி சிறு விறைப்புடன் நின்றிருந்தான்.

 

தர்மாவின் முகத்தைக் கூடப் பார்க்க அவன் தயாராக இல்லை.

 

தன் தங்கையின் திருமணம் குறித்து தான் பேச உள்ளனர் என்று கணித்தது மனம்.

 

பாவம்…

 

கர்ணனுக்கும் ஆர்த்தியின் மீது அதீத பாசம் உண்டு என்பதை தர்மா அறிவான்.

 

அவர்கள் வீட்டுப் பெண் நிர்கதியாய் இருக்கையில் தன் தங்கையை மறுத்து விடுவானோ என்று கவலை கொண்டவன், திரும்பி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் குழலியைப் பார்த்தான். அவளும் ஆர்வ மிகுதியில் நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

“ப்பா… வெண்மா கல்யாணத்தைப் பத்தியா பேசக் கூடியிருக்கீங்க?” என மெல்ல தந்தையின் காதைக் கடிக்க,

 

“அது…” என்று அவர் இழுத்தார்.

 

“என்னப்பா ஆரம்பிக்கலாமா?” எனக் கேட்டபடி வந்தார்கள் இரு ஊரிலும் இருக்கும் முக்கிய தலைவர்கள்.

 

“என்ன இசக்கி… என்ன சமாச்சாரம்?” என்றார் நெல்லையப்பனின் ஊர்த் தலைவர். அவர் அமைதியாக நெல்லையப்பனின் முகத்தைப் பார்த்தபடி கலங்கி நிற்கவும்,

 

“நேத்து ராத்தி பொழுதுல வந்து அவசர அவசரமா கதவைத் தட்டி ஏதேதோ சொன்னியேப்பா. அதை இங்க எல்லார் முன்னாடியும் உடைச்சி பேசிடு.” என்றார் இசக்கிமுத்துவின் ஊர்த் தலைவர். அப்பொழுதும் அவர் அமைதி காக்க, இசக்கிமுத்துவின் தம்பி எழுந்தார்.

 

“எல்லாருக்குமே தெரியும், எங்கண்ணே மவள நெல்லயப்பன் மகனுக்குக் கட்டி வச்ச கதை. கல்யாணம் முடிஞ்சி முழுசா நூறு நாள் கூட ஆகல. மருமகன் செத்துட்டாரு. மக தாலியறுத்து நிக்கப்போறாங்கிற நினைப்பு எம்புட்டு வேதனையா இருக்கும்னு நான் சொல்லத் தேவையில்லை. இங்க பாதி பேருக்குப் பொம்பளப்பிள்ளைங்க இருக்கு.” என்றவர், “மீதியை நீயே‌ பேசு.” என்பது போல் இசக்கிமுத்துவைப் பார்த்தார்.

 

அவர் மிகுந்த சங்கடத்துடன் கூட்டத்தின் முன் வந்து, “ஐயா, நெல்லை எனக்கு நண்பனுங்க. அவென் மேல இருக்குற மரியாதையாலத்தான் பொண்ணு குடுக்க முன் வந்தேன். கல்யாணம் ஆச்சி. இத்தனை நாள்ல எந்தக் குறையும் சொல்ற மாதிரி யாரும் அங்க நடந்துக்கல. ஏன் எம்பொண்ணு என் வீட்டுல இருந்ததை விட, நெல்லை வீட்டுல தான் சந்தோஷமா இருந்தா. அதை யாரும் மறுத்து பேசிட முடியாது.

 

ஆனா எம்பொண்ணு சின்னதுங்க. இருபது வயசு கூட ஆகல. ஆனா அதுக்குள்ள… கைம்பெண்ணா… இதெல்லாம் தாங்குற அளவுக்கு அதுக்கும் தெம்பில்ல எனக்கும் தெம்பில்லங்கய்யா.” என்று கலங்கி அழுக, அவர் அழுது முடிக்கும் வரை அங்க பேச்சே இல்லை.

 

“நாளைக்கு காரியம் முடியவும் எம்பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு…” என்று இசக்கிமுத்து பேசியது தர்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

 

மறுமணம் இன்றும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று தான். ஆணுக்கு என்றால் சரி எனும் சமூகம் பெண்ணுக்கு அதைச் செய்ய முன் வாராது. தூற்றும். அதிலும் கிராமங்களில் ஒரு பெண்ணின் மறுமணம் குறித்தப் பேச்சு, அவனுக்கு வியப்பை மட்டுமல்ல தான் நினைத்து வந்து காரியம் சுலபமாக முடிந்தது என்ற நிம்மதியையும் தந்தது.

 

“நீ என்னப்பா சொல்ற. கட்டிக் கொடுத்ததோட பாதி கடமை முடிஞ்சது பெத்தவனுக்கு. மீதி கட்டிட்டு வந்த வீட்டாளுகளுக்குத் தான். இசக்கி சொல்றதுல உனக்குச் சம்மதமா?” என்க,

 

நெல்லையப்பன், “நான் எப்படிங்க மாட்டேன்னு சொல்வேன். அது எம்பொண்ணு மாதிரி. அது இந்த வயசுல ஒத்தையில நிக்கிறத பாக்க எங்க யாருக்கும் மனசில்ல. எங்க வீட்டு மகாலட்சுமி அது.” என்றதும்,

 

“பெறவு என்ன பேச வேண்டி இருக்கு?” என்பது போல் இரு ஊர்த் தலைவர்களும் பார்க்க, கர்ணன் முன் வந்தான், “இன்னும் பேச வேண்டி உள்ளது.” என்பது போல்.

 

“கல்யாணம்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் எல்லாத்தையும் முழுசாப் பேச வேண்டி இருக்கு.” என்றதும் தர்மாவின் கவலை மொத்தமும் தங்கையின் மீது இருந்தது.

 

“எங்தங்கச்சி மாசமா இருக்கா. வயித்துல இவுக வீட்டு வாரிசு வளருது. அதை வச்சிக்கிட்டு எப்படி அடுத்த கல்யாணம் பண்ண முடியும். பெரிய மனசோட கட்டிக்க எவனும் முன்வந்தாலும், வயித்துல குழந்தையோட இருக்குற அவளை பொண்டாட்டியா ஏத்துக்க யாரு வருவா? அப்படி வந்தாலும் குழந்தைக்கு யாரு அப்பாங்கிற பேச்சு கடைசிவரை அந்தக் குழந்தையையும் எந்தங்கச்சியையும் சுத்தும். அந்த நிலை எதுக்கு. அதுனால… அந்தக் குழந்தைய….” என்றதும்,‌

 

“கர்ணா… என்ன பேசுற நீ?” என்று கோபத்துடன் முன் வந்தான் தர்மா.

 

கர்ணனுக்கு அவன் தங்கை வாழ்க்கை முக்கியமாக இருக்கலாம். அதற்காக அவள் வயிற்றில் வளரும் தன் அண்ணன் குழந்தையைக் கலைப்பது பற்றி எப்படிப் பேசலாம் என்று ஆத்திரம் எழுந்தது தர்மாவிற்கு.

 

“நடப்ப பேசுறேன் மச்சான். எவனும் முழுசா நல்லவன் கிடையாது இந்த உலகத்துல. அதுலயும் அடுத்தவன் குழந்தைக்கு எந்த உருத்தலும் இல்லாம இனிஷியலைத் தூக்கிக் கொடுக்குற அளவுக்கு யாரும் இல்ல.”

 

“கண்டிப்பா இருப்பான். மறுமணம்னு வந்தா சில விசயங்கள ஏத்துக்கிட்டு தானே ஆகணும். அது எங்க வீட்டு வாரிசு… எங்கண்ணன் இரத்தம். வேணும்னா குழந்தை பிறந்ததும் அதோட பொறுப்பை நாங்க ஏத்துக்கிறோம்.” என்றதும் கர்ணனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

 

“அப்ப எங்க வீட்டு மகாலட்சுமின்னு சொன்னது மொத்தமும் பொய். பிள்ளைய பெத்துக் கொடுக்குறதோட உங்க வீட்டு மகாலட்சுமியோட வேலை முடிஞ்சது.” என்றதும், எதற்கு அடிப் போடுகிறார்கள் என்று தர்மாவிற்கு அப்பொழுது தான் விளங்கியது.

 

‘மறுமணம் என்று முடிவானப் பின், எவனோ ஒருவனுக்குச் செய்வதை விட நீயே அவளைத் திருமணம் செய்துக் கொள்.’ என்று கர்ணன் வாதிட, அதை ஏற்க முடியாது தவித்தான் தர்மா.

 

அவள் தன் அண்ணனின் மனைவி.‌ அவளைப் போய்… குழந்தையின் பொறுப்பைத் தன்னால் வாழ் நாள் முழுவதும் ஏற்க இயலும். ஆனால் அவளைத் தன் மனைவியாக… எப்படி… என்று குழம்பிப் போயிருந்த சமயம்,

 

“ரெண்டு விசயம் தாங்க ஐயா. நாளைக்கு மகேந்திரன் மச்சான் கட்டுன தாலி கீழ இறங்குற மறு நொடி தர்மா மச்சான் கையால என் தங்கச்சி கழுத்துல தாலி ஏறணும். அவர் சம்மதிக்கலன்னா அவ வயித்துல இருக்குற அவுக வாரிசை கலைச்சிட்டு எந்தங்கச்சிக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வைப்பேன். அதுவும் நாளைக்கே நடக்கும்.

 

அப்புறம் எந்தங்கச்சி வாழாத வீட்டுல பொண்ணு எடுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. முடிவு உங்க கைல தான்.” என்று நெல்லையப்பனிடம் சொல்லி விட்டுச் செல்ல, அது நேரடி மிரட்டலாகப் பட்டது தர்மாவிற்கு.

 

அனைவரும் கலைந்துச் சென்ற பிறகு, “ஆர்த்தி நம்ம வீட்டு மருமக, அது நம்ம வீட்டு வாரிசு. ரெண்டையும் இழக்க நான் சம்மதிக்க மாட்டேன்.” என்று அமுதா அழுதார். நெல்லையப்பனும் அதே வார்த்தைகளைச் சொல்ல, வேறு வழியில்லாது ஆர்த்தியிடம் சென்று பேசினான்.

 

அவளாவது அண்ணனுடன் வாழ்ந்து விட்டு தம்பியை மணக்க மாட்டேன் என்று சொல்லக் கூடும். அதை இவர்கள் ஏற்க கூடும் என்ற நப்பாசையில்.

 

ஆனால் அவளோ மறைமுகமாக சம்மதம் என்றது அவனுக்கு அதிர்ச்சி தான். அவனுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால் தர்மா ஆர்த்தி இருவரின் திருமணம் குறித்த முடிவு எடுக்கப்பட்டு பல தினங்களாகிவிட்டது என்பது.

 

பதினாறாம் நாள் காரியம் முடிந்தால் ஆர்த்தியை அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவர் என்பதால் அவளையும் அவள் வயிற்றில் வளரும் தங்கள் வீட்டு வாரிசையும் இழக்க மனமில்லாமல் தர்மாவிற்கு அவளைக் கேட்டதே நெல்லையப்பன் தான்.

 

நேரடியாக அவனிடம் இதைக் கேட்டால் அவன் சம்மதிக்க மாட்டான் என்று குடும்பத்தாரால் அரங்கேற்றப்பட்ட நாடகம் அது என்று அவனுக்குத் தெரியாது.

 

அது மட்டுமல்லாது ஆர்த்தியின் மூளையையும் சலவை செய்து அவளைத் தர்மேந்திரனுடனான திருமணத்திற்குத் தயாராகவே வைத்திருந்தனர்.

 

அவர்களின் சம்பாஷனையில் தர்மாவை அவள் கணவனாக ஏற்றாளோ இல்லையோ, மகேந்திரனை முழுமையாகத் தன் கணவன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறக்கி விட்டாள். மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டாள்.

 

இதில் தர்மாவிற்கு ஆறுதல் தரும் விடயமாக வெண்குழலியின் கல்யாணம் அமைந்தது. கர்ணன் குழலியை வேண்டாம் என்று நிராகரிக்கவில்லை. ஆனால் அவன் ஆர்த்தியை நிராகரித்தால் அது நடக்கும் என்பதாலும், தன் அண்ணனின் வாரிசு பிறக்க வேண்டும் என்பதாலும் ஆர்த்தியை மணந்துக் கொண்டான். 

தொடரும் ...

💛அனிதா குமார்💛

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


உறவு 4


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...