அத்தியாயம்: 6
குவாட்டர்ஸ்...
அழகிய தார்ச் சாலையுடன்
மரங்கள் மற்றும் சில செடிகளுக்கு மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அது அணு மின்
நிலையத்தில் வேலை பார்ப்பவர்களுக்குத் துறை ரீதியாகவும், பதவி ரீதியாகவும் தனித் தனி
குடியிருப்புகளைக் கொண்டது.
பல கோட்டைச் சுவர்களும்,
தனித் தனி இரும்பு கேட்டுகளும் போட்டு பாதுகாப்பாக இருந்த கட்டிடங்களில், சேஃப்டி இன்ஜினியர்ஸ்களுக்கான
குடியிருப்பும் ஒன்று.
க்ரீச் என்ற சத்தத்துடன்
திறந்து மூடும் இரும்பு கேட்டைத் தாண்டிச் சென்றால், இரண்டு அடுக்குகளையும், கீழே இரண்டு,
மேலே மூன்று எனத் தலா ஐந்து வீடுகள் அடங்கிய இரண்டு கட்டிடங்கள் எதிர் எதிரே பார்த்தபடியும்
இருக்கும்.
கீழ் போர்ஷன் மொத்தமும்
உயர் அதிகாரிகளுக்கானது. அதற்கு மேல் தர்மா போன்ற அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களுக்கானது.
இரு கட்டிடங்களுக்கும்
சேர்த்தார் போல் பின் பக்கம் வாகனங்கள் நிறுத்துமிடம் இருக்கும். சாலை வசதியுடன் இருந்தது.
அதில் ஒன்றிரண்டு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே தன் பைக்கை நிறுத்தினான்
தர்மேந்திரன்.
கையில் சில நெகிழிப்
பையுடன், படிக்கட்டில் ஏறத் தொடங்கிய போதே, "தர்மாண்ணா... அம்மா இதைக் கொடுக்கச்
சொன்னாங்க." என்று ஒரு சிறிய டப்பாவை நீட்டினான் ஒரு சிறுவன்.
தர்மேந்திரன் அந்த
பவர் ப்ளாண்ட்டில் சேஃப்டி என்ஜினீயர் ஆகப் பணிக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகளானது.
அந்தக் குடியிருப்பு வாசியாகிப் பல மாதங்களைக் கடந்து விட்டதால், அக்கம் பக்கம் உள்ளவர்களுடன்
தர்மாவிற்கு நல்ல பழக்கம் இருந்தது. அவனின் அமைதியான குணமும், உதவும் மனப்பான்மையும்
அங்கிருந்தவர்களுடன் விரைந்து இணைய வைத்தது.
விழாக் காலங்களில்
கூட ஊருக்குச் செல்ல முடியாது அங்கு பணியில் இருந்தவனுக்கு அவர்கள் தான் துணை.
"இந்தா தர்மா!
எங்க வீட்டுல சுட்டது." என நித்தமும் ஒரு டப்பாவில் உணவுப் பொருள் வந்துக் கொண்டே
இருக்கும். அவர்களின் அன்பு, குடும்பத்தை விட்டு தூர இருக்கிறோம் என்ற நினைப்பைக் காணாது
போக்கி விடும்.
எப்பொழுதும்,
"என்ன ஸ்பெஷல் டா உங்க வீட்டுல?" எனக் கேலி செய்தபடி, டப்பாவைத் திறந்து
நுகர்ந்து பார்த்து புன்னகை செய்பவன், இன்று என்ன என்று கூட அதைக் கேட்காது வாங்கிக்
கொண்டு, இறுகிய முகத்துடனேயே படி ஏறினான்.
இரண்டாவது தளத்தில்
இருக்கும் அவனின் வீட்டை அடைய, இரு வீட்டு வாசல்களைக் கடந்துச் செல்ல வேண்டும்.
அப்படிக் கடந்துச்
சென்றவன், கடைசியாக இருந்த தன் வீட்டின் பூட்டியக் கதவைத் திறந்தவன், "இது தன்
வீடா?" என்று ஆச்சர்யம் கொண்டான்.
அது அவனைப் போன்ற பேச்சுலர்கள்
குடியிருக்கும் வீடு என்பதால் அதிகமாக சுத்தம் செய்தது இல்லை. எங்கும் தூசி எதிலும்
தூசி என்பது போல் அவர்கள் புழங்கும் சில இடங்கள், பொருள்களைத் தவிர்த்து மற்ற அனைத்திலும்
குறுமணல் படிந்து போய் கிடக்கும். இன்று அது சுத்தமாகியிருந்தது. அனைத்தும் துடைத்து
எடுத்தார் போல் சுத்தம்.
அவனின் வீடு இரண்டு
அடுக்குகளைக் கொண்ட சிறிய வீடு. முதலில் நுழைந்ததும் ஒரு ஹால் ஒரே ஒரு சோஃபாவுடனும்
ஒரே ஒரு ஷோக்கேஸ் வசதியுடனும், பக்கவாட்டில் சமையலறை வசதியுடனும் இருக்கும். அடுத்து
ஒரு படுக்கை அறை. அதில் குளியலறையும் சேர்ந்து இருக்கும். அவ்வளவு தான்.
அநாவசியமாக மட்டுமல்ல
அத்தியாவசமானப் பொருள்கள் கூட அந்த வீட்டில் கிடையாது.
டிவி பார்க்கும் பழக்கமற்றவனுக்கு
உற்றத் தோழன் அவனின் புத்தகங்களும் மடிக்கணினியும் தான். தண்ணீருக்கென பெரிய கேன் சுவரை
ஒட்டிய மேசையில் இருக்கும்.
படுக்கை அறையில் கட்டில்
வசதி கிடையாது. சிறிய மெத்தை. அவன் உபயோகிக்கும் துணிகளை அடுக்கி வைக்க சுவரோடு பதித்த
ஒரு செல்ஃப். நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கும். அது படுக்கை அறையில் மட்டுமே இருக்கும்.
அதில் இரண்டு ஆண்கள் உபயோகிக்கும் ஷேவிங் ரேசர், முகம் பார்க்கும் கண்ணாடி, தலைக்கு
தேய்க்க எண்ணெய், சீப்பு, சில க்ரீம் வகைகளும் இருந்தன.
அடுத்ததில் லேப்டாப்,
ஸ்பீக்கர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை வைத்திருந்தனர். பாத்ரூம்... வர்ணிக்க தேவையில்லை
என்று நினைக்கிறேன். அதுவும் அலங்கோலமாகத் தான் இருக்கும்.
மொத்தத்தில் திருமணமாகாத
பேச்சுலரின் வீடு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அந்த வீட்டில் அவன் தனியாக இல்லாது
வேறு பிரிவில் வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தான்.
அவன் அதிகம் உபயோகிப்பது
படுக்கை அறையை மட்டும் தான். ஹாலை மற்றவர்கள் உபயோகிப்பர்.
காலையில் பார்த்தபோது,
அவனின் நண்பர்களும் தின்று வீசிய உணவுப் பொருட்களின் கவர்கள், படிக்கவென வாங்கி வைத்திருக்கும்
புத்தங்கள், உடுத்திய உடுத்தாத துணிகள் என எல்லாம் ஆங்காங்க வீசி கிடந்தது.
இப்பொழுது அதனதன் இடத்திற்கு
இடம் மாறி பளிச்சென பல்லைக் காட்ட, இவனின் முகம் எரிச்சலைக் காட்டியது.
யார் இதற்குக் காரணமென
ஆராயவெல்லாம் இல்லை. அவனுக்குத் தெரியும். ஆதலால் ஆரவாரம் கேட்ட சமையலறைக்குள் நுழைந்தான்
தர்மா.
அங்கு தூக்கிச் சொருக்கிய
பாவாடையுடன், ஒரு கையில் அழுக்குத் தண்ணீர் கொண்ட வாளியில் துணியை முக்கி, போராடி அடுப்படியைச்
சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். மறுகையில் விளக்கமாறு வேறு இருந்தது. ஒட்டடை எடுக்க
தோதாக.
அதைக் கண்டு எரிச்சல்
அதிகமாகிட, அவளைப் பிடித்திழுத்துக் கொண்டு கூடத்தின் நடுவே வந்தான்.
"உங்கள யாருங்க
இந்த வேலை செய்யச் சொன்னா..? சும்மா இருக்க முடியாதா உங்களால? ச்சே…” என்று கோபமாக
மொழிந்தவன்,
“இதெல்லாம் நீங்க பண்ணனும்ங்கிற
அவசியம் இல்லைங்க. ஒன்னும் செய்யாம இருங்க. அதுவே போதும்." என்று விட்டு அவளின்
கரத்தை விட்டவன்,
"மனுஷனுக்கு எங்கயும்
நிம்மதிங்கிறதே இல்ல." என முணுமுணுத்துக் கொண்டே, கையில் இருந்த உறைகளை மேஜையின்
மீது வைத்தான்.
"சாப்பாடு...
சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. இதெல்லாம் பார்க்க வேண்டாம். ஆள் சொல்லிருக்கேன். சாயங்காலம்
வருவாங்க." என்று விட்டு விறுவிறுவென வெளியேறினான்.
செல்லும் அவனையே வெறித்துப்
பார்த்தபடி நின்ற ஆர்த்திக்கு எதனால் அவனின் கோபம் என்று புரியவில்லை.
'அவர் தானே கூட்டிட்டு
வந்தாரு. சும்மா இருக்கவா அழைச்சிட்டு வந்தாரு. இதுக்கு நான் ஊர்லயே இருந்திருப்பேனே.'
என மனத்திற்குள் கேட்டுக் கொண்டே, தலையை உலுக்கி விட்டு, மேஜையில் இருந்த பொட்டலங்களைப்
பார்த்தாள்.
பசி இல்லை என்று பொய்
சொல்லிவிட முடியாது. முதல் நாள் இரவு உண்டது. இப்பொழுதோ மத்தியப் பொழுது. ஆனாலும்
எடுத்து உண்ணும் மனநிலையில் இல்லை அவள். அவன் தூக்கி எறிந்து விட்டுச் சென்ற விளக்கமாற்றை
எடுத்துக் கொண்டு, விட்ட பணியைத் தொடர்ந்தாள்.
சாலையில் இருசக்கர
வாகனத்தில் ஜெட் வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான் தர்மா. அவனின் கோபத்தைச் சொல்லும்
வகையில் இருந்தது அந்தப் பயணம்.
எத்தனை வேகமாகச் சென்றாலும்
அவனையும் முந்திக் கொண்டு அவனின் நினைவுகள் வந்து அவனின் கண் முன் அமர்ந்துக் கொண்டு
அவனைச் செல்லாகாசு என்று வர்ணித்துக் கேலி செய்கிறதே... என்ன செய்ய?
'எல்லாருக்கும் நான்
எப்படித் தெரிகிறேன். கிள்ளுக்கீரையாவா? எல்லாரையும் இழந்திடக் கூடாதுன்னு நான் என்னோட
ஆசை கனவுன்னு எல்லாத்தையும் மறந்திட்டு, பார்த்து பார்த்து நடந்துக்கிட்டா இவங்க என்னையே
பலிகிடவாக்க நினைச்சி... ச்சே... என்னோட குடும்பமே இப்படி பண்ணும்னு நான் எதிர் பார்க்கல.'
என மனத்திற்குள் நினைத்துக் கொண்டு, ஆற்றாமையில் கையை முறுக்க, வேகம் எடுத்தது வாகனம்.
இன்றோடு ஆர்த்தியுடன்
திருமணம் முடிந்து ஒரு மாதமும் சில நாள்களும் ஓடி விட்டன. இந்த நாள்களில் மட்டும் அவனுக்கு
இரு வேறு வேதனை. இரண்டும் இதயத்தை கூர் வாளால் அறுக்கும் அளவிற்கு வலி தந்தது அவனுக்கு.
இப்படியெல்லாம் நடக்கும்
என்று அவன் கனவில் கூட எண்ணிப் பார்த்தது இல்லை.
ஒன்று அவனின் ஐந்தாண்டு
கால காதலி. அடுத்தது, அவனின் குடும்பம்…
முதலாவது குற்ற உணர்வென்றால்
அடுத்தது துரோகம் தந்த வலி. அதைத் துரோகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது என்று
அவனுக்கே தெரியவில்லை.
முதலில் காதலி...
அன்று அவனாக புறப்படவில்லை.
"என்னால உன்னோட குரலையும், பேச்சையும் கேட்காம இருக்க முடியல இந்தர். ஐ நீட் யூ...
என்னை அவாய்ட் பண்ணாத இந்தர். நீ இல்லன்னா என்னால வாழவே முடியாது இந்தர். ப்ளீஸ் என்னைப்
புரிஞ்சுக்கோ." எனப் பல ஆடியோ தரவுகளை அவனுக்கு அனுப்பி கிட்டத்தட்ட தற்கொலை செய்துக்
கொள்வதாக மிரட்டியிருந்தாள் தியா. அவனும் அவளைக் காதலாய் சென்று பார்த்தான்.
பஸ் ஏறியதும், தகவல்
சொன்னவனை அழைத்துச் செல்ல, அவளே கோயம்பேடு வந்து நின்றாள்.
அவன் பஸ்ஸை விட்டு
இறங்கியதும் வேகமாக கட்டிக் கொண்டவள், "இந்தர்... நீ எம்மேல வச்சிருக்குற காதல்
உண்மைன்னா எதுவும் கேட்காம எங்கூட வா." என்று இழுத்துச் சென்றாள்.
எங்கே என்றால் ரிஜிஸ்டர்
ஆஃபிஸ்க்கு.
"உங்க தங்கச்சி
கல்யாணம் முடியுற வரை என்னால பொறுத்திருக்க முடியாது இந்தர். எங்க உன்னை இழந்திடுவேனோன்னு
பயமா இருக்கு. நாம இப்பவே பண்ணிக்கலாம். நீ என்னைக் காதலிக்கிறது உண்மை தானே. இந்தா...
இதைக் கட்டு..." என்று தாலியுடன் அவள் நிற்க, அவளுக்கு அருகில் அட்சதையுடன் அவளின்
அன்னையும் நின்றிருந்தார்.
பதிவுத் திருமணம்...
அதுவும் மிரட்டி. இரவு வருவதாகச் சொன்னவனுக்குக் காலையில் திருமண ஏற்பாடு.
எங்கோ இடிக்கிறது அல்லவா?
உடனே இது சாத்தியமா
என்று அவன் யோசிக்க, அதற்கு அவகாசம் தராது, தாலியைக் கட்டச் சொன்னாள் தியா.
ஆனால், நேற்று தான்
ஊரறிய ஒருத்திக்கு அதைக் கட்டி விட்டு இப்பொழுது ரகசியமாக மற்றொரு கல்யாணமா என்று அவன்
தயங்கி நிற்க, அவள் விடாது அனத்தினாள்.
“ஏன் இந்த அவசர முடிவு
தியா. நாம பொறுத்திருந்து பண்ணலாம். நேத்து காலைலயே சொன்னேனே வெண்மாக்குக் கல்யாணம்
உறுதியாகிடுச்சின்னு. நாள் கூடக் குறிச்சாச்சி தியா.” எனக் காலத்தைக் கடக்க நினைக்க,
"எனக்கு இன்டன்ஷிப்
போட்டிருக்காங்க இந்தர். அப்ராடு போக வேண்டி இருக்கு. எனக்கு அங்க போக விருப்பமில்லை.
உன்னை விட்டுட்டு எங்கயும் போகப் பிடிக்கல. ஆனா நான் போய்த்தான் ஆகணும். எப்படியும்
ஆறு மாசம் கழிச்சி தான் திரும்பி வருவேன். அப்புறம் கல்யாணம் பண்ணிக்ககறதுக்கு பதிலா
இப்பவே பண்ணிப்போம். இந்தர் ப்ளீஸ்..." என்று கெஞ்சலோடு இருந்தவளிடம் தர்மா உறுதியாக,
தன் பெற்றோர்கள் ஆசியுடன் தான் தன் திருமணம் என்று மறுப்பை அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
காரணம், அவனின் குடும்பம்
மற்றும் ஆர்த்தியின் முகம். அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காது தனக்கென
வாழ்வது பாவமாகப் பட்டது அவனுக்கு.
அதனால் அவன் மறுக்க,
நேற்று போல் பயம் காட்டாது, கத்தியால் கையைக் கிழித்துக் கொண்டாள் தியா.
அவளைப் போராடி மருத்துவமனைக்கு
கொண்டுச் சென்றான்.
தியாவின் குடும்பம்
வளமானது இல்லை. அவளை நம்பித்தான் இருக்கிறது. அவளின் வருமானத்தை நம்பி தம்பி, தங்கை
இருக்கும் நிலையில் அவளின் பொறுப்புகள் அதிகம்.
மகளை மருத்துவமனைப்
படுக்கையில் காண்கையில் அவளின் அன்னைக்கு வேதனையாக இருந்தது.
"உன்னை எந்த அளவுக்கு
எம்பொண்ணு நேசிச்சிருந்தா... உன்னை விட்டுப் போகக் கூடாதுன்னு தற்கொலை பண்ணிக்க நினைச்சிருப்பா.
எங்க குடும்ப சூழ்நிலை உனக்கு நல்லாவே தெரியும். அவ வேலைக்குப் போனாத்தான் என்னால கொஞ்சமாச்சும்
சரிக்கட்ட முடியும். ஆனா ஆறு மாசம் உன்னைப் பிரிஞ்சி இருக்கணுமோன்னு பயந்து... கைய
அறுத்துக்கிட்டா... அவளுக்கு நீ தான் ப்பா ஒரு நல்ல வழி சொல்லணும். அவளைக் கை விட்டுடாதப்பா."
என்று அழ, தர்மாவின் நிலை தான் பரிதாமமாக இருந்தது.
அவள் தன்னை நேசிக்கும்
அளவை நினைத்து மனம் கனத்தது. குற்ற உணர்வில் அது அதிகம் துடித்தது.
தர்மா, "இன்டன்ஷிப்
எங்க போட்டிருக்காங்க?"
"துபாய்ல... ஆறு
மாசம் இல்ல அதுக்கும் மேல ஆகலாம் ... உன்னைப் பார்க்காம... எப்படி?" என அழுதவளிடம்,
'உனக்காகக் காத்திருக்கிறேன். நீ சென்று உன் படிப்பை முடித்து விட்டு வா.' என்று சமாதானம்
சொல்லி அனுப்பி வைத்தான். அவளும் தர்மாவை நம்பி புறப்பட்டுச் சென்றாள்.
ஒரு வகையில் அவனுக்கு
அது சந்தோஷமானச் செய்தி தான்.
கால அவகாசம் கிடைத்திருக்கிறதே.
ஆறு மாத பிரிவிற்கே
கையை அறுத்துக் கொண்டவளிடம் ஆர்த்திக்கும் அவனுக்கும் நடந்த திருமணத்தைப் பற்றிச்
சொல்லவில்லை. சொல்லியிருந்தால், தற்கொலை வெறும் முயற்சியாக மட்டும் இருக்காது. நடந்தேறியிருக்கும்
என்ற நினைப்பு மனத்தில் பெருங்கல்லாய் ஏறிக் கொண்டது.
மருத்துவமனையில் அருகிலேயே
இருந்து அவளைக் கவனித்துக் கொண்டான். மாணவர்கள் விசாவில் அவளை துபாய் அனுப்பி வைத்தான்.
அவளும் மகிழ்வுடன் தான் சென்றாள்.
தியாவின் படிப்பு ஆறு
மாதம், பின் வேலை, அவளின் அன்னைக்கு இருக்கும் பிரச்சனையைச் சரி செய்ய சில காலம். மொத்தத்தில்
ஓராண்டை ஓட்டி விட்டால் போதும். அதற்குள் ஆர்த்திக்குக் குழந்தை பிறந்து விடும். பின்
விவாகரத்து வாங்கிக் கொண்டு தியாவை மணந்துக் கொள்ளலாம் என்று காதலி செய்த கலவரத்தை
அடக்கி, நிசப்தத்தை நிலை நாட்டியவனுக்கு அடுத்து அடியாய் அமைந்தது, ஆர்த்தியின் வயிற்றில்
வளர்ந்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கரு கலைந்தது.
எதை அடித்தளமாக வைத்து,
அவனை மிரட்டி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தனரோ அதுவே இடிந்து போனது. கூடவே சில
உண்மைகளும் தெரிய வந்தது அவனுக்கு...
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..