அத்தியாயம்: 7
தியாவை விமானம் ஏற்றிவிட்ட
கையோடு தர்மா தன் ஊரை நோக்கி பயணம் செய்தான். அவனின் மனத்தில் சுமையை ஏற்றி விட்டு
விட்டு அவள் சுகமாய் வெளிநாடு சென்று விட்டாள்.
மருத்துவமனையில் இருந்த
நாள்கள் முழுவதும், ஏன் அவளை வெளிநாடு அனுப்பி வைக்கும் நாள்கள் வரையிலும் அவளின் பேச்சு
மொத்தமும் கல்யாணத்தைப் பற்றியும் அதன் பின் அவர்கள் வாழப் போகும் வாழ்க்கைப் பற்றியும்
மட்டுமே இருந்தது.
கல்யாணம் பற்றிப் பேசியது
பிரச்சனை இல்லை. ஏனெனில் கல்யாணம் செய்துக் கொள்ளும் எண்ணமில்லாது அவள் காதலைச் சொல்லியதும்
ஏற்றிருக்க மாட்டான். காதலின் உச்ச நிலை திருமணம் என்றும், மகுடம் என்பது அதன் பின்
வாழும் இன்பமான வாழ்க்கையும், அமையவிருக்கும் குடும்பமும் தான் என்று எண்ணுபவன் அவன்.
ஆதலால் அவளின் கல்யாணம் என்ற பேச்சு இனிக்கத்தான் செய்தது.
ஆனால், தியாவின் எதிர்பார்ப்பு
மொத்தமாக தர்மாவை அந்தக் குடும்பத்தில் இருந்து வேரோடு பிடுங்குவது போல் இருந்தது தான்
பிடிக்கவில்லை.
தர்மா, அம்மா, அப்பா,
தங்கை, அண்ணன் என்று எப்பொழுதெல்லாம் பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அப்பட்டமாக முகத்தைச்
சுண்டி, “வேற எதாவது பேசேன் இந்தர்.” என்பவள் அவர்கள் இருவரைப் பற்றி மட்டுமே பேசுவாள்.
ஆனால், தர்மாவைப் பொறுத்தவரை
அவனின் அச்சு, அவன் குடும்பம் தான். அவர்களை மையமாக வைத்தே தன் வாழ்க்கையைச் சுழல விட்டுக்
கொண்டிருப்பவன்.
மாதம் தன் சம்பாத்தியத்தில்
பாதிக்கும் மேல் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். கடன் அடைக்கவும், வெள்ளாமை பொய்க்கும்
போது உதவும் என்றும், குழலிக்கு நகை சேர்க்க என்றும் பல காரணங்களைச் சொல்லி அனுப்பி
வைப்பான். அவர்களுக்கு அது பயன்படுமோ இல்லையோ. அனுப்பி வைப்பதில் அவனுக்கு ஒரு திருப்தி
கிடைக்கும். படிக்கும் காலத்தில் கூடப் பகுதி நேர வேலைக்குச் செல்வான். இரு நாள் விடுப்பு
கிடைத்தால் போதும் உடனே ஊருக்கு பொதியைத் தூக்கிக் கொண்டு சென்று விடுவான்.
அதெல்லாம் தியாவை உள்ளுக்குள்
பொருமிக் கொண்டே இருக்க வைத்தது. ஆனாலும் அவளுக்கு தன் அழகின் மீது நம்பிக்கை உண்டு.
தர்மாவின் மீது அதீத காதலும் உண்டு.
அவனின் இயல்பான குணம்,
அக்கறை மிகுந்த பேச்சு, படிப்பு எல்லாம் அவன் பால் விழ வைத்தது அவளை.
ஆதலால் தான் அவனைத்
தனக்கு மட்டுமே உடைமைப் பட்டவனாக மாற்ற நினைத்தாள்.
“உங்கண்ணி கல்யாணமும்
உன் தங்கச்சி கல்யாணமும் முடிஞ்ச உடனேயே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு துபாய்லயே செட்டிலாகிடுவோம்
இந்தர். உன்னோட படிப்புக்கும் அனுபவத்துக்கும் அங்க இதை விட நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கும்.
எனக்கும் கிடைக்கும். ரெண்டு பேரோட சம்பளமும் சேர்ந்தா நாம சுகமா வாழலாம்.” என்றவளின்
பேச்சின் போக்குப் புரியாமல் இல்லை. இது சராசரி பெண்ணிற்கு இருக்கும் ஆசை தான்.
ஆனால்…
“துபாய்க்கா… நானா…
உன்னோட படிப்பு விஷயமாத்தானே நீ அங்க போற.” என்றவனுக்கு தன் குடும்பத்தை விட்டு விட்டு
துபாய் செல்வதில் பிரியமில்லை.
“ஆமா இந்தர். ஆறு
மாசம் படிப்புக்குத் தான் போறேன். அதுக்காக அங்க ஜாப் கிடைச்சா வேண்டாம்னு எப்படி சொல்ல
முடியும்?”
“நம்ம ஃபேமிலி இங்க
இருக்கு தியா!”
“ம்ச்… அவங்களுக்கு
மாசா மாசம் சம்பளத்தை மட்டும் அனுப்பி விட்டுட்டு நிம்மதியா வாழலாம்”
“பணத்தை மட்டும் அனுப்பி
வச்சா போதுமா தியா?” என்றவனை நெருங்கி,
“ம்… போதும் இந்தர்.
அதான் உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சிடுமே. அண்ணனா உன்னோட கடமையும் முடிஞ்சிடும். அப்புறம்
குழந்தை, காது குத்துன்னு விஷேசத்துக்கு வந்தா போதும். என்னோட வீட்டு சைடுலயும் அப்படித்தான்.
ஃபங்ஷனுக்கு வந்திட்டு போவோம். அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி, சொந்தக்காரனுங்க, வயலு
மாடுன்னு எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாம. நீ, நான், நாம… போதும் இந்தர். இந்தியாக்கு
முடிவு கட்டிட்டு போய்டுவோம்.” என்று மார்பில் தலை சாய்த்துக் கொண்டு சலுகையாய்க்
கொஞ்சியவளிடம் தன் மறுப்பை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
அவனுக்கு தியாவின்
மீது காதல் தான். ஆனாலும் தன் குடும்பத்தை விட்டு… முழுதாக எப்படிச் செல்வது? என்ற
யோசனையில் இருந்தவனை வேலையை விடச் சொல்லி நச்சரித்தாள்.
“என்னை லவ் பண்ற தானே
இந்தர்… எனக்காகச் செய்ய மாட்டியா?” என்று குழையும் குரலில் மிரட்டத் தொடங்கினாள்.
அவளுக்கு சரி என்கவில்லை
என்றால் மீண்டும் கையை அறுத்துக் கொள்வாளோ என்ற பயம் தோன்ற, அவளைச் சமாதானம் செய்யும்
விதமாக சம்மதித்தான்.
அது அவனுக்கு உறுத்தலாக
இருந்தது. உறுத்தல் அதில் மட்டுமல்ல ஆர்த்தி விடயத்தைச் சொல்லாததிலும் இருந்தது.
எப்படி இதைக் கையாள்வது
என்ற சிந்தனையிலேயே ஊர் வந்து சேர்ந்தான்.
மாலையில் மலைகளின்
மடியில் துகில் கொள்ளச் சென்ற பகலவனால் வெளிச்சம் மங்கி இருட்டியிருந்தது.
அந்த நேரத்தில், முன்
அறிவிப்பு ஏதுமின்றி வீட்டு வாசலில் வந்து நின்ற தர்மாவை நெல்லையப்பன் எதிர்பார்க்கவில்லை
போலும்.
திருதிருவென முழித்தபடி
அவனிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாது, அவனைப் பார்த்துக் கொண்டே அவர் நிற்க,
"ஏம்பா இன்னேரம் வாசல்ல உட்கார்ந்திருக்கீங்க?" என்றபடி அவரைக் கடந்து உள்ளே
சென்றவன், வீடு வெறுமையாய் இருக்கவும்,
"அம்மா, வெண்மா
இல்லையா?" என்றான்.
அவனுக்குப் பின்னாலேயே
வந்தவர், "அவங்க டவுனு ஹாஸ்பிடல் போயிருக்காங்கப்பா."
"ஹாஸ்பிட்டலுக்கா?"
என்று வினவி அவரைத் திண்டாட வைக்க, நல்ல வேளையாக வந்து நின்ற தானி அவரைக் காப்பாற்றியது.
ஆட்டோவில் இருந்து
ஆர்த்தியும், அமுதாவும், உடன் அவளின் சித்தியும் இறங்க, அவன் என்னானது என்ற கேள்விகளுடன்
எதிர்கெண்டான் அவர்களை.
"அவங்கள ஹாஸ்பிட்டல்
கூட்டிட்டு போனீங்களா?" என்று பதற, அமுதா ஒருகணம் தடுமாறி நின்றார்.
ஆர்த்தி எதையும் கண்டு
கொள்ளாது தன் அறையை நோக்கி நடக்க முயன்றாள். அவளைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த அமுதாவும்
மங்கையும் மெத்தையில் படுக்க வைக்க, சுருண்டு படுத்தவளைப் பார்த்தவளைப் பார்த்து மனம்
நைந்து போனது தர்மாவிற்கு.
அவனின் முகம் பார்த்த
அமுதா சற்று தயங்கியபடியே, "குழந்தை... கலைஞ்சிடுச்சுப்பா..." என்றார் மெல்லிய
குரலில்.
"என்ன???"
என்றான் தன் காதுகளையே நம்பாது.
"வயித்துல வளர்ந்த
குழந்தை வளர்ச்சி சரியா இல்லாததுனால கலைஞ்சி போயிடுச்சிப்பா. அது முழுசா கலைஞ்சிடுச்சான்னு
தெரிஞ்சுக்க ஸ்கேன் பார்க்கச் சொன்னாங்க. அதான் டவுனுக்குள்ள பார்த்திட்டு வர்றோம்."
என்றவர் தர்மாவின் கண்களைப் பார்த்துப் பேசாததும், அவனைப் பார்த்த நொடியில் உண்டான
திகைப்பும் அவர் எதையோ மறைக்கிறார் என்றது.
கரு கலைந்து நாள்கள்
கடந்து விட்டன. முற்றிலும் அது வெளியேறி விட்டதா என்ற பரிசோதனைக்குத் தான் சென்று வந்துள்ளனர்.
அதை அவனிடம் சொல்லாமல்
மறைத்தும் இருக்கின்றனர் என்று புரிந்தது.
தர்மாவால் இதை எப்படி
ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. 'அண்ணனின் குழந்தை. தங்கள் வாரிசு அது. அதைக் காப்பாற்ற
வேண்டும் என்று தானே கல்யாணம் செய்து வைத்தனர். ஒரே மாதத்தில் அது கலைந்து விட்டது...
இதற்கு எதற்கு இந்த அவசரத் திருமணம்? என் காதலைப் புதைத்து, விருப்பமில்லாமல் ஒரு பெண்ணின்,
அண்ணனின் மனைவியின் கழுத்தில் தாலி கட்டி... கணவன் இறந்த வடு காயும் முன்னே... ச்சே...'
என்று கோவம் துளிர்விட, தலையை அழுத்திக் கோதியபடி பின் கட்டிற்குச் சென்றான் தர்மா.
இதயம் வேகமாகத் துடித்தது.
இந்த இடத்தில் தானே அன்று பஞ்சாயத்து பேசியது ஒரு கூட்டம். என்னென்னமோ பேசினரே... எப்படி
எப்படிப் பேசி தன்னைக் கட்டம் கட்டி கல்யாணம் என்ற வலைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளி
விட்டனர். அதை நினைத்து நினைத்து ஆத்திரம் பொங்கியது. அதற்கு தன் தாயும் தந்தையும்
உடந்தையோ என்ற நினைப்பு, பொங்கிய ஆத்திரத்திற்கு ஆற்றலூட்டுவது போல் இருந்தது. அதை
வீறிட்டு வெடிக்கச் செய்யும் வகையில் கேட்டது தங்கையின் பேச்சுக்குரல்.
குழலி மட்டுமல்ல, கூடவே
ஆணின் குரலும் கேட்டது. இடிந்து போய் நின்றான் தர்மேந்திரன்.
"ஸ்கேன் பார்த்திட்டாங்களாம்.
எதுவும் பிரச்சனை இல்லன்னு அம்மா சொன்னாங்க. அடுத்த வாரம் அண்ணியோட உடம்பு கொஞ்சம்
தேறிடும். வெள்ளிக்கிழமை அண்ணா குவார்ட்ஸ்க்குக் கூட்டிட்டு போய் அண்ணாகிட்ட அண்ணிய
ஒப்படைச்சிடலாம்னு அப்பா சொன்னாங்க." என்றாள் குழலி சந்தோஷமாக.
"எனக்கு என்னமோ
உங்கண்ணன் குட்டிம்மாவை ஏத்துப்பான்னு தோனவே இல்ல. அவனோட படிப்பு என்ன? வேலை என்ன?
கல்யாணத்தைப் பத்தி ஏகப்பட்ட கனவு வச்சிருப்பான்ல. அதெல்லாத்தையும் விட்டுட்டு குட்டிம்மாவை
மனைவியா… ஏத்துப்பானா?" என்று கர்ணன் வருத்தப்படும் போதே,
"ம்ச்... அதெல்லாம்
அண்ணா ஏத்துப்பான். இப்ப அண்ணி அவருக்குப் பொண்டாட்டி. பெரியண்ணா மாதிரிக் கிடையாது
சின்னண்ணன். அது எல்லாத்தையும் யோசிச்சு தான் பண்ணும். கோபப்படவே தெரியாது அதுக்கு."
"யாருக்கு? அவனுக்கா?
அன்னைக்கு அவனோட மூஞ்சிய நீ பார்க்கல. அதான் இப்படி பேசுற."
"பின்ன குழந்தையக்
கலைக்கப் போறேன்னு சொன்னா கோபம் வரத்தான் செய்யும். கூடவே எந்தங்கச்சி வாழாத வீட்டுல
பொண்ணு எடுக்க விருப்பமில்லன்னு சொன்னா என்ன பண்றதாம்." என்று முகத்தைத் திருப்ப,
"ஏய்... நீ சொல்லிக்
கொடுத்து தானே டி நான் அப்படியே பேசினேன். எதோ நானா பேசுன மாதிரி திருப்புற."
என அதிர்ந்து போய் கர்ணன் வாயில் கை வைக்க,
"நம்ம கல்யாணத்தைப்
பத்தி மட்டும் தான் பேசி மிரட்டச் சொன்னேன். குழந்தையப் பத்தி பேசுனது யாராம்?"
"அது... அப்படிப்
பேசினாத்தான் சென்டிமென்ட்டா இருக்கும்னு உங்கப்பா சொன்னாரு. உங்கண்ணனை மடக்க அதைத்
தவிர வேற வழி எனக்குத் தெரியல."
"அது தானா கலைஞ்சி
போய்டும்னு உங்களுக்குத் தெரியாதாக்கும். ஒரு சில வாரங்கள் கூடத் தங்காது குழந்தைன்னு
டாக்டர் சொல்லும் போது நீங்களும் கூட இருந்தீங்க தானே. அப்புறம் ஏன் அதை வச்சி விளையாடினீங்க."
என நொடித்துக் கொண்டவள்,
"அம்மா மட்டும்
தர்மா அண்ணன் கூட அண்ணிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஐடியா கொடுக்கலன்னா இன்னேரம்
அண்ணிய உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருப்பீங்கல்ல." என வருந்தி சொல்ல,
அதைக் கேட்டுக் கொண்டு நின்ற தர்மாவிற்குத் தாயின் திகைப்பும், தந்தையின் கவலையும்
நினைவு வர, அவர்களும் இதற்கு உடந்தை தான் என்ற உண்மையைச் சொல்லியது அவனின் மனம்.
"நாங்கூட உன்னை
ரொம்ப சின்னப் பொண்ணுன்னு நினைச்சேன் வெண்மா. ஆனா அப்படி இல்லன்னு நீ போட்டுக் கொடுத்த
திட்டமே நிரூபிச்சிடுச்சி. சபாஷ்…" என்று தர்மா கைத் தட்ட,
குரல் வந்த திசையைப்
பார்த்துத் திரும்பிய இருவரையும் கோபத்துடன் நெருங்கிச் சென்றான் தர்மா.
"அம்மா நீ அப்பான்னு
எல்லாரும் திட்டம் போட்டுத் தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வைச்சிருக்கீங்க. யாருமே
என்னைப் பத்தி யோசிக்கல இல்ல… உன் வாழ்க்கை, அண்ணன் குழந்தைன்னு என்னை மிரட்டி… எல்லாரும்
சேர்ந்து எனக்குத் துரோகம் பண்ணீட்டீங்கல்ல." எனக் குழலியிடம் கத்த,
"மச்சான் அவளுக்கு
எதுவும் தெரியாது..." என வருங்கால மனைவிக்காக வக்காலத்து வாங்கியவனின் சட்டையைக்
கொத்தாகப் பிடித்தவன்,
"வாய மூடு டா...
எந்தங்கச்சியையும், குழந்தையையும் வச்சி ரொம்ப சீப்பா ப்ளே பண்ண உன்னை..." என்று
சொல்லி அடிக்க, குழலி ஓடிச் சென்று நெல்லையப்பனையும் அமுதாவையும் அழைத்து வந்தாள்.
சட்டையைப் பிடித்து
முறுக்கிக் கொண்டு நின்றவனைப் பிரித்து இழுத்த நெல்லையப்பனையும் அமுதாவையும் கண்டபடி
பேசினான் தர்மா.
அதிலும் அமுதாவிடம்,
"உங்க பையனா இருந்தா இந்த மாதிரி ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா? நான்
வேற வயித்துல பிறந்ததுனால தானே இப்படி ரெண்டாம் தாரமா... அதுவும் அண்ணன் பொண்டாட்டிய...
ச்சீ..." என்று கத்தியவன், வேகமாக தன் அறைக்குச் சென்றான்.
தன் உடமைகளைப் பெட்டிக்குள்
திணித்தவன், தூக்கிக் கொண்டு வெளியேற, குழலியும் கெஞ்சியபடியே அவனுடன் நின்றாள்.
"உன்னை ஏமாத்தி
கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கலண்ணா... நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட… பாவம்ண்ணா அண்ணி...
போகாதண்ணா." என்றவளின் கெஞ்சல், ஆர்த்தியின் அறையைக் கடக்கும் போது உறுத்தியது.
ஓட்டிற்குள் சுருண்டு
கிடக்கும் நத்தை போல், வட்ட வடிவில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தவளைக்
கடந்துச் செல்ல மனம் வரவில்லை.
அதே நேரம் மனைவியாக
ஏற்க தயாராக இல்லை.
இமைகளை மூடித் திறந்தவன்,
ஆர்த்தியின் அறைக்கதவைத் தட்டி அவளின் தலையை உயர்த்தச் செய்தான்.
"அரை மணி நேரத்துக்குள்ள
உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு தயாரா இருங்க." என்று
உத்தரவு போட்டு விட்டு திரும்ப,
'எதற்கு?' என்ற கேள்வியுடன்
அனைவரும் நின்றனர்.
"அவங்கள நான்
எங்கூடக் கூட்டிட்டு போறேன். யாரும் அங்க தேடி வந்திடாதீங்க." என்று விட்டு நடந்தவன்,
"உங்களை ஒட்டு
மொத்தமா உறவே வேண்டாம்னு முறிச்சிக்கிட்டு போகத்தான் நினைக்கிறேன். ஆனா முடியாதுன்னு
எனக்கே தெரியும். இங்க தான் வருவேன். மனசு மாறுற வர தள்ளி இருக்குறது தான் நல்லது.
ப்ளீஸ் நானா உங்கள தேடி வர்ற வரைக்கும் தொந்தரவு பண்ணாதீங்க." என்று விட்டுச்
செல்ல, அனைவரின் மனமும் நிறைந்திருந்தது.
ஆர்த்தியின் கரம் பற்றி
அவன் அழைத்துச் சென்றது அவர்களுக்கு நிம்மதியைத் தந்தது.
ஏற்றுக் கொண்ட பொறுப்பை
எக்காரணம் கொண்டும் தட்டிக் கழிக்காதவன் தன் மகன் என்று நெல்லையப்பன் கர்வத்துடன் மகனைப்
பார்த்தபடி நின்றார்.
"அவளுக்கு உடம்புக்கு
சரியில்ல ப்பா. ரெண்டு நாள்ல நாங்களே..." என்ற மங்கையிடம் அவன் பேசத் தயாராக இல்லை
என்பது போல் முறைத்துப் பார்த்து விட்டு, வெளியேறியவன் ஒரு வாடகை மகிழூந்தைப் பிடித்துக்
கொண்டு வந்தான்.
சென்னைக்கு ஆர்த்தியுடன்
அந்த காரில் வந்து சேர்ந்தான் தர்மா…
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..