அத்தியாயம்: 8
தர்மேந்திரன், பழைய
நினைவுகளைக் கழுவி விட்டு வீடு வந்து சேரும் போது, நள்ளிரவை நெருங்கி இருந்தது.
சுவரில் பதிக்கப்பட்டிருந்த
ஸ்விட்ச் போர்டைத் தட்டி, மின் விளக்கிற்கு உயிர் கொடுத்தவன், அழகாய் மாறியிருந்த தன்
வீட்டை ஒரு சில நொடிகள் நின்று ரசித்தான்.
பின் காலணிகளை வெளியே
வீசி விட்டு, உள்ளே செல்ல, கூடத்தின் மூலையில் வழமை போல் சுருண்டு கிடந்தாள் ஆர்த்தி.
கலைத்திருப்பாளோ! என்ற
எண்ணம் தோன்ற…
“எதுக்கு இந்த வேலையெல்லாம்
பார்க்கணும்.” என நொந்துக் கொண்டவனுக்கு, உடல் அயர்வின் காரணமாக உறங்கிக் கொண்டிருந்தவள்
மழலையாய்த் தெரிந்தாள்.
ஏற்கனவே அவளுக்குக்
கன்னம் உப்பித் தான் இருக்கும். இப்பொழுது தலையணை இல்லாததால் முழங்கையை மடக்கி தலையணையாக்கி
மற்றொரு கையை கன்னத்திற்கு அடியில் வைத்திருந்ததன் காரணமாகத் தூக்கிக் கொண்டிருந்ததைப்
பார்க்க பார்க்க மனம் லேசானதைப் போல் இருந்தது.
இதழோரம் மெல்லிய கோடாய்
எச்சில் வேறு வடிந்துக் கொண்டிருந்தது ஆர்த்திக்கு.
சின்னச் சிரிப்பு உண்டாக,
நீட்டாக இருந்த அறை ஆர்த்தியை அழைத்து வந்த கதையையும், அவள் நைட்டிக்கு மேல் மார்புக்கு
மத்தியில் கிடந்த பொன் தாலி, அதை அணிவித்த சூழலையும் நினைவிற்குக் கொண்டு வர, ஆத்திரம்
வந்தது.
‘உன்னை ஏமாற்றி விட்டார்கள்.’
என்று மனம் கூக்குரலிட, தன் குடும்பத்தாரின் மீது அதீத கோபம் தான் வந்தது.
ஆனால், அவளிடம் மட்டும்
கோபம் கொள்ள முடியாது தவித்தான் தர்மா.
அதனிடம் பல முறை கேட்டு
விட்டான். ஏன் அவளைப் பார்க்கும் போது மட்டும் கனிந்து போகிறாய்? கடுமை, எரிச்சல்,
கோபம் அனைத்தையும் பறக்கவிடுகிறாயே. ஏன்? என்று.
பதிலாக, அவளின் குழந்தை
முகம் தான் கிடைத்தது அவனுக்கு. மருண்ட பார்வையால் அவள் அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளையும்
பஸ்பமாக்கிக் கொண்டிருக்கிறாள் என்றது அது.
இப்பொழுது மட்டுமல்ல
அவனின் அண்ணனுக்கு மனைவியாக இருந்த போதும் கூட அவளிடம் கோபத்தைக் காட்ட முடிந்ததில்லை
அவனால்.
அது தியா அவனுக்காக
ஆசையுடன் வாங்கித் தந்த சட்டை.
"ப்ராண்டடு ஷர்ட்
இந்தர். உனக்காக வாங்கினேன். என்னோட பாக்கெட் மணில. உன்னோட பிறந்த நாள் பரிசு. நீ தான்
இதுவரைக்கும் எனக்கு எதுவுமே வாங்கித் தந்தது இல்ல. நானே உனக்காக இதை வாங்கினேன். நம்ம
காதலோட முதல் பரிசு என்னோடது தான்." என்று காதலைச் சொல்லிய சில நாள்களிலேயே, அவனின்
தோளில் லேசாக சாய்ந்துக் கொண்டு கொடுத்த விலையுயர்ந்த பிறந்த நாள் பரிசு அது.
அதை ஐயன் செய்கிறேன்
என்று ஓட்டை போட்டு விட்டிருந்தாள் ஆர்த்தி.
"ஏய்... அறிவில்லை
உனக்கு! இப்படியா பண்ணுவ? பைத்தியம் மாதிரி பண்ணி வச்சிருக்க. செய்யத் தெரியலன்னா தெரிஞ்ச
யார்க்கிட்டயாது கேட்கணும். அதை விட்டுட்டு அரவேக்காட்டுத்தனமா… உன்னை யாரு செய்யச்
சொன்னது?" எனக் கடுமையாகத் திட்டியது மகேந்திரன் தான்.
மகேந்திரனின் குணம்
நம் நாட்டின் சராசரி குடிமகன்களுக்கு இருக்கும் குணம் தான். அதாவது பொண்டாட்டி என்பவள்
தனக்குச் சேவை செய்யவே கட்டி வைக்கப்படுபவள், அவளுக்கு எதுவும் தெரியாது, மஞ்சத்தில்
தலையணை மெத்தை போல் தன்னைத் தாங்குபவள் என்று எண்ணும் ஆதிக்கவர்க்க மனப்பான்மை கொண்டவன்.
மகேந்திரன் வீட்டில்
இருந்தால் ஆர்த்தி, அவனின் நிழலாக மாறியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். இல்லை
என்றால் இடம் பார்க்காது திட்டுக்கள் விழும். அவனுடன் திருமணம் முடிந்த நாள்களில் அவள்
அழுகாத நாள்களையும், அவன் திட்டாத நாள்களையும் ஒரு கரத்திற்குள் எண்ணி விடலாம்.
அப்பொழுதும் கண்களில்
நீர் கட்ட, தலை குனிந்து விசும்பியபடி நின்றவளுக்குச் சமாதானம் சொன்னதே தர்மா தான்.
அவன் காதலியின் முதல்
பரிசு என்று பத்திரப்படுத்தியதை ஓட்டை போட்டு விட்டாள் என்று அவனுக்குள் எழுந்த கோபம்
மொத்தமும் அவளின் முகம் பார்த்ததும் விழுந்து விட்டது. உண்டாகும் ஆத்திரங்கள் கூட வரவே
மாட்டேன் என்று ஓடி ஒழிந்துக் கொண்டது.
அவளின் அண்ணன், தந்தை,
தன் தாய் தந்தை என அவன் ஆத்திரம் கொள்ள வரிசைக் கட்டி ஆள்கள் இருந்த போதும், அனைத்திற்கும்
தலையைத் தலையை ஆட்டி, மூலக் காரணமாக இருக்கும் அவள் மீது மட்டும் அது வர மாட்டேன்
என்கிறதே.
தலையை உலுக்கியபடி
படுக்கை அறைக்குள் சென்றவன், உடையை மாற்றிக் கொண்டு ஹாலிற்கு வந்தான்.
'சாப்பிட்டாங்களான்னு
தெரியலையே?' என நினைத்தவன் மேசையைப் பார்க்க, அவன் வைத்துவிட்டுச் சென்ற உறை பிரித்துக்
கூடப் பார்க்கப்படாது அப்படியே கிடந்தது.
'அப்ப மதியமும் சாப்பிடலையா!
இப்படியே இருந்தா உடம்பு என்னாகும்? காலைலயும் சரியா சாப்பிடல. சரி ட்ராவல், அவங்களோட
மனநிலைன்னு ஒன்னும் சொல்லல. ஏற்கனவே அபார்ஷன் கண்ட உடம்பு. கொஞ்சமாச்சும் சத்தாச் சாப்பிட்டாத்தானே
தெம்பா இருக்க முடியும்.' என நினைத்தவன், வாங்கி வந்த பொதிகளைத் தரையில் கிடத்தி, இரு
தட்டு, டம்ளர்களில் தண்ணீர் என உணவு உண்ண அனைத்தையும் தரையில் எடுத்து வைத்தான்.
அருகில் சென்று அவளைத்
தட்டி எழுப்ப வந்தவன், அவளைத் தொட மனமில்லாது, கதவை ஓங்கி தட்ட, அதன் சத்தத்தில் பதறி
அடித்து எழுந்தாள் ஆர்த்தி.
"ஒன்னுமில்லைங்க...
ஒன்னுமில்ல... சும்மா... உங்கள எழுப்பிவிட தட்டிட்டேன். சாரி... பயந்திட்டீங்களா? வெரி
சாரி..." என்க, அவளின் மார்பு வேகமாக ஏறி இறங்கி அவளின் அச்சத்தின் அளவைக் காட்டியது.
"சாரிங்க... சாப்பிட்டீங்களா?"
என்றவனுக்கு இல்லை என்பது போல் தலையசைக்க, மெல்லிய கோபம் எழுந்தது.
"ஏங்க இப்படி
பண்றீங்க? நான் தான் சாப்பிடுங்கன்னு வாங்கிட்டு வந்து கொடுத்தேனே. ஏன் சாப்பிடல?"
என்றவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவள். பள்ளிக்கூடச் சிறுமி போல் நைட்டியைக்
கசக்கியபடி, தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றாள்.
"எனக்குப் பசிக்கிது.
வாங்க." என்று விட்டுப் பொட்டலங்களைப் பிரித்து இட்லியைத் தட்டிற்கு மாற்றினான்.
அவள் தயங்கியபடியே
நிற்க, "வாங்க..." என்று சற்று அழுத்தமாகக் கூறினான். அவனின் எதிரில் வந்து
அமர்ந்தவளிடம்,
"ம்... சாப்பிடுங்க."
என்று விட்டு வேகவேகமாக அவன் உண்டு முடித்தான்.
அவனுக்கும் அதீத பசி
போலும்.
தட்டைப் பார்த்தபடி
அவள் இருக்க, அவனோ, கபளீகரம் செய்வதில் குறியாய் இருக்க, பேச்சே இல்லை இருவருக்குள்ளும்.
அவள் இரண்டு இட்லியைப்
பிட்டு உண்டு முடிக்கும் வரை அவன் எழுந்துச் செல்லவே இல்லை.
‘நீ சாப்பிடாமல் நான்
எழுந்துச் செல்ல மாட்டேன்.’ என்பது போல் அவளின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவள் முடித்தப் பின் தட்டில் கரத்தைக் கழுவி விட்டு, நிலை வாசலை மூடி விட்டு, எதுவும்
சொல்லாது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
இவனை எந்த வகையில்
சேர்ப்பது என்று தெரியவில்லை ஆர்த்திக்கு.
பாசமாய் உணவு வாங்கி
வந்து, உண்டு முடித்த பின் எழுந்துச் சென்றதை அக்கறை என்று எடுத்துக் கொள்வதா! அல்லது
அவளின் உடல் நலத்திற்கு பங்கம் வந்து விட்டால் அவனை யாரும் குறை சொல்வார்கள் என்று
கடமையாய் செய்கிறானா!
எதுவும் புரியவில்லை
ஆர்த்திக்கு...
எழுந்து, இடத்தைச்
சுத்தப்படுத்தியவள், உறக்கம் தொலைத்துச் சுவரில் சாய்ந்தபடி தான் கொண்டு வந்த பெட்டியிலேயே
தலை சாய்த்தாள்.
தர்மாவுடன் காரில்
ஏறும் முன் அவளின் அமுதாம்மா கூறியது நினைவிற்கு வந்தது.
"மகேந்திரன் செத்துப்
போய்ட்டான். இப்ப உசுரோட இல்ல. செத்தவங்க எல்லாரும் சாமிக்கு சமம். அவங்கள கையெடுத்துக்
குடும்பிடணுமே தவிர, அவங்களையே நினைச்சிட்டு இருக்க கூடாது. கடந்து போனதை மறந்திட்டு
புதுசா உனக்குன்னு அமைஞ்சிருக்குற வாழ்க்கைய வாழு.” என்றார்.
அவளின் சித்தியோ,
“ஏற்கனவே ஒருத்தனை தூக்கி கொடுத்திடுச்சி உன் ராசி. இவனையும் சாவடிச்சிடாத. அந்தத்
தம்பி மனசு கோணாம நடந்துக்க.
முரண்டு கிரண்டு பிடிச்சி
வீட்டுக்கு வாழா வெட்டியா வந்திடாத. இனியும் உன்னைய தூக்கிச் சுமக்க மச்சானுக்கு வயசு
இல்லடி ஆத்தா. நீ சந்தோஷமா இருக்குறதை பார்த்திட்டு தான் உங்கண்ணனும் கல்யாணம் பண்ணிப்பேன்னு
இருக்கான். எங்க மச்சான் குடும்பம் தழைக்கணும். அதுக்கு நீ என்ன ஆனாலும் அந்தத் தம்பி
கூடத் தான் இருக்கணும்." என்று பல அறிவுரைகளைக் கூறித் தான் அனுப்பி வைத்தார்கள்.
வழக்கம் போல் அவளுக்கு
யாரோ தேர்ந்தெடுத்து வைக்க, அதற்கு தலையசைத்து வந்துள்ளாள் ஆர்த்தி.
'அவரு மனசு கோணாம எப்படி
நடந்துக்கிறது.? அவரு சொல்றதை எல்லாம் செய்யணுமா? ஏதாவது சொன்னாத்தானே செய்ய முடியும்.
எதுவும் சொல்லாம கதவடைச்சிக்கிட்டா... என்ன பண்ணறது இப்ப?' என விடியும் வரை யோசித்தவள்,
உறங்கியும் போனாள்.
காலையில் ஆறு மணிக்கே
உறக்கம் ஓடி விட, எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.
தனியாக ஆண்மகன்கள்
மட்டுமே இருந்த வீட்டில் சமையலுக்கென என்ன இருந்துவிடப் போகிறது.
எதுவும் இல்லை. ஒரு
மின்சார அடுப்பு, பால் காய்ச்ச பாத்திரம், துரித உணவு செய்ய இரும்பு கடாய். சில பாக்கெட்
உணவுப் பொருள்கள் இருந்தது தான். அவை அனைத்தும் காலாவதியாகி, வண்டுக்கும் புழுவிற்கும்
புகழிடம் கொடுத்ததால் தூக்கித் தூர எறிந்து விட்டாள் நேற்றே.
ஒரே ஒரு மினரல் வாட்டர்
கேன் இருந்தது. அது நிறைய தண்ணீர். எவ்வளவு வேண்டுமானால் அருந்தலாம்...
ஆனால்...
முடியாதே...
பாத்ரூம் படுக்கை அறைக்குள்
அல்லவா இருக்கிறது.
காலைக் கடன்களை முடிக்க
வேண்டி, தர்மாவின் அறைக் கதவைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
எத்தனை மணி நேரம் நின்றாளோ...
தெரியாது.
தட்டும் எண்ணம் வரும்
போதெல்லாம் அவளின் சித்தியின் குரல் தான் முன் கேட்டது.
"உன்னோட பைத்தியக்காரத்தனத்தால
அந்தத் தம்பிகிட்டத்தான் திட்டு வாங்கிட்டே இருந்த. இந்தத் தம்பிகிட்டயும் அப்படி நடந்துக்காத.
படிச்ச பிள்ளை அது. பக்குவமா நடந்துக்க." என்றிருந்தார்.
"ம்ச்... இப்ப
கதவைத் தட்டுனா பெரிய மாமா மாதிரியே இவரும் திட்டுவாரா... ஐய்யோ... அவசரமே." என
அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட, அவளை வெகு நேரம் சோதிக்காது
கதவைத் திறந்தான் தர்மா.
அவனைக் கண்டதும் வேகமாகத்
தள்ளி விட்டு விட்டு கழிவறைக்குள் புகுந்தவளைக் கண்டு சங்கடமாகிப் போனது தர்மாவிற்கு.
அவள் வெளியே வந்ததும்,
"சாரிங்க... நான் இதையெல்லாம் யோசிக்கல. எங்கூட ரெண்டு பசங்க தங்கிருந்தாங்க.
வழக்கமா அவங்க ஹால்ல தான் படுப்பானுங்க. நான் ரூம்ல… அந்தப் பழக்கத்துல கதவைப் பூட்டிட்டேன்…”
எனத் தலையில் தட்டிக் கொண்டவன்,
“இனி கவனமா இருக்கேன்ங்க.
சாரி." என்று விட்டு விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான்.
மூவர் ஒரே அறையில்
தங்கிய போதும் மற்ற இருவருடன் தர்மாவிற்கு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. வாடகை குறையும்
என்ற காரணத்தால் அனுமதித்தான். தியாவின் ஏற்பாடு தான் அது.
இரவானால் மதுக் கோப்பையுடன்
நடு வீட்டில் அமர்ந்து விடும் அவர்களின் பழக்கம் பிடிக்காது. ரூமிற்குள் சென்று கதவடைத்துக்
கொள்வான்.
ஆர்த்தியை அழைத்து
வருவதால் அவர்களை உடனடியாக வீட்டைக் காலி செய்யச் சொல்லியிருந்தான். அவர்களும் மனைவி
என்றதால் சென்று விட்டனர்.
வெளியே சென்றவன், திரும்பி
வர எடுத்துக் கொண்ட நேரத்திற்குள் குளித்து வெள்ளை நிற பாவாடைக்கும், மேலே அவளின் அண்ணனின்
டி ஷர்ட்டுக்கும் மாறியிருந்தவள், ஈரத் துண்டால் தலையில் கொண்டையிட்டிருந்தாள்.
அவள் கொண்டு வந்து
உடைகளை எங்கு வைப்பது என்று தெரியாததால் பெட்டிக்குள்ளேயே இருக்க, அதைக் கண்டவன்,
"இனி நீங்க ரூமை
யூஸ் பண்ணிக்கோங்க. நான் ஹால்ல படுத்துக்கிறேன். செல்ஃப் ரூம்க்குள்ள மட்டும் தான்
இருக்கு. நாம அதை பாதியா பிரிச்சுக்கலாம். உங்க துணிகள எடுத்து வைச்சுக்கோங்க. அப்புறம்...
அப்புறம்..." என்றவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளின் முகத்தை ஒரு
நொடி ஏறிட்டான்.
முகம் பார்க்கும் கண்ணாடி
அவளுக்கு எட்டாததாலா அல்லது சில நாள்களாக வைக்காததாலா என்றும் தெரியாது. நெற்றி வெறுமையாக
இருந்தது.
அது தர்மாவிற்குள்
எதுவோ செய்ய, வாய் திறந்தவன் தலையில் தட்டிக் கொண்டு சென்றான்.
பால் பாக்கெட்டுகளுடன்
சமையலறைக்குள் புகுந்தவன், மின்சார அடுப்பில், பாலை வைத்து விட்டு, டம்ளரைத் தேடிக்
கொண்டிருக்கும் பொழுது வாசலில் நிழலாடவும், திரும்பிப் பார்த்தான்.
கைகளைப் பிசைந்துக்
கொண்டு தயங்கியபடியே அவள் நிற்க,
"எதுவும் சொல்லணுமாங்க?"
"அது... அது...
சர்க்கரை இல்ல வீட்டுல." என்க, வேகமாக தலை உயர்த்திப் பார்த்தான்.
"எது சர்க்கரை
இல்லையா!" என்று தேட, காபி தூள் உட்பட எதுவும் கிடைக்கவில்லை.
"ஆமா... சர்க்கரை
இல்ல... காப்பி தூளும் இல்ல. ம்ச்... அப்ப இதை குடிக்க முடியாதா. எனக்குக் காலைல காபிக்
குடிக்கலன்னா தலை வலிக்குமே." என்று தலையை அழுத்திப் பிடிக்க, பால் பொங்கி எழுந்தது.
அதை அணைத்தவள்,
"பாலை சூடாக் குடிச்சிப் பாருங்க. தலை வலி கொஞ்சம் குறையும். எங்கிட்ட தைலம் இருக்கு.
எடுத்து தர்றேன்." என்றாள் சிறு புன்னகையுடன்.
புன்னகைக்குக் காரணம்
அவன் தலையில் கை வைத்துக் கொண்டு நிற்கும் கோலம் தான்.
எதற்கெடுத்தாலும் சாரிங்க...
என்று விட்டுத் தன் பின் தலையில் தட்டிக் கொள்வது அவனுக்கு வாடிக்கையாகி விட்டதே.
வேகமாக தன் அலைப்பேசியை
எடுத்தவன், முதலில் யாருக்கோ அழைத்து இன்று வேலைக்கு விடுப்பு கேட்டான்.
பின், "மச்சி
எனக்கு சில ஜாமான் வேணும். உனக்கு வாட்ஸப் பண்ணிருக்கேன். கொடுத்து விடு." என்க,
அந்தப் பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ, இவன்,
"அதெல்லாம் நான்
பார்த்துப்பேன். நீ காபி பொடியும் சர்க்கரையையும் முதல்ல கொடுத்து விடு." என்று
விட்டு வைத்தான்.
சில நிமிடங்களிலேயே
வாசலில் ஒரு ஆறு வயது சிறுமி ஒருத்தி அவன் கேட்ட காபி பொடியுடன் வந்து நின்றாள்.
"ஓய்... ஹர்ஷி...
ஸ்கூல் கிளம்பலையா? இன்னும் கலர் டிரெஸ்ல இருக்க?" என்று கேட்டபடி வாங்கிக் கொண்டான்
தர்மா.
அவள் அவனுக்கு இதழ்கோணி,
"இன்னும் நேரமிருக்கு மாமா." என்றுவிட்டு அவனைக் கடந்து வீட்டிற்குள் எட்டிப்
பார்த்தாள். ஆர்த்தி அப்பொழுது தான் தன் உடமைகளை அறையில் அடுக்கி முடித்து விட்டு வெளியே
வந்தாள்.
"மாமா... அது
தான் அக்காவா..." என்றவள் அவன் பதில் சொல்லும் முன்,
"ஹாய் அக்கா...
நான் ஹர்ஷிதா." என்று ஆர்த்தியுடன் கதையளக்கத் தொடங்கினாள்.
அவளுடன் பேசிய படியே
காபியைக் கலந்தவள் தர்மாவிற்கு ஒரு டம்ளரை நீட்டி விட்டு ஹர்ஷிதாவிற்கும் கொடுத்தாள்.
"ம்... அக்கா…
சூப்பரா இருக்கு. இது நான் கொண்டு வந்த பொடிலயா போட்டீங்க?" என ஆச்சரியமாகக் கேட்டாள்.
"காலைலயே ஐஸ்
விக்கிற வேலைய ஆரம்பிச்சிட்டியா?" என அவளின் தலையில் தட்ட, அவள் "மாமா..."
எனச் சிணுங்கினாள்.
சற்று நேரத்தில் எல்லாம்
அவளின் அன்னையின் அழைப்புக் குரல் கேட்க, ஓடி விட்டாள் சிறுமி.
"பக்கத்து வீட்டுல
தங்கிருக்குற கோலீக்ஸோட பொண்ணு. நல்லா பேசுவா… வாலு... காலைல சாப்பாடு இப்போதைக்கு
எதுவும் செய்ய வேண்டாம்ங்க. நாம வெளில பார்த்துக்கலாம். நான் குளிச்சிட்டு வர்றேன்."
என்று விட்டு அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டான்.
ஒரு இரவு முடிந்து
விட்டது தன் வீட்டை விட்டுப் பறந்து வந்து. தன் நலத்தினை வீட்டிற்குத் தகவலாகச்
சொல்ல தன்னிடம் ஃபோன் இல்லையே என நினைத்து வருந்தியவள், மேஜையில் இருந்த தர்மாவின்
அலைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அதன் லாக் பேட்டன் தெரியாததால் மீண்டும் எடுத்த
இடத்திலேயே வைத்து விட்டுத் திரும்ப, அது சிணுங்கியது.
அழைத்தது தியா...
சுப்ரீதியா
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..