அத்தியாயம்: 9
தியா... என்று எழுதியிருக்க,
ஃபோனை முன்னும் பின்னுமாகத்
திருப்பிப் பார்த்தாள்.
அவனிடம் இதைச் சொல்ல,
குளியலறைக் கதவைத் தட்டலாமா வேண்டாமா! அல்லது நாமே எடுத்து பேசலாமா! அல்லது அழைத்து
ஓயும் வரை வேடிக்கை மட்டும் பார்ப்போமா! என்று பல்வேறு சிந்தனைகளுடன் நின்றாள் பெண்.
நீண்ட யோசனைக்குப் பின், பச்சை நிறமியை உயர்த்தி விட்டு காதில் வைத்து,
"ஹலோ..."
என்க, எந்தப் பதிலும் இல்லை.
காரணம் அழைப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இத்தனை நேரம் யோசித்தால்
அது அடித்துக் கொண்டே இருக்குமா என்ன?
மீண்டும் அழைப்பு வரும்
என்று பார்க்க, அது வரவில்லை என்றதும், நிம்மதி கொண்டாள்.
"அந்தப் பாப்பா
இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்திருக்கலாம்." என முணுமுணுத்துக் கொண்டே நேரத்தை
நெட்டித் தள்ள, வீட்டு காலிங் பெல் அடித்தது.
"யார்?"
என்று குரல் கொடுத்துப் பார்த்தாள். அதுவும் பதில் சொல்லவில்லை.
ச்சே... என்றிருந்தது
அவளுக்கு.
யாருன்னு சொல்லாம கதவைத்
திறக்க மாட்டேன். என்று அவள் பிடிவாதமாக நிற்க, மணி மட்டும் அடித்துக் கொண்டே இருந்தது.
சிறு கோபம் உண்டாக,
வேகமாக கதவைத் திறந்தாள்.
அங்கு கண்களில் கூலிங்
க்ளாஸ்ஸுடன் அழகிய இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான். இவளைக் கண்டதும், "வாவ்...
ப்யூட்டி." என்று விசிலடித்தவன்,
"விண்ணுலகத்துக்கு
போக வேண்டிய தேவதை, ஸ்டாப் மாறி இங்க இறங்கிடுச்சோ!" என்று கண்ணாடியைக் கழட்டி
விட்டு வாயைப் பிளந்தான்.
யார் இந்த கோமாளி?
என்பது போல் பார்த்தவளைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்தவன்,
"தேவதைங்களுக்குக்
கால் இருக்காது. உனக்கு இருக்குன்னா... நீ தேவதைப் பெண்ணாத்தான் இருக்கணும். மே ஐ நோவ்(know)
யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்?" என்க, அவள் திருதிருவென முழிக்கவும்,
"அட உன் பேர்
என்னனு சொல்லு ஏஞ்சல்." என்று மொழிபெயர்க்க, பயந்து போனவள், படபடவெனக் குளியலறையின்
கதவைத் தட்டினாள்.
"யாரோ வந்திருக்காங்க...
கொஞ்சம் சீக்கிரம் வாங்க… ப்ளீஸ்..." என்று திரும்பித் திரும்பி பார்த்தபடியே
கதவை உடைத்தாள்.
அவள் படபடவென கதவைத்
தட்டவும் பயந்து போனவன், இடையில் துண்டுடன் வெளியே வர,
"அது... யாரோ
வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்காங்க?" என்று ஆள்காட்டி விரலால் கூடத்தைச்
சுட்டிக் காட்டி முறையிட்டாள்.
"யாருன்னு கேட்டீங்களா?"
என்றவன் டீசர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டே கைலிக்கு மாறினான்.
அவள் சுவரின் பக்கம்
திரும்பி நின்றுக் கொண்டாள்.
“யாருன்னு கேட்டீங்களா?”
என்று அவன் மீண்டும் கேட்கவும்.
"அது... இல்ல...
ஆனா ஏஞ்சல் தேவதைன்னு என்னென்னமோ பேசுனாங்க. நா... நான் பயந்திட்டேன்." என்றதும்
இமை சுருக்கி முறைத்தவன், வெளியே சென்று பார்க்க அங்கு இருந்தது நிலவன்.
"சீனியர்? நீங்க
எங்க இங்க? அதுவும் இந்த நேரத்துல வந்து ஏன் பயம் காட்டுற அவங்கள?" என்று நண்பனின்
தோளில் தட்டியவன், ஆர்த்தியிடம் திருப்பி,
"இவரைப் பார்த்து
பயப்படாதீங்க. என்னோட சீஃப்பா வேலை பார்க்குறாரு. கொஞ்சம் சீனியர். பட் நல்ல ஃப்ரெண்டு.
பேரு நிலவன்." என்றதும், கரத்தை ஆர்த்தியின் முன் நீட்ட, அவள் தயங்கியபடியே தர்மாவைப்
பார்த்தாள்.
"கையக் கொடுக்குறதுக்குக்
கூட உங்கிட்ட பர்மிஷன் வாங்கணுமாடா?" என்றவன் ஆர்த்தியிடம்,
"உன்னை மிரட்டி
வச்சிருக்கானாம்மா இவன். அப்படியே மிரட்டுனாலும் நீ பயப்படாத. இவன் வெறும் பட்டாசு.
பசுமை பட்டாசு. சத்தம் மட்டும் தான் வரும். புகை கூட வராது." என்று சொல்லி விட்டு,
தர்மாவின் டீசர்ட்டைப் பிடித்து,
"எதுக்கு டா எந்தங்கச்சிய
மிரட்டுற? அவ என்னோட ஏஞ்சல் டா. தேவதை... மை லல்வபுல் சிஸ்டர் டா." என்று உலுக்க,
ஆர்த்தி அவன் செய்த கலாட்டாவில் பட்டெனச் சிரித்து விட்டாள்.
தலை திரும்பிய தர்மா,
அவளின் சிரிப்பை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புலர்ந்த காலை வேளையில் ரம்மியமாகத்
தெரிந்தது அந்தச் சிரிப்பு. அஃது அவனுக்கும் ஓர் உற்சாகத்தைத் தந்தது.
"சிஸ்டரா!!! சிஸ்டரை
யாராவது தேவதை ஏஞ்சல்னு வர்ணிப்பாங்களா?" என்று நிலவனிடம் சகஜமாக ஆர்த்தி பேச,
அசந்து போனான் தர்மா.
பின்னே அவனிடம் எண்ணி
வைத்த சில்லறைக் காசாய் வார்த்தைகளுக்குக் கணக்கு போடுபவள், இவனிடம் சிரித்து அல்லவா
பேசுகிறாள்.
"ஏன் வர்ணிக்க
கூடாது?" என்று ஆரம்பித்தவன், "ஊர்ல ஒரு அண்ணனை தனியா விட்டுட்டு வந்திட்டோம்ங்கிற
ஃபீலிங்கு உனக்கு எப்பவும் வரக்கூடாது. இங்க இருக்குற அண்ணன் என்னைய கண்கலங்காமப் பார்த்துக்கிறது
தான் உன்னோட முக்கிய வேலை." என்க, அண்ணன் என்றதும் உருகிப் போனவள், காபி கொடுத்து
உபச்சாரம் செய்தாள்.
"அண்ணன்னு சொன்னதுனால
தான் காபி கிடைச்சது. இல்லன்னா தண்ணியக் கூட கண்ணுல காட்டாமத் துரத்தி விட்டுருப்பாங்க."
என்று தர்மா கேலி செய்தான்.
"தண்ணீ மட்டும்
தான் வீட்டுல தாராளமா இருக்கு. மத்ததும் இருந்திருந்தா விருந்தே கொடுத்திருப்பேன்."
என்றாள் தர்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
அவளின் பாவனை அவனுக்குப்
பிடித்திருந்தது. பேச்சும் ரசிக்கத் தூண்டியது. அவளின் கூட்டை விட்டு வெளியே தலை நீட்டுவது
போல் இருந்தது அவனுக்கு.
"அதை இன்னொரு
நாள் கொடு. இப்ப நான் கொடுக்குறேன். கிளம்புங்க ரெண்டு பேரும்." என்று நிலவன்
வாசலுக்குச் செல்ல,
இவர்கள் இருவரும் வரவில்லை.
"என்னடா நிக்கிற?
காலைல டிபன் நம்ம வீட்டுல தான்."
"எதுக்கு நிலவா
மேரிய சிரமப்படுத்துறீங்க. நாங்க வெளில எங்கயாவது..." எனும் போதே நிலவனுக்குக்
கோபம் வந்து விட்டது.
"வெளில போக கார்
சாவி கேட்டல்ல. வீட்டுக்கு உன்னோட வைஃப்போட வந்தா கிடைக்கும்." என்று விட்டு வெளியேறி
விட்டான்.
‘உன்னோட வைஃப்…’ என்றதில்
அழுத்தம் கொடுத்துச் சென்ற நிலவனை எண்ணிச் சிரித்தவன்,
"இதுக்கப்றமும்
போகலன்னா சங்கிலிய கழுத்துல கட்டி இழுத்திட்டு போவாரு. வாங்க..." என்க, அவள் தயங்கினாள்.
"நா... நான்...
வேற ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்." என்றவள் பாந்தமான அரக்குச் சுடிதாருக்குள் மாறி
வந்தாள்.
வீட்டை விட்டு வெளியே
வந்ததுமே, "இதுலயும் நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க அக்கா. சூப்பர்..." எனக்
கண் சிமிட்டிப் பாராட்டினாள் ஹர்ஷிதா.
சீருடை சகிதமாகப் பள்ளிக்குப்
புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளின் அன்னை அவளுக்குப் பின்னால் லன்ச் பேக்குடன் வந்தாள்.
"குட் மார்னிங்
மச்சி." என்று தர்மா வணக்கம் வைக்க, அவனுக்குப் பதில் வணக்கம் கூட வைக்காது ஓடினாள்
அவள். மகளை வேனில் ஏற்றி விட்டு திரும்பியவளைப் படிக்கட்டில் எதிர் கொண்டனர் தர்மா
தம்பதியர்.
"என்ன மச்சி குட்
மார்னிங் வச்சா பதில் சொல்லாம ஓடுற?" எனக் கேலியாகத் தர்மா கேட்க,
"உனக்கு என்னப்பா!
நீ லீவ் சொல்லிட்ட, புதுப் பொண்டாட்டி கட்டுன ஜோர்ல. ஆனா நான் அப்படி இருக்க முடியுமா?
இன்னைக்கு எனக்குப் புது ட்ரெயினீஸ் வராங்களாம். மூச்சைக் கொடுத்து அவங்களுக்குக் கத்து
தரணும்." என்றவள், ஆர்த்தியின் கன்னம் தொட்டு,
"ஈவ்னிங் வந்து
பேசுறேன் ஆர்த்தி. இப்ப டியூட்டிக்கு டைம் ஆச்சு." என்று விட்டு ஓடினாள்.
"இவ பேரு சுலேகா.
நான் மச்சின்னு தான் கூப்பிடுவேன். ஹர்ஷிதா இவளோட பொண்ணுதான். ஹஸ்பெண்ட் வெளிநாட்டுல
இருக்காரு. மாமனார் கிடையாது. மாமியார் கூட இருக்கா. நமக்குப் பக்கத்து வீடு தான்."
என்று விளக்கம் கொடுத்தபடி எதிரில் இருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
நிலவன் சற்று உயர்ந்த
பதவியில் இருப்பதால் அவனின் இல்லம் தரைத் தளத்திலேயே இருந்தது.
நிலவனின் வீட்டில்
அவனின் மனைவி லூர்து மேரி ஆர்த்தியை வெகு உற்சாகத்துடன் வரவேற்று நன்கு உபசரித்தாள்.
இருவருக்கும் காதல்
மணம். பல ஆண்டுகளாக வீட்டாருடன் போராடி, ஈராண்டுகளுக்கு முன் தான் திருமணத்திற்கு அனுமதி
வாங்கி செய்துக் கொண்டனர்.
வேறு வேறு மதம். ஆதலால்
உறவுகள் ஒட்டியும் ஒட்டாமல் தூர நிறுத்தி விட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் என்று
துணையாக வாழ, அவர்களுக்குத் துணையாக ஒரு குட்டிப் பாப்பா பிறந்துள்ளது.
ஆறு மாதங்கள் கூட முழுதாக
நிரம்பாத அது செய்யும் சேட்டைகளைக் கவனிக்கவே தனி ஆள் வேண்டும்.
“ஆரோன்… நோ… பேபி…
நோ...” எனக் கத்திக் கொண்டே இருப்பாள் லூர்து. இல்லை அவளின் மகன் கத்த வைப்பான்.
திருமணம் பல போராட்டங்களுக்குப்
பின் நடந்தாலும் இருவருக்குள்ளும் காதல் குறையவே இல்லை. லூர்தை நிலத்தில் பாதம் படாது
தாங்குவான் நிலவன். அவளும் அவனுக்குச் சளைத்தவள் அல்ல.
ஆசையாய், காதலுடன்
வாழும் அழகிய தம்பதியர் அவர்கள்.
வீட்டிற்கு வந்த சிறிது
நேரத்திலேயே லூர்துவுடன் நட்பு பாராட்டி விட்டாள் ஆர்த்தி.
“நீங்க வொர்க் பண்றீங்களா
அண்ணி?” என்று வீட்டில் இருக்கும் சில பொருள்களைக் கவனித்து, உறவு முறை வைத்து பேசிய
ஆர்த்தியை மிகவும் பிடித்து விட்டது அவளுக்கு.
“இவன் காலைலயே ஆஃபிஸ்
வேன்ல ஏறிப் போய்டுவான். திரும்பி வர ஈவ்னிங் ஆகும். சில நேரம் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றாங்கன்னு
ஓவர் டியூட்டி பார்த்திட்டு, லேட்டாத் தான் வருவான். அதுனால என்னோட பொழுது நல்லபடியா
இருக்க, சின்னதா ஒரு கேக் ஷாப் வைச்சி ரன் பண்றேன். இன்ஸ்டால சேனல் இருக்கு. வெப்சைட்
கூட க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். ஆர்டர்ஸ் வந்தா செஞ்சி கொடுப்பேன். படிச்ச படிப்பு
வேஸ்டாகக் கூடாதுல.” என்ற லூர்தை வியப்புடன் பார்த்தாள் ஆர்த்தி.
“அப்படி என்னென்ன செய்வீங்க
அண்ணி?” என்றவளுக்கு லூர்து கொடுத்த பட்டியல் புரியவே இல்லை.
எல்லாம் வட நாட்டு,
வெளிநாட்டு பதார்த்தமாக இருக்கும் என எண்ணிக் கொண்டாலும் ஆர்வமுடன் கேட்டு, அதைப்
புகைப்படங்களில் கண்டு மகிழ்ந்தாள்.
காலை உணவு முடிந்ததும்,
தர்மா நிலவனின் காரை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு அழைத்துச்
சென்றான்.
கார் சாலையில் மித
வேகத்தில் சறுக்கிக் கொண்டு சென்றது.
அசாத்திய அமைதி நிலவ,
திரும்பி ஆர்த்தியின் முகம் பார்த்தான் தர்மா.
புருவங்கள் முடிச்சிட்டாலும்,
வார்த்தைகள் வரமறுத்து வெளியே வேடிக்கைப் பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டாள்
ஆர்த்தி.
“எதாவது கேட்கணுமாங்க?”
என்று மௌனத்தைக் கலைத்தான் தர்மா.
திடுக்கிட்டு அவனின்
புறம் திரும்பியவள், இல்லை என்பது போல் வேகமாகத் தலையசைக்க,
“எங்கிட்ட பைக் இருக்குங்க.
ஆனா அதுல… வாங்குற எல்லாத்தையும் வைச்சிட்டு வீட்டுக்கு வர முடியாது.” என்று விளக்கம்
கொடுத்தான்.
அதற்கும் அவளிடம் அமைதியே
நிலவ, “எங்க போறோம்னு கேட்க மாட்டீங்களா?” என்றவன் அவளிடம் கேள்வியைக் கேட்க, இதழ்
கடித்து மெல்லிதாய்ச் சிரித்தாள்.
அவள் வாயைத் திறப்பதற்குள்
கார் அங்காடியை அடைந்து விட்டது.
கடையைப் பார்த்து விட்டு
வாசலிலேயே அவள் நின்று விட,
“வாங்கங்க…” என்று
விட்டு முன்னால் நடந்தான்.
அவனின் பின்னாலேயே
ஓடிச் சென்றவள்,
“அது… இங்க எதுக்கு
வந்திருக்கோம்?” என்றபோது அவளை வியந்து பார்த்தான் தர்மா.
ஒரு வழியாக வாயைத்
திறந்து விட்டாள் என்பதற்காக இருக்குமோ!
“சூப்பர் மார்க்கெட்டுங்க
இது.” என்றபடி பொருள்களைப் போட்டு வைக்கும் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.
“அது எனக்குத் தெரியுது.
ஏன் வந்திருக்கோம்ன்னு கேட்குறேன்.” எனச் சிறு கோபத்துடன் கேட்க,
“அப்பாடா! ஒரு வழியா
உங்களுக்கும் கோபம் வரும்னு தெரிஞ்சுக்கிட்டேன். எப்படிப் பேசா மடந்தைக் கூட டைம் ஸ்பெண்ட்
பண்ணப் போறோமோன்னு லைட்டா பயந்திட்டேன்.” என்றவன், வரிசையாக அடுக்கி வைத்திருக்கும்
பொருள்களில் தேவையானவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டே முன்னேறினான்.
“வீட்டுல எந்த திங்க்ஸ்ஸூம்
இல்லைங்க. பாத்ரூம்ல கூட வாளியும் கப்பும் உடைஞ்சி போய்தான் இருந்துச்சி. இதுவரை பேச்சுலரா
இருந்திட்டேன். அதுனால எனக்குத் தேவைப்பட்டது இல்லை. அப்படியே காலத்தை ஓட்டிட்டேன்.
ஆனா இனி அப்படி இருக்க முடியாதுல.” என்று விளக்கம் கொடுக்க,
“அது... எதுக்கு இந்த
வீண் செலவு? நா...ன்… என்னை நம்ம ஊர்லயே விட்டுட்டு வந்திருக்கலாம்ல?” என்றாள் மென்
குரலில்.
காரணம், சுலேகா, “புதுப்
பொண்டாட்டி கட்டுன ஜோர்." எனச் சொல்லும் போதும், நிலவன், “உன்னோட வைஃப்…” என்ற
போதும், தர்மாவின் முகத்தில் வந்துச் சென்ற வாட்டத்தை ஆர்த்தி கண்டு விட்டாள்.
‘தன்னை அவனின் மனைவி
என்றதில் அவருக்கு சங்கடங்கள் இருக்கும் போலயே… அதனால் தான் கூட வேலை பார்க்கும் அனைவரிடமும்
என்னை அறிமுகப்படுத்தாமல் இருக்கிறாரோ! என்ன இருந்தாலும் நான் அவரின் அண்ணன் மனைவி
தானே! என்னை எப்படி எல்லாருக்கும் அவரின் மனைவி என்று அறிமுகம் செய்ய முடியும்.’ என
நினைத்துக் கொண்டவள், அவனுடன் நடந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாளா! இல்லை. ஆனாலும் அவர்களுக்குள்
ஓர் உறவு இருப்பதை முழுமையாக நம்பினாள். அதனால் தான் வா என்றதும் வந்து விட்டாள்.
அவளுக்குத் தெரியாதது
என்னவென்றால், அவன் அறிமுகம் செய்து வைத்த நிலவன், சுலேகா தவிர அவனின் ரூம்மெட் ‘அண்ணன்
பொண்டிடாட்டிய வாடா கல்யாணம் பண்ணிருக்க… உனக்கு வேற ஆளே கிடைக்கலையா… சரி உன்னோட ஃபர்ஸ்ட்
நைட்டு எப்படி இருந்தது. நீ சொல்லிக் கொடுத்தியா இல்ல உனக்கு அவளே… ஹங்… ஹங்…’ என்று
திருமணம் பற்றி சொன்ன போது கேலி பேசினர்.
நிலவன் மற்றும் சுலேகாவின்
ஆதரவானப் பேச்சு தான் அவனுக்கு நிம்மதியைத் தந்திருந்தது.
“அது… அண்ணா பண்ணது
தப்பு. அண்ணா, குழலிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மிரட்டி தானே என்னை உங்களுக்குக்
கட்டி வச்சாங்க. அது தப்பு. பெரிய தப்பு. இன்னும் கொஞ்ச நாள் தான். அண்ணாக்கும் குழலிக்கும்
கல்யாணம் ஆனதும் நானே ஊருக்குப் போய்டுறேன். அதுவரைக்கும்…” என்றவளுக்கு மறுப்பு ஏதும்
சொல்லவில்லை. ஏனெனில் அவனுமே அந்தத் திட்டத்தில் தானே இருந்தான்.
“அப்படின்னாலும் இருக்கப்போற
சில மாசத்துக்கும் வேணும்லங்க.” என்க, அமைதியாகிப் போனாள் அவள்.
“நான் ஏற்கனவே சொன்னது
மாதிரி நம்ம கல்யாணம் நாடகம் தான். என்னை ஏமாத்தி உங்களுக்குத் தாலி கட்ட வைச்சது தெரிஞ்சதும்,
ரொம்ப கோபமா வந்தது. இன்னும் அது போகல. குறைஞ்சிருக்கு அவ்ளோ தான். எனக்கு விருப்பமில்லாம
நடந்த கல்யாணத்தை மதிச்சி நான் உங்கள இங்க கூட்டிட்டு வரல.
அன்னைக்கு சொன்னீங்களே,
யாரோ தேர்ந்தெடுக்குறதுக்கு நான் தலையாட்டித் தான் ஆகணும்னு. இனி உங்களுக்காக நீங்க
தான் தேர்வு செய்யணும். யாருக்கும் தலையாட்டக் கூடாது. யாரும் உங்களுக்கு செலக்ட் பண்ணிக்
கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதுக்கு நீங்களா முடிவெடுக்குற
அளவுக்கு சுயமா எல்லாத்தையும் செய்யணும். தைரியம் வேணும் உங்களுக்கு. அதான் அழைச்சிட்டு
வந்தேன்.”
“அங்கயும் நான் தைரியமாத்தான்
இருந்தேன்.”
“ம்… பார்த்தேன் உங்க
தைரியத்தை. உங்க சித்தி உங்க காதுல சொல்றதை அச்சு பிசகாம செஞ்சி வச்சீங்களே. அதைச்
சொல்றேன்…
நான் அங்க விட்டுட்டு
வந்திருந்தா உங்க சித்தி மறுபடியும் உங்கள அதிர்ஷ்டமில்லாதவனு சொல்லிச் சொல்லியே உங்கள
தாழ்வு மனப்பான்மைக்குள்ள ஆழமா புதைச்சிடுவாங்க. சுய பச்சாதாபத்துல விழுந்திடுவீங்க.
உறவா இல்லன்னாலும் ஒரு ஃப்ரெண்ட்டா காப்பாத்தணும்னு தோணுச்சி.
எல்லாம் ஒரு வருஷம்
தான் இந்தக் கல்யாண டிராமா. அப்புறம் நாம டைவர்ஸ் வாங்கிட்டு பிரிஞ்சிடலாம். ஆனா எப்பவும்
நான் உங்க ஃப்ரெண்ட்டு தான். வெல்விஷர் தான்.” என்று புன்னகையுடன் கரம் நீட்ட,
அவனின் புன்னகை அவளைக்
கவர்ந்தது. தன் முகம் பார்த்து பேசவும், தான் பேசவும் வாய்ப்புத் தரும் ஆடவனைத் தோழனாக
ஏற்க விரும்பினாள். அவள் அவன் நீட்டிய கரத்தைப் பற்றிக் கொள்ள வெகுவாக யோசித்துவிட்டு
நட்பாய் குலுக்க,
“என்ன யோசனை?” என்றதும்
அவள் தலை தானாக ஆடியது.
“எங்கிட்ட நீங்க எதுனாலும்
கேட்கலாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். கேட்காம விட்டாத்தான் தப்பா எடுத்துப்பேன்.
கோபமும் வரும்…” எனப் புருவம் உயர்த்திக் கூற,
“அது... பிரிஞ்சிடுவோம்னு
சொல்றீங்க. அப்புறம் எதுக்கு என்னை வைஃப்ன்னு அவங்க கிட்ட அறிமுகம் செய்றீங்க? அது
உங்க காதலிக்குத் தெரிஞ்சா சண்டை போட மாட்டாங்களா? நம்ம விசயம் அவங்களுக்குத் தெரியுமா?”
என்றாள் வெள்ளந்தியாக.
“தெரியாது. நம்மளப்
பத்தி சொல்லணும்னா முதல்ல அவ இங்க இருக்கணும். அவ இங்க இல்லை. ஆறு மாசம் ட்ரெயினிங்காக
அப்ராடு போயிருக்கா. அதுவரை அவளுக்கு நான் நம்மளப் பத்தி சொல்லல. சொன்னா வீணா டென்ஷனாகி
படிப்பை விட்டுட்டு வந்திடுவா. அவளோட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு அவளைப் படிக்க வைக்கிறாங்க.
அவளை நம்பித்தான் அவளோட குடும்பமே இருக்கு. ”
“அப்ப அடுத்த வருஷம்
தியா உங்க மனைவியா!” என்று பூரித்துப் போனவள்,
“அந்த ஆறு மாசத்துக்குள்ள
அண்ணா குழலி கல்யாணம் முடிஞ்சிருக்கும். கல்யாணத்துக்குப் போற சாக்குல அங்கயே இருந்திடுறேன்.
உங்களை எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன்.” என்று அவனுக்குத் திட்டம் வகுத்துக் கொடுக்க,
அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“நீங்க எனக்கு டிஸ்டர்ப்பா?”
என்றான்.
ஆனால் அவளோ, ‘அப்பாடா!
இவரு காதல்ல என்னால எந்தப் பிரச்சனையும் வரல. இதைக் கல்யாணம்னு நினைச்சி இவரு இவரோட
வாழ்க்கைய வீணாக்கிக்க மாட்டாரு. தெளிவா இருக்காரு. நாம இந்த ஆறு மாசத்துல லூர்து அண்ணிக்கிட்ட
எதாவது ஒன்ன கத்துக்கிட்டு ஊர்ல போய் அவங்கள மாதிரியே வீட்டுக்குள்ள ஒரு கடைய திறந்து
வச்சி வியாபாரம் பார்க்கணும். அண்ணாக்கிட்ட சொன்னா எல்லாத்தையும் செஞ்சி கொடுக்கும்.’
எனத் தலையை அசைத்து அசைத்து தனக்குத் தானே பேசிக் கொள்ள,
“என்னென்னு சொன்னீங்கன்னா
நானும் தலையசைப்பேன்.” என்றவனிடம் லூர்துவைப் போல் தானும் ஒரு பேக்கரி திறக்கப் போவதாகச்
சொல்ல, அவன் முறைத்தான்.
“ஏன் அப்படிப் பார்க்குறீங்க?
நான் நல்லா சமைப்பேன். சாப்பிட்டுருக்கீங்கல்ல… என்னோட சமையல் எப்படி இருந்தது?” என
ரோஷமாகக் கேட்க,
“நல்லாத்தான் இருந்தது.
ஆனா…” என்றவன் அடுத்து சொன்ன வார்த்தையில் அவள் உறைந்தே போய் விட்டாள்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..