முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

உறவு 4




 

அத்தியாயம்: 4

 

"ம்... பேசுங்க அண்ணி." என்று குழலி ஆர்த்தியின் கையில் ஃபோனைத் திணிக்க, மெல்லிய புன்னகையுடன் அதை தன் செவிகளில் வைத்தவள்,

 

"ஹலோ..." என்க,

 

"நான் தர்மா பேசுறேன்...”

 

அவள், "ம்..." என்றதும்,

 

"எப்படி இருங்கீங்க?"

 

"நான் நல்லா இருக்கேன். நீங்க? உங்களத்தான் பார்க்கவே முடியல. அத்தை தான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஏன் கல்யாணத்துக்கு வரல?" என உரிமையுடன் கேள்வி கேட்டாள் ஆர்த்தி.

 

"சாரிங்க என்னால கல்யாணத்துக்கு வர முடியல. கொஞ்சம் இங்க வேலை இருந்தது. ஆனா என்னோட நினைப்பு முழுக்க அங்க தான் இருந்தது. அடுத்த வாரம் ஊருக்கு வர்றேன் உங்களப் பார்க்கத் தான்." என உற்சாகமாகப் பேசியவன் அவளிடம் இரண்டொரு வார்த்தைகள்‌ பேச, அவளும் சகஜமாகப் பேசினாள்.

 

“வெண்மா, கல்யாணத்தப்ப எடுத்த ஃபோட்டோஸ் அனுப்பி வை வெண்மா.” என்று கேட்டு வாங்கியவன் ஆர்த்தியை அதில் தான் முதல் முறை பார்த்தான்.

 

தன் அண்ணனின் திருமணத்தில் கலந்துக் கொள்ளாததை நினைத்து மனம் லேசாகக் கனத்தது.

 

சொன்னது போல் அந்த வாரம் வீட்டிற்கு வந்தவனை, வரவேற்றவளைக் கண்டு, 'இவளா தன் அண்ணி... மிகவும் சிறிய பெண் போல் தெரிகிறாளே! ஃபோட்டோவில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசமா!' என்று யோசிக்கத் தோன்றியது.

 

அப்படித் தான் இருந்தது அவளின் தோற்றம். புகைப்படத்தில் பெரிய பார்டர் வைத்த புடவை அணிந்து, சரிந்தக் கொண்டையுடன், நழுவி விழுவது போல் இருக்கும் பூ அலங்காரத்துடன், மாலையும் கழுத்துமாக முகம் முழுதாகத் தெரியாத படி இருந்தவள், இப்பொழுது, தரை தொட்டும் அளவிற்கு நீளமான பாவாடை, மேலே அவனின் அண்ணனின் சட்டையை அணிந்திருந்தாள்.

 

சிறிய பச்சைக் கல் பதித்த மூக்குத்தி அவளுக்குத் திருஷ்டி கழிப்பது போல் அமர்ந்திருந்தது நாசியில்.  அவள் சிரிக்கும் போது அவளின் தெத்துப் பல் அவளுக்குத் தனி வசீகரம் சேர்த்தது. தளர்வாய் பின்னிய கூந்தலில் மல்லிகைச் சரம் தொங்கி, பளிச்சென அவளின் முகத்தைக் காட்டியது.

 

அவனின் முகம் பார்த்து, "வாங்க..." என்று சிறு வெட்கப் புன்னகையுடன் கூறி ஒதுங்கி நின்றுக் கொண்டாள் பெண்.

 

தூணைக் கட்டிக் கொண்டு நிற்கும் அவளைப் பார்க்கையில் சிறுமியாகத் தான் தெரிந்தாள்.

 

திருமணமானப் புதிதில் புடவையை அணிந்துக் கொண்டு அவள் பட்டப் பாட்டைப் பார்த்து, "உனக்கு எது சௌகரியப்‌படுமோ அதையே உடுத்திக்கம்மா. எங்களுக்குக் குழலியும் நீயும் வேற வேற கிடையாது. ஒன்னு தான்." என்ற அமுதாவிற்கு ஆர்த்தியின் வருகை பெரும் ஆறுதலைத் தான் தந்திருந்தது.

 

வீட்டு வேலைகளை மட்டுமல்ல, கணக்கு வழக்கு சரி பார்க்கும் வேலையையும், பொறுப்பையும் பங்கிட்டுக் கொள்ள ஆள் கிடைத்ததில் அவருக்கு அத்தனை மகிழ்வு.

 

மாமியாரும் மருமகளும் ஒட்டிக் கொண்டனர். அதே போல் குழலியும் ஆர்த்தியும் தோழிகளாகிப் போயினர்.

 

இன்னும் சில மாதங்களில் தன் அண்ணியாக மாறவிருக்கும் குழலியை நன்கே கவனித்தாள் ஆர்த்தி.

 

ஆர்த்தி பிறந்த சில நாளிலேயே தாய் இறந்து போக, இசக்கிமுத்துவின் தம்பி வஜ்ஜிரமுத்துவும், அவரின் மனைவி மங்கையர்கரசியும் தான் ஆர்த்தியையும் கர்ணனையும் வளர்த்தனர்.

 

வஜ்ஜிரமுத்துவிற்கும் மங்கைக்கும் ஒரு மகன், ஒரு மகள். மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து வெளிநாட்டில் குடியமர்த்தி விட்டனர். மகனை டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துள்ளனர்.

 

அனைத்தும் இசக்கிமுத்துவின் வருமானத்தில் தான். மனைவியை இழந்த இசக்கிமுத்துவிடம்,  பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கின்ற பேரில் ஒட்டிக் கொண்டு, காசைக் கறக்கத் தொடங்கினர். 

 

இசக்கிமுத்துவின் நிழலில் வாழும் ஒட்டுண்ணி அவர்கள்.

 

தொழிலில் பிஸியாக இருக்கும் இசக்கிமுத்துவைப் பிள்ளைகளின் பக்கம் கூடத் திரும்ப விடமாட்டார்கள்.

 

எங்கே பிள்ளைகள் பக்கம் சென்று விட்டால் இவர்களின் குட்டு உடைந்து விடுமோ என்று இசக்கிமுத்துவின் முன் நல்ல படியாக, பாசம் வைப்பது போல் காட்டிக் கொண்டு, தலை மறைந்ததும் குடைச்சல் கொடுப்பார்.

 

அதில் கர்ணன் தப்பித்து விட்டான். ஏனெனில் தனக்குப் பிறகு அவன் தான் வாரிசு என்று இசக்கிமுத்து மகனைக் கையோடு வைத்துக் கொண்டதால்.

 

ஆனால் ஆர்த்தி…

 

குத்திக் குத்தி கொல்வார் அவளை.

 

பிறந்ததும் ஆத்தாளை முழுங்குனவ… என்ற சொல்லே போதுமானதாக இருந்தது ஆர்த்தி பிடி குஞ்சாகிப் போக.

 

கர்ணன், தங்கையின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காதவன். தந்தையின் தொழில் நட்டத்தையும் ஆர்த்தி ருதுவான நேரத்தையும் சம்மந்தப்படுத்திப் பேசி, கரித்துக் கொட்டிய மங்கையின் பேச்சால் மாறிப் போனான்.

 

அன்றிலிருந்து கர்ணனைத் தவிர அந்த வீட்டில் அவளுக்கு எனத் துடித்துப் போக யாரும் இல்லை என்றானது.

 

அமைதியான அதே நேரம் ஆர்ப்பாட்டமில்லாதது ஆர்த்தியின் சுபாவம்.

 

குறும்புகள் அவளுக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே செய்வாள்.

 

கட்டளைகளுக்குக் கீழ் பணிந்து நடக்க வேண்டும் என்று மங்கை பழக்கப்படுத்தியதால், ஆர்த்திக்கு அமுதாவின் கறார் குரல், எவ்வித பாதிப்பையும் தரவில்லை. மாறாக அமுதா காட்டிய அக்கறையானப் பாசத்தில், அமுதாம்மா என்று அழைக்குமளவிற்குப் போனது தான் மிச்சம்.

 

நெல்லையப்பன், சொல்லவே தேவையில்லை. தன் நண்பனின் மகள். அதிலும் அமுதா கணக்கு வழக்குக் கேட்டு திட்ட ஆரம்பித்தால் உடனே ஓடி வந்து மாமனாரைக் காப்பாற்றி விடுவாள். அவள் மருமகளாக வந்த நேரம் பூர்வீக சொத்தில் அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைத்தது.

 

கொலுசு சத்தம் கலகலக்க, வீட்டில் குழலியுடன் சேர்ந்து அவள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து பார்த்து பூரித்துப் போனார்.

 

பூரித்தது அவர் மட்டுமல்ல தர்மாவும் தான். விளையாடும் போதும் குழலி செய்யும் திருட்டுத் தனத்தை ஏற்காது சரிக்குச் சமமாக நின்று ஆர்த்தி வாதாடுவதைப் பார்த்திருக்கிறான்.

 

விளையாட்டு மும்மரத்தில் பாலைப் பொங்க விட்டு விட்டு, சாதத்தைக் குழைய விட்டு, அரைவை இயந்திரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் மாவைக் கவனியாது விட்டு விட்டு, அமுதாவிடம் வசவுச் சொற்களையும் வாங்கிக் கொண்டு, ஆட்டைத் திருடிய கள்ளன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியாக நிற்பவளையும் பார்க்க பார்க்க கனிவு நான் வந்தது. 

 

ஆர்த்தி இருக்கும் நேரம் அவள் சத்தம் மட்டுமே அந்த வீட்டில் அதிகமாக கேட்கும்.

 

ஆனால்… மகேந்திரனின் முரட்டு சுபாவத்தையும் குரலையும் கேட்டு மழையில் நடுங்கும் கோழிக் குஞ்சாய் ஓடுபவளைப் பார்த்து சிரிப்பு தான் வரும்.

 

தந்தைக்கும், தன் அண்ணனுக்கும் மட்டுமல்லாது தனக்கும் சாப்பாட்டு விடயத்தில் உத்தரவு போடும் போது, சிறு கிருஷ்ணவேணியாகத் தெரிந்தாள் தர்மாவிற்கு.

 

மொத்தத்தில், அவன் இருந்த ஐந்து நாளும் அவள் இந்தக் குடும்பத்தில் எத்தனை ஆழமாகப் பொருந்திப் போயிருக்கிறாள் என்பதை நேரடியாகப் பார்த்து வியந்து விட்டுத் தான் சென்னைத் திரும்பியிருந்தான்.

 

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் சென்றிருக்கும். ஒரு நள்ளிரவு நேரம் குழலியிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“ண்ணா… பெரியண்ணா ஆஸ்பத்திரில இருக்குண்ணா. ஆக்சிடென்ட்ண்ணா.” என்று அழுதுக் கொண்டே குழலி சொல்ல, தர்மா உறைந்து விட்டான்.

 

‘என்ன சொல்கிறாள் இவள்? நேற்று மாலையில் கூட அண்ணனிடம் பேசினேனே. மதுப் பழக்கம் இருக்கும் அவனிடம், உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியும், உன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்றும் அறிவுரைகள் கூறினேனே.’ என்று மனம் முன் மாலையில் மகேந்திரனுடன் பேசியதை நினைவிற்குக் கொண்டு வந்தது.

 

“எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நீ வளர்ந்திட்டியா தர்மா” என விளையாட்டாகப் பேசி மழுப்பப் பார்த்தவனிடம், “சாராய வாடை வேண்டாம் ண்ணா.” என்று தர்மா வற்புறுத்த,

 

“இனி தொட மாட்டேன்…” என்று ஆர்த்தியின் மீது சத்தியம் செய்தான் மகேந்திரன்.

 

அவனுக்கு ஆர்த்தியின் மீது கொள்ளை பிரியம். அதைக் காட்டிய விதம் சற்று முரண்பட்டாலும் அவன் அன்பு நிஜம். அவன் நேசம் உண்மை. அதை அவனின் பேச்சிலேயே புரிந்துக் கொண்ட தர்மா, அவனைக் கேலி செய்து சிரித்தான்.

 

இப்பொழுது எப்படி விபத்து? மதுவாலா? என்று குழலியிடம் கேட்க,‌ பதில் கர்ணாவிடமிருந்து வந்தது.

 

“இல்ல மச்சான்… டவுனுக்குள்ள A/C தியேட்டர்ல நைட் ஷோ படத்துக்குப் போய்ட்டு குட்டிம்மா, குழலின்னு நாங்க எல்லாரும் வீட்டுக்கு வந்திட்டு இருந்தோம். வண்டில பாம்பு ஏறி மறைஞ்சிருந்திருக்கு போல. ஹை வே போய்ட்டு இருக்குறப்ப அது ஹாண்ட்பார்ல இருந்து வெளில தலை காட்ட, அதைப் பார்த்து மச்சான் வண்டிய உலட்ட, பக்கத்துல வந்திட்டு இருந்த பஸ்ஸு டயருக்குள்ள சரிஞ்சிட்டாங்க.” என்க, பதறிப் போனான் தர்மா.

 

சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்து, அங்கிருந்து ஊருக்குக் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தவன், நிலவரத்தை அறிய வீட்டுக்கு அழைத்துக் கொண்டே வந்தான். அது எடுக்கப்படவே இல்லை.

 

விடாது அழைத்ததன் பலனாக ஒருவர் எடுத்துப் பேச, “தம்பி எங்கன வந்திட்டு இருக்க?” என்றார் அவனின் சித்தப்பா முறை கொண்ட ஒருவர்.

 

“பக்கத்துல வந்திட்டேன் சித்தப்பா. அண்ணே எப்படி இருக்கு?” என்றதற்கு நேரடியாகப் பதில் சொல்லாது,

 

“வெரசா வாங்க தம்பி. நேர்ல பாத்து பேசிக்கலாம்.” என்று விட்டு வைத்தது தர்மாவின் மனத்தில் புளியைக் கரைத்தது.

 

அவன் பயந்தது போல் ஊர் வந்து இறங்கியதும், சங்கின் ஓசையும், தாரை தப்பட்டையின் சத்தமும் தூரத்தே கேட்டு, அவனுள் குளிர் பரவச் செய்தது.

 

“அண்ணே…” என அலறியபடி வீட்டிற்குள் வந்தவன் கண்டது உயிரற்ற தன் அண்ணனின் உடலைத் தான்.

 

குளிர் பதனப் பேழையில் அடைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன், பெட்டியில் அடித்து கதறிக் கதறி‌ அழுதான்.

 

ஓர் ஆண்மகன் இப்படியும் அழுவானா? என்பது போல் நெஞ்சில் அடித்துக் கொண்டும் தலையில் அடித்துக் கொண்டு அவன் கொட்டித் தீர்த்தான் கண்ணீரை.

 

மகேந்திரன், அவனுக்கு அண்ணனாக மட்டுமல்லாது தோழனாகவும் இருந்தானே.

 

படிப்பு என்று பணம் கேட்டு வீட்டை அடமானம் வைக்கும் போது கூட, “உனக்காகத் தானே டா. வேலைக்கு போய் சம்பாரி. இதை விட நிறைய வீடு வாங்கலாம்.” என்றபடி கையொப்பம் இட்டுக் கொடுத்தவன் அவன்.

 

இறுக்கமாக இருந்த போதும் ஈரமான காளை என்று அவ்வப்போது நிரூபித்தான்.

 

இன்று அவனை வெறும் கூடாகப் பார்க்கையில் நெஞ்சம் பதறியது. கண்கள் இருட்ட கலக்கத்துடன் இருந்தவனைக் கட்டி அணைத்து அழுதார் நெல்லையப்பன்.

 

மூளையில் முடங்கிப் போய் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அமுதா.

 

தனக்குப் பிறக்கவில்லை என்றாலும், தன்‌ அக்கா பிள்ளைகள் என்று பாரபட்சம் பார்த்தது இல்லை அவர். மகேந்திரன் தான் அவரின் மூத்த மகன்.‌

 

தலைச்சம் பிள்ளையை எமனுக்குத் தூக்கிக் கொடுத்து விட்ட வேதனையை இறைவனிடமே சொல்லிச் சொல்லி மனத்திற்குள் சண்டை போட, அவரின் முன் வந்து அமர்ந்தான் தர்மா.

 

“அண்ணா…” எனப் பாய்ச்சலுடன் வந்து அணைத்தாள் அமுதாவிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குழலி.

 

மூவர் இருவராகிப் போனதை எண்ணி அழ, “இப்படி அந்தப் பிள்ளைய பாதில விட்டுட்டுப் போகத்தான் கல்யாணம் பண்ணானா!!” என யாரோ கேட்க, அப்பொழுது தான் நினைவு வந்தவனாக ஆர்த்தியைத் தேடினான்.

 

எப்படி இதைத் தாங்கிக் கொள்வாள்? என்று மனம் அவளுக்காகத் துடித்தது.

 

பெட்டியின் தலை மாட்டில் விட்டத்தை வெறித்தபடி இருந்தவளின் கன்னம் பற்றி அசைத்துக் கொண்டிருந்தான் கர்ணா. 

 

பெண் சிலை நிஜ சிலையாக மாறி கண்ணீரைக் கூட வடிக்காது அமர்ந்திருந்தது.

 

நேரம் செல்லச் செல்ல மகேந்திரனின் உடல் இறுதி பயணத்திற்குத் தயாராக, “எங்கப்பா மகேந்திரனோட சம்சாரம். வரச் சொல்லுங்கப்பா. செய்ய வேண்டியதை செய்யணும்ல.” என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க, தர்மா உட்பட அனைவரின் உடலும் விறைத்து எழுந்தது.

 

இருபதைக் கூடத் தொடாத பாவை அவள். அவளுக்கு விதவைச் சடங்குகளா! என்று ஆத்திரம் மேலோங்க,

 

“இதெல்லாம் செய்யுறது தானப்பா.” என்றனர் ஊர் பெரியவர்கள்.

 

நூறு நாள்கள் கூட முழுதாக வாழாத அவளின் வாழ்க்கையை முழுதாக அறுத்தெறியச் சொல்கின்றனரா? என்று கோபம் வந்தது தர்மாவிற்கு.

 

“எம்மருமகளுக்கு எதுவும் பண்ண நான் விடமாட்டேன்.” என்று நெல்லையப்பனும்,

 

“எந்தங்கச்சிக்கு அப்படிப்பட்ட சடங்கு எதுவும் செய்யக் கூடாது.” என்று கர்ணனும் எழ, சிறு வாக்குவாதம் நடந்தது.

 

ஆனால், கழுத்தில் தொங்கும் தாலிக்கு உரிமைப் பட்டவன் உயிரோடு இல்லாத போது, அதை அணிந்துக் கொண்டு இருப்பது முறையல்ல என்று பலர் வாதிட, இறுதியில் பதினாறாம் காரியம் முடியும் போது செய்துக் கொள்ளலாம் என்று விட்டு மகேந்திரனின் மீட்சிப் பயணம் தொடங்கியது.

 

கண்ணீரும் வேதனையும் இருந்தாலும் இரு தினங்களுக்கு மேல் தர்மாவால் அங்கு இருக்க முடியாது அழைப்பு வந்தது வேலை செய்யும் இடத்திலிருந்து. ஆதலால் புறப்பட்டுச் சென்றான்.

 

பணியாளருக்குத் தங்கிக் கொள்ள க்வாட்டர்ஸ் வசதி இருந்தது. அதில் தான் சகாக்கள் சிலருடன் தங்கியுள்ளான்.  

 

பத்துத் தினங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவனால் தன் அண்ணனின் இழப்பை ஏற்க முடியாது தவித்தான். அவனுக்குத் தியா தான் ஆறுதலாக இருந்தாள்.

 

“பாவம் தியா அவங்க. முழுசா நூறு நாள் வாழ்ந்திருப்பாங்களா? இனி அவன் இல்ல வாழ்நாள் முழுக்க… நினைக்கவே கஷ்டமா இருக்கு.” என்று வருந்த,

 

‘கூடப் பிறந்தவனுக்காக அழாம, எவளோ ஒருத்திக்காக அழறான்.’ என்ற மனத்திற்குள் நினைத்துக் கொண்டாலும்,

 

“ஏன் வாழ்நாள் முழுக்க தனியா இருக்கணும்? அவங்களுக்கு இருக்குற மிச்ச வாழ்க்கையை வாழ இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல.” என்று யோசனை சொல்ல, விருட்டென தலை உயர்த்தினான் தர்மா.

 

“மறுமணமா!”

 

“ம்… நீ என்ன பழைய காலத்துலயா இருக்க. சுதந்திர இந்தியாக்கு முன்னாடியே மறுமணம் புரட்சியா வெடிச்சி, பலரால ஏத்துக்கப்பட்ட விஷயமாகிடுச்சி.”

 

“ஆனா… எங்க ஊர்ல… அது ரொம்ப புதுசே. யாரு முன்வருவா? அப்படியே வந்தாலும்… அவங்கள நல்லா பார்த்துக்கணுமே.” என்று ஆர்த்தியைப் பற்றியே சிந்தித்தான் தர்மா.

 

தர்மா, ஆர்த்தியின் பெயரைச் சொல்லி துடிப்பதும், அழுவதும் தியாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

 

அவன் ஆர்த்தியைப் பற்றியே சிந்திப்பது அவளுக்குத் தவறாக பட்டது.

 

இப்பொழுது மட்டுமல்ல, ஊருக்குச் சென்று வந்த ஐந்து நாள்களில் இருந்தே ஆர்த்தியின் பெயரைத் தான் அவன் அதிகம் கூறினான். அவள் செய்த குறும்பையும், அவள் தன் வீட்டாருடன் பொருந்திய பாங்கையும் சொல்லி, “நீயும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்து, அவங்ககிட்ட இருந்தது கத்துக்க.” என்ற பேச்செல்லாம் பொறாமையைத் தான் தூண்டியது.

 

அண்ணனுக்கு மனைவியாக இருந்த போதே அப்படிப் புகழ்வான். இப்போது சொல்லவா வேண்டும்.

 

ஆதலால் அவளை அவன் வாழ்க்கையில் இருந்து தூர நிறுத்த வேண்டி மறுமண யோசனை தந்தாள்.

 

“இப்ப விபத்துல உங்கண்ணி இறந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க? இந்த வருஷமோ அடுத்த வருஷமோ உங்கண்ணனுக்கு இன்னொரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்களா? அதையே உங்கண்ணிக்குப் பண்ணி வைங்க. ஆம்பளன்னா ஊரைக் கூட்டி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம். பொண்ணுன்னா கூடாதா. உணர்வுகளும் உணர்ச்சிகளும் எல்லாருக்கும் பொது தான் இந்தர்.” என்க,

 

“ஆனா ஊர்ல ஒத்துக்கணுமே.” என்ற எண்ணம் தோன்ற,

 

“நீ பேசி புரியவை. இதெல்லாம் இப்ப சகஜம்ன்னு எடுத்துச் சொல்லு.” என்க, அவன் சிந்தனை வயப்பட்டான்.

 

தன் தங்கையை விடச் சிறிய பெண். விதவைக் கோலம் பூண்டு ஒதுங்கி நிற்க வேண்டுமா… கூடாது. அவளின் மீதி வாழ்க்கையை அவள் சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு மறுமணம் தான் சரியான வழி. தந்தையிடமும் தாயிடமும் இது பற்றிப் பேசி புரிய வைக்க வேண்டும் என்ற முடிவுடன் வந்திறங்கியவனுக்குத் தெரியாது‌ பலி ஆடாக தானே மாறப்போவது.

தொடரும் ...

💛அனிதா குமார்💛

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...