அத்தியாயம்: 3
திருமணம் நடந்ததற்கான
எவ்வித அறிகுறியும் அங்கு இல்லை.
சிறிய கோவில் அது.
அதில் பிரகாரத்தைச் சுற்றி வந்த தர்மா, கருவறையில் சந்நிதானத்தின் முன் வந்து நின்றதும்,
அலங்காரம் செய்து நிற்க வைக்கப்பட்ட சோளக்காட்டு பொம்மை போல் ஆர்த்தி அழைத்து வரப்பட்டு
அவனின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டாள்.
அங்கு இருவரின் பெற்றோர்கள்
மற்றும் ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரின் முன்னிலையில், கோயில் பூசாரி தீபாராதனைத் தட்டில்
புது தாலியுடன் வந்தார். வந்தவர் அதை எடுத்து இறைவனுக்குக் காட்டி வணங்கி விட்டு, தர்மாவின்
கரத்தில் ஒப்படைத்தார்.
வாங்கியவன், அந்தப்
பொன் தாலியை சில நொடிகள் வெறித்தான். பின் தேகம் நடுங்க நின்றுக் கொண்டிருந்த ஆர்த்தியையும்
பார்த்தான்.
அவன் கட்டும் முன்னரே,
பூரிப்புடன் தூவிய அனைவரின் அட்சதைக்கு மத்தியில், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, ஆர்த்தியின்
கழுத்தில் தாலியை அணிவித்து விட்டான் தர்மேந்திரன்.
தன் கழுத்தில் தொங்கிய
புது மஞ்சள் கயிறு, 'இனி அதற்குச் சொந்தக்காரன் இவன் தான்.' என்றது ஆர்த்தியிடம்.
உடல் ஒரு கணம் தூக்கி
வாரிப் போட்டது. எத்தனை தாலியைக் தான் உன் கழுத்தில் தாங்குவாய் என்று யாரோ சொல்லிச்
சிரிப்பது போல் ஒரு பிரம்மை.
விழிகள் கண்ணீரைக்
கொட்டத் தயாராகிய நேரம், திரும்பி தர்மேந்திரன் அவளின் முகத்தைப் பார்த்தான். அவளின்
கலக்கத்தை உணர்ந்ததால்,
"எதுவும் நினைக்காதீங்க
ப்ளீஸ். நாம வெறும் நண்பர்கள் தான். இதெல்லாம் நாடகம். ஸ்கூல்ல சின்னப் பசங்க போடுற
வள்ளி நாடகம் மாதிரி." என்றான் அவளின் காதில்.
நாடகம் என்று அவளுக்காகக்
கூறினானா அல்லது அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டானா என்று தெரியாது.
ஏனெனில் அவனின் மனம்
ஒரு நிலையில் இல்லை. ஒரு பக்கம் தியாவின் மீது தான் வைத்திருக்கும் காதல். மறுபக்கம்
ஆர்த்தி மேலிருக்கும் கருணை. இரண்டில் ஒன்றையும் அவன் இழக்கத் தயாராக இல்லை.
பார்த்துக் கொள்ளலாம்.
எப்படியும் ஆர்த்தியை உடன் அழைத்துச் செல்ல இயலாது. அவளின் உடல் நலன் அப்படி. ஆதலால்
இங்கேயே விட்டுச் சென்றிடலாம். ஓராண்டு... கண்களை மூடித் திறப்பதற்குள் ஓராண்டு முடிந்து
விடும். அதற்குள் வெண்மா கர்ணாவின் திருமணம் முடிந்திருக்கும். அதற்குப் பின் அப்பா
அம்மா என யார் எதிர்த்தாலும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு தன் காதலியிடம் சென்று விடவேண்டும்.
கர்ணன் எதைக் காட்டி
என்னை மிரட்டினானோ அந்தப் புயல் ஓராண்டுக்குள் கரையைக் கடந்து விடும். அதுவரை பொறுமையாக
இருக்க வேண்டும் எனத் திட்டங்கள் போட்டப் பின்னர் தான் மனத்தில் ஒரு தெளிவு பிறந்தது
தர்மாவிற்கு.
விவாகரத்து ஆன பின்
முதல் வேலையாக ஆர்த்திக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துத் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
அறிந்தவர் தெரிந்தவர் நண்பர்களிடம் சொல்லி அவளுக்கு ஏற்ற ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அதுவரை அவள் என் தோழி. அதன் பின்னும் அவள் என் தோழி தான். அதில் மாற்றமில்லை என்று
நினைத்துக் கொண்டு, தன் அருகில் நின்ற ஆர்த்தியின் கரம் பற்றி மெல்லியதாக அழுத்தம்
கொடுத்து அழைத்துச் சென்றான் தன் வீட்டிற்கு. ஏற்கனவே மருமகளாக வந்த அதே வீட்டிற்குள்
மீண்டும் மருமகளாக, அதே நேரம் தர்மேந்திரனின் மனைவியாக கரம் பற்றி நுழைந்தாள் ஆர்த்தி.
அங்கு மகேந்திரனின்
புகைப்படம் பூஜை அறையில் சாமி படங்களுக்கு மத்தியில் மலர் சரத்தால் அலங்கரிக்கப்பட்டு
இருந்தது.
அதைப் பார்க்கும்
போதே ஆர்த்திக்கு மீண்டும் தலை சுற்றல் வர, தள்ளாடினாள் பாவை. அவளை அவளின் அறைக்குள்
அழைத்து வந்தாள் குழலி.
அவளுக்குப் பின்னாலேயே,
தர்மா, பழச்சாறுடன் நுழைய வீட்டாருக்குப் பரம திருப்தி. மகன் தங்கள் மருமகளைக் கவனித்துக்
கொள்வான் என்று பெற்றவர்கள் இருவரும் பூரித்து போயினர்.
ஆனால் அடுத்த நொடியே,
"ப்பா... நான்
கிளம்பணும்..." என்றான் தர்மா.
"என்னப்பா அதுக்குள்ள
கிளம்புறேங்கிற? கூட ரெண்டு நாள் இருக்கலாம்ல?" என்ற அமுதாவிற்கு நெல்லையப்பன்
பதில் சொன்னார்.
"பெரியவெ இறந்தப்பவே
நிறைய லீவ் எடுத்திட்டான். இப்பவும் எடுக்கச் சொன்னா எப்படி? இன்னும் தங்கச்சி கல்யாணம்
வேற இருக்கு. ஊரு திருவிழா, பொங்கல் தீபாவளின்னு வரிசையா எல்லாம் வரும். அதுக்கெல்லாம்
வராம எங்க போய்டப் போறான். நீ போப்பா. கொஞ்ச நாள் போனதும் ஆர்த்திய வந்து கூட்டிட்டு
போ. அதுக்குள்ள அவளோட உடம்பையும் நாங்க தேத்தி வைக்கிறோம்." என்க, அவன் பதிலேதும்
சொல்லாது தலையை மட்டும் அசைத்து விட்டு, அன்றே பஸ் ஏறி சென்னைப் புறப்பட்டுச் சென்றான்
தர்மா...
அவனின் காதலிக்காக.
ஏனோ துரோகம் செய்துக்
கொண்டிருப்பதாக மனம் சொல்லியது. ஆர்த்தியிடம் தியா பற்றிக் கூறியது போல் தியாவிடமும்
ஆர்த்தி பற்றிக் கூறுவது தான் சரி என்று நினைத்தவன், அவளைச் சமாதானம் செய்யப் புறப்பட்டான்.
கிளம்பும் போது,
"பார்த்துக்கோங்க... எதைப்பத்தியும் நினைச்சு வருத்தப்படாதீங்க. நான்… வர்றேன்."
என்று ஆர்த்தியின் முகம் பார்க்காது கூறிச் சென்றான்.
சென்னை செல்லும் பேருந்தில்
ஏறி அமர்ந்தவனுக்கு நினைவுகள் எல்லாம் அவனின் காதலி மீது தான். வேகமாக ஃபோனை எடுத்தவன்
தன் தியாவிற்கு அழைக்க, அது உடனே எடுக்கப்பட்டது.
"ஏன் இந்தர் என்னை
அவாய்ட் பண்ற? உன் குரல் கேட்கணும்னு தானே கால் பண்ணேன்." என்று சொல்லி அழ, அவளைச்
சமாதானம் செய்தபடியே பயணம் செய்தான்.
ஆனால் ஆர்த்தி பற்றி
எதுவும் சொல்லவில்லை. இது ஃபோனில் சொல்லும் காரியமில்லை என்பதால் நேரில் பார்த்துக்
கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் நேரிலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது
என்று எவர் சொல்வாரோ!
பூஞ்சோலை கிராமம்.
நெல்லை மாவட்டத்தின் இயற்கை வனப்புடன் காணப்படும் சிறிய கிராமம். பருவ மழையின் கருணையால்,
நிலமெல்லாம் செழித்து எழில் கொஞ்சும் பசுமையை வாரி வழங்கி, கண்ணுக்குக் குளிர்ச்சியாகக்
காட்சி தரும் ஒரு மலையடிவார கிராமம் அது.
நகரத்தின் வாடையால்
சிலபல முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதும், விவசாயம் தான் அங்கு முதன்மைத் தொழில். உழைக்க
நினைக்கும் அத்தனை பேரும் ஒவ்வொரு தொழிலை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாகவே வலம் வருவர்.
வெட்டியாக எவரும் இல்லை அங்கு என்று சொல்லுமளவிற்கு ஜனங்களின் நடமாட்டம் இருக்கும்.
நெல்லையப்பனும் விவசாயி
தான். இருக்கும் சில ஏக்கரில் நெல்லை விதைத்து, அறுவடை செய்யும் நடுத்தரக் குடும்பம்.
சில மாடுகளை வைத்துக் கொண்டு பால் வியாபாரமும் செய்கின்றனர்.
அவருக்கு மகேந்திரன்,
தர்மேந்திரன், வெண்குழலி என்று மூன்று மகவுகள்.
நேர்மையும் நாணயமும்
கொண்ட நெல்லையப்பன் வெள்ளந்தியான மனிதர். தனது பிள்ளைகள் தான் உலகம் என்று அலாதியான
அன்பு செலுத்தி வளர்த்தவர். அதிலும் தர்மாவின் மீது அவருக்கு அதீத அன்பு.
நெல்லையப்பனின் மனைவி
கிருஷ்ணவேணி. தர்மாவின் ஐந்தாவது வயதில் அவர் உயிர் துறக்க, இரண்டாவதாக வந்தவர் தான்
அமுதா.
அந்த வெள்ளந்தி மனிதருக்கு
வாய்த்த விவரமான மனைவி. கிருஷ்ணவேணியின் தங்கை தான் அமுதா. ஆனால் அக்காவைப் போல் அல்லாது
சற்றுக் கறாராகத் தான் இருக்கும் அவரின் குரல். ஆனால் குடும்பம் என்று வந்து விட்டால்
நெல்லையப்பன் தான் எல்லாம் என்று விட்டு விடுவார். அறுவடைக் கணக்கு, உரக்கணக்கு, பால்
கணக்கு எனக் கணவனையும் வேலையாட்களையும் குடைந்து குடைந்து எடுக்கும் அவர், வீட்டில்
நெல்லையப்பன் பேச்சிற்கு எதிர் பேச்சுக் கிடையாது என்பது போல் அடங்கித் தான் போவார்.
அந்த வீட்டைப் பொறுத்தவரை
நெல்லையப்பன் எடுப்பது தான் முடிவு. அதற்காகப் பிள்ளைகள் மீது தன் விருப்பத்தைத் திணித்ததில்லை.
பிள்ளைகளிடமும் மனைவியிடமும் அபிப்பிராயம் கேட்காது எதையும் செய்ய மாட்டார்.
மூத்தவன் மகேந்திரன்.
முப்பது வயதை எட்டிப் பார்க்க இன்னும் ஒரு ஆண்டுகளே உள்ளது என்று சொல்லும் இளம் காளை.
கம்பீரமான காளை தான் அவன். அடாவடி குணம் கொண்ட முரட்டு வீரன்.
மகேந்திரனுக்குப் படிப்பு
சுத்தமாக வரவில்லை. அப்படிச் சொல்லக் கூடாது அதை, தந்தைக்குப் பிறகு தான் தான் எல்லாம்
என்ற நினைப்பே அவனைப் பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்க விடவில்லை.
நெல்லையப்பன் தான்
அந்த ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியில் உள்ளார். தலைவரின் மகன் என்ற மிதப்பை அவன்
பேச்சில் மட்டுமல்ல உடல் மொழிகளிலும் காணலாம்.
அடுத்தவன் தர்மேந்திரன்.
வயதோ இருபத்தி ஏழு. கருப்பும் அல்லாது வெளுப்பும் அல்லாது நடுத்தர நிறத்தில், கட்டுமஸ்தான
உடலுடன் இருக்கும் அழகன்.
அந்த உடல் அவனுக்குத்
தொடர்ந்து கால்பந்து விளையாடுவதால் கிடைத்தது. படிப்பில் கெட்டி. நெல்லையப்பனைப் போல்
குடும்பத்தின் மீது பாசம் அதிகம்.
அவன் வாங்கிய விளையாட்டுச்
சான்றிதழ்களால் அவனுக்குச் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் இடம் உடனடியாக கிடைத்தது.
B.E மெக்கானிக்கல்
இன்ஜினியரிங் முடித்து விட்டு அதே துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவன்.
ஏட்டுப் படிப்பைப்
புரிந்து திறம் பட தேறியவனுக்கு ஆங்கிலப் புலமையில் இருந்த தயக்கமும் பயமும் பின்னடைவாக
அமைந்தது. ஆங்கிலத்தில் தெளிவாக, சரளமாக பேசாத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு
செய்த பல நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் சிறக்க முடியாது போனது.
இன்ஜினியரிங் படிப்பு
என்பது இலவசமாகக் கிடைப்பது இல்லையே. அதிலும் சென்னையில் எனும் போது செலவுகள் இரட்டிப்பாக
இருந்தன. அதிலும் இரு பட்டங்கள்… சும்மா கிடைக்காதே.
கல்லூரி, விடுதி, உணவு
எனக் கட்டணங்கள் செலுத்த லகரங்களில் பணம் தேவைப்பட்டது. நெல்லையப்பனுக்குச் சில கோடி
மதிப்புள்ள பரம்பரை சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவை அங்காளி பங்காளி தகராறால் வழக்காக
நீதிமன்றத்தில் உள்ளது. விவசாயமோ வாயிக்கும் வயிற்றிற்கும் சரியாக இருந்தது.
அதனால் தன் வருமானத்தில்
வாங்கிய வீட்டை அடமானம் வைத்து, வங்கியில் கடன் வாங்கி எனச் சில லட்சங்கள் செலவானது.
எப்படியும் சம்பாதித்து
அந்தக் கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்று நினைத்தவனுக்கு எடுத்த உடனேயே லட்சத்தில்
சம்பளம் யார் கொடுப்பார்கள்.
வீடு அடமானத்தில் இருப்பதை
நினைத்து அவன் வருந்தும் போதெல்லாம்,
“நீ எதுக்குப்பா கவலைப்
படுற. நான் இருக்கேன் அண்ணே இருக்கான். நாங்க பார்த்துக்கிறோம்.” என்றார் நெல்லையப்பன்.
“இந்தப் போகம் நல்ல
விளைச்சல் தர்மா. பாதி கடன் முடிஞ்சது. அடுத்து வருஷமும் இதே மாதிரி இருந்தா எல்லாம்
நல்லபடியா அமையும். நீ எங்களப் பத்தி கவலைப்படாம படிப்பை மட்டும் பாரு.” என்று நம்பிக்கைக்
கொடுத்தான் மகேந்திரன்.
கடனைத் தந்தையும் தமையனும்
அடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு அவனுக்கு குற்ற உணர்வைத் தர, வேறு வழியின்றி
தானாக வேலை கிடைக்கும் என்று உட்கார்ந்திருக்காது, கார் மெக்கானிக்காக சில காலம் வேலை
செய்தான்.
படித்ததோ பெரிய படிப்பு…
ஆனால் பார்ப்பது சாதாரண மெக்கானிக் வேலை என்று சிலர் கேலிக்கு ஆளாக, அவனின் காதலி தியாவின்
வழிகாட்டுதலின் பேரில் மீண்டும் படிக்க முடிவு செய்தான்.
முதுகலைப் பட்டம் சேரும்
போது பழக்கமானாள் சுப்ரீதியா.
பொறியியல் கல்லூரி
பேராசிரியர் சுஜாதாவின் மகள். தாய் மட்டும் தான். அதுவே அவளிடம், தர்மாவைக் கருணையுடன்
அணுக வைத்தது.
தனியார் கல்லூரி எம்.காம்
படித்து முடித்து விட்டாள். இப்பொழுது பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறாள்.
சுஜாதாவைப் பார்க்க
பொறியியல் கல்லூரிக்கு வந்தவள், தர்மாவைப் பார்த்து விட்டாள். பார்த்ததும் அவளுக்குத்
தர்மாவின் மீது காதல் வந்து விட, அதை அவனிடம் கூறினாள். இவனுக்கும் அவளை நிராகரிக்க
காரணங்கள் இல்லை.
அழகோவியமான ஒரு நவநாகரீக
மங்கைத் தன்னைத் தேடி வந்து காதல் எனும் போது யாருக்குத் தான் மறுக்கத் தோன்றும்.
காதலித்தனர்.
தந்தையில்லா பெண் என்பதால்
அவளுக்குத் துணையாக, அனைத்தையும் செய்தான்.
கார் மெக்கானிக் கம்பெனியில்
வேலை பார்த்தவன், பணம் போதவில்லை என்று புலம்ப, உன் படிப்பிற்கு ஏற்ற வேலையைச் செய்
என்று உந்தித் தள்ளி யோசனைகள் கொடுத்தது அவள் தான்.
Bhabha automatic
research centre (BARC) என்ற பெயரில் மும்பையில் செயல்படும் ஒரு பயிற்சிப் பள்ளியில்
சேர்த்தான்.
அது ஒரு ரெடியேஷன்
ப்ரோட்டெக்ஷன் ஸ்கூல். ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை அங்கு பயிற்சி பெற்றவன், ஒரு வருடம்
பயிற்சி இன்ஜினியராகப் பணிக்குச் சேர்ந்தான்.
மெட்ராஸ் அட்டோமிக்
பவர் ஸ்டேஷன் அதான் நம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சேஃப்டி என்ஜினீயர் ஆகப் பணிபுரிகிறான்.
கடைசியாக வெண்குழலி.
கலைக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
அமுதாவின் மகள். அந்த
வீட்டின் தேவதை அவள். அண்ணன்கள் மற்றும் தந்தையின் செல்லம். மகேந்திரனுக்கும் குழலிக்கும்
இடையே கிடைத்தட்ட பல ஆண்டுகள் இடைவெளி என்பதால் அண்ணனாக அல்லாது தந்தை போல் கண்டிப்புடன்
நடந்துக் கொள்வான். ஆனால் தர்மா அப்படி அல்ல. கலகலவென பேசிச் சிரித்து அவனிடம் வம்பிழுத்து
விளையாடினாலும் பொறுமையாக, பொறுப்பாகவும் இருப்பான். அதனாலேயே குழலிக்குத் தர்மா என்றால்
உயிர்.
அண்ணா அண்ணா என்று
காலைச் சுற்றிக் கொண்டு வருவாள்.
மொத்தத்தில் நல்ல சந்தோஷமானக்
குடும்பம் தர்மாவுடையது.
மகேந்திரனுக்குத் திருமணம்
முடிக்க வேண்டி, ஜாதகத்தைக் கையில் எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் பெண்
தான் அமையவில்லை. ஜாதகம் பொருந்தினால் பெண் பார்வைக்கு லட்சணமாக இல்லை. லட்சணம் பொருந்தினால்,
அவர்கள் வீட்டாள் போல் கலகலக்காத, அமைதியான உம்மணா மூஞ்சியாக வந்து சிக்குகிறது. அனைத்தும்
இருந்தாலும் ஏதாவது காரணத்தால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
அன்றொரு நாள், வயலுக்கு
உரங்கள் வாங்க வேண்டி டவுனுக்குச் சென்றிருந்த
நெல்லையப்பன், இசக்கிமுத்து எதேர்ச்சையாகச் சந்தித்துக் கொண்டனர். பழைய நட்பு
புதுபிக்கப்பட்டது.
“ஏலே நீ நம்ம சோனையப்பன்
மவென் நெல்லையப்பன் தானே.” என்ற இசக்கிமுத்துவை அடையாளம் தெரியாமல் பார்த்தார் நெல்லையப்பன்.
“எனிய தெரியலயா? செல்வராசு
மவென். சேத்தப்பட்டி செல்வராச தெரியாதா?” என்றதும்,
“அட நீயாம்லே… கல்யாணத்துக்குப்
பெறவு ஊர் பக்கமே வராம இருந்துப்புட்ட. அதான் ஆளு யாருன்னு சட்டுன்னு பிடிபடல. இப்ப
இங்கன என்னல செய்யுற?” என்றவருக்குத் தன் பக்கத்து ஊரில் வசித்த செல்வராசுவின் குடும்பம்
நினைவு வந்து விட்டது போலும்.
“டவுனுக்குள்ள வியாபாரம்
பாத்துக்குறோம்ல. இது எம்மட கடை தான்”
“நீ எங்கயோ உஞ்சாம்சாரம்
ஊர் பக்கத்துல வியாபாரம் பாக்குறதா கேள்விப் பட்டேன். இப்ப இங்கன கையக் கட்டி, கல்லாவ
திறந்து வச்சிட்டு உக்காந்திருக்க?”
“வியாபாரமெல்லாம் நட்டமாகிப்
போச்சி ப்பா. அதோட சம்சாரமும் இறந்து போச்சி. சரி பொண்டாட்டி தான் இல்ல வியாபரமாது
இருக்குன்னு அங்கனயே இருந்தேன். அதுவும் நொடிக்கவும் சொந்த ஊருக்கே வந்திட்டேன். அப்றம்
அக்கா நல்லா இருக்காங்களா. வீட்டுல பிள்ளைக் குட்டிங்கெல்லாம் என்ன செய்து?” என்று
ஆரம்பித்தப் பேச்சு,
“சின்னவனுக்குப் பட்டணத்துல
வேலை கிடைச்சிருக்கு. கடைக்குட்டிக்கு ஒரு வருஷ படிப்பு இருக்கு. மூத்தவனுக்கு ரெண்டு
வருஷமா பொண்ணு பாத்திட்டு இருக்கேன். அமைவேனான்னு சாதிக்கிது.” என்றதும்,
“எம்மவளுக்கும் பாத்திட்டு
தான் இருக்கேன். எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு தான்.” என்ற போது இருவருக்கும் பெண் கொடுத்து
பெண் எடுக்கும் யோசனை வந்தது.
முதலில் அமுதா இதற்கு
சம்மதிக்கவில்லை என்றாலும் ஆர்த்தியை நேரில் பார்த்த பின், “குழலிய அவுக பையனுக்கு
எடுக்குறாகளோ இல்லையோ. அந்தப் பிள்ளைய நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருங்க. பார்க்க
அமைதியாவும் அம்சமாவும், பழக நல்லாவும் இருக்கு பொண்ணு.” என்றார் அவர்.
நெல்லையப்பர் கோவிலில்
வைத்து ஆர்த்தியைப் பார்த்த பின்னும் அவளின் அடக்கமான துறுதுறுப்பு மற்றும் பேச்சைக்
கேட்ட பின்னும் அவளைப் பிடிக்காமல் எப்படிப் போகும்.
“நம்ம குடும்பத்துக்கு
ஏத்த பொண்ணு அவ தான்.” என்று நற்சான்றிதழ் தர, கல்யாண வேலைகள் கடகடவென நடக்கத் தொடங்கியது.
முதலில் மகேந்திரன்
ஆர்த்தி திருமணம். பின் ஆறு மாத இடைவெளியில் கர்ணன் மற்றும் வெண்குழலியின் திருமணம்
என்று பேசப்பட்டது.
“ப்பா… ட்ரெயினிங்
முடியும் முன்ன லீவ் எடுத்தா எப்படிப்பா?” என்ற தர்மாவால் தன் அண்ணன் திருமணத்தில்
கலந்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால் தவிப்பு இருந்தது.
தன் குடும்பம் அங்கு மகிழ்ச்சியில் திளைக்க, தன்னால் செல்ல முடியாததை எண்ணி வருந்தான்
அவன்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..