முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

உறவு 2

 




அத்தியாயம்: 2

 

கட்டிலின் அருகில் நின்று, ஆர்த்தியின் முகத்தைப் பார்த்தபடி நின்றவனைத் தள்ளிக் கொண்டு ஆர்த்தியின் கால் மாட்டில் அமர்ந்தார் ஒரு பெண். ஆர்த்தியின் உறவினர். சித்தி முறை. முகத்தில் சோகத்தை ஒட்டிக் கொண்டாலும் ஆர்த்தியின் மீது பரிவோ பாசமோ இல்லாதது போல் வளைய வந்தார்.

 

மின் விசிறி சுழன்றாலும், காற்று பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது மனப் புழுக்கத்தின் காரணமாகவோ வியர்த்து வடிந்தது ஆர்த்திக்கு. அவளுக்குப் பனை ஓலை விசிறியில் சாமரம் வீசினார் அவர்.

 

அவருக்குப் பின்னாலேயே குழலி கையில் ஆரஞ்சு சாறுடன் வந்தாள். அதை வாங்காது மறுத்தாள் ஆர்த்தி.

 

"ஆர்த்திம்மா... ஆர்த்தி...  அம்மா சொல்றேன்ல… இதைக் கொஞ்சம் குடிம்மா." என்று அவளுக்குக் கட்டாயப்பட்டுத்திப் புகட்டி, முழு டம்ளரையும் காலி செய்ய வைத்தார் அமுதா.

 

அறைக்குள் பாசப்‌போராட்டம் நடக்க, வெளி வந்தவனை எதிர் கொண்டது ஆர்த்தியின் தந்தை இசக்கிமுத்துவும் அவனின் தந்தை நெல்லையப்பனும் தான்.

 

இருவர் முகத்திலும் எங்கே இந்தத் திருமணத்தை இவன் மறுத்து விடுவானோ என்ற கவலையும் சோர்வும் அதிகமாகவே தெரிந்தது.

 

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு பெண் மருத்துவர், ஆர்த்தியின் அண்ணன் கர்ணனால் அழைத்து வரப்பட்டார்.

 

தெம்பில்லாது கிடந்தவளைப் பரிசோதித்த அவரோ, வீட்டாரை நன்கு திட்டி விட்டுச் சென்றார்.

 

“மருமக மருமகனு உருகுறீங்க. சத்தானதா சாப்பிட வைக்கத் தெரியாதா? ரொம்ப வீக்கா இருக்காங்க. இப்படியே விட்டா உசுருக்குத் தான் ஆபத்து. இப்போதைக்கு ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏத்தணும். சிரமம் பார்க்காம ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூட்டிட்டு வாங்க.” என்றதால் ஆர்த்தியைக் காரில் ஏற்றிச் சென்றனர்.

 

ஊரில் இருந்த அந்தச் சிறிய மருத்துவமனையின் முன் குடும்பமே தவம் கிடந்ததைப் பார்க்கையில் தர்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

 

இரு மாதங்கள் இருக்குமா! அந்தப் பெண் இந்த வீட்டிற்கு வந்து. அத்தனை குறுகிய காலத்திற்குள் ஒரு பெண் இத்தனை தூரம் தன் குடும்பத்துடன் ஒன்றிப் போயிருப்பாள் என்று அவன் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை.

 

அத்தனை பாசம், அவள் மீது அவர்களுக்கும், தன் அன்னையை அம்மா என்று அழைக்கும் அளவிற்கு அவர்கள் மீது அவளுக்கும் இருந்தது. அந்தப் பாசம் தான் அவளின் ஜீவனை இழுத்து வைத்திருக்கிறது.

 

வாசலில் நின்ற அத்தனை பேரின் முகத்திலும் சோகம். அவர்களைக் காணச் சகிக்காது நகர்ந்துச் சென்றவனின் கண்களுக்கு ஜன்னலுக்குப் பின் தெரிந்தாள் ஆர்த்தி.

 

கலைத்துப் போட்ட ஓவியம் போல் மெத்தையில் படுக்கவைக்கப் பட்டிருந்தாள்.

 

இரக்கம் தோன்றியது அந்தக் குழந்தை முகம் கொண்டவளின் மீது.

 

ஐந்து ஆண்டு காதலை எல்லாம் புறம் தள்ளி, தன் முன் இருந்தவளின் துயர் துடைப்பது முக்கியமாகப்பட்டது. அவளின் சந்தோஷமும் நிம்மதியும் முதன்மையாகப் பட்டது அவனுக்கு. அவளின் முகத்தில் சிறிது புன்னகையை எட்டிப் பார்க்க வைப்பது தன் தலையாயக் கடமையாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் தேன்றியது.

 

முக்கியமாக தன் குடும்பத்தாரின் நிம்மதி அவளிடம் தான் உள்ளது என்பதை இந்த பத்து நாளில் தெரிந்துக் கொண்டான்.

 

‘அவளுக்கு நீ தேவை.’ என்றது அவனின் ஆழ் மனம்.

 

"அப்ப எனக்கு? நீ எனக்கும் முக்கியம் இந்தர். நீ இல்லாம நான் எப்படி? என்னை நீ காதலிக்கவே இல்லையா இந்தர்?" எனக் கேட்டபடி அவனின் காதலி முன் வந்து நிற்பது போல் ஒரு பிரம்மை.

 

விழிகளை மூடித் திறந்தவன், ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, ஆர்த்தி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கு ஏறிய குளுக்கோஸ் முடிந்திருந்தது. அவள் உடலில் உள்ள ரத்தம் பாட்டிலுக்கு ஏறிக் கொண்டிருந்தது.

 

“டாக்டர்… நர்ஸ்...” எனக் கத்தியவன் செவிலியரின் உதவியுடன் அதை மாற்றிவிட்டு அவரைப் பிடித்துத் திட்ட‍,

 

“அவங்க முழிச்சி இருக்காங்க. டிப்ஸ் முடியவும் சொல்வாங்கன்னு நினைச்சேன்ண்ணா. மன்னிச்சிடுங்க.” என்றார் பணிவாக.

 

அவரை அதற்கு மேலும் கடிய முடியாது. ஏனெனில் அவர் சொன்னது போல் ஆர்த்தி விழிகளை மூடாது குளுக்கோஸ் பாட்டிலை தான் வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். பாட்டிலுக்குள் அவளின் இரத்தம் இடம் பெயர்ந்தது கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் பதியவில்லை.  

 

ஏன் அவன் இப்போது செய்த களேபரத்தில் கூட அவளின் தலை திரும்பவில்லை.

 

கட்டிலுக்கு அருகில் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தவன், டிரிப்ஸ் முடிந்ததால் ஊசியைக் கழட்டிச் சென்ற இடத்தைப் பார்த்தான். அது கன்றியிருந்தது.

 

“வலிக்கிதாங்க?” என்று அக்கறையுடன் அவளிடம் பேச முனைய, அந்தப் பெண் சிலை அசையவில்லை.

 

அவளின் கண்களுக்கு முன் தன் விரல்களை ஆட்டி கவனத்தை ஈர்த்தான்.

 

அவனின் வருகையைக் கண்டு எழ முயன்றவளைத் தடுத்தவன்,

 

“நா...ன் முடிவு பண்ணிட்டேன். இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலாம்னு…” என்றதும் வெடுக்கென தலை உயர்த்தி அவனின் முகம் பார்த்தாள் பெண்.

 

இது தான் முதல் முறை அவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்ப்பது. இரு மாதங்களாக அவன் வீட்டில் தான் இருக்கிறாள். படிப்பு மற்றும் வேலையைக் காரணம் காட்டி வீட்டுப் பக்கமே வராது இருந்தவனுடன் பேசி, பழகியது வெறும் ஐந்து நாள்கள்‌ தான். அதுவும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் வந்திருந்த சமயம் மட்டுமே.

 

அந்த ஐந்து நாளும் அவன் முகம் பார்த்தது இல்லை. தோழமையுடன் அவன் பேச முன்வந்தாலும் அவள் நிலம் நோக்கித் தான் பதில் தந்தாள்.

 

வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் அவனின் புகைப்படத்தைப் பார்த்திருந்தாலும் நேருக்கு நேர் பார்க்கவில்லை அவள்.

 

இன்று முதல் முறை அவனைப் பார்க்கிறாள். கண்களைப் பார்த்தாள். அதைத் தவிர்த்து வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. தர்மாவின் வசீகரம், உயரம், இளமை மின்னும் ஆண்மை என எதையும் புத்திக்குள் ஏற்றவில்லை. அவள் மட்டுமல்ல அவனும் அவளின் விழிகளைத் தான் பார்த்துப் பேசினான். அந்த நேத்திரங்களைத் தாண்டி பார்வை செலுத்த முனையவில்லை அவன்.

 

அவனின் பார்வையில் அவள் மீதான மரியாதையும், பரிவும் மட்டுமே இருந்தது.

 

“அம்மா அழறாங்க. அப்பா வருத்தப்படுறாருன்னு இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கல. உங்களுக்காகத் தான் சம்மதிக்கிறேன். நம்ம குடும்பத்துக்காவும் தான்.” என்றதும்,

 

‘எனக்காகவா? நம்ம குடும்பமா? இனியும் நான் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியா?’ என்பது போல் புருவங்கள் கேள்விக் குறியாய் உயர்ந்தன.

 

“நமக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நிறைய இருக்கு. ஆனா எல்லாத்தையும் மீறி நம்ம ரெண்டு பேருக்கும் நம்ம குடும்பம் முக்கியம். எனக்கும் என்னோட குடும்பம் முக்கியம். அந்தக் குடும்பத்துல இருக்குற உங்களையும் நான் இழக்க விரும்பல. நீங்களும் என்னோட குடும்பம் தான். இந்தக் கல்யாணம் நடக்கலன்னா என்னோட குடும்பம் நிறைய இழப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே இழந்தது போதும்னு நினைக்கிறேன். அதுனால…” என்றபோது கண்ணீர் துளிகள் உருண்டோடி வடிந்தது அவளுக்கு.

 

அவளும் அந்தக் குடும்பத்தை இழக்க மனமில்லாமல் தானே தவிக்கிறாள். பிறந்த வீட்டை விட அதிகமாகவே நெல்லையப்பன் குடும்பத்துடன் ஒட்டி விட்டாளே.

 

ஆனாலும் இவனை மணந்துக் கொண்டு, அவனின் மனைவியாக எப்படி இருக்க முடியும்? என்ற தவிப்பு அவளிடம் இருந்தது‌ நிஜம். அவளின் மனக்குமுறலை அவளின் முகம் காட்டிக் கொடுக்க,

 

“என்னை நம்புறீங்களா?” எனக் கேட்டபடி அவளின் முகம் பார்த்தான் தர்மா. ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டது போல் தலை தானாக அசைந்து அவனை நம்புவதாகச் சொன்னது.

 

சின்னச் சிரிப்புடன், “நாம ஒரு அஞ்சு நாள் நல்லா பழகிருப்போமா?” என்றவன் அவள் பதில் தர இடைவெளி கொடுத்தான்.

 

அவள்‌ அதற்கும் தலை அசைத்தாள்.

 

“அப்ப நமக்குள்ள நல்ல நட்பு இருந்ததா நான் உணர்ந்தேன். அந்த நட்பு கடைசி வரை நீடிக்கும். அது தான் நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற உறவு. அது மட்டுமா தான் இருக்கும். அதுல மாற்றமில்லை. கல்யாணம் முடிஞ்சாலும் என்னை உங்க ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க.” என்றதும் மீண்டும் ஏன் என்றன அவளின் புருவங்கள்.

 

'எனக்காக ஏன் உங்கள் காதலைத் தியாகம் செய்கிறீர்கள்?' எனத் தனக்குள் கேட்க, அதற்கு பதிலாக,

 

“என்னால சுயநலமா யோசிக்க முடியலங்க. என்னோட சிந்தனை முழுசும் அப்பா அம்மான்னு இந்தக் குடும்பத்தைச் சுத்தி தான் இருக்கும். நான் கொஞ்சம் ஃபேமிலி அட்டாச்மெண்ட் உள்ள பையன். அவங்கள மீறி நான்.‌..” என்று இமை மூடித் திறந்தவன்,

 

“எப்படி உங்களால என்னை உங்க லைஃப் பார்ட்னரா நினைக்க முடியாதோ! அதே மாதிரி என்னாலயும் உங்கள அப்படிப் பார்க்க முடியாது. ஆனா இந்தக் கல்யாணம் அவசியம் தேவை. நம்ம குடும்பத்துக்காகப் பண்ணித் தான் ஆகணும். அவங்க சந்தோஷத்துக்காகன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் நாம சந்தோஷமா இல்லன்னா அவங்க மனசு உடைஞ்சி போய்டும். அதுனால தான் என்னை உங்க ஃப்ரெண்டா ஏத்துக்கோங்கன்னு சொல்றேன். நீங்க இந்த இறுக்கமான சூழ்நிலைல இருந்து வெளில வந்து நார்மலான லைஃப்பை வாழணும்னு ஆசைப்படுறேன். சோ நீங்களும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்.” என்க,

 

அவனின் நீளமான உரையைக் கேட்டு முடித்தவளுக்கு அதுவரை பெரிதாகத் தெரிந்த அவளின் இழப்பு குறைந்து, தனக்காக மெனக்கெடும் இந்தக் குடும்பத்தையும், தனக்காகத் தன் வாழ்க்கையை பணயம் வைப்பவனையும் பார்த்து கழிவிரக்கம் கொண்டது மனம்.

 

அனைத்திற்கும் சம்மதிப்பதாகத் தலையசைத்தாள். அவனின் உதடுகள் மெல்லிய இழுவையில் விரிந்தன.

 

“தேங்க்ஸ்… என்னை நம்புறதா சொன்னதுக்கு. காலைல சீக்கிரம் எழுப்பி விட்டுடுவாங்க. இப்ப எதைப் பத்தியும் யோசிக்காம, நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க.” என்று விட்டுச் சென்றான். 

 

வெளியே வந்தவன், "ப்பா... நாளைக்கு செய்ய வேண்டியதை செய்ங்கப்பா. எனக்கு முழுச் சம்மதம். கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க." என்று நெல்லையப்பனிடம் சொல்ல, அதைக் கேட்ட இசக்கிமுத்துவிற்கு அத்தனை சந்தோஷம்.

 

"ரொம்ப நன்றி மாப்ள... எங்க நீங்க எங்களத் தப்பா புரிஞ்சிப்பீங்களோன்னு பயந்து போய்ட்டோம் மாப்ள. இப்பத்தான் நிம்மதியா இருக்கு." என்று கண்ணீருடன் சொல்ல, தர்மாவின் முதுகில் ஆதுரமாக கரம் வைத்தார் நெல்லையப்பன்.

 

"நீ பண்ணப்‌ போறது பெரிய விசயம் ப்பா. நான் உன்னைக் கட்டாயப்படுத்துறதா நினைக்காத. அது நம்மள நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது. நாம தான் நல்லா பார்த்துக்கணும்." என்க,

 

"பார்த்துக்கலாம்ப்பா..." என்று விட்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

அறையை அடைந்தவனின் செல்போன் பல முறை உன்னைத் தொடர்பு கொள்ள ஒருவர் முயன்றிருப்பதாகச் சொல்லியது.

 

யார் என்று தெரியும். மீண்டும் அழைக்கும் எண்ணமில்லை. அதே நேரம் அழைக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்றும் தெரியும்.

 

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன், கால் செய்தான்.

 

ஒரு ரிங் சென்றதும், "இந்தர்... ஏன் இவ்ளோ நேரம்? நான் எத்தனை தடவை தான் கூப்பிடுறது. நீ எடுக்கலன்னதும் நான் பயந்துட்டேன்." என்று கண்ணீருடன் கொஞ்சினாள் ஒரு பாவை.

 

"இங்க நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு தெரியும் தானே..." என்பதற்குள்,

 

"தெரியும்… ஆனாலும் நான் உனக்குக் கூப்பிடுவேன்னும் உனக்கும் தெரியும் தானே. ஏன் கால் பண்ணல? நான் பண்ணாலும் எடுக்கல ஏன்?” என்று சண்டை போட, எரிச்சல் வந்தது அவனுக்கு.

 

“இங்க சூழ்நிலை கொஞ்சம் சரியில்ல தியா… சரியானதும் பேசலாம்னு இருந்தேன்.”

 

“என்ன சூழ்நிலை?” என்றவளுக்கு அவன் பதில் கூறும் முன்,

 

“எதுவா இருந்தாலும் அவங்க பார்த்துக்கட்டும்ன்னு நான் சொன்னேன்ல. நீ டென்ஷன் ஆகிக்காத. நீ… இப்ப உடனே கிளம்பி வா. நான் உன்னைப் பார்க்கணும்." எனக் கீச்சுக் குரலில் மொழிய,

 

"இன்னைக்கு காலைல தான் என்னோட வீட்டுக்கு வந்திருக்கேன் தியா. இன்னும் நான் வந்த காரியம் முடியல."

 

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் உன்னைப் பார்க்கணும். விடியவும் பஸ்ல ஏறி வந்திடு. ப்ளீஸ்… உங்கிட்ட முக்கியமான விசயம் பேசணும். என்னால நீ இல்லாம சமாளிக்க முடியாது இந்தர்." என்று காதல் பேச, தர்மா எரிச்சலாக உணர்ந்தான்.

 

"நாளைக்கு முடியாது… இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு நினைக்கிறேன். இங்க கொஞ்சம்..."

 

"என்ன ரெண்டு நாளா?? இந்தர் ப்ளீஸ் இந்தர்..‌.இது ரொம்ப அவசரம். வா இந்தர்...." என்று கெஞ்ச, அவன் முடியாது என்று உறுதியாக மறுத்ததும், அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். காச் மூச் எனக் கத்த, அவனே அழைப்பைத் துண்டித்துவிட்டு மெத்தையில் ஃபோனைத் தூக்கி எறிந்தான். ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துக் கொண்டே இருக்க, ஸ்விச் ஆஃப் செய்து வைத்தான்.

 

அது சுப்ரீதியா. தர்மாவின் காதலி. எப்பொழுது அவனிடம் பேசினாலும் கொஞ்சி கொஞ்சியே கிள்ளை மொழியில் பேசுகிறேன் என்று நாணி கோணித் தான் பேசுவாள். அதில் அவனுக்கு ரசனையும் உண்டு. மயக்கும் குரல் அவளுடையது. குரல் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான் அசாத்திய அழகுடன் இருப்பாள். காதலிக்கத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் அவளின்‌ பேச்சில் லயித்திருந்தவனுக்கு, சில காலமாக எரிச்சல் தான் வந்தது.

 

இன்று அது கோபமாக மாறியது.

 

அது ஆர்த்தியுடன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதால் வந்தது அல்ல.

 

நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று அவளுக்குத் தெரியும். தன் சூழ்நிலையும் தெரியும். தெளிவாக விளக்கி விட்டுத் தான் வந்திருந்தேன். ஆனாலும், 'ஏன் என் அழைப்பை எடுக்கவில்லை?' என்று சமயம் பார்க்காது சண்டை போடுவதும், 'உன்னைப் பார்க்கணும். உடனே வா.' என்று அவனின் பேச்சையும் நிலைமையையும் காது கொடுத்துக் கேட்காது உத்தரவு போடுவதும் அவனுக்கு உவர்ப்பாக இருந்தது.

 

அயர்வுடன் கட்டிலில் ஆயாசமாகத் தலை சாய்க்க, "மச்சான்..." என்றக் கூவலுடன் வந்தான் கர்ணன்.

 

அவனைக் கண்டதும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தான் தர்மா. "அப்பா இப்பத்தான் சொன்னாரு. கல்யாணத்துக்குச் சம்மதம்‌ சொல்லிட்டீங்களாமே. ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சான். படிச்சவன் படிச்சவன் தான்னு நிரூப்பிச்சிட்டீங்க." என்க,

 

"என்னை மிரட்டி காரியம் சாதிச்சிட்டு புதுசு புதுசு எதையாவது பேசாத கர்ணா." என்று குரல் உயர்த்தினான் தர்மா.

 

அவனை வியப்புடன் பார்த்தான் கர்ணா. தர்மா அமைதியான சுபாவம் கொண்டவன். அவன் கோபப்பட்டு யாரும் பார்த்ததே இல்லை. ஊருக்குள் இருக்குமிடம் தெரியாது இருப்பவன் அவன்.

 

அன்றும், இன்றும் புதிதாக உயர்ந்த குரலில் சிறு வியப்பு உண்டாக, "மிரட்டலாம் செய்யல மச்சான். எந்தங்கச்சியோட வாழ்க்கைக்காகத் தான்..." என்று இழுக்க,

 

"நாங்க அவங்களச் சும்மா விட்டுடுவோம்னு எப்படி நீ நினைக்கலாம்? அப்பா இருக்காரு. அம்மா இருக்காங்க. நான் இருக்கேன். வெண்மா இருக்கா. போதாததுக்கு ஆறு மாசத்துல உனக்கும் வெண்மாக்கும் கல்யாணம். சொந்தம், சம்மந்தம்னு எதுவும் விட்டுப் போகாது. இப்படி எல்லாரும் இருக்கும் போது அவங்களத் தனியா விட்டுடுவோமா?" என்றான் காட்டமாக.

 

"யார் இருந்தாலும் கடைசி வரை கூடவே இருக்க முடியாது மச்சான். அதுவும் ஒரு பொம்பளப்பிள்ளைக்கு எந்த ரத்த உறவும் நிரந்தரம் கிடையாது. அண்ணேந்தான் நான். ஆனா நான் உட்பட அப்பா, சித்தி, சித்தப்பான்னு எல்லாரும் ஆர்த்திக்கு ஆதரவா இருப்போமே தவிர வாழ வைக்க முடியாது.

 

ஒரு பொண்ணோட வாழ்க்கைல அந்தரங்கமாவும்‍, ஆணி வேராவும் இருக்குற உரிமை அவளோட புருஷனுக்கு மட்டும் தான் இருக்கு. அது நல்லபடியா வாழணும்னு பார்த்து பார்த்து அமைச்சிக் கொடுக்குற வாழ்க்கை, பாதில விட்டு போய்ட்டா, அப்படியே தனி மரமாக விட்டுட முடியாது. வேற வாழ்க்கை அமைச்சி கொடுக்குறது தான் சரி. அவளோட வாழ்க்கைய வாழ அவளுக்கு ஒரு நல்ல மனுசன் வேணும்ன்னு ஒரு அண்ணனா நான் ஆசைப்பட்டது தப்பில்ல.

 

அப்பதச் சொன்னது தான் மச்சான். நீ பண்ணிக்கலன்னாலும் நாளைய விடியல்ல எந்தங்கச்சிக்குக் கல்யாணம் நடந்தே தீரும். அவளோட கழுத்துல தாலி இல்லாம ஒரு நாள் கூட இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்." என்று விட்டுச் சென்றான்.

 

அவன் சொன்னதைச் செய்வான் என்று அறிந்ததால் தானே தர்மா இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதம் சொன்னதே.

 

ஆனாலும் இது சரி வருமா என்ற யோசனையிலேயே இருந்தவனுக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அதிகாலை பொழுது விடிந்தும் உறங்கும் எண்ணமில்லை‌.

 

"தர்மா!!! நேரமாச்சு ப்பா..." எனப் பெற்றோர் மகனின் அறைக்கதவைத் தட்ட,

 

"நீங்க முன்னாடி போங்கப்பா... செய்ய வேண்டியதைச் செஞ்சி முடிங்க. நான் வந்திடுறேன்." என்று மனமே இல்லாது குரல் கொடுத்தான் தர்மா.

 

ஊரின் குளக்கரையில் கூடின குடும்பங்கள் இரண்டும். ஆர்த்தியைத் தவிர்த்து அனைவரும் இருந்தனர்.

 

தர்மாவின் அண்ணன் மகேந்திரனின் படத்திற்கு மாலையிட்டு, பிண்டமிட்டு, ஐயர் சிலர் மந்திரங்கள் ஓத, செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் முறையாகச் செய்யப்பட்டன.

 

மகேந்திரனின் மனைவியான ஆர்த்திக்கு எவ்வித சடங்குகளும் செய்ய அனுமதிக்கவில்லை நெல்லையப்பன்.

 

கணவனை இழந்தப் பெண்ணிற்குச் செய்யும் எதையும், தங்கள் பெண்ணிற்குச் செய்வதைப் பார்க்கும் திராணி இல்லை என்று இரு பெற்றோர்களும் நினைக்க, சடங்குகள் நடக்கவில்லை. ஆனால் ஆர்த்தியின் கழுத்தில் மகேந்திரனால் அணிவிக்கப்பட்ட பொன் தாலி மட்டும் அகற்றப்பட்டு கோயில் உண்டியலில் போடப்பட்டது.

 

கர்ணன் சொன்னது போல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஊர் மண்டபத்தில் தர்மேந்திரன் ஆர்த்தி திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.

 

தர்மேந்திரன் தங்கத்தாலியை ஆர்த்தியின் கழுத்தில் கட்டி, தன் சரி பாதி என்று இறைவன் சாட்சியாக மணம் முடித்துக் கொண்டான்..

தொடரும் ...

💛அனிதா குமார்💛

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி

உறவு 3


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...