நின்னை - 67
கையில் ஒரு வித வலி உணர்ந்து விழிப்பு தட்டியது சாத்விக்கு. இமை பிரித்தாள். வாமன் அவள் கையை தன் கைக்குள் வைத்த மாதிரி ஒட்டிப் படுத்திருந்தான்.
இரத்த ஓட்டம் குன்றிய கையின் திமிர்த்த உணர்வை தாங்கி தன்னை மறந்து அவனை பார்த்தாள்.
வருத்தமுற்றிருந்த இரவுகளில் இப்படி தான் அவள் கை பற்றி படுப்பான். உடல் தேறியதும் நேராக படுத்து வயிற்றில் ஒன்றும் பக்கத்தில் ஒன்றுமாக தன் கரங்களை முதல் மாதிரியே வைத்துக் கொண்டான்.
திரும்பவும் பற்றிக் கொண்டு உறங்குகிறான்.. இதை எப்படி எடுப்பது?
மன வருத்தமா, உடல் வருத்தமா?
இரவு நடந்தவைகளை மூளை அவசரமாக படம் ஓட்ட, தெளிந்திருந்த மனம் சிந்தித்தது.
சீராக மூச்சு விடும் அவன் சிவந்த நாசி உதடுகளை பார்த்தாள்.
உறங்கும் போது மாத்திரம் எங்கனம் இவன் வதனம் குழந்தை போல் ஆகிறது?!
அவள் திறந்து போட்ட டீ ஷர்ட், முட்டி அளவு ஷார்ட்ஸில் பக்கவாட்டில் சரிந்து அவள் கையை தன் கைக்குள் அடக்கி சலனமில்லாமல் கிடப்பவனை வாரிக் கொள்ள வேண்டும் போல ஆசை தான்.
'நீங்க இப்டி இல்ல.. நோர்மலா இல்ல'
சாட்டிய குற்றம் காதில் கேட்க, நான் இப்படி இல்லைத் தான்! நீ தான் என்னை இப்படி மாற்றிவிட்டாய் என்றது பேதை மனம்.
மாத்தியவனே இது தவறு என்றால் என்ன செய்வது??
தன்னை ஒன்றி படுப்பவனை அவளும் நெருங்கி அவன் மூச்சு காற்று படுவதற்கு வகை செய்தாள், நான் தப்பாகவே இருந்து விட்டு போகிறேன் என்று.
தாடி முள் சொர சொரத்த கன்னத்தில் தென்றல் தீண்டியதை போல ஒரு முத்தம் வைக்க, தாடையை தடவியவன் புரண்டு படுத்து தூக்கத்தை தொடர்ந்தான்.
கை சுதந்திரம் பெற்று விட தலைக் கேசத்தை அளைந்து கைக்கு பயிற்சி எடுத்தவள், நெற்றியில் இதழ் பதித்தாள்.
தாய் தன் குழந்தைக்கு வைக்கும் அன்பு முத்தத்தின் நகல் அது!
இன்னும் ஒன்றை மனைவியாக ஆசையாக ஒற்ற, புருவம் சுருக்கியவன் சரிந்து படுத்து விட்டான்.
தூக்கத்தில் கூட அன்னை போன்ற அரவணைப்பை ஏற்றுக் கொள்கிறான். அதே ஆசையாக வைத்தால் திரும்பி கொள்கிறான்!
நான் உன்னை தள்ளி நிறுத்தினேன் ஆரம்பத்தில்.. இப்போது நீ என்னிடம் இருந்து தள்ளி நிக்கிறாய்..
என்ன ராசி இது? இருவருக்கும் பொருத்தம் பார்த்து தானே கல்யாணம் செய்து வைத்தாராம் நடராசா.
பிறகு எங்கிருந்து இத்தனை சிக்கல் வருகிறது நமக்குள்.
நீ என்னை கொண்டாடும் போது புரியவில்லை, இப்போது தள்ளி வைக்கும் போது நன்றாகவே விளங்குகிறது, உன் பாதிப்பு எனக்குள் எத்துணை ஆழம் என்று.
நான் இல்லாமல் உன்னால் இருக்கவும் முடியாது! நீ இல்லாமல் என்னால் யோசிக்கவும் இயலாது. பிறகு ஏன் நமக்குள் இந்த இடைவெளி?
எனக்கு ஏன் சீராகவே அமைய மாட்டேன் என்கிறது வாழ்க்கை??
பெரு மூச்சுடன் விடிந்தது சாத்விக்கு இன்றைய பொழுது.
முகம் கழுவி கீழே சென்று தேநீர் ஊற்றி மாமனார் மாமியாருக்கு ப்ளாஸ்கில் வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து தன்னுடையதை பருகியவள், மேலே வந்து நிலை மாறாமல் உறங்குபவனை கண்டு கடந்து குளித்து இறங்கினாள்.
நடராசா ஜெயந்தி தம்பதியின் முப்பத்தாறாவது திருமண நாளுக்கு அவர் பிள்ளைகள் குடும்பமாக ஆஜர் ஆகினர். வாமன் லெக்சரரே ஊருக்கு கிளம்பி வந்த பிறகு தாங்களும் விடுமுறை போடாமல் எப்படி என.
சாத்வி சமையல் கட்டில் சுழல வாமன் ஆறுதலாகவே இறங்கி வந்தான்.
பெரிய ஆடல் பாடல் வேண்டாம் என்று விட்டார் நடராசா. எனினும் மருமகன்மார் எப்போதும் போல சமையல் சாப்பாடு என நிகழ்ச்சி நிரல் வைத்திருந்தனர்.
மதிய விருந்து முடிந்து எல்லாரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். ஃப்ரூட் சாலட் கிண்ணங்களையும் பகிர்ந்த சாத்வி மாடிக்கு போய் விட்டாள். விடிந்தது முதல் அவள் பாடு அவர்களுக்கு தெரியும். அவள் இயல்பும் பழகி போனதால் வாமன் குடும்பம் தப்பாக எடுக்கவில்லை.
காலையில் இருந்து மனைவியுடன் ஒரு வார்த்தை பரிமாறிக் கொள்ள முடியாதவன் தான் இருப்பு கொள்ளாமல் மேலே சென்றான்.
சாத்வி அவன் கப்போட்டில் ஆடைகளை பிரித்துக் கலைந்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சாலட் கிண்ணத்துடன் வந்தவன் கணினி மேசையில் அமர்ந்து "இதெல்லாம் என்ர பழைய ட்ரெஸ்.. சும்மா இராம ஏன் போட்டு குழப்பி அடுக்குறிங்க.. இவ்வளவு நேரம் செய்த வேலை காணாதா?" எனக் கேட்டான் பழக்கலவையை கிளறியபடி.
கையில் எடுத்த களிசனை மடித்த சாத்வி "நீங்க இனி என்ன வாங்க போங்க எண்டு மரியாத தந்து கதைக்காம நீ வா போ எண்டே கதையுங்க. கோபம் வந்தா ஒரு மாதிரி மற்ற நேரம் ஒரு மாதிரி ட்ரான்ஸ்போர்மேஷன் தேவை இல்ல" என்றாள்.
வாமன் உருகிய ஐஸ்கிரீமில் குழைந்த பழத் துண்டுகளை கரண்டியால் குழப்பினான்.
சாத்வி தன் வேலை முடித்து அலமாரியை மூடி கட்டிலில் அமர்ந்தாள்.
"இங்க பாருங்க" கூப்பிட்டாள்.
என்ன என பார்க்க "நாளைக்கு காலையில ஹொஸ்பிடல் பொயிட்டு வருவமா.. சும்மா ஒரு செக்கப் செய்வம்" என்றாள்.
"ஹாசினி! எனக்கு ஒண்டும் இல்ல அயம் ஓல்ரைட்!"
இதை எதிர்பார்த்தேன் என்பது போல அவள் அமைதியாக, அவனும் அவளுக்கு போட்டியாக மௌனம் காத்தான்.
"நாளைக்கு அம்மம்மாவும் சித்தியும் வாராங்க"
"சி.எம் ஒண்டும் சொல்ல இல்லயே.."
"இல்ல! நான் தான் இப்ப எடுத்து, வாங்க எண்டு கூப்பிட்டன்.."
"ஓகே!"
"அவங்களோட நான் வீட்ட போறன்.. நீங்க ஞாயிற்றுக்கிழம காலைல அங்க ஊருக்கு வாங்க.. அங்க இருந்தே பதுளைக்கு போவம்.."
இதென்ன ஏற்பாடு என அவளை பார்த்தான்.
"நான் மேல படிக்க போறன்.. எம்.ஏ அப்ளை பண்ண யோசிச்சி இருக்கன்.."
"குட்! நல்ல டிசிஷன்.." ஆனால் அந்த சந்தோஷத்தை அவன் கண்ணில் காண முடியவில்லை. ஏன் திடீரென முடிவு செய்தாய் என்ற குழப்பம் தெரிந்தது.
"சமைக்கிறது சாப்பிடுறது உங்கள கவனிக்கிறது மட்டும் தான் வாழ்க்கை இல்ல. கேர்ள்ஸ் படிக்கணும். படிப்புக்கு வயசு இல்ல. அவங்க தனக்காக வேலைக்கும் போகணும்.. சுயமா இயங்கணும் எண்டு ஸ்டாட்டிங்ல அட்வைஸ் சொன்னிங்க. அப்ப எனக்கு அது பெருசா உறைக்க இல்ல.. இப்ப அது சரி எண்டு படுது.. நீங்க வேலைக்கு போன பிறகு நான் சும்மா இருக்கிறது தான் பிரச்சினை! கண்ட கண்ட யோசன வருது.. அதான்.. உங்களுக்கு சம்மதம் தானே நான் MA செய்றது.."
"ம்ம்.. என்ன சப்ஜெக்ட் எந்த யூனிவர்சிட்டி"
சாத்வி தான் எடுத்து இருக்கும் மிகப் பெரும் முடிவுகளை சாதாரணமாக மொழிந்தாள்.
படித்து கொண்டே வேலைக்கு முயற்சிக்க போகிறேன். போட்டி பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க போகிறேன் என்றாள்.
நல்லது! நல்லது! நல்லது! என கேட்டுக் கொண்டிருந்தான் வாமன்.
"வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லயே எண்டு நான் உங்களுக்கு சொன்னன்.. நீங்க அத அப்போ ஒத்துக் கொள்ள இல்ல.. அது இல்லாம எப்டி ஹாசினி எண்டிங்க.. இப்ப நீங்க என்னோட ஒத்து வாறிங்க..." என்று இடைவெளி விட்டவள்,
"வெடிங் முடிஞ்ச இந்த எட்டு மாசத்துல நானும் நீங்களும் நல்லாவே சேஞ்ச் ஆகி இருக்கிறம் என?" என்றாள்.
வாமனின் சிவந்த முகத்தில் இருள் கவிந்தது. அதில் தெரிந்த வாட்டம் அவளை வாட்டியது.
கசக்கட்டும்! மருந்து தின்றால் தான் நோய் தீரும்!
"என்ர சர்டிபிகேட், பர்சனல் டொகியூமன்ட் எல்லாம் எடுக்க சித்தியோட நான் ஊருக்கு போறன்.."
"ரெண்டு பேரும் பொயிட்டு.."
"இல்ல நீங்க இங்க அப்பா அம்மாவோட நில்லுங்க.. அவங்க உங்கள பாக்க பதுளை வர இருந்தாங்க.. அவங்களுக்காக தானே நாங்க வந்தம்.. நீங்க அவங்களோடவே நில்லுங்க நான் மட்டும் அம்மம்மாவோட போறன்.."
வாமன் அவள் வாயையே பார்த்தான். பழைய ஹாசினியாக வெடுக்கு வெடுக்கென பேச்சு பட்டாசாக வெடிக்கிறது!
"நைட் நான்.."
"வேணாம்.. அத பத்தி நாம கதைக்க வேணாம். கீழ என்னத் தேடினாங்க எண்டா கொஞ்ச நேரம் படுத்து எழும்பி வாரன் எண்டு சொல்லுங்க.. கேக் கட்டிங் அஞ்சி மணிக்கு தானே?"
நான் தனிமை வேண்டுகிறேன், நீ போ என்கிறாளா..
இருவர் தலையணையையும் சேர்த்து ஒன்றாக அடுக்கி தலைமுடியை அடக்கிய கிளிப்பை கழட்டி வைத்து அவனுக்கு முதுகு காட்டி கட்டிலில் சாய்ந்தாள்.
உண்ணப்படாத இனிப்பு கிண்ணத்துடன் அவளை பார்த்த மாதிரி அமர்ந்து இருத்தான் வாமன்.
***
IMC Hospital - புதிதாக முளைத்த நகரில் மிகப் பிரபலமான குழந்தை இன்மை பிரச்சினைகளை தீர்க்க வந்த தனியார் மருத்துவமனை! அதில் அப்பாய்மன்ட் கேட்டு அழைத்த வாமனை அதிர்ச்சி அகலாது நோக்கி நின்றான் சங்கர்.
இடம் வாமனின் பால்கனி!
தன் வீட்டு சொந்தத்தை எதிர்பார்த்து சாத்வி கீழே இருக்க, இவன் கூப்பிட்டான் என்று மேலே வந்திருந்தான் சங்கர்.
"எப்ப இருந்து.."
"இப்ப ஒரு ரெண்டு மாசமா ஃபீல் பண்றன் அத்தான்..."
"ஊசி மருந்து குளுசட சைட் எஃபெக்டா இருக்குமாடா.. "
"தெரியல்ல.."
"ஆக்சிடன்ட் ஆன நேரம் அடி கிடி பட்டுதா.."
"தெரியல்ல அத்தான்.. மூண்டு நாளுக்கு பிறகு தான் கான்ஷியசே வந்தது.. மொத்த பாடியும் பெயினா இருந்தது.. நான் என்ன எண்டு எடுக்க??"
"தேவா.. இப்டி குத்து மதிப்பா சொல்லாத.. அதுக்கு பிறகு ஒரு தடவ கூட நீ... " அவன் கேட்க வருவது விளங்கியது.
தலை முடியை வலிக்க கோதியவன் "கன்சல் பண்றது பெட்டர் அத்தான்.. இதுல ஹாசினியும் சம்பந்தபட்ருக்கா.. அவளுக்கு நான் பதில் சொல்லணும்.. இது கூட லேட் தான்.. நான் ஆரம்பத்திலயே கவனிச்சு இருக்கணும்.."
"நாம வேணும் எண்டா முருங்க காய் வெங்காயம் வெள்ளைப்பூண்டு இந்த மாதிரி ஃபுட் ஐட்டம் எடுத்து ட்ரை பண்ணி பாப்பமா.."
வாமன் சிரித்தான். "அது மித் அத்தான். அத விட பெட்டர் ஃபுட் ஹாசினி எனக்கு வருத்தமா இருந்த நேரம் ப்ளட் ஊறணும் ப்ளட் ஊறணும் எண்டு தந்தா. செவ்வாழைப்பழம்.. மாதுள ஜூஸ்.. பீட்ரூட் எண்டு ரெகுலரா எடுத்தன்.. ஆனா.. அதெல்லாம் நோ யூஸ்" எனச் சிரித்தான்.
"எப்டி டா சிரிக்கிறாய்.. நந்தினிக்கு தெரிஞ்சா.. மாமா பேரப் பிள்ளைய எதிர்பார்த்து இருக்கார். எல்லாரையும் சொல்றன்.. இந்தப் புள்ள பாவமே! அது உனக்கு ஆக்சிடன்ட் ஆனதுல இருந்து எப்டி இருந்தது தெரியுமா, ஒரு மாதிரி விரதம் மாதிரி, நீ கண் திறந்து எழும்பினா தான் பார்ப்பன் எண்டு பிடிவாதமா, சாப்பிடாம நித்திர முழிச்சி எப்டி பாத்திச்சி.. என்ன செய்ய போறம்?"
"அவட லைஃப கெடுக்க மாட்டன்.. டிவோர்ஸ் குடுத்திரலாம்.."
"குடுத்துட்டு.."
"தெரியல அத்தான்.."
"அவசரபடாத! முதல் டொக்டர கன்சல் பண்ணுவம்.. எத்தின மணிக்கு அப்பாய்மன்ட்?"
"நாலு மணிக்கு போட்ருக்கன்"
"உன்ர மாமியார் வீட்டாக்கள் வாராங்களே.."
"வரட்டும். ஹாசினிய அனுப்பிட்டு போவம்.."
முடிவு என்ன வருமோ! அதன் பிறகு ஹாசினியை பார்க்க முடியுமோ என்னவோ! அவளை அவள் வீட்டிற்கு அனுப்பிய பிறகே தன் சந்தேகத்தை தீர்க்கலாம் என நினைத்தான் வாமன்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..