நின்னை - 69
"கணவருட்ட இருந்து டிவோர்ஸ் கேக்குறிங்க சரிம்மா, அதுக்கு என்ன காரணம் முன் வைக்கிறிங்க?" சிவில் கேஸ் லாயர் கேட்டதும் ஹாசினி வாமதேவனை ஏறிட்டாள்.
தடக் இடும் இதயப்படபடப்பை மறைத்து அவன் உட்கார்ந்து இருக்க,
"என்ன காரணம் இருந்தா டிவோர்ஸ் ஈசியா கிடைக்கும் சேர்.." எனக் கேட்டாள் ஹாசினி.
"இலங்கை குடும்ப நல சட்டத்தில் விவாகரத்து கோர கூடிய காரணங்கள சொல்றன் கேளுங்க.. இதில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலோ உங்கள் கணவர் மீது நீங்கள் காணும் பட்சத்தில் டிவோர்ஸுக்கு நீங்க அப்ளை பண்ணலாம்.."
"முதலாவது உங்க கணவர் உங்களை அடித்து துன்புறுத்தல் செய்றது.. டொமஸ்டிக் வயல்ன்ஸ்ல…"
"அவருக்கு வேறு பெண்களுடன் தகாத உறவு இருப்பது… அது நிரூபிக்க படும் பட்சத்தில் கேஸ் போடுறது உங்களுக்கும் ஈசி எனக்கு கேஸ் முடிக்க ஈசி.."
அடுத்த காரணத்தை கூற அவரே சங்கடம் கொண்டார் போல.. வாமனை ஒரு நொடி பார்த்தவர், "கணவர் உங்களை தாம்பத்ய உறவில் திருப்த்திப்படுத்த தகுதியற்றவராக நீங்க கருதும் போது.. அதாவது திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கு அவர் தகுதி இல்லாமல் இருந்தால்.."
"அதான்.."
"விளங்கல்லமா.."
"இப்ப நீங்க கடைசியா சொன்ன அந்த காரணத்த போடுங்க.."
யாரும் இலகுவில் வெளிப்படுத்தாத காரணத்தை சொன்ன பெண்ணை ஆச்சரியமாக பார்த்த வழக்கறிஞர், தன் பார்வையை வாமனை நோக்கி திருப்ப, கூனிக் குறுகிப் போனவன், "நோ!" எனக் கத்தி எழுந்தான்.
வியர்த்து வழிந்தது! பதட்டத்தில் கை கால் நடுங்கியது. ஃபேன் போடாமல் இருண்டு கிடந்த அறை அவனை பயமுறுத்த நிதர்சனம் புரியவே நேரம் தேவைப்பட்டது.
"கனவா…” எனத் தலையை பிடித்தவனுக்கு வரண்ட தொண்டையை நனைக்க அங்கே தண்ணீர் கூட இருக்கவில்லை.
சாத்வி இருந்தால் மேசையில் தண்ணீருக்கு பஞ்சம் இராதே. அவள் தினம் எடுத்து வைக்கும் தண்ணீருக்கு இன்று தான் தேவை வந்திருந்தது.
"ஹாசினி!! ஒரு நைட் கூட நீங்க இல்லாம என்னால தாண்ட ஏலாம இருக்கு.." என முனகியவன் ஃபோன் எடுத்து அவளுக்கு டயல் செய்தான், நேரம் கவனிக்காமல்.
பின்னேரப் பிரயாணம் செய்து வந்து வீட்டு வேலை முடித்து, அம்மம்மாவை கவனித்து, சமையல் சாப்பாடு என களைத்து படுக்கை விரித்து உறங்கி இருந்த சாத்வி அலைபேசி சத்தம் கேட்டு கலைந்தாள்.
வேலையில் மீண்டும் இணைந்ததும் வாமன் வாங்கித் தந்த ஸ்மார்ட் ஃபோன் அது. அவன் இலக்கத்தை புன்னகை ஸ்மைலியாக சேமித்து இருந்தாள்.
நேரம் பார்த்தவள், "இந்த நேரத்தில எடுக்கிறார்!" என அறையை விட்டு வெளியில் வந்து செல்லம்மாவின் உறக்கம் கலையாத வகையில் கதவை சாத்தி விறாந்தைக்கு வரும் போது அழைப்பு நின்று போனது.
ஏற்கப்படாத அலைபேசியை பார்த்து அமர்ந்து இருந்தவனுக்கு இதுவே அவளிடம் இருந்தான மிகப் பெரும் பிரிவாக வலித்தது.
முகத்தை அழுந்த தேய்த்தவன் கையில் ஈரம் பிசுபிசுக்க, அழுகிறேனா என வெறுப்பாக வந்தது.
எந்த இடத்தில் இருந்து இப்படி பலஹீனமாகி போனோம் என யோசித்தான்! எங்கோ அடி வாங்கி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது போல ஒரு பிரம்மை சூழ்ந்தது.
சாத்வியை நினைத்து அத்தனை பரிசோதனைக்கும் உட்பட்டு IMC மருத்துவமனை இருந்து கிளம்பும் போது மணி மாலை ஆறு.
'ரிச்சல்ட் எப்ப வரும்..'
'நெக்ஸ்ட் வீக் வாங்க சேர்'
'நெக்ஸ்ட் வீக்கா..'
'ஓம் சேர்.. இந்தாங்க, பில் பே பண்ணிட்டு ரிசீட் தாங்க' என அடுத்த வேலலையை பார்க்கப் போய் விட்டாள் நர்ஸ்.
ஒரு வாரம் எப்படி தள்ள போகிறேன் என இறுகிப் போனான்.
'தேவா! யோசிக்காத.. லூஸ்ல விடு.. ரிலாக்ஸா இரு.. எல்லாம் போசிடிவ்வா வரும்.. மருத்துவ துறையில அசுர வளர்ச்சி வந்திருக்கு. படிச்ச நாங்களே ஸ்ட்ரெஸ் ஆக கூடாது. எல்லாம் சரி பண்ணலாம். ஒண்டையும் காட்டிக் கொள்ளாத. வைஃபோட கதை.. வீட்ட நோர்மலா இரு.. நாளைக்கு ரிப்போர்ட் நோர்மலா வந்தா நாம ஒண்டும் இல்லாத விஷயத்த கூத்தாக்கின மாதிரி போயிருமடா…' சங்கர் வழி நெடுகிலும் செய்த அறிவுரை அவனை சமாதானப்படுத்தவில்லை.
'வேல இருக்குப்பா.. புது சப்ஜெக்ட் ரெண்டு சேர்த்து இருக்காங்க. அதுக்கு நோட்ஸ் ப்ரிபேர் பண்ணணும்.. டயர்டா இருக்கு" என மாடிக்கு வந்தவனுக்கு இரவு உணவும் அறைக்கே வந்தது.
கட்டிலில் கவிழ்ந்தவனுக்கு சாத்வி வாசம் வந்தது தலையணையில். தன்னுடையதை தலைக்கு வைத்து அவளுடையதை தள்ளி வைத்தான்.
உறக்கமா வந்தது? அவன் பயமும் கலக்கமும் ஊகமும் குழம்பி கனவாக வந்தது.
தலையை வலிக்க கோதியவன் ஃபோனை போட்டு விட்டு கண்ணுக்கு பழகிப்போன இருட்டை வெறிக்க, ஓய்ந்த அழைப்பு மறுபடியும் வரும் என காத்திருந்த சாத்வி அவளாக அவனைக் கூப்பிட்டாள்.
திம் திம் என இதயம் துடிக்க எடுத்து காதில் வைத்தான்.
"என்ன.. எடுத்திங்க.." ஹாசினியின் குரல் இத்தனை இனிமையானதா என முதல் முதலாக தோன்றியது பயந்திருந்த அவன் மனசுக்கு.
அந்த குரலில் லயித்தவன் இதயத் துடிப்பு சீராவது போல அவன் பதட்டமும் தணிய,
"ஹெலோ!"
"ம்ம்!"
"என்ன இந்த நேரத்தில எடுத்து இருக்கிங்க.."
"ஏன்?" இந்த நேரத்துக்கு என்ன என நேரம் பார்த்தான். 12.20 காட்டியது.
"ஹெலோ.."
"ம்ம்.. என்ன டைம் வீட்ட ரீச் ஆகினிங்க?"
இந்த அக்கறையை வீட்டுக்கு வந்து சேர்ப்பதும் எதிர்பார்த்து இருந்தாள்.
"ஆறு மணிக்கு வந்துட்டம்.."
"அம்மம்மா எப்டி இருக்காங்க.."
"காயத்த நான் பாக்கல.. மஞ்சளும் எண்ணெயும் காய்ச்சி வச்சி கட்டி இருக்காங்க.."
"ஆணி இரும்பு.. செப்டிக் ஆக்கிரும்.. க்ளீன் பண்ணி மருந்து கட்டி டிடி இன்ஜெக்ஷனும் போடணும்.."
சாத்வி விறாந்தை மரக் நாற்காலியில் அமர்ந்தாள்.
அம்மம்மா, அக்ஷி, நம்சி, சி.எம் எல்லாரையும் அவன் விசாரித்த பிறகு அடுத்து என்ன என கன்னத்தில் கை வைக்க, "என்ன உங்களுக்கு பிடிக்குமா ஹாசினி?" எனக் கேட்டான்.
சாய்ந்து இருந்து பதில் சொல்லிக் கொண்டிருந்த சாத்வி அலைபேசியை காதில் இருந்து எடுத்து திரையை பார்த்தாள். வால்பேப்பராக அவனுடைய படத்தை வைத்து இருந்தாள். அவர்கள் கல்யாணத்தில் அவனை மட்டும் நின்ற மாப்பிள்ளை படம் அது. கோட் சூட்டில் ஜோராக இருந்தான்.
"ஹாசினி!"
"ஓம்.."
"என்ன உங்களுக்கு பிடிக்குமா எண்டு கேட்டன்?"
"ஃப்ரெண்ட்ஸோட பார்ட்டி பண்ற எண்டாலும் ஓகே தான் எண்டு சும்மா தான் சொல்லிட்டு வந்தன்.. நீங்க உடனே வெளிக்கிட்டு போனிங்களா.. எப்ப எண்டு இருந்திங்களா.."
குடித்து விட்டு உளறுகிறான் என்று நினைத்து விட்டாள்!
வாமன் இதழில் புன்னகை விரிய, அது அவன் வாடிய முகத்தில் வசீகரத்தை மீட்டது. என்ன அதை கவனிக்க தான் அவள் அருகில் இல்லை.
"ஏன் அப்டி சொல்ரிங்க.."
"மூண்டு மணிக்கு பஸ் எடுத்தவள் என்ன பாடு எண்டு கவலப்பட இல்ல. நடுச் சாமத்துல எடுத்து என்ன உங்களுக்கு பிடிக்குமா எண்டு கேக்குறிங்க.. நிறைய குடிச்சிங்களா.. இப்ப தான் வீட்ட வந்திங்களா.. என்ன சாப்பிட்டிங்க?"
வாமன் கதவு திறந்து பால்கனி வந்தான். வானம் பார்த்து அங்கே நட்சத்திரப் புள்ளிகளுக்கு நடுவில் ஒழுகிய நிலவை பார்த்து "ஐ மிஸ் யூ.." என்றான்.
இப்போது அவன் குரல் அவளுக்கு கவிதையாக கேட்டதும் மௌனமாகினாள்.
ஏகாந்த இரவில் அவள் மூச்சு சத்தம் கேட்டது போல அவனும் மௌனமாகவே நின்றான்.
நாளைக்கு ரிசல்ட் உனக்கு எதிராக வந்தால் ஹாசினி உன்னை விட்டு பிரிந்து போக கூடாது என்று அவளை இப்படி நள்ளிரவில் எழுப்பி வைத்து வித்தை காட்டுகிறாயா வாமா?! மனக் குரங்கு விழித்து கேள்வி கேட்க,
"சொரி! இந்த நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டன்" என்றவன், "குட் நைட் ஹாசினி" என துண்டித்து விட்டான் அழைப்பை.
இனிய நாதம் அறுந்து காதில் கரகரப்பது போல அமர்ந்து இருந்தவள் எழுந்து படுக்கைக்கு வந்தாள்.
பொழுது இனிதாகப் புலர்ந்தது.
செல்லம்மாக்கு குதி கால் ஆணி ஏறிய காயம் அவள் நினைத்ததை விட ஆழமே. "செப்டிக் ஆகிரும் அம்மம்மா.. வாங்க ஹொஸ்பிடல் போவம்" என காலையிலேயே மருந்து கட்ட அழைத்து சென்றாள்.
வெள்ளி சனி என இரண்டு நாளும் சாத்விக்கு வீட்டு வேலையுடனே வேகமாக கழிந்தது.
மூன்று அறை, சமையல் கட்டு, மண்டபம், விறாந்தை என மொத்த வீட்டையும் கழுவி ஜன்னல் கதவு திரைகளை அவிழ்த்து துவைத்து பதுச் சீலை மாற்றி வீட்டை பளபளவென ஆக்கினாள்.
சாமி அறையை மஞ்சள் நீரில் கழுவி படங்களை துடைத்து விளக்குகளை புளி போட்டு விளக்கி, வாசல் வளவில் பூத்துச் சொலித்துக் கிடந்த மலர் பறித்து சாமி படத்துக்கு சாத்தினாள்.
சான்றிதழ் ஃபைலை எடுத்து வைத்தவள் தொடர்பு விட்டு போன பல்கலைக்கழக தோழிகள் வாட்சப் குழுவில் ஒரு 'ஹாய்!' போட்டு யார் யார் மேலே படிக்கிறார்கள் என்ற விபரம் கேட்டாள்.
அது எத்தனை பெரிய மடத்தனம் என சற்று நேரத்தில் தெரிந்தது.
உம்மணாம் மூஞ்சி சாத்விஹாசினியா!! என அவளாக வந்து சாட்டில் பேசுவதை வியந்தவர்கள் அவள் வைத்திருந்த ப்ரொபைல் படத்தை கண்டு அவர்களுக்குள் கதைத்து வரிசையாக ஒன்லைன் வந்தனர்.
"யாரு எல்லாம் எம்.ஏ செய்றிங்க.."
பலர் சைலன்டாக வாசிக்க, ஒருத்தி மாத்திரம் "சாத்வி, கல்யாணம் முடிஞ்சுதா.." எனக் கேட்டாள்.
"யெஸ்"
"சொல்லவே இல்ல.."
இதில் எத்தனை பேர் என்னை உங்கள் விசேஷத்திற்கு அழைத்தீர்கள் என நினைத்தவள் "சடனா அரேஞ்ச் ஆகிட்டு.."
"உன்ர ஹஸ்பண்டா ப்ரோஃபைல்ல??"
ஜோடியாக வேறு யாருடன் நிற்பேனாம்? என்ன கேள்வி இது!
"வாமன் சீனியர் மாதிரி இருக்கே இது.." ஒருத்தி உடைத்தாள்.
சாத்வி பதில் டைப் பண்ண முதலே "எந்த வாமன்.. அனுஷ்கா விராட் கோஹ்லி ஜோடியில விராட்டா.." என ஒருத்தி நாகரிகம் மறந்தாள்.
"பிரஷாந்திட போய் ஃப்ரெண்ட் வாமன் சீனியர்.." ஒருத்தி அநாகரிகம் என்று தெரிந்தே சொன்னாள்.
பட்டிக் காட்டு உம்மணாம் மூஞ்சி சாத்விக்கா இப்படி ஒரு வாழ்க்கை என்ற பொறாமை அவர்களிடையே பொங்கியது. பிரஷாந்தி அவனிடம் இருந்து பிரிந்து வேறு ஒருவனை கட்டி கனடாவில் செட்டில் ஆனது தெரிந்தும் தெரியாதது போல் நடித்தனர். சிலர் வெளிப்படுத்த பலர் வேடிக்கை பார்த்தார்கள். இது அநாகரிகம் என தெரிந்த சில பெண்களும் கூட பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
சாத்வி சில நொடிகள் கடத்தி "நான் இங்க படிப்ப பத்தி பேச வந்தன்.. நீங்க பர்சனல் பத்தி பேசுறிங்க.. பரவால்ல, வாமன் சீனியர் தான் என்ர ஹஸ்பண்ட்! பிரஷாந்திக்கும் அவருக்கும் ப்ரேக் அப் ஆகிட்டு. வேற ஏதாவது தெரியணுமா.." என்று டைப் செய்து அனுப்பினாள்.
பதில் இல்லை!
உங்களிடம் என்ன கேட்பது! என் புருஷன் லெக்சரர் அவரிடம் கேட்டால் அங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு தகவல் சொல்வார். வேண்டிய நோட்ஸ் தேடித் தருவார்
என்னை தொந்தரவு செய்யும் நாகரிகம் தெரியாத குரூப் வேண்டாம் என்று நினைத்தவள் க்ரூப்பில் இருந்தே வெளியேறினாள்.
அங்கே ஒருவன் குழம்பி பித்துப் பிடிப்பது தெரியாமல், இங்கே இவள் தெளிந்த நீரோடையாக நகர்ந்தாள்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் "அத்தான் இண்டைக்கு வாராராம்.." என துள்ளித் திரிந்த அக்ஷி நம்சியுடன் மனசுக்குள் துள்ளிய படி வாமனுக்காக சாத்விஹாசினி காத்திருக்க, பத்து மணி வாக்கில் அழைத்தவன் "ஹாசினி! நீங்க அம்மம்மாவோட நில்லுங்க! நெக்ஸ்ட் வீக் வாரன் நான்" என்றான் அவன்.
"ஏன் லீவா நீங்க.."
"எனக்கு லீவ் இல்ல.. போகணும். கொஞ்ச நேரத்தில வெளிக்கிடுவன்"
"அங்க நீங்க தனிய என்ன செய்விங்க.. சாப்பாடு?" அவள் வதனம் போலவே குரலிலும் ஏமாற்றம், தவிப்பு, ஏக்கம் எதுவும் விளங்காமல் இனிய நாதமாகவே கேட்டது.
"ஜஸ்ட் ஃபைவ் டேய்ஸ் தானே! நான் மெனேஜ் பண்ணுவன்.." என்றவன் தன்னுடைய ஆண்மைப் பரிசோதனை அறிக்கை சாதகமாக வரும் பட்சத்திலேயே அவளை மீண்டும் காண்பதும் அவளுடனான உறவை பேணுவதும் என்ற முடிவை வலிக்க வலிக்க எடுத்திருந்தான்.
வளரும்....
- ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..