அத்தியாயம்: 3
"இந்தாங்கங்க… உங்களுக்கு சுகர் இருக்குன்னு அந்தத் தம்பி சுகர் ஃப்ரீ ஸ்வீட்ஸ் வாங்கி குடுத்திருக்கு. தம்பிக்கு எவ்ளோ நல்ல மனசு இருந்தா நம்ம பொண்ண வேண்டாம்னு சொன்னதுக்கு அப்றமும் நம்மல நியாபகம் வச்சிருக்காரு.. நமக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு பாத்துப் பாத்து செய்றாரு... ஹிம்.. என்ன பண்ண… என்னதா தரைல உருண்டு பிரண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும். நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். " என மகளை ஜாடை பேசியபடியே இனிப்பை எடுத்து வாயில் வைத்தார்.
"பூந்தி லட்டு… ம்… ரொம்ப சூப்பரா இருக்கு. " என கமெண்ட் சொன்ன பெற்றோரிடம் இருந்த டப்பாவை பிடுங்கி தூக்கி எறிந்தாள் பைரவி.
" ஏம்மா சாப்பாட்ட வேஸ்ட் பண்ற. " சேர்மதுரை..
" ப்பா... நீங்க பேசாதீங்க.. ஏம்மா உனக்குப் பெத்த பாசமே கிடையாதா.. உம்பொண்ணு தான நான. அவெங்கூட சேந்திட்டு என்னை இன்னைக்கி நீ ரொம்ப அசிங்க படுத்திட்ட." எனக் கோபமாக கத்த,
" நான் தான் அப்பவே சொன்னேனே உனக்கும் அந்தத் தம்பிக்கும் செட்டாகதுன்னு. கேட்டியா… நான் சொன்னத கேக்காம நீயா அந்தத் தம்பிய பாக்க போன... கல்யாணம் ஆகிடுச்சி. அப்படி பண்ண கல்யாணத்தயாது காப்பாத்திக்க தெரிஞ்சதா. ஹிம்... உன்னோட திமிராலயும் ஆணவத்தாலயும் அவர அசிங்க படுத்த நினைச்சி கிடைச்ச வாழ்க்கைய தொலச்சிட்ட. "
"ம்மா நான் மறுபடியும் சொல்றேன் நான் அவன விசாரனை பண்ணத்தான் கூட்டீட்டு போனேன். எனக்கு, அதாவது ஒரு போலிஸ் ஆஃபீஸருக்கு மரியாத குடுத்து நடந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காது."
"பொண்டாட்டிக்கி எதுக்கு டி மரியாத குடுக்கணும்.. நீ போலிஸா இருந்தா உனக்கு மரியாதையா சல்யூட் அடிச்சி ஜீப்ப திறந்து விட்டு நாங்க குடுக்கணுமா என்ன. உனக்கு அப்படியே அவருக்கிட்ட விசாரன பண்ணணும்னா அத வீட்டுல வச்சி பண்ணிருக்கணும்... நாலு சுவத்துக்குள்ள அவருக்கிட்ட பேசிட்டு கூட்டீட்டு போயிருக்கணும்.. தான்தேன்றித்தனமா அதிகப்பிரசங்கித்தனமா வேல பண்ணிட்டு அந்தத் தம்பிய ஏன் டி திட்டுற... உன்னைக் கட்டுன பாவத்துக்கு உன்னால எம்மருமகெ ரெண்டு நாள் ஜெயில்ல இருந்திருக்காரு. அதுக்கே அவருக்குத் தியாகி பட்டம் குடுக்கலாம்."
என்ன ஜெயிலா! கட்டுன புருஷனயே ஜெயில்ல போட்டியா! ஏம்மா?
ஒரு சின்ன கோளாறாகிப் போச்சி.. அத விசாரிக்கன்னு இவ போக… பொண்டாட்டி தானேன்னு அவெ ஒரு மாதிரி பேச… தூக்கிட்டு வந்து ஜெயில் குள்ள போட்டுட்டா பொண்ணு. அது தான் பிரச்சனையோட கமா புள்ளி.
ஆனா என்ன பிரச்சனன்னு இப்பவர சொல்ல மாட்டுங்கிறாங்க.
சாந்தி சொல்ற மாதிரி புருஷன போலிஸ் ஸ்டேஷன் கூட்டீட்டு போயிருக்க கூடாது.
பாவம்...
" ஜெயிலுக்குப் போறவனெல்லாம் குற்றவாளியா?. "
"இல்ல தான்.. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணி ஜெயிலுக்கு போன அந்தத் தம்பி குற்றவாளி இல்ல. தியாகி… மகாத்மா மாதிரியான பெரிய தியாகி. " என முன்னாள் மருமகனின் புகழ் பாட, அவள் கோபமாகத் தந்தையைப் பார்த்து,
"இந்த மாதிரி ஒரு மாமியார் உங்களுக்குக் கிடைக்காம போனது என்னோட துரதிஷ்டம். ச்ச..." என்றவள் கையில் பெட்டியைத் தூக்கி கொண்டு வீட்டை விட்டு சென்றாள்.
வீட்டை விட்டென்றால் ஒரேயடியா வீட்டை விட்டு செல்ல வில்லை. அவளுக்கெனத் திருமணத்திற்கு பிறகு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டைச் சீதனமாக வாங்கி கொடுத்திருந்தனர் சேர்மம்-சாந்தி தம்பதியர்.
இப்போது அங்கு தான் செல்கிறாள். கணவனை விட்டு பிரிந்து அன்னை வீட்டிற்கு வந்த போது தாயுடன் அவ்வபோது இப்படி முட்டிக் கொள்வது சகசமான நிகழ்வாகிப் போனது. கோபம் குறையும் வரை அந்த வீட்டில் இருந்து விட்டு வருவாள்.
இரட்டைப் படுக்கை அறை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோபித்துக் கொண்டு வந்த மனைவியைக் காண வந்த கணவனை அடித்து… அடித்து என்று சொல்ல கூடாது அடிக்காத குறையாகத் துரத்திவிட்டிருக்கிறாள்.
'இது என் ப்பா ம்மா எனக்காக. எங்கல்யாணத்துக்காக… எம்புருஷங்கூட சந்தோஷமா வாழணும்னு வாங்கி தந்தது. இதுல காலடி வைக்க உனக்கு உரிம இல்ல. இப்பவே இடத்த காலி பண்ணிட்டா உனக்கு நல்லது. இல்லன்னா ஸீன் வேற மாதிரி மாறிடும். ' என அவனை மிரட்ட,
'என்ன மாதிரி ஆகிடும்.. ' என்பது போல் அவனும் விறைப்பாய் தான் நின்றான்.
" இந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு வடிவேலுவ கோவைசரளா போட்டு துவைக்கிற சண்ட காட்சிய லைவ்வா காட்டுனா மாதிரி ஆகுடும். அவங்களும் கூச்சமே இல்லாம ஜன்னல் வழியா வேடிக்கை பாப்பாங்க. அது நடக்க கூடாதுன்னு இப்பவே கிளம்பு." என்றாலும்,
அவன் 'நம்ம பொண்டாட்டி தான.' என்று அவள் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாது நிற்க, கையில் துப்பாக்கியுடன் ஈவு இரக்கம் பார்க்காது, நடு ராத்தியில், வேலை முடித்து வந்தவனைத் துரத்தி விட்டு விட்டிருக்கிறாள்.
இதெல்லாம் நடந்து முடிந்தவை.
இப்போது அந்த வீட்டை தோழிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளாள். அவள் அருகில் இல்லாமல் சந்தோஷமாக இருக்க நினைத்த தாய் தந்தையரின் நிம்மதியை குழைக்க அவர்களுடன் தங்குவாள். சண்டை வந்ததால் இங்கு வந்து இருப்பாள்.
இரு நாட்களுக்குப் பின் மீண்டும் பெட்டியுடன் தாய் வீட்டிற்குச் சென்று விடுவாள். இங்கு சில நாள், அங்கு சில நாள் என ஷிப்ட் முறையில் தங்கி வாழும் நிலை வந்து விட்டது. வீட்டில் இருக்கும் சாந்தியால் சாந்தியின்றி தவிக்கிறாள்.
" என்னடி எல்லாம் முடிஞ்சிச்சாமே. உ ஆளு கோர்ட்டு வாசலயே குதுகலமா அத கொண்டாடிட்டாரு போல.. " எனச் சாருலதா கேலியாக கேட்க, பைரவி அவளை முறைத்தாள்.
" உனக்கு யாரு டி சொன்னது?" எனக் கோபமாக கேட்டாள் பைரவி.
" உன்னோட நியூஸ் தலைப்பு செய்தி மாதிரி கன் டயத்துக்கு மொபைலுக்கு வந்திடுச்சி. " என அவன் ஆடிய நடனத்தையும், பாடிய பாட்டையும் வாட்ஸ் அப்பில் வந்திருப்பதாகச் சொல்லி வீடியோவை காட்டினாள்.
"யாரு டி உனக்கு அனுப்புனா? " எனக் கேட்டு அதை டெலிட் செய்ய,
"நீ இப்படி பண்ணவன்னு தெரிஞ்சிதா இதோட இன்னொரு காப்பி எடுத்து வச்சிருக்கேன். எங்கன்னு சொல்ல மாட்டேன். சொன்னா அதையும் நீ டெலிட் பண்ணிடுவ. " என்றாள் சாரு.
"ச்ச... அவனால எனக்கு எப்பயுமே அவமானம் தான். நாளைக்கி ஸ்டேஷன்ல என்ன நடக்கப்போதோ. ஒரு பயலும் அவெ வேலைய பாக்க மாட்டான். துக்கம் விசாரிக்கிற மாதிரி வந்து வந்து விசாரிக்க போறான். எல்லாம் அவனால வந்தது. நான் அவன சும்மா விட மாட்டேன். டைவர்ஸ் வாங்கிட்டா அவனுக்கு எனக்கும் எதுவும் இல்லன்னு ஆகிடுமா." என்க,
" உன்ன நினைச்சாலும் பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் நிஜமான பாவம் அண்ணேந்தான். நீ அவர ரொம்ப படுத்தி எடுத்திருக்க கூடாது. ஆமா என்ன பிரச்சினை உங்களுக்குள்ள. உன் ஆளு என்ன பண்ணாருன்னு நீ இப்படி அவர டார்ச்சர் பண்ற." சாருலதா..
பைரவியின் தோழி என்பதை விட அவளின் கிறுக்குத்தனத்தின் விசிறி என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனெனில் பைரவி ஒரு விசித்திர பிறவி. நன்கு யோசித்து திட்டமிட்டு எந்த காரியத்தையும் செய்யும் பழக்கம் கிடையாது அவளுக்கு. மனதிற்கு தோன்றியதை உடனே செய்து விடுவாள். பின் அவதிப்படுவாள். ஆனாலும் அதைத் தன் தவறு என்று ஒத்துக் கொள்ளவே மாட்டாள்.
அது கல்லூரியில் சேர்ந்த புதிது. இன்ஜினியரிங் எடுத்து படி என்ற அன்னைக்கு எதிர்மாறாக செய்வதாக நினைத்து ஆட்ஸ் காலேஜ்ஜில் சேர்ந்தாள் அவள். என்ன படித்தாள் என்று கேட்டால் அவளுக்கே அது தெரியாது.
"வாழ்க்கைய சந்தோஷமா வாழ போற எனக்கு எந்த டிகிரி கிடைச்சாலும் ஓகே தான்.. " என எப்பொழுதும் தன்னை மகிழ்வுடன் வைத்துக் கொள்ளவாள். எந்தச் சூழ்நிலையிலும், கவலைகளுக்கும் கண்ணீருக்கும் அவளிடத்தே இடம் இல்லை.
சாருலதா இப்போது உடன் இருக்கும் ஒரே தோழி... கல்லூரியில் தான் இருவரும் நண்பிகள் ஆயினர். ஒரே வகுப்பு. ஃப்ரெஸ்ஸஸ் டே-யில் நடனம் ஆட எனக் கிளம்பிய அவர்களின் வகுப்பு மாணவிகள் மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆனாது.
ஏற்கனவே ஏனோ தானோ என கோஆடினேஷன் இல்லாமல் அனைவரும் குதித்துக் கொண்டிருந்தனர். பவர் கட்டானதும், மற்ற மாணவர்கள் கைத் தட்டி ஆரவாரம் செய்து 'நீங்க ஆடுனது கரண்டுக்கே பொறுக்கல.. வாட்ட எலக்ட்ரிபையிங் பெர்பாமென்ஸ்.. ' எனக் கேலி செய்தனர்.
' ஐய்யோ அவமானமாப் போச்சி.. ' என மற்றவர்கள் இறங்கி விட, பைரவி இறங்கவில்லை.
'நான் டான்ஸ் ஆட தான் வந்தேன். ஆடியே தீருவேன். நீங்க அதைப் பாக்குறதும் பாக்காததும் உங்க விரும்பம். ' என கரண்ட் வந்த போதும் மீதி ஆட்டத்தை ஆடி விட்டே கீழே இறங்கினாள். பிற மாணவர்கள் கேலி செய்தனர். அவளுக்குத் தான் அவ்வபோதும் மட்டும் காது கேட்காதே. அன்றும் அவர்கள் செய்த கேலி கிண்டல் என எதற்கும் செவி சாய்க்காது போக அவள் மட்டுமே மேடையில் ஆடினாள். அது சாருலதாவை பைரவியின் பக்தை ஆக்கியது. அவளை மட்டுமல்ல மேலும் இருவரையும் தான்.
"தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டிங்க… எம்பேரு சாருலதா.. நீ... " எனக் கரம் நீட்டி ஆரம்பித்த நட்பு.
பின் வாத்தியாரிடம் கேள்விக்கு மேல் கேட்டு திணறடிக்க செய்வது, கரும்பலகையில் கண்ராவியான உருவத்தை வரைந்து அதற்கு பிடிக்காத ஆசிரியரின் பெயரை எழுதி வைப்பது, பரிச்சையில் பிட் அடித்து பாஸ் ஆவது, ஒவ்வொருவரின் டிப்பன் பாக்ஸைத் திறக்காமலேயே முகந்து பார்த்து பிடித்த உணவை திருடி கபளீகரம் செய்வது, தப்பு தப்பா என்றாலும் ஆங்கிலத்தில் கூச்சமே இன்றி பேசுவது.
அவளைக் கேலி செய்தால் மறுநாள் கரப்பான் பூச்சியை பிடித்து வந்து கேலி செய்தவர்களின் மேல் பறக்க விட்டு விடுவாள். இதை பைரவி செய்யும் அனைத்திலும் உடன் சேர்ந்து கொண்டாள் சாரு.
இருவரின் நெருக்கம் கல்லூரி முடித்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாருலதா இப்பொழுது ஒரு ஆடிட்டிங் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அந்த வீட்டில் சாருவைத் தவிர்த்து மேலும் மூன்று பேர் தங்கி உள்ளனர். சாருவின் ஊர்கார பெண்கள்.
சாருலதாவிற்கு சொந்த ஊர் தேனி. அவளுக்கும் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் அவன் சாருவுடன் இல்லை. திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் மாப்பிள்ளை ஓடி விட்டான்.
"பரதேசி நாய்... ஓடுறது தான் ஓடுறான் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி ஓடிருக்கலாம்ல. கட்டுறதையும் கட்டிட்டு, ஃபஸ்ட் நைட்டையும் முடிச்சிட்டு, மாமியார் வீட்டு விருந்துல ஆயிரம் கொறயையும் சொல்லிட்டு, வேற ஒருத்திய விரும்புறேன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடிட்டான். அவெ வீட்டு ஆளுங்களும் இப்ப அவன மகென்னு சொல்லி உறவாடுதுக.. என்ன குடும்பமோ… " சாருவின் புலம்பல்.
இரண்டாவது திருமணத்திற்கு வீட்டார் ஏற்பாடு செய்ய, வேண்டாம் என மறுத்து அவன் கட்டிய தாலியைத் தூக்கி எறிந்து விட்டு வந்தே விட்டாள் சென்னைக்கு. கோபமாக இருந்த தோழியைச் சமாதானம் செய்து வீட்டாருடன் சேர்ந்ததே பைரவி தான். இப்போது தோழிக்கு மணமகன் தேடிக் கொண்டு இருக்கிறாள் பைரவி.
பைரவியைச் சாரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். சொல்ல போனால் சாந்தியை தவிர, இப்போது அவளின் முன்னாள் கணவன் மற்றும் அவனின் சில உறவினர்கள், அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிடிக்கும்.
" ஹாய் காப்ஸ்.. இன்னைக்கி வீடியோ சூப்பர். உங்க ஆளு கலக்கிட்டாரு. " சகுந்தலா.
" ஃப்ளீஸ் உங்களுக்குள்ள தான் எல்லாம் முடிஞ்சி போச்சே. எனக்கு அவர இன்ரோ குடுக்க முடியுமா." யாழினி.
" நீங்க நேர்ல வந்து அறிமுகம் பண்ண வேண்டியது இல்ல. ஏன்னா இப்பத்தான பிரிஞ்சிருக்கீங்க. ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் மறுபடியும் பாத்துக்கிட்டா. பழகிய நாட்கள் நினைவு வந்து கஷ்டப்படுவீங்க. அதுனால நீங்க ஃபோன் நம்பர் மட்டும் தாங்க. நாங்க கான்வர்ஷேஸன பில்ட் பண்ணிக்கிறோம். என்ன சகு.. " என்ற மஞ்சுவின் காதைப் பிடித்து திருகினாள் பைரவி.
" முளக்கவே செய்யாத உங்களுக்கெல்லாம் எதுக்கு டி அந்தத் தயிர் சாதத்தோட நம்பரு." என்க,
"தயிர் சாதமாக... அக்கா அவர அப்படி சொல்லாதீங்க."
"கேக்கவே கஷ்டமா இருக்கு.. "
" அவரு சூப்பர் ஹீரோக்கா.."
" சாமிங்.."
"மேன்லி.. "
"அவர போய் தயிர் சாதம் ட்டு.. " என மூவரும் கோவித்து கொள்ள, சாரு மட்டும்...
"பையூ நீ இப்ப என்ன சொன்ன தயிர் சாதமா... அண்ணா அந்த விசயத்துல வீக்கா… அப்போ உங்களுக்குள்ள நடக்க வேண்டிய ரொமான்ஸ் நடக்கல அது தான் பிரச்சன.. சரியா..." என விழி விரிய கேட்க, பைரவியின் பதிலுக்காக நான்கு ஜோடி காதுகளும் கூர் தீட்டப்பட்டன.
"என்னடி அடுத்தவ கதை கேக்க இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க." பைரவி.
"அது தான் இன்ட்ரஸ்ட்டா இருக்கும். சொல்லு சாந்திம்மா சொன்னாங்கன்னு தான அவரக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அவர விரும்பியா பண்ண. உன்னோட கணவனுக்கு உம்மேல காதல் வரலயா. ஏன்.. அவருக்கு ஹார்மோன்ஸ்ல எதாவது பிரச்சனையா." எனக் கேட்ட சாருவின் தலையில் அடித்துவிட்டு எழுந்து சென்றாள் பைரவி.
தேனியில் இருந்து ஐடி கம்பெனியில் வேலை பார்க்க என வந்திருந்த மற்ற மூன்று சிறிய பெண்களிடம் தன் கதையைச் சொல்ல விரும்பாது அறைக்குள் சென்று படுக்க, சாரு உணவுடன் வந்தாள், சொல் என்றபடி..
" முழுசா சொல்லிட முடியாது. வேணும்னா கேக்க கட் பண்ற மாதிரி ஒரு கத்திய வச்சி அறுத்து துண்டு துண்டா சொல்லட்டுமா... " எனக் கேட்க,
"முழுசா சொல்லு டி. " என்றவளுக்கு எதையும் சொல்லாது திரும்பி படுத்துக் கொண்டு விழி மூடினாள் பைரவி.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..