அத்தியாயம்: 54
நம்மோடு இருக்கும் போது…
நம் கவலைகளை…
மறக்க வைக்கும்…
அன்பே…
நமக்கான அன்பு…
அதை ராக்கி பாய் உணரும் தரும் அது. எதுவும் பேசாது அமைதியாக பைக்கில் சாய்ந்து கொண்டு புன்சிரிப்பு சிந்தி ஹிரானாவின் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருக்கும் பேதையை ரசிக்க தூண்டியது. காற்றில் அசைந்தாடும் விரல்கள் அவ்வபோது காதுமடலில் படரும் ஒன்றிரண்டு முடி கற்றைய காதோடு சேர்த்து சிறை வைக்கும் போது எந்த ஓர் ஆடவனும் சிறைக்குச் செல்ல தயாராகவே இருப்பான். அதில் ராக்கிக்கு சொல்லவே தேவையில்லை.
"அங்கில் ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம்." எனக் குதித்த குட்டி வாண்டிற்கு கேட்டதை வாங்க பைக்கை நிறுத்தியிருந்தான் அவன்..
ஹிரானா கொஞ்சம் சேட்டை அதிகம் செய்வாள். அவளின் பேச்சைக் காதில் வாங்கவில்லை எனில் எதற்குக் காது என்று கடித்து வைத்துவிடுவாள். கொஞ்சம் அராத்து. ஆனால் அவளைத் தாமரை சமாளிக்கும் விதம் பிடித்திருந்தது. பொறுமையாக பேசி, சிறுமியின் போக்கில் தானும் சிறுமியாக மாறிய மங்கையைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.
கையில் இருந்த ஐஸ்க்ரீமை தாமரையிடம் நீட்ட, "தேங்க்ஸ் அங்கில்.. " என இரண்டையும் அந்தக் குட்டி வாண்டு வாங்கிக் கொண்டது.
"நான் போய் உனக்கு வாங்கிட்டு வர்றேன்." என்றான் சின்ன சிரிப்புடன்.
"இல்லங்க… இருக்கட்டும். " என்றவள் ஆடவனைப் பார்க்கும் துணிவை இழந்து திரும்பிக் கொள்ள, அவளின் அருகில் தானும் பைக்கில் சாய்ந்து கொண்டு நின்றான். பெண் பேசாத பேச்சைக் காற்றில் பறந்த அவளின் சேலை பேசியது அவனோடு.
பெண்ணவளின் இதமான மணம் நாசியை நிறைத்து, அவனை பாண்டிய மன்னனாக மாற்றியது.
அதான் பெண்களின் கூந்தலுக்கு மணம் மல்லிகையால் வருகிறதா! அல்லது இயற்கையாவே உண்டா! எனப் பட்டிமன்றமே நடத்தி விட்டான்.
விழி விலக்காது தன்னவளை ரசிக்க, தாமரை சட்டென திரும்பி பார்த்தாள். மெல்லிய இதழசைப்புடன் திரும்பிக்கொள்ள,
"எதாவது சொல்லணும்னு தோனுதா?"
"இல்ல." என்றாள் சின்ன குரலில்.
"நேத்து ஏன் கால் பண்ண?"
"நா... நான் பண்ணல." எனத் தடுமாற, அவளின் அலைபேசி எண்ணை சொல்லி, "அந்த நேரத்துல எதுக்கு கால் பண்ண?" எனக் கேட்டான்.
"அது நீங்க நேத்து கோபமா…" என வார்த்தைகளை மென்று முழுங்கினாள் அவள்.
" எங்கிட்ட எதுவும் கேக்கணுமா.?" என்க அவள் தயக்கத்துடன் ஆம் எனத் தலையசைத்தாள்.
"எதுவா இருந்தாலும் கேட்டா பதில் கிடைக்கும். " அவளின் தவிப்பை ரசித்தபடி சொல்ல,
"அவுங்க யாரு?"
"எவுங்க!"
"அது நேத்து மெடிக்கல் ஷாப்ல இருந்து குழந்தையத் தூக்கிட்டு போனாங்களே அவங்க. அவங்க கூட பேசக் கூடாதுன்னு சொல்லி பைரவிக்காவ இழுத்திட்டு வந்திங்க. ஏன்?" என்க.. தன் மூச்சை ஆழ இழுத்து விட்டவன்,
"கண்டிப்பா தெரிஞ்சாகணுமா?" என்க, அவள் ஆம் எனத் தலையசைத்தாள். பின் எதுவும் பேசாது ஹிரானாவை இறக்கி விட்டு விட்டு சாரதா ஹோமின் பைக்கை நிப்பாட்டி அவளையும் இறக்கி விட்டு விட்டு சென்றான்.
"கேட்டா பதில் கிடைக்கும்னு சொல்லிட்டு ஒன்னும் சொல்லாம போறாரு. ச்ச உனக்கு அறிவே இல்லடி தாமர. நீ யாரு அதுன்னு கேட்டதும் அவரு மூஞ்சியே மாறிப்போச்சி. இப்ப அது யாருன்னு தெரிஞ்சிட்டு என்னத்த சாதிக்க போற?" எனத் தனக்கு தானே பேசியபடி சென்றவளுக்கு, அது யார் என்று சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
ஏனெனில் பைரவியின் கரத்தைப் பற்றி இழுத்து வந்தாலும் ராக்கியின் கண்கள் நிவியைப் பார்த்த பார்வையில் கோபம், ஆத்திரம் எனப் பல கலவையான உணர்வுகளை அடைக்கி காணப்பட்டது. அது இதுவரை தாமரை பார்த்திராத ஒரு ராக்கியாக அவனைக் காட்டியது. அவனைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டாள்.
பதில் கிடைக்காது போக, உறக்கம் வர மறுத்தது. அப்போது அவளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்னு வந்தது. ராக்கி தான். நாளை அவளைப் பள்ளிக்கு அருகில் உள்ள கோயிலுக்கு வரச் சொல்லி இருந்தான்.
காலையில் வழக்கம் போல் பாண்டி பள்ளியில் விட்டு விட்டு செல்ல, அவள் விடுப்பு எடுத்துக் கொண்டு ராக்கியை காணச் சென்றாள்.
வேகவேகமாக சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தபடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருக்க,
"நீ வரமாட்டன்னு நினைச்சேன்." என்றபடி அவளின் எதிரில் வந்தமர்ந்தான் ராக்கி.
"ஏன் அப்படி நினச்சிங்க?"
"இல்ல உங்கண்ணட்ட சொல்லாம…"
"ஆமால்ல.. நான் அண்ணன ஏமாத்திட்டு இங்க வந்து உக்காந்திருக்கேன். நான் போறேன். தனியா எங்கயும் போகக்கூடாதுன்னு சொன்னாரு." என எழ, அவளின் கரம் பற்றி எழுந்தவன்,
"தனியா எங்க இருக்க! நாந்தா உங்கூட இருக்கேனே.. நேத்து நீ கேட்டதுக்குப் பதில வாங்கிட்டு போ." என்றபடி நடக்க, அவனின் குரலில் மாற்றத்தை உணர்ந்து திரும்பி அவனின் முகம் பார்த்தாள் தாமரை. அது இரும்பென இறுகி இருந்தது.
"என்னோட அவமானத்தையும் கண்ணீரையும் நான் இதுவர யார்க்கிட்டையும் சொன்னது இல்ல. மதுவ தவிர யார்க்கும் என் மனசுல இருக்குற காயம் தெரியாது. ஆனா இன்னைக்கி உங்கிட்ட சொல்லணும்னு தோணுது. என்னோட காயத்துக்கு நீ மருந்தா இருப்பன்னு சின்ன ஆசை.
நேத்து நீ பாத்தியே குழந்தையோட போன பொண்ணு. பேரு நிவேதா.. நிவி… கொஞ்ச வர்ஷத்துக்கு முன்னாடி எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. என்னோட முன்னாள் காதலி அவ." என்க, ராக்கியின் கரத்தில் சிக்கியிருந்த தன் கரத்தை வேகமாக உருவிக் கொண்டாள் தாமரை.
கோபம் கோபமாக வந்தது. 'காதலியா!! கல்யாணமா!! ஏன் எனக்காக காத்திருக்காம எதுக்கு வேற எவளோ பின்னாடி போயிருக்காரு. நான் வர்ற வர காத்திருக்க மாட்டாரா! ' என என்னென்னமோ மனதிற்குள் பேசி ராக்கியுடன் சண்டை போட்டாள் தாமரை.
அவளின் முகபாவனைகளைக் கவனியாது தன் மனச்சுமையை அவளிடம் இறக்கி வைத்தான் ராக்கி.
அது பைரவிக்கும் மதுசூதனனுக்கும் திருமணம் நடந்தேறி சில மாதங்களே ஆன சமயம்.
"உன்னால தான் இப்படி ஒரு நிலைமை. பாரு எங்க வந்து நிக்க வச்சிட்ட?" நிவி கோபமாக கத்திக் கொண்டிருந்தாள்.
"ஏய் ஸாரி டி. நான் இவ்ளோ கூட்டம் இருக்கும்னு நினைக்கவே இல்ல." மற்றொரு தோழி.
"ஜீ.வி.பிரகாஜ் எவ்ளோ பெரிய ஆளு!"
"அவரோட மியூசிக்கு ஆடாத ஆளே இல்ல!"
"அவரோட காண்டெட்டுக்கு போய் டிக்கெட்ட இவ்ளோ கேர்லஸ்ஸாவா புக் பண்ணுவ?" எனச் சுற்றி இருந்த மற்ற தோழிகளும் ஒருத்தியைக் குறிவைத்து திட்டத் தொடங்கினர்.
"பாரு வாசல் வரைக்கும் கூட்டம் தான். கடைசி ரோல உக்காந்திட்டு முன்னாடி இருக்குறவே முதுக பாத்திட்டு போச் சொல்றியா! ப்ளாட்டினம் டிக்கெட் இல்லன்னாலும். கோல்டு சில்வர்ன்னு எடுத்திருக்கலாம். இப்படி ப்ளாட் ஃபார்ம் டிக்கெட்ட எடுத்திட்டு வச்சிட்டு, ஏன் எங்கள கூட்டீட்டு வந்த?. எனக்கு ஜீ.விய பாக்கனும் அதுவும் பக்கத்துல. இல்லன்னா நான் போறேன்." என நிவி எழுந்து செல்ல, அவளைச் சமாதானம் செய்ய என வந்தவர்கள் கண்டது, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் காரை.
கூடவே நம் மதுசூதனனும் இறங்கி வர, "ஏய் நம்ம பைரவி ஹஸ்பெண்ட் டி."
"அவரு தான் இங்க செக்யூரிட்டி ஏற்பாடு போல. வா போய் அவர்கிட்ட கேக்கலாம்." என மற்றவர்கள் முன்னே நடந்தாலும்,
"அவெங்கிட்ட கேக்குறதும் ஒன்னு தான் இந்த நிக்கிற ஜீ.வி கட்டவுட்க்கிட்ட கேக்குறதும் ஒன்னு தான்." என வெறுப்புடன் சொன்னவளின் பார்வை மதுவிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ராக்கியின் மீது பட்டது.
நிவி பொதுவாக ஒரு ஆளிடம் இறங்கி பேசுகிறாள் என்றால் அவளுக்கு காரியம் ஆகவேண்டி இருக்கிறது என்று அர்த்தம். தன் தேவைக்காக மட்டுமே மதித்து பேசுவாள். மற்றபடி அருகில் நின்றால் கூட என்ன எனக் கேட்க மாட்டாள்.
இப்போது அந்த காண்செட்டிற்கு செல்ல டிக்கெட் தேவை. நேராக ராக்கியைப் பார்த்து கை அசைத்தாள் அவள். அவன் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும்,
"டியூட்டி நேரத்துல என்னடா சைட் அடிச்சிட்டு நிக்கிற?" என மது தலையிலேயே போடுவான். அதனால் டியூட்டி தான் ஃபஸ்ட் அவனுக்கு.
வெகுநேரம் கையசைத்து அசைத்து ஓய்ந்து போனது தான் மிச்சம். ராக்கி பார்க்கவே இல்லை. உடனே நிவி, பைரவிக்கு கால் செய்து நடந்ததைச் சொல்லி, "ப்ளீஸ் பையூ.. உன் ஆளு தான் செக்யூரிட்டிக்கி நிக்கிறாரு. அதிகமா இல்ல. நாலு டிக்கெட் தான். முன் வரிசைல உக்காந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. நிறைய ஆக்டர்ஸ் மத்தில பாக்கணும்பா." என்று கெஞ்ச, பைரவி மறுத்துவிட்டாள்.
"நீ என்ன லூசா! ப்ளாட்டினம் டிக்கெட்ஸ் எல்லாம் முன் கூட்டியே புக் ஆகிருக்கும். இப்ப வந்துட்டு கேக்குற. அதுவும் அவரு வேலய டிஸ்டர்ப் பண்ணா கோபம் வரும். " என்றாள் கணவனின் மனமனறிந்து.
"உன்னோட ஹஸ்பெண்ட்ட பாத்ததும் கான்செட்ட பாத்திட்டே போலாம்னு உன்ன நம்பித் தான் வாக்கு குடுத்திட்டேன். அட்லீஸ் எதாவது ஒரு இடத்த ஃப்ரீ பண்ணி குடுக்கச் சொல்லப்பா. ப்ளீஸ்.." என மற்ற தோழிகளும் கெஞ்ச,
பைரவி ராக்கிக்குத் தான் அழைத்தாள். "அண்ணா ஒரு ஹெல்ப்." என ஆரம்பித்து நடந்ததைச் சொல்ல,
"டிக்கெட் தான! அதெல்லாம் வாங்கி குடுத்திடலாம். ஆமா யாருக்கு உதவி கேக்குற."
"அது நிவிண்ணா என்னோட ஃப்ரெண்ட். உங்களுக்கு கூட தெரியுமே. எப்ப பார்த்தாலும் எலியும் பூனையுமாக சண்ட போடுவிங்களே." என்க, அப்போது தான் கவனித்தான் நிவேதா நின்று கொண்டிருப்பதை.
"பாத்திட்டேன்… பட் என்னால முடிஞ்சத மட்டும் தான் செய்வேன். முன் வரிசையெல்லாம் கிடைக்காது. ஓகே வா?"
"ஓகேண்ணா." என்றவள் நிவிக்குத் தகவல் சொல்லிவிட்டு ராக்கியின் நம்பரைத் தந்து விட்டு வைத்தாள்.
சில நிமிடங்கள் சென்ற பின் நிவி ராக்கிக்கு ஃபோன் செய்து நிலவரம் கேட்க, அவளை ஒரு கேட்டிற்கு வரச் சொன்னான்.
பெண்களைப் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அமரவைத்தவன் அவர்களின் தேவையைக் கவனித்துக் கொள்ள, நிவியைத் தவிர மற்ற அனைவரும் ராக்கியை சைட் அடிக்கத் தொடங்கினர்.
அண்ணா என்று அழைக்காத ஒரு காரணத்திற்காகவே அனைவருக்கூம் ஸ்ப்ரிங் பொட்டேடோவை இலவசமாக சப்ளை செய்தான் அவன்.
"ம்… மது அண்ணா மட்டுமில்ல, அவரோட ஃப்ரெண்டும் ஹன்சம் தான்."
"செம்மையா இருக்காரு."
"இவர் கட்டிக்கப் போற நிச்சயம் லக்கி தான்."
"ஸ்டைலிஸ்ஸா இருக்கான்."
"மேன்லியா இருக்கான் பாரேன்."
" பேரு என்ன சொன்ன நிவி?"
"நம்பர் குடு டி." என நச்சரிக்க, இங்கு நிவிக்குக் காதில் மூக்கில் இருந்து புகை வரத் தொடங்கி விட்டது.
இது போன்ற பேச்சு தான் நிவியை ராக்கியின் பால் காதல் கொள்ளச் செய்தது. அதே பேச்சு தான் விட்டு விலகவும் செய்தது. சுயமாய் யோசிக்கும் ரகம் அல்லவே அவள். அதான் சுற்றி இருந்தோரின் பேச்சைக் கேட்டு ராக்கியை ரசிக்கத் தொடங்கினாள்.
ப்ளாக் கலர் கோர்ட், பேண்ட், க்ளாஸ் என முழுவதும் கருப்பு நிறத்தால் மூடியிருந்தாலும், ராக்கியின் வெளிர் நிறத்தையும் கட்டுமஸ்தான உடலையும் அது எடுத்து காட்டியது. பிரஞ் தாடி என நாடியில் சிறிய தாடி. சிரிக்கும் போதும் பேசும் பற்கள் கூட பளிச்சிட்டது. கூர்மையான கண்களும் இதில் இருக்கும் தீர்க்கமானப் பார்வையும் நிவிக்கு பிடித்து போனது. அவள் காண்செட்டை ரசிக்க வில்லை மாறாக யாரை ரசித்திருப்பாள் என்று சொல்லத் தேவையில்லை. அந்தப் பார்வையை ராக்கியும் உணர்ந்திருக்க வேண்டும்.
காண்செட் முடிந்து வீடு திரும்பு நேரம் டாக்ஸிக்காக காத்திருக்க, " நான் ட்ராப் பண்ணலாமா கேர்ள்ஸ். " என காருடன் வந்தான் ராக்கி.
ராக்கியிடம் கார் கிடையாது. அது மதுவுடையது. சமீபத்தில் தான் அதை வாங்கி இருந்தான். தன் மனைவி புடவை கட்டி கொண்டு பைக்கில் அமர்வதற்கு சிரமப்படுகிறாள் என்று கார் வாங்கி இருந்தான்.
நிவியின் பார்வை தந்த குதுகலத்தில் மதுவின் கார் சாவியைப் பிடுங்கி கொண்டு டாக்ஸி டிரைவர் வேலைக்கு வந்துவிட்டான்.
கடைசியாக நிவியின் வீட்டு வாசலில் காரை நிறுத்தப்போக, அவள் சற்று தள்ளி நிறுத்தச் சொன்னாள்.. ஏன் என்று கேட்காது அவள் வீட்டை தாண்டி நிறுத்த, கீழே இறங்கவில்லை அவள். ராக்கியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
"கான்செட் பிடிச்சிருந்ததா?" என ராக்கி இருவருக்குள்ளும் நிலவிய அமைதியை குழைக்க,
"ரொம்ப பிடிச்சிருந்தது. நான் காண்செட்ட சொல்லல" என்க, திரும்பி அவளின் முகம் பார்த்தான் ராக்கி.
"இந்த ப்ளாக் அண்டு ப்ளாக் உங்களுக்கு சூப்பரா இருக்கு. if you.. if you don't mind... " என்றவள் அவன் எதிர்பாரா நேரம் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு வேகமாக இறங்கிச் சென்றான்.
அது இருவருள்ளும் காதல் மலர்ந்தது தருணம். முத்தங்கள் பரிசுகள் எண்ணங்கள் அனைத்தும் மாற்றி மாற்றி பரிமாறப்பட்டது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நாளை திருமணம் என்ற நிலையில் நிவி ராக்கியிடம் அவனின் தாய் தந்தையைக் காப்பகத்தில் சேர்க்க சொல்ல அது கோபத்தைத் தந்தது அவனுக்கு.
வேண்டாம்… இந்தத் திருமணம் வேண்டாம் என இருவரும் முடிவெடுக்க. இத்தனை தூரம் வந்த பின் திருமணம் நிற்பதா என இருவரையும் அவர்களின் பெற்றோர்கள் சமாதானம் செய்தனர்.
ராக்கி அவனின் தாய் தந்தை கெஞ்ச விடாது மணமேடையில் நிவேதாவிற்காக காத்திருக்க, வந்தது கடிதத்துடன் அழுது கொண்டே அவளின் தாய்...
" கல்யாணங்கிறது பிடிச்சவங்கூட பிடிச்ச வாழ்க்கைய வாழுறது தான். உங்கள எனக்கு பிடிச்சிருக்கு தான். ஆனா நீங்க தரப்போற வாழ்க்க எனக்கு பிடிச்சதா இருக்காது. கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறல. இப்பவே என்னை உங்க அதிகாரத்துக்கு கீழ கொண்டு வர பாக்குறிங்க.
நீங்க ஒரு விசயத்துல உறுதியா நிக்கும் போது நானும் நிக்கணும் இல்லயா. அப்பத்தா சரி சமமா இருக்கும். ஒரு மாசத்துக்குள்ள நான் சொன்னத செஞ்சிட்டு வாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். முடியாதுன்னா காலம் முழுக்க உங்க குடும்பத்துக்கு வேலக்காரியா இருக்க என்னாலயும் முடியாது." என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மண்டபத்தை விட்டு ஓடிச் சென்று விட்டாள் அவள்.
பெரிய அவமானமாகிப்போனது. மணமேடை வந்து நடக்காது நின்று போகும் திருமணங்கள் பெண்ணுக்கும் மட்டுமல்ல ஆணுக்கும் அவமானம் தான்.
அதையெல்லாம் மறந்து, "நாங்க ஆஸ்ரமத்துக்கு போக ரெடிதாய்யா. போய் அந்தப் பிள்ளைய சமாதானம் பண்ணி கூட்டீட்டு வாய்யா." எனப் பெற்றோர் வற்புறுத்தலுக்கு தலை சாய்த்து நிவியை பார்க்கச் சென்றால், அவள் வெளிநாட்டு மாப்பிள்ளை என ஒருவனுடன் ஜோடி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
கத்தியால் குத்தியிருந்தால் கூட ஒரு நிமிட வலி தான். ஆனால் காலம் முழுக்க இருப்பேன், என்று கூறி ஏமாற்றி விட்டு சென்ற பெண்ணால் உண்டான வலிக்கு கால வரையறை இல்லை.
💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..