அத்தியாயம்: 53
கதிரவனைக் காணாத வரை தலை தொங்கிப் போயிருக்கும் சூரியகாந்தி மலர், கண்டுவிட்டால் அதன் திசையைத் தவிர்த்து வேறு எங்கும் திரும்பாது. அது போல் தாமரையின் அகம் ஆடவனின் திசை நோக்கி சென்றது. நேற்று கோபமாக அவன் சென்றதைப் பார்த்த மனம் சுண்ணாம்புக்கல் போட்ட நீர் போல் கொதித்துக் கொண்டிருந்தது. கூடவே போதையில் அவனின் உதறல் மொழிகள். அவனுக்கு இருந்த முன்னாள் காதலிகளைப் பற்றியும் கேட்க நேர்ந்த போது, கொதிநிலை தாங்காது நீரே வற்றி விட்டது.
வறண்டு போயிருந்த மனத்தில் சோனை நீராய்ப் பெருக்கெடுத்து குளிரச்செய்தது அவனின் வருகை. முகத்தில் நாணத்தை வரவிடாது தடுத்தவள்,
"யார் வேணும்? எதுக்கு இந்த நேரத்துல வந்திருக்கிங்க? ஸ்கூல் இன்னும் முடியலயே." முடிந்தவரை மிடுக்காய்க் கேட்க முயன்றாள் அவள்.
"முடியல தான். ஸ்கூல் மட்டுமா முடியல! எனக்கும் முடியல தான்."
"ஹாங்…" என அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாது கேள்வியாய் பார்க்க,
"அது பாப்பவோட பாட்டிக்கு உடம்புக்கு முடியல. அதா சீக்கிரமா குழந்தைய கூட்டீட்டு வரச் சொன்னாங்க." என்க, 'எந்தக் குழந்தை.' எனக் கேட்கும் முன், ஹிரானா ஸ்கூல் பேக்கை மாட்டிக் கொண்டு நின்றாள்.
"மிஸ் நான் கிளம்புறேன்."
"ஓகே, டா செல்லம். அதுக்கு முன்னாடி நாம ஆஃபிஸ் ரூம் வரைக்கும் போய். உன்னோட அம்மாட்ட கால் பண்ணி கேக்கணும்." என்க,
'என்னைப் பாத்தா பிள்ளை பிடிக்கிறவெ மாதிரியா இருக்கு.' ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.
அது தாமரைக்குக் கேட்டதோ இல்லயோ! குட்டி வாண்டிற்குக் கேட்டிருக்க வேண்டும்.
"எதுக்கு மிஸ்? இவரு என்னைக் கடத்திட்டு போய்டுவாருன்னு பயம்மா! நோ… நோ… அது தேவையில்லாத பயம்." என்க, 'பாத்துக்க அந்தச் சின்ன குழந்த கூட என்னைத் தெரிஞ்சி வச்சிருக்கு. ' என்பது போல் பார்த்தவனைக் கைக் காட்ட,
"கடத்திட்டு போற அளவுக்கு இவருக்கு தெளிவு கிடையாது. அத்தோட இவரு பயந்த சுபாவம் வேற. எங்க பாட்டியையும் மம்மியையும் பாத்தா கால் நடுங்கும் இவருக்கு. அதுனால கிட்னாப்லா பண்ண மாட்டாரு. பாக்க வேற்றுலக ஜந்து மாதிரி இருந்தாலும் நம்பி அனுப்பலாம். " என்க,
' குட்டி சாத்தான் என்னம்மா வாய் பேசுது! அவுக ஆத்தா டிரெய்னிங்குன்னு நினைக்கிறேன்.' எனத் தலையில் கொட்டி இழுத்துச் செல்ல பார்க்க,
" மிஸ் நான் கரெக்ட்டா அன்ஸ்சர் பண்ணியும் எனக்கு நீங்க இன்னும் ஸ்டார் போடல. " என்க, புன்னகையுடன் அவளின் கன்னத்தில் நட்சத்திரத்தை வரைந்தாள் தாமரை.
"இந்த மாதிரி எனக்கு ஒரு க்ளாஸ் மிஸ் இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்? ஹிம்... கன்னத்துல கைய வச்சி திருப்பி… ம்ச்… இந்தக் காலத்து பிள்ளைங்க குடுத்து வச்சதுங்க." எனப் பெருமூச்சு விட்டபடி ராக்கி சொல்ல,
"என்ன சொன்னிங்க?" என்றாள் தாமரை..
'நான் சொன்னது என்னதுன்னு தெளிவா காதுல விழுந்தாலும் என்ன சொன்னிங்கன்னு கேக்குறா பாரு! பெரிய நடிகையா இருப்ப போலயே.' என முணுமுணுத்தவன்,
"இல்ல சரியா ஆன்ஸ்ஸர் பண்ற சின்ன குழந்தைங்கள, இந்த மாதிரி தான் ஸ்டார் குடுத்து எங்கரேஜ் பண்ணி தட்டி குடுக்கணும். குட்... கீப்பிட்டப். நீங்க ஒரு சிறந்த ஆசிரியர். நல்லாசிரியர் விருது ஆன் தி வே ன்னு சொல்றேன்." எனப் பாராட்ட, அவள் இரு கரம் கட்டிக் கொண்டு பார்த்தாள்.
அது 'பொய் சொல்றதுக்கும் அளவில்லயா!' என்பது போல் இருக்க,
"அட உண்ம தான். என்னையெல்லாம் எங்க வாத்தியாரு பிரம்புட்ட அடிச்சி தான் பாராட்டுவாரு. உங்கள மாதிரி பேனாவால, வாயால பாராட்டி அவருக்குப் பழக்கம் இல்ல. நீ நம்பலன்னா என்னோட பாராட்டு தழும்புகள காட்டுறேன்." எனக் கரத்தை நீட்ட அதில் கோடாய் சில காயங்கள்.
'பயபில்ல பிட்டடிச்சு எழுதுனதுக்காகக் கையல அவரு அடிச்ச அடிய பெருமையா காட்டுது பாரு.' மை மைண்ட் வாய்ஸ்.
அந்தக் காயத்தை வருடிக் கொடுக்கும் ஆவலில் உயர்ந்த கரத்தைக் கட்டுப்படுத்தியவள், அவனுடன் தயக்கமுடன் பேச தொடங்க, 'அதெல்லாம் தேவையில்ல… தயங்காம பேசலாம்.' என ராக்கி பேசி பேசி புரிய வைத்தான்.
"பாப்பா பேரு என்ன சொன்னிங்க?"
"அது தெரியாம எதுக்கு டீச்சரா இருக்கிங்க?"
'இந்த வாய் மட்டும் ஓயாது இந்த பாய்க்கு.'
"ம்… நான் அவளோட க்ளாஸ் மிஸ் கிடையாது. இன்னைக்கி எனக்கு ஃப்ரீ ப்ரியட் இருந்தது. அதுனால இந்த க்ளாஸ்ஸ கவனிக்க வந்தேன்." என்க,
"ஹிரானா. மதுவோட தங்கச்சி சைந்தவியோட குழந்த. பைரவி இருக்கால்ல அவளுக்கு மருமக மொற. அத்தன்னு கூப்பிடுவா." எனக் கட்டுமான தொழிலாளிகள் செங்கல்லை அடுக்குவது போல் வார்த்தைகளை அடுக்கி மாளிகையை எழுப்பி, அதற்கு காதல் என்று பெயர் வைக்க நினைத்தான்.
பாப்போம் அது வசந்த மாளிகையா மாறுதா! இல்ல தாஜ்மஹாலா மாறுதான்னு!
ஹிரா இருவரையும் திரும்பி திரும்பி பார்த்தாள். இருவரும் மும்மரமாக பேசுவது போல் தெரிய, அங்கிருந்த விளையாட்டு மைதானத்திற்குச் சென்று விளையாட தொடங்கி விட்டாள். பெல் அடிக்கு ஓசை கேட்டு தாமரை புத்தகங்களை எடுத்துக் கொண்டு வேறு வகுப்பிற்கு செல்ல, ராக்கி பள்ளியைச் சுற்றிப் பார்வையை விட்டான். அவனின் Black cat மனம் எதுவோ சொல்லி இருக்க வேண்டும்.
"தாமர, உங்கண்ணே எப்ப வந்து உன்னைக் கூட்டீட்டு போவாரு?"
"மணி 2:30 ஆகுது. 4:30 க்கு வருவாரு. ஏன் கேக்குறீங்க?"
"இன்னைக்கி நான் உன்ன ட்ராப் பண்றேனே. இப்பவே இன்பார்ம் பண்ணிட்டு கிளம்பு." எனக் கட்டளையிட, தாமரை முழித்தாள்.
ராக்கி வேகமாக பாண்டியின் நம்பரை வாங்கி, தாமரையைத் தான் அழைத்து செல்வது பற்றி கூறி பைக்கில் அவளுடன் புறப்பட்டு விட்டான்.
"என்னாச்சி? ஏன்?" எனப் பல கேள்விகள் முளைத்தாலும், அதை அவனிடம் கேட்காது ராக்கியின் பின்னால் ஏறி அமர்ந்தாள் தாமரை. தோளில் கரம் பதித்து ஏறிய நங்கையின் மனதில் இதம் படர, ஹிரானா தான் பேசிக் கொண்டே வந்தாள்.
"இவங்கள ஏன் கூட்டீட்டு போறோம்? ராக்கி அங்கிள்… அங்கிள்… " எனக் கத்த,
"அவங்களுக்கு அவங்க வீட்டுக்குப் போற பாதை மறந்திடுச்சாம். அதா நாம உதவி பண்றோம். டோராக்கு உதவி பண்ற மேப் மாதிரி தான் நாம." என்றவனின் கவனம் சைடு மிரரில் இருந்தது. அதில் அவனுக்குத் தாமரை முகம் தெரியவில்லை. பின்னால் அவர்களை ஃபாலோ செய்து கொண்டிருந்த இனோவா கார் தான் தெரிந்தது.
ராக்கி பாயின் ராசி ரஷ்யாவைத் தாண்டி வட துருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது போலும்.
சாரு, " அடியே… ஏண்டி அத எந்தட்டுல வைக்கிற? உனக்குன்னு ஆசை ஆசையா கொண்டு வந்து குடுத்தாங்க அந்தம்மா. சாப்பிடு… இல்லன்னா வருத்தப்படுவாங்க."
பைரவி, "பட்டா பட்டுட்டு போட்டும்.. அவங்களுக்கா பாத்து நான் இந்த மண்ண ஸ்பூன்ல அள்ளி வாய்ல வைக்க முடியுமா? "
"சாப்பிடுற பொருள அப்படி சொல்லாத. கொன்னிடுவேன்." என அவள் பைரவியின் தட்டில் கேக்கை வைக்க, அதை மறுத்து சாரு தட்டிற்கு அதை மாற்ற என இருவரும் விளையாண்டு கொண்டிருந்தனர்.
அது தீஷித்தின் வீடு. வாவ்… என வாயைத் திறக்க வைக்கும் அளவுக்கு அழகாக இருந்தது. டைட்டானிக் ஹீரோனை அறிமுகப்படுத்தும் போது காட்டுவார்களே ஒரு தொப்பி. அதை மாடலாக வைத்து இந்த வீட்டை அவன் டிசைன் செய்திருப்பான் போலும் ஒரு பக்கம் உயர்ந்து மறு பக்கம் சற்று சாய்ந்து எனப் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் ஒயிலுடன் இருந்தது. வீட்டின் வாசலில் வந்து நின்ற இரு பெண்களையும் தீஷித் வரவேற்ற முறையே சொல்லியது இருவரில் ஒருவர் முக்கியமனவர் என்று.
அபிராமி, "டேய்… இதுல யாரு அது? ".க்ஷ
"எது மாம்?"
"ம்ச்… நடிக்காத டா. அன்னைக்கி சொன்னியே அந்த பொண்ணு. லவ்வு… யாரு? சிவப்பா பச்சையா.. " என அபிராமி ஆர்வமுடன் மகனைக் கேட்க,
"சும்மா இருங்கம்மா." என்று மகன் வெட்கப்படும் போதே தாய்க்கு தெரியாதா என்ன?
இருவரில் யாராக இருக்கும் என்று அறிய அவனின் நண்பர்களிடம் கேட்டார் அவர். "அதக் கண்டு பிடிக்கத்தாம்மா நாங்களும் இன்னைக்கி வந்திருக்கோம். அன்னைக்கு அவெ ஓடுன ஓட்டத்த மறக்க முடியல. அன்னைக்கி தப்பிச்சிட்டான். இன்னைக்கி யாரு என்னன்னு கண்டுபிடிக்காம நாங்க விடாமாட்டோம். நாங்க இருக்கோம். கவலயே படாதிங்க." என்றவர்களும் பைரவியையும் சாருவையும் சிறப்பாக கவனிக்க, இருவரும் அதைச் சமாளிக்க முடியாது திணறினர்.
" ம்ச்… சாரு புரிஞ்சிக்க. எனக்குக் கேக்கே பிடிக்காது. எக்லஸ் கேக்குன்னு முட்ட ஈஸ்டு சுகர்ன்னு எதுவுமே இல்லாத ஹெல்த்தி கேக் இதாம். எப்படிடி சாப்பிடுறது? வாங்கிக்க செல்லம். ஒரு வாரம் என்னோட சாப்பர உனக்கு நான் தத்துக் குடுக்குறேன். ப்ளீஸ்…" எனக் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டாள் பைரவி.
ஏனெனில் கவனிக்கிறேன் என்று நந்திதா, கருணா, ரத்தன், அப்சரா, அக்ஷயா, கற்பகம், அபிராமி எனத் தலா ஒரு துண்டு கேக்கை எடுத்து வந்து இருவரின் தட்டைக் காலியாக விடாது பார்த்துக் கொண்டனர்.
"எனக்கு செந்தில் காமெடி தான் நியாபகம் வருது. அவரும் இப்படித் தான் சாப்பிட்டுட்டு இருப்பாரு கவுண்டமணி வந்து இலைய ஃபில் பண்ணிட்டு போவாரு. அதுக்கு செந்தில், 'என்னண்ணே இவ்ளோ வச்சிட்டீங்க. சரி உங்களுக்காக சாப்பிடுறே.' ன்னு சொல்லி உள்ள தள்ளுவாரு.. பட் நான் அவரோட க்ளோனிங் வர்ஷன் கிடையாது. அதுனால என்னால சாப்பிட முடியாது." எனச் சாரு மறுத்து விட, பாவம் பைரவி திருதிருவென முழித்தபடி அமர்ந்திருந்தாள்.
"ஹாய் க்ளேர்ஸ்." என்றபடி வந்தமர்ந்தான் தீஷித்.
"ஹாய் ஸார்." சாரு எழ,
"நோ ஃபார்மாலிட்டீஸ். ஏ கேக் அப்படியே வச்சிருக்கிங்க? பிடிக்கலயா?" என்க,
"அப்படில்லாம் இல்ல." எனச் சாரு மலுப்பும் முன்,
"நீங்க வெஜிடேரியன்னா?" என்றாள் பைரவி.
"நோ."
"சுகர் இருக்கா?"
"அது வர்ற அளவுக்கு எனக்கு வயசாகிடல."
"கொலஸ்ட்ரால்? ரத்தக் கொதிப்பு? இது மாதிரி ஏதாவது. " என்க, அவளைக் குறுநகையுடன் தீஷித் நோக்கினான்.
"அப்றம் ஏன் இப்படி ஒரு கேக்." எனத் தட்டை காட்ட, சிரித்துவிட்டான் அவன்.
"பையூ…" எனச் சாரு அவளை அடக்க,
"நீ சொன்ன எல்லாமே எனக்கு இல்ல. பட் என்னோட அம்மாக்கு இருக்கே. " என்றான்.
"தப்பா எடுத்துங்காதிங்க ஸார். அடுத்த மொற உங்கம்மாக்கு மட்டும் சின்னதா இந்த ஹெல்த்தி கேக்க ஆர்டர் பண்ணி வெட்டி ஊட்டீட்டு. மத்த எல்லாருக்கும் ரெட் வெல்வெட் இல்லன்னாலும் சாதா கேக்கையாது குடுங்க. அதுவும் ஒரு பீஸ் மட்டும். ப்ளிஸ்…" என்றாள் கெஞ்சலாக.
"அவ்ளோ மோசமாவா இருக்கு." என கேட்டவனின் வாயில் கேக்கை வைத்து, "அத சாப்டுட்டு சொல்லணும்." என்றாள். அந்த கேக் மிகவும் சுவையாக தெரிந்தது அவனுக்கு. அவள் உண்ட ஸ்பூன் ஊட்டி வேறு விட்டாள் அல்லவா?
மூவரும் உலகை மறந்து பேசத் தொடங்கியிருந்தனர். இல்லை பைரவி மட்டும் தான். சுற்றம் மறந்து தீஷித்துடன் பேச்சில் லயித்திருந்தாள். காரணம் அவளுக்கு தான் சுடரைப் பற்றி பேச்சு வந்தாலே போதுமே. தீஷித்திடம் மற்றொரு செல் நம்பரையும் தந்து உதவி கேட்க,
"டூ வீக்ஸ் கொஞ்சம் பிஸி. ஒரு முக்கியமான conference. அது முடியவும் முதல் வேலை உன்னோடது. உ கண்ணு முன்னாடியே எடுத்து தர்றேன்." என்று விட்டான். அதில் முகம் வாடி விட,
"உனக்கு இது அவ்ளோ முக்கியமா?" என அக்கறையுடன் கேட்டவனிடம் சுடருடன் அவளுக்கு இருக்கும் நட்பைப் பற்றி சொல்லத் தொடங்கியதால் அவள் இவ்வுலகிலேயே இல்லை.
அவளின் பேச்சில் கவரப்பட்டவனின் பார்வை ரசனையுடன் பைரவியை மேயும் போது, அதை பைரவி உணரவில்லை என்றாலும் சாருவிற்கு புரிந்தது. அவளுக்கு மட்டுமல்ல தீஷித் நண்பர்கள் அனைவருக்கும் தீஷித்தின் மனத்தை சொல்லாமல் சொல்லியது.
"பச்ச கலரத் தான் நம்ம தம்பி சைட் அடிச்சிட்டு உக்காந்திருக்கு. பொண்ணு லட்டு மாதிரி இருக்கு." என்ற கற்பகத்திற்கு குஷி.
" ஆன்டி… பொண்ணு பேரு பைரவி. போலிஸ்ஸா வேல பாக்குறா." என பைரவியின் பயோடேட்டாவைக் கூறினர். மதுவுடன் நடந்த கல்யாணத்தை மட்டும் மறந்து விட்டனர்.
'அதான் டைவர்ஸ் ஆகிடுச்சில்ல. அப்றம் எதுக்கு நடந்து முடிஞ்சத பத்தி சொல்லணும். தீஷித் அம்மா தன்னோட மருமக எப்படி இருந்தாலும் ஏத்துப்பாங்க.' அவனின் நண்பர்களின் மைண்ட் வாய்ஸ்.
"நீ வெஜ்ஜா இல்ல நான்-வெஜ்ஜா?" எனத் தீஷித் கேட்க,
"ஏன் கேக்குறிங்க?"
"பிகாஸ். என்னோட அம்மா வெஜ். சோ… கெஸ்ட் எல்லாருக்கும்."
"இட்ஸ் ஓகே… போற இடத்துலலாம் பிரியாணிய எதிர் பாக்குற ஆள் நான் கிடையாது."
"பட், என்னோட கெஸ்ட்ட சிறப்பா கவனிக்கலன்னா எப்படி? கம்." என இருவரையும் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். அங்கு அவன் வளர்த்த துலிப் மலர்களுக்கு மத்தியில் பெரிய டயனிங் டேபிளை போட்டு அசைவ உணவுகள் கடை விரிக்கப்பட்டிருந்தன. தீஷித்தின் நண்பர்களும் அங்குத் தான் இருந்தனர்.
தலையைச் சுற்றி கலர் கலர் விளக்குகளைப் பார்த்தவளுக்குத் தன் வீட்டிற்கு வரும் மலர்கள் இவனுடயதா என்ற சந்தேகம் தோன்றவே இல்லை. என்ன போலிஸ்ஸோ!
கருணா, "என்ன அப்படி பாக்குறிங்க?"
பைரவி, "அழகா இருக்கு."
அப்சரா, "இது எங்களுக்காக. ஆன்டி எப்பயும் தனியா ஆர்டர் பண்ணிடுவாங்க. "
ரத்தன், "நாங்க ஆடு கோழி சாப்பிடுறத சாப்பிடுறது இல்ல. ஆடு கோழியத்தா சாப்பிடுவோம்."
"கம். ஜாயின் அஸ்…" மித்ரன் சொல்ல, தீஷித்தே அவர்களுக்குப் பரிமாறினான். அவர்களுக்கு என்பதை விட பைரவிக்கு என்று சொன்னால் சரியாக இருக்கும்.
நடந்து கொண்டிருக்கும் எதுவும் சாருவிற்குச் சரியான படவில்லை. ஆரம்பம் முதலே தீஷித் பைரவியிடம் காட்டும் பரிவும் அக்கறையும் தீஷித்தின் விருப்பத்தை சொன்னாலும்… மது அண்ணா!
"அண்ணாக்கும் பையூக்கும் தான் ஆகலயே. அவளக் காதலிக்கிற சந்தோஷமா வச்சிக்கிற ஒருத்தர கடவுள் காட்டும் போது. அவருக்கு ஒரு வாய்ப்பு குடுக்குறதுல என்ன தப்பு. " என ஒரு மனம் தீஷித்திற்கு ஆதரவாக பேச,
மறு மனம் "அப்போ உனக்கு அவரு மேல இன்டர்ஸ்ட் இல்லயா?" எனக் கேட்டது. அதற்கு பதிலாக, "இல்லை." என்று அடித்து கூறும் முன் லேசாக மிகவும் லேசாக வலியை உணர முடிந்தது அவளால்.
டல்லான ஃபீலிங் அவ்வளவு தான். மற்றபடி ஒன்றுமில்ல. எனத் தேற்றிக் கொண்டவளின் முன் பாண்டி முகம் வந்து நின்றது.
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..