அத்தியாயம்: 26
ஞாயிற்றுக்கிழமை…
வாரத்தின் முதல் நாளா அல்லது கடைசி நாளா என்ற சந்தேகம் இருந்த போதிலும் அன்று விடுமுறை என்பது மட்டும் மட்டற்ற மகிழ்ச்சி. அன்றைய நாள் பல உயிர்கள் பலி கொடுக்கப்படும். அரசியும் பலி கொடுக்கத்தான் அந்தக் கோழியை வாங்கிக் கொண்டு வந்தார்.
"நல்ல கோழியாத்தா இருக்கு... எப்படியும் ரெண்டு கிலோ தேறும். இந்த அரசியவே ஏமாத்த பாத்தா விட்டிடுவேனா என்ன. இவனுங்க கிட்டல்லாம வாய் பேசலன்னா நாட்டுக் கோழின்னு சொல்லி சாயம் பூசின போந்தாங்கோழியா தள்ளி விட்டுடுவானுங்க. அடியே தாமர வெங்காயத்த அறிஞ்சி வை. நான் இத அறுத்திட்டு வாரேன்." என்றவர் கோழியுடன் பின் கட்டிற்குச் செல்ல, தாமரை அருவாமனையுடன் தாய் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
அவளுக்கு மனமே சரியில்லை. வேலாயுதம் வந்து சென்றதில் இருந்தே.
'உன் வீட்டுலயும் பொம்பளப்பிள்ள இருக்கு. ' என அவர் குறிப்பிட்ட போது தாமரையின் ஈரக்குழலை நடுங்கியது. உடல் உதறல் எடுத்து விழிகளில் கண்ணீர் வடிந்தோடியது. மனமானது வேதனையில் வாடி வதங்கியது.
அவளுக்கான அப்பாய்ன்மெண்ட் ஆர்டருடன் வந்தான் பாண்டி.
"செல்வி... அடிச்சான் பாரு அப்பாய்ண்மெண்ட் ஆடரு. சென்னைக்கிப் போக ரெடியா இரு. நாளைக்கி போகணும்.. " எனக் குரல் தாழ்த்தி தங்கையிடம் சொன்னவன்,
"ம்... ம்மோய்... வாசன ஊரையே கூட்டீட்டு வருது. " எனப் பாண்டி வாசம் பிடித்த படி வந்தான் சமையலறைக்குள்.
"ஊருக்கெல்லாம் சமைக்கணும்னா உந்தங்கச்சிக்கி கல்யாணம் தான் பண்ணணும்."
"கல்யாணமா... அப்ப அவள கவர்மென்ட் டீச்சர் ஆகுற உன்னோட கனவு."
"அந்தக் கனவத்தான் அவளால நெனவாக்க முடியாது போலயே. " என்றார் கவலையாக.
"ஏன் இந்த திடீர் கவல? "
"வயசு பொண்ண வீட்டுல வச்சிருக்கிறதுனால தான் ஊர்ல இருக்குறவனுங்க வாய்க்கு வந்த படி பேசுறானுங்க. இவள ஒருத்தெ கைல பிடிச்சு குடுத்திட்டா நிம்மதி கிடைக்கும்."
"அதுக்கு!"
"அதான் பரமு மாமாவ வரச் சொல்லிருக்கேன். நம்ம சுத்து வட்டாரத்துல நமக்கு ஏத்த இடம் இருக்கான்னு பாக்க. நீ பரண் மேல கிடக்குற இவளோட ஜாதகத்த எடுத்துத்தா. நம்ம ஜோசியக்காரெங்கிட்ட காட்டி நேரம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வர. ஜெராக்ஸ் போட்டு கம்யூட்டர்ல பதியாணும்னு பரமு அண்ணெ சொல்லுச்சி.
எங்க இந்த மனுஷன காணும். போனா போன இடம் வந்தா வந்த இடம்னு எங்கனையாது உக்காந்துக்க வேண்டியது. வீட்டு வேல செய்ய கறி வலிக்கும் அந்தாளுக்கு. இதே இது ஊர் பொம்பளைங்க கேட்டா குடுகுடுன்னு சின்னப் பையனாட்டம் ஓடி ஓடி வேல செய்ய வேண்டியது." எனக் கணவனை வசை பாடினார்.
"ம்மா... கல்யாணம் ஆகிட்டா எந்தப் பிரச்சனையும் இல்லயா? போம்மா நீயும் உன்னோட சினிமா வசனமும். செல்விக்குக் கல்யாணத்துல மேல விருப்பமே கிடையாது. கல்யாணத்துல விரும்பம் இல்லாதப் பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம்னு கட்டி வைக்கிறது தப்பும்மா." எனத் தங்கைக்காகக் தாயிடம் வாதாட, அதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் தாமரை.
பாண்டியின் 'பிடிக்காத' , 'கல்யாணம்', ' தப்பு' என்ற வார்த்தைகளைக் கேட்ட போது, 'பிடிக்காத ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தப்பில்லையா பாஸ்.' என்ற ராக்கியின் குரல் காதுகளை நிறைத்தது. அதுவரை சஞ்சலத்தில் இருந்த மனம் அவனின் குரல் கேட்டதும் மழை கண்ட நிலம் போல் மண் வாசம் பிடித்துக் கொண்டது. மனம் பூப்பூக்க, அவனின் முகமும் கண் முன்னே வந்தது.
பார்க்க மாட்டாளா எனத் தவித்து பார்த்த ராக்கியின் பார்வை மனத்தை மயிலிறகாய் வருடியது. பஸ் ஏற்றி விடும் போதும் பார்க்காது தவிர்த்த தன்னைப் பார்க்கையில் அவன் முகம் போன போக்கை, ஓரக்கண்ணால் கவனியாதது போல் கவனித்த தாமரைக்குச் சிரிப்பு வந்தது.
கூடவே… 'இந்த ஹைவேஸ்ல டார்ச் அடிச்சி லாரிய மடக்கி தொழில் பண்ற கும்பல சேந்தவ தான நீ?' என்ற குரல் கேட்டதும், பொழிந்த மழை வற்றி வடிந்து, சடுதியில் வறண்டு போனது.
'என்னைப் பாத்தா அவனுக்கு அப்படித்தா தெரிஞ்சதா? எப்படி அவனால என்னை இப்படி கேவலமா நினைக்க முடிஞ்சது. நான் விபச்சாரியா! இவெ பெரிய ஆணழகன். பாத்ததும் வாய்யா மகா ராஜா, மஞ்சத்துல படுத்து மஜா பண்ணலாம்னு கூப்பிடுறாங்க. அன்னைக்கி சூழ்நிலை சரியில்ல. அதான் அமைதியா போனேன். இப்ப மட்டும் அவ எங்கண்ணு முன்னாடி இருந்தானா… ' என ராக்கியை வெட்டுவதாக நினைத்து வெங்காயத்தை பொடிப் பொடியாக வெட்டினாள்.
"ம்மோய்… கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நம்ம செல்விக்கி பக்குவம் கிடையாது. அதோட உன் ஆசைய நாந்தா நிறைவேத்த முடியல. செல்வி கண்டிப்பா நிறைவேத்துவாங்கிறப்ப அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு எதையும் செஞ்சி கெடுத்திடாத.. அவளோட முழு கவனமும் டீச்சர் ஆகுறது தா... நா செல்விக்கி சென்னை ஒரு அகாடமில கோச்சிங் சேத்து விட போறேன." என்றான் தாயின் முகம் பார்க்காது.
"சென்னைக்கா... பெரிய பட்டணத்துக்கா... " என வாய் பிளந்த, தாயைக் கொஞ்சி கெஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டி.
'இவனுக்குச் சென்னை போறதுல அப்படி என்ன அவசரம்… புரியலயே… '
'எல்லாம் தங்கச்சி மேல உள்ள பாசம் தான். ' பாண்டியின் மைண்ட் வாய்ஸ்.
'நம்ம முடியல.'
"ஆமா, ஆமா அங்க தான். ஆறு மாச கோர்ஸ். பணமெல்லாம் தேவையில்லயாம். நானும் செவ்வாழையும் போய் பேசிட்டு வந்தோம். அவனோட தங்கச்சியும் அங்க தான் சேர போதாம். நம்ம சாராதாம்மா இருக்காங்கள்ல, அவங்க ஹோம்ல தங்கிக்க சொன்னாங்க.
எண்ணி ஆறே மாசத்துல நம்ம செல்வி தலை முடியக் கொண்டையா முடிஞ்சிக்கிட்டு, காட்டன் புடவ கட்டி டீச்சரா வேலைக்கு போகத்தான் போறா... நீ டீச்சர் அம்மாவா மாறத்தான் போற. அப்றம் நீ நான்னு போட்டி போட்டுட்டு மாப்பிள்ள வீட்டுக்காரனுங்க நிக்க போறானுங்க. நாம குடும்பமா உக்காந்து வர்றவெங்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு இன்டர்வியூ வச்சி நிதானமா செலக்ட் பண்ணத்தான் போறோம்."
"நிஜம்மாவாடா சொல்ற!" என்றவருக்கு மனம் இறக்கைக் கட்டிப் பறக்கத் தொடங்கியது.
"ஆனா எம்மக கவர்மென்ட் டீச்சராத்தான் ஆவா. அஞ்சும் பத்து தர்ற தனியார் ஸ்கூலுக்கு டீச்சரா போக மாட்டா." என அவர் எடுத்த சபதம் நிறைவேறுமா எனப் பாண்டியிடம் கேட்க,
"சத்தியமா உம்மக டீச்சர் ஆயிடுவா… ஆயிடுவா... ஆயிடுவா... " என்க, பழய டீவிஎஸ் 50 யின் ஒலி கண்ணாயிரத்தின் வருகையைச் சொல்லியது.
வந்தவர் வெறும் கையோடு வரவில்லை. பெரிய பெரிய லெட்டர் கவரும், ஜெராக்ஸ் பண்டலுடனும் வந்திருந்தார்.
'என்ன இந்த மனுஷெ! பொண்ணுக்கு மாப்பிள்ள பாக்க ஜாதகத்த இத்தன காப்பி போட்டுட்டு வந்திருக்காரு.' என நினைத்தபடி கணவனிடம் “என்ன இது?” என்று வினவ,
"அடுத்த மாசம் ஒரு தர்ணா போராட்டம் ஏற்பாடு பண்ணிருக்கோம் அரசி. அதுல கலந்துக்க சொல்லி பல அமைப்புகளுக்கு அழைப்ப நோட்டிஸ்ஸா அடிச்சி, லெட்டர் போடப் போறேன்." என்க, அரசி கண்ட படி திட்ட தொடங்கினார்.
" கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற கணக்கா... நாங்க உசுர குடுத்து சம்பாதிச்சா! நீரு காச வெரயம் பண்ணீட்டு வந்திருக்கீரு. அப்படி என்ன ஆர்ப்பாட்டத்துக்கு இத்தன ஆர்ப்பாட்டம்." என்க, அவரின் கையில் நோட்டிஸ்ஸைத் தினித்தார் கண்ணாயிரம்.
"இதப் படிக்க தெரிஞ்சா நான் ஏன் காட்டுல கீர பொறக்க போறேன். டேய் என்னடா எழுதிருக்கு." எனப் பாண்டியைக் கேட்க, பாண்டி படித்துக் காட்டினான்.
எங்கே செல்கிறது மனித குளம்… என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடூரமாகக் கொலை செய்ய பட்ட சுடர்விழியின் இழப்பிற்குக் காரணமானவர்கள் தண்டிக்க படவேண்டும் என்றும், அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று அந்த நோட்டிஸ்ஸில் போட்டிருந்தது.
அதைப் பார்த்த அரசி எதுவும் சொல்லாது உள்ளே சென்று விட, " அம்மாடி சில லயன்ஸ் க்ளப் அட்ரஸ்ஸ உன்னோட கம்யூட்டர்ல தேடி எடுத்து தாயேன். லெட்டர் போட உதவியா இருக்கும். எழுத வேண்டிய அவசியம் இருக்காது. ப்ரிண்ட் போட்ட அட்ரஸ்ஸ கிழிச்சி ஒட்டுனாலே போதும்." எனக் காகிதங்களைத் தாமரையிடம் நீட்ட, அவள் அதை வாங்காது நின்றாள்.
“என்னாச்சும்மா?”
தாமரை கலங்கிய விழிகளுடன், "இல்லப்பா லேப்டாப் ரிப்பேர். நீங்க கடைல கேளுங்கப்பா." எனப் பொய் சொல்லி அழுது கொண்டே சென்றாள் அவள். அவளின் செயலை கண்டு குழம்பி போய் நின்றான் பாண்டி. எனினும் காலையில் தான் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை அரசி திட்டி வெங்காயம் நறுக்கச் சொன்னார்.
அந்தக் காலத்திலேயே பத்தாம் வகுப்பு வரை படித்தவர் கண்ணாயிரம். கற்றல் திறன் இப்போதும் உண்டு அவருக்கு. அவருக்கு மற்றவற்றை காட்டிலும் கணினி புதிது. தாமரை தான் தந்தைக்கு உதவி செய்வாள்.
அரசு இசேவை மையம் வைக்கும் ஐடியாவை கொடுத்தது அவள் தான். கண்ணாயிரம் கேட்கும் எதையும் அவள் கற்றுத் தரவோ செய்யவோ மறுத்ததே இல்லை. அதுவும் சுடர்விழிக்காக உதவி கேட்கையில், ஏன் மறுத்து பொய் சொல்லி செல்கிறாள் என்று புரியவில்லை பாண்டிக்கு.
கண்ணாயிரம், அந்த நோட்டிஸ்ஸில் இருந்த சுடர்விழியின் முகத்தை வாஞ்சையோடே தடவினார். இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவளின் வயது முப்பதை நெருங்கி இருக்கும். திருமணம் குழந்தை எனக் குடும்பமாக வாழ்ந்திருக்க வேண்டிய நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் இறையடி சேர்ந்து விட்டாள். “மாமா…” “மாமா…” எனத் தன்னை சுற்றி வரும் மற்றொரு மகள் தான் சுடர். தன் உயிர் நண்பனின் மகள்.
'பாருடா எம்மருமகளா... எம்புட்டு அழகா இருக்கா.. ' என்றபடி சுடரை இந்தப் பூ உலகிற்கு அறிமுகப்படுத்திய மருத்துவரிடம் இருந்து, முதலில் கையில் வாங்கியதே கண்ணாயிரம் தான். பெண் பிள்ளைகள் உடன்பிறப்புகளாக இல்லாத கண்ணாயிரத்தை, தாய் மாமனாக தரம் உயர்த்தியது அவள் தான்.
வயதுக்கு வந்த போது குச்சி கட்டியது முதல் இறுதி யாத்திரைக்கு பாடை கட்டியதும் கண்ணாயிரம் தான். சுடரின் உடலை விட்டு உயிர் பிரிந்ததும் அவர் மடியில் தான், "மாமா.. வலிக்கிது மாமா.. தாங்க முடியல.. ம்மா... " என ரத்தம் சொட்ட சொட்ட பிறந்த போது எப்படி வாங்கினாரோ அதே போல் ஆடையின்றி நடு ரோட்டில் கிடந்த தன் மருமகளை நினைக்கும் போது அவருக்கு உயிர் வலி வந்தது.
இதைச் செய்தவன் எத்தனை கொடும் பாதகனாக இருந்தால் மலரிலும் மென்மையான மங்கையே கசக்கி எறிந்ததோடு மட்டுமல்லாது, முற்றிலும் சிதைக்கவும் செய்திருப்பான். ஆண் என்ற கர்வத்தாலும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தாலும் ஒரு பெண் மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டிருக்கிறாள். உடல் பசி எடுத்த அந்தக் கயவர்களால் விலங்கைப் போல் வேட்டையாட பட்டது சுடர் விழி என்ற புள்ளி மான்.
அந்த அரக்கன் யார் என அடையளம் காண வேண்டும். தன் மருமகளை வதை செய்த வஞ்சகர்களை வதம் செய்ய வேண்டும். அந்தப் பெண் பித்தன் என்று இந்த உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும். இதுவரை மனித குளம் பார்த்திடாத ஒரு அரக்கதனமான மரணத்தை அனைவர் முன்னிலையிலும் வழங்க வேண்டும். இந்த வெறி அவரின் உயிர் வேரில் பாய்ந்து உரமாகிக் கொண்டிருக்கிறது.
'விட மாட்டேன்... எவனா இருந்தாலும் விடமாட்டேன். ' என முணுமுணுத்தபடியே அனைத்து நோட்டிஸ்ஸையும் கடித உறையில் இட்டு விலாசத்தை எழுத தொடங்கினார். அரசியும் வேலை முடித்து வந்து உதவி செய்தார்.
"ஏய் செல்வி என்னாச்சி.. நேத்தே உங்கிட்ட சொன்னேன்ல இன்னைக்கி சென்னைக்கு போகணும்னு. கிளம்பாம இங்க வந்து உக்காந்திருக்க." எனக் கிணத்துமேட்டில் கண்ணீர் வடித்த தங்கையிடம் கேட்டான் பாண்டி.
" நான் எங்கயும் போகல. எனக்கு எதுவும் வேண்டாம்." என்றாள் தாமரை.
" ஏன்.. நீ கேட்டன்னு தான சாராதாம்மாட்ட உதவி கேட்டு போனேன். வந்து சேர சொல்லி லெட்டர் வந்ததுக்கு அப்றம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்."
"எனக்கு பயம்மா இருக்குண்ணா. "
"என்ன பயம்? "
" வேலாயுதம் பெரியப்பா சொன்ன மாதிரி எதுவும் ஆகிடுமோன்னு. சுடரக்கா எப்படி இறந்தாங்கன்னு நினைக்கும் போது... நானும் அவங்கள மாதிரி... " என்றவள் தடுமாற்ற,
" வாய மூடு... அவெ என்ன பெரிய ஞானியா! சொன்னதும் நடக்க. இங்க பாரு, நம்ம நாட்டுல ஒரு நிமிசத்துக்கு ஒன்னுங்கிற கணக்குல கற்பழிப்பு நடக்கத்தா செய்து. ஒருத்தருக்கு நடந்ததே இன்னொருத்தனுக்கு நடக்கணும்னு அவசியம் இல்ல. நாம பாதுக்காப்பா இருக்க முயற்சிப்போம். வீணா பயப்படாம வா."
"சுடரக்காக்கு நடந்தது கற்பழிப்பு கிடையாது. கூட்டு பாலியல் பலாத்காரம். ஒருத்தெ மேல கை வைக்கிறதே கொடுமை. இதுல பத்து ஆம்பளைங்க… என்னால நினைச்சி கூட பாக்க முடியல. நெஞ்சி அடைக்குது. அன்னைக்கி என்னைத் துரத்துனவங்க கைல நான் மாட்டிருந்தேன்னா... இன்னேரம் நானும் சுடரக்கா மாதிரி செத்திருப்பேன்." என முகம் மூடி விம்மி விம்மி அழுதாள் தாமரை.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றான் பாண்டி.
"செல்வி என்ன சொல்ற? துரத்துனாங்களா! யாரு? எப்ப? என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு." எனத் தங்கையின் தோளை உளுக்கி கேட்க, நடந்த அத்தனையையும் கூறி அழுதாள் பெண்.
"மது அண்ணனும் அவரு ஃப்ரெண்டும் என்னைக் காப்பாத்தலன்னா, நான் இன்னொரு சுடர் விழியாத்தா ஆகிருப்பேன்ண்ணா... " என்க,
"இப்ப சொல்லுண்ணா நான் சென்னைக்குப் போக வேண்டாம் தான. "
"இல்ல… இப்ப தான் நீ அங்க போகணும்..."
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

sudar 😭
பதிலளிநீக்கு🫂🫂🫂
நீக்கு