அத்தியாயம்: 40
"நீங்க எப்படிங்க எங்கிட்ட கேட்காம கூட்டீட்டு போனிங்க? நான் தான் உங்ககிட்ட படிச்சி படிச்சி சொன்னேன்ல. அவள எங்கயும், வெளில நான் இல்லாம கூட்டீட்டு போகக் கூடாதுன்னு. இருந்தும் ஏங்க கூட்டீட்டு போனிங்க?
உங்களச் சொல்லக் கூடாது. இந்தக் கழுதய சொல்லணும். உங்கிட்ட தான் ஃபோன் இருக்குல்ல. அத எடுத்து ஒரு வார்த்த சொன்னாத்தான் என்னவா! என்ன மாதிரியான சூழ்நிலைல நாம இருக்கோம்னு தெரியும் தான. அதைப் பத்தியெல்லாம் கவலப்படாம நீ ஜாலியா எப்படி ஊர் சுத்த வெளிய போலாம்." எனக் காட்டு கத்தலாக கத்திக் கொண்டு இருந்தான் பாண்டி.
ஞாயிற்றுக்கிழமை…
வழக்கம் போல் தங்களின் பொழுதைப் போக்க சாரதா ஹோமிற்குச் சாரு, பையூ, தாமரை என மூவரும் செல்ல, பாண்டி அவர்களை மெரினாவிற்குத் தான் அழைத்து சென்றான். அங்கு ஒரு கூட்டமே இருந்தது. ஏனெனில் இன்று கேம்ப் இருந்தது.
பீச்சில் இருக்கும் குப்பைகளை அகற்றத்தான் இன்று கூடியிருக்கின்றனர் அந்தச் சமூக ஆர்வலர்கள். கையில் பெரிய நெகிழிப் பையை வைத்துக் கொண்டு, நீளக் குச்சியின் முனையில் ஆணி போன்ற கூர்மையான ஒரு ஊசியைப் பொருத்தி, பேப்பர், டீ கப்ஸ், பிளாஸ்டிக் பாட்டில் தின்பண்ட கவர்கள் உள்ளிட்டவற்றைப் பொறுக்கி, அந்த இடத்தைப் பலர் ஒன்று கூடி சுத்தமாக்கிக் கொண்டிருந்தனர்.ன.
பைரவி, வேலை செய்து கொண்டிருந்த சாருவையும் தாமரையையும், "எவ்ளோ நேரம் தான் வேலை பாக்குறது. வாங்க அங்க சூப் விக்கிறாங்க. குடிச்சிட்டு தெம்பா பாக்கலாம்." எனக் கூறி இழுத்து சென்று வெட்டி கதை பேச, பேச்சு மும்மரத்தில் சூப்பர் மார்க்கெட் பற்றியும் தீஷிதனைப் பற்றியும் பைரவி சொல்ல, அதைப் பாண்டி கேட்க நேர்ந்தது.
" சாரு நாங்க ரெண்டு நாளுக்கு முன்னாடி உன்னோட ஆள பாத்தோம்மே. எனக்கு ஃப்ரியா ப்ரூட்ஸ் வாங்கி குடுத்து சேவ செஞ்சாரு. தெரியுமா!" பையூ சொல்ல சாருவின் முகம் பிரகாசித்தது.
"யாரு தீஷித் ஸாரையா! எங்க டி பாத்த? நான் இல்லாம எங்கயும் போக மாட்டியே! பொய் சொல்றியா நீ?" எனச் சந்தேகமாகக் கேட்டாள் அவள்.
" ச்சச்ச… நான் எதுக்கு பொய் சொல்லணும். வேணும்னா லோட்டஸ்ஸ கேட்டுக்க. ஏய் லோட்டஸ் முந்தாநேத்து நாம சூப்பர் மார்க்கெட்ல பாத்தோமோ ஒரு ஹேன்சம் ஹைய்... ட்ராலி கூட மாறிப்போய் சண்ட போட்டோமே..." என நினைவு படுத்த,
'எது சண்ட போட்டோமா! போட்டேன்னு சொல்லுங்க. ' எனச் சொல்ல நினைத்தவள் அதைச் சொல்லாது ஆம் எனத் தலையை மட்டும் தான் அசைத்தாள். அதற்குள் பாண்டியின் குரல் கேட்டது.
"செல்வி, நீ எங்க போயிருந்த?" எனக் காட்டமாக கேட்க, தாமரை பயந்து விட்டாள்.
"இல்லண்ணா அது…" என்பதற்குள் தாமரையின் கன்னத்தில் பாண்டியின் கரம் இறங்கியது.
அவனிடம் அனுமதி கேட்காமல் தாமரையை சூப்பர் மார்க்கெட் அழைத்து சென்ற பைரவிக்குக் கிடைத்த வசை சொற்கள் கம்மி தான். தாமரைக்குப் பாவம் அடி விழுந்து விட்டது. கன்னத்தில் பாண்டியின் கை ரேகைகளை எடுத்து ‘ஆதார் கார்டுக்கே அப்ளே செய்யலாம்.’ என்ற அளவுக்கு விரல்கள் அழுந்த படிந்திருந்தன.
"நம்மல பெத்தவங்க உன்ன என்னை நம்பித்தா அனுப்புச்சி வச்சாங்க. நீ இப்படியே சேட்ட பண்ணிட்டு திரிஞ்சேன்னா ஊரப்பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். என்ன நினச்சிட்டு இருக்க? நீயா யார்ட்டையும் எதுவும் சொல்லாம, கேக்காம உம்பாட்டுக்கு ஊர் சுத்துற அளவுக்கு முன்னேறிட்ட! வளந்திட்ட இல்ல... ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பண்ணுவ?
இதே மாதிரி கோட்டிக்காரியாட்டம் ஆடிட்டே இருத்தேன்னா, இனி இங்க இருக்க முடியாது. பட்டணத்துக்கு வந்ததும் கொழுப்பு கூடிப்போச்சி உனக்கு. முதல்ல நீ கிளம்பு இனி எம்பார்வைல தான் நீ இருக்கணும். சாரதாம்மா வீட்டுல இரு. அங்கயும் அறிவு கெட்ட தனமாக எதாவது பண்ணேன்னா செவில் மேலேயே நாலு போடுவேன்." எனச் சரமாரியாக வசை பாட, தரையில் விழுந்த தாமரை எழக் கூட மறந்து அழுது கொண்டே இருந்தாள்.
" போதும்... நிறுத்துங்க…" என்ற காட்டமான குரல் தான் பாண்டியைத் தடுத்தது. பைரவியுடையதா? அவள் தானே சொன்னால் ‘பாண்டி அண்ணனை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று.’ அதான் இப்போது தடுத்து தாமரையைக் காப்பாற்றி இருக்கிறாள் போலும்.
"விட்டா பேசிட்டே போறிங்க. அதென்ன பழக்கம் வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ளைய கை நீட்டி அடிக்கிறது. அதுவும் இடம் பொருள் பாக்காம வச பாடுறிங்க. நீங்க வந்து தான் வெளில கூட்டிட்டு போவேன்னு சொல்றதுக்கு உங்க தங்கச்சி ஒன்னும் செல்ல பிராணி கிடையாது. கழுத்துல சங்கிலி மாட்டி நாய வாக்கிங் கூட்டீட்டு போற மாதிரி இருக்கு நீங்க சொல்றது.
அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னா எதுக்கு இங்க கூட்டீட்டு வந்திங்க. உங்க ஊருக்குள்ளேயே கிடச்சவனுக்கு கட்டி வச்சி போய் வாழுன்னு அனுப்பிருக்க வேண்டியது தான. வான்னு கூட்டீட்டு வந்திட்டு இவரு கிழிச்ச கோட்ட தாண்டக் கூடாதுன்னு முட்டாள்தனம் ஆர்டர் போடுறாரு. என்ன ஏதுன்னு கேக்காம உடனே கை நீட்டி அடிச்சி காட்டான் மாதிரி நடந்துக்கிறீங்க.. " எனச் சத்தமாகப் பாண்டியின் முன் நின் ஆவேசமாக பேச,
" எந்தப் பொண்ணோட கன்னம் கிடைச்சாலும் உடனே அடிச்சிட வேண்டியது. இதையே பழக்கமா வச்சிருக்கிட்டு திரியுறான் போல காட்டான்… ச்சீ... " என முணுமுணுத்தக் குரலுக்குச் சொந்தக்காரி சாரு. அவள் தான் பாண்டியை நேருக்கு நேர் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
அவளின் ஆவேசப் பேச்சு, கேட்பதற்கு உயர் அழுத்த கொதிநிலையை அடைந்த குக்கர், கட்டுப்படுத்த முடியாது வெடித்து சிதறியது போல் இருந்தது. பல நாள்கள் சேர்ந்து வைத்த கோபம் போல் இருந்தது. இன்று வெளிய வந்து விட்டது.
பல நாள்கள் ஆகி விட்டது, தாமரையும் பாண்டியும் இங்கு வந்து சேர்ந்து. இத்தனை நாள்களில் இன்று தான் சாருவின் பார்வையும் பாண்டியின் பார்வையும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி நிற்கிறது. இதுவரை அவனைப் பார்க்க கூடாது என அவனின் பார்வைத் தவிர்த்து வந்தவள் இன்று கோபமாக பார்த்தாள். அந்தப் பார்வையைப் பார்த்தும் பாண்டி கோபமாகத் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு திரும்பியும் பார்க்காது சென்றான்.
இந்தக் கோபம் இதே ஆவேசமான குரல், இதற்கு முன் கேட்ட போது அவள் பேசிய வார்த்தைகள் அவனின் காதில் கேட்க, தன் உடல் உணரும் ஹார்மோன்களின் சைகையைப் புரிந்து கொள்ள முடியாது தவித்தான் அந்தச் சண்டி வீரன்.
‘சத்தம் போட்டது சாருன்னா அப்ப நம்ம போலிஸ் பைரவி. அவள் என்ன செய்கிறாள்?’
‘இதோ ராக்கியின் தாமரை தரையில் விழுந்தது அல்லவா! அவளைத் தூக்கி அவளின் கன்னத்தை இதமாய் தவிக் கொடுத்து கொண்டு இருந்தாள்.
"வலிக்கிதா?" எனப் பரிதாபமாகக் கேட்டாள் பைரவி.
அவளுக்குப் பாண்டியை நேரில் பார்த்ததுமே பயம் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கூவி கூவி வியாபாரம் பார்க்கும் பாண்டியின் குரல் மெல்ல பேசினாலே கடினமாகத்தான் இருக்கும். கோபமாக பேசினால்.. கேட்பவர்களுக்குப் பயம் வரத்தான் செய்யும்.
வெயிலில் அழைந்து திரிந்து என்ன நிறத்தில் இருந்தான் என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு தோளின் நிறத்தை, சூரிய பகவான் மங்கச் செய்திருந்தான். உழைப்பில் முறுக்கேறிய உடலைப் பார்க்கையில் தன் கணவனிடம் பவுன்சராக வேலை செய்யும் பல்க்கான ஆட்களைப் பார்ப்பது போல் தான் இருந்தது. நல்ல வேளை மது அப்படி இமயமலை போல் இல்லை என அவ்வ போது நினைத்துக் கொள்வாள்.
கூடவே மீசை… அடர் தாடி… தடுத்த உடல் எனச் சுருக்கமாக காவல் தெய்வம் ஐயனார் போல் பெரிய மீசை வைத்துக் கொண்டு, உருண்ட கண்களுடன் திரண்ட புஜங்களுடன் இருந்தான் பாண்டியராஜன்.
சேவை செய்தது போதும் என அப்பார்ட்மெண்ட்டிற்கு திரும்ப நினைக்க, தாமரை வர மறுத்தாள். அண்ணன் சொல்லாமல் வர மாட்டேன் என்று சொல்லி பாண்டியின் பின்னாலேயே சென்று,
"அண்ணே மன்னிச்சிடுண்ணே. இனி உங்கிட்ட கேக்காம எங்கயும் போக மாட்டேண்ணே. ப்ளிஸ் அண்ணா... நில்லுண்ணா…" எனக் கெஞ்சிய படி தாமரை ஓட, அவளை பிடித்து இழுத்து வந்தாள் சாரு.
"அக்கா! விடுங்க.. அண்ணே கோய்ச்சிட்டு போது. நான் அதுக்கிட்ட பேசணும்னு." என்றாள் தாமரை.
"உங்கண்ணே ஒன்னும் கோய்ச்சிட்டெல்லாம் போகல. நடு ரோட்டுல நின்னு படம் காட்டாம, வா.. முதல்ல ஹாஸ்பிட்டல் போகலாம். அப்றம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். " என்றாள் சாரு.
"ஆனா அண்ணா?"
"வருவாரு… வா… " என இழுத்து சென்றாள் மருத்துவமனைக்கு.
பாவம் தாமரையின் கன்னம் வீங்கி இருக்க, காதுகளில் சிறு வலி ஏற்பட்டிருந்தது. மருந்திட்டு சரி செய்தவர்கள் அவளைச் சாரதாவின் வீட்டில் விட்டு விட்டு சென்றனர்.
"அண்ணென்னு ஒருத்தெ இருந்தா இப்படி தான் இருப்பானா சாரு? எனக்கு அப்படி யாரும் கிடையாது. இருந்திருந்தா நல்லா இருக்கும்னு நினச்சதுன்டு. ஆனா இன்னைக்கி!! ப்பா! நான் பயந்திட்டேன். இதுவரைக்கும் என்னை யாரும் அடிச்சது இல்ல. அப்பா, சாந்தி ஏன் என்னோட புருஷெ கூட அடிச்சது இல்ல. நாந்தா அவன அடிச்சிருக்கேன். ரத்தம் வர்ற அளவுக்குக் கூட காயமாக்கிருக்கேன். பட் அவரு என்னைக் காயப்படுத்துனதே இல்ல. எம்புருஷெ எவ்ளோ நல்லவெ. நான் வச்ச தயிர் சாதம்ங்கிற பேர் பொருத்தமா இருக்கு." என்றவள் உடை மாற்றி கொண்டு கட்டில் அமர, அங்கு சாரு விழி மூடி படுத்திருந்தாள்.
"சாரு! தூங்கிட்டியா?"
"இல்ல… ஆனா வருது. " என்றவள் பைரவிக்கு முகம் காட்டாது திரும்பி படுத்துக் கொண்டாள்.
"கன்னம் வீங்குற அளவுக்கு அடிச்சும், தாமர அண்ணேன்னு பின்னாடியே போறா பாரேன். அது அதிர்ச்சியாவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. உனக்கு?"
"எனக்கு எதுவும் தோணல. ஏன்னா எங்க ஊர்லலாம் அடிச்சிட்ட தான் பேசவே ஸ்டாட் பண்ணுவானுங்க."
"ஓ... இப்படித்தான் இருக்கும்ல கிராமத்து அன்பு. கொஞ்சம் முரடா… பலாப்பழம் மாதிரி. நாலாம் நாலு பேர் முன்னாடி சத்தமா திட்டி பேசுனா கூட கோயிச்சிட்டு அவங்க கூட பேசவே மாட்டேன். ஆனா தாமர... அவளோட பாசத்த எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியல. விட்டுக் குடுக்காத அன் கண்டிஷ்னல் லவ். இல்லயா!!" என்க, சாருவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உறங்கி விட்டாள் என்று நினைத்து விளக்கை அணைத்தவள் அவளின் அருகில் படுத்தாள்.
'அடிச்சிட்டு தான் பேசுவாங்க..' என்ற தோழியை நினைத்தால் கவலையாக இருந்தது. சாருவை எந்த மாதிரியான சூழ்நிலையில் மீட்டு கொண்டு வந்தோம் என்பது பைரவியின் நினைவுக்கு வந்தது.
'இதுவரை அவ பட்ட கஷ்டம் போதும். இனி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அன்னைக்கி தீஷித் பத்தி கேட்டப்ப தெரியலன்னு சொன்னா! இன்னைக்கி பீச்ல அந்த க்யூட்டி பாய்ய பத்தி பேசும் போது சந்தோஷப்பட்டா! சோ... ஒன் ப்ளஸ் ஒன் ஸ்ஈக்வெட்டு த்ரீ…
நாளைக்கே தீஷித்தப் பத்தி ஃபுல் டீட்டெய்ல்ஸ் எடுக்கணும். அவனோட கேரெக்டர், குடும்பம் எல்லாம் நம்ம தோஸ்த்க்கு சரியா வந்தா! மாப்பிள்ளையப் பாத்து பேசி இந்த வர்ஷத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சிடணும். பாக்க பால்ல இருந்து எடுத்த வெண்ண மாதிரி இருக்கான் பையன். சோ இனி அவனுக்கு பேரு அவகேடோ. அவான்னு கூப்பிடலாமா?.' எனத் தீஷித் தன் தோழிக்காக தேர்ந்தெடுத்த திருப்தியில் உறங்கி போக,
உறக்கம் வந்ததாக சொன்ன சாருவின் மனத்தில் புயல் அடித்துக் கொண்டிருந்தது. நான்கு பக்கங்களும் கடல் நீர் அலையாய் மேலே எழும்ப அதில் ஒற்றை தோணியாய்ச் சிக்கி தவித்தது அவளின் மனம்.
தன் வாழ்வில் வீசிய புயலின் ஆரம்ப புள்ளி பாண்டி தான் என்று நம்பியது மனம். காற்று வீசியதால் மரம் அசைந்ததா இல்லை மரம் அசைந்ததால் காற்று வந்ததா என்ற கேள்விக்கு விடை சொல்வது எளிதானது இல்லை அல்லவா!!
அதே போல் மனித வாழ்வில் இன்னாரால் இதனால் தான் எல்லாம் நடந்தது என்று குற்றம் சாட்டி ஆரம்ப புள்ளியைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. எல்லாம் இயற்கை… விதி என்றும் சொல்லலாம்...
‘சாருவின் லைஃப் ஹிஸ்ரியை பார்க்க ஐந்து ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும்.. அதாவது சாரு கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். நாமலும் போகலாம். வாங்க’
"இந்த வர்ஷ திருவிழா செம்மையா இருக்க போது. நம்ம பெரியம்மா பொண்ணுங்க… மாமா பொண்ணுங்க எல்லாம் வற்றேன்னு சொல்லிருங்க. அவளுக வந்தாளுகன்னா மதுரையவே செம்மையா சுத்தலாம்." என உற்சாகமாகக் கிளம்பி தன் வீட்டிற்கு வராது, மதுரையில் உள்ள அவளின் சித்தி வீட்டிற்குச் சென்றனர் அக்காவும் தங்கையுமாக.
பத்து நாட்கள் விடுப்பு எடுத்து சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வந்தளுக்கு தெரியாது மதுரையில் தான் தன் வாழ்க்கையின் முக்கியமான திருப்பம் நடக்க உள்ளது என்று.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..