அத்தியாயம்: 41
மதுரை..
தமிழ்நாட்டின் தொன்மையான நகரமான அது… பல நூற்றாண்டுகளாகத் தமிழ் வளர்த்த தன்னிகரில்லா நகரம். தூங்கா நகரம் கோயில் நகரமான
இதன் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஜல்லிக்கட்டு, மல்லிகைப்பூ, ஜிகர்தண்டா என எத்தனை இருந்தாலும் அத்தனைக்கும் மகுடம் வைத்தார் போல் அமைந்தது மீனாட்சி அம்மன் ஆலயம்.
சித்திரை திருவிழா…
மொத்தம் 16 நாட்கள் கொண்டாடப்படும் அது என்னவோ மதுரையில் நடக்கும் திருவிழா தான். ஆனால், சுற்றி இருந்து பல ஊர்கள் மாவட்ட மக்கள் வந்து குவியும் பெருவிழா அது.
உலகிலேயே மிக அதிக நாள்கள் நடைபெறும் ஒரு ஆன்மீக திருவிழா என்ற பெருமையும் பெற்றது நம் சித்திரைத் திருவிழா.
முதல் நாள் விழாவாகக் கொடியேற்றத்தில் தொடங்கி, ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, அழகிய நான்கு மாட வீதிகளில் உலா வரும் காட்சியைக் காண பல்லாயிரகணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். நகரமே ஜே ஜே என்று நள்ளிரவில் கூட களை கட்டி இருக்கும்.
கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்க பல்லக்கு, வேடர் பறி லீலை, தங்க குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஸ்வரர், யாளி வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் அருள் பாலித்து உலா வந்தபின், இந்த விழாவின் முதல் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும். அது திருவிழாவின் எட்டாவது நாள் சூட்டப்படும்.
பத்தாம் நாள் அடுத்த முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
மதுரையை அரசாளும் அன்னை மீனாட்சிக்குக் கல்யாணம் என்றால் ஏதோ தங்கள் சொந்த வீட்டு விசேஷம்தான் என்று எண்ணி மக்கள் திரளாக கூடுவர். பெண்கள் தங்களின் பழைய தாலி கயிறுக்கு பதிலாக புதுத்தாலி அணிந்து மஞ்சள், குங்குமம் சூடி கணவர் நீண்டநாள் வாழ அம்மனை வணங்குவர்.
அதன் பின், அடுத்த 2 நாள்கள் ஒவ்வொரு நாளாக தேரோட்டம், சப்தாவர்ண சப்பரம், தீர்த்தவாரி, வெள்ளி விருச்சபை சேவை, கள்ளழகர் எதிர்சேவை முடித்து, இந்த விழாவின் முத்தாய்ப்பு என்கிற 1000 பொன்சப்பரம் அமைத்து அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் எழுந்தருளுவது திருவிழாவின் பன்னிரெண்டாம் நாள்.
தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வரும் கள்ளழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது இருக்கும் என்பது பக்தர்களின் ஒரு நம்பிக்கை.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சித்திரை விழாவின் இறுதி கட்டமாக மதுரையில் கள்ளழகர் சித்ரா பவுர்ணமியில் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவர்.
பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல் நடைபெறும்.
அடுத்த மூன்று நாட்கள் கள்ளழகர் தசாவதார காட்சி, மோகினி அவதார திருக்கோலம், புஷ்ப பல்லக்கில் பவனி வந்து, பின்னர் கள்ளழகர் திருமலை எழுந்தருளலுடன் சித்திரை திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
சைவமும் வைணவமும் ஒன்று கூடி கொண்டாடும் பெரு விழா அது.
சாருவிற்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மீனாட்சியின் கதைகள். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இப்போது தான் புதிதாகக் கேட்பது போல் காதுகளைக் கூர் தீட்டு கேட்பாள் மதுரையின் பெருமையை. தன் அன்னையின் சகோதரியை மதுரையில் கட்டிக் கொடுத்ததன் மூலம் ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு சென்று விடுவாள். திருவிழாவின் ஒரு நாளை கூட விட்டு வைத்ததில்லை. அனைத்திலும் அவள் தான் முதல் ஆள் என்று சொல்லும் அளவுக்கு மீனாட்டியின் பைத்தியம் அவள்.
அந்த அம்மன் சன்னதியில் தான் அது நிகழ்ந்தது. பாண்டி, சாருவின் சித்தி வீட்டிற்கு எதிரே இருக்கும் தினேஷின் நண்பன். மதுரை வந்து தங்கும் திருவிழா சமயங்களில் அவ்வபோது பார்த்திருக்கிறாள். தள்ளு வண்டி கடை போட அன்னையும் மகனுமாய் வருவர். சில நேரம் அவனைக் கடைக்கண்களால் ரசித்தும் இருக்கிறாள். அவன் அவித்து விற்கும் கடலை, கிழங்கு சோளம் என எதையாவது வாங்க வரும் சாக்கில் அருகில் பார்த்திருக்கிறாள்.
ஜஸ்ட் அட்ராக்ஷன்… அது அவளுக்கு. அவன் சாருவை நிமிர்ந்து கூட பார்த்து இல்லை. ஆனால் பார்த்தவன் தினேஷ். அவனுக்குச் சாருவின் மீது ஒரு தலையாய் காதல். அதை அவளிடம் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.
" ஏய் மதி… சாமி பல்லாக்கு வருது டி.. " என்ற படி அவளின் தோழிகள் முண்டியடித்துக் கொண்டு மக்கள் வெள்ளத்தில் செல்ல, அவளுக்குத் தூரத்தே நான்கு மாட வீதியைச் சுற்றி வந்து கொண்டிருந்த பல்லக்கு தெரிந்தது. முன் சென்ற குடும்பத்துடன் செல்லாது கண் மூடி வேண்டிக் கொண்ட படி நின்றாள். கண் திறந்த போது அவளின் முன் வந்து நின்றது பாண்டி.
"இந்தா… படிச்சி பாத்திட்டு நாளைக்கி பதில் சொல்லு. " என்று விட்டு சென்று விட, என்னதது எனப் பிரித்து பார்த்தால் அதில் I Love you என எழுதி இருந்தது..
தினேஷ் எழுதி அவளிடம் சேர்க்கும் படி நண்பனிடம் கேட்டுக் கொண்டதால் அவளிடம் கொடுத்தான். முகத்தை முழுதாய்ப் பார்த்திருப்பானா என்று கேட்டால், இல்லை தான்.. கலர் கலர் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் அவளும் ஒரு பட்டாம்பூச்சி எனக் கடந்து சென்று விட்டான்.
"எனக்கு வந்த முதல் காதல் கடிதம்." என்றவள் அதை ஆவலுடன் பிரித்து படிக்க சிரிப்பு தான் வந்தது அவளுக்கு. காதலும் ஆசையும் வரவில்லை.
பாண்டி வந்தது, கடிதம் நீட்டியது, அதை வாங்கி பார்த்து சாரு தனக்கு தானே பேசி சிரிப்பதை அவளின் சித்தி பார்த்து விட்டாள்.
"என்ன க்கா நீ இப்படி அசால்ட்டா இருக்க? வெளியூருக்கு அனுப்பி பொம்பளப்பிள்ளைய படிக்க அனுப்புற! அது அங்க என்னென்ன செய்யுதுன்னு தெரியுமா இருக்க! காதல் கீதல்னு எவனையாது இழுத்திட்டு போய்ட்டான்னா என்ன பண்ணவ? நம்ம பொண்ணு மேல நம்பிக்க இருந்தாலும், ஆம்பள பயளுகல நம்ப முடியாதுக்கா. எப்ப அசருவாளுக கொத்திட்டு போலாம்ன்னு காத்திட்டே கெடப்பானுங்க. நம்ம பொண்ணு வேற வெள்ளந்தி.
அதுக்கு தான் சொல்றேன் என் வீட்டுக்காரருக்கு அக்கா மகெ ஒருத்தே இருக்கான். நல்ல பையன் தான். கட்டி வை. அடுத்து வேணும்னா படிச்சிட்டு போட்டும்." எனச் சாருவின் திருமணத்திற்கு அடி போட்டார்.
திருவிழா முடியும் முன்னரே அவளுக்கு பரிசம் போட்டு திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. சாருவிற்கு அதில் வருத்தம் எல்லாம் இல்லை. அவளின் கேங்குக்கே கல்யாண வாழ்க்கைக் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்தன.
தனக்குத் திருமணம் என்ற போது திருமண கனவு தான் அதிகமாக இருந்தது. அதற்குத் தகுந்தார் போல் அவளுக்கு எனப் பார்த்த பையன் இனியவேலும் தினமும் ஃபோனில் பல மணி நேரம் பேசி கரைந்து உருக, பரிச்சை முடியவும் திருமணம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
ஆனால் நடந்த திருமணம் பத்து நாட்கள் கூட நீடிக்க வில்லை. ஓடி விட்டான். அவளைப் பிடிக்காது ஓடி விட்டான். வேறு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று ஓடி விட்டான்.
எத்தனை பெரிய அவமானமாக அது..
"கட்டுன புருஷன கட்டில்ல சரியா கவனிச்சிருக்க மாட்டா. அதா ஓடிட்டான். " என ஏளனம் பேசி சிரித்தனர் சிலர்.
"இவ மொகறைய பத்து நாள் சகிச்சிக்கிட்டதே பெருசு. "
"ராசி இல்லாதவ. இவ பிறக்கும் போதே எனக்கு தெரியும். " என விட்டு சென்ற அவனை விடுத்து பலரின் வாய்க்குச் சாரு தான் அவலாக மாறினாள். அதிலும் இமயன் சாருவின் பத்து நாள் கணவன். அவன் வீட்டாரோ, அனைத்திற்கும் மேலாக தன் மகன் மேல் தப்பில்லை. இவளால் தான் என் மகன் ஓடி விட்டான். இவள் குணம் கெட்டவள் என்ற ரீதியில் வதந்திகளைப் பரப்பினர்.
"படிக்க போன இடத்துல எவெங்கூடயோ பழகி கெட்டு போய்ட்டாளாமாமே. அந்த விசயம் தெரிஞ்சி குடும்பம் நடத்த முடியாதுன்னு எம்மகெ ஓடிட்டான். "
" மினுக்கிக்கிட்டு கண்ணாடி முன்னாடியே ஒரு மணி நேரமா நிப்பா… குசு குசுன்னு பக்கத்துல இருக்குறவிங்களுக்கு கேக்காம ஃபோன்லயே கிடப்பா... பகல் நேரம்னு கூட பாக்காம புருஷெங்கூட கட்டிலயே கிடந்தா... அப்பவே நினச்சேன்.. இவா ஆம்பள சுகம் கண்டவன்னு." எனப் பலரின் பேச்சு மனதைக் காயப்படுத்தினாலும், ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினரின் பேச்சும் செயலும் அக்னி குழிக்குள் இறக்கி விட்டது அவளை.
அது தான் மறுமணம்…
"சுகம் கண்ட உடம்பு சும்மா இருக்காது. வத்தலோ தொத்தலோ எவனுக்காது கட்டி வை. இல்லன்னா தடம் மாறி போய்டுவா. அப்றம் நமக்கு தான் அசிங்கம்." என்ற சொந்தங்களின் பேச்சை கேட்டு இரண்டாம் தாரமாக நான்கு குழந்தைகளுக்கு தந்தையான ஒரு குடிகாரனுக்கு திருமணம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் போராடி அதை தடுக்க போராடிக் கொண்டிருந்தவளுக்கு விதி அடுத்த இடியை இறக்கியது.
ஓடி போன கணவன் மீண்டும் வந்து 'எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கு. வா… நாம மூணு பேருமா ஒரே வீட்டுல குடும்பம் நடத்தலாம்.' என்று அழைத்ததும், அதற்கு அவளின் மாமியாரும், சில உறவினரும் ஒத்து ஊதியதும்.
இதற்கு இடையில் பத்து நாள் நடத்திய தாம்பத்தியத்தின் பலனாய் வயிற்றில் உதிர்த்த கரு. அந்த முகம் தெரியாத சிசுவைச் சொந்தம் கொண்டாடி அவ்வ போது வந்து நிற்கும் கணவன்.
கிடைக்கும் நேரம் எல்லாம் கொத்தி கிழிக்கும் சொந்தங்கள். என்னையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள் என்று பல் இளிக்கும் பக்கத்து வீட்டு ஜென்மங்கள். அடுத்தவளுடன் கலந்த பின் மீண்டும் தன்னை நாடி வரும் இனியன். கணவனே ஆனாலும் அவன் அருகாமை அருவருப்பைத் தந்தது சாருவிற்கு.
அனைத்திற்கும் காரணம் பாண்டி நீட்டிய கடிதம். அது தான் தன் வாழ்க்கையை திசை மாற்றியது எனத் தினம் தினம் நொந்து கொண்டவள் பைரவியிடம் எதுவும் சொல்ல வில்லை. ஏனெனில் அங்கு நிவிக்கும் சில பிரச்சினைகள். அது பைரவியின் வாழ்க்கையையும் சேந்து பாதிக் கொண்டிருந்தது.
அதனால் அனைத்தையும் மறைத்தவள். உலகை விட்டு மறைய நினைத்து தற்கொலை செய்ய துணிந்தாள்.
சிறிய ரயில்வே நிலையம் தான். ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ரயில் எப்போது வரும் என்று தண்டவாளத்தைப் பார்த்தபடி. வந்தது… அதன் முன் பாய்ந்து விடத்தான் நினைத்து எழுந்தாள். ஆனால் முடியவில்லை.
பாண்டி தான் அதற்கும் காரணம். தூர இருந்து சாருவைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் யார் என்று கூட அப்போது தெரியாது. அவளின் முக வாட்டத்தையும் அவ்வ போது கன்னத்தைத் துடைத்துக் கொண்டு புலம்பிய படியே அமர்ந்திருந்தவளின் தோற்றமும் சாருவைக் கவனிக்க வைத்தது. ஏதோ மனவேதனை என்று நினைத்தவனுக்கு அவள் ரயிலைப் பார்த்தபடி எழுந்து நின்றதும், குறுக்கே பாயத் தான் போகிறாள் என்பது தெரிய, வேகமாக அவளைப் பிடித்து இழுத்து தூர கூட்டி வந்தான்.
அவள் விடச் சொல்லி திமிர, கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அந்த அடியில் அவள் சுயநினைவை இழந்து மயங்கிச் சரிந்தாள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் சாரு.
அங்கு கண் விழித்த போது அவள் பார்த்த முகம் பாண்டியுடையது. காப்பாற்றி விட்டான் என்ற ஆத்திரத்தில் தடுமாறி எழுந்து வந்தவள், "ஏன் என்னோட வாழ்க்கைல திரும்ப வந்த. உன்னால நான் இன்னைக்கி நான் இந்த நிலமைல இருக்கேன். என்னை நிம்மதியாத்தா வாழ விடல. சாகவாது விட்டிருக்கலாம்ல. உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன். என் வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா பாவி." என அவனின் சட்டையை பிடித்து உளுக்கினாள்.
அவனுக்குச் சாரு யார்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள்? என்பதெல்லாம் புரியாது அவளைப் பைத்தியம் என்று நினைத்து கொள்ள, அவளின் கண்ணீர் அவனை அசைத்தது. சட்டையை விடாது இறுக பற்றியிருந்தவளின் கரங்கள் மெல்ல தொய்ந்து அவனின் மார்பிலேயே தலை சாய்க்க, அவளின் சுடிதார் ஃபேண்டை நனைத்தபடி தரையில் வடிந்தோடியது உதிரம்.
அதிர்ந்து போனவன் அவளைத் தூக்கி கொண்டு மீண்டும் மருத்துவரை நாட, அவர் சாருவின் வயிற்றில் இருந்த சிசு கலைந்ததை உறுதி படுத்தினார். மனம் ஏனோ கணத்தது அவனுக்கு. அவளைத் தனியாக விட்டு செல்ல மனமில்லாமல் அவளின் வீட்டிற்குத் தகவல் சொல்ல, முதலில் வந்து சேர்ந்தது சாருவின் சித்தி.
"நீயா!! நீ எங்கடா இங்க? ஓ உங்கூட தான் ஓடி போக திட்டம் போட்டு வந்தாளா! நீ அவளுக்குக் கடுதாசிய நீட்டும் போதே நினச்சேன். இப்படி எதாவது நடக்கும்னு. அதுக்கு தான் கல்யாண பண்ணி வச்சோம். அவனுக்கும் உங்க பவுசு தெரிஞ்சு அவள அத்துவிட்டுடுட்டு போய்ட்டான். சரி குழந்தன்னு ஒன்னு பொறந்தா ரெண்டு சேந்திருவாங்கன்னு பாத்தா. உங்கூட ஊர விட்டு போக பாத்திருக்காளா அந்த சிறுக்கி. அவள…" எனக் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு சாருவைக் காண சென்றார்.
அப்போது தான் பாண்டிக்கு உரைத்தது திருவிழாவில் நண்பனுக்காக நீட்டிய கடிதம். அது இவள் தானா! என நினைத்தவன் வேகமாக சாருவின் முகம் பார்க்க செல்ல, அங்கு குழந்தை கலைந்தது தெரிந்து சாருவை மொத்திக் கொண்டிருந்தாள் அவளின் சித்தி. அதைப் பார்க்க முடியாது வந்து தடுத்த பாண்டியைப் பார்த்த சாருவின் பார்வையில் அவளை விட்டு விலகி விட்டான்.
அதன் பின் சில மாதங்கள் சென்றன. சாரு சித்தபிரம்மை பிடித்தவள் போல் யாருடனும் பேசாது இருக்க, அவளுக்குப் பைத்தியம் என்று சொல்லி ஊர் ஊராய் கோயில் கோயிலாய் சுற்றித் திரிந்தனர். ஓரளவுக்கு அவள் மீண்டு வந்த பின் மீண்டும் திருமண பேச்சை எடுக்க, சாரு பைரவிக்கு ஃபோன் செய்தாள்.
பைரவி தான் அனைவரிடம் இருந்து மீட்டு தன்னுடனேயே அழைத்துச் சென்றாள். மதுசூதனன் தான் அவனுக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி வேலை வாங்கி தந்தான்.
மது பைரவியின் தயவால் ஓராண்டுகளுக்கும் மேல் எவ்வித பிரச்சினையும் இன்றி பாதுகாப்பான இடம் மற்றும் வேலை, தோழியின் அரவணைப்பு, ஆறுதலாக சூழ்நிலை என நிம்மதியாக தூங்கி எழுகிறாள். அந்த நிம்மதியை குழைக்க மீண்டும் வந்ததாக பாண்டியை நினைக்கத் தொடங்கி வெறுக்கிறாள் அவள்.
பாவம் அவன் அறியாது அவனால் பாதிக்கப்பட்டாள் சாரு..
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..