அத்தியாயம்: 29
துலிப் மலர்கள் கேள்வியுற்றதுண்டா. அன்னியன் படத்தில் 'குமாரி…' பாடலில் நாயகியும் நாயகனும் டூயட் பாடுவார்களே, அந்தத் தோட்டத்தில் இருப்பது தான் துலிப் மலர்கள்.
உலகில் அதிக மக்களால் விரும்பப்படும் துலிப் மலர்கள் இந்தியாவில் காஷ்மீரில் மட்டுமே பல ஏக்கரில் தோட்டமாக பயிரப்பட்டு, வசந்த காலத்தில் நம் காட்சிக்காகத் திறக்கப்படும்.
அங்கு மட்டுமா அது பூக்கும் என்றால் அதற்கு ஏற்ற சீதோஷ்ண சூழ்நிலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் தீஷிதனைப் போல் அவரவர் தோட்டத்தில் கூட ஏசி வசதி கொண்ட கண்ணாடி குடிலிலும் வளரும்.
பல வண்ணங்களில் அந்த மலர்கள் மலர்ந்தாலும் அதில் சிவப்பைத் தான் விரும்பி வளர்க்கிறான் தீஷித். அந்த நிற துலிப் மலர்கள் தூய அன்பின் வெளிப்பாடாகுமாம். அதனால் தான் அதை மட்டும் அதிக எண்ணிக்கையில் விதைத்துள்ளான். யாருக்கோ தன் அன்பை வெளிக்காட்ட விரும்பி வளர்க்கிறான், சில மாதங்களாக.
அதிகாலையிலேயே எழுந்தவன் கண்ணாடி கூடத்தின் வெப்ப நிலை சரிபார்த்து அட்ஜஸ்ட் செய்து, நீர் பாய்ச்ச தொடங்கினான்.
ஒரே நேரத்தில் பூத்திருக்கும் வண்ணம் பயிரிட்டிருந்த அந்த மலர்களைப் பார்க்கும் போதும், அதன் வாசத்தை உணரும் போதும், அதன் குளுமையை அனுபவிக்கும் போதும், மலர்கள் மங்கையாக தெரிந்தது அவனுக்கு. அவனின் இனிய காலை அவன் மங்கையாக மனத்தில் உருப்போட்டுள்ள மலரிடத்தே விடியும்..
ஜாக்கிங்… வாக்கிங்... எக்சர்சைஸ் என எல்லாம் மலரெனும் மங்கையை ரசித்தபடியே தான் செய்வான். இன்று அவன் நட்ட அத்தனை செடிகளிலும் மலர்கள் மொட்டு விரித்து சிரித்தது. அதை கண்டவன்,
"This is the right time.. உங்க எல்லாத்தையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்குறதுக்கு." என மர்மமாக சிரிப்பைச் சிந்தியவன், தன் பீஏவிற்கு குறுஞ்செய்தி மூலம் மலர்களை அவனின் மங்கையிடம் ஒப்படைக்கும் பொறுப்பைக் கொடுத்தான்.
"நாளைக்கு விடியும் போது அவளோட கண்ணுல இது தான் முதல்ல படணும்." என உத்தரவிட்டவன், தன் அறைக்குச் செல்லும் வழியில் எதோ சத்தம் கேட்க, விரைந்து தாயின் அறைக்குள் ஓடினான்.
"ம்மா…" என அதிர்ந்தான் அவன். ஏனெனில் கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.
"என்னம்மா இது. கூப்பிட்டிருக்கலாம்ல." எனக் கடிந்து கொண்டே அன்னையைத் தூக்கி கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான். அங்கு அவருக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்ய, அதை மறுத்து வெளியேற சொன்னார் அவனின் தாய்.
"சரி நான் போறேன். கதவ லாக் பண்ணல. நான் வெளியவே தான் நிப்பேன். குரல் குடுக்கணும். சரியா." என அன்பு கட்டளை இட்டவன் தன் அன்னை அபிராமியின் சக்கர நாற்காலியை உருட்டிய படி காத்திருந்தான்.
உள்ளே நீரின் சத்தம் நின்றதும், " நான் உள்ள வர்றேன்." என்றபடி வேகமாக உள்ள நுழைந்தவன் தன் அன்னையைக் கையில் எந்தி வந்து கட்டிலில் கிடத்தினான்.
"ஐய்யோ தம்பி நீங்களா! கொஞ்சம் கண்ணசந்திட்டேன் மன்னிச்சிடுங்க தம்பி." எனத் தலையை சொறிந்தார் கற்பகம். அபிராமியைக் கவனித்து கொள்ள நியமிக்கப்பட்ட ஆள்.
"அதுனால என்னக்கா. பரவாயில்லை விடுங்க." என்றவன் அன்னையின் விலகிய ஆடையைச் சரி செய்து, அவரின் கரத்தைப் பிடித்த படி அருகில் அமர்ந்தான்..
அபிராமி… கணவனை இழந்த அவருக்கு வயது அறுபதை நெருங்கும் முன் பிணி வந்து பிடித்துக் கொண்டது. கால்கள் அது உடலைத் தாங்கும் சக்தியை இழக்க, சக்கர நாற்காலிக்குள் அடைபட்டுக் கொண்டார். அவரின் இயலாமையை உணரவே விடாத படி கவனமாகப் பார்த்துக் கொள்கிறான் மகன்.
" ம்மா உங்களப் பாக்க இன்னைக்கி ஒரு நியூரோ ஸ்பெஷல் வருவாங்க. அவங்கள அடிச்சி துரத்தாம அன்பா என்னோட செல்லம் மாதிரி பேசி, அவங்க சொல்றத நல்லா கேட்டு ஃபாலோ பண்ணுங்க." என அன்னையின் கரத்தை முத்தமிட்டு கொண்டும், விரல்களில் விளையாடிக் கொண்டும் பேச, அபிராமி எதுவும் பேச வில்லை.
"கற்பகம்… நான் யாரையும் பாக்க விரும்பல. எந்த டாக்டரும் என்னை டெஸ்ட் பண்றேன்னு சொல்லி எம்பக்கத்துல வர வேண்டாம்னு சொல்லு அவன்ட்ட."
"ம்மா… எதுவா இருந்தாலும் நீங்க நேர்லயே சொல்லலாம். நான் உங்க முன்னாடி தான இருக்கேன். எம்மேல கோபமா?" என்க,
"இவரு மேல கோபப்பட நான் யாரு!"
"ம்மா.!.. " என்றான் கொஞ்சலோடு.
"அந்த நினப்பு இருந்திருந்தா இன்னேரம் எங்சொல்லுக்கு மதிப்பு குடுத்திருப்ப. அம்மாவா நினைக்காததுனால தான இப்படிச் சுத்துற. பொண்டாட்டி கையப் பிடிச்சி விளையாட வேண்டிய வயசுல அம்மா கைப் பிடிச்சிட்டுட்டு." என்க, அவன் திரும்பி கற்பகத்தைப் பார்த்தான்.
"அது தம்பி, நேத்து உங்க அத்தை வந்திருந்தாங்க. உங்கக் கல்யாணத்தப் பத்தி பேச." என அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
"இதுக்குத்தான் கோபமா. நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலயே. கொஞ்சம் டயம் கேட்டேன். அதுக்குள்ள நான் சாமியாரா மாறிட்டேன்னு பயப்படுறீங்க. "
"பயப்படல… முடிவே பண்ணிட்டேன். முப்பத்தி ரெண்டு வயசாச்சி உனக்கு. உங்கப்பாவ நான் கட்டிக்கும் போது அவருக்கு வயசு இருபத்தி ரெண்டு. உன் வயசுல அவருக்கு தோள் உயரத்துக்கு மூணு பிள்ளைங்க. மத்த ரெண்டும் கல்யாணம் குழந்த குட்டின்னு சந்தோஷமா வாழும் போது நீ மட்டும் மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி மாட்டேன்னா."
"நான் கல்யாணம் பண்ணாதது தான் பிரச்சனையா. இல்ல உங்க அண்ணே வைஃப் பேசுனது பிரச்சனையா. "
" ரெண்டுமே தான். உனக்கு எரும வயசாகியும் கல்யாணம் பண்ணாம இருந்தா ஊர்ல எல்லாரும் பேசத் தான் செய்வாங்க. என்ன குறைன்னு கேக்குறவங்களுக்கு நான் என்ன சொல்ல?" அபிராமி ஆதங்கமாக கேட்க, தீஷித் புன்னகைத்தான்.
கடந்து ஓர் ஆண்டுகளாக நச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவன் தான் பிடி கொடுக்காமல் பேசி நழுவிச் செல்கிறான்.
அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம் தான் தீஷித்துடையது. தந்தை வங்கி ஊழியர். தம்பி ஐடி ஊழியன். இப்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். தங்கை உண்டு. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
தீஷிதனின் தந்தையின் குடும்பம் மொத்தமும் கர்நாடக்காவை சேர்ந்தது. உறவு நட்பு சொந்தங்கள் எனப் பெரிய வட்டமே அங்கு உள்ளது.
அபிராமியைக் கண்டதும் காதல் செய்து உடனே மணமுடித்துக் கொண்டார் சதானந்தம். காதல் மனைவியுடன் திகட்டாத வாழ்க்கை வாழ்ந்து முடிந்த திருப்தியுடன் சில வருடங்களுக்கு முன்னாள் தான் இறைவனடி சேர்ந்து விட்டார்.
தீஷித் படித்து முடித்ததும் பெங்களூரில் ஒரு கன்ஷ்ட்ரெக்ஷன் கம்பெனியில் பணி புரிந்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தனியாகவும் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறான். நல்ல படிப்பும் திறமையும் எனப் பெங்களூரில் கொடிகட்டி பறந்த போதும் தீஷித் சில வருடங்களாக தமிழ்நாட்டை முகாமிட்டுள்ளான்.
இப்போது சென்னையில் இருப்பது அவர்களின் கிளை நிறுவனம் தான். அவனின் நண்பர் கருணாகரனின் பொறுப்பில் தான் இதுவரை அது இருந்து வந்தது.
கருணாகரன் குடும்பத்துடன் உலகைச் சுற்றிப் பார்க்க செல்ல கிளம்பியதால் ஓராண்டுக்கு முன் அதன் பொறுப்பைத் தீஷித் ஏற்று சென்னை வந்தான். கூடவே Telecommunication என்ற தொலைதொடர்பு நிறுவனத்தையும் பெங்களூரில் தொடங்கி நடத்தி வருகிறான்.
சகல வசதிகளும் இருக்கும் படி தானே வடிவமைத்துக் கட்டிய சென்னை வீட்டில் அவன் மட்டுமே ஒண்டியாக இருக்க, இம்முறை அவனுக்குத் திருமணம் முடித்து ஜோடியாக மாற்றி விட வேண்டும் என்ற உறுதியுடன் வந்திறங்கினார் அபிராமி.
"உங்கத்தை ஒரு பொண்ணு சொன்னா. நல்லாத் தான் இருக்கு பாக்க. நல்ல படிப்பு... வசதி... குணம்… பேச்சுன்னு எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு.. உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லியாச்சி. நீ பாத்து ஓகே சொன்னா அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்த வச்சிக்கலாம். என்ன சொல்ற கண்ணா! " என அபிராமி ஆர்வமுடன் கேட்க, தீஷித் சிரித்த படி எழுந்தான். கடுப்பான அபிராமி,
"இதோ பாரு இதுக்கு முன்னாடி என்னை ஏமாத்துன மாதிரி இந்த முறையும் சிரிச்சி சிரிச்சே ஏமாத்தி தப்பிக்கலாம்னு பாத்த... நான் சும்மா இருக்க மாட்டேன். " என மிரட்ட,
"அப்ப எதைச் சுமந்திட்டு இருப்பீங்க?"
"இந்த வயசுலயும் உன்னைச் சுமந்திட்டு தான் இருக்கேன். இதுவர சம்பாதிக்கிறேன்னு நீ தொழில் தொடங்கும் போதெல்லாம் உன்னைப் பெத்தவாளா பூரிச்சிச் போனேன். விருது மேல விருதா வாங்கி நீ அடுக்கி வைக்கும் போது உன்னைச் சுமந்த வயிறு குளுந்து தான் போச்சி. மகனா நீ எனக்குப் பெரும சேத்த. ஆனா ஒரு அம்மாவா என்னோட கடமைய செஞ்சி உன்ன ஒழுங்கா வளக்கலயோன்னு இப்ப கவலயா இருக்கு."
"இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாததெல்லாம் பேசுறீங்க. கல்யாணம் தான பண்ணிக்கலாம்." என்றபடி நடக்க, அபிராமியின் முகம் மலர்ந்தது.
இந்த வார்த்தை... 'பண்ணிக்கலாம்..' என்றானே அதை அதுவரை உதிர்த்ததே இல்லை. இப்போது சொல்கிறான் என்றால்…
"பொண்ணு நான் பாத்து வைக்கவா. இல்ல நீயே பாத்து வச்சிருக்கியா?" எனக் கேட்க, அவன் திரும்பி அன்னையைப் பார்த்து சிரித்தான்.
"யாரு டா அது? காதலா... " என்க, அவனின் இதழ்கள் வானவிலாய் வளைந்து புன்சிரிப்பையும், பின் வெட்கத்தையும் காட்டியது. அதைக் கண்ட அபிராமி,
"கண்டிப்பா லவ்வு தான். பொண்ணு யாரு? சென்னையா இல்ல நம்ம ஊரா. எனக்கு எந்த ஊரா இருந்தாலும் சரிதான். யாரா இருந்தாலும் சரிதான். யாரு அந்தப் பொண்ணு. சீக்கிரம் சொல்லுடா!" என அவசரப்படுத்த,
"இனிமே தான் பேசி பழவே போறேன். காதல் எனக்கு இருக்கு. அந்தப் பொண்ணுக்கும் வந்தா கல்யாணம் வரைக்கும் போகும். இல்லன்னா…"
"எம்மகனப் பிடிக்காதவங்க யாரு இருப்பா. நீ பேசி பழகு. காதல் தானா வரும். நான் நாள் குறிக்கிறேன்." என்றவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இதுவரை கல்யாணம் என்றாலே முகம் சுண்டும் மகனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. அது சந்தோஷமாக இருக்க, உடனே அதை ஊரில் இருக்கும் தன் சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஃபோனை எடுத்து பேசத் தொடங்கினார்.
"அக்கா பாத்துக்கங்க. சரியான நேரத்துக்குச் சாப்பாடு குடுத்து மாத்திர போடச் சொல்லுங்க. டாக்டர் வருவாரு." எனக் கற்பகத்திடம் தன் அன்னையை ஒப்படைத்து விட்டு வெளியே சென்றான் தீஷித்.
காரை இயக்கியவன் அலுவலகம் செல்லாது பைரவியைக் காணச் சென்றான். அவனின் கையில் சில துலிப் மலர்கள் ஒன்றாக கட்டப்பட்டு பொக்கே போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. தன் மலரை மங்கையின் கரத்தில் சேர்க்க அவனே சென்றான்.
பைரவி அப்போது தான் காக்கி உடையில் ஸ்டேஷன் செல்ல தன் சாப்பரின் சாவியுடன் வெளியே வந்தாள். தீஷித் ஒரு சிறுவனிடம் பேரம் பேசி கையில் நிறைய மிட்டாய்களைத் தினித்து பைரவியிடம் பூக்களை ஒப்படைக்கச் செய்தான்.
சாப்பரைத் துணி கொண்டு துடைத்துக் கொண்டிருத்தவள் முன் நிழலாடவும், தலை தூக்கி பார்த்தால் அந்தத் தெருவில் விளையாடும் சிறுவன் நிற்பது தெரிந்தது. கூடவே புன்சிரிப்புடன் இரு கரத்தையும் பின்னால் கட்டி பூக்களை ஒழித்து வைத்துக் கொண்டு பைரவியிடம் வந்து நின்றான்.
"என்னடா ஸ்கூலுக்கு போகாம எங்க வீட்டு பக்கம் வந்திருக்க. மொட்ட மாடில பந்து எதுவும் விழுந்திடுச்சா. சாந்தி குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா!" எனக் கேட்க,
"இல்ல… பந்தெல்லாம் விழல. உன்ன இந்த டிஸ்ல பாக்கும் போதெல்லாம் இத நான் உங்கிட்ட குடுக்கணும்னு நிறைய முறை நினைச்சிருக்கேன். ஆனா கிடைக்க வேண்டியது கிடைக்கல. இப்ப ஒரு கேனப்பயெ நிறைய மிட்டாயும் கொடுத்து பூவும் குடுத்தானா... அதான் உங்கிட்ட குடுத்து ஃப்ரோஸ் பண்ண வந்திருக்கேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனத் தீஷித் கொடுத்த பூவை நீட்டி சிறுவன் எக்கச்சக்கமானப் பிட்டை போட,
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனைத் திட்டாது அதை வாங்கிக் கொண்டாள். ஏனெனில் மலர்கள் அத்தனை அழகாய் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததே.
சிறுவன், " உனக்குப் பிடிச்சிருக்கா? "
"ம்... சூப்பரா இருக்கு."
"அப்ப இதைச் சம்மதமா எடுத்துட்ட அப்பாம்மாவ கூட்டீட்டு வரவா? "
"எதுக்கு?"
"பொண்ணு கேக்க!" என்க,
"அடிங்க என் கைக் கால் மொளச்ச கத்திரிக்காவே… மரியாதை ஓடிடு." என்பதற்குள் சிறுவன் ஓடியே விட்டான்.
ஓடியவனைக் கவனியாது, "வாவ்… ரொம்ப அழகா இருக்கு." எனப் பூக்களை ரசித்தவள்,
"ஏய்… ரக்ஷா... யாரு குடுத்தா இத உனக்கு? எங்கிட்ட குடுக்கச் சொல்லி யாராது சொன்னாங்களா!. யாருன்னு காட்டு?" எனக் கத்த,
" நீ எனக்கு ஓகே சொன்னா தான் ஆள காட்டுவேன். இல்லன்னா முடியாது. " எனக் கத்தியபடியே அவன் ஓடி விட்டான்.
"எவென்டா எங்க வீட்டுக்கு மட்டும் ஒம்போது மணிக்கே வந்து போஸ்ட் மாஸ்டர் வேலை பாக்குறது." என மலர்களை ஆசையும் வருடி வாசம் பிடித்தாள்.
"நைஸ் ப்ளார்ஸ்..."
"யாரும்மா குடுத்தா இத? " எனக் கேட்டபடி வந்தார் சேர்மதுரை.
நடந்த அனைத்தையும் சமையலறை ஜன்னல் வழியை பார்த்தபடி நின்றிருந்த சாந்தியை ஓரக்கண்ணால் பார்த்தவள்,
" அப்பா, அம்மாக்கு யாரோ லவ் ப்ரபோஸ் பண்ண இத அனுப்பிருக்காங்க. அம்மாவோடு புது பாய் ஃப்ரெண்ட் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?" என்க, ஜன்னலில் இருந்து கரண்டி பறந்து வந்து விழுந்தது.
இதற்கு மேல் நின்றால் டேமேஜ் அவளுக்குத்தான் என்பதை உணர்ந்தவள் வேகமாக தன் சாப்பரை உருட்டிக் கொண்டே ஓடி விட்டாள்..
அவள் சற்று கவனித்திருந்தால் அவளின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் டீ கடையில், பேப்பரும், டீ க்ளாஸ்ஸுமாக அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் சற்றும் பொருந்தாது கோர்ட்டு சூட் போட்டு டீ குடித்துக் கொண்டிருக்கும் தீஷித்தைக் கவனித்திருப்பாள். இல்லையே கவனிக்கவில்லையே.
செல்லும் அவளைத் தீஷித் புன்னகையுடன் நோக்க, அந்த நாளை இனிமையாக தொடங்கினான். அது தினமும் வாடிக்கையாகிப் போனது..
துலிப் மலர்களை அவளின் கரத்தில் எப்படியாவது சேர்த்து விடுவான். ஒவ்வொரு முறை அந்த மலரை பார்க்கும் போதும் மலரை விட அழகாய் மலரும், அவள் முகம் காட்டும் பாவனையைத் தூர நின்று ரசிப்பான். டீக்கடைல அக்கௌண்டு கூட ஓப்பன் செய்து விட்டான், அவளை பருக.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..