அத்தியாயம்: 36
நிலமகள் தன் குளிர்ச்சியால் உலகை குளிர்வித்துக் கொண்டிருக்கும் தருணம் அது. முகில்கள் இல்லா வானில் முழு மதியாள், துடுப்பின் உதவியின்றி இருளைக் கிழித்துக்கொண்டு, அந்தரத்தில் மிதந்த படி ஊர்வலம் வர, அந்த அம்புலியின் அழகு தெவிட்டாதா இன்பம் தரக் கூடியது.
அது தந்த இதமான இன்பத்தில் வான்மகளை ஜன்னல் கம்பிகளுக்குள் தன்னைச் சிறை வைத்துக் கொண்டு ரசித்த படி நின்றாள் பெண். கீழ் வானில் தொடங்கிய ஊர்வலம், நடு வானின் உச்சியை அடைந்து அடுத்தநாள் பிறக்க இன்னும் சில நிமிடங்கள் உள்ளதைச் சொல்லியது.
தன் ஃபோனில் வாட்ஸ் அப்பைத் திறந்து பார்த்தாள். அது புகைப்படம் சென்றதற்கான டபூல் டிக்கைக் காட்டியது. ஆனால் பார்க்க படவில்லை.
" ஐ நோ. அந்தத் தயிர் சாதம் வராதுன்னு தெரியும். எப்பயும் போல என்னோட ஃபீலிங்க புரிஞ்சிக்காது. பட்... நா அத ரொம்ப லவ் பண்றேன். எவ்ளோன்னு, அளவு கிடையாது. கடல்ல இருக்குற உப்பு தண்ணியோட அளவ விட அதிகமாக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ ஆல்கஹால். லவ் யூ சோ மச். நீயும் என்னை லவ் பண்றன்னு தெரியும். பட் உனக்குள்ள இருக்குற அன்னியன். அதான் மல்டிபில் பர்ஸ்னாலடி. உன்னோட லவ்வ ஒத்துக்க விடாம தடுக்குது.
ஒரு நாள் நீயா வந்து சொல்லுவ. ஐ லவ் யூ டெடின்னு. என்னை அள்ளி தூக்கிட்டு போய் நீ பண்ண போற சேட்டைய நினச்சா இப்ப கூட கன்னம் ரெண்டு கூசுது. மொத்தமா அப்ப கிடைக்கிறப் போற ஹப்பினஸ்கு அட்வான்ஸ்ஸா நான் தர்ற இதையும் வாங்கிக்க. ம்... " என அவளின் ஃபோனில் இருந்த மதுவின் புகைப்படத்தை முத்தமிட்டு ஃபோனை எச்சில் செய்து கொண்டு மஞ்சத்தில் சரிந்தாள் பெண்.
அப்போது தெருவில் குல்பி வண்டி வருகிறது என்பதை அறிவிக்கும் மணியோசைக் கேட்டது. வேகமாகச் சென்று எங்கே அந்த வண்டி என வீட்டை விட்டு வெளிய வந்து தேட, அது பக்கத்துத் தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தது. மங்கையின் மனம் மீண்டும் மதுவிடம் லயிக்க தொடங்கியது.
மீண்டும் ஒரு ப்ளாஷ் பேக்கிற்குள் சென்று விட்டாள். முந்தய அத்தியாயத்தைப் படித்து விட்டு பிறந்தநாளில் கூட மனைவிக்கு எதுவும் செய்யாதக் கொடூர கணவனாக மதுவை நினைத்து யாரேனும் திட்டி இருந்தால் மதுவிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள். ஏனெனில் மது செய்யும் செயல்களுக்கு ஆயிரம் மடங்காக பைரவி பதிலடி கொடுப்பாள்.
அன்பாக இருந்தாலும் சரி அராஜகமாக இருந்தாலும் சரி. பதிலுக்குப் பதில் ரத்தத்துக்கு ரத்தம். 'நம்ம கிட்ட எதையுமே வச்சிக்கிற பழக்கமே இல்ல.' என்பவள் அவள். என்னைக் கேட்டால் ஜாடிக்கேற்ற மூடி இருவரும் என்பேன்.
முதல் பிறந்த நாள் அன்று கட்டில் முதுகு காட்டிப் படுத்த கணவனைப் பின் சென்று அணைக்க, மனைவி ஆசையாய் அணைக்கிறாள் என்று தவறாக நினைத்த மது அவளின் புறம் திரும்பி படுத்தான். பைரவி புன்னகையுடன் அவனின் மார்பில் தலை சாய்த்தாள்.
மன்னவனின் நெஞ்சம் தனை மஞ்சமாக எண்ணி மனைவி கிடந்தாள் அதை விட சொர்க்கம் வேறெங்கு இருக்கும்.
‘ஓகே… பொண்ணு கட்டி பிடிச்சிடுச்சி. அவனும் அள்ளி அணைச்சிட்டான். அப்ப சண்ட சமாதானமாகிடுச்சான்னா….’
மனைவியின் பூ உடல் ஆடவனின் திடகாத்திரமானத் தேகத்தைக் கொதிநிலைக்குக் கொண்டு செல்ல, நெஞ்சில் புதைந்து, தன்னைப் பார்க்காத மனைவியின் முகம் உயர்த்தி நெற்றியில் முத்தமிட்டான் ஆசையுடன். கணவன் கண்களில் தெரிந்த தாபத்தில் கள்ளச் சிரிப்புடன் பைரவி அவனின் கழுத்தில் முகம் புதைத்தாள். பின்... பின்... சத்தங்கள் மட்டுமே கேட்டது.
நீங்கள் நினைப்பது போல் அந்த முனங்கல் சத்தம் அல்ல. மதுவின் கணீரென்ற குரல் தான் அலறலாக ஒலித்தது. காரணம்... பைரவி அவனின் கழுத்தில் பற்கள் பதிய கடித்து வைத்து விட்டாள்.
"ரத்த காட்டேரி... விடு டி. " என அவன் கத்தியும் விடாது அட்டை போல் ஒட்டிக் கொண்ட அவளின் உதடு ரத்தம் குடிக்க காத்திருந்தது.
அட்டைப் பூச்சி நம்மை கடித்தால் நெருப்பைக் காட்டி அதிடம் இருந்து விடுபட வேண்டும். ஆனால் பைரவி என்ற பூச்சியிடம் இருந்து தன் கழுத்தைக் காப்பாற்ற முடியாது திணறினான் அந்தப் பைல்வான்.
அவளே போனால் போகிறது என்று கழுத்தை விடுத்து, அவனின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு, பனியனுடன் மார்பில் கடிக்க போக,
"ஏய் பாண்டா… என்னடி வேணாம் உனக்கு." என்றவன் அவளின் இரு கரத்தையும் பற்றி குனிந்து கடிக்க முடியாத படி பிடித்துக் கொண்டான். அவளைத் தள்ளிவிட்டு அவளிடம் இருந்து விடுபடுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆனாலும் அவனின் செல்ல ராட்சஸியிடம் இருந்து விடுபட மனமில்லாது அவளின் செயலை ரசித்தான் அவன்.
"விடுங்க… விடுங்க என்னை." எனத் திமிறியவள் அவனைக் கடிக்க குனிய, அது முடியாது போனது. உஃப் என மூச்ச வாங்கியவள், "விடுங்க…" என்றாள் கோபமாக.
"விட்டா கடிப்பியா?"
"கடிக்க மட்டுமில்ல. உங்களக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிச்சி திங்க போறேன்." என்றாள் ஆவேசமாக.
"அப்ப நரமாமிசம் சாப்பிடுற பாண்டா வா டி நீ."
" ஆமா... நரமாமிசம் தான். உங்களோட மாமிசம் தான் வேணும் எனக்கு." என அவனின் மேலிருந்து இறங்கியவள் கிச்சனுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்தாள்.
"அடியே கொலகாரி… ஏன் இந்தக் கொல வெறி? " என்றவன் அவளுக்குப் பயப்படுவது போல் பயந்து கொண்டு ஓட, அவள் துரத்தினாள்.
"பிறந்த நாள்னா கேக் வெட்டணும். புருஷன இல்ல."
"வெட்டலாம். பொண்டாட்டி பிறந்த நாளுக்கு கேக் கூட வாங்கி குடுக்காத புருஷன நாப்பது துண்டானாலும் வெட்டி, ப்ரிஜ்ல வச்சி சாப்பிடலாம்."
" அடிப்பாவி... லேடி இடி அமீன்னா நீ."
"ஆமா... இடி அமீன் தான்.. உங்களால அந்த அவதாரம் எடுத்திட்டேன்.." எனத் துரத்த, அவனைப் பிடிக்க முடியாது போக, சோஃபாவில் கால்களை மடக்கி சம்மணமிட்டு பொத்தென அமர்ந்தாள்.
அவளின் சோர்ந்த முகம் கண்டு அவளின் அருகில் மண்டியிட்டவன், கத்தியை வாங்கி கொண்டு, மடித்து வைத்திருந்த கால்களை எடுத்து விட்டு, அவளின் பாத விரல்களை வருடி சொடக்கெடுத்தான். அவனை முடிந்த மட்டிலும் முறைத்தாள் பைரவி.
" என்ன டெடி?"
"இன்னைக்கி எனக்கு பிறந்த நாள். "
"சோ வாட்."
" சோ வாட்டா... பொண்டாட்டி பிறந்த நாள்னு சொல்றேன் நீங்க… நீங்க…" என அடிக்க எதாவது கிடைக்கிறதா எனத் தேடி ஒரு ஃபோட்டோ ப்ரேமை எடுக்க,
" நோ… நோ... அது கண்ணாடி. உடஞ்சா ரத்தம் வரும்." என வாங்கி அதன் இடத்திலேயே வைத்து விட்டு,
"இப்ப உனக்கு என்ன வேணும்?"
"கிஃப்ட் வேணும்." என்றவளின் அருகில் நெருங்கி அதரங்களை நோக்கி குனிந்தவன் தந்த முத்தம் பரிசா தெரியவில்லை அவளுக்கு. ஆடவனின் ஆண்மையில் கரையத் தொடங்கிய மனத்தைச் சில நிமிடங்களில் மீட்டெடுத்தவள் அவனைத் தள்ளி விட்டு விட்டு,
"எனக்கு இது வேண்டாம். இது டெய்லி நீங்க தர்ற கிஃப்ட். எனக்கு வேற வேணும். ஸ்பெஷல்லா... " என்க, பாவம் மதுவிற்குப் புரியவே இல்லை, அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று. அவன் அசையாது நிற்க,
"இது மேரேஜ்க்கு அப்றம் வர்ற என்னோட ஃபஸ்ட் பெர்த் டே. அது ஸ்பெஷல்லா இருக்கணும்னு எதிர்பாத்தேன். கேக்.. கேண்டில் லைட் டின்னர்னு. பட் எதுவும் நடக்கல. அட்லீஸ்ட் ஒரு கிஃப்ட் வாங்கி தந்தா அதை நியாபகமா வச்சிப்பேன். " என்க,
"மிட் நைட் ஆகிடுச்சி டெடி. நாளைக்கி பாக்கலாம். "
"இன்னைக்கி தான் எனக்கு பிறந்த நாள். அதுவும் முடிய அரமணி நேரம் தான் இருக்கு."
"அதத்தா நானும் சொல்றேன் டெடி. டயம் பன்னென்டாகப் போது. இந்த நேரத்துல எந்தக் கடை திறந்திருக்கும் சொல்லு."
"அது என்னோட பிரச்சனை இல்ல. எனக்கு... கிஃப்ட்... வேணும்… இப்பவே... " என்க, அவன் அசையாது நின்றான்.
"ச்ச… கட்டுன பொண்டாட்டி ஆசையா ஒன்னு கேட்டா வாங்கி குடுக்க கூட முடியாத புருஷனா இருக்காரே. எல்லாம் ஏன் தலையெழுத்து.." என வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நாடகமாட, மது பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். செல்லும் முன், "நான் வாங்கிட்டு வர்றது தான் கிஃப்ட். அது எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும். அது நொட்ட இது நொல்லன்னு சொன்ன." என மிரட்டி விட்டு போக, பைரவி எல்லாம் பக்கமும் தலையசைத்தாள் புன்னகையுடன்.
அவனும் பைக்கில் சந்து சந்தாக வீதி ஊர்வலம் செல்ல, எதுவும் அமைய வில்லை. கூடவே பைரவி வேறு கடிகாரம் போல் இருபது நிமிடங்கள்… பத்தென்பது... பதினெட்டு... என டயிப் செய்து அனுப்பி மதுவை டென்ஷன் ஏற்றி விட்டாள்.
' ஐந்து நிமிடங்கள் உள்ளன.' என மெஸ்சேஜை அனுப்ப பச்சை நிற குறியை அழுத்தும் முன் பதில் வந்தது மதுவிடம் இருந்து, ' comedown.' என்று. புயலென ஓடிச் சென்றாள் பைரவி.
"எங்க என்னோட கிஃப்ட்?" என ஆர்வமாக பார்த்தால், அங்கு மது வெற்று கையுடன் நின்று கொண்டிருந்தான். எதுவும் கிடைக்கவில்லை போலும். வேகமாக அவனின் அருகில் சென்றவள், 'பாக்கெட்டுல எதையாது வைக்கிருக்கலாம்.' என நினைத்து செக்கப் செய்ய, அதுவும் கிடைக்கவில்லை.
" கிஃப்ட் எங்கங்க? வாங்கலயா!" எனச் சோகமாகி விட, அப்போது மணி சத்தம் கேட்டது.
'யாருடா அது அர்த்த ராத்தில பூஜ பண்றது.' என நினைத்து அவனுக்குப் பின்னால் பார்த்தால் ஒரு குல்பி வண்டி.
" வேற எதுவும் எனக்கு கிடைக்கல. சோ... ஸாரி... ஹப்பி பெர்த் டே டெடி." எனப் பால் குல்பியை நீட்டினான். அதை விட பெரிய கிஃப்ட் என்ன வேண்டும் என்று தோன்ற பாய்ந்து வந்து கணவனை அணைத்துக் கொண்டாள்.
அவளைக் கையில் அள்ளிக் கொண்டு அவன் தரும் அனைத்துமே அவளின் பிறந்த நாள் பரிசு தான்.
இது நான்கு ஆண்டுகளும் தொடர்ந்தது. ஐந்தாவதாண்டும் தொடர தான் கணவனுக்குத் தகவல் அனுப்பி உள்ளாள்.
"ம்... ம்… ப்ளூ டிக் விழுந்துடுச்சி. வந்திடுவான். வந்திடுவான். நல்லா நடிக்கணும் பையூ. ஆல் தி பெஸ்ட். " என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு கட்டில் சென்று படுத்துக் கொண்டாள். ரத்தம் அதிகமாக வெளியே சென்றால் மயக்கம் வரும் தானே. மயங்கிய நிலையில் அவள் கிடக்க, அவளை ஏமாற்றாது அடுத்த இரண்டே நிமிடங்களில் மதுவின் பைக் வாசலில் வந்து நின்றது.
பதட்டம் படபடப்பு என எதுவுமே இன்றி அவன் நடந்து வரும் தோரணையே சொல்லும் பைரவியின் நாடகம் அவனுக்குத் தெரியும் என்று. பின் ஏன் வந்தான்?
"என்ன சத்தத்தையே காணும். கதவு திறக்கலன்னு திரும்பி போய்ட்டானா. இல்ல சுவர் ஏறி குதிச்சி உள்ள வந்திட்டானா. ச்ச… உனக்கு அறிவே கிடையாது பைரவி. வாசல்ல விழுந்து கிடக்காம பெட்டு ரூம் வந்து மயங்கி கிடக்க. எந்திரிச்சி போய் அங்க படுக்கலாமா." என மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் போதே. யாரோ அழுத்தமாக பூமியில் தடம் பதித்தபடி நடந்து வரும் காலடி ஓசை கேட்க, விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.
வந்தவன் அவளின் கன்னம் தட்டி, " பைரவி... பைரவி..." என அழைக்க,
‘எனக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைக்கிற வர நான் நடிச்சிட்டே தான் இருப்பேன்.’ என்பது போல் இமை பூட்டி கிடக்க, அவளைக் கைகளில் ஏந்தி கொண்டு நடந்தான். 'ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போகப்போறானோ… குல்பி வாங்கி குடுத்திட்டு கூட்டீட்டு போகணும் கடவுளே.' என வேண்டியபடி அவள் இருக்க, மதுவின் ஃபோன் சிணுங்கியது.
"சொல்லு ராக்கி. நான் பைரவி வீட்டுல இருக்கேன். மார்ச்சரி வேன் எங்க வந்திட்டு இருக்கு. ம்... அங்க பிள்ளையார் கோயில் ஒன்னு வரும். அப்ப ரைட் எடுக்க சொல்லு. லெப்ட்ல நாலாவது தெருல ஆறாவது வீடு. கேட் கிட்ட டெட் பாடியோட நிக்கிறேன். அவளோட அப்பாம்மாக்குத் தகவல் சொல்லிட்டேன். போஸ்ட் மாட்டம் முடியிறதுக்குள்ள வந்திடுறோம்ன்னு சொன்னாங்க. மேற்கொண்டு இறுதி ஊர்வலத்துக்குத் தேவையான எல்லாத்தையும் நம்மல பாத்துக்கச் சொன்னாங்க. எலக்ட்ரிக் சுடுகாடுங்கிறதுனால நாளைக்குச் சாயங்காலம் சாம்பல எடுத்திடலாம். அஸ்திய கரைக்க ராமேஸ்வரம் வர போக வேண்டாம். நம்ம மெரினா பீச் போதும்." என பைரவியின் இறுதி ஊர்வலத்திற்கானத் திட்டங்களைச் சொல்ல,
"அஸ்தியா! " எனக் கத்திக் கொண்டே பைரவி துள்ளி குதித்து அவனின் கரத்தை விட்டு இறங்கினாள்.
" மயங்கித்தான கிடந்தேன். இத்துண்டு தண்ணி ஊத்தி எழுப்பாமா… மார்சரி… எலக்ட்ரிக் சுடுகாடுன்னு அஸ்திய வரைக்கும் போனா என்ன அர்த்தம். பெர்த் டே பொண்ணுக்கிட்ட இப்படியா அபசகுணமா பேசுறது." என்றவளை ஏற இறங்க பார்த்தான்.
'நீ இன்னும் சாகலயா…’ என்பது போல் அல்ல.
பார்வை ரசனையோடு மனைவியின் மேல் விழுந்தது. இளம் மஞ்சள் வண்ண புடவை அது. அதை வாங்கிய போது அவள் ஆடிய ஆட்டம் இப்போதும் நினைவில் இருக்கிறது.
"எனக்குப் பிடிச்சது தான் வேணும்." என்க,
"உன்ன ரசிக்க போறது நான். அப்ப எனக்குப் பிடிச்ச மாதிரித் தான நீ டிரெஸ் எடுக்கணும்." என்றான் மது.
" அப்ப எனக்குப் பிடிச்ச மாதிரி நான் எப்ப உடுத்துறது. இதுக்காக நான் இன்னொரு ஜென்மம்லாம் எடுத்திட்டு வர முடியாது. ப்ளிஸ் மாமா... நல்ல மாமால்ல… " என அவனைக் கொஞ்சி கொஞ்சியே அனைத்தையும் வாங்க வைப்பாள். அவன் விருப்பத்திற்கு ஒன்று அவள் விருப்பத்திற்கு ஒன்று ஆக மொத்தம் இரண்டு. கூடுதலா சண்டை போட்டதற்கு ஒரு புதிய காதணி.
போதுமே…
அவன் முறைத்துக் கொண்டு நிற்பதும், அவள் அவனை மஞ்சத்தில் கொஞ்சி தன் காரியங்களைச் சாதிப்பதும் தொடர்கதை ஆகியது.
அது தான் பைரவியோட பத்து நிமிஷ ஃபார்முலா போல.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..