அத்தியாயம்: 37
"உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா. இப்படியா பயமுறுத்தி ஆள வரவப்ப. இடியட்… உன்னையெல்லாம் எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டிருக்கணும். யூஸ் லெடஸ். " எனக் குரல் காதில் கேட்டது. தன் கணவன் தானா! என உற்று உற்று பார்த்தாள் பைரவி.
ம்… கோபமாகத் திட்டுகிறான். மதுவா... ஆம் மது தான். அவனின் உதடுகள் அசைந்து, வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாயில் இருந்து எகிறி குதித்து விளையாட, பைரவி ஆசையாகக் கேட்டாள். தேன் வந்து பாயும் என்பார்களே அது போல் தான் இருந்தது அவளுக்கு.
ஏனெனில் அவன் பைரவியைக் குரல் உயர்த்தி கடுமையாகத் திட்டியது இல்லை. திட்டி இருக்கிறான் தான். அதைப் புலம்பல் என்றே சொல்லலாம். அத்தனை மெல்லிதாக இருக்கும். கடுமை கடுகளவும் இராது. அதுமட்டுமல்லாது மனைவியிடம் அவனின் அதிக பட்ச கோபம், முறைப்பும் புறக்கணிப்பும் மட்டுமே. திட்டுவது, அடிப்பது என்பதெல்லாம் மதுவின் அகராதியில் கிடையாது. அதுவும் பெண்களை அடிப்பவன் அரக்கன் என்பான். இப்போது மனைவியிடம் அதீத கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கடிய,
"மாமா… நீங்க என்னை திட்டுறிங்க."
" பின்ன என்ன பண்ண சொல்ற.” என்று விழி உருட்டி, நாக்கை மடித்தவன்,
“கை அறுத்துக்கிட்ட மாதிரி நாடகமா ஆடுற. ஒரு நாள் உண்மையிலேயே நடக்க போது. அப்ப தெரியும், நீ போடுற நாடகத்தோட விளைவு. அரலூசு மாதிரி எதையாது செஞ்சிட்டே இருப்பியாடி நீ. கிறுக்கச்சி… " என்றவன் பற்களைக் கடித்து கொண்டு திட்ட,
"Thank God.. கல்லுக்கும் உணர்ச்சி இருக்குன்னு காட்டீட்டிங்க." எனப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
அவளை ஏற இறங்க பார்த்தவன், " இப்ப எதுக்கு கடவுள டிஸ்டப் பண்ற? "
"நாலு வர்ஷத்துல உங்களுக்கு இவ்ளோ கோபமா திட்ட தெரியும்ங்கிறது இன்னைக்கி தான் எனக்கு தெரியும். அடுத்தவன கேவலம் கேவலமா நீங்க திட்டி கூட நான் பாத்தது இல்ல. உங்களுக்குக் கெட்ட வார்த்த தெரியாதுன்னு கூட நான் நினைச்சிருக்கேன். பரவாயில்லை. பீப் சவுண்டு போடுற அளவுக்கு இல்லன்னாலும் சின்ன சின்ன கெட்ட வார்த்த தெரிஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்." என உற்சாகமாக கை நீட்ட, அதைப் பற்றாது, வெளியே நடையை கட்டினான்.
"மாமா… மாமா… மாமா… என்ன வந்ததும் கிளம்புறீங்க!"
"பின்ன விருந்து சாப்டுட்டா போச் சொல்ற?"
"ச்ச… உங்க மாமியார் வீட்டுல இல்ல. அதுனால சைவம் இல்ல. சாப்பிட சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடுறிங்களா." எனக் கேட்க, இவள் அடங்கவே மாட்டாளா என்று நினைத்துக் கொண்டு நிற்காது நடந்தான்.
"ஐய்யோ மாமா. இன்னைக்கி எனக்கு பிறந்த நாள்."
"சோ வாட். " என்றவனை முடிந்த மட்டிலும் முறைத்தவள்,
"எனக்கு கிஃப்ட் வேணும். " என்றாள் தலையைக் குனிந்து கொண்டு கரங்களைக் கட்டிக்கொண்டு இரு வழிகளையும் உயர்த்தி, அவனைப் பார்த்தபடி கட்டைக் குரலில் கொடூரமாக.
" நான் எதுக்கு வாங்கி தரணும். நீ என்ன ஏம் பொண்டாட்டியா? " என நக்கலாக கேட்க, அவள் பார்வையை மாற்றாது அதே முறைப்புடன் நின்றாள்.
"பதில் சொல்ல முடியாது. ஏன்னா இப்ப நீ யாரோ நான் யாரோ. மூச்சிக்கு முன்னூறு தடவ சொல்வியே, 'கட்டுன பொண்டாட்டிக்கி இதக் கூட வாங்கி குடுக்க முடியாத கொடுமக்கார புருஷனா நீங்க..'ன்னு. இனி அந்த டயலாக்க யூஸ் பண்ண முடியாது. பண்ணாலும் நோ யூஸ்.. ஏன்னா நீயும் நானும் தனி தனின்னு கோர்ட்டே சொல்லிடுச்சி." என்க,
"ம்ச்… இப்ப பொண்டாட்டி இல்லன்னாலும் ஒரு காலத்துல நான் உங்க பொண்டாட்டி தான. அதுமட்டுமில்லாம கிஃப்ட் குடுக்க புருஷனா இருக்க வேண்டிய அவசியம் இல்ல."
"அதே நேரம் முன்ன பின்ன தெரியாத பொண்ணோட பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்கி குடுத்து கொண்டாட நான் ஒன்னு பொறுக்கி இல்ல." என்றபடி நடந்தான்.
"நான் முன்ன பின்ன தெரியாதவளா?" என இவளும் கத்திக் கொண்டே ஓடினாள். அவன் வேகமாகக் கதவைத் திறந்தவன்! பின்னால் வந்து கொண்டிருந்த பைரவியைக் கவனியாது அதே வேகத்தில் சாத்த, அது பைரவியின் காலைப் பதம் பார்த்தது. சுட்டு விரல் கதவிடுக்கில் நசுங்கி ரத்தம் கொட்ட, நகம் தூக்கி கொண்டு நின்றது.
"அம்மா... " என அலறல் கேட்டு திரும்பியவன் அவளின் காலைப் பார்த்ததும் தன் தலையில் அடித்துக் கொண்டு, அவளின் அருகில் சென்றான்.
" பிறந்த நாள் அதுவுமா ரத்தம் வர்ற மாதிரி நடிச்சதுக்கு தண்டனையா உண்மையிலேயே ரத்தம் வந்திடுச்சி. நீ அனுப்புன மெஸ்சேஜ் உண்மையாகிடுச்சி பாத்தியா!" என்றவன் அவளின் விரலை அழுத்தி பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமரச் செய்து விட்டு, முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான்.
"உண்மையா! அப்ப இன்னைக்கி எனக்கு டெத் டேன்னு போட்டேனே அது..."
"நடக்க வாய்ப்பிருக்கு." எனச் சாதாரணமாகச் சொன்னவனின் பேச்சில் அதிர்ந்து போனவள்,
" ஐய்யோ அம்மா... நான் சாகப்போறேனா... எனக்குச் சாக பிடிக்கல. அடுத்தவங்க உணர்ச்சிய புரிஞ்சிக்காம, கல்லு மாதிரி இருக்குற சிலரெல்லாம் வாழும் போது, நான் மட்டும் ஏன் சாகணும். கடவுளே… காப்பாத்துப்பா…" எனக் கூச்சலிட, பஞ்சில் மருந்தை எடுத்தவன் அவளின் விரலில் அழுத்தி வைத்தான். மறுபடியும் அலறினாள் அவள்.
" ஏய் வாய மூடுடி. சின்ன காயம். அதுவும் சுண்டு விரல்ல அடிபட்டு யாரும் சாக மாட்டாங்க."
"ஒரு வேளை செத்துட்டா. "
"ராக்கி அமரர் ஊர்தியோட வந்திட்டு இருக்கான். தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன். "
"ம்… செய்வீங்க செய்வீங்க.. எப்படா சாவா எப்படா நிம்மதியா இருக்கலாம்னு காத்திட்டு இருக்குறவர் தான நீங்க. போய்டுவீங்க... போய்டுவீங்க.. ஆனா ஒன்னு. என் சாவுக்குக் காரணமான உங்கள நான் சும்மா விட மாட்டேன். பேயா வந்து பயமுறுத்துவேன். "
"எது உன் சாவுக்கு நான் காரணமா?"
"ஆமா... நான் பின்னாடி வர்றேன்னு தெரிஞ்சி தான கதவ சாத்துனீங்க. எனக்கு தெரியும் நீங்க அப்படித்தான்னு. எனக்கு காயம் படணும்னு வேணும்னே பண்ணிருக்கிங்க. கொலை முயற்சி. நான் செத்தா நீங்க தான் காரணம். லெட்டர் எழுதி வைச்சிட்டுறேன். அப்பதான் போலிஸ் உங்கள பிடிச்சிட்டு போகும். " எனக் கண் தெரியாது கதவிடுக்கில் காலை விட்டு விட்டு கணவனைக் குற்றம் சுமத்தினாள். இது பழகிப்போன ஒன்று என்பது போல், அவன் அமைதியாக அவளின் தூக்கிய நகத்தை வெட்டிவிட்டு மருந்திட்டு கட்டு போட்டான்.
"ரொம்ப வலிக்கிது மாமா." என விரலைப் பிடித்துக் கொண்டு பாவமாக சொல்ல,
"சரியாகிடும். நான் கிளம்புறேன். " என்றுவிட்டு நடக்க,
"அதுவா எப்படிச் சரியாகும். நாம தான் ஏதாவது பண்ணணும். அப்பதான் சரியாகும். " என்றாள் பைரவி. திரும்பி அவளைப் பார்த்தவன்,
" என்ன செஞ்சா சரியாகும்?"
"ஐஸ் ஒத்தடம் குடுக்கலாமா?" என்க, அவன் ப்ரிஜ்ஜை நோக்கி எட்டு வைத்தான்.
"அந்த ஐஸ் இல்ல மாமா. வெளில விக்கிதே அது. குல்பி ஐஸ். மணி சத்தம் கேக்கலயா." என்றவளின் பாவனையில் சொக்கித்தான் போனான் மதுசூதனன்.
"ப்ளிஸ் மாமா... இந்த ஒரு வாட்டி வாங்கி தான் மாமா… ப்ளிஸ்... " எனக் கண்களும் உதடுகளும் சேர்ந்து கொஞ்சும் போது, முடியாது என்று சொல்ல மனம் எப்படி வரும்.
அவள் விரும்பியதை வாங்கி அவளின் கையில் திணித்தவன், அவள் உண்ணும் அழகைச் சுவற்றில் சாய்ந்து கொண்டு ரசித்தான்.
மெல்லிய உதடுகள். மீன் குஞ்சைப் போல் திறந்து திறந்து அது மூடும் அவள் பேசுகையில். இப்போது குச்சி ஐஸ்ஸை ரசித்து சுவைக்க அந்த அதரங்கள் ஐஸ்ஸின் குளிர்ச்சியில் சிவந்து போயிருந்தன. அவள் ருசிக்கும் வேகத்தை விட ஐஸ் உருகும் வேகம் அதிகமாக இருக்க, இதழின் ஓரம் அது வடிந்தோடியது. அதைவிட வேகமாக மதுவின் மனம் உருகியது மங்கையிடம். மதுவின் உள்ளம் சொல்ல முடியாத அளவுக்குத் துடிக்க, தன் நிலை மறந்தான்.
எப்பொழுதும் உதடுகளில் பால் ஒழுக சுவைப்பவள், அவனிடம் குச்சியை நீட்டி, " வேணுமா மாமா." எனக் கேட்பாள். அப்போது வேண்டாம் எனத் தலையசைப்பவன், அவள் உண்டு முடித்தப்பின் அவளின் சில்லிட்ட உதடுகளில் ஐஸ்கிரீமின் சுவையை உணருவான். அதன் பின்னான கூடல், சோனை கண்ட சோலை போல் அத்தனை ரம்மியமாக இருக்கும். பரிபூரண திருப்தியுடன் முடியும் அந்த இரவு.
தன்னிடம் உள்ள குச்சியை நீட்டி தன் கணவனிடம் வேண்டுமா எனக் கேட்க, அவனின் பார்வை மனைவியின் இதழில் நிலைத்து நின்றது. பின் என்ன நினைத்தானோ. வேண்டாம் எனக் கூறி நொடியும் தாமதிக்காது அங்கிருந்து சென்றான். தாமதித்திருந்தால் அவள் வெற்றி பெற்றதற்குச் சமமாகி விடும். தன்னை அவளிடம் இழந்து அவளிடம் தன் முடிவிலா தேடலைத் தொடங்கி விடுவான். அது கூடாது என்று தான் சென்று விட்டான்.
இம்முறை செல்லும் அவனை அழைக்கவில்லை பைரவி. அவளுக்குத் தேவையானது கிடைத்து விட்டதே. பொறுமையாக அவன் வாங்கி தந்த மூன்று குல்பியையும் சுவைத்து முடித்தவள் அதன் குச்சியைக் கொண்டு வந்து தன் கபோர்டில் பத்திரப்படுத்தினாள். அந்த கபோர்டு தான் மதுவின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அவளின் பொக்கிஷம்.
அவனுடன் கழித்த ஒவ்வொரு பொழுதையும், அவனுடனான் இனிய நினைவுகளையும் நினைத்தபடி அவளின் நாள்கள் நகர்ந்தன.
ஆனால் இந்த மதுவிற்கு அப்படி தெரியவில்லை. "இருபது ரூபா இருக்குமா அந்த குல்பி. அத வாங்கி தர எதுக்கு இவ்ளோ டிராமா போடணும். ச்ச... டிராமா குயின்." என எரிச்சல் தான் வந்தது. கூடவே இதழ் குவித்து உண்ணும் போது தன் உணர்வுகள் சிலிர்த்து எழ, தன் பலகீனத்தை உணர்ந்து தன்னுடன் விளையாடுகிறாள் என்ற கோபமும் வந்தது.
விளக்கின் ஒளியில் அடி பகுதி மட்டும் தான் இருளாக இருக்கும். அதை விளக்கு ஒருபோதும் உணராது. தன்னைச் சுற்றி இருக்கும் வெளிச்சம் மட்டுமே அதற்குத் தெரியும். பைரவி விளக்கு போல். மதுவின் குறைகளையும் தவறுகளையும் பெரிது படுத்தாது விளக்கின் ஒளி போல் அவனுடன் கிடைத்த மறக்க முடியாத மகிழ்ச்சிகளை மட்டும் எண்ணி வாழ்கிறாள்.
ஆனால் மதுவோ லேசர் லைட் போன்றவன். குறுகிய துளைவழியே பாய்ந்து செல்லும் ஒளி அறையை வெளிச்சப்படுத்தாது. ஒரு பொருளைக் குறிப்பிட்டு காட்ட மட்டுமே பயன்படும். அதுபோல், பைரவி வேலைக்குச் சென்று தன்னை அவமானப்படுத்தி விட்டாள். தன்னை கையாளாகாத ஆண்மகன் என்று உலகிற்கு உரைத்து விட்டாள் என்று எண்ணி, அந்த ஒற்றை இடத்தை மட்டும் ஹைலைட் செய்து காட்டி, அவளுடன் வாழ்ந்த மற்ற அனைத்து சந்தோஷங்களையும் இருளில் தள்ளி விட்டு, நின்ற இடத்தை விட்டு நகராது நிற்கிறான்.
எப்போது இருள் விலகப் போகிறதோ!
விடாது அடித்த ஹாரன் ஒலியில் எரிச்சல் அடைந்தாள் சாரு.
" ஆ… வருவேன்ல. என்ன அவசரம். இவன யாரு எனக்காகக் காத்திருக்க சொன்னா. போக வேண்டியது தான. ச்ச... எல்லாம் இந்த பைரவியால வந்தது. அவள இன்னைக்கி கவனிச்சிக்கிறேன். " எனக் காலை வேளையிலேயே பைரவியை வாழ்த்தி விட்டு அறை கதவைப் பூட்ட, தாமரை நின்று கொண்டிருந்தாள் புன்னகையுடன்.
" குட் மார்னிங் தாமரை. " என்க,
"குட் மார்னிங் க்கா. உங்களுக்கு மத்தியான சாப்பாடு. காலேலைக்கும் ஒரு டப்பாள எடுத்து வச்சிருக்கேன். ஆஃபிஸ் போனதும் மறக்காம சாப்பிடுங்க. " என இரு டப்பாக்களை நீட்ட, அவளின் அன்பில் மனம் மகிழ்ந்து போனது. இருந்தும்…
"உன்ன யாரு இதப் பண்ணச் சொன்னது. இங்க சிப்ட் போட்டு தான் சமையல் பண்ணறது, வீட்ட க்ளீன் பண்றது, பாத்திரம் விளக்குறதுன்னு எல்லா வேலையையும் எல்லாரும் செய்வோம். நீ பாட்டிக்கி சமக்கட்டுக்குள்ள இறங்கி வேலை பாத்தா மத்த மூணு பேரும் 'சீக்கிட்டான்டா இளிச்சவாயன்.' ன்னு உந்தலைல வேலைய கட்டீட்டு போய்டுவாளுக. நீ தொனமும் பண்ணாத. " என்றவள் தன் உடமைகளைக் கைப் பைக்குள் அடைத்து வைக்க,
"அதுனால என்னக்கா இருக்கு.
அண்ணனுக்கும் எனக்கும் சேந்து சமைக்கத் தான் போறேன். ரெண்டு பேருக்கு ஆக்குற இடத்துல கூடுதலா நாலு பேருக்கு ஆக்க மாட்டேனா. இத போய் வேலைன்னு சொல்றீங்க." என்றாள் அவள்.
அவளின் சுயநலமற்ற வெள்ளந்தி மனத்தைக் கண்டவள் தாமரையின் கன்னம் தடவி வாஞ்சையுடன் புன்னகை சிந்த, அவளை எரிச்சலடைய செய்தது அந்த ஹாரன் ஒலி.
"ஸாரிக்கா அண்ணா இன்னைக்கி சீக்கிரம் போகணும்னு சொல்லுச்சி. அதா…" எனச் சங்கடத்துடன் சாருவைப் பார்க்க, வேகவேகமாக இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்தனர்.
இருவரையும் பாண்டி காரில் ஏற்றிக் கொண்டு சென்றான். எல்லாம் பைரவியின் வேலை.
சாரதாவுடன் தங்கிக் கொள்கிறேன் என்ற தாமரையைக் கட்டாயப்படுத்தி அவளின் வீட்டில் சாருவுடன் தங்க வைத்துள்ளாள்.
"ஹோம்ல இருந்து அவ வேலை பாக்குற ஸ்கூல் தூரம். எங்க வீட்டுல இருந்து பக்கம். அதுமட்டுமில்லாம இங்க அவ வயசுல யாருமே இல்ல. இந்த ஓல்டு ஏஜ் கூட சேந்தா அவளும் ஓல்டாவே மாறிடுவா. அதுனால அவ வயசுல இருக்குற ஆளுங்க கூட இருக்கட்டும். " எனப் பல கதைகள் சொல்லி தாமரையை அழைத்து வந்து சாருவுடன் தங்க வைத்தாள்.
ராக்கி பாய் உடன் ஜோடி சேர்த்து வைக்க வேண்டுமெனில் தாமரையை அவளின் அண்ணனிடமிருந்து கொஞ்சும் விலக்கி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாது ராக்கி பாயை விட்டுச் சென்ற அவனின் முன்னாள் காதலி போல் தாமரையும் விட்டு ஓடி விடக் கூடாது. அதற்கு அவளின் கேரக்டரைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோட அவளைக் கடத்தியவர்கள் யார் எனத் தெரிய வேண்டுமல்லவா. அதற்குத் தான் கூட்டி வந்து பக்கத்தில் வைத்திருக்கிறாள்.
பாண்டிக்கும் ஒரு கால் டாக்ஸி ஏஜென்சியிடம் பேசி டிரைவர் வேலை வாங்கி கொடுத்துள்ளாள். இரவில் சாரதா ஹோமில் தங்கிக் கொள்ளும் பாண்டி, காலையில் தங்கையையும் சாருவையும் அழைத்துக் கொண்டு வேலை செய்யும் இடத்தில் டிராப் செய்வான். பணி முடிந்ததும் பிக்கப் செய்தும் பத்திரமாக கொண்டு வந்து விடுவான். இது ஒரு வார காலமாக நடைபெறுகிறது.
ஐந்தே நிமிடங்களில் தாமரை வேலைக்கு சேர்ந்துள்ள பள்ளி வந்து விடும். ஆனால் சாருவின் அலுவலகம் செல்ல குறைந்தது அரைமணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் கூட ஆகலாம்.
"அண்ணா டிப்பன் பாக்ஸ். " என இரு வேளை உணவையும் தந்தவள் அண்ணனுக்கு டாட்டா காட்டி விட்டுச் சென்றாள். இப்போது சாருவும் பாண்டியும் மட்டும் தான் இருந்தனர் அந்த காரில்.
ப்ளேயரில் இளையராஜா பாடல் ஓட, பயணம் முடிந்ததும் வேறு எந்தப் பேச்சும் இன்றி பாண்டியின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாது இறங்கி சென்றாள் அவள். ஆனால் அவனோ அவளின் பார்வைப் படாதா என ஒற்றைக்காலில் இமய மலையில் தவமிருக்கும் முனிவர் போல் மாறி விட்டான்.
இவர்கள் இருவருக்குள்ளும் என்னவா இருக்கும்…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..