அத்தியாயம்: 79
தலைக்கு மேல் தொங்கிய கொடி முந்திரியை அதாவது கருப்பு நிறத்தில் இருக்கும் பன்னீர் திராட்சை கொத்துக்களை, கைகளை பின்னால் கட்டிக் கொண்டு வாயால் கவ்வ முயன்று கொண்டிருந்தாள் பைரவி.
சாரு, "நரியா மாறிட்டயாடி நீ!"
"அதுவும் சாதா நரி இல்ல. குள்ள நரி.." எனச் சொல்லி தாமரை சிரிக்க, சாருவும் சேர்ந்து கொண்டாள். ஆனால் அதுவெல்லாம் நம் பைரவியின் காதுகளுக்கு சென்றடைய வில்லை.
"என்னோட ரொம்ப நாள் ஆச இது. இந்த மாதிரி குதிச்சி குதிச்சி சாப்பிடுறது. கடைசியா ஸ்கூல் படிக்கிறப்ப ஓட்ட வடைய கயித்துல தொங்க விட்டு இந்த மாதிரி சாப்பிடுற போட்டி நடந்தது. அதுல நான் வின் பண்ணி கப்பு வாங்கலன்னாலும். இதுல ஒரு கொத்தையாது பறிச்சி சாப்பிட்டுடுவேன். " எனத் தன்னம்பிக்கையோடு குதிக்க,
'என்னைப் பறிக்க நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்க வேண்டும். ' எனச் சொல்லி திராட்சைக் கொத்துகள் அவளைக் கேலி செய்தன.
அது அங்கு வேலை செய்து கொண்டிருந்த அரசிக்கு கேட்டுருக்க வேண்டும். " ஏம்மா ப்ராயிலர் கோழி. உனக்கு தான் அது எட்டலல்ல. அந்தக் கூடைல பறிச்சி போட்டிருக்கோம். எடுத்து திங்காம எதுக்கு குதிச்சிட்டு கிடக்க. பூமி அதிருதுல்ல. " எனக் கேலியாக கூற, வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் சிரித்தனர்.
"என்னடி உன் மாமியா ரொம்ப பேசுது. அமைதியாக இருக்க சொல்லு. இல்லன்னா கூடைல ஏறி குதிச்சிடுவேன். அப்றம் திராட்சையா விக்க முடியாது. திராட்ச ரசத்ததா பாட்டில்ல போட்டு விக்கணும்." பைரவி சாருவை மிரட்ட,
"அத நீயே அவங்க கிட்ட சொல்லு. " என்றவள் நிலத்தில் உதிர்ந்து கிடந்த இலைகளைக் கூட்டிக் கொண்டிருந்தாள். தாமரை அதைக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருந்தாள். அப்போது தீஷித்தும் பாண்டியும் நடந்து வருவது தெரிய, பைரவி தீஷித்தின் அருகில் ஓடிச் சென்றாள்.
" அந்த வீடுதான்னு உறுதியா தெரியுமா. " என மூச்சு வாங்க அவள் கேட்க,
" லேக்கேஷன் அந்த ஏரியாவ சுத்தி தான் காட்டுது. " என்றான் அவன்.
"என்ன பண்ண போறிங்க?"
"தேடணும். அந்த வீட்டுக்குள்ள எங்கனாலும் இருக்கலாம். இல்ல வெளில எங்கனாலும் இருக்கலாம். "
"அந்த வீட்டுல பெயின்டிங் வேல நடக்கப் போறதா பாண்டி அண்ணா சொன்னாங்க. "
" ம்... அப்ப தேட வசதியா இருக்கும். நிறைய ஆட்களும் நமக்கு உதவியா இருப்பாங்க. " என்ற தீஷித் பாண்டியைப் பார்க்க, அவன் தாயை நோக்கி,
"ம்மோய்… என்ன பண்ற?" என கத்தினான்.
" ஹா... தோட்டத்துல என்ன பண்ணுவாய்ங்களோ அதத்தா பண்றேன். வெள்ளை அடிக்கிரவிங்க வந்துட்டாங்களா. இல்லயா. " எனக் குரல் கொடுத்தார் அரசி.
"வந்தாச்சி வந்தாச்சி. நாளைக்குள்ள வேலைய முடிக்கச் சொல்லிருக்கு. " எனப் பாண்டி குரல் கொடுத்தாலும் பார்வை மனைவியின் மீது இருந்தது. எந்த நம்பிக்கையில் தன்னை அழைத்தாள். நட்பா! காதலா!. எதுவாக இருந்தாலும் சரி அதை இனி ஆராயாது அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு நிற்க,
"சாப்பிங்களா?" எனக் கணவனை பார்த்து சாடை செய்தாள் சாரு. அவன் இல்லை எனத் தலை அசைக்க, விழி உருட்டி மிரட்டியவள், வேகமாக வந்து மரத்தடியில் இருந்த தூக்குவாளியை எடுத்தாள். அவளின் அருகில் வந்தவனுக்கு அவளின் வசை சொற்கள் அமுதமாய் இனித்தது.
"காலைலயே சொன்னேனே. எதையாது உள்ள போடுங்கன்னு கேட்டிங்களா. ம்... பிடிங்க. " எனத் தூக்கை தர மரத்தடியில் அமர்ந்தான். அவனின் எதிரிலேயே ஒரு கல்லில் அமர்ந்தாள் சாரு.
"ஒரு வாரம் தான். அடுத்து இந்த கஷ்டம் இருக்காது. "
"எந்த கஷ்டம்?"
"அதா இந்த காட்டுல வேல பாக்குறது. கொசுக்கடி தூக்கம். கட்டாந்தர. இத சொல்றேன்."
"ஓ... ஒரு வாரத்துல எல்லாம் மாறிடுமா! எப்படி?"
"நீ வேலைக்கி போகணும்ல. அங்க வசதியால்ல இருக்கும். குழாய தொரந்தா தண்ணீ. கை நீட்டுனா ஆட்டோ. உக்காந்த இடத்துலேயே ஆர்டர் பண்ணிட்டு கால் மேல கால் போட்டுடு இருந்தா சாப்பாடு கூட தேடி வரும். " என்றவனின் பேச்சு சாருவால் பாதியில் நிறுத்தப்பட்டது.
"நான் வேலைய விட்டுட்டேன்."
"ஏன்?."
"இனி என்னால சென்னைக்கு போக முடியாது. போகனுங்கிற அவசியமும் கிடையாது. நீங்க என்னைப் பத்தி யோசிக்காம, தாமர கல்யாணத்த முடிக்கிற வேலைய கவனிங்க. பாய் வீட்டுல எதுவும் கேக்க மாட்டாங்க தான். நாம செய்ய வேண்டியத செஞ்சி தான ஆகணும். இன்னைக்கி பாய் வந்திடுவேன்னு சொன்னாரு. " என்றவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து,
" எந்த ஒரு முடிவ எடுத்தாலும் யோசிச்சி எடுக்கணும். எடுத்ததுக்கு அப்றம் யோசிக்க கூடாது. தப்பான முடிவ எடுத்திட்டாலும் அத விட்டுடுட்டு போய்ட கூடாது. அது கூடவே இருந்து மாத்த முயற்சி பண்ணணும். இத எனக்கு பைரவி தான் சொல்லித் தந்தா. நான் எந்த தப்பான முடிவ எடுக்கல. " என்று விட்டு எழுந்து சென்றாள். பாண்டிக்கு இதை விடவா பெரிய சந்தோஷம் வேண்டும் என்றிருந்தது. அவளின் மனதை வெளிப்படையாக கூறிய விதம் பிடித்துப் போக பார்வை மனையாளின் மீது ரசனையுடன் படிந்தது.
" பாண்டி முடிச்சிட்டு வாங்க. நான் முன்னாடி போறேன். " என்று கூறி தீஷித், சாரதா ரகுவரனின் இல்லத்திற்கு தனித்து சென்றான்.
"நான் போய் தீஷித் ஸாருக்கு உதவி பண்றேன். " எனப் பாண்டி எழ, நானும் வருகிறேன் என்று பைரவியும் உடன் சென்றாள். அப்போது பாண்டியின் செல்ஃபோன் இசைத்தது.
"உங்க வலது பக்கம் பாருங்கள். புங்க மரம் இருக்கும். அப்படியே நேரா வாங்க. " என வழி சொல்ல,
அரசி, "யாருக்குடா பாத காட்டிட்டு இருக்க. ".
"நான் சொன்னேனே செல்விக்கி பட்டணத்து மாப்ள பாத்து வச்சிருக்கேன்னு. அவரு தான் வந்திட்டு இருக்காரு. " என்க, அரசி ஆரம்பித்து விட்டார்.
ராக்கி பாய் தன் மாமனாரின் குடும்பத்தைக் காணவும் நண்பன் போட்ட கட்டளைக்காகவும் வீர நடை கொண்டு நடந்து வந்தான். அது வீர நடை இல்லை கோப நடை என்று நெருங்கி வந்த பின் தான் தெரிந்தது.
ராக்கியைக் கண்டதும் முகமும் அகமும் ஒருங்கே பூக்க, ஓடிச் சென்று சாருவின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் தாமரை. நாணம் பொங்க தலை தூக்க முடியாது அவள் நிற்க,
'நீ இந்த அளவுக்கு வெக்கபடுற மாதிரி ஒரு ஷீனும் நடக்கப் போறது இல்ல. ' என்பது போல் ராக்கி தாமரையைப் பார்க்கவே இல்லை. அவனின் பார்வை மொத்தமும் பைரவியிடம் இருந்தது.
" வாங்க மச்சான். " என வரவேற்ற பாண்டியைத் தாண்டிச் சென்றவன். பைரவியின் கரம் பற்றி இழுத்து அடிக்கவே கை ஓங்கி விட்டான்.
"பாய் என்னாச்சி. " சாரு தான் பதறிப் போய் தடுக்க,
"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா. ரெண்டு நாள் ஆது நீ ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணி. நீ வந்தது போனது எங்க இருக்கங்கிறது எதையும் எங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா நான் உனக்கு அண்ணே கிடையாதுல. ஆனா நான் உன்ன என் தங்கச்சியாத்தா பாத்தேன். அஞ்சி வர்ஷமா. எங்கூட பிறந்திருந்தா கூட இந்த அளவுக்கு பாசம் வச்சிருப்பேனான்னு தெரியல. உம்மேல வச்சேன். ஆனா அது தப்புன்னு பொட்டு அடிச்ச மாதிரி புரிய வச்சிட்ட,
உனக்கும் எனக்கும் இந்த உறவு வரவே அவெந்தா காரணம். இல்லன்னு சொல்ல. அதுக்காக அவெங்கிட்ட உனக்கு பிரச்சனன்னா எங்கிட்டயும் பேச மாட்டா. அன்னைக்கி என்னமோ சொன்ன பிடிச்சவங்கள விட்டே குடுக்க கூடாதுன்னு. அப்ப என்னை உனக்கு பிடிக்கலயா. நான் உன் விரோதியா. " எனக் கோபமாக கேட்க,
"இல்ல பாய். என்னால உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் சண்ட வந்திடக்கூடாதுன்னு. "
"வந்தா அத சமாளிக்க தெரியாத அளவுக்கு நான் கோழையா இல்ல. என்னால தான் உங்கள ரெண்டு பேருக்கும் இடைல புகைய ஆரம்பிச்சிடுச்சின்னு தள்ளி இருந்ததுனால தான் டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கிங்க. ஆனா இந்த தடவ அப்படி தள்ளி இருக்க மாட்டேன். எந்தங்கச்சிக்கா நான் நிப்பேன்.
உனக்கு அந்த முட்டாள் பண்ணது தப்புன்னா போ சண்ட போடு. அவனுக்காக என்னை ஏன் அவாய்ட் பண்ற பைரவி. அண்ணா, பாய்ன்னு கூப்பிடதெல்லாம் பொய்யா. " என்றவனின் கோபம் நியாயமானது.
எத்தனை முறை அழைத்தும் அவளின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவன் விடாது அவளின் நட்பு வட்டங்களுடன் பேசிக் கொண்டே தான் இருந்தான். தீஷித், சாரு, சாரதா என அனைவரும் பேச, இவள் மட்டும் தவிர்த்தது அவனுள் அத்தனை கோபத்தை தந்தது.
நம் மனம் விரும்பியவர்களின் நிராகரிப்பு நிச்சயம் வலி மிகுந்ததாகவே இருக்கும்.
"ஸாரி பாய். நீங்க அவருக்கு சப்போட் பண்ணி எங்கிட்ட பேசத்தா கூப்பிடுறீங்களோன்னு நினைச்சிட்டு நான் பேசல. ஸாரி. " என மன்னிப்பு கேட்க,
"என்ன பண்ண போற?"
"என்ன?"
"அதா அவெ லைஃப்ல மூவ் ஆகிட்டே இருக்கானே. நீ என்ன பண்ணப் போறன்னு கேக்குறேன். "
"என்ன பண்ணணும் எதிர் பாக்குறீங்க பாய். " என எதிர் கேள்வி கேட்டாள் அவள்.
"கல்யாணம் பண்ணணும். பண்ணிப்பியா. அதுவும் உங்கம்மா உனக்கு பாத்து வச்சிருக்குற பையன." என்க, பைரவி அதிர்ந்து விட்டாள்.
நேற்று புறப்படும் போது கூட சாந்தி கூறினார். " உனக்கு இன்னும் வாழ்க்க இருக்கு பையூம்மா. பிடிக்காத ஒருத்தருக்காக பிடிவாதம் பிடிக்காம. உன்னையும் உன்னோட சூழ்நிலையையும் புரிஞ்சி விரும்பிவர்ற பையன வேண்டாம்னு சொல்லாதம்மா. " எனப் பைரவியின் திருமணம் குறித்து கேட்க,
"என்னால அவர மறக்க முடியாதும்மா."
"அதுக்காக இப்படியே இருக்க போறியா. அந்த தம்பிக்கி கல்யாணங்கிறதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லல. வாழ்க்கைல எந்த ஒரு முடிவா இருந்தாலும் அத எடுக்க வேண்டிய கால நேரத்துக்குள்ள எடுக்கணும். இல்லன்னா அப்படியே அது பழகிடும். நீ தனியா இருக்க பழகிட்டன்னா கல்யாணம் குழந்தன்னு குடும்ப வாழ்க்க உனக்கு பிடிக்காம போய்டுமோங்கிற பயத்துல தான் சொல்றேன்.
எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்ணு. கொஞ்சம் எங்க நிலமையையும் யோசிம்மா. இல்ல அந்த தம்பி தான் வேணும்னா நானும் அப்பாவும் போய் அந்தம்மாட்ட பேசி பாக்குறோம். " என்க, ரோசமாக தலை உயர்த்தியவள்.
"எதுக்கு! அசிங்கப்படுத்தவா. எதுவும் வேண்டாம். என்னால அவர மறக்க முடியாது தான். அதே நேரம் நீங்க அசிங்கப்படுறத என்னால பாக்க முடியாது. நீங்க பேசி சேத்து வச்சாலும், இவ்வளோ நடந்ததுக்கு அப்றம் இனியும் அவர் கூட பழைய மாதிரி சந்தோஷமா வாழ முடியும்னு தோனல. ம்ச்… எனக்கு குழப்பமா இருக்கு. கொஞ்சம் டயம் குடும்மா. ப்ளீஸ். " எனத் தாயின் பேச்சிற்கு பதில் சொல்ல, அவர் ஊர் திரும்பி வரும் போது நல்ல பதிலை எதிர்பார்ப்பதாக சொல்லி அனுப்பி வைத்தார்.
"ராக்கிண்ணா என்ன பேசுறீங்க நீங்க? அவளுக்கும் மது அண்ணனுக்கும் பிரச்சனன்னா உடனே வேற கல்யாணம் பண்ணிக்கணுமா. கொஞ்ச நாள் போனாலே அது சரியாகிடும். " பாவம் சாரு தான் பதறிப் போய் மதுவிற்காக பேசினாள்.
" பிரச்சன அவங்க ரெண்டு பேருக்குள்ளன்னா கண்டிப்பா சரி பண்ணிருப்பாங்க சாரு. பட் இது வேற. ஒரு பொண்ணுக்கு கிடைக்கிற பெரிய சப்போட்டே அவளோட புருஷன் தான். அதுவே நானல் புல் மாதிரி உறுதி இல்லாம இருந்தா என்ன பண்ண முடியும். சொல்லு. அதோட அவனுக்கு ரூபி கூட நிச்சயம் ஆகிடுச்சி. அடுத்த மாசம் மேரேஜ். " எனத் துணிந்து பொய் சொல்ல, பைரவி உடைந்து அழத் தொடங்கி விட்டாள்.
அவள் மனதில் நம்பிக்கை இருந்தது மது நிச்சயத்தை நிறுத்தி விடுவான். அது திருமணம் வரை செல்லாது என்று. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை தான். ஆனால் ஏன் இந்த பாய் இப்படி பொய் சொல்கிறான் என்று புரியவில்லை.
'பாய் பாய். என்ன பாய் இதெல்லாம். அங்க நண்பனுக்காக பேசிட்டு. இங்க வந்து இப்படி பேசுறீங்க. ஃப்ரெண்டுக்கு சப்போட் பண்ணி நடந்தது நடந்திடுச்சி நடக்காதது சேர் ஆட்டோல போச்சின்னு காமெடியா நாலு டயலாக்க பேசி சேத்து வைக்காம என்ன பாய் இப்படி பண்றிங்களே பாய். நீங்க நல்லவரா!. இல்ல கெட்டவரா!. ' மை மைண்ட் வாய்ஸ்.
'ரெண்டுமே தான். I am the Hero and the Villain. ' என்பது போல் சிரித்தார் ராக்கி பாய்.
சாரு, "என்ன சொல்றிங்க பாய். அண்ணாக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கா. "
" ஆமா. அவெ அவனோட லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான். நீ தான் அவனையே நினைச்சிட்டு முட்டாள் மாதிரி இருக்க. "
"இல்ல பாய். நான் முட்டாள் இல்ல. ஆனா என்னால அவர வெறுக்கவோ மறக்கவோ முடியலயே. "
ராக்கிக்கு மது கூறிய வார்த்தைகள் நினைவு வர, "சரி அப்ப எங்கூட வா. கத்தி கலாட்டா பண்ணி சண்ட போட்டு இந்த கல்யாணம் நிப்பாடி மறுபடியும் உனக்கே தாலி கட்ட வப்போம். "
"இல்ல. நான் வரல. அவரோட சம்மதம் இல்லாம எதுவும் நடந்திருக்காது. என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காத ஒருத்தர் கிட்ட எனக்கு வாழ்க்க குடுங்கன்னு கேக்குறது எனக்கு அவமானம். என்னோட சுய மரியாதைய விட்டுட்டு அவருக்கு மனைவியா என்னால இருக்க முடியாது. " என அழுகுரலில் சொல்ல,
"நல்லா அழுதிடு பைரவி. உன்னோட கண்ணீரோட சேத்து அவனோட நியாபகத்தையும் துடச்சி எடுத்திட்டு உன்னோட வாழ்க்கைய புதுசா ஆரம்பி." என அறிவுரை சொல்ல, சாருவிற்கு அது சரியாக பட்டது.
ஆனால் பாவம். ராக்கி பாயின் இந்த ஆன்டி ஹீரோ அவதாரத்தை ஒரு ஜீவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே தகவல் பறந்தது மதுவிற்கு. காட்சிகளால காட்டப்படவில்லை என்றாலும் ரெக்கார்ட் செய்து அனுப்பி வைத்தது அந்த ஜீவன். விளைவு மதுவும் வந்து சேர்ந்தான் மதுரைக்கு.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..