அத்தியாயம்: 80
"டேய் அந்தக் கதவுல இருக்குற பெயிண்ட்ட சொரண்டச் சொன்னேனே போய் உப்பு தாள் வச்சி தேய். நீ போய் எல்லா ஜாமனையும் தூக்கி பின் பக்கம் இருக்குற ரூம்ல போடு. அத ஒதுக்கி வெள்ளை அடிச்சாச்சி. " எனக் கத்திக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதன்.
மொத்தம் நான்கு பேர் மட்டுமே வேலைக்கு வந்த நிலையில், கீழே நான்கு அறைகள் மேலே மூன்று என உட்பக்கம் வேலையை முடித்துவிட்டு வெளிப்பக்கம் வேறு வெள்ளை அடிக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை வைத்துக் கொண்டு இரு தினங்களில் முடித்து தர வேண்டும் என்பதால் இரவு பகலாக வேலையை முடிக்கச் சொல்லி போராடிக் கொண்டிருந்தார் அவர்.
தீஷித், "எல்லா வேலையும் மும்மரமா நடக்குது போல. "
"ஆமா ப்பா. ரெண்டு நாள்ல முடிக்கணும்ல. " என்றவருக்கு பதிலாக ஒரு புன்னகையைத் தந்தவன் வீட்டைச் சுற்றி நோட்டம் விட தொடங்கினான்.
நன்கு காத்தோட்டமாக மின் விசிறியின் உதவி தேவைப்படாத படி கட்டப்பட்டு இருந்தது. கம்பிகள் பொருத்தப்பட்ட அந்தக் காலத்து பால்கனி, முற்றம், மாடம் எனப் பழமை மாறாமல் இருந்த அதன் கட்டுமானத்தைச் சில நிமிடங்கள் நின்று கிரகித்தவன், வேலை செய்பவர்கள் சில பொருட்களை இடமாற்றி வைத்துக் கொண்டிருந்ததை கண்டான். பீரோ நாற்காலி கட்டில் என அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. வெண்கல பானைகள், பூஜை பொருட்கள் என எல்லாம் பழைய பொருட்கள். பழமை மாறாமல் ரகுவரன் பாதுகாத்து வந்திருந்தார்.
அதில் தீஷித்தைக் கவர்ந்தது தேங்காய் நார் சோஃபா. அதன் வடிவமைப்பு பிடித்து போக, அதைத் தடவிக் கொடுத்தபடி அமர்ந்தான். ஏதோ ஒரு வித உணர்வுகள் உள் தோன்ற, அதை ரசித்தபடி மொட்டை மாடிக்குச் சென்றான்.
ஆங்காங்கே மரங்கள் வளர்ந்து பச்சையாக காட்சி தந்தாலும் மனித நடமாட்டம் இல்லை. அங்கிருந்து அந்த செல்ஃபோன் டவர் சில மீட்டர் தூரமே இருந்தது. வீடுகள் என்பது பெயருக்கு மட்டுமே முளைத்திருந்தன. அதிலும் வாட்ச் மேன், சர்வீஸ் மேன் என டவருக்காக வேலை செய்யும் சில தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர்.
"என்ன ஆர்க்கிடெக்ட்!! வீட்டோட அழகுல மயங்கி போய் நிக்கிறீக்களோ." ராக்கியின் குரல் அது.
"நிச்சயமா இது மயங்க வைக்கிற வீடு தான். அந்த காலத்து வீடு. நாயக்கர் காலத்து கட்டிடத்துக்குன்னு ஒரு தனி சிறப்பு இருக்கு. பெரிய பெரிய தூண். அழகான மேற்கூரன்ன அம்சமா இருக்கு. " என வீட்டை வர்ணித்துக் கொண்டே போக,
'சாதா செங்கலும் சிமெண்டும் போட்டு கட்டுன வீட்டையே இவ்ளோ வர்ணிக்கிறான்னா!! ஒரு வேளை வீடு அழகாத்தா இருக்கோ.' என ராக்கியும் அந்த வீட்டை பார்க்க, பாவம் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. கலை உணர்வானது இல்லை நம் ராக்கி பாய்க்கு.
‘எப்பயும் போல ஒரு வாசலுக்கு ரெண்டு வாசலு, ஏகப்பட்ட ஜன்னலு, ஹாலு, கூரை, தூணு, ரூம்னு எல்லா வீடு மாறியும் தான இருக்கு. இதுல என்னத்த சிறப்பா கண்டு மெய் மறந்து நிக்கிறான்..‘ என நினைத்தவன் கண்களுக்கு தூர இருந்த சில வீடுகள் தெரிய, அது பாழடைந்து பேய் வீடு போல் காட்சி தந்தது.
ராக்கி, "இந்த வீட்டுலலாம் ஆள் இல்லயா. பாக்கவே பயம் வர்ற மாதிரி இருக்கு. "
பாண்டி, "பேய் வீடுலாம் கிடையாது. யாரும் தங்கல. காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. "
"ஏன் "
"ஏன்னா இது டவருக்காரனுக்கு சொந்தமான இடம். சுத்தி பல கிலோ மீட்டர் விவசாய நிலத்த ஃப்ளாட் போட்டு வாங்கிட்டானுங்க. அதுக்கு எங்க பெரியப்பங்காரனும் உடைந்த. ஆரம்பத்துல இந்த இடத்துல கூடாரம் போட்டு நிறைய பேர் தங்கிருந்தாங்க. அப்ப கட்டுனது தான் அந்த வீடுங்க. அப்றம் எல்லாருமே காலி பண்ணிட்டு போய்டானுங்க.“
“அதத்தாய்யா ஏண்ணு கேக்குறேன். “
“அந்தத் தீ விபத்துக்கு அப்றம் இங்க ஏதோ அமானுஷ்யமா நடக்குதுன்னு பேசிக்கிறாங்க. சிலருக்கு மேலுக்கு முடியாம போறது. வயசானதுக பல டிக்கெட் வாங்கிட்டு போறது. மேச்சலுக்கு வர்ற பல வாயில்லா ஜீவனும் இறந்து போதுன்னு நிறைய நடக்குறதுனால. இடத்த அந்த கம்பெனிக்காரனுக்கே வித்திட்டு பிள்ள குட்டிங்களோட வெளி நாட்டுல செட்டில் ஆகிட்டானுங்க."
"வெளி நாட்டுலயா!! இந்தக் காணி நிலத்த வித்தா? "
" ஆமா. இந்த இடத்துல அப்படி என்ன இருக்குதுன்னு தெரியல. கோடிக்கு வில போகிருக்கு. " எனப் பாண்டி புலம்ப,
'இந்த ஊர்ல அப்படி எத்தன பேர் தான் விசித்திர மரணம் அடைஞ்சிருப்பாங்க. முதல்ல அத விசாரிக்கனும். ' என ராக்கி மனதிற்குள் குறித்துக் கொள்ள, தீஷித் அந்த டவரையே உற்றுப் பார்த்தபடி நின்றான்.
பாண்டியின் புலம்பல்கள் எதுவும் அவன் காதுகளைச் சென்றடைய வில்லை. ராக்கி பாண்டியிடம் அந்தத் தீ விபத்தையும் அதில் இறந்தவர்களை பற்றியும் கேட்டுக் கொண்டிருக்க, பாண்டி தனக்கு தெரிந்ததை கூறினான்.
"இப்படி டலர்ல திடீர்னு தீ பிடிக்குமா என்ன? இடி மின்னலால பாதிப்பு வராம பாதுகாப்பு செஞ்சிருப்பிங்களா! உங்களுக்கும் சென்னைல சொந்தம நாலு செல்ஃபோன் டவரு இருக்கிள்ல" எனத் தீஷித்தைப் பார்த்து கேட்க, அவனிடம் பதில் இல்லை.
" என்ன தெரியுதுன்னு இவ்ளோ உன்னிப்பா பாக்குறிங்க. " ராக்கி அவனின் தோளலத் தட்ட, ஏதோ மாய வலையில் இருந்து விடுபட்டு வந்தது போல் திடுக்கிட்டு விழித்தான்.
"எனி ப்ராப்ளம். "
"நத்திங்…" என இறுக்கமாக கூறிய தீஷித்தை ஏற இறங்க பார்த்தவன், பின் டவரையும் பார்த்து உற்று பார்க்க, அந்த டவரை சுற்றி வித்தியாசமான மரங்கள் வளர்ந்திருந்தது.
ராக்கி, “இங்க நிறைய மரம் இருக்கே அது என்ன மரம். “
“கருங்காலி மரம். “ இம்முறை பதில் தீஷித்திடம் இருந்து வந்தது. அவனை ராக்கி திரும்பி பார்க்க,
பாண்டி, “ இதெல்லாம் சுடர் தான் கொண்டு வந்து நட்டு வச்சா. இத நட விடாம பண்ண ஒரு கூட்டமே வந்தது. அவளும் வக்கீல் மேடமும் சேந்து கலெக்டர்ட்ட ஆர்டர் வாங்கி அந்த கம்பெனிக்காரெங் கூட சண்ட போட்டு வச்சாங்க. “
ராக்கி, “ ஏன்… இவ்ளோ போராட்டம் பண்ணி பர்டிக்குலரா இந்த மரத்த வளக்கணும்.“
“இந்த மரத்துக்கு கதிர்வீச்ச அப்சாப் பண்ணி வச்சிருக்கிற தன்மை இருக்குன்னு ஒரு ரிசர்ச் சொல்லுது. செல்ஃபோன் டவர்ஸ் வெளியிடுற அதிகமான ரேடியேஷன்ல இருந்து நமக்கு பாதுகாப்பு தரும். “ என்றவனின் குரலில் இருந்த மாற்றம் ராக்கியை யோசிக்க வைத்தது.
‘இவன யாருன்னே சரியா கணிக்க முடியலயே. ஒரு தேறம் நல்லாத்தா பேசுறான். சிரிக்க வைக்கிற மாதிரி எண்டர்டைமெண்ட்டா ஃபன்னா கேக்க சுவாரசியமா இருக்கு. ஆனா திடீர்னு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணுங்கிற மாறியும் மூஞ்சிய ஒரு மாதிரி வச்சிட்டு இருக்கான். அப்பப்ப வேற ஏதோ ஒரு உலகத்துக்கு போய்ட்டு போய்ட்டு வர்றான் போல. ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிறான். ‘ என ஆழ்ந்த யோசனையில் இருந்தவனைத் தாமரையன் குரல் கலைத்தது. கூடவே சாருவும் வந்தாள். ராக்கி இப்போது தான் தாமரையைப் பார்த்தான்.
பாவாடை தாவணியில் பாந்தமாக சாருவுடன் பேசி சிரித்துக் கொண்டு வர, அவளைப் பார்த்து ஆசையுடனும் காதலுடனும் கைகளை அசைத்தான் ராக்கி. அவளோ கண்டு கொள்ளாது முகம் திருப்பிக் கொண்டாள்.
“ ஐய்யையோ ஏன் என் ஒத்த தாமர தலய சிலுப்புது. செல்லம்… மாமா வ பாரும்மா.” என அவளின் முன் வந்து நிற்க,
"வந்தப்பா என்னைக் கண்டுக்கிட்டீங்களா! இல்லல்ல இப்ப நான் கண்டுக்க மாட்டேன்." என்பது போல் போலிக் கோபத்துடன் வீம்பு செய்ய, ராக்கி அவளின் பின்னாலேயே சென்று வம்பு பேசி சமாதானம் செய்ய என அந்த பொழுது இனிமையாக கழிந்தது.
கண்ணாயிரத்தின் வீடு.
தாமரையின் அறை.
நாற்காலியில் கால்களைத் தொங்க விட்டு அமர்ந்து பழக்கம் இல்லாத பைரவி. இரு கால்களையும் முழங்காலிட்டு மடக்கி சாய்ந்து கொண்டு அமர்ந்திருக்க, முகம் மட்டும் சோகத்தை தத்தெடுத்திருந்தது.
மறுமணமா! என்ற யோசனைதான் அதற்கு காரணம். நிச்சயம் மதுவை மறக்க முடியாது. அதே நேரம் அவனுடன் வாழவும் வழி கிடையாது. என்ன செய்வது என யோசித்தவள் தன் கைபேசிக்கு உயிர் கொடுக்க, அது அவளுக்கு வந்த குறுந்தகவல்களை வரிசைப்படுத்தி காட்டியது. வேகமாக தன் வாட்ஸ் ஆப்பைத் திறந்து பார்த்தாள்.
நன்கு அடித்து துவைத்து பல முறை நீரில் முக்கி எடுத்த வெள்ளை சட்டையின் வெண்மையை காட்டிலும், காலர் ஓரத்தில் இருக்கும் சிறிய கறையைத் தான் முதலில் கண்கள் தேடும். அதைத் தவறென்று கூற முடியாது. நம் மூளையின் டிசைன் அப்படி. வெள்ளை நிறத்தில் கருப்பு புள்ளி இருந்தால் அதில் தான் நம் கவனம் போகும். எதிலும் வித்தியாசமாக புலப்படும் ஒன்றை உற்று நோக்கும். அது போல் தான் இங்கும்..
வழக்கத்திற்கு மாறாக சைந்தவியிடம் இருந்து மெஸ்ஏஜ்கள் வந்திருந்தது. தீவரமாக மதுவிற்கும் பைரவிக்கும் இடையே பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் போது பைரவியைக் காயப்படுத்த எனச் சில மெஸ்ஏஜ்களை அனுப்பி வைப்பாள். இப்போதும் பைரவியின் மன நிம்மதியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்குடன் அனுப்பி இருந்தாள்.
"வேண்டாம். அத ஓப்பன் பண்ணாத பையூ. அப்றம் நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ. " என மூளை எச்சரித்தாலும், மனம் திறந்து பார்க்கச் சொன்னது. வலிகளைத் தாங்கும் இதயமே சொல்லும் போது திறந்து பார்க்காமல் இருந்தால் எப்படியென அதை டவுன்லோட் செய்து பார்த்தவள், ஃபோனை தூக்கி எறிந்து விட்டாள். கண்ணில் நீர் நிற்காது வடிந்தது.
அதில் இருந்தது மதுவின் புகைப்படம் என்று சொல்ல தேவையே இல்ல. அவன் அருகில் நிற்பது ரூபி. இருவருக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடந்தது என்பது போல் வேறு வேறு உடையில் இருவரும் ஒட்டிக் கொண்டு பல படங்களில் நிற்க, இருவரின் பெயர் தாங்கிய பத்திரிக்கை ஒன்றை அனுப்பியும் இருந்தாள் அவள்.
அதைப் பார்த்த நொடியே பைரவியின் உடல் பற்றி எறிவதை போல் உணர்ந்தாள். முகத்தை மடியில் பதைத்துக் கொண்டு அழ, அவளின் அலைபேசி இசைத்தது.
சாந்தியிடம் இருந்து அழைப்பு. அதை அட்டன் செய்து காதில் வைத்தவள் மீண்டும் ஃபோனை தூக்கி போட்டு உடைத்தே விட்டாள். சாந்தி கூறி செய்தி அப்படி.
"என்னாதது டம்மு டும்முன்னு சத்தம். " என்றபடி வந்த அரசி கூட பைரவியின் அழுகை கண்டு பயந்து விட்டார்.
"பைரவி என்னாச்சி. " என்ற சாரதாவைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் பைரவி. வெளியே தன்னை உறுதியாக காட்டிக் கொண்டாலும் மனம் அலை அடித்துச் செல்லும் கடற்கரை மணல் வீடு போல் சரிந்து விழுவதைத் தடுக்கவே முடியவில்லை. எப்பொழுதும் கவலைகள் இன்றி வளம் வரும் பைரவியின் கண்ணீர் யாரைத்தான் அசைக்காது. சாரதாவையும் அரசியையும் அசைத்தது.
என்ன பிரச்சனை என்று அவள் பகிராத போதும் இருவரும் அவளுக்கு ஆறுதலாக இருந்தனர். அழுது அழுது எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
கண் விழித்த நேரம், கையில் கூடையுடன் இருட்டில் வெளியே செல்ல தயாராக இருந்த சாருவிடம், "சாரு எங்க போற? இந்த நேரத்துல. " என்று கேட்டாள்.
"அவருக்குச் சாப்பாடு. இன்னைக்கு வீட்டுக்கு வர முடியாதுன்னு சொன்னாரு. அதா எடுத்திட்டு போறேன். நீயும் வர்றியா.. " என அழைக்க, சரி எனத் தலையசைத்து அவளுடன் புறப்பட்டு சென்றாள் பைரவி.
"சாரு இனியன் கூட நடந்த கல்யாணத்துக்கு முறையா டைவர்ஸ் வேணுமான்னு லாயர் கிட்ட கேட்டிருந்தேன். சட்டப்படி உனக்கும் பாண்டி அண்ணாக்கும் நடந்த கல்யாணத்த திருவிழா முடியவும் பதிவு பண்ணப் போறதா அரசிம்மா சொன்னாங்க. " என்ற தோழியைப் பார்த்து புன்னகைத்தாள் சாரு.
"சாரு… அது நீ பாண்டி அண்ணாவ. " எனத் தயங்கியபடி ஆரம்பிக்கும் போதே,
சாரு, " நான் முழு மனசோட தான் அவர ஏத்துக்கிட்டேன் பையூ. " என்றவள் இருவருக்குள்ளும் நடத்த அனைத்தையும் முழுமையாக கூறி முடித்தாள்.
"இவ்ளோ நடந்திருக்கு ஏன் எங்கிட்ட ஒன்னுமே சொல்ல. " எனக் கோபம் கொள்ள,
"நாம நம்ம பர்ஷ்னல் லைஃப்ப பகிர்ந்து கிட்டதே இல்லயே பையூ. காதல் தாம்பத்தியம் இத யார்க்கிட்டையும் சேர் பண்ண கூடாது. உனக்கும் சில சிக்ரெட்ஸ் இருக்கு. மது அண்ணாக்கும் உனக்கும் இடைல நடந்தத நீ யார்கிட்டேயும் சொல்லாத மாதிரி. எனக்கும் சில இருந்தது. இப்ப இல்ல. " என்றாள் புன்னகைத்தபடி,
கணத்த மௌனம் நிலவியது இருவருக்குள்ளும்.
"செக்கேண்ட் மேரேஜ்ங்கிற முடிவ எடுக்குறது ரொம்ப கஷ்டம்ல. " என்றவளைத் திரும்பி பார்த்தாள் சாரு.
"நாங்கூட உன்னக் கட்டாயப்படுத்திருக்கேன். ஃபஸ்ட் நடந்த கல்யாணத்துல இருந்து வெளில வந்து அடுத்த கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி. பட், அத ஏத்துக்கிற மனபக்குவங்கிறது. "
"நம்ம கிட்ட தான் இருக்கு பைரவி. எல்லாருக்கும் அவங்களோட முதல் கல்யாணம் சக்சஸ் புல்லா அமையுறது இல்ல. ஆயிரம் கனவு எக்கச்சக்க எதிர்பார்ப்புன்னு நிறைய இருக்கும் ரெண்டு பேருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் வாழவே ஆரம்பிக்கிறாங்க.
ஒருத்தர் கூட கடைசி வரைக்கும் வாழணும்னு முடிவெடுத்திட்டோங்கிறதுக்காக அவங்க செய்றத கடைசி வர மன்னிச்சிக்கிட்டே இருக்கணும்னு அர்த்தம் கிடையாது.
நினைச்ச மாதிரி அமையலன்னாலும் சகிச்சிக்க முடியாத அளவுக்கு உடலாலயும் மனசாலயும் டார்ச்சர அனுபவிக்கும் போது பிரிஞ்சி தான் ஆகணும்.
அதுக்காக நடந்த கசப்பான சம்பவங்கள நினைச்சிட்டு கடைசி வரையும் ஆம்பள துணை இல்லாம வாழ்றதுங்கிறது நடக்காத காரியம் பையூ. எந்த வயசானாலும் லைஃப் பார்ட்னர் இம்பார்டெண்ட். அது உடம்புக்காக இல்ல. மனசுக்காக. உடல் சார்ந்த உறவா இல்லாம மனசு சார்ந்து இருந்தா வாழ்க்கை சூப்பரா இருக்கும்.
இத எனக்கு புரிய வச்சதே நீ தான் பையூ. சுய மரியாத. அது எல்லா உயிருக்கும் இருக்க வேண்டிய ஒன்னு. அதுலயும் ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா இருக்கணும். அத எனக்கு புரிய வச்சதும் நீ தான். என்னோட மனசு மாறுனதும் உன்னால தான் பைரவி. உன்னோட தைரியமும், எது வந்தாலும் நான் பாத்துப்பேங்கிற துணிச்சதும் தான் என்ன பக்குவப்படுத்துச்சி. இப்பக் கூட உனக்குள்ள வேதனை இருக்கு. ஆனா நீ அதை வெளில சொல்லாம அதுக்கான தீர்வ உனக்குள்ள தேடிட்டு இருக்க பாரே. அந்த மனதிடம் எல்லார்க்கிட்டையும் கிடையாது.
நீயே அடிக்கடி சொல்லுவல்ல. இந்த வாழ்க்கை நமக்கானது. யாருக்காகவும் எதுக்காகவும் அத வாழாம இருக்க கூடாது. அத அனுபவிச்சி ரசிச்சி சந்தோஷமா வாழணும்னு. நாம நமக்காக வாழணும். நம்ம விருப்ப படி வாழணும். அப்பத்தா முழுமையான வாழ்க்க வாழ்ந்த ஃபீல் இருக்கும்ன்னு. நான் வாழணும்னா எனக்கு ஒரு துணை வேணும்.
மனச புரிஞ்சிட்டு நம்மல முழுசா ஏத்துக்கிற ஒரு லைஃப் பார்ட்னர் கிடைக்கிறது அதிஷ்டம் மட்டுமில்ல வரம். எனக்கு பாண்டியராஜன் ஒரு வரம். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பைரவி. " என்றவளின் முகமே சொல்லும் அவளுக்கான இடத்தில் வந்து சேர்ந்துவிட்டாள் என்று.
“எப்படியோ இனி சாருவின் வாழ்க்கை பாண்டியால் சிறந்தால் சரி” என நினைத்த பைரவிக்கும் சிந்தனை விதையைத் தூவிச் சென்றாள் சாரு.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..