அத்தியாயம்: 94
"நந்திதாக்கா தீஷ் எப்படி இருக்காரு. "
" நல்லா இருக்கான்டா. நீ பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்ல. " என்றாள் நந்திதா.
"அக்கா ப்ளீஸ், நீங்களாது எனக்கு உண்மைய சொல்லுங்க. அவருக்கு எப்படி இருக்கு. எங்கிட்ட பேசிட்டு இருக்கும் போது தான் ஆக்ஸிடென்ட் ஆச்சி. என்னால தான் தீஷ்திக்கு. " என அழுதவளைக் கண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்த மதுவிற்கு எரிச்சல் வந்தது.
காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து தீஷித்தின் நண்பர்களுக்கு மாற்றி மாற்றி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள் பைரவி. விடாது அழுகை வேறு. அவளின் அதீத பாசமும் அன்பும் மதுவை டென்ஷன்னேற்ற,
"நீ ஏன் மச்சி இவ்ளோ டென்ஷன் ஆகுற. தெரிஞ்ச ஒருத்தெ அதுலயும் அவ கூட நட்பா, அக்கறையோட பழகுன மனுஷனுக்கு விபத்துன்னா அமைதியா எப்படி இருக்கச் சொல்ற." என்று ராக்கி மதுவின் உக்கிர பார்வையைச் சரி செய்யும் பொருட்டு பேச,
"எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல ராக்கி. ஏந்தா இவ, கூட பழகுறவங்களுக்காக தன்னயும் வருத்தி என்னையும் படுத்தி எடுக்குறான்னு. இப்படி தான் சுடர் இறந்த போதும் பண்ணா. விடாம அழுக. அப்ப ப்ரெக்னன்ட்டா வேற இருந்தா. சொல்ல சொல்ல கேக்காம போய். ச்ச... " என்றவன் ஸ்டேரிங்கில் குத்தினான்.
"அடுத்து இவன். அவ நைட் சாப்பிடக்கூட இல்ல தெரியுமா. வெறும் வயத்தோட கொல பட்டினியா இப்பயும் பாரு ஃப்ரெஷ்ஷா அழுதுகிட்டே வாரா. அதான் சொல்றாங்கள்ல ஒன்னுமில்லன்னு. அதக் கேட்டுட்டு அந்த டேமையாது மூடக் கூடாது. எங்க இருந்து தான் தண்ணி வருமோ தெரியல. வடிஞ்சிட்டே இருக்கு." எனப் புலம்பியவனுக்கு மனைவியின் கண்ணீர் எப்பொழுதுமே பிடிக்காத ஒன்றாகத் தான் இருந்தது.
"ஆப்ரேஷனா! என்ன ஆப்ரேஷன்? எப்ப ஆப்ரேஷன்?" எனப் பின் சீட்டில் அமர்ந்திருந்து கொண்டு கத்தியவளை இருவரும் திரும்பி பார்த்தனர்.
"என்னாச்சி பைரவி. "
" அண்ணா தீஷித்துக்கு கால்ல ப்ராக்ஷராம். ஆப்ரேஷன் நடக்கப் போதாம். " என்று பைரவி அழுகையோடு சொல்ல,
"உயிருக்கு ஒன்னுமில்லன்னு நினைச்சி அவள சந்தோஷப்பட சொல்லு. " என்றான் மது. அவனை பைரவி முறைத்தாள்.
"100 கிலோமீட்டர் வேகத்துல பெரிய கண்டெய்னர் வந்து மோதிருக்கு. அடிச்சி தூக்கிருக்கு. அதுல இருந்து தப்பிச்சிருக்கான்னா அது அவனோட குட் டயம். அத நினைச்சி மனச அமைதி படுத்தி தயவு செய்து தூங்கச் சொல்லு அவள. " என்றான் மது.
"நீங்க ஏன் இவ்ளோ ஸ்லோவா கார ஓட்டுறீங்க. "
"ரோட்டோட ஸ்பீட் லிமிட்ல தான் நான் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். " எனச் சாலை விதிகளைப் பற்றி பேசிய கணவனைக் கண்களால் எரித்தவள்,
"அப்ப வேகமாக போக முடியாது. " என்க,
" வேகமாகத் தான் பைரவி நான் போய்க்கிட்டு இருக்கேன். "
"அண்ணா கார நிப்பாட்ட சொல்லுங்க. நான் பஸ்ல ஏறி போய்க்கிறேன். அதுல ஏறிருந்தா கூட அது என்னை சரியான நேரத்துக்கு இறக்கி விட்டிருக்கும். நிப்பாட்டுங்க. " எனக் கத்தியவளை ராக்கி தான் சமாதானம் செய்தான்.
"இது எர்லி மார்னிங் பையூ. நீ டென்ஷன் ஆகாத. கரெக்ட் டயத்துக்கு ஹாஸ்பிடல் போய்டலாம். தீஷித் அம்மா கூட இருந்ததா சொன்ன! அவங்களுக்கு எதுவும் அடி பட்டிருக்கா. "
"இல்ல ஹோட்டல்ல சாப்பாடு பார்ஷல் வாங்கிட்டு வர போயிருக்காரு. அபி ஆண்டி கார்ல இருந்திருக்காங்க. தீஷ் ரோட் கிராஸ் பண்ணிருக்காரு. நான் பேசாம இருந்திருந்தா கண்டிப்பா ஆக்ஸிடென்ட் நடந்திருக்காது. " எனச சொல்லி அழ, அவளின் அழுகையை நிப்பாட்ட வேண்டியே மது வேகமாக காரை ஓட்டினான்.
எத்தனை வேகமாக சென்றும் காலை எட்டு மணி ஆகிவிட்டது தீஷிதன் சேர்க்கப்பட்ட மருத்துவமனையை அடைய. மூவரும் மருத்துவ மனைக்குள் நுழைந்து விசாரித்து அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்ற போது முதலில் கண்டது அபிராமியின் சக்கர நாற்காலியைத் தான். பக்கத்தில் கற்பகம் கலக்கத்துடன் இருக்க, தீஷித்தின் தங்கை அக்ஷரா அழுது கொண்டே நின்றிருந்தாள்.
பைரவி வேகமாக சென்று அபிராமியின் முன் மண்டியிட்டு, "ஆன்டி. " என்க, அவர் பைரவியை அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தார்.
"ஆப்ரேஷன் நடந்திட்டு இருக்கு. உயிருக்கு ஒன்னுமில்ல. ஆனா. " எனக் கருணாகரன் இழுக்க,
"என்ன ஆனா. அவருக்கு எதுவும் ஆகாது. அதா ஆப்ரேஷன் நடக்குதில்ல. கண்டிப்பா அவரு எழுந்து நடப்பாரு. ரொம்ப வேகமா ரெக்கவர் ஆகிடுவாரு. எனக்கு நம்பிக்க இருக்கு. எழுந்து நடந்து வந்து நமக்கிட்ட பேசுவாரு." என நம்பிக்கையூட்டும் விதமாக பைரவி பேச, இருண்டு கிடந்த அத்தனை பேர் முகத்திலும் ஒளி கூடுவது தெரிந்தது.
பைரவியின் இந்த பாசிட்டிவ் வசனங்களின் மீது மதுவிற்கு எப்பொழுதும் ஒரு பிரியம் உண்டு. ஸ்போர்ட் அகாடமி ஆரம்பிக்கும் போதும் அதன் பின்னும் எழும் பிரச்சனைகளின் போதும் அவனைச் சேர்ந்த போக விடாது, " எல்லாத்தையும் உங்களால சமாளிக்க முடியும் மாமா. யூ ஆர் கிரேட். ம்… கமான் மாமா. கமான் மாமா. " என சியர் கேர்ள்ஸ் போல் அவனை உற்சாகப்படுத்துக் கொண்டே இருப்பாள்.
நாம் சோர்வுரும் போது நமக்கான நம்பிக்கையெனும் ஊன்று கோலைத் தர கடவுள் நேரடியாக இறங்கி வரவேண்டிய அவசியம் இல்ல. அவரின் நகலாய் சிலரைத் தேவைப்படும் போது அனுப்பி வைப்பார்.
பைரவியின் இந்தச் சேவை மதுவிற்கு பிடித்திருந்தது. சில நொடிகளில் மனத்தில் மாயங்களைத் தந்து விட்டாள் என நினைத்தவனின் பார்வை வளாகத்தைப் பார்வையிட, அங்கு ஒரு ஆள் கண்களுக்கு தெரிந்தான். திருதிருவென முழித்தபடி இருந்த அவன் செவிலியர் உடையில் இருந்தது மதுவிற்கு பெருத்த சந்தேகத்தை தர, ராக்கியை அழைத்துக்கொண்டு மது அவனைப் பின் தொடர்ந்தான்.
"யாரு மச்சான் அது? "
"நம்மல மாறி ஒரு செக்யூரிட்டி ஏஜெண்ட்ல வேலை பாக்குற ப்வுன்சர். கிட்டத்தட்ட பணக்கார முதலைங்க தர்ற காசுக்கு வேல செய்ற கூலிப் பட மாதிரி தான் சில ஏஜென்ஸி இருந்திட்டு வருது."
"சரி. அவன எதுக்கு நாம துரத்தணும். "
"வாட்பாய் கெட்டப்ல என்ன செய்ய வந்தான்னு கண்டு பிடிக்க. அவெ ஐசீயூ வார்டுல இருந்து வெளில வந்தத நீ கவனிக்கலயா. "
"இல்லயே மச்சி. "
"நீ போய் ஐசீயூக்குள்ள யார் யாருக்கு ட்ரீட்மெண்ட் போய்க்கிட்டு இருக்குன்னு விசாரி. நான் வேற யாராது இந்த மாதிரி மாறு வேசத்துல இருக்காங்களான்னு பாக்குறேன்." என்றவனின் கண்கள் ஸ்கேனர் போல் வேலை செய்ய, அந்த பவுன்சர் எந்த ஏஜென்சியை சேர்ந்தவன் என்பதை கண்டு விட்டான். கூடவே அவன் தனியாக வரவில்லை நான்கு பவுன்சர்களுடன் வந்துள்ளது தெரியக் வந்தது.
" மச்சான் உள்ள தீஷித் உட்பட ரெண்டு வயசானவங்க இருக்காங்க. படிக்கட்டுல இருந்து தவறி விழுந்த ஒரு பிஞ்சி குழந்த. ஒரு மிடில் ஏஜ் மேன் சுகர் காரணமா கால எடுத்திட்டாங்களாம். ஒரு டீனேஜ் பாய் பைக்ல இருந்து தவறி கீழே விழுந்திட்டானாம். இவங்க மட்டும் தான். இதுல தீஷித்த தவிர யாருமே பெரிய ஆளுங்க கிடையாது. "
"அப்போ தீஷித்த போட வந்திருக்கலாம். "
"என்னடா சொல்ற. "
"ரோட்ல ஓரமா நின்னு பேசிட்டு இருந்தவன தான் காண்டெய்னர் அடிச்சி தூக்கிருக்கு. திருவிழால கூட சிலர் அவன்ட்ட வம்பு வளக்குற மாதிரி தான் நடந்துக்கிட்டாங்க. பாண்டியால தான் சண்ட பெருசாகல. இப்பயும் ஸ்கெட்ச் போட்டிருக்குன்னா அது தீஷித்துக்கு தான். "
"யாரா இருக்கும? ஏன்?"
"இவனுங்க எந்த ஏஜென்ஸி ன்னு எனக்கு தெரியும். நான் கால் பண்ணி ஏன்னு தெரிஞ்சிக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல ஆப்ரேஷன் முடிஞ்சி ஐசீயூக்கு அவன மாத்திடுவாங்க. ஐசீயூக்குள்ள இருக்குற டாக்டர்ஸ்ஸ அலட் பண்ணி நீ அவெ பக்கத்தில இருந்து பத்திரமா பாத்துக்க. சந்தேகப்படுற மாதிரி யாரா இருந்தாலும் தீஷித்த பாக்க அலோ பண்ணாத. " என்று விட்டு சென்றான்.
"தீஷித்த பிடிக்காதாம். ஆனா அவன பாதுகாக்க என்னை காவலுக்கு நிப்பாட்டி வப்பானாம். ஹிம்… இவெ பொண்டாட்டிய மட்டுமில்ல இவனையும் புரிஞ்சிக்கவே முடியலயே. ஜாடிக்கு ஏத்த மூடிங்க."
மதுவின் கடமை உணர்வை எப்படி பாராட்டுவது என்று தெரியாது, ராக்கி அகராதியில் வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தான்.
ராக்கி சொன்னது போல் மதுவிற்கு தீஷித்தைப் பிடிக்காது தான். அது பைரவியை நெருங்க நினைக்கும் தீஷித்தை. ஒரு சக்சஸ் ஃபுல் பிஸ்னஸ் மேனாக அவனின் திறமையைக் கண்டு வியக்காத நாளே இல்லை. மதுவைப் பொருத்தவரை வெற்றிய எட்டிப் பிடிக்க போராடும் அனைவரையும் அவன் மதிப்பான். கூடவே குருவி கூடு போல் மகிழ்வுடன் இருக்கும் குடும்பத்தின் மீது மதிப்புண்டு.
கண்ணாயிரத்திற்கு உதவ முன்வந்தது தாமரையை காப்பாற்றியது எல்லாம் அதில் அடக்கம். இப்போது தீஷித்தைக் காக்க முயல்கிறான். யாரிடம் இருந்து?
மது வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான் அந்த ஏஜென்சியிடம், யார் தீஷித்திற்கு ஸ்கெட்ச் போட்டது எனக் கேட்டு. முதலில் மறுத்தவர்களை தன் வழிக்கு கொண்டு வந்தான் மது.. அவர்கள் தந்த பதிலில் அதிர்ச்சி அடைய, ராக்கியிடம் சென்றான் மது.
"என்னடா யாரு பவுன்சர்ஸ்ஸ இறக்குறனதாம். "
"சிராஜ். ஒன்னில்ல ரெண்டில்ல சென்னை இருக்குற அத்தன ரவுடிங்க, ப்ளாக் கேட் ஏஜென்சிங்கன்னு ஒன்னு விடாம எல்லாத்துக்கும் தீஷித் ஃபோட்டோ போயிருக்கு. அவனோட தலைக்கி கோடிக்கணக்குன விலை பேசிருக்கான். "
"ஏன் இந்த கொல வெறி. தொழில் பகை. "
"இருக்காது. அவங்களுக்குள்ள வேற எதுவோ இருக்கு. " என்றவன் மித்ரனிடம் சிராஜ் தீஷித் பகை பற்றி கேட்க.
"சமீப காலமா எங்க கம்பெனில சில விநோதமானது விசயங்கள் நடக்கத்தா செய்து. புது புது பிரிச்சனைகள் முளைச்சாலும் எல்லாத்துக்கும் சிராஜ் தான் காரணம்னு எப்படி சொல்லிட முடியும். " என எதிர் கேள்வி கேட்டவனை எச்சரித்து விட்டு சென்றான் மது.
ஒரு வாரம் ஓடியது.
பைரவி இப்படி ஒரு தனிமையை இதுவரை உணர்ந்தது இல்ல. அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதும் யாராவது ஒருவரையாவது உடன் வைத்துக் கொண்டு உற்சாகமாக வளம் வருபவளுக்கு தனிமை மிகவும் கொடுமையாக இருக்கிறது.
இந்த ஒரு வாரமும் சாரு இல்லை. ராக்கி ஊரில் இல்ல. சுடர் கேஸ்ஸை விசாரிக்கிறேன் என்ற பெயரில் சுற்றிக் கொண்டு இருக்கிறான். மது... இந்த ஒரு வாரமும் அவன் மனையாளிடம் பேச விதவிதமாக முயன்று தான் வருகிறான். ஃபோன் செய்து அவளின் நலன் விசாரிப்பது தொடங்கி தினமும் அவளைக் காண காவல் நிலையம் வந்து நின்றான்.
"என்னோட வீட்டு சாவிய யாரோ திருடீட்டு போய்ட்டாங்க. கொஞ்சம் கண்டுபிடிச்சி தந்தா நல்லா இருக்கும். " என உப்பு பெறாத அனைத்திற்கும் காவலாளி பைரவியின் முன் வந்து நின்று அவளை டென்ஷன் ஏற்றி விட்டு தான் செல்வான்.
அவள் தான் மதுவைத் தவிர்க்க முயல்கிறாள். காரணம் தீஷித். அவனை நினைத்து நினைத்தே கவலையில் ஆழ்ந்துள்ளாள். சாரதா இல்லாத ஹோமிற்கு செல்ல பிடிக்க வில்லை. எனவே வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து வருகிறாள்.
"என்னடி மூஞ்சியே சரியில்ல. அந்த தம்பிய போய் பாத்தியா. " என்றார் சாந்தி. தீஷித்தின் நலன் பற்றி கேட்க,
" நல்லா இருக்காரும்மா. பேசிட்டு தான் வந்தேன். " என்றவள் குரலில் சத்தில்லை.
"டாக்டர் என்ன சொன்னாரு. எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம். "
"கால் செட்டாகணும்னா ஒன் மன்த் பெட் ரெஸ்ட் எடுத்து தான் ஆகணுமாம். அவரு தீஷித்த சந்திராம்மா ஹாஸ்பிட்டலுக்கு மாத்திட்டாரு. "
"ஏனாம். "
" எதுக்குன்னு எங்கிட்ட சொல்ல. நீங்க எங்கம்மா கிளம்பீட்டு இருக்க. "
" பக்கத்து வீட்டு பையனுக்கு பொண்ணு பாக்க போறோம். என்னையும் கூப்பிட்டாங்க. சரி சும்மாத்தான இருக்கோம்னு கிளம்பிட்டேன். பத்து மணிக்குள்ள வந்திடுவேன். "
"சரி. பாத்து போய்ட்டு வாங்க. ம்மா ஒரு காபி கிடைக்குமா. தல வலிக்கிது. " எனத் தலையில் கை வைத்தபடி அமர, சாந்தி மகளின் அருகில் சென்று அமர்ந்து தலையை இதமாய் பிடித்து விட்டார்.
" வேலை அதிகமா பைரவிம்மா. "
"இல்லம்மா. " என்றவளுக்கு தீஷித்தை பார்க்க சென்ற போது கற்பகம் பேசியது நினைவிற்கு வந்தது.
"இனி இங்கல்லாம் வந்து பாக்க வராத. உங்கூட பேசிட்டே நடந்ததுனால தான் தம்பிக்கி இப்படி ஆகிடுச்சி. என்னைக்கி தம்பிக்கும் உனக்கும் கல்யாண பேச்சி வந்ததோ அன்னைல இருந்த வீட்டுல நடக்குறது எல்லாமே கெட்டது தான். என்ன ராசியோ. இந்த ராசி தான் உன்னோட மொத கல்யாணத்த நிலைக்க விடாம பண்ணிடுச்சி போல. எங்க கிரகம். அது எங்க தம்பிய பிடிச்சி ஆட்டுது. என்னாகப் போதோ. " எனப் புலம்ப,
கண்களில் கலக்கத்துடன் பார்க்க வந்த தீஷித்தைப் பார்க்காது திரும்பி செல்ல முயன்றவளை அக்ஷரா தடுத்தாள். அத்தோடு கற்பகத்தையும் திட்டத் தொடங்கினாள். இருவரும் கன்னடத்தில் பேசிக் கொண்டது பைரவிக்கு புரியவில்லை என்றாலும். அக்ஷரா தனக்கு ஆதரவாக பேசி கற்பகத்துடன் வாதம் செய்ய, பைரவி கவலையுடன் தீஷித்தை பார்க்காது திரும்பி விட்டாள்.
அவளின் மனம் 'என்னால் தான் தீஷித்கு இந்த நிலை. ' எனக் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தது. கற்பகம் சொன்ன ராசி வேறு அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஜெயாவும் இப்படித்தான் பைரவியை எதையாவது சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். ஆறுதல் என்பது கணவனிடமும் கிடைக்காது நாத்தனாரிடமும் கிடைக்காது. ஆனா அக்ஷராவின் ஆதரவான பேச்சி மனதிற்கு இதமாய் இருந்தது.
தாய் தந்த காபியை பருகியவளுக்கு தீஷித்திடம் இருந்து அழைப்பு வந்தது.
"டாம்… ஸாரி… இப்பதா அக்ஷரா சொன்னா. ஆன்டி பேசுனதுக்கு நான் உங்கிட்ட ஸாரி கேட்டுக்கிறேன். "
"ஸாரிலாம் தேவையில்ல. அவங்க பேச்சில உங்க மேல இருக்குற அக்கற தான் தெரிஞ்சது. நான் தப்பா எடுத்துக்கல. "
"அப்பறம் ஏன் என்னைப் பார்க்காமலேயே திரும்பி போய்ட்ட. "
"கொஞ்சம் வேல இருந்தது. "
"என்னை வந்து பாக்குறத விடவா. " என்க, அந்தப் பக்கம் பேரமைதி நிழவியது.
"ஹலோ... டாம். "
" தீஷ் நான் உங்களுக்கு நம்பிக்க குடுக்க விரும்பல. "
" ஐ நோ. உன்னோட மனசுல உன்னோட ஹஸ்பெண்ட்ட தவிர யாருக்கும் இடம் இல்லன்னு. லீவ் இட். நீ ஏதோ சொன்னியே ஆக்ஸிடென்ட்டுக்கு முன்னாடி. அந்த அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட்டோ ஐடி கிடைச்சிடுச்சின்னு. அத எனக்கு சென்ட் பண்ணு. "
"வேண்டாம் தீஷ். நீங்க முதல்ல ரெக்கவர் ஆகி வாங்க. அப்றமா பாத்துக்கலாம். " என்றவளை வற்புறுத்தி வாங்கிக் கொண்டார் தீஷித்.
இவனுக்கு அதுல என்ன இவ்ளோ அக்கர.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..