அத்தியாயம்: 11
“இந்தக் காய எதுக்கு
எடுத்து கீழ போடுறீங்க?” என்றாள் ஆர்த்தி.
“கால் கிலோக்கும் கூட
இருக்கும்மா இது.” எனக் கூறி கடைக்காரர் எடை போட,
“அதுனால என்ன? சேர்த்து
போடுங்க.” என்று கத்திரிக்காயை வாங்கித் தன் கூடையில் போட்டாள்.
"அவ்ளோ தானா!
இல்ல இன்னும் வாங்கணுமா?" என்ற தர்மாவிற்கு,
"அது… இப்போதைக்கு
இது போதும். வேணும்னா அடுத்து சந்தை போடுற நாள்ல வாங்கிப்போம்." என்றவளைக் குறுநகையுடன்
கண்டான் தர்மா.
“எவ்ளோண்ணா?” என்றபடி
பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் தாள்களை எடுக்க, கடைக்காரரும் ஒரு தொகையைக் கூறினார்.
தர்மா அதைக் கடைக்காரரிடம்
கொடுக்கும் முன், பட்டென வாங்கியவள், ஒருசில தாள்களை மட்டும் வியாபாரியிடம் கொடுத்தாள்.
"இது போதும் இந்தக்
காய்க்கு." என்றவளை,
“எம்மா அரைக்கிலோ காய
நிறுத்து வாங்கிட்டு கால் கிலோக்கு காசை நீட்டுற!” என்று அதிர்ந்து ஏறிட்டார் அவர்.
“நல்ல காயா இருந்து,
நிறுவையும் சரியா இருந்திருந்தா நானே கூடக் காசு போட்டு கொடுத்திருப்பேன். காயெல்லாம்
சொத்த. கன்னிப்போய் நீர் விட்டிருக்கு. வாங்கிட்டு போனா ஒரு நாள் கூடத் தாங்காது. நாளைக்கே
அழுகிடும்.” என்று எக்கச்சக்கக் குறைகளைச் சொல்லிச் சண்டை போட்டவள்,
"கொத்தமல்லி இல்லையா?"
என்க, அவரும் இவளை ஒரு பார்வை பார்த்தபடி கருவேப்பில்லையுடன் சிறிது மல்லி இழைகளையும்
நீட்டினார்.
"இவ்ளோ தானா!
இன்னும் ஒரு செண்டு கொடுங்க." என்றவள் அடித்து அதட்டிப் பேசி, வாங்கி விட்டே இடத்தைக்
காலி செய்தாள்.
கூடையில் இருந்தவற்றை
வைத்து எத்தனை நாள்களுக்கு, என்னென்ன சமைக்க முடியும் என்று திட்டமிட்டுக் கொண்டே நடந்தாள்
ஆர்த்தி.
"இதுக்கு நீங்க
சூப்பர் மார்கெட்டுலயே வாங்கிருக்கலாம்." என்றபடி அவளிடம் இருந்த கூடையை வாங்கிக்
கொண்டான் தர்மா.
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
என்றன அவளின் புருவங்கள் சுருங்க.
கூடையில் இருந்து,
வாங்கிய கேரட்டை வாயினுள் போட்டுச் சுவைத்தபடி நடந்தவள், அவனுக்கும் 'வேண்டுமா?' என்பது
போல் ஒரு கேரட்டை நீட்ட,
அதை வாங்கிக் கடித்தவன்,
"நல்லா இல்லன்னு நீங்க தானே கடைக்காரர்கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தீங்க. அதான்
சொன்னேன்." என்க,
"சூப்பர் மார்கெட்டை
விட இங்க நல்லதாத்தான் இருக்கு."
"அப்புறம் ஏங்க
அவர்கிட்ட சண்டை போட்டீங்க? பாவம் அவரு. பேரம் பேசுறது தப்பில்லையா?"
"தப்பில்ல தப்பில்ல...
அப்படி போட்டாத் தான் கருவேப்பிலை மல்லி இலவசமாத் தருவான்."
"சூப்பர் மார்கெட்காரன்
தரமாட்டான்." என்றான் அவளைக் குறுநகையுடன் பார்த்தபடி,
"ம்... தரமாட்டான்.
அதையும் காசு கொடுத்து தான் வாங்கணும்னு சொல்வான். அத்தோட தராசுல காட்டுற அளவை விட
ஒரு மில்லி கிராம் கூட அதிகமாக எடுத்துப் போட மாட்டான். சண்டை போட்டாலும் காய்கறிங்க
மேல கை வைக்க விட மாட்டான். ஆனா அண்ணாச்சி கடை அப்படி கிடையாது. நமக்கு அள்ளி அள்ளி
போடுவாரு. சண்டை போட்டாலும் தருவாரு." என்று அவனுடன் கதை அளந்தபடி நடக்க, இருவரும்
கடை கடையாக அலைந்து வாங்கியப் பொருள்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அவசரத் தேவையென்றால்
எங்கு ஜாமான்கள் வாங்க வேண்டும் என்றும், தங்களின் குடியிருப்பைச் சுற்றி உள்ள பாதைகளையும்
ஆர்த்திக்கு விளக்கிக் கொண்டே வந்தான் தர்மா.
அவனிடம் பைக் இருந்த
போதும் அதை எடுக்காது நடந்தே சென்றனர் காய்கறி கடைக்கு.
காரணம், ஆர்த்தி அவனின்
தோளைத் தொட்டு ஏறத் தயங்கி,
"பக்கத்துலயா!
தூரமா?" என்று வினா எழுப்ப, அவளின் சங்கடம் புரிந்து நடத்தியே அழைத்துச் சென்றான்.
அந்தப் பொன் கதிர்கள்
மின்னும் மாலை நேரத்தில் நடைபயின்றுக் கொண்டிருந்தனர் இருவரும்.
அதில் ஆர்த்திக்குத்
தான் அத்தனை மகிழ்ச்சி. யாருமற்ற சாலையில் பூக்களும் இலைகளும் உதிர்ந்துக் கிடக்கும்
சாலையில் கை வீசி நடந்துக் கொண்டிருக்கும் தருணத்தை ரசித்தபடி அவள் இருக்க, தர்மா,
"நாளைல இருந்து
நான் வேலைக்கு போய்டுவேன்." என்றதும் முகம் வாடி விட்டது அவளுக்கு.
"ம்..."
என்று தலையசைத்தாள் சற்று சோகமாக.
"காலைல 9 மணிக்கு
போனா நைட் ஆகும் திரும்பி வர. தனியா சமாளிச்சுப்பீங்களா?"
"ம்..."
அதற்கும் ம் தான் பதில்.
"எதுனாலும் எனக்குத்
தயங்காம கால் பண்ணுங்க." என்றவன் தன் ஃபோனில் இருந்து அவளின் ஃபோனிற்கு அழைத்தான்.
"நம்பர்... சேவ்
பண்ணிக்கோங்க. முடிஞ்சா மனப்பாடம் கூடப் பண்ணிக்கோங்க." என்றதும் மெல்லிய புன்னகை
விரிந்தது ஆர்த்திக்கு. வேகமாக அந்த எண்ணைத் தன் மூளைக்குள் கொண்டுச் சென்றுப் பதிந்து
வைத்துக் கொண்டாள்.
"மேரி எப்பவும்
வீட்டுல தான் இருப்பாங்க. சாயங்காலம் நாலு மணிக்கு மேல ஹர்ஷிதா இருப்பா. கூடவே சுலேகாவோட
மாமியாரும் இருப்பாங்க. நல்ல டைப். அவங்க பொண்ணு வீட்டுக்குப் போயிருக்காங்க. நாளைக்கு
வந்திடுவாங்க. உங்களை நான் கூட்டிட்டு வந்தது அவங்களுக்கு இன்னும் தெரியாது. தெரிஞ்சிருந்தா
முதல் என்ட்ரி நம்ம வீட்டுல தான்." என்றவன் நாக்கை கடித்துக் கொண்டான்.
நம் வீடு என்று அவளும்
அவனும் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டதில்.
'எப்பொழுதிருந்து அவளைத்
தன்னுடன் இணைத்தாய்..?' என்று மனத்திடம் கேட்டபடி அவன் நடக்க,
"அப்ப எனக்குப்
பொழுது போகிடும்ல." என்றாள் ஆர்த்தி. பேசியபடி வந்து சேர்ந்த போது வீடு விநோதமாக
மாறி இருந்தது.
எல்லாம் நிலவனின் ஏற்பாடு
தான். வீட்டு வாயிலை அலங்கரித்து, தர்மேந்திரனையும் ஆர்த்தியையும் தம்பதியர் சகிதமாக
வரவேற்றான்.
பாவம் ஏற்கனவே குழம்பியிருந்த
மனத்துடன் இருந்தவனுக்கு அதுவும் சங்கடமாகிப் போனது.
ஏனெனில் நிலவனுக்கும்,
சுலேகாவிற்கும் தியாவைப் பற்றித் தெரியும்.
வார நாள்களில் அவனுக்கென
இருக்கும் ஒரே ஒரு விடுமுறை நாளிலும், குடியிருப்பிற்கு வந்து அழைத்துச் சென்று விடுவாள்.
அவன் காதலியைப் பற்றி
அறிந்தவர்களிடம் ஆர்த்தியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி, திருமணம் நடந்த மறு நாளே கூறி
விட்டான். அவர்களுக்கு ஆர்த்தியைப் பார்க்காத போதே பரிவானது உண்டாகி விட்டது.
தர்மாவின் ஆறு மாதத்தில்
விவாகரத்து வாங்கிப் பிரிந்துச் செல்லும் திட்டத்தைப் பற்றித் தெரிந்தும் இப்படியான
வரவேற்பு ஒவ்வவில்லை அவனுக்கு.
அதே நேரம்...
பால் காய்ச்சி, டம்ளரில்
ஊற்றி, அதை அவர்களின் நலன் விரும்பிகளுக்கு மகிழ்வுடன் கொடுத்த ஆர்த்தியையும், புதுப்
பொலிவுடன் காணப்படும் தன் குடியிருப்பையும் காணும் போது புதுமனை புகுவிழா போல் ஒரு
வித பரவசம் இருந்தது தர்மாவிற்கு.
மின் அடுப்பு இருந்த
இடத்தில் கேஸ் ஸ்டவ் பண்டமாற்று முறையில் மாற்றப்பட்டிருந்தது. படுக்கை அறையில் நிலைக்
கண்ணாடியுடன் கூடிய சிறிய மேஜையும், மெத்தையும் புதிதாய் முளைத்திருந்தது.
சில்லேட்டு வடிவ டீவி
ஒன்று ஹாலின் சுவற்றில் பூத்திருக்க, அதற்கு இணைப்பு கொடுப்பதுப் பற்றி நிலவனுடன் தர்மா
பேசிக் கொண்டிருந்தான்.
காலை எட்டு மணிக்கு
ப்ளாண்ட்டின் பேருந்து வரும். மாலை ஆறு மணி வரை வேலை இருக்கும். சில நேரங்களில் இரவு
பத்து மணி வரை கூட கண்ட்ரோல் ரூமில் தான் இருப்பான்.
பாதுகாப்பு பிரிவில்
இருப்பதால் அவனின் பணி நேரத்தைச் சரியாக கணிக்க முடியாது. விடுமுறையும் அளவாகவே இருக்கும்.
தேவையில்லாது விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. ஏனெனில் அவனின் பணி, மக்களின் உயிர்
சம்மந்தப்பட்டது.
ஒரு அணு உலையில், அணுவின்
சக்தி ஆற்றலாக மாற்றப்படுகிறது. அதின் மூலக்கரு யூரேனியம் அல்லது புளூட்டோனியம்.
அணுக்கள் சிதைவடையும்
போது மிகுந்த வெப்ப ஆற்றல் உண்டாகிறது.
இந்த வெப்பம், நீரைக்
கொதி நிலைக்கு கொண்டு செல்கிறது. எழும் நீராவி டர்பைன் எனப்படும் இயந்திரத்தைச் சுழற்றுகிறது.
அந்த டர்பைன் மின் உற்பத்தி கருவியுடன் இணைக்கப்பட்டிருப்பதால், மின்சாரம் உருவாகிறது.
அணுக்களின் செயல்முறையைக்
கட்டுப்படுத்த, கட்டுப்பாட்டு கம்பிகள் (Control rods) உள்நுழைத்து அணு சிதைவின் வேகத்தைச்
சமநிலைப்படுத்துகிறார்கள்.
அதிக வெப்பமடையும்
போது, தடுக்க குளிரூட்டும் திரவங்கள் (Coolants) தொடர்ந்து சுழல்கின்றன.
இது மிகவும் ஆபத்தான
செயல்முறையாகும். அணு சிதையும் போது வெப்பம் மற்றுமல்ல ஆபத்தான கதிர்வீச்சுக்களும்
வெளிவரும்.
தர்மாவின் பணி, கதிர்வீச்சு
அளவு, வெப்பம் மற்றும் அழுத்தம் போன்றவற்றைக் கண்காணித்து குறித்து அறிக்கை எழுதுவது.
பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்று சரிபார்ப்பது. ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை
குறித்து விழிப்புணர்வு செய்வது.
சிறு கோளாறுகளும் உடனடியாக
கவனிக்கப்படவில்லையெனில் அது ரேடியேஷனைக் காற்றில் பரவ விட்டு இன்றைய தலைமுறை மக்களை
மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் ஆபத்தாய் முடியும் என்பதை உணர்ந்து பொறுப்புடன்
செய்யப்பட வேண்டிய பணி தர்மாவுடையது.
ஆதலால் வீடு என்பது
அவனுக்குத் தங்கி, தூங்கி, குளிக்க உதவும் இடம்.
இயந்திரங்களுடன் இருக்கும்
அவனுக்கு உற்ற தோழனும் இயந்திரமாகவே இருந்தது.
அவன், அமுதாவின் கைமணத்தில்
விருந்துக்கும், குழலியின் வாய்ப் பேச்சின் இனிமைக்கும், கல்லூரிக்கு என்று வீட்டை
விட்டு வெளியேறிய சமயத்திலிருந்தே ஏங்கத் தொடங்கியிருந்தான்.
வீட்டைத் தொலைத்து
விட்டதாக நினைத்தவனுக்கு கிடைத்த விட்ட உணர்வைத் தந்தது ஆர்த்தி.
"எதுக்கு அண்ணா
இதெல்லாம்?" என்றாள் ஆர்த்தி.
ஏனெனில் அவள் தான்
செய்து வைத்த அலங்காரங்களைக் கண்டதும் சுருங்கிய தர்மாவின் புருவங்களைக் கண்டு விட்டாளே.
ஆதலால் ஏன் இந்த வீண் அலப்பறை என்று கேட்க,
"உன்னைக் கூட்டிட்டு
வர்றேன்னு சொன்னப்பவே, இதைச் செஞ்சி வைச்சிருபேன்ம்மா. ஆனா இவன் கூட இருந்த ரூம்மெட்ஸ்,
வீட்டை கார்ப்பரேஷன் ஹாஸ்டல் மாதிரி மாத்தி வைச்சிருக்குறதை பார்த்ததும் ஓடிட்டேன்."
என்றான் நிலவன். அவர்களுக்குப் பதார்த்தங்களைத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்து நீட்டிய
ஆர்த்தி,
"நீங்க ஓடலாம்.
ஆனா உரிமைப்பட்டவங்க நான் ஓட முடியாது. பொறுப்பை ஏத்துக்கிட்டு தான் ஆகவேண்டும்."
என நிலவனுக்குக் கேலியான பதில் ஒன்றைத் தந்தவள், அதிகமாகப் பேசிவிட்டத்தை எண்ணி நாக்கைக்
கடித்துக் கொண்டாள்.
தர்மாவின் முகத்தைக்
கூடப் பார்க்காது சமையலறைக்குள் சென்றும் விட்டாள்.
'நீ உரிமைப் பட்டவளா?'
என்று கேட்டு விடுவானோ என்ற பயத்தில்.
இரவு உணவு அவளின் கை
மணத்தில் என்றதால் நிலவன் குடும்பமும், சுலேகாவின் குடும்பமும் அங்கு கூடியிருந்தது.
குருமாவை குக்கரில்
வைத்தவள், சப்பாத்திக்கு மாவைப் பிசையத் தொடங்கினாள்.
குருமா தயாரானதும்,
"இதை டேஸ்ட் பாருங்கக்கா." என்று ஆரோனுடன் விளையாடிக் கொண்டிருந்த சுலேகாவிடம்
நீட்ட,
"அதை டேஸ்ட் பண்ணாத
மச்சி. நம்மள சோதனைக் கூடத்து எலியா மாத்தப் போறாளாம்! நியூஸ் வந்தது." என்று
மேரி சுலேகாவைத் தடுக்க,
"நிஜமா... எங்களப்
பார்த்தா எலி மாதிரியா இருக்கு?” என்று சுலேகா கேட்கவும், வேகமாக இல்லை என்பது போல்
தலையசைத்தவள்,
“எந்த ஊர்லயும் எலி
ஜீன்ஸ் குர்த்தி போடாது. அதுனால நீங்க எலி இல்ல.” என்று சொல்லி சிரிக்க,
“அது… அந்தப் பயம்
இருக்கணும். எது சமைச்சாலும் அதை உன் புருஷன் கிட்ட கொடுத்து டெஸ்டு பண்ணு. எங்க பக்கம்
வரக்கூடாது." என்று சுலேகாவும் மிரட்ட, ஆர்த்தி சட்டென கரண்டியுடன் சமையலறைக்குள்
நுழைந்துக் கொண்டாள்.
அவள் மனம் வருந்தும்
படி ஏதும் சொல்லி விட்டோமோ என்ற கவலையில் இருவரும் அவளைத் தொடர,
"ஆர்த்தி..."
என்று அவளின் தோளில் கரம் வைத்தாள் லூர்து.
"அண்ணி ப்ளீஸ்,
மாமாவை என்னோட ஹஸ்பெண்ட்டுன்னு இனி சொல்லாதீங்க." என்றாள் ஆர்த்தி கெஞ்சுதலாக.
அவள் இன்னும் மகேந்திரனுடன்
நடந்த திருமணத்தை எண்ணி அப்படிச் சொல்கிறாள் என்று நினைத்த சுலேகா,
"கடந்த காலம்கிறது
கடந்து போன ஒன்னு ஆர்த்தி. அதை உன்னால திரும்பிப் பார்க்க மட்டும் தான் முடியும். திருத்த
முடியாது. சோ, பழைய வாழ்க்கைல இருந்து மீண்டு வா ஆர்த்தி." என்று அறிவுரை வழங்க,
"பழசெல்லாம் நினைச்சிட்டு
இல்லக்கா. நான் அதைத் தாண்டிப் போகத்தான் முயற்சி பண்றேன். அமுதாம்மா நிறைய சொன்னாங்க.
இறந்தவங்க சாமி மாதிரி. அவங்க நினைவுகள போட்டோக்குள்ள மட்டும் தான் வச்சிக்கணும். புத்திக்குள்ள
கொண்டு வந்தா எதிர்காலம் இல்லாம போய்டும்னு பெரிய மாமாவை மறக்கச் சொன்னாங்க.
என்னால தான்… என்னோட
ராசியால தான் அவங்க இறந்தாங்கன்னு சுத்தி இருக்குறவங்க பேச்சைக் கேட்டு வாழப் பிடிக்காம
தற்கொலைக்குக் கூட ட்ரை பண்ணேன்…” என்றவளைப் பதறிப் போய்ப் பார்த்தனர் இருவரும்.
“காப்பாத்திட்டாங்க.
எனக்குச் சரியா தற்கொலை பண்ணிக்கக் கூடத் தெரியல. இத்தனை நடந்தும் நான் இன்னும் உயிரோட
இருக்கேன்னா… எனக்கான காலம் வர்ற வரை நான் எனக்கான வாழ்க்கைய வாழணும்னு சொல்லி என்னோட
அழுகைய நிறுத்திட்டாங்க அமுதாம்மா.
எனக்குப் பெரிய மாமா
உயிரோட இல்லங்கிறது தான் வருத்தமே தவிர, எங்கூட இல்லங்கிறது இல்லை." என்றவள் தன்
பிறந்த வீட்டை விட வாக்கப்பட்டு வந்த வீட்டில் நலமோடு வாழ்ந்ததாகக் கூறி மகேந்திரனுடன்
வாழ்ந்த நாள்களை அடியோடு வெட்டி எறிந்து விட்டதாகக் கூறினாள்.
அவளின் பேச்சில் முதல்
திருமணத்தை முற்றிலும் மறந்து விட்டாள். இரண்டாவது திருமணத்தைத் தான் ஏற்க முடியவில்லையோ
என்று தோன்றியது இருவருக்கும்.
ஆதலால் மறுமணம் தவறில்லை
என்று இருவரும் போதனைகளைத் தொடங்கினர்.
"ஏன் உன்னால தர்மாவை
ஹஸ்பெண்ட்டா ஏத்துக்க முடியல ஆர்த்தி? மறுமணம் தப்பில்லயே" என்று லூர்து சொல்ல,
"மறுமணம் தப்பா
சரியான்னு எனக்குத் தெரியாது அண்ணி. ஆனா எந்தக் கல்யாணத்தையும் கட்டாயப்படுத்திப் பண்ணி
வைக்க கூடாது. அது மட்டும் தெரியும். எங்கண்ணே லூசு மாதிரி குழலி கல்யாணத்தை பணயமா
வச்சி மாமாக்கு என்னைக் கட்டிக் கொடுத்திட்டாரு. இது கல்யாணமே கிடையாது.
என்னோட வாழ்க்கையக்
காப்பாத்துறேன்னு சொல்லி சின்ன மாமா ஆசையப் பத்தி கவலைப்படாம, என்னைக் கைல பிடிச்சி
கொடுத்திட்டாங்க. அதான் நானும் மாமாவும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி வச்சிருக்கோம்.”
என்றபோது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“குழலி கல்யாணம் முடியவும்
நான் திரும்ப ஊருக்கே போய்டுவேன். அடுத்து கொஞ்ச நாள்ல அவரோட காதலிய கல்யாணம் பண்ணிப்பேன்னு
சொன்னாரு. பாருங்க நான் என்னைக்கு அமுதாம்மா வீட்டுக்குப் போகணும்னு கேலண்டர்ல நாள்
கூடக் குறிச்சி வச்சிட்டேன்." என வெள்ளந்தியாகப் பேசினாள் ஆர்த்தி.
'நடந்த பொம்மைக் கல்யாணத்திற்கு
அவ்வளவு தான் மதிப்பு.' என்பது போல் அவள் பேச,
சுலேகா, "ஆர்த்தி,
கல்யாணத்தை விளையாட்டுக்குப் பண்ணிக்கிட்டியோ இல்ல கட்டாயத்துக்காகப் பண்ணிக்கிட்டியோ.
கல்யாணம் கல்யாணம் தான். தர்மா உன்னோட புருஷன் தான்." என்க,
"ஐய்யோ புருஷன்னு
சொல்லாதீங்கக்கா. காலைலயும் இப்படிப் பேசித்தான் அவரோட மனநிலைய குத்திட்டு போனீங்க.
இப்பவுமா! ஏன் க்கா?" எனச் சிணுங்கினாள் ஆர்த்தி.
"அப்ப உங்களுக்குள்ள
இருக்குற உறவை நாங்க என்னென்னு சொல்லணும்." சுலேகா.
“எந்த உரிமைல அவன்
கூப்பிட்டான்னு உன்னோட அப்பா, அண்ணனை விட்டு வந்த?” என்க,
“ஃப்ரெண்ட்டா இருப்போம்னு…”
“எந்த ஆம்பள பொம்பள
ஃப்ரெண்ட்டும்மா ஒன்னா ஒரே வீடு தங்குறாங்க?” என்று லூர்து கேட்கவும் அமைதியானவள்,
"எனக்குச் சரியாத்
தெரியல அண்ணி. ஆனா ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் உறவு மட்டும் கிடையாது. ஏன்னா அவருக்கு ஒரு
லவ்வர் இருக்காங்களாம். அவங்க கூடத் தான் அவரு வாழ்க்கை. எங்கூட இல்லை. இதை அவரே எங்கிட்டச்
சொன்னாரு. இனி இதைப் பத்தி பேச வேண்டாமே. ப்ளீஸ்..." என்றவள் அவர்கள் மேற்கொண்டு
பேசுவதற்கு இடமளிக்காது சப்பாத்தியைச் சுடத் தொடங்கினாள்.
ஆர்த்திக்கும் அந்தக்
கேள்விகள் இருக்கத் தான் செய்தன. தர்மா அழைத்ததும் வர மறுத்திருக்க வேண்டும். இங்கு
வந்து பெருந்தவறு இழைத்து விட்டேன் என்றெண்ணியவள்,
கல்யாணம், கணவன் இறந்தது,
பின் மீண்டும் கல்யாணம்... இப்பொழுது விவாகரத்துப் பேச்சு… எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது
தன் வாழ்க்கை.
அதைப் பிடித்து நிறுத்த
வேண்டுமா? என்ன செய்தால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற யோசனையிலேயே வேலையைச்
செய்தாள்.
'இவளிடம் பேசி பலன்
இல்லை. இந்தத் திட்டத்தைப் போட்டுக் கொடுத்தவனிடம் பேச வேண்டும்.' என்று இருவரும் தர்மாவின்
முன் வந்து நின்றனர்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..