அத்தியாயம்: 1
இரவு நேரம்…
வெள்ளி நிலவு முகிலுக்குப்
பின்னால் இருந்ததன் காரணமாக, நிலவைச் சுற்றி இருந்த இடம் கருமையுடன் வெம்மை கலந்து
பிரகாசித்தது.
இருள் எங்கும் நிரந்தரமல்ல.
எங்காவது ஒரு வெளிச்சம் இருந்து கொண்டே தான் இருக்கும். சூரியன் தன்னை மறைத்துக் கொண்டாலும்
நிலவிற்கு உயிர் கொடுத்து இந்த உலகிற்கு இதமான வெளிச்சத்தைத் தந்துக் கொண்டே தான் இருக்கும்
என்று சொல்வது போல் இருந்தது அந்தக் காட்சி.
அதை, ஜன்னல் கம்பிகளுக்குள்
இரு கால்களையும் கட்டிக் கொண்டு, சோகமே உருவாய் கன்னத்தில் கை வைத்து, அறைக்குள் அடைப்பட்டுக்
கிடந்த மங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘தன் வாழ்க்கையில்
இப்படி ஒரு வெம்மையைத் தான் இறைவன் காட்டுகிறானோ! இது அதற்கான அறிகுறியா?
எதுவாக இருந்தாலும்
சரி… இதை நான் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டுமா?
முடியாது…
என்னால் முடியாது…
மாட்டேன்... இதைச்
செய்ய எனக்கு விருப்பமில்லை. எனக்கு வேண்டாம் இது.’ என்று ஓலமிட்டு கத்திக் கொண்டே
எங்காவது சென்று விடலாம் என்றிருந்தது ஆர்த்திக்கு.
கண்கள் கண்ணீரைக் கொட்டிக்
கொட்டியே வற்றிப் போயிருந்தன. வீங்கியிருக்கும் கண் பட்டைகள் வலியை மட்டுமல்லாது பெண்ணவளின்
வேதனையின் அளவையும் சொல்லும்.
தன் தலையெழுத்தை, விதி
இப்படி கொடூரமாக எழுதியிருக்க வேண்டாமே!
ஏன் எனக்கு மட்டும்
இப்படி ஒரு கோலம்? இந்த தண்டனை வேண்டாம். அனைவரும் என்னைச் சுற்றி என்னென்னமோ பேசுகின்றனர்.
வேண்டாம்… எதுவும்
வேண்டாம். எதையும் நான் கேட்கத் தயாராக இல்லை. இப்பொழுது நான் உயிருடன் இருப்பதே பெருந்தண்டனையாக
உணர்கிறேனே! ஏன் அவ்வாறு எனக்குத் தோன்றுகிறது? எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு
கேட்டு, யாரும் விடை கொடுக்காத நிலையில் பதிலுக்காகக் காத்திருந்து குழம்பிப் போய்
அவள் இருக்க, கதவுகள் தட்டப்பட்டது.
“அண்ணி!!” என்றது ஒரு
பெண் குரல். ஆழ்ந்த சிந்தனையில் மோன நிலையில் இருந்தவள் கலைந்தாலும், எழுந்துச் செல்லும்
எண்ணமில்லை.
“அண்ணி…” என்றாள் குழலி.
சத்தம் வராது போகவே, இனியும் தட்டிப் பலனில்லை என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்
அவள்.
அங்கு கட்டிலில் அமர்ந்திருந்தவளின்
கோலம், அவளுக்கும் பெருஞ்சங்கடத்தை தந்தது.
இது, இதைப் பற்றிப்
பேச சரியான நேரமில்லை தான் ஆனாலும் பேசித் தான் ஆகவேண்டும். இப்படியே விட்டால் தன்
அண்ணி சித்த பிரம்மைக்குள் தள்ளப் படுவாளோ என்ற பயம் இதை உறுதியாக நடத்தியே தீரவேண்டும்
என்றது.
ஆர்த்தியின் கரத்தை
அழுந்தப் பிடித்தவள்,
“அண்ணே வந்திருக்கு.”
என்றாள் மெல்லிய குரலில்.
உடல் அசைவுகள் அற்றுப்
போக, ஆர்த்தியின் முகம் பார்த்தவள், “அண்ணி! எனக்கு உங்க நிலைமை புரியுது. ஆனா… இதைப்
பண்ணித் தான் ஆகணும் அண்ணி. யாருக்காகன்னு உங்களுக்கே தெரியும். ப்ளீஸ்… கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.”
என நயந்து பேச,
‘எதைப் புரிந்து கொள்ளச்
சொல்கிறாய்? எல்லாரும் என்னை அவரவர் விருப்பத்திற்கு வளைப்பதையா?’ என்பது போன்ற பார்வையை
அவளுக்குத் தந்தவள், கழுத்தைத் திருப்பிக் கொண்டு முகிலுக்குப் பின்னால் மறைந்துக்
கொண்டு விளையாடிய அம்புலியிடம், ‘என்னையும் உன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறாயா?
நான் உன்னிடம் நிரந்தரமாக வருகிறேன். என்னைக் கூட்டிச் செல்வாயா?’ என்று வேதனையுடன்
மனத்திற்குள் வேண்ட.
அதுவோ, "உன் கர்ம
பலன்கள் மீதம் இருக்கிறது. அனைத்தையும் முடித்து விட்டு வா. உன்னை இருகரம் நீட்டி ஆரத்தழுவி
வரவேற்கிறேன்." என்று சொல்லி விட்டு அவளின் நிலையைக் காண சகிக்காது, மேகத்திற்குப்
பின்னால் மறைந்துக் கொண்டது.
தன் அண்ணியின் நிலைமை
மற்றும் தற்போதிருக்கும் சூழ்நிலை பற்றியெல்லாம் தீர்க்கமரப் புரிந்தாலும், இதை விட்டு
விட்டால் இனி ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது என்று எண்ணிய குழலி, “பின் கட்டுல அண்ணே
நிக்கிது அண்ணி. வந்து பாருங்க. வாங்க...” என்று வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுச்
சென்றாள்.
பொம்மை போல் அவளின்
இழு விசைக்குப் பின்னால் சென்றவளின் கால்கள் அங்கு தூரத்தே நின்றுக் கொண்டிருந்தவனைக்
கண்டு வேர் விட்டன.
திராணியே இல்லை அவனின்
முகம் பார்க்க, ஆனால் அவனோடு தான்… என்கின்ற போது உடலும், உயிரும் அனலில் இட்ட புழுவாய்
துடித்தது.
படபடத்த தன் நெஞ்சில்
கையை வைத்துக் கொண்டு நிலத்தை வெறித்தபடி நின்றாள் பாவை.
பின் கட்டு, சிறிய
தோட்டத்துடன் உடை காய வைக்கும் சௌகரியத்துடன் கூடிய சற்று பெரிய வெட்ட வெளி.
செம்பருத்தி, ரோஜா,
அரளி போன்ற தெய்வீக மலர்களும் அந்த இருளின் காரணமாக அகோர பூதங்களாய் காற்றில் அசைந்தாடுவதாய்
உணர்ந்தாள் ஆர்த்தி.
அங்கு நடுநாயகமாக வளர்க்கப்பட்டிருந்த
துளசி மாடத்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.
அவனும் எல்லையில்லா
வானில் வட்டமாய் இருளில் மிதந்துக் கொண்டிருந்த நிலவைத் தான் வெறித்துப் பார்த்தபடி
இருந்தான்.
காதுகளில் விழுந்த
கொலுசொலியால் பார்வையை அம்புலியில் இருந்து, வந்துக் கொண்டிருந்த மகளிரின் பக்கம் நகர்த்தினான்.
இரு கரங்களையும் கட்டிக்
கொண்டு நிற்கும் அவனின் ஆஜானுபாகுவான தேகம், குளிர் காற்றின் காரணமாகவோ அல்லது தன்னைச்
சுற்றி நடந்துக் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாத இயலாமையினாலோ வதங்கி நடுக்கம் கண்டது.
ஆறடி ஆண் மகன்... நன்கு
படித்து, பெரிய வேலையில் ஆண்கள் பெண்கள் என பலருக்கு மத்தியில் இருப்பவன். மங்கையர்களுடன்
நட்பாய் பழகுபவனும் கூட. இன்று ஆர்த்தியின் முகம் பார்க்கத் தயங்கி நின்றான். குழலி,
ஆர்த்தியை விட்டு விட்டு தன் அண்ணனின் முன் வந்து நின்றாள்.
"தெளிவா பேசிக்கோங்க..."
என்று இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு, அண்ணனின் காதில் மட்டும், "அவங்கள
காயப்படுத்திடாதண்ணா. ப்ளீஸ். ரொம்ப நைஞ்சி போயிருக்காங்க." என்று விட்டு அவனின்
பதிலை எதிர்பார்க்காது சென்றாள்.
அவள் சென்ற பின், இருவரும்
பேசிக்கொள்ளவில்லை. ஏன் முகத்தைக் கூட நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்ளவில்லை.
நிமிடங்கள் நகர்ந்துக்
கொண்டே செல்ல, தூரத்தே கேட்ட சத்தத்தில் தெளிவு கண்டு,
"உங்களுக்கு இதுல
சம்மதமா?" என்று பேச்சைத் தொடங்கினான் தர்மா.
அவள் இன்னமும் தலை
உயர்த்தாது இருக்க, மீண்டும் அதே கேள்வியைச் சற்று அழுத்தமாகக் கேட்டான்.
அதற்கு இல்லை என்பது
போல் தலையை மட்டும் அசைத்தாள் ஆர்த்தி.
"எனக்கும் தான்.
ஆனா... இதை நிறுத்த வழி தெரியுமா?" என்றான் ஆயாசமாக.
"எனக்குத் தெரியல."
என்றாள் மென் குரலில் திருவாய் மலர்ந்து.
"உங்க விருப்பத்தை
இங்க யாருமே கேட்கலையா?"
"இல்ல. ஆனா..."
என்று நிறுத்த சிறு கோபம் அவளின் மீது வந்தது தர்மாவிற்கு.
"ஆனா என்ன ஆனா?"
என்றவன் அதற்கு மேல் வந்த வார்த்தைகளை மென்று விழுங்கினான். ஏனெனில் வெளிவரும் வார்த்தை
அவளை மட்டுமல்ல அவனையும் காயப்படுத்தும் என்பதால்.
"என்னோட விருப்பத்தை
யாருமே கேட்கல. அப்பா, அண்ணா, மாமா,சித்தின்னு கடந்த பத்து நாளா என்னோட மண்டையக் கழுவிட்டுத்
தான் இருக்காங்க. அம்மா... அதுக்கும் மேல போய்க் கால்ல விழும் போது என்ன செய்யணும்னு
நீங்களே சொல்லுங்க." என்றாள் அழுகுரலில்.
அவள் மழலைப் பேச்சின்
சாராம்சம் அவனுக்கும் புரிந்திருந்தது. இருவரும் சூழ்நிலைக் கைதிகள். ஆனாலும் சூழ்நிலையை
ஏற்கத்தான் முடியவில்லை. தன் உற்ற உறவுகளே தன்னை நிர்ப்பந்திப்பது அவனுக்கும் வேதனையாகத்
தான் இருக்கிறது. ஆனாலும் தடுக்க முடியாதே.
"சென்டிமெண்டா
நம்மள கார்னர் பண்றாங்க. ஷிட்..." என்றவன் தலை கோதி, காலால் நிலத்தை ஓங்கி எத்தினான்.
மீண்டும் அங்கு கனத்த
மௌனம் நிலவியது. பின், "நா...ன் ஒரு... பொண்ண... லவ் பண்றேன்." என்றுவிட்டு
அவளின் முகம் பார்த்தான் தர்மா.
அதில் சலனம் இல்லை.
ஏன் சிறு அசைவு கூட இல்லை.
பின், "அ…ஞ்சு
வருஷமா லவ் பண்றோம். காலேஜ்ல படிக்கிறப்ப இருந்தே… கொஞ்ச நாள் போனதும் வீட்டுல பேசலாம்னு
இருந்தோம். ஆனா இப்படி ஆகும்ன்னு நினைக்கல." என்றவனுக்கு மேற்கொண்டு எதுவும் பேச
முடியாது தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.
"உங்களுக்கு எந்த
விதத்துலயும் தொந்தரவா நான் இருக்க மாட்டேன். உங்க லைஃப்பை நீங்க தேர்ந்தெடுத்த ஆள்
கூட வாழுங்க." என்றாள் விட்டேற்றியாக.
“நாளைக்கு நமக்குக்
கல்யாணம்னு வீட்டுல பேசிட்டு இருக்காங்க. இந்த வார்த்தைய உங்களால வீட்டுல சொல்ல முடியாமா?
இல்ல கல்யாணத்தை தான் நிறுத்த முடியுமா?” என்றான் சிறு கோபத்துடன்.
“உங்க சம்மதம் இல்லாம
இங்க எதுவும் நடக்காது. அதுனால நீங்களே அந்தப் பொண்ணப் பத்தி வீட்டுல சொல்லி கல்யாணத்தை
நிறுத்திடுங்க.” என்றவளுக்கு, நிமிர்ந்து பார்க்காமலேயே அவனின் உஷ்ணப் பார்வையை உணர
முடிந்தது.
“என்னை மாதிரியா நீங்க?
நீங்க ஆம்பள… உங்களுக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. நினைச்சதை சொல்லவும் செய்யவும்
தைரியம் இருக்கு. ஆனா நான்… பொண்ணு. எனக்காக யாராவது தேர்ந்தெடுத்து வைச்சிருப்பாங்க.
அதுக்குச் சரின்னு தலைய ஆட்டி அவங்க பின்னாடி போகுறது மட்டும் தான் எனக்கிருக்குற ஒரே
வழி. போய்த் தான் ஆகணும். இதுக்கு முன்னாடி போன மாதிரி இப்பவும்…” என்றவள் திருமணத்தை
என் சார்பில் இருந்து நிறுத்த முயல மாட்டேன் என்றும், திருமணத்திற்குச் சம்மதம் என்பது
போலும் பேச, அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
எப்படி இவளால் சட்டென
அனைத்தையும் மறந்து விட முடிகிறது!
யாரோ ஒருவர் எடுக்கும்
முடிவுக்குக் கட்டுப்பட்டு, இவளின் விருப்பத்தையும் சந்தோஷத்தையும் பலியாக்க முன் வருகிறாள்!
எப்படிப் பட்டப் பெண் இவள்!! என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவளின் விழிகளில்
இருந்து வடிந்தோடிய கண்ணீர் அவளின் பரிதாப நிலையைச் சொல்லியது.
கல்யாணம் என்ற விலங்கு
பூட்டப்பட்டால் என்ன? படவில்லை என்றால் என்ன? எனக்கு எந்தச் சுகமும் வேண்டாம், யாரும்
வேண்டாம் என்பது போல் அவள் இருக்க, அவளை அப்படியே இருக்க யாரும் சம்மதிக்கவில்லை.
அவளின் எதிர்ப்பில்லாத
மறைமுக சம்மதத்தை உணர்ந்து தர்மாவிற்குக் கோபம் கொப்பளித்தது. முதுகெலும்பில்லாத பெண்
என்று சீற்றம் கூட வந்தது.
ஆனால், அவள் கூறுவது
முற்றிலும் உண்மை. அவளுக்கு மட்டுமல்ல இப்போது தனக்கும் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்
உரிமையைத் தன் வீட்டார் கொடுக்கவில்லை என்ற நிஜமும் சுட்டது அவனை.
"தர்மா... இது
நம்ம வீட்டு கௌரவம் சம்மந்தப்பட்டதுப்பா. அந்தப் பொண்ணக் கொஞ்சம் நினைச்சுப் பாருப்பா.
கொஞ்ச நாளா இருந்தாலும், இந்த வீட்டுல ஒருத்தியா எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சப்
பொண்ணுப்பா அது. எனக்கு குழலியும் ஆர்த்தியும் வேற வேறயா பார்க்கத் தோணல.” என்று அழுத
அவனின் தந்தை,
“இந்தக் கல்யாணம் நடந்தே
ஆகணும்." என்று கட்டளையிட்டிருந்தால் கூட, முடியாது என்று விரைத்துக் கொண்டு நின்றிருப்பான்.
ஆனால் நடந்ததோ வேறு...
அவனுக்குமே புரிந்திருந்தது
ஆர்த்தி இந்த வீட்டு மருமகளாகவே இருக்க வேண்டிய அவசியம் என்னவென்று.
ஆனாலும்... தன்னை நம்பி
அங்கு ஒரு பெண் உள்ளாளே! தன் மீது அதீத உரிமையுணர்வோடு அங்கு ஒருத்தி காத்திருக்கும்
போது இவளுடன்... திருமணம்... எப்படிச் சரியாக இருக்கும்? இது துரோகம் அல்லவா? இது நடந்தால்
இரு பெண்களுக்கும் நான் செய்யும் துரோகம்.
செய்யாமல் இருந்தால்
தன் குடும்பத்தை இழக்க நேரிடும் என்று மனம் சொன்னது.
தன்னை மதில் மேல் பூனையாக்கிய
சூழ்நிலையைக் கொண்டு வந்த விதியை நொந்துக் கொண்டவன், உள்ளுக்குள் எரியும் கனலை வெளிக்காட்ட
முடியாது தவிக்க,
"இந்தக் கல்யாணத்தை
நிப்பாட்ட உங்களால முடியாதா?" என்று ஏக்கம் நிறைந்தக் குரலில் கேட்கும் போதே,
ஆர்த்திக்குத் தொண்டை அடைத்து, கண்கள் சொருகத் தொடங்கின...
"என்னோட சைடுல
இருந்து நான் ஃபுல் எஃபோர்ட்டும் போட்டுட்டுத் தான் இருக்கேன். ஆனா..." என்றவனின்
பேச்சு முழுமையாகும் முன், பெண்ணவளுக்கு உலகம் தட்டாமாலையாகச் சுழலத் தொடங்கியது.
அவளின் முகம் கூடப்
பார்க்காது திரும்பி நின்றிருந்தவனின் தோளை ஆதாரமாகப் பற்றிவள், மயங்கிச் சரிந்தது
அவனின் மார்பில்...
"ஆர்த்தி... ஆர்த்தி…
கண்ணத் திறங்க... ம்மா... ப்பா... வெண்மா..." எனக் குரல் கொடுத்தவனுக்குத் தன்
நெஞ்சில் சாய்ந்திருந்தவளைத் தொட்டுத் தூக்கக் கூடச் சங்கடமாக இருந்தது.
நிலத்தில் அவளை அமரவைத்து,
துளசி மாடத்தில் சாய்த்து வைத்து விட்டு, குழாயைத் திறந்தான்.
பக்கத்திலேயே இருந்திருப்பார்கள்
போலும், குரல் கேட்டதும் ஓடோடி வந்தனர் பெரியவர்கள்.
"என்னாச்சு தர்மா
எம்மருமகளுக்கு?" எனப் பதறினார் தர்மாவின் அன்னை அமுதா.
"மயங்கிட்டாங்கம்மா...
இந்தத் தண்ணிய முகத்துல தெளிச்சி விடுங்க. கண்ணுல நெத்திலன்னு முகம் முழுக்க ஈரமாக்குங்க."
என்றவன் தன் அன்னையின் கையில் கைநாளியைக் கொடுத்து, ஆர்த்தியின் முகத்தில் நீரைத் தெளிக்கச்
சொன்னான். அதில் புருவங்கள் சுருங்கி, இமைகளுக்குள் சிறு அசைவு தெரிந்தது.
"நல்ல வேளை முழுசா
மயங்கல... இதோட இன்னைக்கு நாலாவது தடவையா மயங்கி
விழுறா. என்ன ஆச்சோ தெரியல? ரொம்ப பலவீனமா இருக்கானு டாக்டர் வேற சொன்னாங்க. மறுபடியும்
டாக்டரை ஃபோனை போட்டு வரச் சொல்லணும். உள்ள கொண்டு போய்ப் படுக்க வைப்போம் தர்மா… தூக்குப்பா…"
என்று விட்டு,
"ஐய்யோ! யாரு
கண்ணு பட்டுச்சோ... எங்குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா… அடுத்தடுத்துன்னு வரிசையா
எதாவது வந்திட்டே இருக்கே. எப்பத்தான் இதுக்கு ஒரு முடிவு வருமோ? காளியாத்தா இதுக்கு
ஒரு விடிவு காலத்தைக் கண்ணுல காட்டும்மா. இந்தப் பொண்ணு முகத்தை பார்த்து பார்த்தே
வேதனைப்பட்டு சாகணும்னு எங்க தலைல எழுதிடாதம்மா. எம்மருமகளுக்கு நல்ல வழி காட்டும்மா."
எனப் புலம்பியபடியே சமையலறைக்குள் சென்றார்.
அரை மயக்கத்தில் கிடந்தவளின்
கன்னத்தைத் தட்ட உயர்ந்த கரம், ஒரு நொடி தயங்கி, மெல்லிதாக அசைத்து எழுப்பி நிற்க வைத்தான்
குழலியின் உதவியுடன். ஆர்த்தி நிற்க முடியாது தள்ளாடினாள். குழலியால் அவளின் தோளில்
கரம் கொடுத்தும் நிலையாக நிற்க வைக்க முடியாது போனது. திணறிக் கொண்டிருந்தாள் குழலி.
இவள் எப்படி அறைக்கு
அழைத்துச் செல்வாள் எனத் தங்கையை நொந்துக் கொண்டவன், ஆர்த்தியின் இடையில் கரம் பதித்து
பூக்குவியலாய் அவளை அள்ளிச் சென்றான்.
அவன் நெஞ்சில் வந்து
முட்டிய முகத்தைப் பார்க்கையில் குமரி குழந்தையாகத் தான் தெரிந்தாள். கல்லூரி இறுதி
ஆண்டில் இருக்கும் தன் தங்கை வெண்குழலியை விட ஒரு வயது சின்னவள் என்றிருந்தார் அமுதா.
அப்படியெனில் தன்னை விட ஏழெட்டு ஆண்டுகள் சிறிய பெண்.
கடவுள் ஏன் இந்தச்
சின்ன வயதில் இவளுக்கு இப்படி ஒரு கஷ்டத்தைத் தரவேண்டும் என்று பெண்ணவளின் நிலையைக்
கண்டு பரிதாபம் உண்டானது.
அறைக்குக் கொண்டு வந்தவன்,
அவளுக்கு நோகாது கட்டிலில் கிடத்தி அவளின் மதி முகத்தைப் பார்த்தான்.
சென்ற மாதம் வந்திருந்த
போது அவளைப் பார்த்துப் பேசியிருந்தான் தான். ஆனால், அப்போது அவளின் தேகம் செழுமையாக,
வனப்பாக, தலை நிறைய பூவுடன், கொழு பொம்மை போன்ற பொலிவுடன், இதழில் மறையாப் புன்னகையுடன்
சர்வ லட்சணங்களோடு அவனை வரவேற்றாள்.
ஆனால் இன்று ஆளே பாதியாக
தான் இருந்தாள். உடலில் உள்ள சதைகள் மொத்தத்தையும் கண்ணீரில் கரைத்து வடித்து விட்டாள்
போலும். கண்ணில் கருவளையத்துடன், கோதாத பரட்டைத் தலையுடன், நலிந்த தேகத்துடன், கசங்கிய
ஆடையுடன் இருந்தவளைப் பார்க்கப் பார்க்க மனம் வெதும்பியது தர்மாவிற்கு.
இவளுக்குப் பரிவு காட்டினால்
அவனின் ஐந்து வருட கால காதலியை இழக்க நேரிடுமே!!!
காதலா? குடும்பமா?
இரண்டில் ஒன்று என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் தர்மா என்ன செய்வானோ!!
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..