அத்தியாயம்: 20
அமுதா தான் அந்தக்
குரலுக்குச் சொந்தக்காரர்.
புதுமணத் தம்பதியினர்
இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
ஆர்த்தியும் அவர்களுடன் சென்றிருக்க, தந்தையும் மகனுமாய் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக்
கொண்டிருந்தனர்.
கூடத்தில் இருவரும்
நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற சொந்தங்கள் அவரவர் இல்லம் சென்றிருந்ததால் வீடே நிசப்தமாக
இருந்தது.
அப்பொழுது அமுதா தர்மாவிடம்
ஒரு உறையை நீட்டி, "இதுல வெளிநாட்டுக்குப் போறதுக்கானப் புத்தகம் இருக்கு. வேலை
காரணமா வெளிநாடு போறதுன்னா தாராளமா போப்பா. இல்ல சென்னைலயே பார்க்குறதா இருந்தாலும்
சரித்தான். இனி யாரும் உன்னோட விருப்பத்தைத் தடுத்து நிறுத்த மாட்டோம். ஆனா நாளைக்கு
கிளம்புற நீ இந்த ஊர் பக்கமே வராம இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்." என்று
விட்டு சர்வதேச கடவுச்சீட்டைத் தர்மாவின் கையில் கொடுத்தார் அமுதா.
அதிர்ந்து போய் நின்றான்
தர்மேந்திரன். அவன் மட்டுமல்ல நெல்லையப்பனும் தான்.
இதற்கு முன் பல முறை
வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம், "வேண்டாம் தர்மா. கிடைக்கிற
வேலையை பாரு. நீ எவ்ளோ சம்பாதிச்சிக் கொண்டு வந்து கொடுத்தாலும் எங்களுக்கு அதைப் பத்தி
கவலை இல்லை. கடவுள் புண்ணியத்துல பூமியம்மா எங்களுக்குப் படி அளக்குறா. அது போதும்.
நீ வெளிநாடு போய்த் தான் படி அளக்கணும்னு இல்லை. உன்னைய பார்க்காம உன் குரலை கேட்காம
நாங்க எப்படி ராசா இருப்போம்?" என்று நெல்லையும் அமுதாவும் சேர்ந்து சொன்னதால்
வெளிநாடு பற்றி யோசித்ததே இல்லை அவன்.
ஏன் உயிர் காதலி என்றானே
தியா, அவளே பல முறை அழைத்தும் மறுத்ததற்கு காரணமாக இருந்தது, தன் குடும்பத்தை விட்டு
தூரமாக இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் தான்.
ஆனால், இன்று அவரே
பயணச்சீட்டு முதல் அனைத்தும் எடுத்து வந்து நீட்டுகிறார். ஏன் என்று புரியாது அவன்
பார்க்க,
"உனக்கென்ன கிறுக்கு
கிறுக்கு பிடிச்சிருக்கா அமுதா. பிள்ளையப் போய் ஊர் பக்கம் வராதங்கிற... வெளிநாடுங்கிற...
என்னாச்சு உனக்கு... ஏன் கண்டமேனிக்கு உளறுற."
"நான் உளறலங்க...
உங்க மகன் தான்... நீங்க பெத்த மகன் தான் உளறி வைச்சிருக்கான். எனக்கு எந்த விதத்துலயும்
உரிமையில்லாத அக்கா மகன். நான் அவனை வயித்துல சுமந்து பெக்கலேல! அப்படித் தான் பேசுவேன்."
என்றார் ஆத்திரத்துடன்.
அன்று தர்மா கேட்ட,
"நீங்க பெத்த பிள்ளைன்னா இது மாதிரி ரெண்டாம் தாரமா... அண்ணன் பொண்டாட்டியவே கல்யாணம்
செஞ்சி வைச்சிருப்பீங்களா?" என்ற கேள்வி அவரை அரித்துக் கொண்டே இருந்தது.
"ம்மா... அது
அன்னைக்கு... ஏதோ கோபத்துல வந்ததும்மா. நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு இருந்தேன்...
ஆனா..."
"நீ எதுக்குப்பா
கேட்கணும். நான் தான் கேட்கணும். புருஷன் செத்து தாலியறுத்திட்டு நின்னவ கிட்ட, எம்புள்ள
உன்னை நல்லாப் பார்த்துப்பான். அவன் உன்னை வாழ வைப்பான்னு உங்கிட்ட கேட்காம வாக்கு
கொடுத்தேன்ல... அதுக்கு என்னை மன்னிச்சிருப்பா." என்றவர்,
"ஆனா நான் தப்பான
வாக்கை கொடுக்கல. நான் தூக்கிச் சுமக்கலன்னாலும் நீ என் பையன்கிற நம்பிக்கைல தான் அதைப்
பண்ணேன். உங்கண்ணன் ஏத்துக்கிட்டு கடைசி வரை காப்பாத்த முடியாத பொறுப்பை, உன் கைல ஒப்படைக்க
நினைச்சேன்.
ஆர்த்தி வயித்துல வளர்ந்த
குழந்தையெல்லாம் எனக்கு முக்கியமாப் படல. அவளோட வாழ்க்கைக்குச் சரியானத் துணை வேணும்னு
தான் நினைச்சேன். எத்தனையோ மறுமணம் தோல்வில முடியுறது எனக்குத் தெரியும். ஏன் முதல்
கல்யாணத்துலயே வர்ற கஷ்டத்தை, வெளில சொல்ல முடியாம, மனசுக்குள்ளப் புழுங்கிக்கிட்டு,
கண்ணீரோட வாழ்ற பல பெண்களோட கதையையும் கேட்டிருக்கேன். பார்த்தும் இருக்கேன். அது மாதிரியான
எந்த நிலைமையும் ஆர்த்திக்கு வரக் கூடாதுன்னு தான் திட்டம் போட்டு உனக்கு... உங்கண்ணன்
பொண்டாட்டியையே கட்டி வச்சேன். அதுல எனக்கு எந்த வித உறுத்தலும் கிடையாது.
உங்கப்பாவை நான் கல்யாணம்
பண்ணிக்கும் போது உனக்குச் சின்ன வயசு. எங்கக்காவும் உங்கப்பாவும் வாழ்ந்த வாழ்க்கைய
கண் கொண்டு பார்த்தவ நான். அவ இறந்ததும் என்னோட விருப்பம் எதுவும் கேட்காம, பிள்ளைகளப்
பார்த்துக்க ஆள் வேணும்னு உங்கப்பாக்கு ரெண்டாம் தாரமா வாக்கப்பட வச்சாங்க. ஆரம்பத்துல
எனக்கும் கோபம் வந்தது. ஏற்கனவே ஒருத்தி கூட படுத்து பிள்ளை பெத்த மனுஷன்தானே இவருன்னு
ஒவ்வொரு நாள் ராத்திரியும் மனசு கெடந்து மருகுச்சி... ஆனா நாள் ஆக ஆக... எல்லாம் மாறுச்சு
…” என்றார் கண்ணீருடன்.
ஒரு ஆணுக்கு மறுமணம்
செய்யும் போது அவனை யாரும் எச்சில் பாத்திரமாகப் பார்ப்பது இல்லை. ஆனால் பெண்ணுக்கு
எனும் போது…?? எல்லாம் பார்க்கப்படும் என்ற தன் ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார்
அமுதா.
“நான் உங்கப்பாவை அக்கா
கூட வாழ்ந்தவர்னு பார்க்கல... யாரோ ஒருத்தி கூட ஏற்கனவே குடும்பம் நடத்தி பிள்ளப்பெத்த
ஆளுன்னு பார்க்கல... நான் பார்த்தது உங்கப்பா மனசை. அதுல எனக்குன்னு இருந்த மதிப்பை
பார்த்தேன். அது போதுமானதா இருந்தது.
இரத்தமும் சதையுமா
இருக்குற இந்த உடம்பு 40 வயசுக்கு மேலயே மக்கர் பண்ண ஆரம்பிச்சி கொஞ்சம் கொஞ்சமாக அழியத்
தொடங்கிடும். ஆனா மனசு. அதுக்கு என்னைக்கும் வயசாகுறது இல்லை. அது எப்பவுமே இளமையாத்தான்
இருக்கும். அது பேச, பழகன்னு ஆத்மார்த்தமான உறவைத் தேடும். புருஷனாவோ, பொண்டாட்டியாவோ,
பிள்ளையாவோ, தோழனாவோ, தோழியாவோ, பேரனாவோ, பேத்தியாவோ... இப்படி யாரோட உறவாவது வேணும்
அதுக்கு.
வாழ்க்கைங்கிற பயணத்துலயும்
வழித்துணை வேணும். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் வழித்துணை தானே தவிர, வாழ்க்கை
கிடையாது. நிறைய காரணத்தால கடைசி வரை அவங்களால கூட வர முடியுறது இல்லை. அது யாரோட தப்பா
வேணும்னாலும் இருந்திட்டுப் போகலாம்.
அதுக்காக வாழ்க்கையே
முடிஞ்சிட்டதா அர்த்தமில்லை. இருக்கு... உயிர் இருக்குற வரை நமக்கான வாழ்க்கை இருக்கு.
அதுக்கு வழித் துணை வேணும்.
எப்ப ஆர்த்தி வயித்துல
வளர்ற மகேந்திரனோட குழந்தை கலஞ்சிடும்னு தெரிஞ்சதோ அப்பவே அந்தப் பொண்ணுக்கு உறவா என்
பையன்... நான் வளர்த்த பையன் இருக்கணும்னு முடிவு பண்ணேன். கல்யாணமும் பண்ணி வை ச்சேன்.
ஆனா... தப்பு... உன் மனசுல யாரு இருக்கானு கேட்காம கல்யாணம் பண்ணி வைச்சது தப்புன்னு
இப்ப புரியுது..." என்றபோது...
'இல்லை... எனக்கு
ஆர்த்தியைத் தந்து பேருதவி தான் செய்திருக்கிறீர்கள். அவளைத் தவிர வேறு யாரும் என்
வழித்துணையாக இருக்க முடியாது.' என்று தர்மாவின் மனம் கதறியது. ஆனால் அதை வெளிச் சொல்லும்
முன்,
"ரயில்வே ஸ்டேஷன்ல
மாப்பிள்ளைக்கிட்ட நீ பேசுனதை கேட்டேன் ப்பா." என்று அதிரச் செய்தார் அமுதா.
"உனக்கு ஒரு காதலி
இருக்குற விசயத்தை, ஆர்த்திகிட்டச் சொல்லாம எங்ககிட்ட சொல்லிருந்தா... அப்பவே வேற பையனை
பார்த்திருப்போம்." என்றவர் சொன்னதில் உண்மை இருந்தது.
ஆனால், 'ஏன் சொல்லவில்லை?'
அப்பொழுதே இந்தக் கேள்வியை
மனத்திடம் கேட்டான் தான். ஆர்த்தியிடம் சொல்வதற்குப் பதில் நெல்லையப்பனிடமோ அமுதாவிடமோ
ஏன் குழலியிடம் கூறியிருந்தால் கூட இந்தக் கல்யாணம் நடந்திருக்கவே செய்திருக்காது.
அனைவரும் அவனின் மீதிருக்கும் மதிப்பின் காரணமாக அவனை வற்புறுத்தியிருக்க மாட்டார்கள்.
அவனின் காதலையும் ஏற்றிருப்பார்கள்.
ஆனால் சொல்லவில்லை.
ஏன்? என்றதற்கு, அது பதிலைத் தாமதமாக இப்பொழுது சொல்லியது.
"நீங்க பண்ணிக்கலனாலும்
என் தங்கச்சிக்கு வேற ஒருத்தனை பார்த்து நாளைக்கே நான் கட்டி வைப்பேன் மச்சான்."
என்று கர்ணன் சொன்ன வார்த்தை தான் காரணம் என்றது.
அப்பொழுதே ஆர்த்தி
அவனின் மனத்தில் தாக்கத்தைத் தந்திருக்கிறாள். அது தான் தியாவைப் பற்றி யாரிடமும் சொல்லவிடாமல்
செய்திருக்கிறது.
"இப்பவும் ஒன்னும்
கெட்டுப் போய்டல தர்மா. ஆம்பளைங்களுக்கு ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கிறது இன்னும்
வழக்கத்துல தான் இருக்கு." என்றவரின் பேச்சு, தியாவை மணந்துக் கொள்வதில் எங்களுக்கு
எவ்வித முரண்பாடும் இல்லை என்றது.
"நீங்க போட்டத்
திட்டப்படி நடந்ததா நினைச்சுக்கோங்க. ஒரே ஒரு வேண்டுகோள். ஆர்த்தி கழுத்துல நீ கட்டுன
தாலி மட்டும் அப்படியே இருக்கட்டும். விவாகரத்து அது இதுன்னு கோர்ட்டுக்குப் போய்,
அடுத்த பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அந்தப் பிள்ளைய அசிங்கப்படுத்த
வேண்டாம். தாங்க மாட்டா... அரும்பாடு பட்டுத்தான் அவ மனசுல இருந்த மகேந்திரனை வெளில
எடுத்தேன். இப்ப இன்னொருத்தன்னா… வேண்டாம் ப்பா…
அவளுக்கா யாரையாவது
பிடிச்சிருந்தா, நாங்க சேர்த்து வச்சிருக்கிறோம். அப்ப விவாகரத்து கொடுத்தாப் போதும்.
அதுவரை அவளை நாங்க பார்த்துப்போம். நீ வெளிநாடு போய்ட்டதா ஊர்ல நாங்க சொல்லிக்கிறோம்.
நீ உன்னோட காதலி கூட சந்தோஷமா உன்னோட வாழ்க்கைய ஆரம்பிப்பா. எங்களுக்காக உன் அண்ணன்
பொண்டாட்டிய சகிச்சுக்க வேண்டாம். நாங்க வருத்தப்படக் கூடாதுன்னு சந்தோஷமா வாழுற மாதிரி
நடிக்கவும் வேண்டாம். நீ எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும், யார் கூட இருந்தாலும்
எங்களோட ஆசிர்வாதம் எப்பவும் உன் கூடவே தான் இருக்கும். நல்லா இருப்பா." என்று
தன் பேச்சை முடித்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்தார்.
அவன் தான் திட்டம்
வகுத்ததே. ஆனால் அவனே அதை நிறைவேற்ற நினைக்காது அவனின் மனநிலை மாறியிருந்தது. மௌனமாய்
தன் நிலையில் இருந்து மாறியதை வெளியே சொல்லாது அவன் நிற்க, நெல்லையப்பன் மகனை ஏறிட்டார்.
"அந்தப் பிள்ள
நம்ம வீட்டு மகாலட்சுமி தம்பி. அதையா அடுத்தவனுக்கு தாரைவார்த்து கொடுக்க நினைச்ச!
வேண்டாம்பா... அது இந்த வீட்டு லட்சுமியா… எங்க கூடவே இருந்திட்டுப் போகட்டும்."
என்றவரும் அவனை வெளிநாடு சென்று விடு என்பது போல் பேசி விட்டு, உணர்ச்சிவசப்பட்டு குலுங்கியபடியே
அறைக்குள் சென்றார்.
யாருமற்ற கூடத்தில்
யாருமில்லாது நின்றவனுக்குத் தன் இரத்த உறவுகளின் பேச்சு வேதனையைத் தந்தது.
அப்பொழுது மட்டுமல்ல
இப்பொழுதும் அவனைப் பேச யாரும் அனுமதிக்கவில்லை. செண்டிமெண்ட் வார்த்தைகளால் அவனைச்
சூழ்நிலை கைதியாக்கி, அவனையே குற்றவாளியாக்கி விட்டு அவர்கள் நல்லவர்களாக விலகிச் சென்று
விட்டனர்.
எப்படி சென்னை வந்து
சேர்ந்தான் என்பது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் வந்து விட்டான் அதிகாலை வேளையில்.
நடைபிணமாகிப் போனாலும் அவனின் கால்கள் அவனின் குடியிருப்பிற்கு அவனைக் கொண்டு வந்து
விட்டன.
யாரிடமும் சொல்லாது...
குறிப்பாக ஆர்த்தியின் முகத்தைத் கூட பார்க்காது வந்தது அவனுக்கு வேதனையைத் தான் தந்தது.
வீடு, இல்லாள் இன்றி
கருட புராணத்தில் வரும் நரக தண்டனை தரும் இடம் போல் மாறி இருந்தது.
கூடத்தில் மண்டியிட்டவனுக்குத்
தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
"தர்மா!!! நீ
எதுக்கு வந்த?" என்றாள் சுலேகா.
"தங்கச்சி கல்யாணத்துக்குன்னு
எடுத்த லீவ் இன்னும் ரெண்டு நாள் பாக்கி இருக்கே! அதுக்குள்ள வந்திட்ட." என்றான்
நிலவன்.
"ஆர்த்தி எங்க
தர்மா?" என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு சூழ்ந்து நின்றவர்களைக் கட்டிக்
கொண்டான் தர்மா.
அமுதாவின், அண்ணனின்
மனைவி என்ற பேச்சு இப்பொழுது அமிலமாய் வந்து சேர்ந்தது அவனின் காதில். அவன் ஆர்த்தியை
இப்பொழுது அந்தக் கோணத்தில் பார்க்கவில்லையே. அவனின் இதயத்தைத் தன் அன்பால் நிரப்பிய
தேவதை அவள். அவனை ஆட்சி செய்யும் அரசி. அவளைத் தன் மனைவியாக உருவகப்படுத்தி, உயிர்
கொடுத்து, உண்மையாய் நடமாடும் அவனின் கண்ணாட்டி அவள். அவனின் காதலியும் அவள் தான்.
ம்... காதலி தான்...
அவன் தியாவைச் சொல்லவில்லை. அவன் தியாவைக் காதலித்தான் தான். உயிராய் தியாவை நேசித்தான்
தான். அதை இல்லை என்று மறக்கவே முடியாது. அவனின் காதல் எப்பொழுது முடிந்தது என்றால்
தியாவின் சுயநலத்தாலும், விட்டுக் கொடுக்காத தன்மையாலும்.
ஆரம்பத்தில் தியாவின்
காதல் ஓர் அற்புதமானதைப் போல தோன்றினாலும், அதன் நோக்கம் அவளின் மீது கண்மூடித்தனமான
நம்பிக்கையை வரவைப்பதும், அவனைக் கட்டுப்படுத்தி தன் கைக்குள்ளேயே வைத்திருக்க நினைப்பது
என்ற உண்மையை, தியாவின் செயல்கள் சொல்லின.
அன்பின் பெயரில் அடிமைப்
படுத்துவதற்கான உத்திகள் அவை என்பதை அவளின் தற்கொலை முயற்சியில் இருந்தே புரிந்துக்
கொண்டான். அதன் பின்னும் அவளுடன் தன் காதலைத் தொடரத்தான் விரும்பினான்.
ஆனால், அவளின் வெளிநாட்டு
மோகம் இருவருக்குள்ளும் கருத்து மோதலை உண்டாக்காது, கருத்து வேறுபாட்டை உண்டாக்கி மொத்தமாகப்
பிரித்து விட்டது. அவள் உண்டாக்கிய வெற்றிடத்தை மட்டுமல்ல அவனையும் சேர்த்தே ஆர்த்தி
ஆட்கொண்டு விட்டாள் தன் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பால்.
இப்பொழுது அவன் காதலி,
மனைவி, உயிர் என எல்லாம் ஆர்த்தி தான்...
'அதைச் சொன்னால் நம்புவார்களா!
தான் கொண்ட நேசம், காட்டிய அன்பு எல்லாம் நாடகமாகவா அவர்களுக்குத் தெரிகிறது? நடிப்பாகவா
நான் அவளிடம் பழகுகிறேன்?' என்று வருந்தியவனைத் தேற்றி உடன் அழைத்துச் சென்றனர்.
நள்ளிரவைத் தொட்டும்
வீடு செல்ல பயந்து போய் உலைக்குள்ளேயே பித்து பிடித்தவன் போல் சுற்றித் திரிந்தவனை,
நிலவன் தான் இழுத்து வந்தான்.
"நீ... இன்னைக்கு
எங்க வீட்டுல தங்கிக்க." என்று அக்கறையுடன் சொல்ல,
"வேண்டாம் சீனியர்.
என்னைக்கா இருந்தாலும் நான் இதையெல்லாம் சந்திச்சு தான் ஆகணும். சமாளிச்சுப்பேன்."
என்று விட்டுப் படிக்கட்டில் ஏறினான்.
கால்கள் இரும்பு குண்டை
கட்டி வைத்ததைப் போல் கனக்க, இறுகிய மனத்துடன் வீட்டை அடைந்தவன், கதவில் கை வைக்க,
அது திறந்துக் கொண்டது. சட்டைப் பைக்குள் வீட்டின் சாவி இருக்க, எப்படி திறந்தது என்று
யோசித்தவனின் இதயம் மயிலிறகாய் மாறி சமையலறைக்குப் பறந்துச் சென்றது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..