அத்தியாயம்: 19
மாலை பரிசம் போட்டு,
மறுநாள் காலையில் ஊர் கோவிலில் திருமணம். ஏற்பாடுகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தன.
ஊரில் உள்ள சமுதாயக்
கூடத்தில் நெல்லையப்பனின் சொந்த பந்தங்கள் ஒன்று கூடி நின்றனர். மாவிலைத் தோரணங்கள்
கட்டி, பூ அலங்காரத்தில் மணமேடை ஜொலித்தது.
ஒரே தங்கையின் திருமணம்.
அதிலும் அவள் ஆசைப்பட்டவனுடன் நடக்கும் திருமணம் என்பதால் தங்கையின் மனம் வாடாத படி
அனைத்தையும் முன் நின்று செய்தான் தர்மா.
மாலை ஐந்து மணி போல்
இசக்கிமுத்துவின் குடும்பமும் உறவுகளும் வந்திறங்கினர். ஏழு மணி போல் நிச்சயதார்த்தம்.
ஆர்த்தி பட்டுப் புடவையில் தன் அண்ணனுக்கு அருகில், வெண்குழலிக்கானச் சேலையை ஏந்திக்
கொண்டு வந்தாள்.
நாதஸ்வரம் இசைக்க,
மேள தாளத்துடன் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டை நோக்கி நடந்தனர்.
அங்கு சந்தனம் குங்குமத்துடன்,
நெல்லையப்பனையும் அமுதாவையும் வரவேற்பில் கண்ட ஆர்த்தியின் கண்கள் தர்மாவைத் தேடி அலைந்தன.
ஏனெனில் ஊர் வந்து சேர்ந்த நாளில் இருந்து அவள் போடும் எந்தக் குறுஞ்செய்திக்கும் பதில்
இல்லை அவனிடம். பார்க்கப்பட்டது, படிக்கப்பட்டது. ஆனபோதும் பதில் மட்டும் வருவதில்லை.
ஏனோ அது அவளைச் சோர்வுறச் செய்தது. அவனைக் காண வேண்டிய ஏக்கத்தைக் கூட்டியது.
'கோபமா இருக்காரா எம்மேல?
நான் அப்படி என்ன பண்ணேன்?' என்று அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டு வளைய வந்தாள்.
கர்ணன், தர்மா கூறியது
உண்மையா? என்று ஆர்த்தியிடம் கேட்கவில்லை. முதலில் இந்தத் திருமணம் நல்லபடியாக முடியட்டும்
என்று யாரிடமும் சொல்லாது அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானான்.
இரண்டாவது… மூன்றாவது
என்று வரிசையாகத் திருமணம் செய்து வைக்க கல்யாணம் என்ன விளையாட்டா! இரு பெண்களின் வாழ்க்கையையும்
பணயமாக வைத்து அந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை கர்ணன்.
அதே நேரம் தன் தங்கைக்கு
வாழ்க்கை கொடு என்று தர்மாவிடம் கெஞ்ச கர்ணனுக்கு மனமில்லை. தங்கையின் வாழ்க்கை அவ்வளவு
தானா என்று வருந்தி களைத்து தான் போனான்.
அமுதா, ஆர்த்தியைத்
தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன போது கூட, கர்ணன் தடுக்கவில்லை. காரணம்
ஆர்த்தியின் வேகமான தலையாட்டல் மற்றும் அவனின் சித்தி மங்கை.
பிருந்தா வேறு ஊரில்
இருந்து வந்திருக்கிறாள். அவர்களுக்கு வேலை செய்ய ஆர்த்தியைத் தான் ஏவுவர். இவளும்
குடுகுடுவென மங்கைக்கு சேவகம் செய்ய ஓடி விடுவாள். எத்தனை சொன்னாலும் கேட்கப் போவதுமில்லை.
அமுதா வீடு என்றால்
குழலி பார்த்துக் கொள்வாள். திருமணத்திற்குப் பின்னும் பார்த்துக் கொள்வாள் என்று குழலியின்
மீது நம்பிக்கை இருந்தது கர்ணனுக்கு.
ஆனால், ஒரு கணம் கூட
தர்மேந்திரன் இருக்கும் இடத்தில் தன் தங்கை இருக்க கூடாது என்று நினைத்தவன், தர்மாவின்
வருகையை அறிந்து ஆர்த்தியைத் தன் இல்லம் அழைத்து வந்தான்.
இவன் இருக்கும் போது
அமைதியாக இருக்கும் பிருந்தாவும் மங்கையும், அவன் தலை மறைந்ததும் ஆர்த்தியைக் கொத்தித்
தின்னத் தொடங்கி விடுவர்.
அதிலும் பிருந்தா,
ஆண்மை மிடுக்குடன் காணப்பட்ட தர்மாவிற்கு இவள் மனைவியா! அவன் படிப்பென்ன! அழகென்ன!
அவனின் கால் தூசிக்கு இவள் ஈடாவாயா! ஏனோ கடமைக்காகத் தாலி கட்டியிருக்கிறான். வேறு
எதுவும் இல்லை. என்று பலபலப் பேசி ஆர்த்தியின் மனத்தைக் காயப்படுத்தி வைத்திருந்தாள்.
அதற்கு ஏற்றார் போல்
அவனும் குறுஞ்செய்திக்கு எதிர்வினை ஆற்றாததால், போட்டத் திட்டத்தைச் செயல்படுத்தும்
முனைவுடன் தர்மா இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் தான் வாக்கு கொடுத்தாளே!
அதன்படி திருமணம் முடிந்ததும்
இனி அவனுடன் சென்னைத் திரும்பக் கூடாது என்று முடிவெடுத்தாள். ஆனாலும் அதில் அவளால்
உறுதியுடன் நிற்கத்தான் முடியவில்லை.
நிச்சயதார்த்த விழா
இனிதே நடந்து முடிந்தது. குழலியை அழைத்து வந்து மேடை ஏற்றுவது போன்ற சில சடங்குகளைப்
பிருந்தா செய்யட்டும் என்று ஆர்த்தியை ஓரங்கட்டியது மங்கையின் குடும்பம். ஆனால் நெல்லையும்
அமுதாவும் தங்கள் மருமகளை எங்கும் விட்டுக் கொடுக்காது அருகிலேயே வைத்துக் கொண்டனர்.
வாடாப் புன்னகையுடன்
குழலியின் அருகில் மேடையில் நின்றவளின் விழிகள் தன்னைத் தேடுகிறது என்பதைத் தூர நின்று
கவனித்துக் கொண்டிருந்த தர்மாவிற்குள் காதல் ஊற்றெடுக்க வைத்தது.
முதல் முறை அவளைப்
புடவையில் வேறு பார்ப்பதால் உள்ளம் மண்டபத்தில் இசைத்துக் கொண்டிருந்த மேளச் சத்தத்துக்கு
ஏற்றார் போல் ஆட்டம் கண்டது.
கரும்பச்சை நிறத்தில்,
திருத்தமான அலங்காரத்தில் அப்சரஸ்ஸாகத் தெரிந்தாள் ஆர்த்தி. குழலியின் காரணமாக ப்யூட்டி
பார்லர் சென்று, செய்து வந்த ஃபேஷியலில் நட்சத்திரமென முகம் டாலடித்தது.
இவன் இவளை வைத்த கண்
வாங்காது ரசிக்க, அவளோ இன்னும் கூட்டத்தில் தர்மாவைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறாள்.
கீழ் கண்களால் மட்டும் தேடுவதால் அவனைக் கண்டறிவது அவளுக்குச் சிரமம் தான்.
ஏனெனில் நிமிர்ந்து
பார்த்தால், "மொத புருஷன் செத்து முழுசா ஒரு வருஷம் கூட ஆகல, அந்த நினைப்பு இருக்கா
இல்லையா! நீயெல்லாம் இந்தச் சபைல நிக்கவே கூடாது. மூ** ன்னு ஓரங்கட்டிருக்கணும். அதைச்
செய்யாததே உங்கப்பா அப்புறம் உன மாமனார் வீட்டு ஆளுங்களோட பெரிய மனசு தான் காரணம்.
அவங்களுக்காவது மரியாதை கொடுத்து அடக்கமா நில்லு. எல்லாத்தையும் பிருந்தா பார்த்துப்பானு
சொன்னா யாரு கேட்குறா இங்க! அபசகுனம் மாதிரி இவளைப் போய் முன்னாடி நிறுத்திட்டு. நாளைக்கு
பொண்ணுக்கும் பையனுக்கும் எதாவது ஆச்சுன்னா இவ தான் காரணம்." என்ற மங்கையின் பேச்சால்
யாரையும் நிமிர்ந்து பார்க்காது மேடையில் மணப்பெண்ணுக்குப் போட்டியாகத் தலை குனிந்து
நின்றாள்.
நிமிர்ந்து பார்த்தால்
கூட, "அடுத்த புருஷனுக்கு ஆள் தேடுறீயா?" என்று பச்சையாகக் கேட்பாள் பிருந்தா.
அது போன்ற தருணங்களில்
எல்லாம் மனம் தர்மாவைக் காண பரிதவித்தது. அவனின் அண்மையும், நெஞ்சுக்குழியின் சூடும்
நினைவு வந்தது.
‘நீ மகேந்திரனின் மனைவி
அல்ல என்னுடையச் சரி பாதி’ என்பதை தன் செயலில் காட்டும் தர்மேந்திரனைத் துணைக்கு அழைத்தது
மனம்.
விழா முடியும் வரையிலும்
தர்மாவை ஆர்த்தி கண்டுபிடிக்கவில்லை.
மண்டபம் முழுவதும்
அலசி விட்டாள். அவளுக்கு வேண்டிய ஆடவன் மட்டும் அவளின் பார்வையில் படவே இல்லை.
"அங்க என்னடி
பராக்கு பார்த்திட்டு மசமசன்னு நின்னுட்டு இருக்க. காலைல முகூர்த்தம். எல்லாரும் தூங்கி
எழணும். போய் ரூம் சாவி வாங்கிட்டு வா." என்று துரத்தி விட்டார் மங்கை.
சத்திரத்தில் இருந்த
அறையின் சாவியைக் கேட்டு நெல்லையப்பனின் முன் வந்து நின்றாள் ஆர்த்தி.
"அந்தச் சாவியாம்மா!!!
அது தர்மா கைலல்ல இருந்தது." என்றவர் சமையல் மேட்டில் நின்றிருந்த தர்மாவை அழைத்தார்.
மடித்துக் கட்டிய பட்டு
வேட்டி சட்டையில் கம்பீரமாக அவன் நடந்து வர, ஆர்த்தியின் முகம் ஆதவனை கண்ட அல்லியாய்
மலர்ந்து போனது. இதயம் தடம் மாறத் தொடங்கியது. அதுவரை பிருந்தா மங்கை பேசிய பேச்சுக்கள்
பின் சென்று, ஒருவித பரவச நிலையுடன் அவனின் முகத்தைப் பார்த்தபடி சுற்றம் மறந்து நின்றாள்.
அவனை ஓடிச் சென்று அணைக்கச் சொல்லியது அவளின் உள்ளம்.
தன்னைக் கண்டதும் மலர்ந்து
போன பெண்ணவளின் முகத்தால் மலையிறங்கத் தொடங்கிய அவனின் கோபத்தை இறுக்கி பிடித்து நிறுத்தியவன்,
முகத்தை உம்மென வைத்துக் கொண்டு சாவிக் கொத்தை அவளிடம் நீட்டினான்.
"என் மேல கோபமா
இருக்கீங்களா மாமா?" என்றாள் சின்னக் குரலில். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன்,
“நான் எதுக்குங்க கோபப்படணும்?
முதல்ல நான் யாருங்க உங்க மேல கோபப்பட? என்ன உரிமை இருக்கு உங்க மேல எனக்கு?” எனக்
கோபமாகவே கேட்டான். ஆர்த்திக்குக் கண்ணில் நீர் கட்டத் தொடங்கியது.
அவனும் தான் கேட்டுக்
கொண்டிருந்தான் மங்கையின் பேச்சை. உள்ளுக்குள் புசுபுசுவெனக் கோபம் எழுந்தாலும் அவர்களைத்
தடுத்து எதுவும் பேசவில்லை. ஆர்த்தியை என்னேரமும் காப்பாற்ற யாராவது ஒருவர் உடன் இருந்து
கொண்டே இருக்க முடியுமா? அவள் தான் அது போன்ற பேச்சுக்களுக்கு முடிவு கட்டவேண்டும்.
“இந்தாங்க… பிடிங்க…
யார் என்ன சொன்னாலும் வாய மூடிட்டு, அழுதிட்டே, கேட்டுக்கிட்டு நில்லுங்க.” என்று சடைத்தபடி,
அவள் வாங்காது விட்ட சாவியை நீட்டியபடி அவன் நிற்க,
“ஏலேம்! எம்மருமகளை
சத்தம் போடுறவ?” என்றபடி வந்தார் தர்மாவின் சித்தப்பா.
“நான் எதுக்கு சத்தம்
போடணும் சித்தப்பா. சாவியப் பிடிக்கச் சொல்லிட்டு இருக்கேன்.” என்க, வேகமாக சாவியை
வாங்கிக் கொண்டாள்.
“இதுல இத்தனை சாவி
இருக்கு. எதெது எந்தெந்த ரூமுக்கு?” என்றாள் கையில் இருந்த சாவிக் கொத்தைத் திருப்பி
திருப்பி பார்த்தபடி.
“அதுல எழுதிருக்கும்.
நல்லா பாருங்க.” என்றான் தர்மா.
சிறு முறைப்புடன் சென்றவள்,
சில நிமிடங்களிலேயே வந்து தர்மாவின் முன் நின்றாள்.
“அது… ரூம்ல ஃபேன்
லைட்டுன்னு எதுவும் வேலை செய்யல.” என்ற புகாருடன்.
அவளுடன் அறைக்குள்
நுழைந்தவன் அதற்கென இருந்த தனி சுவிட்ச் போர்டை ஆன் செய்ய, மின் விசிறி சுழலத் தொடங்கியது.
அவனின் முகத்தைப் பார்த்தபடி
நின்றிருந்தவளைக் கடந்து அவன் செல்லும் போது,
“எதுக்கு என் மேல கோபமா
இருக்கீங்கன்னு சொல்லிட்டு போலாமே. எனக்கு மனசே இல்ல… அழுகை அழுகையா வருது. ப்ளீஸ்
சொல்லுங்க.” என்றாள் இறைஞ்சல் குரலில்.
ஒரு நொடி அவளை ஏற இறங்கப்
பார்த்தான். பழக்கமே இல்லாத புடவை அவளுக்கு அசௌகரியமாகவும், அங்கங்களை காட்சிப் படுத்திய
பொம்மை போல் இருந்தது. ஜவுளிக்கடை பொம்மைக்குச் சேலை கட்டிவிட்டால், அது விலகும் ஆடையைச்
சரி செய்யாது. அது போல் தான் இருந்தாள் ஆர்த்தி.
அகன்ற கச்சை அவளின்
தோள் பட்டையின் அகலத்தையும், வெளிர் நிறத்தையும் சொல்லியது. குட்டையாகத் தைக்கப்பட்டிருந்த
கை, பெண்ணவளின் புஜங்கள் நிறம் மாறாத அழகிய யானைத் தந்தத்தை ஒத்தது என்றது. கை நிறைய
அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் அவள் அசைவுக்கு ஏற்றார் போல் சத்தமிட்டுக் கொண்டிருந்தது.
மார்பில் அணிந்திருந்த
மாங்காய் மாலை வரி வடிவமாய் கொங்கைகளின் மத்தியில் பொருந்தி நின்றது. மார்பு கச்சைக்குள்
மறைந்திருக்கும் பொன் தாலி, தான் அணிவித்தது என்று எண்ணும் போது, மூச்சு முட்ட வைத்தது
தர்மாவிற்கு.
அண்ணனின் மனைவி என்றவன்
தான் இப்பொழுது தன் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டான். அவள் காட்டிய அதீத அன்பு அவனை
அவள் பால் விழச் செய்து முழுமையாக சொந்தம் கொண்டாடச் சொல்லியது.
உனக்கு அவளிடம் உரிமை
உள்ளது என்றது அந்தத் தாலி. அது மனைவியாய் அவளைப் புத்திக்குள் புகுத்தி, அவளின் துணையாய்
அவனை உணரவைத்தது.
மனத்தில் என்னென்னவோ
எண்ணங்கள் ஓட, அவளை விலக்கிச் செல்ல நினைத்தான்.
“ப்ளீஸ்... சொல்லுங்க,
நான் என்ன பண்ணேன்?" என்று கரம் விரித்து பாதை மறைத்தாள் ஆர்த்தி.
“ம்ச்... சொன்னா அதைத்
திருத்திப்பீங்களா?”
“ம்… திருத்திப்பேன்.”
என வேகமாக குழந்தைத் தனத்துடன் தலையை ஆட்ட, இளநகை படர்ந்தது ஆடவனின் வலிய உதடுகளில்.
"ப்ளீஸ்... சொல்லுங்க."
என இமைச் சுருக்கி அவள் நிற்க,
"உங்க சித்தி
உங்க கிட்ட என்னென்ன சொன்னாங்க?" என்றதும் இதழ் கடித்து நின்றாள் ஆர்த்தி.
“நீங்க கேட்டுட்டீங்களா!”
என்றாள் சத்தம் வெளிவராத காற்றுக் குரலில்.
"ம்… எல்லாத்தையும்…
நான் கேட்டுட்டு தான் இருந்தேன். அவ்ளோ கோபம்ங்க உங்க மேல. இந்த மாதிரி யாரும் பேசக்
கூடாதுன்னு தான் நம்ம கல்யாணம் நடந்தது. அது நினைவு இருக்கா? நீங்க மூ** யா!! அவங்க
அப்படிச் சொன்னா... அமைதியா இருப்பீங்களா? அப்ப நம்ம கல்யாணம் நடந்ததுக்கான அர்த்தம்
என்ன?
நீங்க என்னோட மனைவி…
பொண்டாட்டி… நான் இருக்கேன் உங்களுக்கு. அந்த நினைப்பு உங்களுக்கு இல்லையா?” என்று
கத்தியவன், அவளின் வதனம் நடுங்குவதைக் கண்டு,
“இனி அவங்களப் பேச
விட்டுட்டு நின்னு கேட்டுட்டு இருக்க கூடாது." என்று கண்டிப்புடன் சொல்ல, அவள்
பலமாய் தலையசைத்தாள்.
"அவ்ளோ தானே?
நான் அவங்களுக்குப் பதில் பேசினா போதும் தானே… உங்க கோபம் போய்டும்ல?" என்று மகிழ்ச்சியுடன்
கேட்க, போகாது என்றான் தலையசைத்து.
'இன்னும் என்ன?' என
அவள் சோர்வுறும் போதே,
“யாரைக் கேட்டு நீங்க
உங்க மாமனாரு மாமியார் கூடவே போனீங்க?” என்றான் முன்னை விடக் காட்டமானக் குரலில்.
“அது… நீங்க தானே…
என்னோட விருப்பம் கேட்டீங்க.”
“கேட்டேன் தான். அதுக்காக
உடனே போய்டுறதா!”
இமை கொட்டி முழித்தவளிடம்,
“சரி வந்திட்டீங்க. உங்க அப்பா வீட்டுக்கு எதுக்குங்க போனீங்க? நான் போக சொன்னேனா...
இல்ல என்கிட்ட சொன்னீங்களா! போறேன்னு. நான் வருவேன்னு தெரியும் தானே?" என்றதும்
'தெரியும்' என்பது போல் தலை அசைக்க,
"அப்புறம் ஏன்
போனீங்க?” எனக் காட்டமாகக் கத்தினான்.
“நீங்க எங்க வீட்டு
மருமக. என்னோட மனைவி. நியாயப்படிப் பார்த்தா நீங்க வெண்மா பக்கத்துல அவளோட அண்ணன் மனைவியா…
அதாவது என்னோட மனைவியா நின்னிருக்கணும். உங்க அண்ணனுக்குத் தங்கச்சியா போய் உட்கார்ந்துக்கிட்டீங்க!”
என்றதும் அவளுள் பயப்பந்து கோல் போஸ்ட்டை பிய்த்துக் கொண்டு தூர ஓடிக் கொண்டிருந்தது.
“ஏன் போனீங்க? எப்படி
என் கிட்ட சொல்லாம போகலாம் நீங்க?” என்றவன் அவளின் இரு புஜத்திலும் கரம் வைத்து பிடித்து
உலுக்கினான்.
இமைகளை அழுத்தமாக மூடி
மூடித் திறந்தவள், பாவமாய் அவனை ஏறிட, அவளின் பாவனையில் கவரப்பட்டவனின், கட்டி வைத்த
தாபங்கள் தகர்த்தெறிந்தது.
"ஒரு வேளை நம்மோட
உறவு என்னன்னு நாம தெளிவா பேசி இருந்தா இந்த மாதிரியான குழப்பெல்லாம் வந்திருக்காது.
உங்க அப்பா வீட்டுக்கும் போயிருக்க மாட்டீங்க!" என்றவனின் கரம் மங்கையின் கழுத்தைக்
கட்டியிருந்தது. ஆடவனின் கட்டை விரல் இரண்டும் பெண்ணின் கன்னத்து மென்மையில் மெய் மறந்து
தடவிக் கொடுக்கத் தொடங்கின.
"சொல்லுங்க...
போயிருக்க மாட்டீங்கல்ல?" என்க, அவள் முழித்தாள்.
"சுலேகா என்கிட்ட
நமக்கு இருக்குற உறவுக்கு பேர் என்னன்னு கேட்டா. அதே கேள்விய நான் உங்க கிட்ட கேட்குறேன்.
நமக்குள்ள என்ன உறவு இருக்கு?" என்றான் மெல்லிய குரலில்.
அவனின் நெருக்கமும்,
கன்னத்தைப் பற்றியிருந்தவன் தேகம் உரசாது, அணைக்காது விட்டிருந்த சிறு இடைவெளியும்
பற்றிக் கொண்டு எரிவதைப் போன்றதொரு உணர்வைத் தந்து, அவளுக்குள் சூடு பரவத் தொடங்கியது.
முழு உயரத்திற்கும் ரோமக் கால்கள் எழுந்து நின்று, தேகத்தைச் சிலிர்க்க வைத்தது.
"நான் யாரு உங்களுக்கு?"
என்றதும் என்ன சொல்வது என்று யோசித்தாள். இதற்கு முன் அவன் கேட்ட இதே கேள்விக்கு,
‘ஃப்ரெண்ட்ஸ்.’ என்றவளால் அதே பதிலைச் சொல்ல முடியவில்லை. விழிகளை உருட்டித் தவிப்புடன்
இருந்தவளின் தாடையை உயர்த்தியவன்,
"நான் யாருன்னு
காட்டியிருந்தா யோசிக்காம பதில் சொல்லிருப்பீங்க! காட்டாதது என்னோட தப்பு தான். என்னோட
மனசை உங்க கிட்ட விளக்காததும் என்னோட தப்பு தான்... நீங்க சம்மதிச்சா… தப்பைச் சரி
செஞ்சுப்பேன்." என்றவன் அவளின் சம்மதம் கிடைக்கும் முன்னரே, அதரங்களில் அழுத்தமாய்
தன் உதடுகளைப் பொருத்தியிருந்தான்.
மெல்லிய அதிர்வு இருவருக்குள்ளும்
உண்டானதை இருவருமே உணர்ந்தனர். முதலில் ஆடவனின் பிடியில் இருந்து விலகத் துடித்தது
பெண்மை தான். ஆனால் தேனெடுக்க வேண்டி மொய்த்தவன், தன் பணி முடியாது விடேன் என்பது போல்
பெண்ணவளின் முதுகில் தன் கரத்தைப் படர விட்டு, நெஞ்சோடு சேர்த்திருந்தான்.
மோகத்துடனும் தாபத்துடனும்
போட்டி போட, அந்த நொடியே பெண்ணவளைத் தன் இறுகிய அணைப்பிற்குள் இடையணைத்துக் கொண்டு
வந்திருந்தான்.
காலம் நிமிடங்களைக்
கடந்துச் செல்ல, ஆடவனின் முகம் பெண்ணவளின் கழுத்திற்கு இறங்கி கிறக்கத்துடன் விழிகளைச்
சொருக வைத்தது. விரல்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாக தேகத்தில் ஊற,
அவன் விரல் படாத அங்கங்கள் தணலென தகித்து ஆண்மையின் அரவணைப்புக்காக ஏங்கியது.
வில் என அவனின் கையில்
வளைந்து கொடுத்தவளின் முணங்கல் சத்தம் போதை கொள்ள வைக்க, அப்பொழுதே தன் மனையாளை அறிந்து
விட துடித்தது மணாளனின் உள்ளம்.
ஆனாலும் பேச வேண்டியவை
அனேகம் உள்ளதே. சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பின் பாரியாள் முழுவதும் தனக்கே என்ற
எண்ணம் தோன்ற, பட்டென விலகி நின்றான் தர்மா.
மூச்சுக்கள் பலமாய்
வாங்க, இதயத்துடிப்பைப் பிறர் அறியும் வண்ணம் உணர்ச்சிக் குவியலாய் நின்றவளின் கசங்கி
நலிந்த ஆடையைச் சரி செய்து விட்டு நொடியும் தாமதிக்காது வெளியேறினான்.
என்ன நடந்தது என்பதை
ஆர்த்தி உணரவே, நாணம் பூத்து நின்றது முகம். தாம்பத்தியத்தின் அரிச்சுவடி அறியாதவள்
அல்ல அவள். ஆனால் அது இத்தனை கிறக்கத்துடன் மயக்கத்தைத் தரும் என்று அவள் எண்ணியும்
பார்க்கவில்லை.
மயக்கத்திற்குக் காரணம்
மனம் விரும்பியவனின் தொடுகை என்பது தர்மாவின் மேல் மேலும் மேலும் காதல் கொள்ள வைத்து
கன்னங்களைச் சிவக்கச் செய்தது.
மறுநாள் காலையில் மங்கையின்
பேச்சிற்கு செவி சாய்க்காது, ஓரமாக ஒதுங்கி நிற்காது, உரிமையுடன் குழலியின் பக்கத்தில்
நின்றாள். கர்ணாவின் தங்கையாக அல்ல. தர்மேந்திரனின் மனைவியாக. நெல்லையப்பனின் மருமகளாக.
அவளை தாய், மகள் என இருவரின் விழிகளும் குரோதத்துடன் பார்த்தன. ஆனால் தர்மா கொடுத்த
தைரியம் அவர்களின் அழைப்புக்கு, ஓடிச் செல்லும் கால்களுக்கு விலங்கு பூட்டியது. எதிர்த்து
வாயாடும் அளவிற்கு முன்னேறவில்லை என்றாலும் எதிர்ப்பு காட்டும் அளவிற்கு துணிச்சலை
ஊட்டியிருந்தான் தர்மா.
எங்கு சென்றாலும் அவளைத்
தன் அருகிலேயே வைத்துக் கொண்டான் தர்மா. பார்வை வட்டத்தை விட்டு அவள் விலகாது அடை காத்தான்.
உடலோடு ஒட்டிய தன் இடக்கரத்தை லேசாக விரித்து, அதில் ஆர்த்தியின் வளைக்கரத்தோடு இணைத்து,
சங்கிலி போல் பிணைத்துக் கொண்டு இழுத்துச் சென்றான்.
நேற்று பிருந்தாவின்
பேச்சால் உணவைத் தவிர்த்தவளை, 'நீ இல்லாது நான் பந்தியில் அமர மாட்டேன்.' என்று பக்கத்திலேயே
வைத்துக் கொண்டான். பார்த்து பார்த்து மனைவிக்குப் பரிமாற வைத்தான். சிரிக்க வைத்தான்.
சுலேகா, நிலவன், லூர்து
மேரி, பாக்கியம் மற்றும் அலுவலகத்தில் பணி புரியும் பலர் வந்திருந்தனர் விழாவிற்கு.
அவர்களும் இருவரும் ஜோடிப் போட்டு சுற்றுவதில் மகிழ்ந்து போயினர். விழி நிறைந்து போயிருந்தது
அவர்களின் நலத்தை விரும்பிய நட்புகளுக்கு.
ஆர்த்தியின் சின்னச்
சின்ன செயலில் அக்கறை கொண்டு, அவளைத் தன் ரசனை மிகு பார்வையில் உள்ளிழுத்துக் கொண்டவனுக்கு
சுலேகா மற்றும் நிலவனின் கேலிகள் காதில் விழவே இல்லை.
திருமணம் நன் முறையில்
நடந்தேறி, சத்திரத்தைக் காலி செய்து விட்டு வீடு திரும்பினர் அனைவரும்.
இதற்கு முன் ஆர்த்தியுடன்
தன் இல்லம் வந்திருக்கிறான் தான். ஆனால் இப்பொழுது மனைவியாக அவளை ஏற்றப் பின், கரம்
பற்றி அழைத்து வந்ததில் பேரானந்தம்.
"போதும்ப்பா…
இனியும் நீங்க நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்க நாடகம் முடியுற தருணம் வந்திடுச்சி."
என்று வந்த குரலால் தர்மாவின் இதயம் சுக்கு சுக்காகிப் போனது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..