அத்தியாயம்: 18
சென்னையின் மாலை நேர
கூட்ட நெரிசலுக்குள் சிக்கி சிதறி, வாகனங்களை முகச் சடைப்புடன் ஓட்டிக் கொண்டிருக்கும்
ஓட்டுனர்களுக்கு மத்தியில், தர்மா மட்டும் ஒருவித பரவச நிலையில், காற்றில் மிதப்பது
போல் தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
அவனின் சிந்தனைகள்
மொத்தமும் களவாடப்பட்டு ஆர்த்தி என்ற பெண்ணிடம் நிலைகொண்டிருந்தன. ஏதோ இப்பொழுது தான்
முதல் முறை காதல் என்ற ஒன்றை உணர்வது போல் எண்ணங்கள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தாள்
பெண்.
இன்று காலையில் தன்
அணைப்பிற்குள் இருந்தவளின் முகமும், தேகம் சிலிர்த்து தன் தீண்டலைக் கிரகித்த பெண்ணவளின்
பூ உடலும் அவனைக் காலங்களைக் கடக்க வைத்தது. சுற்றத்தை மங்கச் செய்தது. இருவரின் வாழ்விலும்
இதற்கு முன் நிகழ்ந்த யாவையும் மறக்க வைத்து, ஆர்த்தியுடன் இல்லறம் புகச் சொல்லி அடம்
பிடித்தது.
முதல் முதலாக ஒரு பெண்ணின்
அணைப்பை முழுதாக உணர்ந்த அவனின் உடல் அவனுக்கே எதிரியாகிப் போனது. அவளின் உடல் சூட்டிலேயே
உன் ஜீவன் உயிர் பெறும் என்றதால் அவளை நாடிச் செல்லத் துடித்தது.
எப்பொழுதடா பணி முடியும்.
எப்பொழுது அவளைக் காண்போம் என்ற மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவன், தன் பைக்கை அந்தத்
துணிக்கடையின் முன் நிறுத்தினான். கண்கள் அவனை வரவேற்ற அனைவரையும் தாண்டி தன்னவளிடம்
சென்றன.
அமுதா, இளஞ்சிவப்பு
நிறத்தில் ஒரு புடவையை எடுத்து ஆர்த்தியின் மீது வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.
"உன்னோட நிறத்துக்கு
இது பொருத்தமா இருக்கு ஆர்த்திம்மா." என்று தன் மருமகளுக்குத் திருஷ்டி வழித்துக்
கொண்டிருந்தார்.
கண்ணாடி முன் நின்று,
தன் தோளில் கிடந்த புடவையில் தன் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, குறு
நகையுடன் தன் பின்னால் வந்து நின்ற தர்மாவால் படபடக்க தொடங்கியது நெஞ்சம்.
சிறு வியர்வைப் பூக்க,
நிலம் நோக்கியவள், மெல்ல தலை உயர்த்தி கண்ணாடியில் தெரிந்த தர்மாவை ஏறிட்டு, 'நன்றாக
உள்ளதா?' என்று பார்வையாலேயே அபிப்பிராயம் கேட்டாள்.
அவனும் புருவங்களை
உயர்த்தி, பார்வையால் அவளை அளவெடுத்துக் கொண்டிருக்க, "அண்ணா, இந்த கலர் அண்ணிக்கு
நல்லா இருக்குமா?" என்று மற்றொரு புடவையுடன் வந்தாள் குழலி. திரும்பித் தங்கையிடம்
பேசிக் கொண்டிருந்தாலும், ஆர்த்தி பார்வையால் வினவியதற்கு கண்களைச் சிமிட்டிப் பார்வையாலேயே
பதில் கூறினான். அதை அவளும் உணர்ந்து கதுப்புகளில் வெம்மையைப் படரவிட்டாள்.
"எல்லாம் எடுத்து
முடிச்சாச்சா? இல்ல பாக்கி இருக்கா?" என்று பெண்கள் இருவரிடமும் பொதுவாக கேட்க,
குழலியை முந்திக் கொண்டு, "ம்... எல்லாம் முடிச்சாச்சு. இன்னும் ஸ்கெர்ட் மட்டும்
தான் பாக்கி." என்க,
"கல்யாணப் பொண்ணுக்கு
எடுக்க வேண்டியது எடுத்தாச்சான்னு அண்ணன் கேட்டாங்க அண்ணி. நீங்க உங்களுக்கு வாங்க
வேண்டியதை அடுக்குறீங்க." எனக் குழலி கேலியாகச் சொல்ல,
'அப்படியா! எனக்குக்
கிடையாதா?' என்பது போல் அவனை இடையில் கை வைத்து ஆர்த்தி விழியாலேயே கேட்க, அந்த ஐந்தடியில்
அரக்கு வண்ண, பட்டியாலா சுடிதார் அணிந்திருந்தவளை, சிலை என வடித்துக் கொண்டிருந்தது
அவனின் மனம்.
தர்மா எதுவும் சொல்லாது,
குழலி எடுத்து வைத்திருக்கும் புடவைகளைக் காண அவளுடன் நடக்கத் தொடங்கினான்.
அத்தனை நேரம் அவனைப்
பார்த்து கோபமாக, "ஏன் காலையில் அவ்வாறு என்னிடம் நடந்துக் கொண்டீர்கள்? இது தியாவிற்குச்
செய்யும் துரோகம் அல்லவா? இனி என்னிடம் அப்படி நடந்துக் கொள்ளக் கூடாது" எனக்
கண்டிக்க வேண்டும், கோபம் கொள்ள வேண்டும் என்றிருந்தவளின் பார்வை, அவனைக் கண்டதும்
அனல் கக்கும் முன் நாணத்தைச் சிந்தி விட்டது. அதுவும் அவளே அவளுக்கு விரோதியாகிப் போனப்
பொழுது என்ன செய்வது.
இப்பொழுதும் அவளே பேசியும்,
அவன் அவளிடம் பேசாது கண்டு கொள்ளாது செல்கிறானே என்று பெண்ணவளின் பூஞ்சை மனம் பரிதவிக்க,
அவளின் குழம்பிய முகத்தையும்,
வாடிய புருவத்தையும் தூர நின்று பார்த்தவன் அவளைச் சீண்டி விளையாடாது அமைதியாக ரசித்தான்.
சேர்த்து வைத்த மொத்த
ஆசையையும் கட்டவிழ்த்து விட ஏற்ற நேரத்திற்காக காத்திருந்தான். அந்த நேரத்தில் அவள்
தன்னை முழுதாக உணர்ந்திருக்க வேண்டும். தான் அவள் மீது கொண்ட காதலை புரிந்துக் கொள்ள
வேண்டும்.
தன் எண்ணவோட்டத்தை
அவளிடம் முறையாக, தெளிவாகக் கூறியிருக்க வேண்டும் என்று நினைத்தான்.
"இது பழனி மாமாக்கும்
அத்தைக்கும். இது சிந்தாமணி சித்தப்பாக்கு..." எனச் சொந்தங்களுக்கும் உறவுகளுக்கும்
உடைகளை எடுத்து வைத்து பட்டுப் புடவைப் பிரிவில் பணத்தைச் செலுத்தி விட்டு வெளியேறியது
குடும்பம். அது இரு வீட்டிலும் நடக்கும் கடைசி திருமணம் என்பதால் உறவுகள் அனைத்திற்கும்
உடைகள் வாங்கப்பட்டன.
அடுத்ததாக டிசைனர்
புடவை இருக்கும் பக்கம் குழலி அனைவரையும் இழுத்துச் செல்ல, "இதை பில்லு போடுங்க."
என்று தர்மாவின் கையில் ரகசியமாய் ஒரு பட்டுப் புடவையைத் திணித்தாள் ஆர்த்தி.
"உங்களுக்காங்க?"
என்று வியப்புடன் கேட்டான். ஏனெனில் அவளுக்குப் புடவை பிடிக்காது.
'கட்டத் தெரியாத அதை
எதற்குப் பணம் கொடுத்து வாங்கி அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும்.' என்பவள், வேண்டாம் என்று விடுவாள். இதுவரை எத்தனையோ
முறை கடைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அவளின் பார்வை படுவது நீளமான பாவாடையில்
தான்.
ஏன் சமீபத்தில் நடந்த
நிலவனின் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளில் கொடுக்கப்பட்ட விருந்திற்குக் கூட தரைத்
தொட்ட நீளப் பாவாடையுடன் கூடிய சோலி மாடல் உடையைத் தான் தேர்வு செய்தாள். வித விதமான
ஸ்கெர்ட் தான் அவளின் பிரிய உடை. சேலை இருக்கும் பக்கம் கரு விழிகளைக் கூடச் செல்ல
அனுமதிக்க மாட்டாள்.
அப்படிப்பட்டவள் புடவையை
பில் போடச் சொல்வது ஏன்? என வியந்தபடி விசாரித்தான்.
"இது... எனக்காக
இல்ல... அண்ணிக்காக."
"வெண்மாக்கா?
அவளுக்குப் பட்டு எடுத்து பில் போட்டாச்சேங்க! தனியா எதுக்கு இன்னொரு பில்?"
"ம்ச்... ஒரு
அண்ணன் கேட்குற கேள்வியா இது? உங்க தங்கச்சிக்குத் தானேன்னு சொல்றேன். போட மாட்டீங்களா?."
என்று மேலும் இரண்டை எடுத்து வந்து கொடுக்க,
"அதான் அப்பா
வாங்கிட்டாரே! பிறகு எதுக்குங்க தனியா வாங்கணும்.”
“கல்யாணத்துக்கு.”
“காலையிலேயே அப்பாக்கிட்ட
கல்யாணத்துக்கு ஆகுற காசைக் கொடுத்திட்டேன்." எனத் தங்கையின் திருமணச் செலவில்
பங்கேற்றதாகச் சொல்ல,
"அது... மகனா
அப்பாவோட பொறுப்புல நீங்க கொடுக்குற பங்கு. இது அண்ணனா தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமை.
ம்... பில் பண்ணுங்க." என்றுவிட்டு,
'காசை கைல கொடுத்திட்டா
தன்னால வேலையாகிடுமா! இறங்கி பார்க்கணும். மகனா அப்பா கூட இருந்து வேலை செய்யணும்.
முன்ன மாதிரி சிங்கிள் ஆளா! கல்யாணம் ஆகிடுச்சு. இன்னமும் பொறுப்பில்லாம பேசிட்டு.'
என்று இதழ் கோணி முணுமுணுத்தவளை, 'தெரிந்து தான் பேசுகிறாளா? இல்லையா!' என்ற கேள்வியுடன்
பார்த்தான்.
அவனுக்கு முறைப்பைத்
தந்து விட்டு கூட்டத்துடன் ஐக்கியமாகிக் கொண்டாள் ஆர்த்தி.
அதுவே சொல்லியது, அவள்
அர்த்தம் புரியாது சொல்லிச் செல்கிறாள் என்று. ஆனாலும், சொன்ன சேதியில் உவகை கொண்டவன்,
"என்னை மிரட்டி
விரட்டி திட்டுற அளவுக்கு முன்னேறிட்டீங்க." என்று சத்தமாக மொழிந்து விட்டு, பணம்
கட்டும் இடத்தில் வரிசையில் நின்றான்.
அங்கு கர்ணன் ஏற்கனவே
நின்றுக் கொண்டிருந்தான். அதுவும் ஆர்த்தி ரகசியமாக தர்மாவிடம் பேசியதையும், கண்களை
உருட்டிக் கடிந்துக் கொண்டதையும் பார்த்துக் கொண்டு. ஆர்த்தியின் மீது விழுந்த தர்மாவின்
ரசனை மிகுந்த பார்வையில் நிம்மதி உண்டானது அவனுக்கு.
அதே சந்தோஷத்துடன்
கர்ணன் தர்மாவைப் பார்த்து சினேகமானச் சிரிப்பைத் தர, தர்மா அவனைக் கண்டு கொள்ளாது
முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
பஞ்சாயத்தில் கர்ணன்
பேசிய அதிகப்படியான வார்த்தைகளால் உண்டானக் கோபம், கறித்துண்டாய் நிறம் மாறியிருந்ததே
தவிர, முழுதாகக் கனல் அணைந்து போகவில்லை.
அதைக் கர்ணனும் உணர்ந்திருந்தான்
தான். ஆனாலும் தன் தங்கையின் தற்போதைய சந்தோஷத்திற்குக் காரணம் தர்மா தான் என்பதாலும்,
தன் மனைவியின் அண்ணன் என்பதாலும் அவனிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டி, வழியச்
சென்று பேசினான். ஆனால் தர்மா முறுக்கிக் கொண்டு திரும்புறான்.
ஆர்த்தி புடவையோடு
விடாது, அருகில் இருந்த நகைக் கடைக்கும் தர்மாவை இழுத்துச் சென்று, குழலி அணிந்துக்
கொள்ள இரண்டு ஜோடி வளையல்களை வாங்க வைத்தாள்.
"பல மாச சம்பளத்தை
ஒரே நாள்ல முழுசாக் காலி பண்ணுற ட்ரெயினிங்கை, எங்க இருந்துங்க கத்துக்கிட்டீங்க?"
எனக் கேலி செய்தாலும் ஆர்த்தியின் இழுவிசைக்கு இசைந்து கொடுத்தான்.
இரவு 10:40 மணிக்குச்
செல்லும் அந்தியோதயா விரைவு வண்டியில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால், உணவை முடித்துக்
கொண்டு இரயில்வே நிலையம் சென்றனர் அனைவரும்.
ஊர் போய் இறங்க உச்சிப்
பொழுதாகிவிடும் என்பதால் சில பழங்களையும் திண்பண்டங்களையும் வாங்கி வந்து கொடுத்தான்
தர்மா.
ரயில் வந்து விட, இருக்கை
எண்ணைப் பார்த்து அழைத்துச் சென்று, உடமைகளை உயரே தூக்கி வைத்தனர் கர்ணனும் தர்மாவும்.
“எத்திராஜ் அண்ணனுக்குச்
சொல்லிருக்கேன். நேரா ஸ்டேஷனுக்கே காரை எடுத்திட்டு வந்திடுவாரு. லக்கேஜ்ஜை தூக்குறேன்னு
சிரமப்படாதீங்க.” என்றவன் திரும்பி தன் மனைவியைப் பார்க்க, ஆர்த்தி அமுதாவை விட்டு
விலகவே இல்லை. அவளுக்கு அவரிடம் சொல்ல பல கதைகள் இருந்ததால் அவரின் அருகில் அமர்ந்து
வாய் மூடாது பேசிக் கொண்டே இருந்தாள்.
குழலி, "அண்ணா,
தண்ணி பாட்டில்..." என்றதும், இறங்கிச் சென்றவன் வாங்கி விட்டு திரும்புகையில்
கர்ணன் முன் வந்து நின்றான்.
"என்னை மன்னிச்சிடுங்க
மச்சான். பஞ்சாயத்துல நடந்த சம்பவத்துக்கு நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கிறேன். அன்னைக்கு
உங்கள ஏமாத்தணும்னு நினைச்சி, மிரட்டி, பயங்காட்டி கல்யாணத்தை நடத்தி வைக்கல. என் தங்கச்சியோட
எதிர்காலம் பாழாகிடக் கூடாதுன்னு தான் அப்படிப் பேசினேன். தப்பு தான்.
ஆனாலும் அமுதாத்தை
வந்து தெளிவா விளக்கிப் பேசும் போது, சரின்னு பட்டது. கல்யாணம் முடிச்சி நீங்களும்
குட்டிம்மாவை உங்க கூட கூட்டிட்டு போய்ட்டீங்க. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு இருந்திட்டே
இருந்தது.
இப்ப நீங்களும் ஆர்த்தியும்
சந்தோஷமா அன்னியோன்யமா இருக்குறதை பார்க்கும் போது, நாங்க நினைச்சதும், செஞ்சி வச்சதும்
தப்பில்லன்னு தோணுது மச்சான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. குட்டிம்மாவை நான் இப்படி பார்க்கத்தான்
விரும்பினேன். அவளோட முகத்துல இருக்குற புன்னகைய வாட விடாம அவளைப் புரிஞ்சிக்கிற ஒருத்தனைத்
தான் அவளுக்குப் புருஷனா கொண்டு வந்திருக்கோம்னு நினைக்கும் போது, சொல்ல வார்த்தை இல்ல
மச்சான். கடவுள் உங்க ரூபத்துல அவளுக்கான வாழ்க்கையைக் கொடுத்திருக்காரு.
எங்க நடந்ததை வன்மமா
மனசுல தேக்கி வச்சி என் தங்கச்சிக் கூட வாழாம போய்டுவீங்களோன்னு ரொம்பப் பயந்திட்டு
இருந்தேன். அப்படி இல்லங்கவும்... நிம்மதியா இருக்கு மச்சான்." எனத் தங்கைக்கு
நல் வாழ்க்கை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பேசிக் கொண்டே போக,
"யாரு, யாரு கூட வாழ்ந்தா?" என்று சூடாகக் கேட்டான்
தர்மா.
தன் குடும்பம் தனக்கே
தெரியாம திட்டமிட்டுத் தனக்குச் செய்த துரோகத்தால் உண்டாகிய ரணம் ஆறிக் கொண்டிருந்தது.
கர்ணாவின் பேச்சு அந்தக் காயத்தை கீறி விட்டது போன்றும், கனலென சிவந்து கிடந்த நெஞ்சத்தை
விசிறியால் வீசி நெருப்பைப் பற்ற வைத்தது போன்றும் இருந்தது தர்மேந்திரனுக்கு.
மனநிறைவுடன், முகம்
கொள்ள திருப்தியுடன் நின்றவனின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் சாயலை இல்லாமல் ஆக்க
வேண்டும் என்ற ஆவேசம் தோன்ற,
"நானா? உன் தங்கச்சி
கூடவா! அப்படித் தான் நினைச்சிட்டு இருக்கியா? ஹ்ம்... இந்தக் கல்யாணமே ஒரு நாடகம்.
பொம்மை கல்யாணம். என் தங்கச்சி அவளோட மனசு விரும்புன ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறதுக்காக,
நானும் உன்னோட குட்டிம்மாவும் சேர்ந்து நடத்துன நாடகம். நாங்க நடிச்சிட்டு இருக்கோம்
புருஷன் பொண்டாட்டியா! உங்க மேரேஜ் முடியணும்ங்கிறதுக்காகத் தான். அது முடியவும்..."
பிரிந்திருப்போம் என்பது போல் சைகை செய்தவன்,
"எனக்கு ஆல் ரெடி
லவ்வர் இருக்கா கர்ணா. நான் அவ கூடத் தான் வாழணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன்.
உங்க எல்லாரோட குறுக்கீடும் இல்லாம இருந்திருந்தா…” என்றவனின் பேச்சு கர்ணனுக்கு அமிலமாகத்
தான் இருந்தது. அதை அவனின் முகம் அப்பட்டமாக காட்டியது. அவனை மேலும் ரணமாக்க எண்ணியவன்,
“இது அவங்களுக்கும்
தெரியும். ஆறு மாசம் தான்னு பேசி வச்சி தான் அவங்க கழுத்துல தாலியே கட்டினேன். குழந்தை
பிறந்திருந்தாலும் இல்லன்னாலும் எங்க கல்யாணத்துக்கு உயிர் கொஞ்ச மாசம் தான். உன் கல்யாணம்
முடியும் போது உன்னோட வீட்டுல வந்து இருக்கப் போறது என் தங்கச்சி மட்டுமில்ல உன் குட்டிம்மாவும்
தான். கூட்டிட்டு போய் வாழ வை... இல்லன்னா என்னை மாதிரி வேற ஒரு இளிச்சவாயனாப் பார்த்துக்
கட்டி வை." என்று ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாது கர்ணனைக் காயப்படுத்தும்
நோக்கத்தில் பேசினான் தர்மா.
அவனின் மனம் அவனையே
சாடியது. ‘இளிச்சவாயனா… அப்படி எவரேனும் வந்தால் ஆர்த்தியை நீ கொடுத்து விடுவாயா? உன்னால்
முடியுமா அது? காலையில் நீ அவளிடம் நடந்துக் கொண்டது நடிப்பா? அல்லது கடையில் வைத்து
முழுங்கும் பார்வை பார்த்தாயே அது நடிப்பா? தியாவிடம் கடைசியாக எப்பொழுது பேசினாய்?
என்ன பேசினாய்? அன்று ஆர்த்தியின் முன் உச்சியில் முத்தமிட்டு நானிருக்கிறேன் என்றாயே
அதற்கெல்லாம் என்ன பெயர்? உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவிற்கு என்ன தான்
பெயர்?
முரண்பாடாக இருக்கிறது
உன் பேச்சும் எண்ணமும் நடவடிக்கைகளும். என்ன வேண்டும் உனக்கு? ஒரு நிலையில் நின்று
தெளிந்த பதிலைச் சொல்… ஆர்த்தியா! தியாவா! இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களை
நிம்மதியாக வாழ விடு. பெண்ணின் உணர்வுகளோடு விளையாடி ஏமாற்றாதே.’ என அவனின் மனசாட்சி
அவனை வதக்கிக் கொண்டிருந்தது.
இன்று அவர்களின் உறவிற்கு
ஒரு பெயரை முடிவு செய்ய வேண்டும் என்று முடிவுடன் மனைவியை ஏறிட்டான் தர்மா.
ரயில் புறப்படுவதற்காக
ஆரஞ்சு விளக்கு எரிய, அவனின் பார்வை ஆர்த்தியின் சென்றது, 'ரயில் நகரும் முன் இறங்கி
விடு.' என்று கட்டளையை அவளுக்குத் தந்தபடி ஜன்னல் ஓரமாக அவன் நிற்க,
"அண்ணனுக்குக்
கல்யாணம். தங்கச்சி கூட இருக்க வேண்டாமா? கல்யாணத்துக்கு இன்னும் ரொம்ப நாள்லாம் இல்லை.
கொஞ்சம் நாள் தான் இருக்கு. அதுனால நாம ஆர்த்தியக் கையோட கூட்டிட்டுப் போய்டுறது நல்லதுன்னு
எனக்குத் தோணுது." என்றார் அமுதா.
"அதுவும் சரிதான்.
ஒத்தப் பொம்பளப்பிள்ள இருக்கு. மாப்பிள்ளைக்கு லீவ் கிடைக்காதுன்னு வேற சொல்லிட்டாரு.
கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்து இறங்கினா நல்லாவா இருக்கும். எனக்குத் தங்கச்சி
சொல்றது தான் சரின்னு படுது நெல்லை." என்று தன் ஆதரவை இசக்கிமுத்துவும் தர, நெல்லையப்பன்
இவர்களின் பேச்சில் அதிர்ந்து போய் நின்றிருந்த மகனைப் பார்த்தார்.
அவனைப் புரிந்ததாலோ
என்னவோ, "புருஷன் கூட வந்து இறங்குறது தான் பொம்பளப்பிள்ளைக்கு அழகு. அதுக ஜோடியா
வரட்டும். இல்லன்னா ஊர் பலத பேசும். அவனுக்கு எப்ப தோது இருக்கோ அப்ப கூட்டிட்டு வரட்டும்.
கல்யாண வேலை பார்க்க ஊருக்குள்ள நம்ம சனம் இருக்கு. போதாதா? நீ புறப்படும்மா. பெட்டி
நகர்றதுக்குள்ள பார்த்து இறங்கு." என மருமகளைத் துரத்த, அதற்கு மறுப்பாகக் கர்ணன்
எதுவோ சொல்ல, நெல்லையப்பன் சொல்ல எனப் பேசிக் கொண்டே இருந்தனர்.
தர்மா, "நீங்க
என்னங்க சொல்றீங்க? என்னோட கிளம்பி வரப்போறீங்களா? இல்ல இப்பவே இவங்க கூட?" என
அவளின் அபிப்பிராயம் கேட்டவனுக்குள், 'உங்க கூட வர்றேன்.' என்று சொல்லி விட மாட்டாளா
என்ற தவிப்பு இருந்தது.
பாவம் அதையெல்லாம்
புரிந்துக் கொள்ளவில்லை அவள். காலையில் நடந்தது, கடையில் நடந்தது, ஏற்கனவே போட்டு வைத்த
திட்டம், அவ்வப்போது அவனின் அண்மையிலும் ஆண்மையிலும் சிலிர்க்கும் உடலையும் உள்ளத்தையும்
நினைத்து பயம் கொண்டவள், ‘நானும் இவர்களுடன் புறப்பட்டுச் செல்கிறேன்’ என்றுவிட்டாள்.
ஒன்றும் செய்ய முடியாது
நின்றான் தர்மா. அத்தனை நேரம் நின்றுக் கொண்டிருந்த ரயிலும் அவனின் மனைவியைத் தாங்கிக்
கொண்டு, புறப்பட்டுச் சென்று விட, யாருமற்று தனியாக நின்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.
வீடு வந்து சேர்ந்தவனுக்கு,
உள்ளுக்குள் உருளும் ஏமாற்றத்தைக் குறைக்கவே முடியவில்லை. ஆனால் குறைக்கும் வண்ணம்
வந்தது, "பத்திரமா வீட்டுக்குப் போய்ட்டீங்களா மாமா?" என்று கேட்டு ஆர்த்தி
அனுப்பிய குறுஞ்செய்தி.
உடலும் மனமும் உடனடியாக
விண்ணுக்குப் பறக்க,
"ம்..."
என்று அனுப்பியவன், தொடர்ந்து வந்த நாள்களில் ஃபோனிலேயே கிடந்தான்.
"டேய்... வேலைல
கவனத்தை வை டா. உன்னைய நம்பித்தான் இந்தக் கல்பாக்கமே இருக்கு. இவன்கிட்ட இருந்து ஃபோனைப்
பிடுங்கி வைக்கணும் முதல்ல." என்று நிலவன் எச்சரித்தும் கேட்கவில்லை.
"என்ன மச்சி!
பொண்டாட்டி ஊர்ல இல்லாத ரெண்டே நாள்ல குச்சியா இளைச்சிட்ட! ஆனா மூஞ்சி மட்டும் டாலடிக்குதே.
எப்படி? ஃபோன்லயே முங்கிக் கிடக்கியாமே. அவ்ளோ ஆசை வச்சிருக்கியா மச்சி உன் பொண்டாட்டி
மேல?" எனக் கேலி செய்த சுலேகாவையும் கண்டு கொள்ளவில்லை.
அவனைப் பிடித்துக்
கொண்ட ஆர்த்தி பூதம் ஆட்டு ஆட்டு என்று ஆட்டிப் படைத்தது அவனை.
சரியாகத் திருமணத்திற்கு
இரு நாள்களுக்கு முன் தான் விடுமுறை கிடைத்தது அவனுக்கு. அதுவும் நான்கு நாள்கள் தான்.
உடனே பூஞ்சோலை வந்தான் தர்மா.
வந்தவன் முதலில் கண்டது
முற்றிலும் மாறியிருந்த தன் வீட்டைத் தான்.
கல்யாணம் என்பதால்
வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அதுவும் ஏற்கனவே இருந்த நிறத்தில் இல்லாது வேறு வண்ணத்தில்.
கூடவே வீட்டின் உட்கட்டமைப்பும் மாற்றப்பட்டிருந்தது.
குறிப்பாக மகேந்திரன்
ஆர்த்தி வாழ்ந்த அறை இடிக்கப்பட்டு நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் குடோனாக கொட்டகை
போடப்பட்டது.
தங்கள் வீடு வரும்
ஆர்த்திக்கு எந்த விதத்திலும் மகேந்திரனுடன் வாழ்ந்த பழைய நாள்கள் நினைவிற்கு வந்து
விடக் கூடாது என்று அமுதா கவனமாக அனைத்தையும் மாற்றி விட்டார்.
சிறு வியப்புடன் தாயை
ஏறிட, அவர் அவனிடம் பாராமுகம் காட்டினார். அவரின் முகத்தில் சிந்தனைகள் கோடுகள் தெரிய,
திருமணம் குறித்த கவலையோ என நினைத்து தந்தைக்குத் தோள் கொடுத்து தங்கையின் திருமண வேலையில்
இறங்கினான்.
வந்த அன்றே தர்மேந்திரன்
ஆர்த்தியைத் தேடினான் தான்.
"நம்ம வீட்டுல
தான் இத்தனை நாளும் இருந்தாங்கண்ணா. அப்புறம், ‘என் தங்கச்சி என்னோட சைடுல அங்க தான்
இருக்கணும்.’னு சொல்லி காலைல தான் அவரு வந்து கூட்டிட்டு போனாரு." என்ற பதில்
குழலியிடம் இருந்து கிடைத்தது.
கர்ணனின் வேலை தான்
இது என்று ஆத்திரம் வந்தது.
“அவன் வந்து கூப்பிட்டா
உடனே போய்டுவாங்களா? என்கிட்ட சொல்ல வேண்டாமா! நான் யாரோவா அவங்களுக்கு?” என்று முசுமுசுவெனக்
கோபம் ஏறியது அவனுள்.
பூஞ்சோலை வந்து ஒன்றரை
நாள் முழுதாக முடிந்த நிலையிலும் அவளைச் சென்று பார்க்கவில்லை. ஏன் நிச்சயம் நடந்த
பின்னரும் அவளிம் பேசவில்லை. கோபமாக இருக்கிறானாம் அவளின் மீது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..