அத்தியாயம்: 17
நொடியில் நெஞ்சுக்
கூட்டை நிரப்பி, உடனே காலி செய்யும் காற்று ஜனித்திருப்பதற்கானப் பிராணவாயுவை உடலெங்கும்
தந்து உயிருடன் கலக்கச் செய்வதைப் போல், ஆர்த்தி தர்மாவின் உயிருடன் இணையத் தொடங்கியிருந்தாள்.
நட்பு என்றவனே அந்த
எல்லைக்குள் கட்டுப்பட்டு இருக்க இயலாது, தன் ஆன்மா உணர்ந்த நேசத்தை, உடலும் உணர வேண்டினான்.
அவளின் மெய் அன்பு வேண்டி அவனின் உள்மனம், கதறும் கதறலை வாய்விட்டுச் சொல்ல முடியாது
பார்வையிலேயே வெளிக்காட்டிக் கொண்டிருந்தான் தர்மா.
ஆனால் அதை எதையும்
உணரும் நிலையில் தான் ஆர்த்தி இல்லை. அவளின் பிள்ளை மனம் அவனின் பார்வையின் பொருளை
வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியாது கடந்துச் சென்றது. தன்னை அரவணைத்து ஆறுதல்
தர ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவன் காட்டிய எதிர்வினைகளை அழகாய் உள்வாங்கிக்
கொண்டவளால், அதன் அர்த்தங்களை ஆராயத் தெரியவில்லை.
அல்லது ஆராய்ந்தால்
அவனை இழந்து விடுவோமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்.
"அது... எனக்குத்
தனியாத் தூங்க பயமா இருக்கு. நேத்து மாதிரியே இன்னைக்கும் நான்... உங்க பாய்க்குப்
பக்கத்துல மெத்தையப் போட்டுக்கவா? ஓரமா… படுத்துப்பேன். தொல்லை பண்ண மாட்டேன்?"
என்ற தயங்கியபடி கேட்டவளை, 'தொல்லையா! நீயா!' என்று பார்த்து வைத்து, அருகில் துயில்
கொள்ள அனுமதி அளித்தான்.
ஏனெனில் நேற்றைய இரவு
முழுவதும் அவளைத் தன் நெஞ்சில் தாங்கிய படி அல்லவா உறங்கினான். அதைத் தொல்லை என்று
எப்படிச் சொல்ல முடியும்.
சுவரைப் பார்த்தபடி
திரும்பிக் கொண்டவளை நேற்று போல் நெஞ்சில் இழுத்துக் கொள்ளும் வேகம் வந்தது. ஆனால்
அவள் என்ன நினைப்பாளோ! என்று யோசித்தவனுக்கு அவள் அருகில் இருப்பது ஆனந்தத்தைத் தந்தது.
அவளின் முதுகை வெறித்தபடியே உறங்கிப் போனான்.
காலை அவளின் மதி முகத்திலேயே
துவங்க, இரவும் அந்த அம்புலியிடமே முடிவது சுகமாகத்தான் இருந்தது அவனுக்கு.
தன் நலனில் அக்கறை
காட்டும் அந்தக் குழந்தை முகத்தை இப்பொழுது அள்ளிக் கொள்ளும்படி உள்ளுக்குள் ஒரு பூதம்
சொல்லியது. அது அதை மட்டும் சொல்லவில்லை.
உரிமையுடன் அவனுக்கு
சாப்பாட்டு பொதியை நீட்டிய பெண்ணவளின் வளைக் கரத்தைப் பிடித்திழுத்து தன் கைச் சிறைக்குள்
வைக்கச் சொல்லியது.
அவள் நீட்டும் புதுவகையான
உணவை அவளின் செப்பிதழுக்குள் ஊட்டி விடச் சொல்லி விரல்கள் பரபரக்க வைத்தது.
சமையலறைக்குள் அவனைப்
புகவே விடாது இரு கரம் நீட்டி மறித்து நிற்கும் போது, பெண்ணவளின் இடை பற்றி தூக்கிச்
செல்ல உந்தியது.
அவள் தூக்கிச் சொருகி
நடக்கும் பாவாடை இடையில் தெரியும் வாழைத்தண்டு கால்களை வருடும் எண்ணத்தைத் தோன்ற வைத்தது.
எப்பொழுதாவது டீசர்ட்டுக்குள்
இருந்து எட்டிப் பார்க்கும் அவளின் மெல்லிடை, அவனின் சித்தத்தைச் சிதைக்க போதுமானதாக
இருந்தது.
பக்கம் இருந்தும்,
ஒரே வீட்டில் தனித்தனியாக உறங்கும் அந்த இரவு, முள்ளின் மீது தவமிருப்பவனைப் போல் தர்மாவின்
உணர்ச்சிகளை ஊசி முனைக்கு ஏற்றியது.
இதுவரை அண்ணன் மனைவி
என்ற நினைவில் இடைவெளி விட்டு பழகி வந்தவனை, அந்த இடைவெளியைக் களவாடி தூக்கி எறிந்து
கள்வனாய் மாறச் சொல்லியது.
இல்லை கணவனாய் உரிமை
தேடியது.
அன்று மொட்டை மாடியில்
ஆர்த்தியை மனைவியாக ஏற்க முடியாது என்றதற்கு சுலேகாவும் லூர்தும் சாடிய வார்த்தைகளும்,
நிலவன் கூறிச் சென்ற காதலி மனைவி வித்தியாசமும் இப்பொழுது அவனின் புத்திக்குள் புகுந்து
ஆர்த்தியைத் தன் மனைவியாக, புதிய மனுசியாக, ஒரு பெண்ணாகப் பார்க்க வைத்தது. இயல்பாய்
விரல் தொடுவதும், தோளில் கரம் போட்டு ஆர்த்தியை அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாக்கிக்
கொண்டான். அணைப்பதும், அடித்து பேசுவதும் தவறில்லை என்ற அளவிற்குத் தங்களின் உறவை முன்னேற்றிக்
கொண்டே சென்றான்.
நாள்கள் அவனின் பரிதவிப்பிலும்
அவளின் கனிவிலும் சென்றன.
இது தவறு. உனக்கொரு
காதலி இருக்கிறாள். அவளிடம் நான் உனக்காகக் காத்திருக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாய்
என்று கூறி அணை போடப் பார்க்க, ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அது, உடைப்பெடுத்து கசியத்
தொடங்கிய நாள் அது.
தன் விழிகளை நேர் கொண்டு
பார்க்கும் பெண்ணவளுக்குள் தன் ஏகாந்த நேசத்தின் சாயல் தெரிகிறதா என்று தினமும் தேடித்
தேடி தோற்றுப் போனவனுக்கு, சிறு நம்பிக்கை கிடைத்த நாள் அது.
அது குழலியின் திருமணத்திற்காகப்
புடவை எடுக்க நெல்லையப்பன் குடும்பமும், இசக்கிமுத்துவின் குடும்பமும் விடியல் வேளையில்
தர்மாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
"அமுதாம்மா...
மாமா... அண்ணே... அப்பா... வாங்க வாங்க... பிரயாணம் வசதியா இருந்துச்சா?" என்று
புள்ளி மானின் துள்ளலுடன் ஆர்த்தி வரவேற்றாள்.
தர்மா அழைத்துச் சென்ற
பின் தினமும் ஃபோனில் உரையாடினாலும் நேரில் மூன்று மாதங்கள் கடந்து இப்போது தான் குடும்பமே
நேரில் பார்க்கிறது அவளை.
"எல்லாம் வசதியாத்
தான் மா இருந்தது. தர்மா டிக்கெட்டை முன்னாடியே போட்டுக் கொடுத்திட்டான்ல. அதுனால சௌகரியத்துக்குக்
குறையில்ல. ஏறி படுத்து கண்ண மூடினது தான் ஞாபகம் இருக்கு, உடனே எழுப்பி விட்டாங்க,
ஊர் வந்திடுச்சின்னு..." என வெள்ளையாய்ச் சிரித்தார் நெல்லையப்பன்.
குழலியின் கையைப் பிடித்துக்
கொண்டு, அவளின் தந்தையிடம் பேசியதைக் காட்டிலும் அவள் அதிகம் வாயாடியதும் நலன் விசாரித்ததும்
நெல்லையப்பனைத் தான். அவரின் மீது அவளுக்கு அத்தனை அன்பு இருந்தது.
இசக்கிமுத்து வீட்டைச்
சுற்றிப் பார்த்தார். அளவாக இருந்த பொருள்களில் மனம் சற்று சுருங்கியது அவருக்கு.
"அப்பா ஊர்ல இருந்து
ஜாமான்கள் ஏத்தி விடவாத்தா. அம்புட்டும் உனக்குன்னு வாங்கி வச்சது தான்." எனப்
பெண்ணிற்குச் சீர் செய்ய நினைக்க,
"அதெல்லாம் வேண்டாம்பா.
தேவையான எல்லாத்தையும் மாமாவே வாங்கி போட்டாரு. வேணும்னு சொன்னாலும் மாமாவே வாங்கி
வைப்பாரு. அவங்க இருக்காங்க எனக்கு." என்று சொன்னது, பால் பாக்கெட்டுடன் வந்து
நின்ற தர்மாவிற்குத் தேனாய் இனித்தது.
கூடவே அன்று சுலேகாவிடம்
உளறியது போல் ஆறு மாதம் என்று எதையாவது சொல்லி விடுவாளோ என்று அவன் பயப்பட்டது அவனுக்கு
மட்டுமே தெரியும்.
தர்மாவைக் கண்டதும்,
"காபி போட்டு எடுத்திட்டு வரேன்." என்று இசக்கிமுத்துவிடம் சொல்லி விட்டு,
"எல்லாம் எடுத்து
வைச்சிருக்கேன். வாங்க..." என்று அவனை அறைக்குள் அழைத்துச் சென்று தலையில் எண்ணெய்
விட்டு தேய்த்தாள்.
அவளுக்குத் தெரியாது
அவன் ஏற்கனவே குளிர்ந்து போய் தான் இருக்கிறான் என்று.
பொதுவாக பல பெண்களுக்கு
இருக்கும் குணங்களுள் ஒன்று, பிறந்த வீட்டாரைக் கண்டதும் கணவனை மறந்து விட்டு அவர்களுடன்
இலயித்துக் கொள்வது.
'நாள் கணக்குல அவனுங்க
மூஞ்சில தானே முழிச்சிட்டு இருக்கோம். ஒரு சில மணி நேரம் கூட நாங்க எங்க பிறந்த வீட்டு
ஆளுங்க கூட பேசக் கூடாதாக்கும்.' என்று நொடித்துக் கொண்டு கணவனைக் கண்டு கொள்ளாது இருப்பர்.
ஆனால், ஆர்த்தி மறக்கவில்லை.
அவனின் தேவைகளையும் வழக்கமாகச் செய்யும் சேவைகளையும் செய்துக் கொண்டே, வந்திருந்தவர்களுக்கு
குடிக்க, சாப்பிட என எல்லாவற்றையும் செய்தாள்.
அவள் ஒன்றியிருப்பது
தன் குடும்பத்தாருடன் என்பதே அவனைக் குளிர்விக்கப் போதுமானதாக இருந்தது.
அமுதாவும் கர்ணனும்
வந்ததில் இருந்து ஆர்த்தியிடம் பேசாது, தலை முதல் கால் வரை அவளை ஆராயும் பார்வைப் பார்த்தார்கள்.
அவளின் வதனத்தில் எவ்வித
மாற்றமும் இல்லாதது, ஆர்த்தியைத் தர்மா மனைவியாக உடலளவில் ஏற்கவில்லை என்று சொன்னது.
ஆனாலும் ஆர்த்தியின் மலர்ந்திருக்கும் முகத்தையும், "வேற எதுவும் வாங்கணுமாங்க?"
என்று அவளிடம் கேட்டு கேட்டு வாங்கி வந்த தர்மாவையும் பார்க்கையில், இருவர் மட்டும்
இருக்கும் இந்தக் கூட்டிற்குத் தலைவன் தர்மேந்திரன் என்றும், அதில் தலைவிக்கானப் பதவியில்
ஆர்த்தியை அமர வைத்து அழகு பார்க்கிறான் என்றும் நிஜத்தைப் புரிய வைத்தது.
இப்போதைக்கு அது போதும்.
மீதியைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்று நிம்மதி பெருமூச்சை விட்டார் அமுதா.
ரயிலில் வந்திறங்கியவர்கள்,
காலை உணவை ஆர்த்தியின் கையால் முடித்து விட்டு, பட்டு எடுத்து விட்டு, அப்படியே ரயில்
ஏறி விடுவதாகத் திட்டம். திருமணத்திற்கு இரு வாரங்களே இருந்தன. ஊரில் செய்ய வேண்டிய
வேலைகள் கிடப்பில் கிடப்பதால் ஒரே நாளில் பட்டு எடுத்து, சென்னையில் தெரிந்தவர்களுக்கு
வைக்க வேண்டிய அழைப்பிதழையும் வைத்து விட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
கூடத்தில் அனைவரும்
உணவருந்திக் கொண்டிருக்க, குளித்து முடித்து வந்தவனுக்கு ஐயன் செய்த சட்டையை எடுத்துக்
கொண்டு அறைக்குள் ஓடினாள் ஆர்த்தி. வந்தவள் அவனின் முகம் பார்த்து தயங்கியபடி நிற்க,
"எதுவா இருந்தாலும்
ஓப்பனா பேசணும்னு சொல்லிருக்கேன்லங்க." என்று கண்டித்து விட்டு, அவளின் முகம்
பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்த,
“அது… பட்டு எடுக்க
நானும் அண்ணா கூட அமுதாம்மா கூட போகவா…?” என்றாள் இதழ்களைக் கடித்துக் கொண்டும், கைகளைப்
பிசைந்துக் கொண்டும். அவளின் பாவனையில் லேசாக சிரித்தவன்,
“உங்களுக்கு விருப்பம்னா
போய்ட்டு வாங்க. ஏன் அனுமதிலாம் கேட்குறீங்க! உங்களுக்கானதை இனி நீங்க தான் தேர்ந்தெடுக்கணும்.
அனுமதி கேட்க வேண்டாம். தகவலா சொன்னா மட்டும் போதும். கிளம்புங்க.” என்றவன் வேலைக்குச்
செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.
"அப்ப வேலை முடிஞ்சதும்
ஸ்டேஷனுக்கு ஜவுளிக்கடைக்கு நேரா வந்திடுங்க. அவங்கள ரயில் ஏத்தி விட்டுட்டு நாம பைக்ல
வீட்டுக்கு வருவோம்." என்றபடி, அவனின் தோள் பையை எடுத்து வைத்து வாசல் வரை வழியனுப்பி
வைத்தவளுக்கு 'அப்பாடா...' என நிம்மதி பெருமூச்சு வந்தது.
ஆனால் விட்ட காற்றை
மீண்டும் உள்ளிழுப்பது போல், படி இறங்கிச் சென்றவன் மீண்டும் ஏறி வந்தான்.
வீட்டிற்குள் செல்லாது
நின்றிருந்தவள், "எதையும் மறந்திட்டீங்களா?" என அக்கறையுடன் வினவியபடி அவனின்
அருகில் செல்ல, அவளுக்கு ஆம் எனத் தலையசைத்தவன்,
"வெண்மா உங்க
சர்டிஃபிகேட்டை எடுத்திட்டு வர்றதா சொல்லிருந்தா. அதை வாங்கி வைக்க மறந்திட்டேன். நைட்
ட்ரெயின் ஏறிடுவா. அப்புறம் உங்கண்ணன்கிட்ட சொல்லி கொரியர் அனுப்பச் சொல்லணும்..."
என்று பேசியபடி குழலியை அழைக்கப் போக, அவனின் கரம் பற்றி இழுத்தவள், எக்கி அவனின் வாயைச்
சட்டென மூடினாள்.
எக்கிய வேகத்திலும்
அவன் இதழ் மூடிய வேகத்திலும் நிலை தடுமாறி அவனின் மீதே சாய, தர்மாவும் அவளின் இடையில்
கரம் கொடுத்து இழுத்துக் கொண்டு படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவரில் சாய்ந்து நின்றான்.
அவளாக அவனிடம் வந்து
பேசுவதையே ஆபூர்வம் என்றவனுக்கு அவளின் தொடுகை எல்லாம் வரப் பிரசாதம் போன்றது. இதில்
ஆச்சரியம் என்னவென்றால் அவனின் தீண்டலையும், அவளின் செயலையும் ஆர்த்தி உணர்வே இல்லை
என்பது தான்.
"இப்ப இது அவசியம்
தேவையா? நல்ல விசயத்துக்காக வந்திருக்காங்க. கண்டதை பேசி வைக்காதீங்க." என்று
மிரட்ட,
சான்றிதழ்கள்... கண்டவைகளா!!...
என்று நினைத்ததை வாய் விட்டுக் கேட்க முடியாது அவளின் தவிர் விரல்களுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தது
ஆடவனின் உதடுகள்.
அவனின் மீது மலர் அங்கம்
உரச சாய்ந்து நிற்கிறோம் என்ற நினைவே இல்லாதவள், விழிகளை உருட்டி,
"முதல்ல அண்ணாக்கும்
குழலிக்கும் கல்யாணம் முடியட்டும். அதுவரை அதைப் பத்தி பேசவே கூடாது. சரியா?"
என்க, அவன் பேசவில்லை.
"சரின்னு சொல்லுங்க..."
என்று வாயை மூடிக் கொண்டு அச்சமூட்டும் வண்ணம் கேட்க,
ஒரு கையால் அவளின்
கரம் விலக்கி உதடுகளைச் சிறை மீட்டவன், மறு கரத்தின் இறுக்கத்தைக் கூட்டி, பெண்ணவளின்
உடல் மொத்தத்தையும் தன்னுடலுடன் பொருத்தி இறுக்கிக் கொண்டான்.
அவளின் கத்தி போன்ற
கூர் மூக்கில், வைரம் போல் மின்னிய மூக்குத்தியின் நுனியில் தன் நாசியால் வருடியவன்,
"சரி... இனி வெண்மா கல்யாணம் முடியுற வரை அதைப் பத்தி பேச மாட்டேன்..." என்று
பெண்ணவளின் மூக்கோடு மூக்கு உரசி, இதழ்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு கிசுகிசுப்பாக
மொழிந்தான்.
அவனின் பேச்சின் பொருள்
உணர்ந்தவள், அழகாய் இதழ் விரிக்க,
"ஆனா... கல்யாணம்
முடியவும் உங்க வீடு புகுந்து எடுத்திட்டு வந்திடுவேன்... சரியா?" என்று வினவியபடி
அணைப்பை மேலும் இறுக்க, இதழ்கள் நான்கும் மெல்லிய ஒற்றலுக்கு ஆளானது...
அதைச் சற்றும் எதிர்
பாராதவளின் தேகத்தின் ரோமக்கால்கள் கூச்சத்துடன் எழுந்து நிற்க, அவளை அணைத்து நின்றவனால்
மொத்தத்தையும் உணர முடிந்தது.
விழி விலக்காது அவள்
மெய் மறந்து நின்ற நொடிகளை தனக்கு சாதகமாக்க நினைத்தும், ஒற்றலை முத்தமாக உருமாற்றும்
முயற்சியிலும் நெருங்கியவனை,
"நான் எதுவும்
பார்க்கல... யாரும் பார்க்க கூடாதுன்னா இந்த மாதிரி காட்சியெல்லாத்தையும் வீட்டுக்குள்ள
வச்சிக்கணும். வாசல்ல, அதுவும் ஆஃபிஸ்க்கு கிளம்புற நேரத்துல படிக்கட்டுல வைச்சுக்க
கூடாது." என்ற சுலேகாவின் குரலில் பட்டென விலகி வீட்டிற்குள் ஓடினாள் ஆர்த்தி.
"இனி உன்னை மச்சின்னு
கூப்பிடக் கூடாது. கரடின்னு தான் கூப்பிடணும். வா..." என்று சுலேகாவை கேலி செய்தவன்,
ஆர்த்தி சென்ற பாதையை பார்த்து விட்டு நீண்ட பெருமூச்சை விட்டபடி தன் தலையிலேயே தட்டிக்
கொண்டு அலுவலகப் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
உள்ளே வந்த ஆர்த்திக்கு
மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவனின் 'சரியா...' என்ற கேள்வியும், பட்டும் படாமலும்
உரசி சென்ற வலிய உதட்டின் மென்மை கலந்த வெம்மையும், மூக்கில் கீறிய அவனின் மீசைக் குத்தலும்
உடலை என்னென்னமோ செய்தது.
அன்றைய நாள் முழுவதும்
அவளுக்குள் இருந்த சிலிர்ப்பு அடங்கவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. உடல், ஒரு
குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்சார பாய்ச்சலுக்கு ஆளானது.
முத்தத்தை அறியாதவள்
அல்ல அவள். மொத்தமாக அனைத்தையும் அவளுக்குக் கற்றுத் தந்து விட்டுச் சென்றிருந்தான்
ஒருவன்.
ஆதலால் ஏற்கனவே அறிந்த
ஒன்றுதான் அது. ஆனால் அதில் இது போன்ற மின்சார தாக்குதல்கள் இல்லையே.
அவளின் மனத்தில் மகேந்திரனுக்கே
நிரந்தர இடம் இல்லாத போது அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை மட்டும் எப்படி வைத்திருப்பாள்.
மறந்து விட்டாள். இல்லை அது நினைவிலேயே இல்லை போலும்.
தாம்பத்தியம் என்பது
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பரிமாறப்படுவது, உடல்களும் உள்ளங்களும் தான். உள்ளங்களோடு
இயைந்து உடல்கள் இணையும் போது அது ஆத்மார்த்தமான உறவை உண்டாக்கிறது.
இது நம் நாடுகளில்
நிகழும் வழக்கமான நிகழ்வு தான். முதலில் உடல்கள் ஒன்றிணைந்து, பிறகு அந்தக் கூடல் உள்ளங்களுக்கு
பாலம் அமைக்கிறது. சில வருடங்களில் உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் இணைந்து அந்த திருமண
உறவில் இருக்கும் தம்பதியரை மனமொத்த வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது.
ஆர்த்தி விடயத்தில்
இந்த செயல்முறை முழுமை அடையும் முன்னரே... துணை இல்லாது போய்விட்டது. பாதியில் அறுபட்டு
விட்டது அவளின் திருமண வாழ்க்கை.
பழைய உறவு முறிந்து
விட்டதால் அமையும் புது உறவை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்
மறுமணம் செய்துக் கொண்டவர்கள். அது மேலே சொன்னது போல் உடலைப் பரிமாறி பின் உள்ளத்தை
பரிமாறுகிறது. மறுமணத்தில் பலருக்கு உள்ளங்கள் பரிமாறப்படுவதே இல்லை. அது வேறு விடயம்.
ஆனால் ஆர்த்தி - தர்மேந்திரனின்
உறவில் உள்ளங்கள் நட்பு என்ற பெயரில் ஏற்கனவே இடம் மாறி விட்டது. இப்பொழுது உடல்கள்
அடுத்த நிலைக்குச் செல்லத் துடிக்க, அதை தர்மாவே முன்னெடுத்துச் சென்றான். அதை ஆர்த்தியால்
தான் ஏற்க முடியவில்லை.
மகேந்திரனை மனத்தில்
நிறுத்தியதால் இல்லை. தியாவை நினைத்ததால் உண்டான குற்ற உணர்வு.
மகேந்திரனின் அத்தியாயம்
முடிந்து போன ஒன்று. ஆனால் தியா அப்படி அல்லவே.
ஐந்தாண்டு காதல் என்றவனின்
மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறோம் என்று நினைத்தவள், முட்டாள் தனமான முடிவுடன் ரயிலில்
ஏற்றி விட வந்தவர்களுடன் தானும் ஏறிச் சென்று விட்டாள்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..