அத்தியாயம்: 48
" ஞாயித்துக்கிழம எப்பயும் போல மெரினா பக்கத்துல காலைல ஏழு மணிக்கி ஆரம்பிச்சி, ஆளுனர் மாளிகை வரை ஊர்வலமா போய், நம்ம மனுவ அவர்கிட்ட குடுப்போம். நிச்சயம் கேஸ் மத்திய அரசுக்குக் கைமாறி நமக்கு நீதி கிடைக்கும்." என்றார் கண்ணாயிரம் உறுதியாக.
" லேடிஸ் காலேஜ்ல இருந்து, டீநகர் தெரசா டிரஸ்ட்ல இருந்துன்னு மொத்தமும் ஆறு க்ரூப்பா கிண்டில ஒன்னு சேருவோம். நான் இன்வைட் பண்ண எல்லா அமைப்புங்க கிட்ட இருந்தும் கட்டாயம் கலந்துக்கிறோம்னு பதில் வந்திருக்கு. இது போதும்னு நினைக்கிறேன்." என்றார் மங்கையர்கரசி.
சாரதா, "இது பத்தாது. இன்னும் நிறைய பேரோட சப்போர்ட் நமக்கு வேணும்."
"அன்றைய தினம் நடக்கப்போற பேரணிய பத்தி எல்லா மீடியாக்கும் இன்ஃபார்ம் பண்ணிருக்கேன் ம்மா. டிவிட்டர் பேஸ்புக்குன்னு எல்லா இடத்துலயும் நாம உருவாக்குன Justice for சுடர் ங்கிற # டாக் பேசப்படும்."
"அத்தோட பெண்களுக்கு எதிராக வன்முறை களையப்படணும்னு ஒரு கையெழுத்து இயக்கத்த ஆரம்பிச்சி, ஒரு வாரத்துக்கு முன்னாடி மால், காலேஜ் மாதிரியான மக்கள் நடமாடுற இடத்துல கேம்ப் போட்டு ஆதரவு கேட்க எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கு ம்மா." எனப் பைரவியும் சாருவும் சொல்ல, போராட்டம் குறித்த மாநாடு பல மணி நேரம் நடைபெற்றது.
அனைத்தும் முடிந்து பைரவி சாரதாவிடம் தனித்து பேசினாள். எனெனில் அரசனூருக்கும் சுடருக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி அறிந்து கொள்ள. ஆனால் அவரோ,
"வேண்டாம் பைரவி. நான் உன்னைப் பெத்தெடுக்கலன்னாலும் நீயும் எனக்குப் பொண்ணு மாதிரி தான். நீங்க உதவி செய்றதோட நிப்பாட்டிக்கங்க. போராட நாங்க இருக்கோம். நீங்க தான் என்னோட பலமே. அதுனால சுடர் கேஸ்ஸ நீ விசாரிக்காத பைரவி." என்றார். பைரவி அவரை மறுத்து பேசும் நிலையில் இல்லை.
ஏனெனில் எப்போது சுடரின் மரணம் காரணமாக மது பைரவி வாழ்க்கையில் பூகம்பம் உண்டானதோ அப்போதிருந்தே அவர் இதைத்தான் கூறி வருகிறார்.
'வேண்டாம் விட்டு விலகி நின்று உன் குடும்ப வாழ்க்கை நிறைவுடன் வாழ்.' என்று. அதனால் தான் பைரவியால் சுடரின் விசயத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க முடிவதில்லை.
"எப்படியும் நமக்குத் தேவையான எந்தத் தகவலும் இவங்க வாய்ல இருந்தோ! கண்ணாயிரம் அங்கில் வாய்ல இருந்தோ! வரப் போறது இல்ல. வேற எந்த வாய் நமக்கு கத சொல்லும். ம்… எப்படி நடந்தத தெரிஞ்சிக்கலாம்.. " என யோசித்தவள் சுடரின் அறைக்குள் சென்றாள்.
இதுவரை பல முறை வந்து ஏதாவது கிடைக்கிறதா என நோட்டம் விட்ட இடம் தான். ஆனால் இன்று ராக்கி பாய் கூறிய அறிவுரையால் கண்களில் கண்ணாடிக்குப் பதில் பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு வந்துள்ளாள். எதாவது கிடைக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினாள்..
"நம்ம ரூம்ம விட நீட்டாலா இருக்கு இது." என நினைத்தவள், எந்தப் பொருளும் கலையாது ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தாள்.
"கண்டிப்பா நமக்கு ஏதாவது ஒன்னு கிடைக்கும். டைரி எழுதுற பழக்கம் சுடரக்காக்கு கிடையாது. அப்ப வேற எதுலயாது எதையாது எழுதி வைச்சிருக்காங்களா! நல்லாத் தேடு பைரவி. ஒரு டிடெக்டிவ்வா மாதிரி எல்லாத்தையும் பாரு." எனத் தேடியவளுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அதை அப்படிச் சொல்லக் கூடாது எதையும் அவள் சந்தேக கண்ணோடு பார்க்கவில்லை.
அடச்ச… எனச் சோர்ந்து போனவள் வெளியே வர, அவளின் பார்வை அங்கிருந்த மடிக்கணினியின் மேல் விழுந்தது. அது முன்பு சுடர் பயன்படுத்தியது. இப்போது அது தாமரையின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேகமாக அதை ஓப்பன் செய்து பார்த்தாள். அதில் இரு யூசர்கள் இருப்பதாக காட்டியது. ஒன்று தாமரை உபயோகித்துக் கொண்டிருக்கிறாள். மற்றொன்று சுடர் பயன்படுத்தியது. அதை க்ளிக் செய்ய, அது பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே திறப்பேன் என்றது.
"அதுக்கு நான் எங்க போறது." என்று யோசிக்கும் போதே தாமரை கண்ணில் பட்டாள்.
"ஹே லோட்டஸ், உனக்கு சுடர் அக்கா யூசரோட பாஸ்வேர்டு தெரியுமா?"
"சுடரக்காவோடதா. ம்... தெரியாது... " என யோசித்து தெரியாது என்றவளைக் கோபமாக முறைத்தாள்.
"நிஜம்மா பைரவி அக்கா எனக்கு சுடரக்காவோட பாஸ்வேர்டு தெரியாது. இது அவங்களோடது தான். ஆனா நான் இதத் தேவைக்கு மட்டும் தான் யூஸ் பண்ணுவேன். மத்தபடி உள்ள என்னென்ன இருக்குன்னு நோண்ட மாட்டேன். "
"அப்பறம் எப்படி நான் சுரடக்காவ பத்தி தெரிஞ்சிக்கிறது." என யோசிக்க,
" நான் அண்ணன கூப்பிட வா. அதுக்கிட்ட கேளுங்க. அண்ணாவும் அக்காவும் நல்லா பேசிப்பாங்க. ரொம்ப நேரம் பேசிப்பாங்க."
"அப்ப நீ வேஸ்ட்டு லோட்டஸ்ன்னு சொல்லு. " எனச் சொல்லி நகர்ந்தவள் பின் திரும்பி அவளிடம் வந்து, "உன்னோட அப்பா யார் மேலயோ கேஸ் போட்டிருக்காருன்னு கேள்வி பட்டேன். அதுனால உன்னோட பெரியப்பா கூட அடிக்கடி தகராறு வருதாம்ல. கேஸ் கிட்டத்தட்ட அது ஏழெட்டு வர்ஷமா நடக்குதாமே. அதுக்கும் சுடர் அக்காவுக்கும் எதாவது லிங்க் இருக்கா?." எனக் கேட்க,
"எனக்குத் தெரியாதே.. " என ராகம் பாடியவளை முறைத்தாள் பைரவி.
"மொறைக்காதிங்க க்கா.. எனக்கு எதுவுமே தெரியாது. ஏன்னா என்னை எதுலயும் கூட்டு சேத்துக்க மாட்டாங்க. நான் எதாவது கேட்டா சின்ன பொண்ணுன்னு சொல்லி துரத்தி விட்டுடுவாங்க. " எனச் சோகமாகக் கூறினாள்.
"இவா கிட்ட போய் கேட்டு என் நேரத்த வேஸ்ட் பண்ணேன் பாரு. " எனத் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தாள். தாமரை, அண்ணனை அழைத்தபடி பைரவியை இழுத்துச் செல்ல, அவர்களைத் தொடர்ந்து சாருவும் பாண்டியின் அறைக்குள் சென்றாள்.
"நீங்க கேக்குற எல்லாத்துக்கும் அண்ணெ பதில் சொல்லும். ண்ணா… ண்ணா… சுடரக்கா பத்தி கேக்குறாங்க. வந்து சொல்லுங்கண்ணா." எனக் கத்த, பாண்டி வந்தான், என்ன? எனக் கேட்டபடி.
எதைக் கேட்டாலும் தாயை அழைக்கும் பச்சிளம் குழந்தை போல் அண்ணனை அழைத்த தாமரையைப் பார்க்கும் போது, 'இவளப் போய் ராக்கி பாய்க்காக செலட் பண்ணிட்டேனே. ச்ச… பெரிய தப்பு பண்ணிட்டேன். பரவாயில்லை அத நானே திருத்திக்கிறேன். வேற நல்ல பொண்ணா பாத்து பேச்சுலரா சுத்துற ராக்கி பாய்ய ஃபேமிலி மேன்னா மாத்திடலாம். இவா வேண்டாம்...' என முணுமுணுத்துக் கொண்டிருந்தவளின் முன் வந்தான் பாண்டி.
"அண்ணா கண்ணாயிரம் அங்கில் போட்ட கேஸ் எதுண்ணா? அதுக்கும் சுடரக்காக்கும் சம்மந்தம் இருக்கா."
"அப்படி நேரடியாக சொல்லிட முடியாது. ஏன்னா கேஸ் போடும் போது சுடர் காலேஜ் படிச்சிட்டு இருந்தா. பணத் தேவைக்காக ரகு மாமா அரசனூர் வீட்ட விக்க முயற்சி பண்ணும் போது, அந்த இடத்த வாங்கன்னு கம்பெனிகாரனுங்க மாமாட்ட பேரம் பேசிருக்கானுங்க. நல்ல விலைக்கி தான் விலை போற மாதிரி இருந்தது.
எங்கப்பா கூட, ' எல்லாரும் ஒரே ஆளுக்கு நிலத்த வித்தா அவெ பெரியாளாகிடுவான். அசலூர் காரெ இந்த ஊரையே வளச்சி போட்டு நம்மல அன்னகாவடியா மாத்திடுவான்.' னு.. பொழம்பிக்கிட்டே இருப்பாரு. ஆனாலும் மாமா கேக்கல. சரியா கெரயம் பண்ணும் போது பதிவாளர் ஆஃபீஸ்ல வச்சி சுடர் வேண்டாம்னு தடுத்திட்டா. அது தான் அந்த கம்பெனிக்காரனுங்க கூட சுடருக்கு ஏற்பட்ட முதல் மோதல். அப்பப்ப வருவா. அத்தோட அப்பா போட்ட அந்த கேஸ்க்கு என்னென்ன பண்ணணும்னு ஐடியா குடுப்பா."
"எதுக்காக டவர க்ளோஸ் பண்ணச் சொல்லி அங்கில் கேஸ் போட்டு எதையாது பண்ணிட்டே இருக்காரு. டவர் கம்பெனிக்காரெ என்ன பண்ணான். "
"ஒன்னா ரெண்டா என்னத்த சொல்ல. ஐடி கம்பெனிங்கிற பேர்ல பொண்டுகளும் பயளுகலும் ராப் பொழுதில அடிக்கிற கூத்து இருக்கே. அப்பப்பா… நிலத்துல பாட்டில வீசுறது. அங்கங்க ஏசி வசதியோட பார் முளைக்கிறதுன்னு நிறைய இருக்கு. இதுவர திருட்டுன்னு ஒன்னு நடந்ததே இல்ல எங்க ஊருல. ஆனா இந்த டவருக்காரெ வந்துக்கு அப்றம்… எவெ எவெனோ ஊருக்குள்ள நடமாடுறான். எட்டு மணிக்கி மேல பொம்பளப்பிள்ளைங்க வெளில போகவே முடியல.
ஒரு நாடோ… இல்ல ஊரே வளர்ச்சி அடையும் போது மக்கள் மட்டுமில்ல கூடவே குற்றங்களும் வளந்திட்டே தான் போகும்னு சுடர் சொல்லுவா.
அந்த கம்பெனிக்காரெ ப்ராடு பண்றானுங்கன்னு முதல்ல சொன்னதே சுடர் தான். சாதாரண லேண்டு கேஸ்ஸு வேற மாறி மாற காரணமே சுடர் தான்."
"என்ன ப்ராடு தனம்?"
"என்னன்னா கொஞ்சம் கொஞ்சமா விவசாயம் பாத்தாலும், நிலத்துல புல்லாது மொளக்கும்.
அத மேய எங்க ஊர்ல எல்லார் வீட்டுலயும் ஆடு மாடு கோழின்னு வளத்து வியாபாரம் பாத்தானுங்க. இவனுங்க ஏதோ பண்ணி எல்லாத்தையும் கொன்னுட்டானுங்க. ஏன் புல்லு கூட முளைக்கல.
எப்படினு தான் தெரியல. அதுகளே வாழ முடியாத இடத்துல மனுஷனும் வாழ முடியாம போய்டும். அதுனால இவனுங்க ஊர விட்டு துரத்தணும்னு என்னென்னமோ படம்லாம் காட்டி பேசுனா. எனக்குச் சரியா புரியலன்னாலும், அந்த டவர் எங்க ஊர்ல இருக்க கூடாது. அது மட்டும் புரிஞ்சது." என நீண்ட தன் உரையை முடித்தான்.
பாண்டிக்கு புரியாது அப்படி என்ன சுடர் சொல்லி இருப்பாள்? ஏன் அந்த செல்ஃபோன் டவரில் மீது இத்தனை கோபம், இங்கு கூடாது என்று சொல்லும் அளவுக்கு? என யோசித்தவள், கண்ணாயிரம் A1 telecommunication industry மேல் போட்ட வழக்கை பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.
"தாமர உங்க ஊர்ல அந்த கம்பெனி டவர் மட்டுமா இருக்கு. வேற எந்த டவரும் இல்லையா." எனச் சாரு கேட்க.
"இருக்கு அக்கா நிறையவே இருக்கு." என பல நிறுவனங்களின் பெயரை சொல்ல.
பாண்டி, "ஆனா சுடர் A1 கம்பெனி டவர மட்டும் தான் மூடச் சொல்லி அப்பாவ ஊக்கப்படுத்திட்டே இருந்தா. கூடவே யார்யாரையோ கூட்டிட்டு வந்து நிறைய வேல பாத்தா. வக்கீல் அரேஜ் பண்ணி தந்தா."
பைரவி, "ஏன்?”
"தெரியலயே. "
" அங்கில்க்கு தெரியும்ல!" என அவரைப் பார்த்து கேட்க, அவரும் அந்த கம்பெனி டவர் இருக்க கூடாது, ஊரில் பலர் அதனால் எப்படியெல்லாம் பாதிக்க பட்டுள்ளனர் என்பதைப் பட்டியலிட்டாரே தவிர, ஏன்? என்ற முக்கிய காரணத்தைச் சொல்லவில்லை என்று தோன்றியது பைரவிக்கு.
பைரவிக்கு எதுவோ உள்ளது என்று தோன்றியது. அந்த கேஸ்ஸை எடுத்து நடத்தும் வழக்கறிஞரின் நம்பரை வாங்கி கொண்டு, முழுமையாக எதுவும் தெரியாது அறைகுறையான தகவலுடன் தன் சாப்பரை எடுத்தாள்.
பாண்டி, "பைரவி, சுடரக்காவோட மரணத்துக்கும், தாமரையோட கடத்தலுக்கும் இடைல சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறியா."
"இருக்கும்னு இப்ப உறுதியா தோணுதுண்ணா.. ஏன் கேக்குறீங்க? உங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கா."
" ம்… ஊர்ல ஏ பெரியப்பெங்காரெ ஒரு தினுசா மிரட்டும் போதே, அப்பா போட்ட கேஸ்ஸ வாப்பஸ் வாங்க வைக்க தாமரைய கடத்த செஞ்சிருப்பாய்ங்களோன்னு ஒரு சந்தேகம்."
"நாளைக்கி ஈவ்னிங் மாலுக்கு வாங்கண்ணா. உங்க கிட்ட சில விசயங்கள காட்டணும். அதுல உங்களுக்கு எதாவது க்ளூ கிடைக்கும்.. " என்றவள் சாப்பர் ஸ்டாட் செய்ய அது மாட்டேன் என மக்கர் செய்தது. பாண்டி கொண்டு வந்து விடுவதாக காரில் ஏற்றிக் கொண்டான் இருவரையும்.
சாரு அமைதியாக பார்வையாளராக மாறிப்போக, பைரவி பேசிக் கொண்டே, அதாவது பாண்டியிடம் கேள்விக் கணைகளைக் தொடுத்தபடியே வந்தாள். அவளுக்கு நிறைய நிறைய கேள்விகள் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தன.
"சுடரோட அப்பா எப்படி இறந்தாங்க? எங்க இறந்தாங்க?"
"புத்து நோய்ன்னு சொன்னாங்க. "
"ரகு அங்கில் ஏன் அரசனூர்லயே தங்கிட்டாரு?"
"அப்பாக்கும் மகளுக்கும் சண்ட. அதுனால அந்த வீட்டுலயே, அதாவது அரசனூர்லயே தங்கிட்டாரு. சுடர் இறந்து போறதுக்குக் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான் அதே வீட்டுல இறந்து கிடந்தாரு. பாவம் அவருக்கு அந்த நோய் இருக்துறதே தெரியல. இறந்துட்டாரு." என வருத்தப்பட்டான்.
'எவ்வித அறிகுறியும் இல்லாம புற்று நோயா!' என யோசித்தவள்,
"சுடரக்காக்கு கல்யாணம்னு சொன்னிங்கல்ல! ஏன் அது நடக்கல? "
"ஏன்னா சுடர் ஒருத்தன காதலிச்சா."
"வாட்!! சுடரக்கா லவ் பண்ணாங்களா!"
"ம்… இந்த இன்ஸ்டாகிராம் அப்றம் ஃபேஸ் புக்குன்னு சிலது இருக்குல்ல. அதுல தான் பாத்தேன்னு சொன்னா. அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி வீட்டுல அடம்பிடிச்சா. ஆனா மாமாக்கு விருப்பமில்ல. அவள மீறி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி ஒரே சண்ட."
"யாரு அதுன்னு உங்களுக்கு தெரியுமாண்ணா?"
"எனக்கு எப்படிம்மா தெரியும். அவளுக்கே கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிஞ்சது. "
"புரியல... நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க? "
" அட இந்தப் படத்துலலாம் காட்டுவாங்கல்ல! முகம் தெரியாத காதல்னு. அந்த மாதிரி ஒருத்தெங்கூட ரொம்ப வர்ஷமா ஃப்ரெண்ட்டா இருந்து, அப்றம் ஒரு நாள் நேர்ல பாத்து பழகி, காதலிக்கிறே கல்யாணம்னு பண்ணா அவனத்தா பண்ணுவேன்னு நின்னா."
பைரவி தன் ஃபோனை எடுத்து சுடரின் இன்ஷ்டா கிராம் பக்கத்தை ஓப்பன் செய்தாள். அதில் சுடருடைய நட்பு வட்டங்களை காட்டி, " இதுல யாராவது ஒருத்தனா?. நல்லா பாத்து சொல்லுங்க." என்க,
அதை வாங்கி பார்த்த பாண்டி, " இது யாரோடது?"
"சுடரக்காவோட அபிஷியல் பேஜ். நானும் அவங்க கூட ஃப்ரெண்ட்டா தான் இருக்கேன்."
" சுடர் எங்கிட்ட காட்டும் போது வேற மாதிரி இருந்ததே!" என யோசிக்க,
"நல்லா பொறுமையா யோசிச்சி சீக்கிரம் சொல்லுங்கண்ணா. ப்ளிஸ்…" எனப் பைரவி வேறு அவனின் காதில் மந்திரம் ஓதிக் கொண்டு இருக்க,
"இல்ல... இது சுடரோட பக்கம் கிடையாது. அதுல அழகா ஒரு கரடி குட்டிய மூங்கில் கூடைக்குள்ள வச்சி, பரிசா குடுக்குற மாதிரி சிவப்பு கலர் ரிப்பன்லாம் கட்டிருக்கும். அத்தோட அது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு சொன்னா. எல்லாரும் அவளோட ஸ்கூல் காலேஜ்ல படிச்சவங்க." என்க, பைரவி மீண்டும் யோசனைக்கு சென்றாள்.
"ரெண்டு அக்கௌண்டா!. இத எப்படி நான் மிஸ் பண்ணேன் " என நினைத்தவள், பாண்டியிடம் அடுத்த கேள்வியைத் கேட்க, அவன் தந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..