அத்தியாயம்: 68
"பைரவி… நில்லு. அட நில்லும்மா… நீ என்ன பைக்க விட வேகமா நடக்குற. பொதுவாக போ."
எதற்கு கூப்பிட கூப்பிட திரும்பாமல் போகிறாள் என்ற காரணம் தெரியாது அவளின் பின்னாலேயே சென்றான் ராக்கி.
"எல்லாரும் லவ்வர இல்ல பாய் ஃப்ரெண்ட தான் பின்னால அழய விடுவாங்க. நீ என்னடான்னா. என்னை… ஒரு அண்ணன பின்னால அழைய விடுற. ரொம்ப தப்பும்மா இது." எனக் கத்தியபடி பைக்குடன் சென்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.
"இப்ப நீ எங்கூட பைக்கல வந்து உக்காந்தேன்னு வை. நான் உனக்கு KFCல சிக்கன் ஆர்டர் பண்ணவேன். ஜம்போ பர்கர். நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அது வந்து சேந்திருக்கும். சொல்லு உனக்கு பர்கர் மட்டும் போதுமா! இல்ல வேற எதாவது?" என வழியை மறித்தபடி கேட்க, அவள் அவனின் பைக்கைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றாள்.
"பர்கர் வேண்டாமா! அப்ப நாம காசிமேடு போவோம். அங்க இன்னும் கொஞ்ச நேரத்துல லோடு இறக்கிடுவானுங்க. ஃப்ரெஷ்ஷா நாலு கூறு இறால வாங்கி நல்லா சமச்சி சாப்பிடுவோம். " என மீண்டும் வழி மறித்து நிறுத்த, இம்முறை அவனைத் தாண்டி செல்ல முடியாது சிறிய சந்தில் மாட்டிக் கொண்டாள். அதுவும் முட்டுச் சந்து.
சமாதானக் கொடியைப் பறக்க விடவில்லை எனில் பாதை கிடையாது என இருக்கும் ஒரு வழியை அடைத்துக் கொண்டு பைக்கை குறுக்கே நிறுத்தியவன்,
"ப்ளிஸ்… ஏன் கோபமா இருக்கன்னு மட்டும் சொல்லிடு. வழிய விட்டுடுறேன். அப்றம் நீ நடந்து போ. ஆட்டோல கூட போ. இல்ல நானே உன்ன டிராப் பண்ணிடுறேன். " என்க, பைரவி இரு கரங்களையும் கட்டிக் கொண்டு முறைத்தபடி நின்றாள்.
"இப்படியே நின்னா சங்கீத ஸ்வரங்கள் பாட்டு தான் போடணும். சட்டுன்னு முடிவுக்கு வா. "
"நீங்க கடைசியாக என்ன சொன்னிங்கன்னு நியாபகம் இருக்கா!"
"இருந்திருந்தா நான் ஏன் உங்கிட்ட காரணத்த கேக்கப்போறேன்?"
"ம்ச்... நானும் உங்க ஃப்ரெண்டும் பிரிஞ்சி போனதுக்கு சுடரக்கா தான் காரணம்னு நீங்களும் நம்புறீங்களா? " எனக் கேட்க,
"இல்லயா பின்ன! அவளோட டெத்துக்கு போய்யிட்டு வந்ததுக்கு அப்றம் தான் பெரிய அளவுல சண்டையே வந்தது. கொலைல இருக்குற மர்மத்த கண்டு பிடிக்கிறேன்னு போலிஸ் ட்ரெயினிங் போன, அவனுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சே வேலைக்கி போன, அத அவெ அவமரியாதையா நினைச்சி, அவனோட ஈகோ க்ளாஸ் ஆகி, கோர்ட்டு வரைக்கும் கொண்டு வந்து விட்டுடுச்சி. "
"சோ. சுடர் தான் காரணம். இத்தன நாளால நான் வேலைக்கி போனது தான் காரணம்னு நினைச்சேன். அவரோட கண்டிஷன மீறி நடந்துக்கிட்டேன் அதா மனைவியா இருக்க உனக்கு தகுதி இல்லன்னு பணி நீக்கம் பண்ணிட்டாருன்னு நினைச்ச எனக்கு அது மட்டுமில்ல இன்னும் நிறைய இருக்குன்னு சொல்றிங்க. எனக்கு தான் அது என்னென்னு தெரியல. வாவ்… அவரு சொல்ற மாதிரி நான் யூஸ் லஸ் தான். " எனக் கைத் தட்டி நக்கலாக சொல்ல, அவளின் முகத்தில் இருந்த எதுவோ ஒன்று அவனைப் பேச்சிழக்க செய்தது.
" நம்ம பர்ஷ்னல் லைஃப்ல வர்ற ஒவ்வொரு பிரச்சன, கஷ்டம், துன்பம் எல்லாத்துக்கும் நாம தான் காரணம். அடுத்தவங்க கிடையாது. மத்தவங்க தர்றது எல்லாமே suggestion. decision எடுக்குற உரிம நம்மக்கிட்ட தான் இருக்கு. suggestion க்கும் decision க்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு யாரும் குழந்தை கிடையாது.
நம்ம லைஃப்ல முடிவெடுக்குற உரிமய வேற ஒருத்தர்க்கிட்ட குடுத்திட்டு இவங்க தான் காரணம்னு அடுத்தவங்க மேல பழிய தூக்கி ஈஸியா போட்டுட்டு, ‘நான் எதுக்கும் காரணமில்ல. நான் ரொம்ப நல்லவெ. நான் ஒரு அப்பாவி.’ன்னு சொல்றது இப்ப சாதாரணமாகிடுச்சில்ல.
ஸ்கூலுக்கு லேட்டா வர்ற குழந்தைங்க வரிசையா சொல்லுமே, பஸ்ஸூ வரல, சைக்கில் பஞ்சர், அம்மா சமைக்கலன்னு கதை சொல்லுமே அந்த மாதிரி இருக்கு, நீங்களும் உங்க ஃப்ரெண்டும் சொல்றது.
சுயமா யோசிக்கத் தெரியாதவங்க, பிரச்சினைகள சந்திச்சி சரிக்கட்டி, சமாளிக்கிற, திறம இல்லாதவங்க தான் அடுத்தவனக் கைக் காட்டிட்டு தன்னோட பொறுப்பையும் கடமையையும் தட்டிக் கழிச்சிட்டு போவாங்க.
எங்க ரெண்டு பேர்க்குள்ள வந்த பிரிவுக்கு நானும் அவரும் தான் காரணமே தவிர வேற யாரும் கிடையாது. " என்றவளுக்கு கண்ணீர் தான் வந்தது.
"இன்னொரு மொற எங்களுக்கு நடுவுல நடந்த பிரச்சனைக்கு வேற யாரையும் காரணம் காட்டாதிங்க." என விரல் நீட்டி எச்சரிக்கை செய்தாள் அவள். அவளின் வலி நிறைந்த வார்த்தைகள் ராக்கிக்கு கஷ்டமாக இருந்தது. கூடவே அவள் கூற்றும் சரி எனப் பட்டது. மதுசூதனனின் பக்கம் என்ன தவறு உள்ளது என்று பைரவியின் இடத்தில் இருந்து யோசனையில் இறக்கினான்.
சில நிமிடங்கள் அழுதவள் கண்ணில் வடிந்தோடிய நீரை துடைத்த விட்டு, "ஏன் கோபம்னு சொல்லிட்டேன். என்னை ட்ராப் பண்ணுங்க. ஹாஸ்பிட்டலுக்கு போகணும். " என அவனின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். முகத்தில் இருந்த சோகங்கள் காணாது போயிருந்தது. இத்தனை நேரம் கலங்கி நின்று கண்ணீர் சிந்திய மங்கை, இவள் தானா? என்ற சந்தேகமே வந்தது அவனுக்கு. கூடவே 'வாழ குடுத்து வைக்காதவன். ' என மதுவிற்கு பட்டப் பெயரும் சூட்டியது.
"பைக்க எடுங்க பாய். லேட்டாகுது. சாந்தி இன்னைக்கி வீட்டுக்கு வரச் சொல்லிருக்கு. சாப்பர் சாரதாம்மா வீட்டுல இருக்கு. " என்க, மருத்துவமனைக்கு சென்றான் ராக்கி.
அங்கு வாசலில் சிறிய உணவுப் பொட்டலங்களுடன் உணவு டெலிவரி செய்யும் பையன் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சென்றவள் கவரை வாங்கிக் கொண்டு,
"பாய் காசு குடுத்திட்டு உள்ள வாங்க. " என்ற உத்தரவிட்டு விட்டு நடக்க,
"இத எப்ப எனக்கு தெரியாம ஆர்டர் பண்ண?" என அதிர்ந்து போய் கேட்டான் அவன்.
"பைக்ல ஏறி உக்காந்ததுமே போட்டுட்டேன். நீங்க தான் வாங்கி தர்றேன்னு சொன்னிங்களே. நாளைக்கி காசிமேடுக்கு நீங்களே போய் வாங்கிட்டு எங்க வீட்டுக்கு வந்திடுங்க. சாந்தி சமையல் செம்மையா இருக்கும். " என்றவள் அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து உண்ணத் தொடங்கி விட்டாள்.
காசைக் கொடுத்து அனுப்பியவன், "எத்தன வாங்கிருக்" என்றபடி அருகில் அமர்ந்தான்.
"ரெண்டு…" என வாய் திறக்காது இரு விரலை மட்டும் ஆட்டிக் காட்டி வயிற்றிற்குள் இறக்கினாள்.
"ஒன்னு எனக்கா!" என ஆவலுடன் கவரைத் தொட, அவனின் கரத்தை தட்டி விட்டு,
"ரெண்டுமே எனக்கு தான். கூடவே க்ரிஸ்பி லாலிபாப்." என்றவள் அதை எடுத்துக் காட்டி ராக்கிக்கு கொடுக்காது உண்ண,
"எனக்கும் சேத்து ஆர்டர் போட்டிருக்கலாம்." என்றான் ஏக்கமாக.
"இதுவே ஆஃபர்ல வாங்கினேன். நிறைய ரூபாக்கி வாங்குனா கேஸ் ஆன் டெலிவரின்னு போட முடியாது பாய். தெரியாதா!" எனக் கேலியாக சொன்னவள், கோழியின் கடைசி காலை எடுக்க, அவளின் எதிரில் வந்து நின்றவன்,
" பைரயூ நீயும் நானும் மீல் மெட்டு."
"அப்படினா.!!"
"ம்ச்... சாப்பாடு சாப்பிடும் போது கூடவே உக்காந்து சாப்பிடுவோமே. அதுவும் அசைவ சாப்பாடு சாப்பிடும் போதும் உனக்கு குடுக்காம நானும். எனக்கு குடுக்காம நீயும் சாப்பிட்ட மாட்டோமே. அது தான் மீல் மெட்." என விளக்கம் கூற,
" அதெல்லாம் அப்ப. ரொம்ப வர்ஷத்துக்கு முன்னாடி. எப்ப அந்தத் தயிர் சாதத்துக்கு ஆதரவா கொடிய தூக்குனிங்களோ அப்பவே நீங்க என்னோட மீல் மெட் கிடையாது. பதிவிய விட்டு தூக்கியாச்சி."
" மறுபரிசீலனை பண்ணலாமே. ம்… கருணையின் அடிப்படைல." எனத் தந்து விட மாட்டாளா என்பது போல் பரிதாபமாக பார்த்தபடி இருக்க, அதைக் கூட அவனுக்கு விட்டுத்தரவில்லை. வந்த கவர்களை முழுதாக காலி செய்த பின், எடுத்து குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு நடந்தவளை முறைத்து பார்த்தான் ராக்கி.
"நீங்க வரலயா! உங்க ஒத்த தாமரைய பாக்க." எனத் திரும்பி பார்த்துக் கேட்டவளுக்கு பதில் சொல்லாது இருக்க,
"இட்ஸ் ஓகே. பெட் நம்பர் 504 அண்டு 505 வந்திடுங்க. அது காமன் ஹால். நிறைய பேர் இருப்பாங்க. மாமனாருன்னு நினைச்சி மாத்தி வேற யார்ட்டையும் நலம் விசாரிச்சிடாதிங்க. அப்றம் உங்க தாமர செந்தாமரையா எரிய ஆரம்பிச்சிடுவா. "
'அவ நினைக்கலன்னாலும் நீ தப்பா தப்பா நினைக்கிற மாதிரி போட்டுக் குடுக்காமயா இருப்பா!' ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.
"ஹா! உங்க மாமியார் வந்திருங்காங்க மறக்காம அவங்க கால்ல விழுந்து ஆசி வாங்கி, நல்ல பையன மாதிரி நடந்துக்கங்க. அப்பத்தான் மனசு குளுந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவாங்க... அல் தி பெஸ்ட் ராக்கி பாய். " என்று விட்டு செல்ல,
"மாமியாரா. இவ சொல்ற மாடுலேஷன்ல பாத்தா மாமா மாதிரியும், என் தாமர மாதிரியும் சாஃப்ட் ஃபீசா இல்லாம பாண்டி மாதிரி டெரர் பீஸ்ஸா இருப்பாங்களோ! அய்யோ! அப்படி இருந்தா என் நிலம. ச்ச… அடுத்த மொறயாது அம்மா, அப்பா, அண்ணே, தம்பி இல்லாத வீட்டு பொண்ணா பாத்து ரூட் விடணும்." எனப் புலம்பிபடி சென்றான் ராக்கி.
அங்கு தலையில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த சாரதாவிற்கு அருகில் மங்கையர்க்கரசி நின்று கொண்டிருந்தார். அவருக்கு அடுத்த படுக்கையில் கண்ணாயிரம் இருக்க, அருகில் தமிழரசி கணவனைத் திட்டிக் கொண்டிருந்தார். அந்த ஹால் முழுவதும் அந்த கலவரத்தில் காயமடைந்தவர்கள் தான் இருந்தனர்.
"ஊர்ல எவனுக்கும் இப்படிலாம் நடக்க மாட்டேங்கிது. உனக்கு மட்டும் தாய்யா அதிசயமா நடக்கும். எங்கிட்டு கிடந்து தான் வந்தியோ எனக்குன்னு புருஷனா!" எனத் திட்டுக் கொண்டு இருக்க,
"ம்மா…" என்ற அழைத்து, கண்ணீருடன் வந்த பைரவி சுடராகத்தான் தெரிந்தாள் சாரதாவிற்கு. இருவரின் நலத்தையும் அக்கறையுடன் விசாரிக்க,
சாரதாம்மா, "பெருசா ஒன்னுமில்லம்மா. சின்ன அடி. கீழ விழுந்ததுனால வந்தது. "
"இப்பவே கூட வீட்டுக்கு போகலாம் தான். ஆனா மது தம்பி தான் வேண்டாம்னு சொல்லுச்சி. இன்னைக்கி நானும் தங்கச்சியும் உயிரோட இருக்க தம்பி தான் காரணம் பைரவி. " என கண்ணாயிரம் நற்சான்றிதழ் கொடுக்க, அவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
வரும் போது தெரிந்து சில முகங்கள், அவர்களின் செக்யூரிட்டி ஏஜென்சி ஆட்கள். அவர்களை இவர்களின் காவலுக்கு நிறுத்தி இருக்கிறான். கத்தியுடன் வந்தவனை மறித்து சண்டை போட்டதை தான் ராக்கி சொல்லியிருந்தானே. இங்கு சாரதாவும் கண்ணாயிரமும் சேர்ந்து கொண்டு தன் கணவனின் பெருமையை சொல்லும் போது கேட்க கர்வமாக இருந்தது. அவன் மனைவி, தான் என்று.
தமிழரசியின் குரலைக் கேட்டு பத்தடி தொலைவில் இருந்தவனைப் பாண்டி தான் இழுத்து வந்தான்.
"அட என்ன மச்சான் நீங்க. எங்காத்தா பேசற பேச்சிக்கு பயந்து தள்ளி நின்னா அது உன்ன கிணத்துல தள்ளி விட்டும். அதுனால தைரியமா பாத்து பேசுங்க."
அவனின் மச்சான் என்ற அழைப்பில் நிமிர்ந்து பூரிப்புடன் பார்க்க, "வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். உங்க மாமியருக்கு மட்டும் இல்ல. மக கவர்மென்ட் சம்பளம் வாங்கணுமாம்."
"அதுக்கென்ன இப்பவே அவள டீச்சர் ஆக்கிடுறேன். எம்பொண்டாட்டி டீச்சர்னா எனக்கு தான பெரும. " என்றவன், எப்படி நடந்தது இது என்பது போல் பார்த்து,
"பைரவி சொன்னாளா?" என்றான்..
"இல்ல தாமரையே சொன்னா. உங்கள கோயிக்கு வந்து பாத்து பேசுனது எல்லாத்தையும் அவளே சொன்னா. " என்க, நம் ராக்கி பாயின் முகத்தில் வெட்கம் கூட எட்டிப்பார்த்து.
"பாண்டிண்ணா சாரு எங்க? அவளுக்கு ஃபோன் போட்டேன் பிஸின்னு வருது. " என்றபடி பைரவி வர, சாரு தாமரையுடன் இருப்பதாகவும், இருவரும் டாக்டர் சந்திரகலாவின் தனிப்பட்ட அறையில் இருந்தாகவும், சொல்லி அழைத்துச் சென்றான் பாண்டி.
அறையில் வாயிலில் இரு பவுண்ஸர்கள் நிற்க, ராக்கியைப் பார்த்து புன்னகைத்து வணக்கம் வைத்தனர். எல்லாம் மதுவின் ஏற்பாடு.
உள்ளே வந்த ராக்கி தாமரையின் முகத்தை பார்த்து பாண்டி சொன்னது உண்மையா! என கண்களால் கேட்க, தாமரை பதில் சொல்லாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அது வெட்கத்தில் சிவந்திருந்ததைக் கண்கள் பார்க்கவில்லை என்றாலும் உணர முடிந்தது. பைரவி உள்ளே வந்ததும் கேட்டது ஃபோனில் காரசாரமாக கத்திக் கொண்டிருந்த சாருவின் குரலைத் தான்.
"வெய் சாரு அங்கிரி பேர்டா மாறிட்டா. " என சிரித்தபடி பைரவி கேட்க,
"ம்ச்… வீட்டுல இருந்து ஃபோன். "
ராக்கி, "நீ கத்தும் போதே தெரிஞ்சது பேசுனது உங்கம்மா இல்லன்னா அப்பாவா இருக்கும்னு. "
"அம்மா அப்பா இல்ல. தங்கச்சி. " என்றாள் கவலையாக.
"என்னாச்சி டி? அவளுக்கு எதுவும் பிரச்சனையா! இப்ப கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான கல்யாணம் ஆச்சி அவளுக்கு. ஹஸ்பெண்ட் வீட்டுல… "
"இல்ல."
"வேறென்ன?"
"எந்தங்கச்சி தான் பிரச்சையே. எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலயாம். அதுனால அவளோட புருஷெ வீட்டுல எல்லாரும் அவள கேள்வி கேக்குறாங்களாம். எல்லாருக்கும் பதில் சொல்றது அசிங்கமா இருக்காம். அதுனால அவளோட புருஷனுக்கு சொந்தக்காரன பாத்து வச்சிருக்காலாம். உடனே கல்யாணம் பண்ணிக்கணுமாம். " என வெறுப்புடன் பேச, பைரவி அவளை ஆறுதலாக அணைத்தாள்.
"ஊருக்கு கிளம்பி வரச் சொல்லிருக்கா. அம்மாவும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க. " எனக் கவலையுடன் சொல்ல,
"உனக்கு தீஷித்த பிடிச்சிருக்கா? " எனப் பைரவி வெளிப்படையாகக் கேட்டாள்.
"விளையாடாத பைரவி."
"சீரியஸ்ஸா கேக்குறேன். " என்க, அவளை ஏற இறங்க பார்த்தவள்,
"இல்ல. "
"ஏன்? அன்னைக்கி பிடிச்சிருக்குன்னு தான சொன்ன!"
"இன்னைக்கும் பிடிக்கும் தான். ஆனா கல்யாணம் பண்ணி வாழ்க்கை துணையா ஏத்துக்கிற அளவுக்கு பிடிக்கல."
'ச்ச... என்ன இப்படி சொல்லிட்டா! நாம கல்யாண ப்ரோக்கர் வேலை பாத்தது வேஸ்ட்டா. ' எனக் கோபமாக முறைத்தபடி வெளியே செல்ல, சாரு அவளின் நடையைப் பார்த்து புன்னகைத்தாள்.
"நிஜம்மா உனக்கு அவனப் பிடிக்கலயா?" ராக்கியின் குரல். ஆனால் பதிலை எதிர்பார்த்து நின்றது பாண்டியராஜன். அவன் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
" ஏம்பாய் நீங்க? அவருக்கு எம்மேல இன்ட்ரெஸ்ட் கிடையாது." என்றவளின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை.
"அது சரி நீ என்ன முடிவு பண்ணிருக்க? காலம் முழுக்க இப்படியேவா!!" என்க, அவள் பாண்டியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துவிட்டு சென்றாள்.
"ஓ!!. இது தான் நம்ம மச்சினன் ஜோடியா!!" எனப் பாண்டியின் தோளைத் தட்டியவன்,
"ஆமா வீட்டுல சம்மதிப்பாங்களா?"
"சம்மதிக்கலன்னா தூக்கிட்டு போய்ட வேண்டியது தான். கிடைக்க வேண்டிய சம்மதம் கிடைச்சா போதும். " என்றான் மீசையை முறுக்கிய படி.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..