அத்தியாயம்: 73
"RGB அதாவது red green blue. இது தான் நாம பாக்குற எல்லா கவருக்கும் காரணம். இதுல இருந்து தான் அத்தன கலரும் பிறக்குது. சொல்லப்போனா இது தான் மூத்த குடி ஆஃப் வண்ணங்கள். இந்த மூனே மூணு கலர்ல இருந்து எத்தன கலர்ஸ்! ஆரஞ்சி மஞ்சள் லாவண்டர் மெரூன் மெஜன்ட்டா ஊப். இப்படி நிறைய வண்ணம் இருந்தாலும், அதுல ஒன்ன choose பண்ண சொன்னா எப்படி choose பண்றது? குழப்பமா இருக்கு. சரி நாம helpline use பண்ணுவோம்.. ம்மா. சாந்திம்மா. " எனப் பைரவி கத்த,
"என்னடி வேணும். " என சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் அவர்.
"இங்க வாம்மா.
"கொஞ்ச நேரங்கூட நிம்மதியா இருக்க விடமாட்டா இந்தப் பொண்ணு. " எனச் சலித்துக் கொண்டே வந்தவர்.
"என்னடி இந்த கோலத்துல நிக்கிற. " என குளியலறையில் இருந்து வந்தும் உடை மாறாது நின்றவளைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
"நல்ல கோலம் தான். டிரெஸ் வேணும். வந்து எடுத்துக் குடேன்ம்மா. "
" நான் எடுத்துக் குடுத்து நீ போடப் போற? " சந்தேகமாக கேட்டார்,
"ஆமாம்மா." எனத் தலையசைத்தவள்.
"குப்ப தொட்டில தான போடப்போற."
"நோ... நோ… எனக்கு மேல போட்டு அழகு பாக்க போறேன். "
"கிழிச்ச." என அசால்ட்டாக சொல்லி அவர் வெளிநடப்பு செய்ய,
"ம்மா... ம்மா... பீரோல இருந்து ஒரு நல்ல புடவயா எடுத்துக் குடும்மா." எனக் கத்தினாள் பெண். திரும்பி வந்த அவர் பீரோவை திறந்து ஒன்றை எடுத்துக் கொடுக்க,
"இது வேண்டாம். "
"இதுக்கு என்னடி கொறச்சல். "
"ம்மா… இது பட்டு. அதெல்லாம் என்னால கட்டிட்டு சாப்பர்ல போக முடியாது. "
"அப்ப என்ன தான் வேணும். "
"பட்டு சேல வேண்டாம். பெரிய பார்டர் வச்சது வேண்டாம். கண்ணாடி மாதிரி என்னோட ப்ளவுஸ் டிசைன வெளில காட்டுற மாதிரி வேண்டாம். கல்லு வச்சது வேண்டாம். அதிகமா எம்ராயிடரி போட்டது வேண்டாம். கனமா இருக்குற சேல வேண்டவே வேண்டாம். லைட் கலர் வேண்டாம். கட்டுனா கட்டுன மாதிரி இருக்க கூடாது. காத்துல மிதக்குற மாதிரி லைட் வெய்ட்டோட ஒன்று. நான் சொன்ன கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி ஒன்ன எடுத்துக் குடு பாப்போம். "
"நீ சொல்ற மாதிரி புடவ, கடைலயே கிடையாது டி. "
"ஆனா என்னோட பீரோல இருக்குமே. "
"அப்ப நீயே எடுத்துக்க. "
"ம்மா… நீயே எடுத்துக் குடும்மா. ப்ளீஸ் ம்மா. பொண்ணுக்கு ஒரு புடவ choose பண்ணி குடும்மா. " என அணத்த,
"சரியான நச டி நீ. அந்த ஹோம்ல போய் மண்ண அள்ளி போட்டு விளையாடத் தான போறே. அதுக்கு எதுக்கு டி உனக்கு புடவ. " என்றவர் மகளுக்காக அடர் நீல நிலத்தில் சிறிய பார்டர் வைத்த சிம்பிளான ஒன்றை தேர்ந்தெடுத்தார்.
"நான் ஹோம்க்கு போல. ஃபங்ஷனுக்கு போகப்போறேன். மோகனா ஃபங்கஷனுக்கு. " என்றபடி அதை வாங்கிக் கொண்டவள், தாயின் அதிர்ந்த முகத்தை பார்க்கவில்லை.
"ம்மா… ப்ளவுஸ் கரெக்ட்டா இருக்குமா? இல்ல பிரிக்கணுமா? லைட்டா வெயிட் போட்டேன் போல. " என்றபடி உடையை மாற்ற,
"நீ கண்டிப்பா போகணுமா?" என்ற சாந்திக்கு மகளை அங்கு அனுப்பவே மனமில்லை.
"என்னம்மா நீங்க. மோகனா எனக்கு ஸ்பெஷல். அண்ணாவே நேர்ல வந்து சொல்லிட்டு போயிருக்காரு. நீங்க தான் வரல. என்னையும் போக வேண்டாம்னா எப்படி.? " என்றவள் புடவையைக் கட்டி முடித்து விட்டாள்.
தன் ஈரக் கூந்தலைக் காய வைத்து சிக்கெடுக்க தொடங்கினாள். மகளின் இந்த ஆர்வம் தாய்க்கு வேதனையாக இருந்தது.
"பையூம்மா. உனக்கு மோகனாவ பாக்கணும்னா பிரவீன் தம்பி வீட்டுக்கு போய் பாக்க வேண்டியது தான. ஃபங்ஷனுக்கு போக வேண்டாமே."
"ம்மா… நீங்க எதுக்கு பயப்படுறீங்கன்னு எனக்கு தெரியுது. ரொம்ப நேரம் அங்க இருக்க மாட்டேன். யார் கூடவும் அனாசியமா பேச மாட்டேன். அவள பாத்திட்டு கிஃப்ட் குடுத்திட்டு உடனே திரும்பிடுவேன். ஓகே. " என்றவள் தன் நீளக்கூந்தலைப் பாதி பின்னி மீதியை விரித்து விட்டாள். அது அவளின் முதுகில் படர்ந்து சால்வை போல் ஒட்டிக் கொண்டது.
நீளக்கூந்தல்.
ம்… மதுவிற்கு பிடிக்கும் என்பதால் வெட்டி விடாது வளர்க்கத் தொடங்கினாள். அது இடையை தொட்டு நிற்கும் அளவுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் வளர்ந்திருந்தது. அதில் மல்லிகை சூடி மன்னவனை எதிர் நோக்கி கருமணிகள் இரண்டும் ஈசலென பரபரக்கும்.
ஒரு வழியாக தலை அலங்காரத்தை முடித்து விட்டு நெற்றி வகிட்டில் மெல்லிய கீற்றலாக சிவப்பு குங்குமத்தை வைக்க,
"கழுத்துல தாலியே கிடையாது. நெத்தில குங்குமமா! " எனச் சாந்தி நொடித்துக் கொள்ள,
"ம்மா… " என்று தாயை முறைத்தாள்.
"எனக்குப் பிடிக்கலடி. அந்தக் குடும்பத்துக்கூட உனக்கான உறவே அந்த தாலி தான். அதையே ஆத்தாவும் மகளுமா வந்து சண்ட போட்டு வாங்கிட்டு போனதுக்கு அப்றம் நீ அந்த வீட்டு மருமக கிடையாது. கோர்ட்டுல எழுதி வாங்குனதுக்கு அப்றம் நீ அந்தத் தம்பிக்கு மனைவி கிடையாது. அப்படி இருக்குறப்பே நீ அந்தத் தம்பி பின்னாடி உறவாடிட்டு போறது அசிங்கமா இருக்கு. ஊர் என்ன பேசும்? பொண்ண வளத்து வச்சிருக்கான்னு என்னை ஏசும்! அது தான் நீ எனக்கு வாங்கி குடுக்கப் போற நல்ல பேரா!" எனத் தன் ஆதங்கத்தை கொட்ட,
"ம்ச்... அதெல்லாம் ஒன்னுமே கிடையாது. நீயா எதையாச்சும் கற்பன பண்ணிட்டு பேசாத. " என்றவள் தலையில் சூடிக் கொள்ள மலரைத் தேடி ஃப்ரீஜ்ஜை திறக்க, டப்பா காலியாக இருந்தது. சுற்றி முற்றி பார்த்தவள், கோர்த்து வைத்திருந்த மலர்கள் இறைவனடி சேர்ந்திருந்தது.
"ம்மா… என்னம்மா நீ. நேத்து நான் கஷ்டப்பட்டு வாங்கி வச்ச மல்லிப்பூவ சாமி படத்துக்கு போட்டிருக்க. இன்னைக்கி மூகூர்த்த நாள். பூவுக்கெல்லாம் டிமாண்ட் ஜாஸ்தி. தேடி வேற அழையணுமா?" எனச் சலித்துக் கொண்டவள் கண்களுக்கு வழக்கம் போல் தீஷித் வந்து வைத்துவிட்டு செல்லும் டூலிப் மலர்கள் கண்ணில் பட, அதன் இதழ்களை உதிர்த்தவள். அழகாய் அதைக் கட்டி சிறிய ஆரமாக மாற்றி தன் சிகையில் வைக்க,
"ஒரு ஹேர்பின்ன ஒழுங்கா குத்த தெரியுதா. குடு…" என வாங்கி மகளுக்கு சூட்டி விட்டார் சாந்தி. மகளின் அழகை கண்டு அகம் மகிழ்ந்து போனார். பேரழகு… அது கண் பட்டு விட கூடாது எனத் திருஷ்டி சுத்தி போட்டவர்,
"பைரவி உனக்கு இன்னும் வயசு இருக்கு. அந்தத் தம்பிக்கும் மீதி வாழ்க்க இருக்க. அதுனால. "
"என்னம்மா சொல்ல வர்ற? " எனத் தீயாய் தாயை முறைக்க, அவர் பூசி மழுப்பாமல்.
"நான் உன்னோட கல்யாணத்த பத்தி பேசுறேன். "
"அதா ஆகிடுச்சே. அப்றம் எதுக்கு.?" விளையாட்டாக அவள் கூறி மோகனாவிற்கு கொடுக்க என வாங்கிய பரிசுப் பொருளைத் தூக்கி தன் ஹேண்ட் பேக்கிற்குள் அடைத்துவிட்டு சாப்பரின் சாவியை எடுக்க,
"பைரவி. " என அழுத்தமாக அவர் கத்த, மகள் நின்றாள்.
"ம்மா… நீ தேவையில்லாதத பேசுற. இப்ப வந்திருக்குறது தற்காலிக பிரிவு தான். நாங்க சேரவே மாட்டோம்னு நீங்களா நினைச்சிட்டு கண்டத பேசுறிங்க. எங்களுக்குள்ள இருக்குறது சின்ன மிஸ் அன்டர் ஸ்டாண்டிங். அது ஒரு நாள் அவருக்கு தெரிய வரும். என்னைக் கண்டிப்பா புரிஞ்சிப்பாரு. அப்ப அவரே என்னைந் தேடி வருவாரு. 'மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போமா?'ன்னு கேப்பாரு. அந்த நாள் எப்ப வேண்ணாலும் வரலாம். அப்படி வரும் போது நான் அவரு கூடவே போய்டுவேன். அதுனால நீ கண்டத யோசிக்காம, அடுத்தவங்க பேசுறததுக்கு காது குடுக்காம இருங்க. போதும். "
"ஒரு வேளை அந்தத் தம்பி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா பண்ணிப்பியா?"
"நடக்காத காரியம். ஆனாலும் உங்க சந்தோஷத்துக்காக சொல்றேன். அவருக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் ஆச்சின்னா. ஆச்சின்னா மட்டும் தான். நான் கண்டிப்பா பண்ணிப்பேன். போதுமா!" எனத் தாயைச் சமாதானம் செய்து விட்டு புறப்பட்டவளுக்கு தெரியாது அங்கு நடக்கவிருக்கும் நிகழ்வு எது என்று.
"ஆல்ரெடி லேட். இதுல டிரபிக் வேறயா! பிரவீன் அண்ணா திட்டப் போறாரு. " என முணுமுணுத்தபடி வந்தவளைப் பிரவீன் வாசலிலேயே வரவேற்றான்.
"ஏன் லேட்?" எனப் பொய் கோபத்துடன்.
"ஸாரி ண்ணா. " எனக் காதை பிடித்துக் கொண்டு கேட்க,
"உன் ஸாரிய பத்தி அப்றம் பேசிக்கிவோம். உன்ன மோகனா தேடுறா போ. " எனத் துரத்தி விட்டான்.
நாமும் தீர்க்கதரிசி தான். நம் மனம் செல்வதை கேட்டால். அது நமக்கு ஆபத்து வர உள்ளது என்றால் இன்டிகேட் செய்யும். அதன் எச்சரிக்கை மணியை உணர்ந்து கொண்டாள் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்படும். ஆனால் அதை நாம் கேட்பதில்லையே.
பைரவியின் மனத்தில் அவ்வாறொரு எச்சரிக்கை மணி தான் அடித்தது. உன்னைக் குத்தி கிழிக்க நாக்கு எனும் மூன்றெழுத்து ஆயுதத்துடன் உள்ளே அரக்கிகள் பலர் காத்திருக்கின்றனர் என்று. ஆனாலும் தன் கணவனைக் காணும் ஆவலில் மனதில் அடித்த மணியைக் கலட்டி வைத்து விட்டு உள்ளே நுழைந்தவள் கண்களுக்கு மதுசூதனன் தென்பட்டான். கருப்பும் வெள்ளையும் கலந்த கோர்ட் சூட்டில்.
எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என்று நினைப்பவனுக்கு வெள்ளை மிகவும் பிடித்த நிறம். அதன் நிறத்தை மங்க விடமாட்டான். உடை மட்டுமல்ல ஆளும் பளிச் என்ற தோற்றத்தில் இருந்தான் அந்தப் பயில்வான்.
'தங்கச்சிக்கு விசேஷம் வச்சிருக்காங்க. இப்பயாது வேட்டி சட்டை போடலாம்ல. கல்யாணத்தப்ப கட்டி தூக்கி மூளைல வச்சாச்சி. அடுத்து எடுத்து கூட பாக்கல. அது கட்டினா சூப்பரா இருப்பாரு எம்மாமா.' எனத் தன் கணவனை சைட் அடித்தபடி நடக்க, யாரின் மீதோ மோதி, மோதியவர் கீழே விழுந்து விட்டார்.
"ஸாரிடா பட்டு. நான் உன்ன கவனிக்கல. " என்றபடி சைந்தவியின் மகள் ஹிரானாவை தூக்கி நிறுத்தியவள், அவளின் உயரத்திற்கு குனிந்து முட்டி போட,
"இந்த டிரெஸ்ல ஏஞ்சல் மாறி இருக்க. சோ பிட்டி. " என முத்தமிட நெருங்க, அவளின் மாமனை போல் அவளும் கரம் உயர்த்தி தடுத்தாள்.
"உங்களுக்கு எம்மாமாவ தவிர வேற யாருமே கண்ணுக்கு தெரியாதா. மூணு அடி உயரத்துல நான் ஓடி வர்றத கூட பாக்காம வர்றீங்க. " என்க, பைரவி அசடு வழிய சிரித்தாள். அவளின் கன்னம் கிள்ளி,
"சேம் பிச். எனக்கு சாக்கி வேணாம். அதுக்குப் பதில் நீங்க தலைல வச்சிருக்குற மாதிரி அழகான பூ வேணும். " என்றாள் சிறுமி.
"நீ இங்க இருப்பன்னு தெரிஞ்சே உனக்கும் கொண்டு தான் வந்தேன். இந்தா. " என மலரை நீட்ட, அதை வாங்கிக் கொண்ட சிட்டு பைரவியின் கன்னத்தில் முத்தமிட்ட, சிறுமியை பிடித்து இழுத்தாள் அவளின் அன்னை.
"அறிவில்லயாடி உனக்கு. கண்டவளுக்கு முத்த குடுத்திட்டு நிக்கிற." சைந்தவி தான் அது. பைரவியைத் தீயாய் முறைத்தபடி நின்றாள் அவள்.
ஹிரானா, "அது எங்கத்த. "
"அத்தை சொத்தையெல்லாம் முடிஞ்சி போன கத. இனி இவ யாரே! இவ கிட்டலாம் பேசக் கூடாது. கொண்டா அத. " எனச் சிறுமியின் கரத்தில் இருந்த பூவை பறித்து கீழே போட்டு மிதித்து விட்டு சென்றாள் அவள்.
"எதிர் பார்த்த ஒன்னு தான். ஆனாலும் நடக்கும் போது மனசு கஷ்டமா இருக்கு. " என்றபடி மோகனாவைக் காணச் சென்றாள்.
'இதயே கஷ்டம்னா எப்படி? இது தொடக்கம் தான் இன்னும் நிறையா இருக்கு. போ. போ. ' என விதி சிரிப்பது தெரியாது.
மோகனா இருக்கும் அறையின் கதவை ஆவலுடன் திறக்க அங்கு ஜெயஸ்ரீயின் குரல் கேட்டது. மகளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த அவரை பார்த்ததும் வேகமாக கதவை மூடியவள் வந்த வழியே திரும்பி விட்டாள்.
"ஐய்யையோ சின்ன பூதத்துக்கிட்ட இருந்து தப்பி பெரிய பூதத்துக்கிட்ட மாட்டிருப்பேன். தப்பிச்சிட்டேன். என்னைப் பாத்திருக்க மாட்டாங்கன்னு நம்புறேன். " என்றவள் தேடிப் பிடித்து ஓரமாக கிடந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சத்தமிடாமல் தன் வேலையை பார்த்தாள். என்ன வேலை என்று சொல்ல தேவையே இல்லை.
விழா இனிதே தொடங்கியது. பிரவீன் வீட்டிற்கு வரவிருக்கும் முதல் வாரிசு. அது நலமுடன் பிறக்க உற்றார் உறவினரின் ஆசி வேண்டி இந்த விழாவை ஏற்பாடு செய்திருத்தார் பிரவீனின் அன்னை.
பிரவீனின் குடும்பம் சற்று பெரியது. தந்தையுடன் பிறந்தவர்கள், தாயுடன் பிறந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள், இவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதுவே பெரும் விழா போல் அந்த அரங்கத்தை நிறைத்திருந்தது. பைரவிக்குத் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வைத் தராது பிரவீனின் தம்பி அவளைக் கவனித்துக் கொண்டான்.
ஃபிரீ வெட்டிங் அதாவது திருமணம் எப்படி நடக்கும் என்பதற்கு ரிகர்சல் பார்ப்பது. அது போன்று இங்கு ஃபிரீ வளைகாப்பே நடத்தி வளைகாப்பிற்கு ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஒன்பது வகை சாப்பாட்டுடன் பூ பழம் தங்க வளையல் என எதற்கும் குறைவில்லாது விழா நடைபெற தொடங்கியது.
பிரவீனின் அன்னை பைரவியை அழைத்தார். "போய் உன் நாத்தனாருக்கு வளையல் போட்டு விடும்மா. " என்க, ஆவலுடனும் ஆசையுடனும் எழுந்து வந்தவள் சந்தனத்தில் கை வைக்க, சைந்தவியின் குரல் தடுத்தது.
"அவங்க தான் சொல்றாங்கன்னா உனக்கு எங்க போச்சி புத்தி. போய் ஓரமா நில்லு. சோறு போடுவாங்க தின்னுட்டி கிளம்பு. " என்க. பைரவி சின்ன சிரிப்புடன் நகரப் பார்த்தாள். மோகனாவின் வாய் திறக்காத கெஞ்சல் மொழிலால் அவளின் கை எடுத்த சந்தனத்தை நாத்தனாரின் கன்னத்தில் பூசச் சென்றது.
அதற்குள் ஜெயா வந்து விட்டார் ஆங்காரத்துடன், "ஏய் சீ கை எடு. நீ ஆசிர்வாதம் பண்ணி எம்மக குழந்த பெத்துக்க போறாளா! உன் பார்வ பட்டாலே அது கருகிடும். மரியாதைய போய்டு இங்கருந்து. கல்யாணம் ஆகி நாலு வர்ஷமாச்சி. ஒரு குழந்தைய பெத்துக் குடுக்க துப்பில்லாத சிறுக்கி… எம்மகளுக்கு சந்தனம் பூசி வர்றியா. " என்க,
"என்ன அத்த நீங்க, எந்தக் காலத்துல இருக்கிங்க. இப்பெல்லாம் குழந்த பெத்துக்கிறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு. இப்ப போய் மலடி பட்டம் குடுத்து தள்ளி வைக்கிறிங்க. " என ஆதரவு தருவது போல் பைரவிக்கு மலடி பட்டம் சூட்டி விட்டாள் ரூபி.
ஆனால் அவள் கொடுத்த பட்டமே மேல் என்பது போல் பேசி தீர்த்தனர் தாயும் மகளும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..