அத்தியாயம்: 74
"யார மலடின்னு சொல்ற? இவளையா! ஹிம்… இவால்லாம் மலடி கிடையாது. அந்த வார்த்தைக்குக் கூட தகுதி இல்லாதவ. குழந்தை பெத்துக்க முடியாதவங்களத்தா மலடின்னு சொல்லுவாங்க. அவங்களுக்குக் கூட குழந்த மேல ஆச இருக்கும். பெத்துக்க முடியலயேங்கிற ஏக்கம் இருக்கும். " என்றது சைந்தவி தான்.
"ஆனா இவ. பெத்துக்கிட்டா அழகு போய்டும் சொல்லி உண்டான குழந்தைய கலச்சிட்டு வந்தவ. வயித்த தள்ளிட்டு இருந்தா கண்ட மேனிக்கி ஊர் சுத்த முடியாதுன்னு கடவுள் குடுத்த குழந்தைய கருவுலயே அழிச்சவ. ஒருக்க ரெண்டுக்க இல்ல. நாலு வர்ஷத்துல எத்தனையோ மொற. எங்க வீட்டு வாரிச எதிர்பாத்த ஒவ்வொரு முறையும் எங்க ஆசைல மண்ணள்ளி போட்டுட்டு போலிஸ் ஆக போறேன்னு கிளம்பி போனவ. குழந்த பெத்துக்கிட்டா ஆக முடியாதில்ல. "
சைந்தவி, "ஆமாம்மா. போலிஸ்ஸாகணும்னு தான குழந்தைய கலைக்கவே செஞ்சா. எங்கண்ணன, பொண்டாட்டிய வேலைக்கி அனுப்புறா கையாலாகதவென்னு அவமானப்படுத்துனது பத்தாதுன்னு, ஆம்பளயா இல்லையான்னு கேள்வி கேக்க வைச்சிட்டா."
ஜெயா, "அதுனால தான் உன்ன வேண்டாம்னு அவெ ஒழிச்சி கட்டுனதே. அத்தனையும் முடிஞ்சி போனதுக்கு அப்றமும் எந்த உரிமைல வளையல் போட இங்க வந்த. " என்க,
"எனக்கு தங்கச்சிங்கிற உரிமைல." என்றபடி வந்தது பிரவீன். எந்த இடமானாலும் பைரவியை ‘விட்டுக் கொடுக்க மாட்டேன்.’ என்பது போல் அவனின் கலங்கிய முகம் பார்த்து கண்களால் ஆறுதல் கூறினான் அவன்.
"அண்ணா…" என வாய் அசைத்தும் குரல் வரவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டு நின்றது. விழிகள்
வழக்கம் போல் கணவனின் ஆறுதலை தேட, எம்முறை போலும் இம்முறையும் அது கிடைக்கவில்லை. இங்கு நடப்பது எதுவும் தெரியாது மதுவும் சிதம்பரமும் மும்மரமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தனர். அவமானமாக இருந்தது பைரவிக்கு. உடல் கூனி மனம் சோர்ந்து போக,
" என்ன வேடிக்க பாத்திட்டு இருக்க? வளையல எடுத்து போட்டு விடு. அடுத்தடுத்து ஆளுங்க நிக்கிறாங்க தெரியலயா? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள எல்லாரும் போடணும். போ…" என்க, அவள் தயங்கி நின்றாள்.
‘அவர்கள் சொல்வது போல் மோகனா வயிற்றில் வளரும் சிசுவிற்கு என் கெட்ட நேரத்தால் ஏடாகூடமாக ஏதாவது நிகழ்ந்து விட்டால்.’ என்ற பயம் சூழ, உறைந்த போய் நின்றவளின் கரம் பற்றி சந்தனத்தைக் குழைத்து மனைவியின் கன்னத்தில் தடவி விட்டான் பிரவீன். அது மோகனாவிற்கு ரெட்டிப்பு சந்தோஷத்தைத் தந்தது.
பைரவியைக் காப்பாற்றி விட்ட மருமகனை எதுவும் சொல்ல முடியாது முறைத்தபடி நின்றார் ஜெயஸ்ரீ.
பைரவியின் மனத்தைக் காயப்படுத்தி அவளை அவமானப்படுத்த திட்டமிட்ட மூவர் கூட்டத்தில் இருந்து பிரிந்த சைந்தவி, வேகமாக சென்று சிதம்பரத்தின் காதில் எதுவோ சொல்ல, அவர் வேக நடையுடன் மேடைக்கு வந்து மைக்கை வாங்கி கொண்டு பேசத் தொடங்கினார்.
வளையல் அணிவித்து விட்டு தாமதிக்காமல் கீழே இறங்கி கொண்டவள், போதும் இனி ஒரு நொடி கூட இங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து பிரவீனின் குடும்பத்திடம் சொல்லுக் கொண்டு புறப்பட, இதுவரை கிடைத்த ரணத்தை காட்டிலும் ஆறா ரணத்தை சிதம்பரம் தன் திருவாயால் அறிவித்தார்.
"என்னோட பொண்ணு விசேசத்துக்கு வந்திருக்குற எல்லாருக்கும் இன்னொரு குட் நியூஸ் சொல்லதுல நான் ரொம்ப சந்தோஷப் போடுறேன். இங்க கூடியிருக்குற உங்க எல்லாத்தையும் திரும்பவும் ஒன்னா எப்ப சந்திக்கிறதுன்னு தெரியல. ஏன்னா எல்லாருமே பிஸி. சோ… எல்லாரும் ஒன்னு சேந்திருக்குற இந்த நாள்ளயே இதையும் செஞ்சிடலாம்னு இருக்கேன்.
அந்த குட் நியூஸ் என்னென்னா… என்னோட அண்ணே பயனும், என்னோட மூத்த மகனுமான மதுசூதனனுக்கும் எம் மனைவியோட அண்ணே மக ரூபிணிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ண இருக்கோம். அதுக்கான அனோஸ்மெண்ட்ட இன்னைக்கே உங்க எல்லார் முன்னிலையிலும் இங்கயே நிச்சயம் பண்ணலாம்னு இருக்கோம். கம் மது. ஸ்டேஜ்கு வா. " என மதுசூதனனை அழைக்க, மது மேடை ஏறினான்.
உடல் வெறும் கூடு போல் ஆனது. இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை பைரவி. ஜெயாவின் பேச்சும் சைந்தவியின் எள்ளல் நகையும் எப்போதும் இருக்கும் ஒன்று தான். ஆனால் இது. நம்ப முடியவில்லை. சிதம்பரத்தைத் தவிர வேறு யாரின் குரல் கேட்டிருந்தாலும் ஃப்ராங்க் என ஒதுக்கி தள்ளியிருப்பாள். ஆனால் கூறியது சிதம்பரம்.
அவரின் அழைப்பை ஏற்று மேடை ஏறிய மதுவைத் திரும்பியும் பார்க்காது அங்கிருந்து சென்று விடத்தான் நினைத்தாள். ஆனால் அதற்கும் விட மாட்டேன் என்பது போல் சைந்தவி வந்து நின்றாள்.
"மிஸ் பைரவி சேர்மதுறை, ஒரு நிமிடம் நில்லுங்க. உங்க ஆசிர்வாதத்த இந்த ஜோடிக்கும் கொஞ்சம் குடுத்திட்டு போங்களேன் ப்ளீஸ். எப்படி வாழணும்ன்னு இவங்க வாழ்ந்து காட்டுவாங்க. அத பாத்தாது உங்க திமிரயும் ஆணவத்தையும் குறைச்சுக்கிவிங்கன்னு நம்புறேன். வாங்க வந்து தைரியமான போலிஸ்ஸா உங்க முன்னாள் கணவருக்கும் அவரோட புது மனைவிக்கும் உங்க திருவாயால வாழ்த்து சொல்லிட்டு போங்க. " என நக்கலாக அழைக்க, பைரவி கண்டு கொள்ளாது நடக்கத்தான் தொடங்கினாள்.
பின் என்ன நினைத்தாளோ திரும்பி வேகமாக நிமிர்ந்த நடையுடன் மேடையை நோக்கி சென்றாள். பைரவி தன் வாழ்க்கையே போய் விட்டது என்று அழுது, மதுவின் சட்டையை பிடித்து சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்வாள். சொந்தங்கள் முன்னிலையில் குடும்ப மானத்தை வாங்கி விட்டாள் என்று கூறி மதுவின் மனத்தில் இருக்கும் மனைவி என்ற கொஞ்ச நஞ்ச கருணையையும் வெட்டி வீசி விடலாம் என்று காயை நகர்த்த, அது பழிக்க போகிறது என்ற சந்தோஷத்தில் வேடிக்கை பார்த்தாள் சைந்தவி.
ஆனால் பைரவியோ. " congratulations Mr.Madhusudanan. " என மதுவிற்கு கரம் நீட்டினாள். மதுவிடம் பைரவியை எதிர் கொள்ளும் அளவிற்கு தைரியம் இல்லாது போனது என்று தான் சொல்ல வேண்டும். நீட்டிய கரத்தைப் பற்றாது அவள் முகம் பார்க்க முடியாது அவன் நிற்க, பக்கத்தில் இருந்த ரூபிணி தான் பைரவியின் கரத்தைப் பற்றி குளுக்கினாள்.
"தேங்க்ஸ். ஆனா உங்க வாழ்த்து எங்களுக்கு தேவப்படாது. மேரேஜ் லைஃப்ல சக்சஸ் புல்லா வாழ தெரியாதவங்க அடுத்தவங்களுக்கு வாழ்த்து சொல்றது வேடிக்கையா இருக்கு…" என்று நக்கலாக சிரித்தாள். இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இடத்தைக் காலி செய்தாள் பைரவி.
மதுவின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவளின் பார்வை வீச்சு அவனைச் சுட்டெரித்திருக்க வேண்டும். அனல் மேல் இட்ட புழுவாய் துடித்தது மனம், அவளின் நடந்து செல்வது பார்க்கையில்.
"வாட்ஸ் திஸ். இந்தக் கருமத்த ஏன் எங்கைல குடுத்திட்டு போறான்னு தெரியல? இடியட். யூஸ்லஸ்." என ரூபி… பைரவியின் கையை பிடித்து குளுக்கிய போது அவளின் கரத்தில் திணித்த கருப்பு கயிற்றை தூக்கி வீசி எறிந்தாள். இப்போது ஆடவனின் இதயத்தைக் கூடாக மாற்றி விட்டு சென்றிருந்தாள் மங்கை.
அது பைரவி எப்பொழுதும் அணியும் கருப்பு நிற கயிறு. அதில் ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். அது பாதி இதய வடிவம் கொண்ட டாலர். மீதி இதயம் மதுவின் வாட்சில் பதிக்கப்பட்டிருக்கும்.
இரு பாதி இதயங்களையும் நெருக்கத்தில் வைக்கும் போது ஒன்றுக்கொன்று ஈர்த்துக் கொள்ளும். எது முதலில் நகர்ந்து மற்றொரு பாதியுடன் சேர்க்கிறது என்பதை கணிக்கவே முடியாது. காந்தத்தின் ஈர்க்கும் வல்லமை அப்படி. இரண்டையும் அசைய வைக்கும். இரண்டும் நகர்ந்தே தீரும். அந்த டாலர் மதுவின் முதல் பரிசு.
அதை அவளின் கழுத்தில் அணிவித்து விட்டு, "இனி யார் சண்ட போட்டாலும் சரி. ரெண்டு பேருமே ஸாரி கேக்கணும். ரெண்டு பேருமே ஈகோவ விட்டு இறங்கி வரணும். என்ன ஓகே தான. " என்று சொல்லி அணிவித்து விட்டான். அதுவும் திருமணம் முடிந்த இரண்டாவது நாளில் இருவருக்குள்ளும் மூண்ட சண்டைக்கான பலனாய்.
தாமதமாக வீட்டிற்கு வந்தான் என்று போட்ட சண்டை அது. "கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது. இருபது வர்ஷம் ஆன மாதிரி லேட்டா வர்றிங்க. இப்பவே கால் பண்ணி சொல்றது இல்லன்னா, அடுத்தடுத்த வர்ஷம்லா. என்னை மறந்தே போய்டுவிங்க. " என அவள் ஆரம்பித்த சண்டை. மதுவிற்கு பைரவியைச் சமாதானம் செய்வது அத்தனை எளிதான ஒன்று.
அப்பொழுதிலிருந்து இப்போது வரை அந்தப் பாதி இதயம் அவளின் கழுத்தை விட்டு இறங்கியதே இல்லை. ஏன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டு மது கட்டிய தாலியைக் கலட்டி கொடுக்கச் சொல்லி ஜெயா கூறிய போதும் கூட தாலியைக் கலட்டி கொடுத்து கையெழுத்து போட்டு கொடுத்து விட்டாளே தவிர, அந்த இதயத்தை இடம் மாற்றவில்லை.
இப்போது அதை தந்துவிட்டு செல்கிறாள் என்றால், அவளின் மனதில் அதீத காயத்தை ஏற்படுத்து விட்டோம் என்பது புரிய. வேகமாக சென்று அந்தக் கயிறை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு பைரவியைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்றான் அவன்.
ஆனால் துரத்தியதுமே பிடித்து விட கூடிய பொருளா அவள். சென்று விட்டாள், சாப்பாரில். தூரத் தெரிந்த அவளின் உருவம் கண்ணை விட்டு மறையும் வரை வாசலிலேயே நின்றவனின் தோளைத் தட்டிக் கவனத்தை ஈர்த்தான் பிரவீன். திரும்பியவனிடம்,
"நான் இத உங்க கிட்ட இருந்து எதிர் பாக்கல மச்சான். ஆனாலும் நல்லது தான். இனியாது உங்க பின்னாடி சுத்தி நேரத்த வேஸ்ட்டாக்காம இருப்பா. " என்று விட்டு சென்றான் அவன்.
எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. பறவை தன் கூடு வந்து சேர்வது போல் தன்னிச்சையாக தன் இல்லம் வந்து சேர்ந்தவள், கண்டது தனக்காக வாசலிலேயே காத்திருக்கும் தன் அன்னையை. கவலை படிந்த முகத்துடன் மகளைக் கண்டதும்,
"என்னாச்சி பைரவி. " எனப் பதறிப்போய் அவர் எழ. சாப்பரை நிப்பாட்டும் அளவுக்குக் கூட தெம்பு இல்லாது அதைச் சாய்த்து விட்டு, வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்.
கப்ஃபோர் நிறைய மதுவின் நினைவுகளைத் தாங்கிய பொருள்கள் இருக்க, அத்தனையையும் தெருவில் வீசி எறிந்தாள் பைரவி. அத்தனை கோபம். அத்தனை ஆவேசம். எப்படி அவனுக்கு மனம் வந்தது என்ற ஆதங்கம் இருக்க, பைத்தியக்காரி போல் அத்தனையையும் தூக்கி எறிந்தாள்.
மகளின் இந்தச் செயலை கண்டவர், அவளிடம் நடந்ததைக் கேட்க, பதிலேதும் சொல்லாது தன் அறையையே தூக்கி எறிந்திருந்தாள். சோர்வுடன் அன்னையை அணைத்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.
"ம்மா… என்னால முடியலம்மா. நான் தோத்திட்டேன். நீ தானம்மா சொன்ன, நமக்குப் பிடிச்ச வாழ்க்க அமையலன்னா அத நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கணும்னு. நான் முயற்சி பண்ணேன்ம்மா. ஆனா தோத்திட்டேன். ரொம்ப மோசமா தோத்திட்டேன். " என்ற மகளின் கதறல் தாயாய் வேதனையை வாரி இறைத்தது அவருக்கு.
"இல்லம்மா. அவந்தா தோத்திட்டான். அவெ ஒரு முட்டாள்ம்மா. எம்பொண்ணு கூட வாழ அவனுக்கு தான் குடுத்து வைக்கல. நீ தங்கம் டா. மாசு இல்லாத தங்கம். " என்றவருக்கும் அழுகை வர, மகளை மடியில் கிடத்தி ஆறுதல் கூறினார்.
அவருக்கு தெரியும் மகளின் குணத்திற்கும் மதுவின் குணத்திற்கும் உள்ள முரண்பாடு. மகள் எத்தனை தூரம் வேண்டுமாலும் வளைந்து கொடுத்து சீர் செய்து விடுவாள் என்று நம்பினார். ஆனால் மதுவின் நெகிழாத் தன்மை புரிய, விவாகரத்து என்றலும் முதல் ஆளாக அவருக்குத் தான் நிம்மதி பிறந்தது.
விவாகரத்துக்கு பின் மதுவின் குடும்பம் அவனின் வாழ்க்கைத் தீர்மானித்துக் கொள்ளும் என்பதால், அவனின் பின்னாலேயே சென்ற மகளைத் தடுக்கவில்லை. அனைத்துயும் எதிர்பார்த்து தான் இருந்தார். அது நிகழும் போது தான் மனம் வேதனைத் தீயில் குதித்தது.
உண்ணாது கண்ணீர் சிந்தியவளைக் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தவர் உறங்கவும் வைத்தார்.
யார் என்ன செய்து கொண்டிருந்தால் என்ன! செய்யவில்லை என்றால் என்ன! என்னுடைய பணியை நான் தவறாது செய்து கொண்டே இருப்பேன். யாருக்காகவும் எதற்காகவும் என் கடமையில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். என்பது போல் ஆதவன் தன் கடமையைச் சரியாக செய்ய, சாந்தி கண் திறக்காது கரங்களால் அருகில் துயில் கொண்டிருந்த மகளை தேடினாள். மகள் கிடைக்காது போக. பயந்து விட்டார் சாந்தி.
"பைரவி. அடியே பைரவி. எங்க இருக்க? " எனக் கத்தியவருக்குப் பதில் இல்லை என்றதும் பதட்டம் வந்து விட்டது.
"அய்யோ இந்ப்த பொண்ணு எங்க போச்சின்னு தெரியலயே! ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணிக்கிவாளோ! ஏங்க நம்ம பொண்ணு எங்க? " எனக் கணவனிடம் கேட்க,
" உங்கூட தான இருந்தா. நான் வாக்கிங் போறதுக்கு முன்னாடி பாத்தேனே. " என்றவரும் வீட்டை சல்லடையாக்க, மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்தாள் பைரவி.
"என்னடி இது! எதுக்கு நீ மேல போன? என்னடி பண்ணி வச்சிருக்க?" என வேகவேகமாக கேள்விகளை அடுக்கினார் சாந்தி.
"ஏம்மா கத்துற? பக்கத்துக்கு வீட்டு பையன் பால் விழுந்திடுச்சின்னு சொன்னான். அதத் தேடி எடுக்க மேல ஏறி இருந்தேன். " என அசால்ட்டாக சொல்ல,
" அது சரி எங்கடி முடிய? அத ஏண்டி வெட்டுன. என்ன ஹர்கட் இது!" என்ற சாந்தியின் கேள்வியில் நியாயம் உள்ளது. ஏனெனில் பைரவி ஜீன்ஸ் டீசர்ட்டுடன் பாப் கட்டிங் வெட்டியிருந்தாள்.
"யாருக்காக வளத்தேனோ அவனே இல்லன்னு ஆனதுக்கு அப்றம் எதுக்கு வெட்டியா நடிக்கன்னு வெட்டிடேன். இப்ப தான் நானா இருந்த மாதிரி ஃபீல் வருது. ம்… சுதந்திர காற்று. " என இரு கரத்தையும் விரித்து ஆழ மூச்சை இழுத்து விட, தலையில் அடித்துக் கொண்டார் சாந்தி. கீழே வந்தவள் அலமாரியில் இருந்த பொட்டியை எடுக்க,
"எதுக்குடி இது?" என்றார் சூட்கேஸ்ஸைப் பார்த்து.
"இதுவா! நான் மதுர போறேன். தாமர ஊர்ல திருவிழாவாம். ஒரு வாரம் இருந்திட்டு வரலாம்னு இருக்கேன். எனக்கும் ஒரு சேன்ஜ் கிடைச்ச மாதிரி இருக்கும். " என்ற போது குரலில் வாட்டம் இருந்தது. அதுவும் சரியென பட்டது சாந்திக்கும். எனவே எதுவும் சொல்லாது பெட்டியை அடுக்கி வைக்கத் தொடங்கினார்.
"எதுல போகப்போற.? "
"கார்ல.”
"யார் கூட?"
"தீஷித் கூட…"
"யாரு தீஷித்?"
"அன்னைக்கி வந்தாரே. கன்ஸ்ரெக்ஷன் கம்பெனிகாரரு. எனக்கு சுடரக்கா கேஸ்க்கு உதவி பண்றதா சொல்லிருக்காரு. " என அவள் சொல்லி முடிக்கும் போதே தீஷித் காருடன் வந்து நின்றான்.
"பைம்மா. " என்ற மகளை கட்டி அணைத்து வழியனுப்பி வைத்தார் அவர்.
"ஹேய்... டாம் கேர்ள். இப்பத்தா பேரு பொருத்தமா இருக்க. " என்றான் புன்னகையுடன்.
"யூ டூ அவகேடோ…" என்று பதிலுக்கு பாராட்டியவள், ஏறி அமர்ந்ததும் காரின் ப்ளேயரை ஆன் செய்ய, அதில் கன்னடப் பாடல் ஓடியது.
"நான் இத மாத்திக்கலாமா? " எனக் கேட்க, அழகாய் ஒரு புன்னகை சிந்தியவன்,
" பர்மிஷன் கேட்க வேண்டியது இல்ல. உனக்கு பிடிச்சத நீ செய்யலாம்." எனத் தமிழ் பாடல் வைக்க, பைரவிக்கு அந்தப் பயணம் ஒரு நீண்ட நெடும் பயணமாக இருந்தது. நிம்மதியான பயணமாகவும் இருந்தது. இனி யாருக்காகவும் இனி என் சுயத்தை மறைக்க மாட்டேன் என்றாலும் ஊமையாய் மனம் அழுதது.
ஒரு மனம் இதமாய் பனி பொழிந்தாலும். மறு மனம் தகித்துக் கொண்டிருந்தது. யார் யாரின் மனத்தை குளிர்விக்கிறார்கள் என்று பார்க்கலாம். யார் பனி… யார் நெருப்பு…
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..