அத்தியாயம்: 82
பல கோடி செலவு செய்து தங்கத்தையும் வெள்ளியையும் வைத்து சிலை வடித்தால் தான் இறைவன் வாசம் செய்வான் என்று இல்லை. பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி வேத மந்திரங்கள் ஓதினால் தான் அவனின் அருள் கிடைக்கும் என்று இல்லை.
அவன் எங்கும் இருப்பவன். எதிலும் நிறைந்திருப்பவன். எல்லாம் அவனே.
சிறிய ஏரி. அதில் அரசமரமும் வேப்பமரமும் பின்னி பிணைந்து வளர்ந்திருந்தது. அதில் சிவனும் பார்வதியும் வாசம் செய்ய, மரம் கோவிலாக மாறி இருந்தது. ஊரில் உள்ள அத்தனை பேரும் ஒன்றுகூட ஏதுவாய் வெட்ட வெளியில் கோட்டைச் சுவருடன் நிழல் தரும் மரங்களுக்கு மத்தியில் குதிரை மேல் வீற்றிருந்தார் கருப்பன்ன சாமி.
மற்ற அனைவருக்கும் வேப்ப மர நிழல் தான். மொட்டை போட, பொங்கல் வைக்க என தனி தனி இடத்தை ஒதுக்கி இருக்க, கழிவறை என்பது நடமாடும் மொபைல் பூத்துக்களைப் போல் சிறிய தகர செட்டுகள். அது பெண்களுக்கு மட்டுமே.
"அடியே தாமர அந்த வெல்லத்த துனுக்கி வை. தேங்கா எங்க இருக்கு. " என மகளை வேலை வாங்கி கொண்டு இருந்தார் அரசி.
"அதா மருமக வந்திட்டால்ல. இன்னும் என்னத்துக்கு மகள ஏவுறவ. அவட்ட சொல்லு. ஏன் அவள வேல செய்ய சொன்னா உம்மகெ பொங்குவானாக்கும். " எனச் சிவப்பு நிற பட்டு புடவையில் பாந்தமாக நின்றிருந்த சாருவைப் பார்த்து பலர் வம்பாக பேசினர்.
"ஆமா ஆமா. பட்டணத்து மருமகள்ல… மாமியா அடங்கித்தா ஆகணும். இல்லாக்காட்டிக்கி மகன் பெத்தவளுக்கு ஒன்னுக்கும் ஆகாம பொண்டாட்டி முந்தானைய பிடிச்சிட்டே போய்டுவான். ஹிம்... நம்ம ஊருக்குள்ள இல்லாத பொண்டுகளா. பட்டணம் தேடி ரெண்டாந்தாரமா ஒருத்திய கட்டிட்டு வந்திருக்கான். "
"காதலாம்க்கா. "
"யாருக்குடி. "
"நம்ம பைய்யனுக்கா இருக்காது. இது தான் வெவரமா ஒத்த பிள்ளையா இருக்கான்னு அத்த இத்த காட்டி கவுத்திட்டா. "
"ஆமா மொத புருஷன என்ன பண்ணா. "
"பிடிக்கலயாம். விட்டுட்டு வந்திட்டா. "
"என்ன ஆளுங்க. "
"யாருக்கு தெரியும். " எனப பலர் பலவிதமாக வாய்க்குள் முணுமுணுக்க,
" எவடி அவா. தைரியம் இருந்தா மூஞ்சிக்கி முன்னாடி வந்து பேசுங்கடி. " என அரசி வாயைத் திறக்கவும் எந்த வாயும் அசைய கூட இல்லை.
"த்துத்தேரி. பொரணி பேச எம்புட்டு அழையிறாளுக. என் வீட்டு சமாச்சாரம் தெரிஞ்சி என்னத்த டி கிழிக்க போறிங்க. எம்மகெ யார கட்டிக்கிட்டா இவளுகளுக்கு என்ன வந்ததாம். இவள்களா சோத்தாக்கி போட்டு பாக்கப் போறாளுக. தாங்கோமணம் காத்துல பறக்குது. அத விட்டுட்டு அடுத்தவ மானத்த காப்பாத்த வந்திட்டாலுக.
ஏய் இந்தா… அவளுக பேசுனாத கேட்டுட்டு சும்மாவா நிப்ப. எம்மருமக நீ இனி பேசவிட்டு இருந்தன்னு தெரிஞ்சது. பாத்துக்க. " விழி உருட்டி அரசி சொல்ல, சாரு எந்த வேலையும் செய்யாது வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
"இது கூட நல்லாத்தா இருக்கு. எந்த வேலையும் பாக்காம வேல பாக்குறவங்கள பாத்திட்டே இருக்குறது. " என்றிருந்தது சாருவிற்கு. பள்ளி படிக்கும் போதிருந்தே அருகில் இருக்கும் சின்ன சின்ன கடைகளுக்கு கணக்கு எழுதி கொடுத்து வேலை செய்யத் தொடங்கியவள். வீட்டிலும் வேலை செய்யாத நாளே இல்லை. அதுவும் திருவிழா பண்டிகை என்றால் பெண்டை நிமிர்த்தி விடுவாள் அவளின் அன்னை. இனியனுடனான பிரிவுக்குப் பின் தன் வேலையத் தானே செய்யும் போது ஒரு வித வெறுமை குடி வந்து விட, இப்போது தான் விடுதலை கிடைத்த உணர்வு.
"மதினி, கட்டிருக்குற சேல பாழாகிடும் இதுல உக்காந்துக்கங்க. " எனத் தாமரை பனை ஓலை ஒன்றை எடுத்து போட, அதில் அமர்ந்தவளின் கரங்கள் அணிந்திருந்த சேலையைத் தானாக வருடியது. இது பாண்டிராஜனின் முதல் பரிசு.
நேற்று நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது.
ஐந்தரை மணி போல் சமையலறை உருட்டும் சத்தம் கேட்க, எட்டி பார்த்தாள் சாரு. அரசி சமையல் செய்து கொண்டிருந்தார் பரபரப்பாக.
"நான் எதுவும் பண்ணவாத்தை. " எனக் கேட்க,
"எந்திரிச்சிட்டியா. இந்தா இத அலசி உலைல போடு. சீக்கிரம். நாளைக்கி கொட. கோயிலுக்கு வேற போணும். பொங்க சாம வாங்கிட்டானான்னு தெரியல. கீரை வேற பறிக்க போணும். " எனச் செய்ய வேண்டிய வேலைகளை அடுக்க,
"நீங்க அத பாருங்கத்த. நா சமயக்கட்ட பாத்திக்கிறேன்." என அனுப்பி வைத்தவள், காலை உணவாக வெண்பொங்கல் சாம்பார் சட்னி வைக்கத் தொடங்கினாள்.
அனைத்தும் ரெடி. இருந்த பாத்திரங்களை பிறக்கி எடுத்து கொள்ளைபுறம் போட்டவள் கழுவ அமர, உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
"எலியா இல்ல பூனையா. ரெண்டுமே இருக்கும்னு நினைக்கிறேன். " என்றவள் தூக்கி சொருகிய சேலையை இறக்கி விட்டு விட்டு, சமையலறையை எட்டி பார்க்க, அங்கு எதுவும் இல்லை.
"எலியாத்தா இருக்கும். " என நினைத்து திரும்ப, மீண்டும் பாத்திரங்கள் உருண்டன.
"என்ன பாத்தா எலிக்கி பயப்படுற ஆளு மாறியா இருக்கு. இதோ வர்றேன். " என்றவள் கையில் விளக்கமாற்றி எடுத்துக் கொண்டு அதைத் துரத்தி விட நினைக்க, அது ஒழிந்து கொண்ட இடத்தில் இருந்து எட்டி பார்த்தது. எலிக்கு பெரிய சைசில் வால் இருந்தது. அதுவும் புஸ் புஸ் என மிருதுவாக இருந்தது.
"இது… இது... எலி இல்ல. அணில். " என்றவளைப் பயமுறுத்துவது போல் அணில் வெளியே வர, சாரு மிரண்டு விட்டாள்.
"இதுவர எலி பூன ஏன் குரங்கு கூட வீடு புகுந்து களவாடி சாப்பிடுறத பாத்திருக்கேன். ஆனா ஒரு அணில். சட்னிக்கி எடுத்து வச்சிருந்த தேங்காச்சில்ல தூக்கிட்டு போறத இப்ப தான் பாக்குறேன். " என்றவளுக்கு ஆர்வம் வந்து விட்டது.
எட்டி மரத்தை பார்த்தாள் அந்த அணில் இன்னும் அங்கிருந்த செல்லவில்லை. "கண்டிப்பா என் தலை மறஞ்சதுக்கு அப்றம் வந்து சாப்பிடும்னு நினைக்கிறேன். " என்றவள் அறைக்குச் சென்று தன் ஃபோனை எடுத்து வந்தாள், அதை வீடியோ எடுக்க.
அவள் நினைத்தது போல் வந்தது அணில். அழகாய் அவள் வெட்டி வைத்திருந்த தேங்காயை இரு கைகளால் பிடித்து உண்டதுடன், பாத்திரத்தில் இருந்த நீரை அது எட்டி பார்த்து குடிக்க, யாரோ வரும் ஆரவாரம் கேட்டது.
அணில் சென்று விட்டது. ஆனால் அதை வீடியோ எடுக்கிறேன் என்று அவள் அதன் பின்னாலேயே போக நிலம் கண்ணிற்கு தெரியவில்லை. இதுவரை கஷ்டப்பட்டு செய்து வைத்த சமையல் பாத்திரங்களை தட்டி விட்டு ஓடி எதிரில் வந்து கொண்டிருந்த பாண்டியின் மீது மோத, இருவரும் சுவரில் சரிந்தனர்.
மார்பில் மோதி நிற்கும் மங்கையின் வாசம் ஆடவனுள் புகுந்ததோ இல்லையோ. அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்த ஆணின் வாசம் நங்கையைக் கிறங்கச் செய்தது. அவனை இதற்கு முன் ரசித்திருக்கிறாள் தான். ஆனால் இன்று, உரிமையுடன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அதை பயம் என்று எண்ணி அவனும் ஆறுதலாக தோளைத் தட்டி,
"பயப்படாத… என்னாச்சி. " எனச் சமயலறைய நோட்டம் விட, அது யானை புகுந்த வெண்கலக் கடை போல் இருந்தது.
தலைதூக்காது, "அங்க…" எனக் கையை உயர்த்த,
"எலியா?" எனக் கேட்டு அவளை விலக்க, அவனின் பனியனை படித்து இழுத்து மார்பில் சாய்ந்து கொண்டவள்,
"எலி இல்ல… அணில். அதுவும் அது அப்பவே போய்டுச்சி. " என்றவள் பேச்சும் போது அசைந்த கன்னம் அவனுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எனினும் அவளைக் கன்னம் தீண்டாது அவளின் விழியை உற்று நோக்க, பெண்ணவளுக்கு நாணம் வந்து ஒட்டிக் கொண்டது. கன்னங்கள் சிவக்கத் தொடங்கியது. அது ஏன் என அவன் உணரும் முன்னரே கேட்டது அரசியின் குரல்.
"எடுபட்ட பயலே. உன்ன வீட்டு பக்கம் வரக் கூடாதுன்னு சொன்னேனா இல்லயா. நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து சேதிய ஊர் பயலுகளுக்கு சொல்லி கொடா வெட்டி பொங்க வைச்சி மொறப்படி ஏற்பாடு பண்றதுக்குள்ள கண்டதா பண்ணிட்டு நிக்கிற. உன்னால சமைச்ச அத்தனையும் பாழாப் போச்சி. போடா வெளிய. " எனத் திட்டி தீர்த்தார் அவர்.
பாவம் மகன் மனைவியுடன் தனிமை வேண்டி வந்திருக்கிறான் என்று நினைத்து அடித்து துரத்தினார்.
'இப்ப நான் என்ன பண்ணிட்டேன் னு இந்தம்மா இந்தக் குதி குதிக்கிது. ' எனப் புலம்பியவனைப் பார்த்து, உதடுகளைக் கடித்து, வந்த புன்னகையை மறைத்துக் கொண்டு நின்ற சாருவைப் புரியாத பார்வை பார்த்தபடி சென்றான்.
வாசலில் திண்ணையில் அமர்ந்தவனுக்கு தாயின் வசை குரல் விடாது கேட்டது. சாரு, காபி டம்பளரை எடுத்துக் கொண்டு வந்து அவனின் அருகில் வைத்துவிட்டு திரும்ப,
"உனக்கு எதுக்கு அது லபே திபோன்னு கத்துது தெரியுமா. " என்க, அவள் பார்த்த பார்வையில் நாணம் நிரம்பி இருந்தது.
"உங்களுக்கு தெரியலயா.? " என்ற குரலில் அத்தனை மென்மை.
அப்போது தான் உணர்ந்தான் அவனின் அணைப்பில் அவள் இருந்ததையும் அவளின் நெருக்கத்தையும். அது அவனின் உடலில் மயிர் கூச்சத்தை உண்டாக்க,
" கொஞ்சம் தாமதமா தெரிய வந்திருக்கு. " என்றவனை நாணப் பார்வை பார்க்க, இருவரின் பார்வையும் நேர் கோட்டில் நின்றது.
"சாமா வாங்கச் சொன்னேனே வாங்கினியா இல்லயா. " என்றது அரசி தான்.
அவரைப் பார்த்தும் சாரு புன்னகையுடன் உள்ளே ஓடி மறைந்தாள்.
'இந்தம்மா வேற. எப்ப பாத்தாலும் ராங் டயமிங்லயை வந்து வந்து தொனத்தொனங்கிது. ' என முணுமுணுக்க,
"என்னடா சத்தத்தையே காணும். "
"வாய்ல காபிய வச்சிட்டு எப்படி பேசுறதாம். "
"முழுங்கிட்டு தே சொல்லணும். "
" இல்ல. "
"எப்ப வாங்கியாரப் போற. கொட முடிஞ்சதுக்கு பொறவா."
"ம்மோய். இன்னைக்கி டவுனுக்கு போறேன்ம்மா அப்ப வாங்கி வைக்கிறேன். நீ வைக்கிற இத்துணுட்டு பொங்கல்லயும் ஒரு கிடாலயுந்தா ஊரே பசி அடங்குற மாதிரி பேசக் கூடாது. "
" ஏன் சொல்ல மாட்ட. கல்யாணத்துக்கு பொண்ணு பாத்தத சொல்ல, பத்திரிக்க அடிக்கல, ஏன் கல்யாணம் ஆனதையே சொல்லலன்னு கேட்டு கேட்டு தெனோமும் வந்து வாசல்ல நின்னு கத்துறவள்கல நாந்தான சமாளிக்கிறேன். உனக்கு என்ன வந்தது. இந்த கொடல வச்சி அத்தன பேருக்கும் நம்ம செலவுல அத்தனையையும் செஞ்சாத்தா வாய மூடிட்டு இருப்பாளுக."
"நீ எப்பருந்து ஊரு வாய்க்கி பயந்த. "
"யாருக்கு! இந்த ஊருக்கா.! ஹிம். அவிங்களுக்குப் பயந்தா என்னாகுறது. எம்மகென்னு கல்யாணத்து பண்றேன். மொறன்னு ஒன்னு இருக்குள்ள. போ. போய் வேலய பாரு. " என விரட்ட,
"சரி சரி டவனுக்கு போறேன். அவள கூப்பிடு. "
"எதுக்கு. "
"புது ஜவுளி வாங்க வேண்டாமா. நம்ம ஊரு கொட. அதுவும் அவளுக்கு மொத கொட. "
"அதுக்கு எதுக்கு டா நீ கூட்டீட்டு போற. ஜவுளி தான. நேத்தே நான் பொழுது சாஞ்ச பின்னாடி ரோட்டு மேல இருக்குற தவசி கடைல வாங்கிட்டேன். ரவிக்க கூட தைக்க குடுத்தாச்சி. "
"எந்த கட! தவசி அக்கா கடைலயா. அது இத்துப்போன வெளுத்துப் போன பழைய ஜவுளியத்தான விக்கும். "
"ம்... இத்தன வர்ஷம் நானும் உனீ தங்கச்சியும் அங்கன தான எடுத்து கட்டிருக்கோம். அப்பெல்லாம் அது சாயம் போனதுன்னு தெரியல. பொண்டாட்டி வந்ததும் தெரியுதாக்கும். "
"ம்மா. நான் என் பொண்டாட்டிக்காக சொல்லலம்மா. நம்ம செல்விக்காக சொல்றேன். வெரசா அதுக்கு கண்ணாலம் கட்டி வைக்க போறோம். அதுவும் பட்டணத்துக்கு. நல்ல நல்ல டிரெஸ்லாம் வேண்டாமா. அந்த பைரவி புள்ளய பாத்தியா. போட்டிருக்குற டிரெஸ்ஸு எல்லாம் சும்மா சைனா பட்டு மாதிரி மிருதுவா இருக்கும். அந்த மாதிரி வாங்குறத விட்டுட்டு. தவசி கட கிவசி கடங்கிற. பொண்ண பெத்து கல்யாணம் கட்டி குடுக்கப் போறவ கணக்கா யோசி. " என்க, மகனை ஏற இறங்க பார்த்தார் அவர்.
'இவன பாத்தா தங்கச்சி யோசிக்கிற மாறி தெரியலயே. ' என்பது போல் பார்த்தவர்.
"அதுக்கு நீ செல்வியத்தான கூட்டீட்டு போணும். எதுக்கு இந்த புள்ள. "
"ம்மோய் என்ன பேசுற நீ. அவள கூட்டீட்டு போய் கடைல நிப்பாட்டுன.. பேந்த பேந்த முழிச்சிட்டு அவெங்காட்டுற எல்லாத்துக்கும் தலைய தலைய ஆட்டிட்டு. வேணுமா வேணாமான்னு பாக்காம வந்திடுவா. அதே இது இந்த புள்ளைய கூட்டுட்டு போன. பாத்து பாத்து எடுக்கும் ம்மா. உம்மக நாம எது எடுத்து குடுத்தாலும் சரின்னு தான் சொல்லவா. " என்க.
"அதுக்காக உன்ன நம்பி தனியாலாம் அனுப்ப முடியாதே. "
" ம்மா. நான் தனியா கூட்டீட்டு போறேன்னு சொல்லல. தாமரையையும் கூட கூட்டுட்டு போறேன். பைரவியும் வரும். "
"அப்ப சேரி. " என அனுமதி கொடுக்க, மூன்று பெண்களும் புறப்பட்டனர். அந்தப் பெண் சிங்கங்களுக்கு காவலாய் பாண்டி மட்டுமல்லாது நானும் வருகிறேன் என்று ராக்கியும் புறப்பட,
" வந்த வேலைய பாருங்க பாய். ஏன் பாய் எங்க கூட சுத்துறீங்க. நல்லா அந்த வீட்டு சல்லட போட்டு தேடி பாருங்க. " என பைரவி அவனைக் கலட்டி விட பார்த்தாள்.
" அதெல்லாம் முடியாது நானும் வந்தே தீருவேன். " என அடம்பிடித்து செல்ல, பேருந்து நிற்கும் நேரம் தீஷித் வந்தான், காரில் அழைத்து செல்வதாக சொல்லி.
கடையில் சாரு ஆசையுடன் ஒரு புடவையை பார்க்க, அதன் விலை பார்த்து விட்டு எடுத்த இடத்திலேயே தொங்க விட்டு விட்டாள்.
பாண்டி, "வாங்கலயா."
சாரு, "பட்ஜெட் போட்டிருக்கிங்களா. "
"பொண்டாட்டிக்கி செய்றதுல பட்ஜெட் பாக்குறதா இல்லை. என்ன பிடிக்கிதோ. எத்தன பிடிக்கிதோ. அத்தனையும் அவளுக்கு தான்." பாண்டி சொல்லி அந்தப் புடவையை பில் போட்டு வாங்கினான்.
இங்கு ராக்கியோ தாமரையின் கலருக்கு ஏற்ற உடையை தேர்ந்தெடுக்கிறேன் என்று கடையாட்களை வேலை வாங்கிக் கொண்டு இருந்தான்.
" இந்த டிசைன்ல லெமன் ப்ளூ கலர் இருக்கா. " ராக்கி.
"லெமன் ப்ளூ வா! " என கடையாட்கள் முழிக்க,
"என்ன இல்லையா. அப்றம் எதுக்கு கடைய திறந்து வச்சி உக்காந்திருங்கிங்க. திண்டுக்கல் பக்கத்தூரு தான வாங்கி பெரிய பூட்டா போட வேண்டி தான." என வம்பு பேசி, கடையையே விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தான்.
காதல் ஜோடிகள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி பைரவி தனித்து செல்ல, தீஷித் விடவில்லை.
"உனக்கு கம்பார்ட்டெபில்லான டிரெஸ் எது டாம்?." என்ற படி கடையைச் சுற்றி சுற்றி வந்தவளை அவன் தொடர.
"என்ன பத்தி ஃபுல் டீட்டெய்ல்ஸ் எடுத்து வச்சிருக்கேன்னு சொன்னிங்க. " என குறும்பாக கேட்க.
"ம். வச்சிருக்கேன் தா. பட் விருப்பங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிட்டே இருக்கே. what do to?."
"மாறாது. " என்றவள் தன் குட்டை முடியை சிலுப்பிக் கொண்டு முன்னே நடக்க..
"புதுசா ஒன்ன அதுல சேக்க முடியும். " என்க. பைரவி சட்டென திரும்பி பார்த்து.
"அப்படின்னா.. "
"மனசு வச்சா. மனசுல இடம் கிடைக்கும் ன்னு சொல்ல வர்றேன். " எனக் கண்சிமிட்டி சொல்ல, அவனின் பேச்சு ரசிக்கும் படி இருந்தது.
'இவன விட்டா இப்படியே பேசி பேசி கரெக்ட் பண்ணிடுவான் போலயே. மதுசூதனா எங்கப்பா இருக்க நீ. ‘
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..