அத்தியாயம்: 108
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்லை. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
அது திருக்குறள். நட்பு பற்றிய அவரின் ஏழடி குறளுக்குப் பலர் விளக்க உரை எழுதி இருந்தாலும் உதாரணமாக இங்கு நம் நாயகர்களைக் காட்டுகிறேன்.
தீஷித் மது இருவரின் வாழ்க்கை முறை பழக்கம் குணம் எனப் பல வித்தியாசப்பட்டாலும் இருவரின் எண்ண ஓட்டங்கள் ஒத்து இருந்தன. அது சில மணி நேரங்களிலேயே இருவருக்குள்ளும் அழகான நட்பை வளர்ந்திருந்தது.
அதை முதலில் வளர்த்தவன் தீஷித்தே. மதுவைப் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று கேள்வி கணைகளைத் தொடுத்தவனுக்கு அவன் தராத சில பதில்களில் உருகித் தான் போனான். அந்த உருக்கம் மதுவின் மீது நட்பு மதிப்பு எனப் பலவற்றை உண்டு பண்ணியது. இலகுவாக பேச்சுக்கள் தொடரந்தது. அதுவும் பல மணி நேரங்களுக்கு.
" ம்மா... ம்மா. நான் நல்லாத்தா இருக்கேன். ப்ளீஸ் கண்ணீர் விடுறத நிப்பாட்டுங்க. மாத்திர போட்டிங்களா. கற்பகமக்கா என்ன பண்றாங்க. தயவு செய்து எனக்கு என்னாச்சின்னு துக்கம் விசாரிக்க வர்ற உன்னோட சொந்தக்காரங்க பேச்ச கேக்காதிக்க. கேட்டீங்கன்னா உங்கள பீப்பிய எகிற வச்சி அட்மிட் பண்ணிடு விட்டுடுவாங்க. சொன்னா கேளுங்க. துரத்தி விடுங்க. " எனத் தீஷித் தன் அன்னையிடம் கன்னடத்தில் கத்திக் கொண்டிருந்தான்.
ஏனெனில் தீஷித்திற்கு விபத்து என்று கேள்வியுற்று அவனைப் பார்க்க வராமல் அவனின் அன்னையிடம் சென்று, 'காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா.' என்று ஆரம்பித்து, அபிராமி, தீஷித்தை வஞ்சித்து விட்டதாகவும் மகன்களிடம் பாரபட்சம் பார்ப்பதாகவும் பேசி விட்டு செல்ல, கலக்கத்தில் அமர்ந்திருந்தார் அபிராமி.
ஏனெனில் மூத்தவன் இருக்க அவனுக்கு அடுத்த இளையவனுக்குத் திருமணம் முடித்து குழந்தை குட்டி என அவன் சந்தோஷமாக வெளிநாட்டில் இருக்கிறான். மூத்தவனைத் தன்னருக்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திற்காக கல்யாணம் முடிக்காது வைத்திருப்பதாக சொந்தங்கள் பேசிய பேச்சு அவரை மன வருத்தத்தில் தள்ளியது.
உடனே அக்ஷரா தீஷித்திற்கு ஃபோன் செய்து. 'அதான் நீ பாத்து வச்ச பொண்ணுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுல இன்ட்ரெஸ்ட் இல்லைல. நான் உனக்கு பொண்ணு பாத்து வச்சிருக்கேன். நம்ம அத்த பொண்ணு தான். கால்ல கட்டு பிரிக்கவும் உனக்கு கல்யாணம் தான். ' என்று விட,
'அந்த முடிவெல்லாம் நீ எடுக்க கூடாது. அதுவும் அத்தை பொண்ணையா. ஏற்கனவே ஒரு பொண்ண எடுத்து பட்டது போதாதா. ' எனத் தீஷித் சண்டை செய்ய அபிராமி கண்ணீர் வடிக்க எனக் குடும்பத்திற்குள் சண்டை நடந்து கொண்டிருந்தது. தீஷித் உறுதியாக திருமணத்தை மறுத்தபடியே இருந்தான்.
அது மதுவிற்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும். குறுஞ்சிரிப்புடன் காரை ஓரமாக நிறுத்தி தீஷித்திற்கு உணவை வாங்கச் சென்றான். அவன் கவருடன் திரும்பி வரும் வரை ஃபோன் அணைக்கப்படவில்லை. என்றும் கடுமையாக சுடு சொல் பேசாத தீஷித் இன்று தாயைத் திட்டிக் கொண்டிருப்பது மதுவிற்கு கவலையாக இருந்தது. உடனே ஃபோனை தீஷித்தின் கையில் இருந்து வாங்கியவன்.
"ம்மா, உங்க பையன் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பான். நீங்க செலவு செய்ய காச ரெடியா வச்சிக்கங்க ஆறே மாசம் தான். " எனச் சொல்லி அழும் அவரைச் சமாதானம் செய்து வைத்தான். அவனை முறைத்தான் தீஷித்.
"என்ன?" எனப் புருவங்களை ஏற்றி இறக்கினான் மது.
"உன்ன யார் தேவையில்லாத வாக்குறுதி எல்லாம் குடுக்கச் சொன்னது. ஆறு மாசத்துக்கு அப்றம் உந்தலை தான் உருளும். சொன்னியேப்பா ன்னு நச்சரிக்கப்போறாங்க. நல்லா அனுபவி." என்க, புன்னகைத்தான் மது.
" நீ ஏன் அவங்க கிட்ட இவ்ளோ காட்டமா பேசுற. பாவம் அவங்க அழுதாங்க. இனி அவங்கள அழ விடாத. " என்றவனின் குரலில் அத்தனை கண்டிப்பு.
"என்ன பைல்வான். ஆர்டர் போடுற மாதிரி இருக்கு. அம்மான்னா அவ்ளோ பிடிக்குமா. " என்க, மது எதுவும் சொல்லவில்லை. மாறாக தீஷித் உணவு உண்ண ஏதுவாய் சிறிய மேசையை அவனின் முன் வைத்து உணவைக் கடை விரித்தவன் காரை ஓட்ட தொடங்கினான்.
" எங்களோடது நடுத்தர குடும்பம். அப்பா அம்மா தம்பி தங்கச்சி. நாந்தா ஃபஸ்ட். அப்பா சைடுலயும் சரி அம்மா சைடுலயும் சரி நிறைய சொந்தம் உண்டு. உனக்கு. " என்றவனைத் திரும்பி பார்த்தவன்.
"எனக்கும் இருந்தது. இனி இருக்காது. " என்றவனின் குரலில் வலி.
பிறந்தது முதலே அப்பா உடன் இருந்தது இல்லை. தாய் பாசமழை மொழியா விட்டாலும் தள்ளி இருந்தாவது பழகி இருக்கலாம். ஆனால் அதுவும் இல்ல.
தாய் தந்தையின் கரம் கோர்த்து நடந்த நினைவு இல்லை. தாயின் கையில் உணவுண்ட ஞாபகம் இல்லை. தந்தையின் தோளில் அமர்ந்து ஊர் சுற்றியது இல்ல. சொல்லப் போனால் இருவரின் முகமும் மூளையில் பதிந்திருந்ததே தவிர இதயத்தில் இடம் இல்லாது போனது.
தள்ளி நின்று ஆசானாக வளர்த்த சிற்றப்பன். வெறுப்பை மட்டுமே தேன் கலந்த சொற்களால் பொழியும் சிற்றன்னை. காரியம் சாதிக்க பழகும் தங்கை என அவன் எதிர்பார்த்த எந்த ஒரு பாசமும் கிடைக்கவில்லை. நிராகரிக்கப்பட்ட அன்பு.
ஏன் அன்பிற்கு ஏங்க வேண்டும். மதிப்பு தெரியாதவரிடத்தில் காட்டப்படும் அன்பானது பாலை நில சாரலுக்கு சமம். நிலத்தை அடையும் முன்னே காற்றில் கரைந்து போய்விடும். தான் அன்பு காட்ட வேண்டுமாயின் அது தனக்கு மட்டுமே சொந்தமான உறவாக இருக்க வேண்டும். அந்த உறவாகும் தகுதி மனைவி மக்களுக்கு மட்டுமே உண்டு என அழுத்தமாக நம்பியவனுக்குக் குடும்பம் வேண்டும். தனக்கே தனக்கு மட்டும் என ஓர் உலகை உருவாக்க குடும்பம் வேண்டும்.
' என்னோட குழந்தைக்கி நிறைய பொம்ம வாங்கி குடுப்பேன். சுவத்துல கிறுக்கி வச்சாலும் நான் கண்டிக்க மாட்டேன். ஸ்கூலுக்கு நாந்தா கூட்டீட்டு போவேன். சோறு ஊட்டி விடுவேன். எவ்வளவு சேட்ட செஞ்சாலும் அடிக்கவே மாட்டேன். தொட்டிலாம் தேவையில்ல என்னோட மார்ப்புல தட்டி குடுத்து தூங்க வப்பேன். வளந்ததுக்கு அப்றம் ஒரு அப்பாவா இல்லாம ஃபெஸ்ட்டானா நண்பனா இருப்பேன். ' என அடிக்கடி பைரவியிடம் சொல்வது உண்டு.
' என்னது நெஞ்சுல போட்டு தட்டி குடுப்பிங்களா. அப்றம் நான் எங்க மாமா தூங்குவேன். அதுனால தொட்டில் தான். ரெண்டு பேருக்கும் நடுவுல விட மாட்டேன். நான் என்னோட இடத்த யாருக்கும் குடுக்க மாட்டேன். ' என உரிமை கொடி தூக்கி இல்லாத குழந்தைக்காக சண்டையிடும் மனைவியை, கானல் நீராய் மாறி போன உறவுகளுக்காக காயப்படுத்தி உள்ளோம் என்று மனம் வேதனை கொண்டது.
பதினெட்டு வயது இருக்கும், மது அந்த ஏஜென்சியில் கால் தடம் பதித்து. தன்னுடையதாக என்றும் உரிமை கொண்டாடியதில்லை என்றாலும். 'எனக்கப்றம் நீ தான் இத எடுத்து நடத்தணும்.' என வாய் ஓயாது கூறிய சிதம்பரத்தின் வாய் இன்று ' பெத்த பொண்ணுக்கு நல்லது நடக்கும்னா இத கை மாத்தி விடுறதுல என்ன தப்பு இருக்கு. உனக்கு தான் அகாடமி இருக்கே. ' என்று சொல்லி துரத்தி விட்ட போது மதுவின் மனதில் பெரும் அடி.
அத்தோடு தன் மனைவியின் குணம் அறிந்தும் எந்தச் சூழ்நிலையிலும் சிதம்பரம் விட்டு கொடுத்தது இல்லை. 'அவள் அப்படித்தான். நீ உன்னை மாற்றிக் கொள். ' என்று சொல்லும் போதெல்லாம் தோன்றியதில்லை, அது மனைவிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் என்று. இப்போது தோன்றியது.
தாயால், உடன் பிறந்தவர்களால், ஈன்றெடுத்த செல்வங்களால் கூட நிரப்ப முடியாத இடம் தாரம். அதை நன்கு உணர்ந்தவர்.
இவர்களின் பேச்சிற்கு செவி சாய்த்து தான் பைரவியை விவாகரத்து செய்ததை நினைத்து மனம் புழுங்கியது. அனலில் இட்ட புழுவாய் மாண்டு போகாது தன் வாழ்க்கையைச் சீர் செய்ய முயன்றான். விரல்கள் ஸ்டேரிங்கை அழுத்த காரில் சாலையில் அசுர வேகத்தில் சென்று மனதில் இதத்தை பரப்ப முயற்சித்தது.
மதுசூதனனின் வாய் மொழி பேசாது முகம் பேசிய அந்த வலி மிகுந்த உணர்வுகளைத் தீஷித்தால் மொழி பெயர்க்க முடிந்தது தான் ஆச்சர்யமாக இருந்தது. மதுவின் மன வேதனைகள் தன்னையும் வேதனை கொள்ள செய்கிறது ஏன் என அறியாதவன், 'கேட்க கூடாததைக் கேட்டு அவன காயப்படுத்திட்டோமோ. ' என்றெண்ணி மதுவின் மனநிலையை மாற்றும் வழி யோசித்தான்.
தன் முன் இருந்த உணவு பொட்டலத்தைப் பார்த்தவன் அதில் வெஜிடபிள் பிரியாணி இருக்க அதற்கு சைட்டிஸ்ஸாக ரைத்தா என்ற தயிர் வெங்காயம் இருந்தது. அதைக் கண்ட தீஷித்திற்கு மதுவின் கவலைகளைப் புதைக்கும் யோசனை தோன்றியது.
"வெங்காயம். ப்பா... அதுவும் தயிர்ல ஊற வச்சது. எனக்கு வேண்டாம் ப்பா. " எனச் சொல்லி மூடிய ஜன்னலை திறந்து வெளியே வீச, மது திரும்பி பார்த்து முறைத்தான்.
" அறிவில்லயா உனக்கு. சாப்பிடுற பொருள வேஸ்ட் பண்ற. " எனக் காட்டமாக கேட்க,
"உனக்கு பிடிக்குமா?" எனக் கேள்விகளை எழுப்பியவனுக்கு பதில் சொல்லாது திரும்பிக்கொண்டான் மது.
"பட் பைரவிக்கு பிடிக்காதே. அத சாப்பிட்டா பக்கத்துல கூட விட மாட்டா. " என்றான் ஓரம் பார்வை பார்த்த படி,
"இப்படில்லாம் இல்ல. அவளுக்கும் பிடிக்கும். "
"நோ. "
"எஸ்…"
" நோ. பைரவிக்கு வெங்காயத்தோட ஸ்மெல் பிடிக்காது. "
" ஓ... " என அலட்சியமாக மது சொல்ல,
"அவளுக்குப் பால் சம்மந்தப்பட எல்லா சாப்பாடும் பிடிக்கும். மசாலா டீ ன்னா ரொம்ப பிடிக்கும். செல்லப்பிராணி வளக்க பிடிக்கும். ஸ்போர்ட்ஸ் விளையாட்டு ரொம்ப பிடிக்கும். " என வரிசையாக தன் டாம்மிற்கு பிடிக்கும் பிடிக்காது எனப் பலவற்றை அடுக்கினான்.
"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். உனக்கு அவளப் பத்தி எல்லாம் தெரியுங்கிற மாறி பேசாத. " எனக் கடுகடுத்தான் மது.
"உன்ன விட அவளப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். வேணும்னா டெஸ்ட் பண்ணி பாப்போம். யாரு அவள நல்லா புரிஞ்சி வச்சிருக்கான்னு. " என்றவன் வேகமாக தன்னுடைய ஃபோனை எடுத்து டயிப் செய்யத் தொடங்கினான்.
"என்ன பண்ற நீ."
" பத்து கேள்வி. அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பத்தே பத்து கேள்வி. அதுல யாரு அதிகமா சரியான பதில் சொல்றோமோ அவங்க தான் பைரவிய நல்ல புரிஞ்சிக்கிட்ட ஆளு. ஓகே வா. " என்றவனுடன் விளையாட மது தயாராக இல்லை.
"விளையாட்டு தான். சிம்பிளான கொஸ்டீன்ஸ் தான். "
"நோ. பைரவிய மையமா வச்சி நான் எந்த விளையாட்டும் விளையாட விரும்பல. "
" பயப்படுறியா?"
"நான் எதுக்கு டா பயப்படணும். "
"கண்டிப்பா பயந்து தான் தீரணும். ஏன்னா எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கே. " எனக் கண்சிமிட்டி சொல்ல, மது முழித்தான்.
" 'என்ன வாய்ப்பு. அதா எங்களுக்குள்ள எல்லாம பிரச்சினை சால்வ் ஆகிடுச்சு இனி நாங்க பழைய மாதிரி புருஷெ பொண்டாட்டியா வாழப் போறோம். அவளே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னத நீயும் தான கேட்ட தான. அப்றமும் நடுவுல வந்திட்டு ஏன்டா காமெடி பண்ற. ' அப்படின்னு கேக்குற உன்னோட மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லாவே கேக்குது.
ஆனா பாரேன் பைரவி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மட்டும் தான் சொன்னா. அதாவது விவாகரத்தான ஒரு பொண்ணு செக்கேண்ட் மேரேஜ் பண்ணிக்கிறேன்னு அப்படிங்கிற அர்த்தத்துல சொன்னாளே தவிர. அவள வேண்டாம்னு சொல்லி கோர்டு வாசல்ல டான்ஸ் ஆடுன முன்னாள் கணவனான உன்ன மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு விளக்கமா சொல்லல.
அப்ப நீயே சொல்லு எனக்கு வாய்ப்பு இருக்கு தான. " என்றவனின் முன் சில மாத்திரைகளை நீட்டி,
"மரியாதைய நீயே இத வாய்ல போட்டுட்டு அமைதியா படுத்திடு. இல்ல. "
"பயம். மதுசூதனனுக்கு பயம். எங்க எங்கிட்ட தோத்திடுவோமோன்னு பயம். அது நல்லாவே உம்பேச்சுல இருந்து தெரியுது." என உரத்த குரலில் கத்தி சிரிக்க, அந்த இரவு வேளையில் படு பயங்கரமாக கேட்டது.
இந்தத் தீஷித்திடம் ஏதே ஒரு மாயம் இருக்க வேண்டும். மயக்கும் பேச்சு அது. அவனின் பேச்சைக் கேட்கும் படி மகுடி ஊதியே தன் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறான். அதன் விளைவு பத்து கேள்விகள் பைரவிக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது போன்று கேட்டப்பட்டது. இருவரின் பதிலயும் ஃபோனில் டயிப் செய்து வைத்துக் கொண்டனர்.
'இது தான் அவளோட ஃபேவரைட். ' என இவன் ஒன்றை சொன்னால், 'இல்லை இது தான். ' என அவன் ஒன்று சொல்ல இருவரும் அடித்துக் கொள்ளாது பேச்சும் சிரிப்பும்மாக நேரம் கடந்தது. யார் அதிக மதிப்பெண் பெற்றது என்றதை தெரிந்து கொள்ள, பதில்கள் சரியா எனத் திருத்தப்பட வேண்டும். அதற்கு டீச்சரான பைரவிக்கு அழைப்பும் சென்றது.
நள்ளிரவு ஒரு மணி.
உறக்கம் என்பது துளியும் இல்லை பைரவிக்கு. இந்த இரவையும் அடுத்த இரவையும் அவர்கள் எவ்வாறு கடந்து வரப்போகிறார்கள் என்ற கவலை மிதவுற உறக்கம் இன்றி தவித்தாள் அவள்.
அந்த வீட்டைச் சுற்றி விக்னேஷ் ஏற்பாடு செய்த ஆட்கள் அவர்களின் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர். சில மணி நேரத்திற்கு முன் தான் கருணாகரன் வந்து சேர்ந்தான். வந்தவன் கொண்டு வந்த செய்தி மனத்திற்கு சுமையாய் அமைந்தது.
" தீஷித் கலெக்ட் பண்ணிட்டு வரச் சொன்ன ரெக்கார்ட்ஸ்ஸ எடுக்க முடியல. ஊருக்குள்ளயே விட மாட்டேன்னு மறியல். எல்லா பக்கமும் ஆளுங்களத் தூண்டி விட்டிருப்பானுங்க போல. ரத்தன் இப்ப தான் சொன்னான். அவெ போன இடத்துல தீ விபத்துன்னு. ஆதாரங்கள அழிக்கப் பாக்குறானுங்க. எப்படியாது மதுசூதனன் தீஷித்த பத்திரமா கூட்டிட்டு வந்து சேரணும். " என்க,
கணவனின் நலம் அறிய வேண்டி உள்ளம் துடித்தது. வேலை நேரத்தில் தொந்தரவு செய்தால் அவனுக்குப் பிடிக்காது. எனவே அமைதியாக தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்தவளுக்கு தீஷித்திடம் இருந்து அழைப்பு வரவும் பதறிப் போய் எடுத்தாள் அதை.
'ஹலோ.' என்ற அவளின் குரலிலேயே,
"காம் டவுன் டாம். " என்க, மதுவின் கரம் உயர்ந்து தீஷித்தின் தலையைத் தட்டியது.
'டாம் சொல்லாத. ' என விரல் நீட்டி பத்திரம் காட்டினான். தீஷித் தோள்களைக் குலுக்கி வெற்றி பார்வை பார்த்தான்.
ஏனெனில் இந்த நேரத்தில் பைரவிக்கு அழைக்காதே என்ற மதுவின் பேச்சைத் தீஷித் கேட்கவில்லை.
" அவ தூங்கிருப்பா. "
" நிச்சயம் மாட்டா. " என்றவன் அதையும் ஒரு கேள்வியாக மாற்றி அழைப்பு விடுக்க, முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது கடுப்பாக இருந்தது மதுசூதனனுக்கு. அது நம் தீஷித்திற்கு கிடைத்த முதல் மதிப்பெண்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..