அத்தியாயம்: 13
எல்லா உறவும்...
அதிக அக்கறையிலும்...
அதீத அன்பிலும்...
தான் தொடங்குகிறது...
இறுதி வரை உடன் வருமா??
அது கேள்விக்குறி தான்.
பயணிக்கும் பாதையைப்
பொருத்து, அதாவது நாம் சந்திக்கும் சூழ்நிலைகளைப் பொருத்து அந்த இரண்டிலும் சில ஏற்ற
இறக்கங்கள் உண்டாகும். சில நேரம் அவை நொடிக்கும் குறைவான நேரத்தில் மடிந்து போகும்.
சில நேரம் அது உயிர்
பிரியும் நொடி வரை உடன் இருக்கும்.
இங்கு ஆர்த்தியின்
மீது தர்மாவிற்கு இருக்கும் அக்கறையும் அன்பும் அடிக்கரும்பைப் போல் இனித்துக் கொண்டே
வந்தது.
அவளின் அமைதியான சுபாவமும்,
தன்னைத் தவிர்த்து பிறரிடம் அவள் அதிகம் பேசும் பாவனையும் அதிகம் பிடித்திருந்தது.
குறிப்பாக அவள் அவனிடம்
காட்டும் அன்பு அவனுக்கு அவனின் தாயை நினைவு படுத்தி, பல ஆண்டுகளுக்குப் பின் தன் வீட்டில்
இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.
பதினேழு வயது இருக்கும்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வீட்டைத் துறந்து விடுதி வாசத்திற்குப் பழக்கப்பட்டவனை
மீண்டும் வீட்டு வாசத்திற்குக் கொண்டு வந்தது ஆர்த்தி தான்.
சூரியன் எழும் முன்
எழுந்திட வேண்டும் என்றும், வீட்டு வேலைகளைச் சோம்பிக் கிடக்காமல் செய்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்று ஆர்த்தியைப் பழக்கப் படுத்தியிருந்தார் மங்கை. அது அவரின் சுயநலத்திற்காக.
இப்பொழுது அவர் இல்லை
தான். ஆனாலும் பழகி விட்ட ஒன்றை அவளால் செய்யாது இருக்க முடியவில்லை.
ஐந்தரை மணிக்கெல்லாம்
எழுந்து விட்டாள். ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. ஊரில் இருக்கும் போது தொழுவத்திற்குள் சென்று விடுவாள்
அமுதாவிற்கு உதவ. அமுதாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நிழல் போல் தொடர்வாள்.
இல்லையேல் நெல்லையப்பனுடன் தோட்டத்தைக் கூட்டிப் பெருக்கி நீர் பாய்ச்சுகிறேன் என்று
வளைய வருவாள். அவளுக்கு மூலிகைச் செடிகளின் மீது ஆர்வம் அதிகம். நெல்லையப்பன் வீட்டில்
புதிதாய் முளைத்த துளசி, ஓம வள்ளி, கற்றாழை, அரளி போன்ற செடிகள் எல்லாம் ஆர்த்திக்காக
நடப்பட்டவை.
இங்குத் தொழுவம் இல்லை.
ஆனால் சிறு தோட்டம் இருந்தது. அவள் ஆசையாய் வீட்டில் வளர்த்த செடிகளை எல்லாம் தர்மா
நர்சரிக்குச் சென்று சிறிய தொட்டியில், அவர்கள் வீட்டு வாசலின் சுவரை ஒட்டி அடுக்கி
வைத்தான். அவளின் ஆசைக்காக அவள் சொல்லாமலேயே செய்திருந்தான். கடைசி வீடு என்பதால் அவர்களுக்கு
வசதியாய் போயிற்று அது. வரிசையாய் பல தொட்டிகள் இருந்தன.
மாடி வீடு என்பதால்
வாசல் தெளித்து, மாக் கோலமிடும் வேலை இல்லை. ஆனால் ஆர்த்தி செய்தாள். கோலமிடுவது அவளுக்கு
மிகவும் பிடித்த ஒன்று. சூப்பர் மார்க்கெட்டில் கோலப் பொடியைத் தான் அவள் முதலில் தேடி
எடுத்தது.
அதுவரை விழித்தே படுத்திருந்தவள்,
மணி ஆறானதும், எழுந்து குளித்து முடித்து வந்தாள். செடிகளுக்குத் தண்ணீரை ஊற்றி விட்டு,
குட்டியாய் கோலமிட்டு முடித்து நிமிர்ந்த நேரம், அவளை உற்றுப்பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தார்
பாக்கியம்.
சுலேகாவின் மாமியார்.
"நீ தான் தர்மா
பொண்டாட்டியாம்மா?" என்ற கேள்வியுடன் அவளை நெருங்க, அவருக்குத் தலை அசைக்காது
சின்னப் புன்னகையைத் தந்தாள்.
"நேத்து ராத்தி
இந்தச் செடியெல்லாத்தையும் பார்த்து ஆச்சரியமாக போச்சு. இவனுங்க வீட்டுல வாசல்ல செடியான்னு.
அப்புறம் எம்மருமக சொன்னா, 'தர்மாக்கு கல்யாணமாகிடுச்சி. கூட இருந்தவனுங்க எல்லாத்தையும்
காலி பண்ணச் சொல்லிட்டு, பொண்டாட்டிய கூட்டிட்டு வந்திருக்கான்'னு." எனப் படபடவென
சுலேகாவைப் போல் பேசியவர், வளர்க்கும் செடிகளை நோட்டமிட்டார்.
பின், வீட்டை எட்டிப்
பார்த்தார். ஹாலில் தர்மா கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவரின் முகத்தில்
நிறைவான ஒரு புன்னகை.
"ரொம்ப சந்தோஷமா
இருக்கும்மா. எங்க தர்மாக்கு நீ கிடைச்சதுல." என்றவர்,
"இப்பத்தான் வீடு
வீடு மாதிரி இருக்கு. இதுக்கு முன்னாடி இருந்த பயலுக ரொம்ப மோசம். குடி கூத்துன்னு
பயங்கர ஆட்டம். தர்மா நல்ல பையன் தான். தனியா இருந்தா, வீட்டு வாடகைய ஒருத்தனே கொடுக்குற
மாதிரி இருக்கும்னு, கூட ரெண்டு பேரை சேர்த்துக்கன்னு அந்தப் பிள்ளை தியா சொன்னதைக்
கேட்டு ரெண்டு பேரை வைச்சான். ஆனா அவனுங்க..." எனப் பெருமூச்சு ஒன்றை இழுத்து
விட்டார்.
வாரா வாரம் தர்மாவைப்
பார்க்க வரும் தியாவைத் தர்மாவின் காதலியாகப் பாக்கியத்திற்கு நன்கு தெரியும்.
ஆனால், அவருக்கு அவளைப்
பிடிக்காது. ஏனெனில் அவரிடம் நின்று ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள் தியா.
அதனால், 'செருக்கா
மூஞ்சியத் திருப்பிட்டு போறா!' என்பார்.
மாடல் அழகியான தியாவை
விட, ஆர்த்தி குணவதியாக, தர்மாவிற்கு ஏற்றவளாகத் தெரிகிறாளா என அளவிடும் பார்வை பார்த்தார்
ஆர்த்தியை.
மேலே கர்ணனின் டிசர்ட்
அணிந்து, நீல நிறப் பாவாடை அதைத் தூக்கிச் சொருகிக் கொண்டு அவள் நிற்க,
"எனக்கு சேலை
கட்டிப் பழக்கம் இல்லை அத்தை." என்றாள் அவரின் பார்வையை உணர்ந்து. அவளின் அத்தை
என்ற அழைப்பில் அவருக்கு ஆர்த்தியைப் பிடித்துப் போனது.
ஏனெனில் முதல் முறை
தர்மாவைப் பார்த்த போதும் அவன் அவரை அம்மா என்று முறை வைத்து தான் அழைத்தான்.
அவனைப் போலவே ஆர்த்தியும்
வெள்ளை மனத்துடன் இருப்பதால் அவருக்கு ஆர்த்தியையும் பிடித்து விட்டது. நெருங்கி வந்து
அவளின் முகத்தை தன் விரல்களால் நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தவர்,
“அதெல்லாம் ஒரு பிரச்சனையா!
எம்பொண்ணும் உன்னை மாதிரி தான். சேலையே கட்ட மாட்டா. எம்மருமகளும் அப்படித் தான்."
என்னும் போதே,
"சேலைய இழுத்து
சொருகிட்டு எப்படி ப்ளாண்ட்ல வேலை பார்க்க முடியும்?" என்ற சுலேகாவின் கண்டனக்
குரல் வந்தது.
"உன்னைய ஒன்னும்
குறையா சொல்லலடியம்மா. நல்ல விதமா தான் சொல்லிட்டு இருந்தேன்." என அவர் பதுங்கி
விட்டார். அதைக் கண்டு ஆர்த்தி உதட்டிற்குள் புன்னகையை விழுங்க,
"நல்ல விதமா!"
எனப் புருவம் ஏற்றினாள் சுலேகா.
"நீங்க வாங்கிங்
போகத்தானே வெளில வந்தீங்க. இங்க எதுக்கு நின்னு பேசிட்டு இருக்கீங்க. கிளம்புங்க...
வரும் போது கீரைக்கட்டு வாங்கிட்டு வாங்க. நல்ல கொழுந்து கீரையா இருக்கணும். முத்திப்பானதையும்,
பூச்சி வச்சதையும் வாங்கிட்டு வரக் கூடாது." எனத் துரத்த,
"இவ ஆஃபிஸ்ஸுக்கு
போனதுக்கு அப்பறமா பேசுவோம்." என்று ஜாடை செய்து விட்டு, அவரைப் போல் நடைபயிற்சிக்காக
வெளியே வந்த குழுவுடன் சேர்ந்துக் கொண்டார்.
"ஏன்க்கா அத்தைய
விரட்டுறீங்க?" எனக் கோபமாக கேட்டாள் ஆர்த்தி.
"விரட்டாம என்ன
பண்ணச் சொல்ற? அவங்களுக்கு சர்க்கரை இருக்கு. கட்டாயம் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் நடந்தே
ஆகணும்னு சொல்லிருக்காங்க. அப்பத்தான் கால்ல ப்ளெட் சர்குலேஷன் நல்லா இருக்குமாம்.
காலைல இளம் வெயில்ல நடக்குறது நல்லதுன்னு போகச் சொன்னாரு இவங்களோட பிள்ளை.
இவங்களுக்கு நடக்குறதுனாலே
பயம். ஒரு தடவை படி ஏறி இறங்கிட்டு வந்து அஞ்சு கிலோமீட்டர் நடந்தேன்கிற ரேஞ்சுக்கு
மூச்சு வாங்க பில்டப் கொடுக்குறாங்க. சரி தனியா போகப் பிடிக்கலையோன்னு, இவங்க வயசு
ஆள்களப் பிடிச்சி அவங்க கூடப் பேசிக்கிட்டே போங்கன்னு சொன்னா... ஒரு நாள் போறது. அடுத்த
நாள் சின்னப் பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போகாம இருக்க கதை சொல்வாங்கல்ல, அது மாதிரி எதையாவது
சொல்லிட்டு வீட்டுலயே உட்கார்ந்து டிவி பார்க்குறாங்க." என மாமியார் செய்யும்
லீலைகளைக் கூறியவள்,
"ஹர்ஷிய ஸ்கூலுக்கு
அனுப்புறதை விட இவங்கள வாக்கிங் அனுப்புறது தான் பெரிய விஷயம்." என்றவள், நேரமின்மையால்
தன் பேச்சை சுருங்க முடித்துக் கொண்டு மகளை எழுப்ப ஓடினாள்.
குறுநகையுடன் தன் வீட்டிற்குள்
வந்தவள், உறங்கும் தர்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
நேற்று மாலையில் வாங்கிய
தக்காளியும் புதினாவும் இன்று காலையில் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் தொக்காக மாறியது.
"ஒன்பது மணிக்கு
வேன் வந்திடும்னு அக்கா சொன்னாங்க. மணி எட்டாகப் போது. இவரு இன்னும் எழலையே."
எனச் சமையலை முடித்து விட்டு கடிகாரத்தைப் பார்ப்பதும் தர்மாவைப் பார்ப்பதுமாக நின்றிருந்தாள்.
அவனைத் தட்டி எழுப்ப
மனம் வரவில்லை. அதே நேரம், 'ஏன் எழுப்பலன்னு பிடிச்சி திட்டுவாங்களோ!' என்ற அச்சமும்
பிறக்க, அவளின் பார்வை பாத்திரங்கள் மீது விழுந்தது. வேகமாகச் சென்று அதைத் தட்டி விட்டாள்.
அந்தச் சத்தத்தில்
எழுந்து அமர்ந்து விட்டான் தர்மா.
'வொர்க்கவுட் ஆகிடுச்சி...'
என்ற சந்தோஷத்தில் தலையை ஹாலிற்குள் நீட்ட, அங்கு தர்மா கோபமாக இவளை முறைத்தபடி இருந்தான்.
"அது... நேரமாச்சு...
இன்னைக்கு வேலைக்கு போகணும்னு சொன்னீங்க." என்றவளின் பேச்சில் கடிகாரத்தைப் பார்த்து
தன் தலையிலேயே தட்டிக் கொண்டு எழுந்தான்.
அவள் கலந்து கொடுத்த
காபியை பருகியவன்,
"குட் மார்னிங்
சொல்லி எழுப்பி விடுற பழக்கமெல்லாம் கிடையாதாங்க?" என்க, மெல்லிய புன்னகை அவளிடம்.
"நேத்து தாங்க
பாத்திரமெல்லாம் வாங்கிருக்கு. நீங்க இருக்கப் போற ஆறு மாசத்துக்காவது உருப்படியா இருக்கட்டும்.
போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் உடைச்சி போட்டுட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?"
"ஐயோ! இல்ல..."
என்றாள் வேகமாக.
"இனி உசுப்பி
விடுங்க. இல்லன்னா தண்ணீ தெளிச்சாவது எழுப்புங்க. ஜாமான்ங்க மட்டும் வேண்டாம்ங்க."
என்று புன்னகையுடன் சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.
அவன் வெளியே வந்த நேரம்
ஆர்த்தி செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்படியே நின்று விட்டான். காரணம்
அழைத்தது அவனின் அன்னை அமுதா.
"அப்படியாத்தை!!"
"ம்..."
"குழலி வாழ்த்துகள்.
எல்லாம் நல்லபடியாவே நடக்கும். ஆல் தி பெஸ்ட்." என ஆனந்தமாக நெல்லையப்பன் குடும்பத்துடன்
அளவளாவ, அதைக் கவனித்தபடியே உடை மாற்றிக் கொண்டு வந்தான்.
அவனிடம் செல்போனை நீட்டி,
"பேசுறீங்களா?" எனக் கேட்க, அவன் இல்லை எனத் தலையசைத்தான்.
சின்ன முறைப்பு அவனுக்குப்
பரிசாய் கிடைக்க, அதைச் சிலாகித்தபடி அமர்ந்தான்.
அவனின் முன் உணவை எடுத்து
வைத்தவளிடம், வீட்டாரின் நலத்தை அறிந்துக் கொள்ளும் ஆவல் பிறந்தது.
வீட்டார்களுடன் பேசி
இரண்டொரு நாள் தான் சென்றிருந்தன.
எப்பொழுதும் காலையில்
அவனை எழுப்பி விடுவதே அமுதா அல்லது குழலியாகத்தான் இருக்கும். அவர்களின் அழைப்பு எட்டு
மணி போல் வந்து அவனை வேலைக்குப் புறப்பட வைக்கும்.
சண்டை போட்டுவிட்டு
வந்ததால் யாரும் அவனுக்கு அழைக்கவில்லை. அழைத்தாலும் அவனுக்கு எடுத்துப் பேச பிடிக்கவில்லை.
நேற்று இரவே ஆர்த்தி
குழலிக்கு வாட்சாப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதையும், மணிக் கணக்கில் உரையாடியதையும்
பார்த்தான்.
இன்று காலையில் அன்னையிடம்
இருந்து அழைப்பு வந்துள்ளது.
புருவங்களை உயர்த்தி,
"என்ன சொன்னாங்க?" எனக் கேட்க, அவனின் தட்டில் இட்லியைப் பரிமாறியவாறே,
"நம்ம வீட்டு
பசு கன்னு போட்டிருக்காம். காளையாம். சீம்பால்
காய்ச்சுறப்ப என்னோட ஞாபகம் வந்துச்சாம். அதான் குழலி கூப்பிட்டாளாம்." எனக் கடகடவென
அமுதா பேசிய வார்த்தைகளை அவனிடம் ஒப்பிக்க, அவன் அதைச் சிலாகித்தபடி உண்டு எழுந்தான்.
"வெண்மா என்ன
சொன்னா? எதுக்கு ஆல் தி பெஸ்ட்லாம் சொன்னீங்க?" என்றபோது அவள் கள்ளன் போன்ற முழியுடன்
அமர்ந்திருந்தாள்.
"அது... அது...
ஹாங்... அண்ணாக்கும் குழலிக்கும் ரொம்ப சீக்கிரமாவே கல்யாண நாள் குறிக்கப் போறதா சொன்னா...
அதான் ஆல் தி பெஸ்ட் சொன்னேன்..." என்றவள் குழலி கூறியதில் பின் பாதியை மட்டும்
சொல்லி விட்டு, முன் பாதியை முழுங்கிக் கொண்டாள்.
அவள் முழுங்கியது.
"அடுத்த வாரம்
ஹால் டிக்கெட் கொடுக்கப் போறாங்க அண்ணி. சின்ன அண்ணா சொல்லிக் கொடுக்காம எப்படிப் பரீட்சை
எழுதப் போறேனோ தெரியல." என்று வருந்திச் சொன்ன வார்த்தைகள் தான் அது.
பரீட்சை முடிந்த மறு
மாதம் திருமணம் என்று முடிவு செய்து வைத்திருந்தனர்.
எங்கே குழலியின் படிப்பு
பற்றிப் பேசி, தர்மா அவளின் சர்டிஃபிகேட்டைக் கேட்டு விடுவானோ என்ற அச்சத்தில், தொண்டைக்குள்
இறக்கி விட்டாள்.
அதை கவனியாதவன், தன்
உடமைகளைத் தோள் பையில் திணித்து விட்டு வேகவேகமாக தயாராகிக் கொண்டிருந்தான்.
இதற்கிடையே ஹர்ஷிதா
வந்து, "மாமா... நீங்க லேட்... நான் தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்." என்று அழகு
காட்டி விட்டுச் சென்றாள்.
"எப்பவும் அவளுக்கும்
எனக்கும் போட்டி இருக்கும்? யாரு முதல்ல கிளம்புறாங்கன்னு. நான் தான் முதல்ல ரெடியாகி
அவளோட வீட்டை எட்டி பார்த்திட்டு போவேன். இன்னைக்கு அவ முந்திக்கிட்டா." என்றவன்,
ஆழமாக மூச்சை இழுத்து விட்டு விட்டு ஆர்த்தியின் முன் வந்து நின்றான்.
"டிவி இருக்கு.
பாக்கியம் ஆன்ட்டி இருக்காங்க. மேரியும் இருக்கா. திருடனெல்லாம் வர வாய்ப்பில்ல. பாதுகாப்பான
இடம் தான். உங்களுக்குப் பொழுது போய்டும்னு நினைக்கிறேன். மத்தியம் நான் கேன்டீன்ல
சாப்பிட்டுப்பேன். உங்களுக்கு மட்டும் சமைச்சுக்கோங்க. ஈவ்னிங் நான் வரும் போது எதாவது
வாங்கிட்டு வரவா?” என்க, அவள் இல்லை எனத் தலையசைத்தாள்.
“எதுவும் வேணும்னா
கால் பண்ணுங்க. இல்லன்னா மெசேஜ் பண்ணுங்க. சாமி படத்துக்கு பக்கத்துல ஐநூறு ரூபா நோட்டு
இருக்கு. வைச்சுக்கோங்க. அப்புறம்..." எனத் தயங்கியபடி நின்றவனுக்கு அவளைத் தனியாக
விட்டுச் செல்ல மனமே இல்லை.
"பார்த்துப்பீங்கல்ல?"
என்ற கேள்வியுடனேயே அவளின் முகம் பார்த்தபடி நின்றிருந்தான்.
அவள் இதழ் விரித்து
புன்னகையைத் தந்த போதும், "பார்த்துப்பேன்." என வாய் மொழியாத வரை நகரவே இல்லை
அவன்.
பேருந்து வந்து நின்ற
போதும் படிக்கட்டில் நின்றவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஏறிச் சென்றான்.
அடையாள அட்டைக் கொண்டு
தன் வருகையைப் பதிவு செய்தவன், இன்றைக்கானத் தன் பணியில் இறங்கினான்.
மார்னிங் லாக் என்று
சொல்லப்படும் கதிர்வீச்சுத் தன்மையைக் குறிப்பெடுக்க வேண்டி, கதிர் வீச்சு பாதிக்காத
Lead-lined சூட்டை அணிந்து, கதிர் வீச்சின் அளவை அளக்கும் TLD பேட்ஜ், முகத்திற்கு
கவசம், கைகளுக்கும் கால்களுக்கும் ரப்பர் உறையைப் போட்டுக் கொண்டும், முகத்தை ஒரு ஷீல்டால்
மூடிக் கொண்டு ரேடியேட்டர் இருக்குமிடம் நோக்கி நடந்தான். தன் வாக்கி டாக்கியில் நிலவனைத்
தொடர்பு கொண்டு, மேரியிடம் ஆர்த்தியைப் பற்றி விசாரிக்க சொன்னான்.
பொதுவாக கதிர்வீச்சு
இருக்கும் பகுதியில் அலைப்பேசி உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆதலால் நிலவனிடம்
சொல்ல,
"அடேங்கப்பா!
ரொம்பத்தான் அக்கறை." எனக் கேலி செய்தாள் சுலேகா.
ம்... அது அக்கறை தான்.
ஆனால் இவனின் அக்கறைக்குப்
பாத்திரப்பட்டவளோ, இவனைப் பற்றிய கவலை துளியும் இல்லாது, மேரி வீட்டில் அவளின் மகனுடன்
விளையாடிக் கொண்டிருந்தாள்.
கேக் செய்வது, க்ரீம்
செய்வது, ஓவனைப் பயன்படுத்தி எப்படிச் சமைப்பது எனப் பகல் பொழுதை ஓட்டினாள் என்றால்,
உச்சிப் பொழுதில் பாக்கியத்துடன் அமர்ந்து நாடகம் பார்ப்பதும், மாலையில் ஹர்ஷிதாவுடன்
சேர்ந்து பூங்காவிற்குச் சென்று விளையாடுவதுமாக இருந்தது.
அது தெரிந்தாலும்,
சில மணி நேரங்களில் ஒரு முறை என அவன் ஆர்த்திக்கு அழைத்து, "என்ன செய்றீங்க?"
"சாப்பிட்டீங்களா?"
"மேரி வீட்டுல
இருக்கீங்களா? இல்ல சுலேகா வீடா! எங்க இருக்கீங்க?" எனக் கேட்டுக் கொண்டே இருந்தான்.
மேரியே அழைப்பை வாங்கி,
"அப்படி உம்பொண்டாட்டி நினைப்பாவே இருந்தா வேலைய விட்டுட்டு வந்து கூடவே இரு."
என்று கடுப்புடன் சொல்லும் அளவிற்கு இருந்தது.
அக்கறை ஒரு நாள், இரண்டு
நாள் என்றால் சரி. தினமும் தொடர்ந்தால் கடுப்புகள் வரத்தானே செய்யும்.
அது தான் லூர்துவிற்கும்.
"இன்னைக்கு நான்
இது செஞ்சேன். நல்லா இருக்கானு டேஸ்ட் பண்ணிச் சொல்லுங்க?" என அவனின் முன் தான்
செய்த கேக் துண்டுகளை நீட்டுவதும், அதன் சுவையில் தர்மா புருவம் உயர்த்துவதும் வழக்கமாகிப்
போனது.
"நல்லா இருக்கா!!
நாளைக்கு வேற எதாவது செய்யலாம்னு அண்ணி சொன்னாங்க." என்றவளை அழைத்துக் கொண்டு
தேவையானப் பொருள்களை வாங்கிக் கொடுத்தான். அவர்களின் உறவிற்கு நட்பு என்ற பெயர் பொருத்தமானது
என்று சொல்லும் அளவிற்கு பழகத் தொடங்கியிருந்தனர்.
இந்த நாள்களில் தியாவிற்கு
அழைத்து பேசுவதையே மறந்திருந்தான் தர்மா.
அவளிடம் இருந்து வரும்
குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில்களைத் தந்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அதுவும் ஒரு
சில நாள்களில் நிறுத்தப்பட்டது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..