அத்தியாயம்: 14
ஊழியர்களுக்கான உணவு
இடைவேளை நேரம்.
மானிட்டரில் குளிரூட்டும்
நீரின் அளவு, ரியாக்டர் மற்றும் சுற்றி உள்ள கலன்களின் வெப்பநிலை, ரெடியேஷன் ஃப்லோவ்
எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்வையிட்டு குறித்துக் கொண்டிருந்தவனிடம்,
"மார்னிங் லாக்
ரெடியா தர்மா?” என்று கேட்டபடி வந்தாள் சுலேகா.
“ம்... ரெடி தான்.
ஆஃப்டர்நூன் லாக் ப்ரிப்பர் பண்ணிட்டு இருக்கேன். எல்லாம் நார்மல் தான். கூலென்ட் ப்ரெஸ்ஸர்
ஸ்டெடியா இருக்கு. இன்ஸ்பெக்சன் செட்யூல் மட்டும் தள்ளி வைக்கணும்னு நினைக்கிறேன்.”
என்ற தர்மேந்திரன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அநேக திரைகள் ஒன்றிற்கு முன் நின்றுக்
கொண்டிருந்தான்.
"தள்ளி வச்சிடலாம்
தர்மா... இப்ப வா, சாப்பிட போகலாம்." என்று தர்மாவின் கையில் இருந்த குறிப்பேட்டைப்
பிடுங்கி ஓரமாக வைத்த நிலவன், அவனைத் தள்ளிக் கொண்டு சென்றான்.
வழக்கமாக மூவரும் இந்த
நேரங்களில் கேண்டீனை நாடிச் செல்வர். ஆனால் கடந்த இரு மாதங்களாக அவர்களுக்கு உணவு,
டப்பாவில் அடைபட்டு தர்மாவுடனேயே வேலைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
பள்ளி செல்லும் சிறார்களைப்
போல் பின்னல் கூடையில் அல்லாது, உறை மாட்டப்பட்ட டப்பாக்கள் மூன்றில் உணவை வைத்து அனுப்பி
வைத்திருந்தாள் ஆர்த்தி.
"தர்மா, உம்பொண்டாட்டி
மத்தியானம் சாப்பிடுறதே இல்லன்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு வான்னாலும் மாட்டேங்கிறா.
மேரி வீட்டுலயும் சாப்பாடு வேண்டாங்கிறா! ஆளும் மெலிஞ்சிக்கிட்டே போறா. கொஞ்சம் என்னன்னு
பாரு..." என்று பாக்கியம் போட்டுக் கொடுத்தார்.
"அது... எனக்கு
மட்டும் சமைச்சி ஏன் கேஸை வேஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்.” என்றவளை அவன் முறைக்கவும்,
“அதான் காலைல ராத்திரின்னு
ரெண்டு வேளை சாப்பிடுறேன்ல." என்று காரணம் சொன்னவளிடம்,
"இனி நான் லன்ச்
எடுத்திட்டு போறேன். காலைலயே மத்தியானத்துக்கும் சேர்த்தே சமைங்க." என்றான்.
அலுவலகம் செல்லும்
போதே, அவளுக்கும் சேர்த்து சமைத்திருக்கிறாளா இல்லையா என்பதை உறுதிப்படுத்தி விட்டுத்
தான் செல்வான். மத்திய நேரம் உண்ண அமரும் போதே ஆர்த்திக்கு அழைத்து, "சாப்பிட்டீங்களாங்க?"
என விசாரிப்பான்.
அவள் பதில் தந்த போதும்,
ஒரு செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என்பான். அவளும் சின்ன முறைப்புடன் சாப்பிடுவது
போல் எடுத்து அனுப்புவாள்.
"அதென்ன அவனுக்கு
மட்டும் கவனிப்பு பலமா இருக்கு. அண்ணனுக்கெல்லாம் கிடையாதா?" என்று நிலவன் கேலி
செய்ய, அன்றிலிருந்து மூவருக்கும் சேர்த்தே சாப்பாடு அனுப்பி வைத்தாள்.
"இன்னைக்கு என்ன
ஸ்பெஷல்ன்னு பார்க்க நான் ஆவலா இருக்கேன்." என்று கூறிக் கொண்டே சுலேகாவும், நிலவனும்
ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து காய்கறி சாதத்தை உண்ணத் தொடங்கினர்.
மீதியிருந்த டப்பாவைத்
திறந்து உண்ணத் தொடங்கிய தர்மாவிற்கு, இன்று காலையில் அதை ஏந்திக் கொண்டு, மூச்சிரைக்க
ஓடி வந்த ஆர்த்தி தான் நினைவிற்கு வந்தாள்.
அவனுக்கு வாசனைப் பொருட்கள்
போட்டுச் செய்யும் சாத வகைகள் பிடிக்காது. ஆதலால் மற்ற இரண்டையும் எடுத்தவன் தன் டப்பாவை
மறந்து விட்ட பாவனையில், அலுவலக ஊர்தியில் ஏறவிருந்தான்.
அவன் ஏறிச் செல்லும்
முன் ஓடி வந்து நின்றவளின் தோரணையும், பேசிய பேச்சையும் நினைவுக் கூர்ந்து மனம் சிலிர்த்தது.
"வீட்டுல இருந்து
கத்தி கூப்பிட்டுட்டே வர்றேன்! மாமா... மாமான்னு. காது கேட்கலையா!" என்று யாருக்கும்
கேட்டிடாதபடி கண்களை உருட்டி அவனின் காதில் கடிந்துக் கொண்டே டப்பாவை நீட்டினாள்.
அவனைக் கண்டு பயந்து
பொந்திற்குள் ஒழிந்துக் கொள்ளும் முயல் குட்டி, தன் பயத்தை விடுவித்து வெளியே தலை நீட்டி,
எட்டிப் பார்த்து சுதந்திரமாக நடமாடி, உரிமையுடன் அவனிடம் பழகத் தொடங்கியதன் விளைவு
தான் அந்த மிரட்டல்.
அவளை சகஜமாக பழக வைத்து
விட்டான் தர்மா.
அவளின் மாமா என்ற உரிமையான
அழைப்பில், மலர்ந்து போகும் தன் முகத்தைத் தன் சகாக்களுக்கு, முக்கியமாக சுலேகாவிற்கும்
நிலவனுக்கும் காட்டாது மறைப்பது பெருங்கடினமாக இருந்தது தர்மேந்திரனுக்கு.
"மிச்சம் வைக்காம
சாப்பிட்டுட்டு வரணும். அத்தை சொல்லிருக்காங்க உங்களுக்கு இது பிடிக்காதுன்னு. ஆனா
நிறைய காய் போட்டிருக்கேன். சத்து. அதுனால சாப்பிட்டுத் தான் ஆகணும்." என்று அவனின்
முகம் பார்க்காமலேயே முறைத்துப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டே நகர்பவளைக் காண்கையில்
தாயின் நினைவுகள் தான் முந்திக் கொண்டு வந்து நின்றது அவனுக்கு.
காலை நடந்ததை எண்ணி,
குறுநகையுடன் உண்ணாதிருந்தவனை, "என்ன தர்மா சாப்பாட்டைப் பார்த்து ஸ்மைல் பண்ணிட்டு
இருக்க? என்ன தெரியுது அதுல?" என வம்பிழுத்தான் நிலவன்.
"அதுல அவனோட வைஃப்
தெரியுறா போல. அதான் ரகசிய புன்னகை வருது." எனக் கண்சிமிட்டிச் சொன்னாள் சுலேகா.
"முன்னெல்லாம்
சாப்பாட்டுல வைஃப்போட கை மணம் தான் தெரியும்னு சொல்வாங்க. இப்ப வைஃப்பே தெரியுதா!"
"நம்ம மச்சி புது
மாப்பிள்ளைல. அதான் பார்க்குற இடமெல்லாம் மனைவியாத் தெரியுறா!" என்றவளுக்கு ‘ம்ச்…’
என்ற பதிலும் கோபப் பார்வையைத் தந்தாலும், முன் போல் எதிர் வாதம் செய்யவில்லை.
செய்தாலும் அவள் விடுவதாக
இல்லை. ஆர்த்தி தான் உன் மனைவி என்று அழுத்தமாக தர்மேந்திரனின் நெஞ்சில் பதிய வைக்க
வேண்டியே பேசுவாள். இதில் வெற்றியும் காணப் போகிறாள் என்று தான் சொல்லவேண்டும்.
"இன்னும் பல காலத்துக்குப்
புது மாப்பிள்ளையாவே இருக்குற யோகம் நம்ம தர்மாக்கு மட்டும் தான் இருக்கு போலயே."
எனப் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான் நிலவன்.
"ஆர்த்தி கூட
இருக்குற வர இவனை புது மாப்பிள்ளையாத்தான் கவனிப்பா. மாசம் கடந்து போனாலும் ஓடி வந்து
சேவை செய்ற மனைவி கிடைக்கிறதெல்லாம் காட்ஸ் கிஃப்ட். ஆனா அது கிடைக்கக் கூடாத சிலரோட
கைல தான் கிடைக்குது. எல்லாம் விதியச் சொல்லணும். அனுபவிக்கத் தெரியாதவனுக்கு அருமையான
பொண்டாட்டி." என்று உச்சுக் கொட்டினாள் சுலேகா.
கிஃப்ட்...
ம்... பரிசு தான்...
ஆர்த்தி தர்மாவிற்குக் கிடைத்த மிக முக்கியப் பரிசுப் பொருள் தான்.
அவனின் கால் தரையில்
படாதபடி சேவைகள் செய்து பார்த்துக் கொள்ளும் ஆர்த்தி, பரிசாய் கிடைத்த தோழி தான்...
இன்னும் அப்படித்தான் மனத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
முதல் நாள் ஆர்த்தியைத்
தனியே விட்டுச் செல்ல மனமே இல்லாது வேனில் ஏறி அமர்ந்த போது, "உன்னோட வைஃப்க்கு
டாட்டா காட்டலையா மச்சி?" எனக் கேலி செய்த சுலேகாவிடம்,
"மச்சி, அப்படிச்
சொல்லாத." என்றவன் தான் தினமும் அவள் காட்டும் டாட்டாவிற்கு பதில் டாட்டா காட்டி
விட்டு பஸ்ஸில் ஏறத் தொடங்குவான். கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் கால் செய்து பேசுவான்.
இதைக் கண்டு நிலவனும்
சுலேகாவும் செய்யும் எந்தக் கிண்டலும், கேலியும் அவன் செவிகளுக்குச் சென்றதே இல்லை.
ஏனெனில் ஆர்த்தி, அவனின்
அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக, அவனின் உடலின் ஒரு பகுதியாக மாறி இருந்தாள்.
அவனின் தினசரி தேவைகளைக்
கூடப் பார்த்து பார்த்து கவனத்துடன் செய்து அவனை வேலைக்கு அனுப்பி வைத்தாள்.
ஆரம்பத்தில் வேண்டாம்
என்றவன் இப்பொழுது அவள் ஏற்படுத்திக் கொடுத்த சுகபோக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்
கொண்டு இளவரசனைப் போல் உணரத் தொடங்கி விட்டான்.
காலையில் அவன் கண்
விழிப்பதே ஆர்த்தி போடும் குளம்பியின் மணத்தில் தான்.
அந்தக் காலை வேளையில்
குளித்து, மங்களகரமாக சமையலறையில் அவள் பாத்திரங்களைப் போட்டுடைக்கும் சத்தம் தான்
அவனின் சுப்பிரபாதம்.
அவள் எழுப்பும் சத்தத்தில்,
புருவம் சுருக்கி புரண்டு
படுக்க, அவனின் படுக்கைக்குப் பக்கத்தில் காபியை
வைத்து விட்டு, எதுவும் பேசாது சின்னப் புன்னகை ஒன்றை தந்து விட்டுச் செல்வாள்.
"குட் மார்னிங்
சொல்ற பழக்கமெல்லாம் இல்லையாங்க?" என்று அவன் கேட்பதும்,
"இந்த நாள்… இனிய
நாளாக இருக்கட்டும். குட் மார்னிங்." என்றுரைத்து விட்டு சமையலறைக்குள் ஓடுவதும்
நித்தமும் அரங்கேறும் நாடகமாகியது.
அவளாக வந்து அவனிடம்
பேசுவது அபூர்வம். அவனே பேசினாலும் அவளிடம் இருந்து வரும் வார்த்தைக்கு மதிப்பு முத்துக்களின்
விலைக்குச் சமம் என்பதால் அவளைப் பேசச் சொல்லி, தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான்.
அவளின் விரிந்த இதழ்களால்
தான், தன் காலை வேளையை ரம்மியமாக அமைக்க முடியும் என்பான்.
காயத்திரி மந்திரத்தை
ஒலிக்கும் ஒலிப்பானின் மெல்லிய சத்தத்தையும் மீறி பரபரப்பாய் சமையலறைக்குள் சுழலும்
ஆர்த்தியின் உதடுகள் ஒலிக்கும் மந்திரங்களைச் சிலாகித்தபடியே குளியலறை சென்றால் அதில்
அவனுக்கானத் துண்டும், தலைக்கு தேய்க்கும் சீகக்காய் பொடியும் தயாராக இருக்கும்.
"அது... உங்க
உடம்பு சூட்டு உடம்புன்னு நினைக்கிறேன். காலைல எழும் போது கண்ணெல்லாம் செவந்து போய்க்
கிடந்தது. சீயக்கா போட்டு குளிச்சா... சூடு பறந்திடும்." என்றவளின் அன்பிற்கு
கட்டுப்பட்டு, வாரத்தின் இரு நாள்கள் அதைத் தேய்த்து, சுடு நீரில் குளிக்கத் தொடங்கினான்.
கதிர் வீச்சுக்களுக்கு
மத்தியில் பணி புரியும் அவனின் உடல் நலனுக்காக, தினமும் இரவில் தலைக்கு எண்ணெய் விட்டு
மசாஜ் செய்வது, உணவில் சத்தானதாய் சேர்ப்பது, டீ, காபி போன்ற பானங்களைக் குறைப்பது
என அனைத்திலும் அவனின் நலனை முன்னிருத்தியே யோசிக்கத் தொடங்கினாள் பெண்.
தர்மாவிற்கு இரவில்
வலி நிவாரணியின் வாசம் நுகராது உறக்கமே வராது. வீட்டைச் சுத்தம் செய்யும் போது கிட்டத்தட்ட
நூற்றிற்கும் அதிகமான காலி விக்ஸ் டப்பாக்களை குப்பைத் தொட்டிக்குள் வீசியிருந்தாள்.
என்று ஆர்த்தி மசாஜ்
செய்யத் தொடங்கினாளோ அன்றிலிருந்து விக்ஸின் உதவியை நாடுவதில்லை தர்மா. உடலும் மனைவியின்
கவனிப்பில் மெருகேறி வலிமை கண்டது.
குளித்து முடித்து
வெளியே வந்தால் அவனுக்கான உடைகள் ஐயன் செய்து ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருக்கும்.
அதை அணிந்துக் கொண்டு
அறையை விட்டு வெளியே வருபவனுக்கு ஆவி பறக்க சாப்பாடு தயாராக இருக்கும்.
வேகமாகத் தட்டின் முன்
அமரச் சென்றால்...
"அது... குளிச்சிட்டு...
சாப்பிடுறதுக்கு முன்னாடி சாமி கும்பிட்டுட்டு திருநீறு பூசிட்டு உட்காருங்களேன்!"
எனச் சின்னக் குரலில் உத்தரவு போட, அதைக் கனிவுடன் நிறைவேற்றி விட்டுத் தான் அமர்வான்
தர்மா.
எத்தனை உண்டோம் என்று
கணக்கு பார்க்காமல் உண்ணுவது என்பது தாய் பரிமாறும் போது மட்டும் தான் நடக்கும்.
தட்டு காலியாக காலியாக
பிள்ளையே அறியாது கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டையும் வயிற்றையும் நிறைப்பது தாயின் சூது.
இங்கு தர்மாவிற்கு மனைவியின் சூதாகிப் போனது.
விரிந்து கிடக்கும்
அவனின் மெத்தையைச் சுருட்டி வைத்து, அதன் அருகில் கிடந்த அவனின் கோப்புகள், அடையாள
அட்டை போன்ற உடமைகளை எடுத்து தோள் பையில் போட்டு, சார்ஜில் இருக்கும் அவனின் அலைப்பேசியை
எடுத்து நீட்டி விட்டு, சாக்ஸ் மற்றும் ஷூவை அணிந்துக் கொள்ள தயாராக எடுத்து வைத்து,
தர்மாவின் மற்றொரு கரமாகும் முயற்சியில் ஆர்த்தி இறங்கி வெற்றி கண்டு விட்டாள்.
அது, "எதுக்குங்க
இதெல்லாம் பண்றீங்க..?" என்று எரிச்சலுடன் தர்மாவைக் கேட்க வைத்தது ஆரம்பத்தில்.
"அது... சும்மா...
உங்களுக்கு உதவியாக இருக்கும்னு..."
"எனக்குச் சேவை
செய்ய நான் உங்கள கூட்டிட்டு வரல." என்றான் காட்டமாக.
"உங்க அண்ணன்கிட்ட
பேசுனீங்களா? சர்டிஃபிகேட்டை கொரியர் அனுப்பச் சொன்னீங்களா?"
"அது... அது...
அண்ணாக்கு வேலை இருக்காம். தேடி எடுத்து அனுப்பும் போது அனுப்புவாருன்னு சொன்னாங்க."
"யாரு?"
"சித்தி..."
என்றாள் அவள்.
"அவரு என்னைப்
படிக்கச் சொல்றாரு சித்தி. அதுக்குத் தான் கேட்குறாரு." என்று மங்கையிடம் தான்
கேட்டாள்.
அவருக்கு அழைக்க வேண்டும்
என்று அழைக்கவில்லை. அவளின் தந்தையிடம் பேசும் போது ஒட்டுக் கேட்டு விட்டார். உடனே
ஆர்த்திக்கு அழைத்து எதற்கு? என்க, விவரத்தை முழுதாகச் சொல்லி முடித்தாள்.
"இப்ப இதெல்லாம்
அவசியம் தேவையா? இங்க நாங்களே கர்ணனுக்கும் குழலிக்கும் கல்யாணம் பண்ணனுமா வேண்டாமான்னு
யோசிச்சிட்டு இருக்கோம். இதுல இது வேறயா! நீ அங்க அந்தத் தம்பி கூட ஒழுங்கா இருந்தாத்தான்
இங்க உன் அண்ணன் அந்த வீட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணிப்பான். அதுனால அந்தத் தம்பிக்குப்
பொண்டாட்டியா லட்சணமா நடந்துக்க பாரு. தேவையில்லாததெல்லாம் கேட்டுட்டு. அப்புறம்
ஓயாம ஃபோனைப் போட்டு தொல்லை பண்ணாத. நாங்க நிம்மதியா இருக்க வேண்டாமா!" என்று
விட்டு வைத்தார் மங்கை.
"முதல்ல குழலி
திருமணம் நல்ல படியா நடக்கட்டும். அப்புறம் நானே வீட்டுல இருந்து எடுத்திட்டு வர்றேன்னு
சொன்னாங்க. அதுவரை அதைப் பத்தி பேச வேண்டாம்னு..." என்ற ஆர்த்தியை முடிந்த அளவு
முறைத்தான் தர்மா.
"நான் உங்கள உங்க
அண்ணன்கிட்ட பேசச் சொன்னேன். சித்திக் கிட்ட இல்ல." எனக் காட்டமாக சொல்ல,
"அது... அண்ணா...
நாளைக்கு..." எனக் கைவிரல்களைப் பிசைந்த படி அவள் நிற்க, அவன் கோபமாகச் சென்றான்.
மறுநாளும் அவனுக்குச்
சேவைகளை வாரி வழங்க,
"என்னை நானே பார்த்துப்பேன்ங்க.
இத்தனை நாளா என்னைப் பார்த்துக்கத் தெரிஞ்சவனுக்கு இனியும் கவனிச்சிக்கத் தெரியாதா!
நீங்க படிக்கணும். உங்க முடிவை நீங்களே எடுக்குற அளவுக்கு உங்க திறமைய வளர்த்துக்கணும்."
என்று மென்மையாகக் கூறியவன் அவள் தரும் டப்பாவைப் பைக்குள் எடுத்து வைக்கத் தவறியதில்லை.
"அது... இத்தனை
நாள் பார்த்துக்கிட்டீங்க. சரி... இனி நான் பண்றேனே... ஆறு மாசத்துக்கு மட்டுமாவது...
நீங்க எம்மேல காட்டுற அக்கறையத் திருப்பி செய்ய ஒரு வாய்ப்பு." என்றாள்.
'ஆறு மாசத்துக்கு அப்புறம்
பார்த்துக்க யாரு வருவா?' என்றது அவனின் மனம். தன் உடலை அவளுடைய சேவையின் சுகத்திற்கு
பழக்கப் படுத்தி விட்டால் எப்படி அதிலிருந்து அவன் மீள்வது? என்ற கேள்வி அவனுக்குள்
எழாமல் இல்லை.
அதைக் கேட்டு விடலாம்.
அவள் செய்யும் சேவையையும் நிராகரித்து விடலாம். ஆனால் கேட்டால் அவளின் மலர்ந்த முகம்
சருகாகிடும். அதை அவனால் பொறுத்துக் கொள்ள இயலாது. ஆதலால் தன் தலையில் தட்டிக் கொண்டு
புன் சிரிப்புடன் அலுவலகம் சென்றான்.
அதுவே வாடிக்கையாகி
இரு மாதங்களாகி விட்டது. அவன் கேட்காமலேயே அனைத்தையும் செய்து வைப்பவள், அவன் கேட்டும்
பள்ளிச் சான்றிதழ்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யவில்லை.
"வெண்மா கிட்ட
தான் தினமும் பேசுறீங்கலல. ஒரு தடவையாவது உங்கண்ணன் ஃபோன் நம்பர் வாங்கி பேசலாம்லங்க.
இல்ல அவகிட்டயாவது சொல்லலாம்ல." என்று கத்தியும் பலன் தான் கிடைப்பதில்லை.
"குட்டிம்மா!
நல்லாருக்கீயா?" என்ற கேள்வியுடன் தினமும் கர்ணன் பேசுகிறான் தான்.
"ம்... நல்லா
இருக்கேன். கேக் செய்யப் போறேன் ண்ணா. ப்ரவுனி... லூர்து அக்கா இதைக் கிண்டச் சொன்னாங்க."
என என்ன வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அப்படியே அவனிடம் ஒப்பித்து தன் நலத்தையும்
குழலியுடனான கல்யாணத்தைப் பற்றியும் பேசுபவள், கர்ணனிடம் பேசுவதே இல்லை என்று தர்மாவிடம்
கூறுவாள்.
கர்ணனிடம் சான்றிதழ்கள்
பற்றிக் கேட்டால் உடனே செய்து விடுவான் தான். அவள் படிக்கிறாள் என்றால் சந்தோஷப்படும்
முதல் ஆள் அவன் தானே. ஆனால் அது நடக்கக் கூடாது என்று அவள் கங்கணம் கட்டிக் கொண்டு
இருக்கும் போது என்ன செய்வது?
எப்படியும் தர்மாவை
விட்டு அவள் பூஞ்சோலை வந்து தானே தீர வேண்டும். அதற்குள் லூர்திடம் இருந்து தொழிலைக்
கற்றுக் கொண்டு ஊரில் இது போல் ஒரு கடையைத் திறக்க வேண்டும் என்பதில் முனைவாய் இருப்பவளுக்கு
கல்லூரி செல்ல விருப்பமில்லை.
அது அவனுக்குமே தெரிந்து
தான் இருந்தது. தினமும் எதையாவது ஒன்றை செய்து, அவனிடம் நீட்டி, ருசி பார்க்கச் சொல்லி
கதை அளப்பவளின் பேச்சில் இருக்கும் அத்தனை உற்சாகமும், "கர்ணாகிட்ட பேசுனீங்களா?"
என்ற ஒற்றைக் கேள்வியில் களவு போய் விடும் காரணம் என்ன என்பது.
அவளுக்குச் சமைப்பதில்
தான் ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து வீட்டிலேயே ஓவன் வாங்கிக் கொடுத்தான். யூட்யூப்
பார்த்து எதையாவது புதிதாக முயன்றுக் கொண்டே இருப்பாள்.
வீட்டில் இருந்தபடியே,
வரும் சில ஆர்டர்களை மட்டுமே செய்தவர்களை, பெண் தொழில் முனைவோராக்க, குடியிருப்பிற்கு
அருகில் ஒரு கடை பிடித்து பேக்கரி திறக்கும் யோசனையையும் முன் எடுத்து வைத்தான்.
“அவன் அவன் பொண்டாட்டிய
தொழிலதிபர் ஆக்க அவன் அவன் புருஷன் பக்கத்துலயே இருக்கான். ஆனா எனக்கு…” என்று பெருமூச்சை
விடும் சுலேகாவை மற்ற இருவரும் கேலி செய்வர்.
வேலை விட்டு வீடு திரும்பும்
போது லூர்து வீட்டில் இருப்பவளை அழைத்துக் கொண்டு, சூப்பர் மார்க்கெட்டில் நாளையத்
தேவைகளைப் பட்டியலிட்டு வாங்கி வருவதும், காலையில் தர்மாவை வேலைக்கு அனுப்பி விட்டு
பாக்கியம், மேரி மற்றும் சில அண்டை வீட்டுப் பெண்களுடன் இருப்பதுமாகப் பொழுதுகள் ஓடின
அவளுக்கு.
மற்றவர்களிடம் தர்மாவை
மாமா மாமா என்று பேசியதன் விளைவாய் மாமா என்ற அழைப்பு அவளுக்கு சகஜமாகிப் போனது.
நண்பர்களாக நெருங்கி
பழகி, கேலி கிண்டலுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் சிறு இடைவெளி இருவருக்கும் இடையே இருப்பதை
இருவருமே உறுதி செய்துக் கொண்டனர்.
எதிலும் மாற்றமில்லாது
சென்றுக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும் நாளும் நெருங்கியது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..