அத்தியாயம்: 15
மஞ்சள் கயிறு மேஜிக்...
கேள்வியுற்றதுண்டா
அதை?
உண்டு என்றால் அதில்
நம்பிக்கை உள்ளதா?
மேஜிக் என்ற கண்கட்டி
வித்தையின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் அதைச் செய்வதாகக் கூறும் மஞ்சள் கயிற்றின்
மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கயிறு தான் கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன்
மீதும் உள்ள உரிமையை ஊரறிய பறைசாற்றுகிறது. அது இவன்(ள்) தனக்கானவன்(ள்) என்று இதயத்தின்
ஆழம் வரையிலும் நேசம், மரியாதை, காதல், துணையிடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய சில
இச்சை உணர்வுகள் எனப் பலவற்றை வேர் விட வைக்கிறது.
நம் தர்மாவையும் அந்தக்
கயிறு விட்டு வைக்கவில்லை. வித்தையைக் காட்டத் தொடங்கியிருந்தது.
மரியாதை ஆர்த்தியின்
மீது தர்மாவிற்கு எப்பொழுதுமே உண்டு. பெண்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம்
கொடுக்கும் அவன் மரியாதை கொடுக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவளிடம் கலந்து பேசி
அவளின் அபிப்பிராயம் கேட்காது எதையும் செய்ய மாட்டான். என்ன பேசினாலும் வாயைத் திறக்க
மாட்டேன் என்று அடமாக நிற்பவளை, மிரட்டி விரட்டியே அவளின் மனத்தில் உள்ளதைக் கொட்ட
வைத்து விடுவான்.
ஆதலால் மரியாதையுடன்
நேசமும் உண்டு.
காதல்!
அதற்கு தான் அவனின்
காதலி இருக்கிறாளே. அதை ஆர்த்தியிடம் அவனால் எதிர்பார்க்க முடியுமா என்ன? அந்தக் காதலின்
இரட்டைப் பிறவி என்று வர்ணிக்கப்படும் காமத்தையும் ஆர்த்தியுடம் வெளிக்காட்ட முடியாது.
இரண்டும் அவனுக்குள் வந்தாலும் தடைக்கல்லாய் தியா இருப்பாளே!
இல்லை என்று சொன்னால்
பொருத்தமாக இருக்கும்.
தொலை தூரக் காதல் எல்லாம்,
எவ்வித எதிர் பார்ப்பும் இல்லாது உண்டான உண்மை நேசத்திற்கு கிடைக்கும் விருது. அந்த
விருது தர்மாவிற்கு கிடைக்கவில்லை.
தர்மாவின் காதல் எதிர்பார்ப்புகளைக்
கொண்டிருக்கவில்லை. ஆனால் மனைவியாக வேண்டியவளின் மீது எண்ணற்ற கற்பனைகள் இருந்தன. தன்
மனைவி இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அவனுக்கு அநேகமாகவே இருந்தன.
தியாவிற்கும் எதிர்பார்ப்புகள்
இருந்தன.
தர்மாவின் காதல் தந்தையற்ற
வீட்டில் ஒற்றைப் பெண்ணாய்ப் பாடுபடுகிறாளே என்ற அனுதாபத்திலும், படிப்பதற்கு அவள்
காட்டிய வழிகாட்டுதலால் உண்டான கரிசனத்தாலும் வந்தது.
தியாவின் காதல் தர்மாவின்
ஆண்மையின் மீதும் வசீகரத்தின் மீதும் அவனின் திறமையின் மீதும் வந்தது.
படிப்பில் கெட்டிக்காரனான
தர்மா, தான் இளநிலை பட்டத்தில் தங்கப் பதக்கம் கிடைக்கப் பெற்று பல்கலைகழகத்தில் முதல்
மாணவனாக வந்தவன்.
அத்தனை பேரின் கைத்
தட்டலுக்கு மத்தியில் மேடை ஏறி பட்டம் வாங்கியவனை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டவளுக்கு
நம்பிக்கை இருந்தது, தர்மா நிச்சயம் லட்சங்களைச் சம்பாதிக்கும் வல்லமை கொண்டவன் என்று.
தந்தை அற்ற வீட்டில்
ஆணுக்கு நிகராக உழைத்தவளுக்கு வெளிநாட்டு மோகம் அதிகம். அவளே சொன்னது போல் குடும்பம்
என்ற பிக்கல் பிடுங்கல் இல்லாது வாழ வேண்டும். அதுவும் தர்மாவுடன். காரணம் தர்மா அட்ஜஸ்டபுல்
பர்சன். எதற்கும் ஏற்றார் போல் தன்னை வளைத்துக் கொள்வான். அனுசரணையுடன் நடந்துக் கொள்வான்.
மற்ற விடயங்களில் நெளிந்து
கொடுத்தவன், ஆரம்பத்திலிருந்தே இதற்கு மட்டும் ஒத்துழைக்கவில்லை. எதற்கு என்றால் வெளிநாடு
செல்லத்தான்.
பயிற்சி வகுப்பு முடித்த
போதே அவனுக்கு ஜெர்மன் போன்ற பல வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், குடும்பத்தை
விட்டு அத்தனை தூரம் செல்ல வேண்டும் என்ற காரணத்தாலேயே நிராகரித்திருந்தான். அவளும்
என்னென்னவோ கெஞ்சி கொஞ்சிப் பார்த்தாள்.
ஆனால் அவளால் குடும்பத்தை
விட்டு தர்மாவைப் பிரிக்க முடியவில்லை.
திருமணம் நடந்து விட்டால்
அவனைத் தன் இழுப்பிற்கு இழுக்க முடியும் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தினாள். மகேந்திரனின்
திருமணத்தின் போதே துபாயில் படிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்பதாகக் கூறி விட்டாள்.
மகேந்திரனின் பதினாறாம்
காரியத்துக்குச் சென்றவனை இக்கட்டில் நிறுத்தி, மிரட்டி, பயங்காட்டி, பதிவுத் திருமணத்திற்கு
ஏற்பாடு செய்தவளால், வெற்றியை ருசிக்க முடியாது போனது.
எங்கே போய்விடுவான்.
காதல் என்று விட்டால் தர்மாவைப் போன்ற பல ஆண்கள் விஸ்வாசமாகத் தான் இருப்பர்.
தான் கொண்ட காதலுக்கு
நேர்மையாக இருப்பான் என்று அவர்களின் இருவருக்குள்ளும் இருக்கும் நிலையில்லாத காதலின்
மீது கொண்ட நம்பிக்கையால், 'உன் படிப்பு முடியவும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.' என்று
தர்மா கொடுத்த வாக்காலும் வெளிநாடு சென்றாள்.
அங்கு சென்றபின் தினமும்
மூன்று வேளையும் பரிமாறப்பட்ட அழைப்புகள், மெல்ல மெல்ல குறைந்து, வாரம் ஒன்றோ இரண்டோ
என்றானது.
அந்த ஒன்றிரண்டிலும்,
"வீசா அப்ளை பண்ணீட்டியா இந்தர்?" என்ற கேள்வியைத் தான் முதலில் கேட்பாள்.
குழலியின் திருமணத்தைக் காரணம் காட்டி அந்தக் கேள்விக்கான பதிலைத் தள்ளிப் போட்டிருந்தான்.
ஆனால் இன்று... அதே
கேள்வியை கேட்டு உறங்கிக் கொண்டிருந்த தர்மாவை அலைப்பேசியின் மூலம் எழுப்பி விட,
"இங்க பாரு தியா, என்னால என்னோட குடும்பத்தை விட்டு வெளிநாட்டுக்கெல்லாம் வர முடியாது.
நான் உங்கிட்ட நிறைய தடவை சொல்லிருக்கேன். நினைச்சா நினைச்ச நேரத்துல போய் பார்க்குற
தூரம் தான் எனக்கும் என் குடும்பத்துத்துக்கும் இடைல இருக்கணும்." என்று தன் மறுப்பை
அழுத்தமாகச் சொல்ல, அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
"ஆனா! இங்க லைஃப்
ஸ்டெயில் நல்லா இருக்கும் இந்தர். பீஸ்ஃபுல்லான லைஃப்."
"எனக்கு என் குடும்பத்தால
தான் பீஸ்ஃபுல்லான லைஃப்பை தர முடியும் தியா. நீ படிக்கத்தானே போன. அதை முடிச்சிட்டு
வா. இங்க கிடைக்கிற வேலைய பார்ப்போம். நீ ஆசைப்பட்ட மாதிரி சென்னைல தனியாவே இருப்போம்,
இருக்குறதை வச்சி சந்தோஷமா. வெளிநாடெல்லாம் வேண்டாம்." என்றவனுக்குத் தியாவைக்
கழட்டி விடும் எண்ணம் ஒரு போதும் தோன்றியதில்லை. அவனின் காதல் அவள் தான். சற்று முரண்டு
பிடிக்கிறாள். காலம் கடந்தால் சரியாகி விடும் என்று அவன் நினைத்து பேச,
'இவன் என்ன புத்தர்
மாதிரி தத்துவமெல்லாம் பேசுறான்.' என்று நினைத்தவள், "நீ என்னைக் காதலிக்கிற தானே
இந்தர்?" என்று வழக்கமாக அவனை மடக்கும் கேள்வியைக் கேட்க, கோபம் வந்தது.
ஒவ்வொரு முறையும் இதே
கேள்வியைக் கேட்டுக் கேட்டு, தன் காதலை நிரூபிக்க அவளிடம் தன் சுய மரியாதையை இழந்து
பணிந்துச செல்கிறோம் என்ற உண்மை சுட,
"காதலிக்கிறேன்
தான். அதுக்காக என்னால வெளிநாட்டுல செட்டில் ஆக முடியாது தியா." என்றான் அழுத்தமான
குரலில்.
"ப்ளீஸ் இந்தர்...
எனக்காகச் செய்ய மாட்டியா?" என்று பணிவுடன் வந்த குரல்,
"வெளிநாட்டு மோகத்துனால
தான் என்னை நீ காதலிச்சியா?" என்று உண்மையைக் கேட்டதும் கோபமாகியது.
தன் குடும்பத்தாரின்
மிரட்டலுக்குப் பணிந்தவனுக்குத் தியாவின் பிடிவாதத்திற்கு வளைந்து கொடுக்க பிடிக்கவில்லை.
“நீ என்னை உண்மையாவே
காதலிக்கிறதா இருந்தா இனி இந்தப் பேச்சை பேசாத.” என்று அவள் வழக்கமாக கேட்கும் கேள்வியை
அவள் பக்கம் திருப்பி விட்டான்.
அவள் சண்டை போட்டாள்.
அது சில நிமிடங்கள் நீடித்தது. முடிவு யாருக்கும் சாதகமாக இல்லாது வாக்குவாதமாய் உரையாடல்கள்
தொடர, தர்மா கடுப்புடன் ஃபோனை அணைத்தான்.
இனிய காலை பொழுது இப்படி
இம்சையாய் அமைந்ததை எண்ணி நொந்துக் கொண்டவன், உச்சுக் கொட்டியபடி எழுந்தான்.
அப்பொழுது காதில் தேவ
கானம் போல் ஹர்ஷிதாவின் சிரிப்பு சத்தம் கேட்டது.
"ஆர்த்திக்கா வேண்டாம்... நான் அம்மாட்ட சொல்லித் தருவேன்."
என்று சிறுமி கத்த,
"சொல்லிக்க...
என்னை அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க." என்ற ஆர்த்தியின் குரலும் கேட்டது. வெளியே
வந்தான் தர்மா.
அது கார் கால ஞாயிறு...
பத்தைத் தாண்டியும்
பகலவனைக் கரிய முகில்கள் மூடிக் கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கிப் போய் சுற்றுப்புறம்
மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
விடுமுறை நாள் என்பதால்
நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாது, பொழிந்துக் கொண்டிருந்த மழையை ரசிக்க வேண்டி
ஆர்த்தி இறங்கிச் சென்றிருந்தாள்.
பூ வாளியிலிருந்து
கொட்டும் நீரைப் போல், வானம் தூவலாய் மழை நீரைச் சிதறிக் கொண்டிருக்க, அதைத் தன் உள்ளங்கையில்
பிடித்து விளையாடத் தொடங்கினாள்.
ஹர்ஷிதா மட்டுமல்லாது
பல சிறுவர்கள் மழையில் நனைந்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பக்க சாரலாக மழை
பெய்ய, ஆர்த்தி மழையில் நனையாது கையில் ஒரு கப்பை வைத்துக் கொண்டு, மழைல் விழுந்த நீரைப்
பிடித்து சிறுவர்கள் மீது வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதற்கு தான் சிறுவர்கள்
அவளுடன் துள்ளலாடல் செய்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்கள் அங்கு
நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்த்தவன், வேகமாக உள்ளே சென்று சிறிய வாளியை எடுத்து
வந்தான்.
பொது பொதுவென விழுந்துக்
கொண்டிருந்த மழை நீரை வாளியில் நிரப்பி, துளியும் நனையாது தூவலை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருந்தவளின் தலை மீதே, இரண்டாம் மாடியில் நின்ற படியே கொட்டினான்.
ஆ...வென அதிர்ந்து
போனவள் தேகம் சிலிர்க்க அண்ணார்ந்து பார்த்தாள்.
"மழை பிடிக்கும்னா
நனைஞ்சு தாங்க ரசிக்கணும். வேடிக்கை பார்த்து இல்ல." என்றான் தர்மா.
"சூப்பர் மாமா...
இவ்ளோ நேரம் எங்க மேல தண்ணீய பிடிச்சி பிடிச்சி ஊத்தினாங்க. இப்ப அவங்க மேல நீங்க ஊத்திட்டீங்க.
ஹே..." என ஆர்ப்பரித்தனர்.
ஹர்ஷிதா, "அதான்
நனைஞ்சிட்டீங்கல்ல!" என்பது போல் ஆர்த்தியின் கரத்தைப் பற்றி இழுத்து மழையில்
நிற்க வைத்தாள்.
தர்மா மேலே இருந்தபடி
தண்ணீரைப் பிடித்து அவள் மீது ஊற்றினான்.
தர்மா அமைத்த அந்த
செயற்கை சிற்றருவியில், சில நிமிடங்கள் ஆட்டம் போட்டனர் அனைவரும். பின் ஒரு குட்டி
வாண்டு வந்து தர்மாவையும் மழையில் நனைய வேண்டி இழுத்து வந்தது.
ஊரில் குழலியுடன் சேர்ந்து
மழையில் நனைந்த நினைவு வந்து நின்றது மனத்தில். தண்ணீரை வெளியேற்ற உதவும் வடிகாலின்
துவாரத்தைத் துணி கொண்டு அடைத்து, மகேந்திரனும் அவனும் சிறிய குளம் அமைத்து குழலியுடன்
சறுக்கி, பாதம் மறையும் அளவு மட்டுமே இருக்கும் நீரில் நீந்தி என மூவரும் அடிக்கும்
கொட்டம் அதிகம். திட்டிக் கொண்டே இருந்தாலும் அமுதாவும் பிள்ளைகளின் மகிழ்ச்சியில்
ஆனந்தம் கொள்வார்.
வீட்டார் நினைவிற்கு
வந்தனர்.
குடும்பத்தாரின் மீதிருந்த
கோபம் சில தினங்களாகவே குறையத் தொடங்கியிருந்ததால் வெண்மாவுடனும் நெல்லையப்பனுடனும்
அவ்வப்போது ஃபோனில் பேசுவான்.
"பேசவே மாட்டியோன்னு
பயந்திட்டேன் ண்ணா." என்று விம்மி அழுதவளிடம்,
"எனக்கும் உங்கள
விட்டா யாரு இருக்கா வெண்மா? நீங்க தான் என்னோட உறவு." என்றவன் அவளின் இறுதி பரீட்சைக்கு
உதவினான். கூடவே ஆர்த்தியின் சான்றிதழ்களையும் கேட்டிருந்தான்.
"பட்டு எடுக்க
அடுத்த வாரம் அப்பா மெட்ராஸ்க்குத் தான் வரணும்னு சொன்னாரு. அப்ப அவர்கிட்ட கேட்டு
எடுத்திட்டு வர்றேன்ண்ணா.” என்றபோது அவர் என்று உச்சரிப்பில் குழலியின் கன்னங்கள்
சிவந்து வெட்கத்தில் வந்தது குரல்.
“அவர்ர்ர்…ட்ட… கேட்கணுமா!”
என அவளைப் போலவே இழுத்தவன், கேலியாக இரண்டொரு வார்த்தைகள் பேச, அவளோ, “அப்பா பேசணுமாம்ண்ணா..."
என்று அலைப்பேசியை நெல்லையப்பன் கைக்கு இடம் மாற்றிவிட்டு ஓடினாள்.
அனைவரிடமும் பேசியவனால்
அமுதாவிடம் மட்டும் இயல்பாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.
முதல் காரணம், இந்தத்
திருமணத்தின் முழு திட்டமும் அமுதாவால் போடப்பட்டது என்று ஆத்திரம்.
அடுத்தது குற்ற உணர்வு.
இத்தனை காலம் தன்னைத் தாய்க்கு நிகராக வளர்த்தவரிடம், “நீங்க பெத்த பிள்ளையா இருந்தா
இதை செஞ்சிருப்பீங்களா? உங்க அக்கா பிள்ளைன்னு
தானே என்னை இப்படி ரெண்டாம் தாரமா… கட்டாயப்படுத்திக் கட்டி வைக்கிறீங்க?” என அவன்
கேட்ட கேள்வி அவரிடம் பேச விடாது செய்தது.
அவன் பேச்சு அதிகப்படி
என்று அவனுக்கே தெரியும் தான். ஆனாலும் அது ஆத்திரத்தில் வந்து விட்டது. தாயுடன் பேசாது
இப்படியே காலம் ஓடிவிடுமோ என்ற பயம் இருந்தாலும், இறங்கிச் செல்ல மனம் ஒத்துக் கொள்ளவில்லை.
நன்கு ஆட்டம் போட்டவர்களைப்
போதும் என்று சொல்வது போல் மழை நின்று போனது.
தண்ணீர் வராததால் அவரவர்
வீட்டிற்கு சோகத்துடன் கலைந்துச் சென்றனர்.
"சாரி மாமா...
நீங்க எழுந்ததை கவனிக்கல... இதோ காபி போடுறேன்." என்று விட்டு, அவனை முந்திக்
கொண்டு, ஈரப் பாவாடையை உயர்த்தி பிடித்த படி, குடுகுடுவென வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்
ஆர்த்தி. சமையலறையின் மிதியடியின் மேல் நின்றுக் கொண்டு, பாலை அடுப்பில் ஏற்றி விட்டு
அறைக்குள் சென்று கதவடைத்தாள்.
நனைந்த உடைகளை மாற்றி
இலகுவான பனியன் மற்றும் கைலிக்கு மாறியவன், ஆர்த்தி அடுப்பில் ஏற்றிய பால் எந்நிலையில்
உள்ளது என்று கவனிக்கச் சென்றான்.
பால் பாத்திரத்தின்
விளிம்பிற்கு ஏறி வந்துக் கொண்டிருக்க, “பால் பொங்குதுங்க.” என்று உரக்க சத்தம் கொடுத்து
விட்டு, அதை அணைக்க முயல,
"அது... நான்
பார்த்துக்கிறேன். அடுப்படிக்குள்ளலாம் நீங்க வராதீங்க." என்று அறையில் இருந்தபடியே
சத்தம் கொடுத்தாள்.
"ஏங்க?"
என அடுப்பை அணைத்தபடிக் கேட்டவனுக்கு,
"ஆம்பளைங்க அடுப்படிக்குள்ள
வரக் கூடாது. இதெல்லாம் எங்க வேலை." என்றவள் அடர்ந்த தன் கேசத்தை சிறு துண்டிற்குள்
சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டே சமையலறையை அடைந்தாள்.
"அதென்ன அடுப்படிக்கு
ஆம்பள பொம்பளன்னு பாகுபாடு. யாரு போட்டாலும் காபி காபி தானே. இன்னைக்கு நான் போடுறேன்
காபிய. நீங்க அதைக் குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க." என்றவன் அவள்
புறம் திரும்ப, ஒரு நொடி அவனின் இதயம் நின்று துடித்தது அவனுக்கு.
"ஐயோ! வேண்டாம்...
நானே போடுறேன்." என்று விட்டு அவனின் கையில் இருந்த பொடியை வாங்கி பாலில் விட்டு
கலக்கத் தொடங்கியவளுக்குத் தெரியாது தர்மாவின் மனத்திலும் கலக்கத் தொடங்கி விட்டோம்
என்று.
அவன் இப்படி உறைந்து
போய் நிற்க காரணம் அவளின் கோலம் தான்.
வழமை போல் பாவாடை தான்.
ஆனால்...
எப்பொழுதும் அவளின்
அண்ணனின் டிசர்ட் அல்லது அவளின் அண்ணனின் மேல் சட்டையை அணிபவள், இன்று தர்மாவிற்கு
காபி கொடுக்க வேண்டிய கடமை அழைத்ததால் அவசரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அவனின் சட்டையை
அணிந்துக் கொண்டு வந்திருந்தாள்.
முழங்கையைத் தாண்டி
கை விரல்களை முழுங்கியது அவனின் சட்டையின் கை. அதை மடித்து விட்டவள், அப்பொழுது தான்
சரியாக மாட்டாது வந்த பட்டன்களை சரி செய்துக் கொண்டிருந்தாள்.
டீசர்ட் என்றால் எங்கும்
இடைவெளிகள் தெரியாது. ஆனால் சட்டை அப்படி அல்லவே. முன்னிரண்டு பொத்தான்களைச் சரி செய்தாலும்
அவளின் செழித்த தனங்களின் வரிவடிவமும், உள்ளுக்குள் அணிந்திருக்கும் மார்புக் கச்சையும்,
பட்டன்களுக்கு இடையே இருந்த சில சென்டிமீட்டருக்கு இடைவெளியில் இலைமறைவாக காட்சி தந்தது.
கூடவே அவளின் தேகத்தின்
நிறத்தை பளீச் என்று காட்டியது. நேற்று தான் அவன் கழட்டிப் போட்டிருந்த சட்டை அது.
துவைக்க கூட இல்லை. அதில் அவனின் வாசம் அப்படியே இருந்தது. அந்த வாசத்துடன் பெண்ணவளின்
சுகந்தமும் கலந்தது போல் ஒரு பிரம்மை தோன்ற, தேகத்தில் ஒருவித மின்சாரம் பாய்ந்தது
போல் இருந்தது தர்மாவிற்கு.
அசையாது அவளின் முகம்
பார்ப்பதா வேண்டாமா என்று தயங்கியபடி அவன் உறைந்து போய் நிற்க,
"அது… நீங்க வெளிய
போங்க... நான் கொண்டு வந்து கொடுக்குறேன்.” என்றவளிடம் மாட்டேன் என்று அடம் பிடிக்க,
அவனின் முதுகில் கை வைத்து, “போங்க..." என்று தள்ளி விட்டாள்.
குறுநகை கொண்டவன் கால்களை
எடுத்து வைத்து கூடத்திற்கு வந்தான்.
டிவியை ஆன் செய்து
அமர்ந்தவனுக்கு அதில் ஓடிய காட்சிகள் எதுவும் பதியவில்லை. நிலையில்லாது துடித்த மனம்
தான் எதிலும் கவனத்தைச் செலுத்த விடாது சமையலறையையே பார்க்கத் தூண்டியது.
இரு டம்பளரை எடுத்துக்
கொண்டு வந்தவள்,
"சூடா இருக்கு
மாமா." என்று டம்ளரை அவன் கையில் கொடுத்தாள். அவனுக்கு அருகில் சிறிது இடைவெளி
விட்டு தன் பாவாடையை மடித்துக் கொண்டு அமர்ந்து பருகத் தொடங்கினாள். ஒரு மிடறு உறிஞ்சியிருப்பாள்.
அதற்குள் தர்மாவின் முகத்தை ஏறிட்டாள்.
"தலைய ஒழுங்கா
துவட்டலையா மாமா? தண்ணீ வடியுது. இருங்க..." என்று விட்டு துண்டால் அவனின் கேசம்
துடைக்க, மீண்டும் விவரிக்க இயலாத உணர்வுப் பிடிக்குள் சிக்கிக் கொண்டான் தர்மேந்திரன்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..